08.09.1920 அன்று கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை முன்வைத்து காந்தியடிகள் நீண்ட நேரம் உரையாற்றினார். அவர் ”இன்றைய சூழலில் நாம் மூன்றுவிதமான மோகங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். சட்டமன்றத்துக்குச் சென்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இணையாக அமர்ந்துகொள்ள நினைப்பது முதல் மோகம். அநீதியைப்பற்றியும் நேர்மையின்மையைப்பற்றியும் கவலைப்படாத அரசாங்கத்தின் நீதிமன்றங்களில் வாதாடி நீதியை நிலைநாட்டிவிட முடியும் என்று வழக்கறிஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டாவது மோகம். அரசு வேலைகளில் அமர்வதற்கென தகுதிப்படுத்தும் படிப்புக்காக வடிவமைக்கப்பட்ட கல்விக்கூடங்களில் பட்டம் பெற்றுத் தேர்ச்சியடைவதற்காக பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கல்லூரிகளுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்புவது மூன்றாவது மோகம். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த மூன்றில் ஏதோ ஒரு மோகத்தில் மூழ்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. இந்த மோகங்களிலிருந்து விடுபடும் வரைக்கும் கிலாபத் பிரச்சினைக்கும் பஞ்சாப் படுகொலைப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லை” என்றார்.