Home

Monday 27 December 2021

கொண்டைக்குருவி - புதிய பாடல் தொகுதியின் முன்னுரை

 

வழக்கமாக கோடை விடுமுறை தொடங்கியதும் என் தம்பிகளின் குழந்தைகள் பெங்களூருக்கு வந்து சிறிது காலம் தங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வதும் பூங்காக்களுக்குச் செல்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூங்காவுக்குச் செல்வோம். ஒரு பள்ளித்தோழனிடம் பகிர்ந்துகொள்வது போல தம் வகுப்புகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் பற்றியெல்லாம் என்னுடன் அப்பிள்ளைகள் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பல சமயங்களில் நான் அவர்களுக்கு புதிதுபுதிதாக பாடல்களை எழுதிப் பாடிக் காட்டுவேன். அவர்களும் அவற்றை ஆசையோடு பயிற்சியெடுத்து படித்து பாடிக் காட்டுவார்கள்.

நினைவேக்கத்தின் இனிமை - கட்டுரை

 

நம் நாடு விடுதலையடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நம் நகரங்களும் கிராமங்களும் அப்போது இருந்ததைவிட இன்று பல மாற்றங்களுடன் வளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கைச்சூழலிலும் கருத்துநிலைகளிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய புகைப்படத் தொகுப்பையோ அல்லது பழைய நாட்குறிப்பையோ அல்லது பழைய புத்தகத்தையோ பார்க்கும்போது, அந்த மாற்றங்கள் துல்லியமாகப் புலப்படுவதை உணரலாம்.

Sunday 19 December 2021

ராஜகுமாரி அம்ருத் கெளர் : உறுதியும் நம்பிக்கையும்

 

28.12.1915 அன்று எஸ்.பி.சின்ஹா தலைமையில் பம்பாய் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர் நிலைமையைப்பற்றிய ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுவதற்கு காந்தியடிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார். அந்தமான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த திலகர் அந்த மாநாட்டில் முக்கிய விருந்தாளியாக பங்கேற்றார். திலகரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பல்வேறு ஊர்களிலிருந்து மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணம் திலகர்  அன்று சிறப்புரையாற்றினார்.

ஆக்கூர் அனந்தாச்சாரி : நிழலில்லாத மனிதர்

  

08.09.1920 அன்று கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை முன்வைத்து காந்தியடிகள் நீண்ட நேரம் உரையாற்றினார். அவர் இன்றைய சூழலில் நாம் மூன்றுவிதமான மோகங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். சட்டமன்றத்துக்குச் சென்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இணையாக அமர்ந்துகொள்ள நினைப்பது முதல் மோகம். அநீதியைப்பற்றியும் நேர்மையின்மையைப்பற்றியும் கவலைப்படாத அரசாங்கத்தின் நீதிமன்றங்களில் வாதாடி நீதியை நிலைநாட்டிவிட முடியும் என்று வழக்கறிஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டாவது மோகம். அரசு வேலைகளில் அமர்வதற்கென தகுதிப்படுத்தும் படிப்புக்காக வடிவமைக்கப்பட்ட கல்விக்கூடங்களில் பட்டம் பெற்றுத் தேர்ச்சியடைவதற்காக பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கல்லூரிகளுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்புவது மூன்றாவது மோகம். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த மூன்றில் ஏதோ ஒரு மோகத்தில் மூழ்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது.  இந்த மோகங்களிலிருந்து விடுபடும் வரைக்கும் கிலாபத் பிரச்சினைக்கும் பஞ்சாப் படுகொலைப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லைஎன்றார்.

Monday 13 December 2021

நித்யா - சிறுகதை

 

 கஸ்தூரிபாய் ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்பு

வைத்துக்கொள்ளத் தொடங்கி ஆறு ஆண்டுகள்

கழிந்துவிட்டன. எங்கள் ஐந்து திருமண நாள்களையும் ஐந்து

பிறந்த நாள்களையும் குழந்தை அபியின் மூன்று பிறந்த

நாள்களையும் இதே இல்லத்தில் தான் கழித்திருக்கிறோம். என்

மனத்தில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற சித்திரங்களுள் இந்த

இல்லத்தின் சித்திரம் மறக்கமுடியாத அனுபவம். சிறுவர்களும்

சிறுமிகளுமாக இருநூற்றுசொச்சம் பிள்ளைகள் தங்கியிருக்கும்

இல்லத்தில் சில பெயர்களை அடையாளங்களுடன்

சொல்லக்கூடிய அளவுக்குக்கூட எனக்கு இன்னும் ஞாபகம்

உள்ளது. பெயர் மறந்திருந்தாலும் சில முகங்கள் மட்டும்

நினைத்த கணத்தில் ஆழ்மனத்திலிருந்து மிதந்து தெரிகிற

அளவுக்குப் பதிந்திருக்கின்றன. என்றாலும் நித்யாவைப்பற்றி

நேரிடையாகத் தெரிந்து கொள்ளும் வரை அவள் பெயர்மட்டும்

எப்படியோ எங்கள் மனங்களில் பதியாமல் நழுவிப்போய்

விட்டது. அதை நினைக்கும்போது சற்றே கூச்சம் படர்வதைத்

தவிர்க்க முடியவில்லை.

காத்திருப்பவள் - சிறுகதை

  

நிறுத்தத்தில் இறங்கியதுமே கைக்கடிகாரத்தில் மணி

பார்த்தாள் தேவகி. ஆறே முக்கால். அச்சத்தாலும்

கவலையாலும் அந்தக் காலை நேரத்திலும் அவளுக்கு

வியர்த்துக்கொட்டியது. அடிவயிற்றில் மின்னலைப்போல

ஒருநொடி வலி எழுந்து மறைந்தது. காற்றில் ஒதுங்கியிருந்த

தலைமுடி கலைந்தது. நாலாக மடித்து உள்ளங்கைக்குள்

வைத்திருந்த கைக்குட்டையால் கழுத்தில் படிந்திருந்த

வேர்வையைத் துடைத்தபடி ஏரிக்கரையைநோக்கி நடந்தாள்.

Sunday 5 December 2021

ஒரே ஒரு ஊரிலே - சிறுவர் கதைப்பாடல்

 

ஒரே ஒரு ஊரிலே

ஒரே ஒரு தோட்டம்

ஒரே ஒரு தோட்டத்திலே

ஒரே ஒரு மாமரம்

 

ஒரே ஒரு மாமரத்தில்

ஒரே ஒரு பிஞ்சு

பிஞ்சு வளர்ந்து காயாகி

காயும் கனிந்து வந்ததம்மா

பசித்த நரி - சிறுவர் கதைப்பாடல்

  

அதோ அங்கே குள்ளநரி

அலைந்து திரியும் குள்ளநரி

கன்னங்கரிய குள்ளநரி

காதை அசைக்கும் குள்ளநரி

 

காட்டைச் சுற்றித் திரிந்தது

கனவில் மிதந்து நடந்தது

ஊளையிட்டுக் குதித்தது

உருண்டு புரண்டு களித்தது

Monday 29 November 2021

ஆர்யா என்கிற பாஷ்யம் : சத்தியமும் சாகசமும் - கட்டுரை

             24.11.1919 அன்று தில்லியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து உற்சாகத்துடன் பங்கேற்ற கிலாபத் மாநாட்டில்தான் காந்தியடிகள் முதன்முதலாக ஒத்துழையாமை என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். பிறகு தொடர்ச்சியாக நண்பர்களுடன் உரையாடி ஒத்துழையாமையை ஒரு கொள்கைத்திட்டமாக உருவாக்கினார். அரசு அளித்த பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும்  உடனடியாகத் துறத்தல், ஊதியம் பெறும் அரசு பதவிகளிலிருந்தும் போலீஸ் இராணுவச் சேவையிலிருந்தும் வெளியேறுதல், சட்டசபையைப் புறக்கணித்தல், வரி கொடுக்க மறுத்தல் போன்ற அம்சங்களுக்கு அத்திட்டத்தில்  கூடுதலான அழுத்தத்தை அவர் அளித்தார். தம் உரைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து அந்த அம்சங்களை வலியுறுத்தினார். காந்தியடிகளின் திட்டத்துக்கு பொதுமக்களில் ஒரு சாரார் ஆதரவைத் தெரிவிக்க, மற்றொரு சாரார் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை  சட்டமன்றங்களுக்குச் செல்வதற்கு தடை இல்லாத வகையில் மாற்றவேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கையாக எங்கெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

மீரா பற்றிய சில குறிப்புகள் - சிறுகதை

 

குட்டை குட்டையாய் காட்டாமணக்குச் செடிகளும்

நுனியில் சாணம் அதக்கி நட்டிருக்கிற நாலு

முருங்கைக்கன்றுகளும் இருக்கிற வரிசைதான் மீரா வீட்டு

வேலி. வேலிக்கு இந்தப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகையோரம்

சாணம் மிதித்துக் கொண்டிருந்தாள் மீரா.

Tuesday 23 November 2021

காலம் - சிறுகதை

 

தத்தக்கா புத்தக்கா என்று மீனா நடக்க ஆரம்பித்ததிலிருந்தே தெருவிலிறங்கிவிடாமல் அவளைக் கவனித்துக் கொள்ளும்படி சாவித்திரியிடம் சொல்லி வைத்திருந்தேன். பத்தடிக்குப் பத்தடி வாடகை வீடு இது. ஒரு மூலையில் சமையல்; ஒரு மூலையில் குளியல்; ஒரு மூலையில் படுக்கை; மிச்ச இடம் புழங்க என்பதுதான் எங்கள் விதி. இந்தப் புழங்குமிடத்தைத் தாண்டிப் பழகுவதற்காக தெருவில் மீனா இறங்கிவிடப் போகிறாளே என்ற பயத்தால்தான் ஆரம்பத்திலேயே சொல்லி வைத்தேன். தெருவில் சதா நேரமும் வண்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதால்தான் இது கூடச் சொன்னேன்.

வலை - சிறுகதை

 

சினிமாவுக்காக எதையும் செய்யத் தயங்காத எங்கள் ஊர்க்காரர்களை நினைத்தால் இப்போதும் உடம்பு சிலிர்க்கிறது. இரண்டு டாக்கீஸ்கள் ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருந்த காலம் அது. நடையாய் நடந்து வந்து சினிமா பார்க்கிற அடுத்த ஊர்க்காரன் எல்லாம் இந்த ஊரு கெட்ட கேட்டுக்கு ரெண்டாஎன்று வயிறு எரிந்தார்கள். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பத்துப் பதினைந்து கிராமங்களிலும் இதே பேச்சாய் இருப்பதை நானே காதாரக் கேட்டிருக்கிறேன்.

Monday 15 November 2021

மனிதர்களின் சித்திரத்தொகுப்பு - கட்டுரை

   

     ஒரு தொன்மக்கதை. முன்னொரு காலத்தில் ஒரு சிற்பி வாழ்ந்துவந்தார். வளர்ந்து இளைஞனான அவருடைய மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றித் திரிவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் கடுமையான சொற்களால் அவனைக் கண்டித்தபோது, இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். ஏதோ ஆத்திரத்தில் அவனை வெளியேற்றிவிட்டாலும் அவருடைய மனம் அவனை எண்ணி உருகியபடியே இருக்கிறது. அவன் பிரிந்துசென்ற துயரத்தை நெஞ்சில் சுமந்தபடி அலைந்த அவருக்கு சிற்பவேலைகளில் ஓய்வின்றி ஈடுபடுவது மட்டுமே ஆறுதலளிப்பதாக உள்ளது.