இந்தத் தொகுப்பின் பத்தொன்பது
சிறுகதைகளுக்கிடையே என்னுடைய முப்பத்துமூன்றாண்டு கால சிறுகதைவாழ்க்கை விரிந்திருக்கிறது.
இது நான் ஒரு பறவையென பறந்து திரிந்த வானம். ஓர் ஆறென ஓடி உருவான தடம். காற்றென அலைந்து
திரிந்த வெளி. உங்களுக்கும் எனக்கும் பொதுவான ஒருசில கணங்களாவது இத்தொகுப்பில் இருக்கக்கூடும்.
மெய்ப்புத் திருத்தும் வகையில்
இச்சிறுகதைகளை நான் படிக்கும்போது, அவை உருவான கணங்களை அசைபோட்டபடியே இருந்தேன். என்
வாழ்வின் அற்புதக்கணங்கள் அவை. எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், துங்கபத்திரை நதிக்கரையோரம்
வேலைநிமித்தமாக நாங்கள் அமைத்திருந்த துணிக்கூடாரத்தில் என் எழுத்துக்கு ஒளியைப் பாய்ச்சிக்கொண்டிருந்த
லாந்தர் விளக்கின் திரியசைவை அந்த எழுத்துகளிடையே என்னால் பார்க்கமுடிந்தது. ஒரு விழியென
என்னையே கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்த அத்திரியை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.
இன்று நான் எழுதும் மேசையின் மீது குழல்விளக்கின் வெளிச்சம் படர்ந்திருக்கிறது. குழல்விளக்கும்
ஒருவகையில் திரியே. சற்றே பெரிய திரி.
வழக்கமாக ஒரு தொகுப்பின் படைப்புகளுக்கு
மெய்ப்புப் பார்க்கும் வேலையை ஒரு வாரத்துக்குள் முடித்துவிடுவேன். ஓர் இரவில் இரண்டு
கதைகள் என்பதுதான் என் எளிய கணக்கு. என்ன காரணத்தாலோ, இந்தத் தொகுப்பைத் திருத்தும்
வேலை ஒரு மாதத்துக்கும் மேல் இழுத்துவிட்டது. எந்தக் கதையையும் என்னால் எளிதில் கடந்துசெல்ல
இயலவில்லை. ஒவ்வொரு கதையிலும் ஒரு குரல் கேட்டது. ஒரு முகம் தெரிந்தது. ஒரு காட்சி
விரிந்தது. நமக்குப் பிடித்த பழைய பாட்டைக் கேட்டதும் பரவசத்தில் நின்று, நினைவிலிருந்து
தன்னிச்சையாகப் பெருகும் வரிகளை அந்தப் பாட்டின் இசையோடு இணைந்து நாமும் முணுமுணுப்பதுபோல,
மெய்ப்புத் திருத்தும் தருணங்களில் ஏதோ ஓர் இனம்புரியாததொரு உணர்வு ஓர் இறகென என்னை
ஏந்திச் சென்றபடியே இருந்தது. அந்தப் பறக்கும் பயணம் அல்லது மிதக்கும் பயணம் எனக்கு
மிகவும் பிடித்திருந்தது.
முதல் சிறுகதையில் தொடங்கி ஒன்றையடுத்து
ஒன்றாக பயணம் சிறுகதைவரைக்கும் ஒருவழியாக
திருத்தி முடித்துவிட்டேன். ஆனால், அதற்குப் பிறகு திருத்தம் செய்யும் வேலையைத் தொடர இயலவில்லை. அப்படியே நிறுத்திவிட்டேன்.
அந்தக் கதை என்னை வெகுதொலைவு இழுத்துச் சென்றுவிட்டது.
அனைத்தையும் அசைபோட்டபடி பழைய நினைவுகளில் திளைத்துவிட்டேன். வழக்கம்போல உண்மையும்
புனைவும் கூடிய படைப்புதான் அது. அந்தக் காடும் மழையும் குளிரும் உண்மையானவை. உற்சாகமான
உரையாடல்காரனான சிறுவனும் உண்மையானவன். எல்லாவற்றையும் ஒருகணம் அசைபோட்டபோது, உண்மையிலேயே
ஒரு குளிர்க்காற்று அக்கணத்தில் என்னைத் தழுவி நகர்ந்ததைப்போலவே இருந்தது. அந்தப் பழைய
நினைவுகளில் தோய்ந்திருப்பதை என் மனம் விரும்பியது. பிடித்த பாட்டை மீண்டும்மீண்டும்
ஓடவிட்டு கேட்பதுபோல, அந்த நினைவையே அசைபோட்டபடி இருந்தேன். காட்டின் காட்சிகள் கலந்து
நகர்ந்தபடி இருந்தன. அப்படிப்பட்ட ஓர் இளைப்பாறல் எதற்காகவோ எனக்கும் அப்போது தேவைப்பட்டது.
நாலைந்து நாட்கள் கழித்து அந்தக்
காட்டின் பக்கம் வேலைநிமித்தமாகச் செல்லவேண்டிய ஓர் அவசரம் தற்செயலாக ஏற்பட்டது. சென்ற
வேலை முடிந்த பிறகு வண்டியெடுத்துக்கொண்டு, அந்தப் பழைய பாதையில் சென்றேன். ”எங்க சார்
போவணும்?” என்று கேட்ட ஓட்டுநரிடம் “சும்மா கொஞ்ச தூரம் போவலாம், போங்க” என்றேன். அவரும்
மறுபேச்சில்லாமல் ஓட்டத் தொடங்கினார். காடு மாறிவிட்டதைப்போலவும் இருந்தது. மாறாமல்
இருப்பதுபோலவும் இருந்தது. வழியெங்கும் பல பாறைகள். பல பள்ளங்கள். பூத்திருக்கும் தேக்குமரங்கள்.
புதிய கிளைத்தடங்கள். பழைய இடத்தை என்னால் சரியாகக் கணிக்கமுடியவில்லை. இதோ வந்துவிடும்,
இதோ வந்துவிடும் என நெடுந்தொலைவு சென்றுவிட்டேன். அந்த இடம் வரவே இல்லை. தழுவியோடிய
குளிர்ந்த காற்றுக்கு நடுவில் எனக்கு எல்லா இடங்களும் ஒன்றுபோலவே இருந்தன. நெடுநேரத்துக்குப்
பிறகு “போதும் திரும்பிடலாம்” என்று ஓட்டுநரிடம் சொன்னேன். என் மனத்தில் ஏமாற்றம் எதுவுமில்லை.
உண்மையிலேயே என் மனம் நிறைந்திருந்தது. திருப்புவதற்காக வண்டியை நிறுத்திய அவர் குழப்பத்துடன்
ஒருகணம் என்னைப் பார்த்து, “என்ன சார்?” என்று
கேட்டார். என்னுடைய புன்னகையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. “ஒன்னுமில்லப்பா,
போயிடலாம்” என்று மறுபடியும் காட்டை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மழையில் நனைந்திருந்த
மண்ணின் மணம், மக்கிய இலைகளின் மணம், பூக்களின் மணம், மழையின் மணம், காற்றின் மணம்
என மாறிமாறி வீசிய மணங்களின் கலவையை என் நெஞ்சில் நிறைத்துக்கொண்டே திரும்பினேன்.
ஊருக்குத் திரும்பி இரண்டுமூன்று
வாரங்களுக்குப் பிறகுதான் மீண்டும் மெய்ப்புப்பிரதிகளை கையில் எடுத்தேன். பூனைக்குட்டி தொடங்கி காணிக்கை வரையிலான பத்து சிறுக்தைகள். கொஞ்சம்கொஞ்சமாக
நாலைந்து இரவுகளில் திருத்தும் வேலையைச் செய்துமுடித்தேன்.
ஆனாலும் என் மனம் ஏதோ அமைதியற்றுத் தத்தளித்தபடி இருந்தது. 184 சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பதினேழு சிறுகதைகளில் எத்தனைச்
சிறுகதைகள் எதிர்காலத் தலைமுறையினரும் விரும்பிப் படிக்கக்கூடியவையாக இருக்கும் என்றொரு
கேள்வி எதிர்பாராத ஒரு கணத்தில் என் நெஞ்சில் முளைத்து என்னைத் தடுமாறவைத்துவிட்டது.
ஒரு பாம்பின் கண்களென அக்கேள்வி என்னையே உற்றுப் பார்ப்பதுபோல இருந்தது. வேறு எதைப்பற்றியும்
என்னால் சிந்திக்க இயலவில்லை. அதே சமயத்தில் அதை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியவில்லை.
தாண்டிக் கடந்துசெல்லவும் முடியவில்லை. தராசின் ஒரு தட்டில் நான் ஏறி நின்றுவிட்டேன்.
ஆனால், சமநிலைக்கு வராமலேயே தட்டுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் என் தவிப்பை அதிகரித்தபடி
இருந்தன.
அந்தத் தவிப்பிலிருந்து நான்
மீண்டெழுந்த கணம்கூட ஒரு சிறுகதை நிகழும் கணம்போலவே நிகழ்ந்தது. வழக்கம்போல இரவு உணவுக்கு முன்னால் அருணா சாய்ராமின்
குரலில் ‘என்ன கவி பாடினாலும்’ பாட்டைக் கேட்டபடியே பாரதியாரின் கவிதைத்தொகுப்பைப்
பிரித்தேன். கை புரட்டிய பக்கத்தில் ‘அழகுத்தெய்வம்’ என்றொரு கவிதை இருந்தது. வசீகரமான
தாளக்கட்டைக் கொண்ட எண்சீர் விருத்தம். மங்கியதோர் நிலவினிலே கனவில் கண்ட மங்கையுடன்
மானுடன் நிகழ்த்தும் உரையாடலே அக்கவிதை. அழகுத்தெய்வமான அந்த மங்கை ஒவ்வொரு கேள்விக்கும்
ரத்தினச்சுருக்கமான பதிலைச் சொல்கிறாள். உரையாடலின் போக்கில் ‘ஞாலத்தில் விரும்பியது
நண்ணுமோ?’ என்றொரு கேள்வியைக் கேட்கிறான் மானுடன். ‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’
என்று அந்த அழகுத்தெய்வம் பதில் சொல்கிறது. அந்தப் பதிலைப் படித்ததுமே வாய்விட்டுச்
சிரித்துவிட்டேன். உரையாடல் அத்துடன் முடியவில்லை. மேலும் தொடர்ந்து செல்கிறது. அழகுத்தெய்வத்தின்
பதிலில் நிறைவடையாமல் ‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’ என்றொரு துணைக்கேள்வியை எழுப்புகிறான் மானுடன். உடனே ஒரு புன்னகையுடன் ‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’
என்று பூசி மெழுகியதுபோல பதில் சொல்கிறது அழகுத்தெய்வம். அந்தப் பதில் மானுடனை அமைதிப்படுத்தும்
பதில் என்பதைப் படிக்கும்போதே புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லாம் பலிக்கும் என்பதைவிட
ஒன்றிரண்டு பலிக்கும் என்னும் பதிலில்தான் உண்மை பொதிந்திருப்பதைப்போலத் தோன்றுகிறது.
அதுதான் சாத்தியமானதாகவும் இருக்கும். அழகுத்தெய்வத்தின் பதிலை எனக்குச் சொன்ன பதிலாகவே
நான் நினைத்துக்கொண்டேன். அக்கணத்திலேயே என் எல்லாத் தவிப்புகளையும் பாரங்களையும் தரையிலே
உதறிவிட்டு விண்ணிலேறி சிறகுவிரித்துப் பறக்கத் தொடங்கினேன். என் பயணத்தில் இனி தவிப்பு
என்பதே இல்லையெனச் சொல்லிக்கொண்டேன்.
இந்தத் தொகுப்புக்கான சிறுகதைகளைத்
தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி, அதற்கென ஒரு முன்னுரையையும் எழுதிக் கொடுத்தவர் என்
நண்பரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன்.
இருபதாண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்த ‘சோலைகள்’ சந்திப்பில்தான்
நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அவருடைய உண்மைப்பெயர் கோபாலகிருஷ்ணன் என்றாலும்
அப்போது அவர் சூத்ரதாரி என்னும் பெயராலேயே அறியப்பட்டிருந்தார். அந்தச் சந்திப்பு தொண்ணூறுகளில்
நிகழ்ந்த ஒரு முக்கியமான சந்திப்பு. முப்பதுக்கும் மேற்பட்ட முக்கியமான படைப்பாளிகள்
அங்கே திரண்டிருந்தார்கள். கோவை.ஞானி, நம்மாழ்வார், சா.கந்தசாமி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன்,
சூத்ரதாரி,. ராஜேந்திரன், மோகனரங்கன், சிபிச்செல்வன், சு.வேணுகோபால், பவா செல்லதுரை
ஆகிய பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அக்குழுவில் ஏதோ ஓர் அலைவரிசையில் நானும்
கோபாலகிருஷ்ணனும் ஒத்த எண்ணங்களையும் ரசனைகளையும் கொண்டவர்களாக இருந்தோம். இன்றுவரைக்கும்
அந்த நட்பு தொடர்கிறது. செலவிடும் நேரத்தைப் பெரிதெனக் கருதாது, பதினாறு தொகுதிகளை
அடுத்தடுத்துப் படித்து இந்தச் சிறப்புத்தொகுதிக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் அம்மாவும் அப்பாவும் என்
வாழ்வில் மிகமுக்கியமானவர்கள். திண்ணைப்பள்ளிக்கூட அறிமுகக்கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு
கைத்தொழில் கற்று வாழ வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிட்டவர் என் அப்பா. ஆரோக்கியமற்ற
உடல்நிலையின் காரணமாக மிக எளிய இல்வாழ்க்கை வெற்றிகளைக்கூட அவரால் அடையமுடியாமல் போய்விட்டது.
அந்தத் தோல்வியுணர்வின் கசப்புகளை அடிமனத்தில் தேக்கியபடி அவர் நடமாடிக்கொண்டிருந்தாலும்
மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் வீட்டைக் காக்கும் கூரையென குடும்பத்தைக் காத்து
நிலைநிறுத்தியவர் எங்கள் அம்மா. கடுமையான நெருக்கடிகளில் சிக்கித் தவித்த பல தருணங்களை
எங்கள் அம்மாவின் தன்னம்பிக்கையாலும் அன்பாலும் நாங்கள் எளிதாகக் கடந்துவந்தோம். ஒருபோதும் வற்றாத அந்தத் தன்னம்பிக்கையும் அன்பும்
அவர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட செல்வங்கள். என் தலை அவ்விருவரின் காலடிகளில்
என்றென்றும் வணங்கிப் பணிந்திருக்கும். அவர்களுக்கு இத்தொகுதி என் எளிய சமர்ப்பணம்.
இச்சிறுகதைகளை வெளியிட்ட இங்கே
இன்று, தாமரை, தளம், இந்தியா டுடே, தாய், மனஓசை, சுபமங்களா, அரங்கேற்றம், அகநாழிகை,
கணையாழி, உயிர்மை, உலகத்தமிழ், தீராநதி, வார்த்தை, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களுக்கும்
அவற்றின் ஆசிரியர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் இம்முன்னுரையில் பதிவு செய்ய
விரும்புகிறேன். என் மனத்தையும் விருப்பத்தையும் முழு அளவில் புரிந்துகொண்ட என் மனைவி
அமுதாவின் உறுதுணையையும் அன்பையும் நான் ஒருபோதும்
மறக்கமுடியாது. அவையே எனக்குரிய மூல ஊற்றுகள். அவர் முகமும் இக்கணத்தில் என் நெஞ்சில்
ஒளிர்கிறது. இப்படி ஒரு சிறப்புத்தொகுதியைக் கொண்டுவரும் திட்டத்தை முதன்முதலாக முன்வைத்து
எனக்கு ஊக்கம் தந்தவர் நண்பர் கண்ணன். அவருக்கு என் நன்றி. மிகச்சிறந்த முறையில் இத்தொகுப்பை
வெளிக்கொண்டு வரும் காலச்சுவடு பதிப்பகத்தை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.