Home

Tuesday 26 July 2016

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (கட்டுரை)


புத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாழ்க்கையின் ஏதோ ஒரு கணம் அல்லது கணத்தின் நிழல் அந்தப் படைப்பின்மீது படிந்திருக்கிறது என்பதும் உண்மை. படைப்பாக்க அழகியலும் படைப்பாளியின் பார்வையும் சேர்ந்து அக்கணங்களைப் பொற்கணங்களாக்குகின்றன. அவற்றை முன்வைத்து  கட்டுரைகளை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஒரு சிறுகதையின் அழகியலைப் புரிந்துகொள்ளவும் அதன் உள்விரிவுகள் வழியாக  வாழ்க்கையின் ஆழத்தையும் விரிவையும் புரிந்துகொள்ளவும்  அக்கட்டுரைகள் உதவவேண்டும் என்றும் நினைத்தேன். இலக்கியத்தை அணுக முனையும் இளம் வாசகர்களுக்கு துணைபுரிபவையாக அவை இருக்கவேண்டும் என்பதும் என் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு கட்டுரையும் நெருக்கமாக உணரப்படவேண்டும் என்பதற்காக என் சொந்த வாழ்க்கையனுபவங்களை முன்வைத்து நீளும் விதமாக அக்கட்டுரைகளை  அமைத்துக்கொள்ளலாம் என்றொரு உத்தேச வடிவம் என் மனத்தில் தோன்றியது.

புதிய பயணம் (நூல் அறிமுகம்)


லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ -

நீர்க்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து அறிதலின் தீ என்னும் தலைப்பில் லாவண்யா சுந்தரராஜனின் மூன்றாவது தொகுதி வெளிவந்திருக்கிறது. நான் கவனித்த வகையில் தொடர்ச்சியாக சீராகவும் சிறப்பாகவும் எழுதி வரும் கவிஞர்களில் ஒருவர் லாவண்யா சுந்தரராஜன். முந்தைய தொகுதிகளில் காணப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதிய திசையில் புதிய வடிவத்தோடு பயணம் செய்பவையாக காணப்படுகின்றன இக்கவிதைகள். கவிதை முயற்சியில் லாவண்யாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையே இது சுட்டிக்காட்டுகிறது.

Saturday 16 July 2016

தங்க மாலை - சிறுகதை


-1-

            பொம்மையப்பாளையம் ஓடைக்கரையை நெருங்கும்வரை வீரமுத்துவின் மனத்தில் இருந்த திட்டமே வேறுஇருட்டும்வரை கரைக்குப் பக்கத்தில் காட்டுக்குள் சுற்றித் திரிவது, அதற்குப் பிறகு சுற்றுவழியாகவே முத்தியால்பேட்டை சென்று சாவடியில் தங்குவது, நள்ளிரவுக்குப் பிறகு ஒதியஞ்சாலை வழியாக தங்கசாலைக்குள் நுழைவதுஅதுதான் அவன் மனசிலிருந்த திட்டம்ஓடைக்கரையைத் தொட்டதுமே மனம் மாறியதுசெங்கேணியின் முகமும் சிரிப்பும் நினைவுக்கு வந்து திசைதிருப்பிவிட்டனஈர மினுமினுப்போடு சுழலும் அவள் கண்கள் மனத்தில் மீண்டும்மீண்டும் தோன்றிச் சிமிட்டடினஆசையும் அழைப்பும் வசீகரமும் கொப்பளிக்கும் கண்கள்அக்கணமே அவன் நடந்துவந்த திசையை மாற்றினான்.

நெஞ்சிலிருந்து ஒரு சொல் - (கட்டுரை )


ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’ 

ஒரு குறிப்பிட்ட துறையில் காலம் முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில் பெரிய ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள். ஒரு பண்பாட்டுச்சூழலில் துறைதோறும் வாழும்  அனைத்து ஆளுமைகளுக்கும் முதல் மரியாதை கிடைத்தல் வேண்டும். ஆனால் எதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ்வதில்லை. எனினும் அந்த அமைதியை அல்லது புறக்கணிப்பை ஆளுமைகள் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அவர்களுடைய கவனம் எல்லாத் தருணங்களிலும் தத்தம் துறைசார்ந்தே இயங்கும் தன்மையுடையதாகவே செயல்படுகிறது. நம் தமிழ்ச்சூழலில் இன்றுவரை இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற எல்லாத் துறைகளிலும் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளும் வாழும் ஆளுமைகளும் பலருண்டு. அவர்களைப்பற்றிய வாழ்க்கைப்பதிவுகளும் நினைவுக்குறிப்புகளும் மிகமிக முக்கியமானவை. ஒரு சூழலில் வரலாற்றை எழுதும் தருணத்தில் இத்தகு நினைவுக்குறிப்புகளுக்கு முக்கியமானதொரு இடம் உருவாகும்.

Friday 1 July 2016

கண்காணிப்புக்கோபுரம் - புதிய சிறுகதைத்தொகுதிக்கான முன்னுரை






அதிகாலை நடைப்பயிற்சிக்கென வழக்கமாக நான் செல்லும் பூங்கா ஐந்து மணிக்கே திறந்துவிடும். நான் ஆறுமணிக்குச் செல்வேன். சரியாக அதே நேரத்தில் பயிற்சியை முடித்துவிட்டு வெளியேறுவார் ஒரு பெரியவர். தோற்றத்தை வைத்துத்தான் அவரை முதியவர் என்று சொல்லலாமே தவிர, அவருடைய நடைவேகம் ஆச்சரியமூட்டும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்திரா நகரில் உள்ள அபூர்வா கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர் அவர். இரண்டுமூன்று முறை அவரிடம் உடல்நிலைப் பரிசோதனைக்காகச் சென்றிருந்ததால், அவரை எனக்குத் தெரியும். நல்ல உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவார். வணக்கம் சொன்னதும் புன்னகையோடு தலையை அசைத்தபடி கைகளை உயர்த்தி வணக்கம் சொல்லிக்கொண்டே வெளியேறுவார். அவருடைய வேகத்தை மனத்துக்குள் வியந்தபடி என் நடையைத் தொடங்குவேன். 

பிரயாணம் - தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்புக்கான முன்னுரை






இந்தத் தொகுப்பின் பத்தொன்பது சிறுகதைகளுக்கிடையே என்னுடைய முப்பத்துமூன்றாண்டு கால சிறுகதைவாழ்க்கை விரிந்திருக்கிறது. இது நான் ஒரு பறவையென பறந்து திரிந்த வானம். ஓர் ஆறென ஓடி உருவான தடம். காற்றென அலைந்து திரிந்த வெளி. உங்களுக்கும் எனக்கும் பொதுவான ஒருசில கணங்களாவது இத்தொகுப்பில் இருக்கக்கூடும்.