மிகவும் குறைந்த வரிகளை உடைய பாடல்கள் தமிழில் சங்க இலக்கிய காலத்திலேயே உருவாகிவிட்டன. குறுந்தொகையில் பல பாடல்கள் நான்கு வரிகள் முதல் எட்டு வரிகள் வரை உள்ளவை. ஐங்குறுநூற்றில் மூன்று முதல் ஆறு வரிகள் வரை உடைய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில் நான்கு வரிகளை உடைய பல பாடல்கள் இருக்கின்றன. குறைந்த வரிகள் கொண்டவை என்றபோதும் அப்பாடலில் ஒரு பக்கத்தில் நிலக்காட்சியும் இன்னொரு பக்கத்தில் அதற்கு இணையான மனக்காட்சியும் இயல்பாக எழுந்து நிற்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் கவிதையின் மையத்தை நோக்கி ஈர்க்கும் ஆற்றல் பொதிந்திருக்கிறது. அத்தகு பாடல்களை வாசிக்கும்போதெல்லாம் நம் மனம் அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை.
இன்றைய
நவீன அலுவலக வாழ்க்கையில் ஒருசில நகரங்களுக்கு அப்பால் சென்றுவரவோ, கண்டு களித்து சுற்றி
வரவோ, ஒருவருக்கும் வாய்ப்பில்லை. தமிழிலக்கியப் பரப்பில் குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை என ஐந்திணைப்பாடல்களும் உள்ளன. நம் மனம் விரும்பும் இடத்துக்கு அந்தப்
பாடல் நம்மை அழைத்துச் சென்றுவிடும். அவ்வளவு காட்சிகள். அவ்வளவு உணர்வுகள். அந்தக் காலத்து யுடியூப் காணொளிக்காட்சிகளைப்போல
அவை உள்ளன.
’யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென, அருவி விடரகத்து இயம்பும்
நாட’ என்பது குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் கபிலரின் பாடல் வரிகள். மொத்தத்தில்
நான்கே நான்கு வரிகள் மட்டுமே அப்பாட்டில் உள்ளன. அவற்றில் காணப்படும் இரண்டு வரிகள்
இவை. அடர்ந்த காட்டுக்குள் எங்கோ கண்மறைவான இடத்தில் மழை பொழிகிறது. ஆனால் மழை பொழியும்
சத்தம் கூட கேட்கவில்லை. மலைக்கு மறுபுறத்தில் வசிப்பவர்களுக்கு மழை பொழிந்த சத்தம்
கேட்காதபோதும், மலையிலிருந்து வழிந்தோடி இறங்கும் அருவியின் ஓசையை வைத்தும் நீரோட்டத்தின்
அளவை வைத்தும் மழை பொழிந்த செய்தியை அனைவரும் அறிந்துகொள்கிறார்கள்.
காதால்
கேட்கவில்லை, ஆனால் கண்ணால் பார்க்கும் ஒரு காட்சி என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிற
உணர்த்திவிடுகிறது. அப்படிப்பட்ட காட்சியை உடைய நாட்டைச் சேர்ந்தவனே என்பதுதான் பாட்டு
வரிகளுக்கு நேரிடையான பொருள். காதலர்களுக்கு எப்போதும் ஒரு மனமயக்கம் உண்டு. தம் காதல்
ஒருவருக்கும் தெரியாத பரம ரகசியம் என நினைத்திருப்பார்கள். ஆனால் உலகத்துக்கே அவர்களின்
காதல் தெரிந்த செய்தியாக மாறியிருக்கும். ஏதோ
ஒன்று, எப்படியோ ஒன்று, அவர்களுடைய ரகசியக்காதலை அம்பலப்படுத்திவிடும். சத்தம் கூட
எழுப்பாமல் பெய்துவிட்டுச் செல்கிற மழையின் தடத்தை, அருவி விழுந்து உணர்த்திவிட்டுச்
செல்வதுபோல காதலும் வெளிப்பட்டுவிடும்.
ஆனால்
’இது இது இப்படி இப்படி’ என இப்பாடலை எழுதிய கபிலர் தெரிவிக்கவில்லை. நாமே உய்த்துணரும்
வகையிலான காட்சித் தொகுப்புகளை நம் கண் முன் நிறுத்துகிறார். இதுதான் சிறந்த கவிதையின்
தன்மை. அது எதையும் தானாகச் சொல்வதில்லை. பார்க்கவைக்கிறது. உணர்த்துகிறது.
’காமம்
ஒழிவதாயினும் தொடர்பும் தேயுமோ நின்வயினானே’ என்பவை அப்பாட்டில் எஞ்சிய மற்ற இரு வரிகள்.
’உன்னைப் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தியாக இருப்பினும் உன்மீது
கொண்ட காதல் ஒருபோதும் தேய்ந்துபோகாது’ என்பதுதான் அதன் நேரடிப் பொருள். இந்த நள்ளிரவில்
இவ்வளவு ஆபத்துகளுக்கு இடையில் பயணம் செய்து துன்பப்படுவதற்கு மாறாக, விரைவில் மணம்
புரிந்துகொண்டு இருவரும் இணைபிரியாத வாழ்க்கை வாழலாமே என சொல்லாமல் உணர்த்துவது அதன்
மறைபொருள்.
இப்படி
ஒரு தொடக்கம் நம் தமிழில் சங்க காலத்தில் அமைந்தபோதும் அடுத்தடுத்த காலகட்டத்தில் பெருக்கெடுத்தோடும்
வெள்ளமென எழுதிப் பார்க்கும் ஆவலும் இயல்பாகவே எழுந்தது. அவற்றின் வழியாகவும் பேரிலக்கியங்கள் உருவாகின. இலக்கியத்துக்கு வடிவம்
என்பது ஒருபோதும் முக்கியமல்ல. உணர்த்தும் அனுபவமே முக்கியம் என்னும் உண்மையே மீண்டும்
மீண்டும் இம்மண்ணில் திகழ்ந்து வந்திருக்கிறது.
குறைவான
வரிகளோடு கவிதைகளை எழுத நினைப்பவர்களுக்கு மரபுவழிப்பயிற்சி ஒரு நல்ல தொடக்கமாக அமையக்கூடும்.
ஜப்பானிய மொழி வழியாக உலக மொழிகளைச் சென்றடைந்த ஹைக்கு, ஜென் கவிதை வடிவங்களைப்போலவே
நம் குறுங்கவிதை வடிவமும் தக்கார் துணையுடன் பரவுமெனில் உலகெங்கும் பரவி விரிவுகொள்ளக்கூடும்.
நாவலாசிரியரும்
கவிதைகளில் நல்ல வாசிப்புப்பயிற்சியும் உடைய நண்பர் கன்யூட்ராஜ் அவர்களை எப்படியோ ஒரு
கட்டத்தில் இந்தக் குறுங்கவிதை வடிவம் என்னும் காந்தம் ஈர்த்துவிட்டது. தம் சிந்தனைத்துளிகளையும்
கற்பனைகளையும் காட்சித்துணுக்குகளையும் குறுங்கவிதை வடிவில் எழுதத் தொடங்கிவிட்டார்.
தந்தையின்
மார்பில் பிள்ளையாய்
மலையின்
மேனியில் மஞ்சு
விடுதலையின்
அமைதி விளையாட்டு
இது கன்யூட்ராஜின்
குறுங்கவிதைகளில் ஒன்று. முதல் இரு வரிகளில் காட்சி தெளிவாக முன்வைக்கப்பட்டுவிட்டது.
அக்காட்சியின் ஊடாக, எது விடுதலை, எது அமைதி என்னும் கேள்விகள் நம் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன.
மலை, மேகம் இரண்டுமே தனித்த இருப்பு கொண்டவை. ஆனால் தந்தைமையின் பாசத்துடன் மேகத்தை
மலை அணைத்துக்கொள்கிறது. தம் மீது புரண்டு விளையாட அனுமதிக்கிறது. அந்த விளையாட்டினால்
உருவாகும் கிளர்ச்சியில் மனம் களிக்கிறது. மேகத்தைக் கட்டுப்படுத்தும் எண்ணமே அதற்குக்
கிஞ்சித்தும் இல்லை. அதற்கு நிகராக, ஒரு குழந்தையைப்போல மலையின் மீது மேகம் தத்தித்
தத்தி விளையாடினாலும் மலையை மேகமும் ஒருபோதும்
தன் உடைமையாகக் கருதவில்லை. உடைமையுணர்வு இல்லாத
இடத்தில் இழப்புணர்வுக்கு வழியில்லை. விடுதலை நிறைந்த இடத்தில் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும்
குறைவில்லை.
விடுதலை
குறித்த இன்னொரு நல்ல கவிதையை வேறொரு இடத்தில் எழுதியிருக்கிறார் கன்யூட்ராஜ்.
மரம்
மேலெழுகிறது வான் தொட
மழை பாய்கிறது
தரை தொட
மேலுமில்லை,
கீழுமில்லை, விடுதலை
முதல்
இரு வரிகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சியை நாம் அனைவருமே உணர்ந்துகொள்ளலாம்.
ஒரு புதிரைப்போல அமைந்திருக்கும் மூன்றாவது வரி நம்மை சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்த்துகிறது.
எது விடுதலை என்னும் கேள்வி அப்புதிரில் அமைந்துள்ளது. மேல்நோக்கி வளர்வதிலும் இல்லை,
தரைநோக்கிப் பொழிவதிலும் விடுதலை இல்லை என்றால் விடுதலை எங்கேதான் இருக்கிறது என்னும்
கேள்வி சிறிது குழப்பத்தை ஏற்படுத்தலாம். சற்றே
ஆழமாகச் சிந்தித்தால் நாம் அக்கேள்விக்கு உரிய பதிலைக் கண்டடையலாம். விடுபடுவதோ, ஓர்
இடத்தைச் சென்றடைவதோ விடுதலை அல்ல. ஒரே புள்ளியில் தேங்கி நிற்காமல் பெருகிப்பெருகி
பரவுவதே விடுதலை என்பதுதான் அதன் விடுதலை. மரத்தின் விடுதலை, அது விண்ணை நோக்கி வளர்ந்துகொண்டே
இருப்பதுதான். மழைநீரின் விடுதலை, அது தரையில் பாய்ந்து பரவி ஓடிக்கொண்டே இருப்பதுதான்.
விசையே விடுதலை. பயணமே விடுதலை. ஒரு தத்துவத்தின் சாரத்தைப்போல கன்யூட்ராஜ் தன் குறுங்கவிதை
வழியாக இந்த உண்மையை உணர்த்துகிறார்.
சாமிமுன்னால்
கற்பூர ஒளி
தெரிந்தது
சாமியா
நின்ற
அழகுப் பெண்முகமா
விளக்கம்
எதுவும் தேவைப்படாத காட்சித்துணுக்கு இது. ஒருபக்கம் அழகின் வசீகரம். இன்னொருபக்கம்
கட்டுப்படுத்தி நிறுத்திவைக்க முடியாத மனத்தின் வேகம். ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ
கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு’ என வள்ளுவர் காலத்திலிருந்தே இந்த வேகம் பாடாய்ப்
படுத்தியெடுக்கிறது.
நான்
தூங்கவில்லை
நட்சத்திரமும்
தூங்கவில்லை
என் அம்மாவா
அது?
படிக்கும்போதே
மனத்தை அசைக்கும் கவிதை இது. தூங்காத சமயத்தில்தான் நம் கண்கள் அலைபாயத் தொடங்குகின்றன.
அறையின் பொருள்களை உற்றுக் கவனிக்கின்றன. சாளரத்துக்கு வெளியே இருட்டைக் கவனிக்கின்றன.
செடிகளை, மரங்களை, இருண்ட வானத்தை, நட்சத்திரத்தைக் கவனிக்கின்றன. அந்தத் தூரத்து நட்சத்திரம்
நம்மை என்னமோ செய்கிறது. ஏதோ சிந்தனைகளில் மூழ்கவைத்துவிடுகிறது. அதில் திளைத்திருக்கும்போதே
எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூக்கத்தில் மூழ்கிவிடுகிறோம். இது அனைவருக்கும்
நிகழும் அனுபவம். கன்யூட்ராஜ் இந்த நினைவுகளைக் கடந்துசென்று, அந்த நட்சத்திரத்தைத்
தன் அம்மாவா என தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறார். தன் மீது அன்புகொண்ட அம்மா விண்ணிலிருந்து
தன்னைப் பரிவோடு பார்த்து எதையோ சொல்லிக்கொண்டிருப்பதாக அவருடைய ஆழ்மனம் உணர்ந்திருக்கலாம்.
பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் வானகத்தில் நட்சத்திரங்களாக நிறைந்திருக்கும் எண்ணம்
அந்தக் கனவை உருவாக்கியிருக்கலாம்.
இருள்நீங்க
கதிரின் வெளிச்சம்
புல்லின்
நுனியில் வைரமொட்டு
தரையில்
ஒரு நட்சத்திரம் காலையில்
பனித்துளியை
நேரடியாக எங்கும் குறிப்பிடாமல் அதை வைரமொட்டு என்று குறிப்பிடும் அழகு ரசிக்கத்தக்கதாக
உள்ளது. வைரத்துளி அல்ல வைரமொட்டு என்று குறிப்பிடுவதைக் கவனிக்கவேண்டும். அந்த மொட்டின்
மினுமினுப்பே கண்ணைக் கவரும்போது நாளை அதன் மலரின் மினுமினுப்பு எப்படி இருக்கும் என்று
எண்ணத் தோன்றுகிறது. புல்வெளி முழுதும் ஒரே கணத்தில் வைரத்தோட்டமாக மாறிவிடும். பனித்துளியை
வைரம் என்று சொன்னபிறகும் கூட கவிஞனின் மனம் ஓய்வுறவில்லை. அதையும் கடந்து இன்னொரு
வரி சொல்லத் தூண்டுகிறது. தரையில் ஒரு நட்சத்திரம் என்றொரு வரி சட்டென விழுந்து இணைந்துகொள்கிறது.
நட்சத்திரம்
என்பது பொதுவாக உழைப்பால் உயர்ந்த மனிதர்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகவே
நிலவியிருக்கும் சூழலில் கன்யூட்ராஜ் முதன்முதலில் புல்நுனியில் தேங்கி நிற்கும் பனித்துளியைக்
குறிப்பிடும் சொல்லாகப் பயன்படுத்துகிறார். அழகான சொல்லாட்சி. அவருக்கும் பொருத்தமான
சொல்லாட்சி அது. அவர் தன்னை அறியாமலேயே அச்சொல்லைக் கண்டடைந்திருக்கிறார்.
தன் நெஞ்சில் எழுந்த சிந்தனைத்துளிகளையும் கண்ணால்
கண்ட காட்சித்துளிகளையும் இணைத்து அவ்வப்போது கன்யூட்ராஜ் எழுதிய குறுங்கவிதைகள் ஒரு
தொகுதியாக வெளிவரும் இத்தருணத்தில் அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(என்.சி.பி.எச். வெளியீடாக வெளிவந்திருக்கும்
’திறந்த சாளரமும் நுழைந்த தென்றலும்’ குறுங்கவிதைகளின் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)