Home

Wednesday 29 April 2015

அற்புதக் கணங்களின் தோரணம்

பள்ளிக்கூட நாட்களில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறியதொரு குன்றையொட்டி நீண்டிருக்கும் ஒரு சாலை. தற்செயலாக குன்றின் உச்சியிலிருந்து உருண்டு வந்த பாறையொன்று சாலையின் குறுக்கில் விழுந்து நின்றுவிடுகிறது. மாட்டுவண்டிகள் போகத்தக்கதாக அதுவரை இருந்த அந்தப் பாதை எந்த வண்டியும் போகமுடியாத அளவுக்கு சிறுத்துப் போய்விடுகிறது. வண்டிக்காரர்கள் வேறொரு சுற்றுவழியைத் தேடி, அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த ஊரில் வாழ்ந்த முதியவர் ஒருவர் கைவிடப்பட்ட பாதையைப் பார்த்து மனம் வருந்துகிறார். ஒரு நாள் காலையில் சம்மட்டியை எடுத்துச் சென்று அந்தப் பாறையை உடைக்கத் தொடங்குகிறார். ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக உடைத்தபோதும், அவரால் கையகலத்துக்கு ஒரே ஒரு  துண்டு பாறையை மட்டுமே உடைக்கமுடிகிறது. அதுவே அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் அவரைப் பைத்தியக்காரன் என்று அழைக்கிறார்கள். வேலையற்றவன் என்று வசைபாடுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல், துண்டுதுண்டாக உடைக்கும் வேலையை மட்டுமே அவர் தினமும் செய்துவருகிறார். 

Wednesday 22 April 2015

ஒருநாள் ஆசிரியர்

கட்டுரைநோட்டு திருத்தும்போதுலாம் ஏன் உங்க மூஞ்சி பேதிமருந்து குடிச்சமாதிரி மாறுது?” என்று பல ஆண்டுகளுக்குமுன்பாக மாதவி வேடிக்கையாகச் சொன்ன வார்த்தைகள் என் மனத்தில் எதிரொலிக்காத நாளே இல்லை.  இப்போதுகூட ஒரு நோட்டை எடுத்துப் பிரிக்கும்போது அந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நோட்டைத் திறக்கும்போதே கசப்புகள் முட்டிக்கொண்டு வருகின்றன. கசப்புகளுக்கு ஒருநாளும் இடம் தந்துவிடக்கூடாது என்று எனக்குள் ஆயிரம்முறை சொல்லிக் கொண்டாலும் மூன்றாவது நோட்டைத் திருத்தி முடிப்பதற்குள் வெறுப்பும் சலிப்பும் நெஞ்சில் நிறைந்துவழியத் தொடங்கிவிடுகின்றன. அந்த அளவுக்கு ஒவ்வொரு வாக்கியத்திலும் பிழைகள் மலிந்திருந்தால் என்னதான் செய்யமுடியும்?. ஒவ்வொரு நோட்டும் பிழைகளின் களஞ்சியம்.
போன வாரம் வகுப்பில் தாயுமானவர் பாட்டொன்றைப் பாடமாக எடுத்தேன். அந்த வாரத்துக்கான கட்டுரைக்கு அதைத்தான் தலைப்பாகக் கொடுத்திருந்தேன். ஒரு கட்டுரை கூட உருப்படியாக இல்லை. படிக்கப்படிக்க எனக்குள் வெறுப்பு பொங்கியது. சொந்தமாக எழுதவராவிட்டாலும் பரவாயில்லை, மனப்பாடமாக இருக்கவேண்டிய செய்யுளைக்கூட யாரும் ஒழுங்காக எழுதவில்லை.தூயதான துரிய அறிவெனும்என்கிற வரியை ஒவ்வொருவரும்தூயதான தூரிய அறிவெனும்என்று எழுதிவைத்திருந்தார்கள்.  துரியத்துக்கும் தூரியத்துக்கும் வித்தியாசம் தெரியாத பிறவிகள். கணக்கு, இயற்பியல், வேதியியல், புள்ளியியல், வரலாறு, சூழலியல், பொருளாதாரம் என குறிவைத்த பாடப்பிரிவுகள் எதுவும் கிடைக்காமல் தண்டமே என்று தமிழ்ப்பிரிவில் வந்து குவிகிறவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

Friday 10 April 2015

நூறாவது படம்

செய்வதற்கு எந்த வேலையும் இல்லாதபோது நானும் சீனி என்கிற சீனிவாசனும் பொதுவாக சினிமாவுக்குப் போவதுதான் வழக்கம். டிக்கட் வாங்க பணம் இல்லாத சமயங்களில் மட்டும் எங்கள் ஊர் நாற்சந்தியில்  சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். அதுவும் அலுத்துவிட்டால் வெற்றிலைத்தோட்டம் வழியாகச் சென்று ஐயனார் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றையடிப்பாதையில் சிறிது தூரம் நடந்து பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் அரசமரத்தடிக்குப் போய் உட்கார்ந்துவிடுவோம். கைப்பேசியில் பாட்டு ஒலிக்க, அந்த இசையின் தாலாட்டில் லயித்தபடி மல்லாந்து படுத்து வளைந்துவளைந்து போகும் மரக்கிளைகளின் பின்னலையும் வெண்ணீல வானத்தையும் கொசுக்கடியைச் சகித்துக்கொண்டு பார்த்திருப்போம்.