பள்ளிக்கூட நாட்களில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறியதொரு குன்றையொட்டி நீண்டிருக்கும் ஒரு சாலை. தற்செயலாக குன்றின் உச்சியிலிருந்து உருண்டு வந்த பாறையொன்று சாலையின் குறுக்கில் விழுந்து நின்றுவிடுகிறது. மாட்டுவண்டிகள் போகத்தக்கதாக அதுவரை இருந்த அந்தப் பாதை எந்த வண்டியும் போகமுடியாத அளவுக்கு சிறுத்துப் போய்விடுகிறது. வண்டிக்காரர்கள் வேறொரு சுற்றுவழியைத் தேடி, அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த ஊரில் வாழ்ந்த முதியவர் ஒருவர் கைவிடப்பட்ட பாதையைப் பார்த்து மனம் வருந்துகிறார். ஒரு நாள் காலையில் சம்மட்டியை எடுத்துச் சென்று அந்தப் பாறையை உடைக்கத் தொடங்குகிறார். ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக உடைத்தபோதும், அவரால் கையகலத்துக்கு ஒரே ஒரு துண்டு பாறையை மட்டுமே உடைக்கமுடிகிறது. அதுவே அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோரும் அவரைப் பைத்தியக்காரன் என்று அழைக்கிறார்கள். வேலையற்றவன் என்று வசைபாடுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல், துண்டுதுண்டாக உடைக்கும் வேலையை மட்டுமே அவர் தினமும் செய்துவருகிறார்.