Home

Sunday, 8 February 2026

வாசிப்பதனால் ஆய பயன்

 

கொலம்பியாவைச் சேர்ந்த லூயிஸ் சொரியானோ என்னும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய ஒரு குறிப்பை சமீபத்தில் படித்தேன். இளமைப் பருவத்திலிருந்தே புத்தக வாசிப்பில்  சொரியானோவுக்கு ஆர்வம் இருந்தது.  அவர் வசித்த கிராமத்தில் நூலகம் இல்லை. அதனால் பக்கத்தில் உள்ள நகரத்துக்குச் சென்று நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்தார்.  தினந்தோறும் பள்ளிக்கும் செல்லவேண்டி இருந்ததால் அவரால் நூலகத்துக்குச் செல்ல முடியவில்லை. அதனால் விடுப்பு நாட்களில் மட்டுமே நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்.

ஆரம்பப்பள்ளிப் படிப்பை முடித்ததும் உயர்நிலைப்பள்ளியில் சேர்வதற்காக நகரத்துக்கே சென்றுவிட்டார் சொரியானோ. அதற்குப் பிறகு தன் வசிப்பிடத்துக்கு அருகிலேயே இருந்த நூலகத்துக்கு அவர் தினந்தோறும் சென்று படிக்கத் தொடங்கினார். பள்ளிப்படிப்பை முடித்து இன்னும் பெரிய நகரத்துக்குச் சென்று கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதனால் ஸ்பானிஷ் இலக்கியத்தையே பாடமாக எடுத்துப் படித்து பட்டம் பெற்றார். பட்டதாரியான பிறகு, அவருக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

இளமைப்பருவத்தில் தமக்கிருந்த வாசிப்பு ஆர்வத்தைப்போல பள்ளியில் தம்மிடம் படிக்கும் ஒருசில மாணவர்களிடமும் ஆர்வமிருப்பதைக் கண்டு சொரியானோ உற்சாகம் கொண்டார். வாழையடி வாழையாக வாசிப்பு ஆர்வம் தலைமுறைகளைக் கடந்து வேர்கொண்டிருப்பதை அறிய அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் ஓய்வறையில் உட்கார்ந்து பிற ஆசிரியர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் வாசிப்பு ஆர்வத்தைப்பற்றி பிற ஆசிரியர்களிடம் பெருமையாக எடுத்துரைத்துவிட்டு, அதை மேன்மேலும் வளர்ப்பதற்குரிய வழிமுறைகள் தொடர்பான யோசனைகளில் மூழ்கியிருப்பதாகத் தெரிவித்தார். அம்மாணவர்களிடம் மேன்மேலும் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டி அவர்களை ஊக்கப்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டார்.

அதைக் கேட்டு பிற ஆசிரியர்கள் அவரைப் பார்த்து சிரித்து கேலி செய்தனர். ஒரு ஆசிரியரின் பணி என்பது மாணவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதியும்வண்ணம் பாடம் நடத்தி, தேர்வுகளில் தேர்ச்சி பெறவைத்து, நல்ல வேலையைத் தேடியடையவும் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் துணையாக இருப்பதுதானே தவிர, இலக்கிய வாசிப்பு, வரலாற்று வாசிப்பு என மாணவர்களின் கவனத்தைத்  திசைதிருப்பி மனத்தை மாற்றி அலைவதற்கு வழிவகுத்துவிடக்கூடாது என்றும் அவருடைய ஆர்வத்தைச் சீர்குலைப்பதுபோலப் பேசினர். ஆயினும் அந்த ஆச்சிரியர்களுடைய சொற்களால் சொரியானோ கலங்கவில்லை. மாறாக, அவருடைய மன உறுதியை அதிகரிக்கவே செய்தது.

இலக்கியத்தை அறியாத வாசிப்பு ஒருவனுக்குத் தன் சொந்த வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள நிச்சயமாக உதவும் என்பதில் சதேகமில்லை, அதே சமயத்தில் இலக்கியமும் அறிந்தவனுடைய வாசிப்பு தன் சொந்த வாழ்க்கையைப்பற்றி மட்டுமல்லாமல் பிறருடைய வாழ்க்கையைப்பற்றியும் அறிந்துகொள்ளவும் அவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ளவும் உதவும்  என்று புன்னகையோடு எடுத்துரைத்தார்.

சொரியானோ தம் வீட்டில் தம்மிடம் இருந்த புத்தகங்களை அவ்வப்போது கொண்டுவந்து தன் வகுப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களிடம் கொடுத்து படிக்கும்படி தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். அந்த மாணவர்களும் அவற்றை விரும்பிப் படித்தனர்.

அவர்கள் அனைவரும் வெகுதொலைவில் உள்ள கிராமங்களிலிருந்து வருபவர்கள். சொரியானோ அவர்களிடம் அன்போடு பேசிப் பழகி அவர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தார். ஒருநாள் சொரியானோவோடு உரையாடும்போது அம்மாணவர்கள் தம்மைப்போலவே தம் கிராமங்களில் படிப்பதில் விருப்பம் கொண்ட பல மாணவர்கள் இருப்பதாகவும் வசதியின்மை காரணமாக அவர்களால் கிராமங்களைவிட்டு வெளியே வரமுடியவில்லை என்றும் சொன்னார்கள்.

சொரியானோ தன்னுடைய கிராமத்தையும் தன் இளமைப்பருவத்தையும் நினைத்துக்கொண்டார். ஆண்டாண்டு காலமாக கிராம நிலைமை ஒரு மாற்றமும் இன்றி நாடெங்கும் அப்படியே இருப்பதை அறிந்து வேதனையில் மூழ்கினார். தன்னால் முடிந்த அளவுக்கு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று முடிவெடுத்தார்.

அவரிடம் ஆல்பா, பெட்டோ என இரு கழுதைகள் இருந்தன. பனிக்காலத்தில் ஊரைச் சுற்றி வருவதற்காக அவற்றை அவர் வளர்த்துவந்தார். அவருடைய வீட்டு நூலகத்தில் இருநூறு முன்னூறு நூல்கள் இருந்தன. அவற்றில் சிறுவயதுப் பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் எழுபது புத்தகங்கள் இருந்தன. அந்த எழுபது புத்தகங்களையும் ஒரு மூட்டையாகக் கட்டி தனியாகப் பிரித்துவைத்தார்.

ஒருநாள் வகுப்பில் வாசிப்புப்பழக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த மாணவனிடம் “நாளைக்கு விடுமுறை அல்லவா? உங்கள் கிராமத்துக்கு வருகிறேன். நீ எனக்காக கிராமத்தின் எல்லையிலேயே காத்திரு” என்று சொன்னார். ஆசிரியரின் பயணம் எதற்காக என்பது அவனுக்குப் புரியவில்லை. ஆர்வத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் அவரிடமே கேட்டபோது “நான் உங்கள் கிராமத்துக்கு வரும்போது உனக்கு என் பயணத்தின் ரகசியம் புரியும்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அடுத்தநாள் காலையில் ஏற்கனவே கட்டி வைத்திருந்த மூட்டையை ஆல்பா கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டு தன் மாணவன் வசிக்கும் கிராமத்துக்குச் சென்றார். அவருடைய மாணவன் அவர் ஏற்கனவே சொன்னபடி ஊர் எல்லையில் இருந்த மரத்தடியில் காத்திருந்தான். புத்தக மூட்டையோடு அவர் இறங்கியதைப் பார்த்ததும் அவனுக்கு ஆகாயத்தில் பறப்பதுபோல இருந்தது. படிக்கும் ஆர்வமுள்ள தன் நண்பர்களையெல்லாம் அழைத்து வருமாறு மாணவனிடம் சொன்னார் சொரியானோ.

அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி நண்பர்களை அழைத்துவர ஓடினான். ஒருவன் வழியாக இன்னொருவன், அவன் வழியாக மற்றொருவன் என சிறிது நேரத்திலேயே கிராமமெங்கும் செய்தி பரவியது. புத்தக வாசிப்புல் ஆர்வம் கொண்ட பத்து சிறுவர்கள் சொரியானோ காத்திருந்த மரத்தடிக்கு ஓடி வந்தனர்.

எல்லோரும் வந்து சேர்ந்த பிறகு கழுதையின் முதுகில் இருந்த மூட்டையை இறக்கி அவிழ்த்து, அதே விரிப்பில் புத்தகங்களையெல்லாம் பரவலாக அடுக்கிவைத்தார் சொரியானோ. புத்தகங்களைப் பார்க்கப்பார்க்க சிறுவர்கள் அனைவருக்கும் வானத்தில் பறப்பதுபோல இருந்தது. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டனர்.  யார் யார் என்னென்ன புத்தகம் எடுத்துக்கொண்டனர் என்பதை சொரியானோ ஒரு சுவடியில் குறித்துக்கொண்டார். ஒன்றுக்கு இரண்டுமுறை நிதானமாக புத்தகங்களைப் படிக்கலாம் என்றும் தேவைப்பட்டால் அவர்களுக்குள்ளேயே புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அடுத்த வாரம் இதேபோல வந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு புதிய புத்தகங்களைக் கொடுப்பதாகவும் சொன்னார். பிறகு எஞ்சிய புத்தகங்களையெல்லாம் அடுக்கி மீண்டும்  மூட்டையாகக் கட்டி கழுதைமீது வைத்துக்கொண்டு அடுத்த கிராமத்துக்குச் சென்றார்.

அன்று மாலைவரைக்கும் பயணம் செய்து ஐந்து கிராமங்களுக்குச் சென்றார் சொரியானோ. புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள ஐம்பது மாணவர்களை அவரால் அடையாளம் காண முடிந்தது. அவர்களுக்கு வழங்கிய ஐம்பது புத்தகங்கள் போக எஞ்சிய புத்தகங்களோடு அன்று இரவு அவர் தன் வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்த வாரம் விடுமுறை நாளில் தம்மிடம் எஞ்சியிருந்த இருபது புத்தகங்களைக் கொண்ட மூட்டையோடு அவர் மீண்டும் கழுதையில் முதல் கிராமத்துக்குச் சென்றார். அவரிடம் புத்தகங்கள் பெற்ற சிறுவர்களும் சிறுமிகளும் அவருக்காக கிராமத்தின் எல்லையில் மரத்தடியிலேயே ஆர்வத்தோடு காத்திருந்தனர். அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு கையசைத்தபடி கழுதையை விட்டு இறங்கினார் சொரியானோ. படித்த புத்தகங்களின் கதைகளைப்பற்றி அந்தச் சிறுவர்கள் ஆர்வத்தோடு அவரிடம் உரையாடி மகிழ்ந்தனர்.

கதைகள் அச்சிறுவர்களுடைய நெஞ்சில் மேன்மேலும் படிக்கும் ஆர்வத்தை வளர்த்திருப்பதை அவர் நேருக்குநேராகப் பார்த்து மகிழ்ந்தார்.  படித்த புத்தகங்களை சொரியானோவிடம் ஒப்படைத்துவிட்டு அச்சிறுவர்கள் படிக்காத புத்தகங்களை எடுத்துக்கொண்டனர்.  இப்படியே அடுத்தடுத்த கிராமங்களுக்குச் சென்ற சொரியானோ சிறுவர்களிடமிருந்து படித்த புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு படிக்காத புத்தகங்களை அளித்துவிட்டுச் சென்றார்.

அவரிடம் இருந்தவை எழுபது புத்தகங்கள் மட்டுமே. ஆறேழு வாரங்களுக்குப் பிறகு கிராமத்துச் சிறுவர்கள் அவற்றையும் படித்துமுடித்துவிடுவார்கள். ஒவ்வொரு வாரமும் அச்சிறுவர்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிக்களை பெருகுவதையும் வாசிப்பதற்காக ஆர்வத்துடன் காத்திருப்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களிடம் தான் உருவாக்கிய வாசிப்பு ஆர்வத்தை எப்படி மேன்மேலும் வளர்த்தெடுப்பது என்று யோசித்தார்.

காலம் நகர்ந்துகொண்டே இருந்தது. கடைக்குச் சென்று தன் சேமிப்புப்பணத்தைச் செலவு செய்து மேலும் புத்தகங்களை வாங்கினார் சொரியானோ. அந்த விஷயத்தை முன்வைத்து தன் நண்பர்களிடம் உரையாடியபோது அவர்கள் தம்மிடம் இருந்த புத்தகங்களைக் கொண்டுவந்து அவரிடம் அளித்தார்கள். புதிதாகக் கிடைத்த அப்புத்தகங்களைக் கொண்டு மேலும் சில வாரங்களை அவரால் எளிதாகக் கடத்தமுடிந்தது. கிராமத்துச் சிறுவர்களின் ஆர்வம் பல மடங்காகப் பெருகிவிட்டது. விடுமுறை நாளில் சொரியானோ எப்போது வருவார் எப்போது வருவார் என ஆவலோடு காத்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்று படித்தனர்.

ஒருநாள் இரவில் சொரியானோ ஜுவான் கொசாயின் என்னும் எழுத்தாளர் எழுதிய ஒரு நாவலைப் படித்துமுடித்தார். அந்த நாவல் அவர் மனத்தைத் தொட்டது. அந்த நாவல் வாசிப்பால் கிளர்ந்தெழுந்த உணர்வுகளை அப்போதே அவர் ஒரு நீண்ட கடிதமாக ஆசிரியருக்கு எழுதினார். அக்கடிதத்தின் இறுதியில் தான் மேற்கொண்டிருக்கும் வாசிப்பு முயற்சியைப்பற்றியும் சில வரிகளை எழுதிச் சேர்த்து அனுப்பிவைத்தார்.

அந்தக் கடிதத்தைப் படித்த எழுத்தாளர் சொரியானோவின் முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னிடம் இருந்த சில நூல்களை அவருக்கு அனுப்பிவைத்தார். அது மட்டுமன்றி, ஒரு வானொலி நிகழ்ச்சியில் சொரியானோவின் முயற்சியைக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார். அந்த எழுத்தாளரின் வானொலி உரையைக் கேட்ட நேயர்கள் நாட்டின் பல இடங்களிலிருந்து அவருக்குப் புத்தகங்களை தொடர்ச்சியாக நன்கொடையாக அனுப்பிவைக்கத் தொடங்கினர். அவர் அதை எதிர்பார்க்கவே இல்லை. ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவரிடம் சேர்ந்துவிட்டன.

சொரியானோ தன்னிடமிருந்த இரண்டு கழுதைகள் மீதும் புத்தக மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிராமங்களுக்குச் செல்லத் தொடங்கினார். பல புதிய கிராமங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன. அதனால் அவர் பயணம் செய்யவேண்டிய கிராமங்களின் எண்ணிக்கையும் பெருகியது. படிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் பெருகியது.

சொரியானோவின் முயற்சியை அறிந்த நகரமக்கள் புத்தகங்களைச் சேமிப்பதற்காக அவருக்கு அவருடைய வீட்டுக்கு அருகிலேயே ஒரு பெரிய அறையைக் கட்டிக் கொடுத்தனர். சொரியானோ அந்த அறையையே எல்லா நாட்களும் இயங்கும் சிறு நூலகமாக மாற்றிவிட்டார். நகரத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் அங்கு வந்து படிக்கத் தொடங்கினர்.

ஒரு விடுமுறைநாளில் கூட அவர் ஓய்வெடுத்ததில்லை. விடுமுறை கிடைத்ததும் அவர் தம் கழுதைகள் முதுகில் புத்தகச்சுமையை ஏற்றிக்கொண்டு கிராமங்களை நோக்கிச் சென்றுவிடுவார். கிராமத்துச் சிறுவர்கள் அனைவரும் சொரியானோவை அன்புடன் ’கழுதை நூலகம் சொரியானோ’ என்னும் பொருள்படும்படி ’பிபிலோபர்ரோ சொரியானோ’ என்று அழைக்கத் தொடங்கினர்.

கழுதை நூலகத்தில் படிக்கத் தொடங்கி வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் பெரியவர்களாகி வேலை கிடைத்து பிற நகரங்களுக்குக் குடியேறிச் சென்றனர். அங்கிருந்த நூலகங்களுக்குச் சென்று தாமாகவே புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினர். சொந்தமாகவும் புத்தகங்களை வாங்கிச் சேமிக்கத் தொடங்கினர். தாம் செல்லும் இடங்களிலெல்லாம் சொரியானோவின் புகழைப் பரப்பினர்.

சிலர் அதிகாரிகளானார்கள். சிலர் எழுத்தாளர்களானார்கள். சிலர் பத்திரிகைப்பணியில் இணைந்தனர். சிலர் ஊடகங்களில் செயல்படத் தொடங்கினர். எங்கு இருந்தாலும் தம்மால் முடிந்தவரை மற்றவர்களை புத்தகவாசிப்பை நோக்கித் திசைதிருப்பினர். ஆர்வம் கொண்ட சிலர் ஒருங்கிணைந்து சொரியானோவைப்பற்றி ஓர் ஆவணப்படத்தை உருவாக்கினர்.  ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சொரியானோ கிராமத்துச் சிறுவர்களுக்காக தன் கழுதை நூலகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவர் பெயர் வரலாற்றில் நிலைபெற்றது.

நூல்வாசிப்பைப்பற்றியும் நூலகத்தைப்பற்றியும் ஒரு விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்திய வகையில் சொரியானோ ஒரு மகத்தான முன்னோடி. கிராமத்துக்காரர்கள்தானே, இவர்களுக்கு எதற்கு புத்தகமும் வாசிப்பும் என பிறரைப்போல அவர் ஒதுங்கிச் செல்லாமல் வாசிப்புப்பழக்கத்தை சிறுவர்களிடையில் உருவாக்க உண்மையிலேயே பாடுபட்டார். சிறுவர்களிடம் ஆரம்பத்தில் வாசிப்பு என்பது சாகசக்கதைகள், நீதிக்கதைகள், மாயாஜாலக்கதைகள், தந்திரக்கதைகள், வாழ்க்கை வரலாற்றுக்கதைகள் என ஆர்வமூட்டும் தளங்களிலிருந்துதான் தொடங்கும். ஆனால் வாசிப்பின் சுவையை மனம் உணர உணர, இன்னும் சுவையானது எங்கே கிடைக்கும் என தேடத் தொடங்கிவிடும். அந்தத் தேடல் வேட்டை கப்பல் மாலுமியிடம் உள்ள திசைகாட்டிக்கு நிகரானது. நாம் செல்லவேண்டிய திசையை நோக்கி தானாகவே அது அழைத்துச் செல்லும். .

நம்மைச் சுற்றி கொலம்பியா போல ஏராளமான நாடுகள் உள்ளன. வசதிகள் குறைவான கிராமங்கள் எங்கெங்கும் நிறைந்துள்ளன. எல்லாக் கிராமங்களிலும் ஏதோ ஒரு வகையில் சொரியானோவைப்போன்ற அபூர்வ மனிதர்கள் இருக்கிறார்கள். சொரியானோ போலவே ஒட்டகங்கள் மீதும், மாட்டுவண்டிகளிலும் புத்தகமூட்டைகளை எடுத்துச் சென்று சிறுவர்களிடம் சேர்த்த அன்பு நெஞ்சங்கள் பலர் உள்ளனர்.

வசதியான வாழ்க்கையாலோ, செல்வத்தாலோ ஒருபோதும் திறக்கமுடியாத அறிவுக்கண்ணை தொடர் வாசிப்புப்பழக்கம் திறக்கவைக்கும் என்கிற உண்மையை அறிந்தவர்கள் அவர்கள். ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்பதுபோல எங்கோ ஒருவர் மேற்கொள்கிற முயற்சியால் அனைவரும் புத்தகத்தின் பயனை அறிந்துகொள்கிறார்கள்.

நம் நல்லூழின் விளைவாக, இன்று நம் தமிழகக் கிராமங்களில் நூலகங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக பென்னிங்டன் நூலகம் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது என்பதே, புத்தக வாசிப்பில் நமக்கு முன் வாழ்ந்த தலைமுறையினரும் இன்றைய தலைமுறையினரும் ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் ஓங்கி நின்றிருந்த பல நிறுவனங்கள் இன்று இல்லை. பல தொழிற்சாலைகள் இன்று இல்லை. பல தோப்புகள் இல்லை. பல வாய்க்கால்களும் கிணறுகளும் இல்லை. பச்சைப்பசேலென கண்களைக் குளிர்வித்த வயல்வெளிகளும் இல்லை. அவையனைத்தும் உருமாறி என்னென்னவாகவோ மாறிவிட்டன. ஆனால் ஒரு நூலகம் அதே பழைய வேகத்தோடும் அதே ஊக்கத்தோடும் இன்றளவும் செயல்பட்டுவருவது வரலாற்றுமுக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

கொலம்பியாவில் சொரியானோ உருவாக்கிய  நூலகத்தைப்போல நம் தமிழ்மண்ணில் பென்னிங்டன் உருவாக்கிய நூலகம் காலத்தைக் கடந்து அறிவுத்தேடல் உள்ள அனைவருக்கும் உற்ற துணையாக விளங்கிவருகிறது. வாசிப்பை நோக்கி எதிர்காலத்தலைமுறையினர் அலையலையாகத் தொடர்ந்து வந்து இந்நூலகத்தை இன்னும் பல நூற்றாண்டுக்காலம் இயங்கும்படி செய்யவேண்டும். 

 

(ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டுவிழா மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை)