Home

Saturday 31 December 2016

வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்


எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது சிறுகதைத்தொகுதி. இதையடுத்து நாபிக்கமலம் என்னும் தலைப்பில் ஒரு தொகுதியும் வந்துள்ளது. கலைக்கமுடியாத ஒப்பனைகள் தொடங்கி நாபிக்கமலம் வரைக்கும் அனைத்துத் தொகுதிகளுமே தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.

Sunday 18 December 2016

இன்குலாபுக்கு அஞ்சலிகள்



1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள் எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும் நான் ஆர்வமுள்ளவன் என்று தெரிந்தபோதும்கூட, அவர்கள் என் மீது எப்போதும் போலவே  நட்புணர்வுடன் இருந்தார்கள். எனக்குப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுப்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதே இல்லை. நான் புதுச்சேரியில் இருந்தவரைக்கும் எனக்குத் தேவையான புதிய புத்தகங்களை அவர்கள் வழியாகவே பெற்றுப் படித்தேன். இடதுசாரிச் சார்புள்ள அஸ்வகோஷ் என்னும் ராஜேந்திர சோழன், தணிகைச்செல்வன், பா.ஜெயப்பிரகாசம், பூமணி என ஏராளமான படைப்பாளிகளின் புத்தகங்களை நான் அப்போது விரும்பிப் படித்தேன். அந்த வரிசையில்தான் இன்குலாப் எழுதிய சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத்தொகுதியைப் படித்தேன்.

Saturday 10 December 2016

மானுடச் சித்திரங்கள் - (புத்தக அறிமுகம்)

நீலகண்டனின் “உறங்கா நகரம்”

ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி வணிகநிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கு நிலையங்கள் உருப்பெறுகின்றன. கோயில், குளங்கள் தோன்றுகின்றன. கல்விநிலையங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன. மின்சாரம் வருகிறது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி புதியபுதிய தொழில்கள் முளைக்கின்றன. நகரத்தின் எல்லாத் தமனிகளிலும் சிரைகளிலும் ரத்தம் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றது.

கலைநயமும் சொல்நயமும் - (புத்தக அறிமுகம்)


விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா”

எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு புதிய அலைவீச்சைக் கொண்ட  கன்னட மொழித் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின என்பது ஒரு வரலாற்று உண்மை. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. பல முக்கியமான ஆளுமைகளை நவீன கன்னடத் திரைப்பட உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ளது. கிரீஷ் கார்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி என சுருக்கமான ஒரு பட்டியலை நமக்கு வழங்குகிறார் விட்டல்ராவ்.

Friday 2 December 2016

தெப்பத்தை கரைசேர்க்கும் கலைஞன் - வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’


வண்ணதாசனின் சிறுகதைகளின் மையங்கள் ஏறக்குறைய இளந்தூறலைப் போன்றவை. இளந்தூறலோடு இணைந்து வருகின்றன மண்ணின் மணமும் மழையின் மணமும். மழை வலுக்கக்கூடும் என்ற எண்ணத்தால் பொங்குகிறது கிளர்ச்சி. வானெங்கும் இருண்டு அடர்ந்த மேகத்திரள் அந்தக் கிளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டுகிறது. நனைந்தபடி நடக்கவும் நடனமிடவும் தூண்டும் ஆசைக்கு அளவே இல்லை. வயலின் இசையென தூறலோடு சேர்ந்தொலிக்கிறது ஒரு சிறு இசைக்கோர்வை. இசையின் காந்த இழுப்பில் தளைகளை விலக்கி மனிதர்கள் வாசலை விட்டிறங்கி தூறலில் நனைகிறார்கள். எதிர்பாராத விதமாக திசைதெரியாமல் குழம்பி வீசும் காற்றின் வேகத்தில் தூறல் சட்டென நிற்கிறது. இசையும் நிற்கிறது. கணநேர இன்பத்தை அல்லது இன்பம் போன்ற கனவை மட்டுமே மனத்தில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குத் திரும்பி வந்து சேர்கிறார்கள். இளந்தூறல் ஒரே நேரத்தில் இன்பத்தின் படிமமாகவும் இழப்பின் அல்லது வலியின் குறியீடாகவும் அமைந்துவிடுகிறது.

Monday 28 November 2016

கனவு நனவான கதை - (புத்தக அறிமுகம்)


ஆறாம் வகுப்பில் எங்களுக்கு ஆசிரியராக இருந்த ராமசாமி சாரை நினைத்தால் எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்கு அவர் எடுக்காத பாடமே இல்லை. தமிழ் நடத்துவார். கணக்கும் சொல்லித்தருவார்.  ஆங்கில எழுத்துகளை கூட்டி உச்சரிக்கும் விதங்களில் இருக்கும் வேறுபாட்டை, மரங்களில் கொத்துக்கொத்தாகத் தொங்கும் புளியம்பழங்களைக் குறிபார்த்து அடிக்கச் சொல்லித் தருகிற லாவகத்தோடும் சுவாரஸ்யத்தோடும் சொல்லித்தந்ததை மறக்கவே முடியாது. ஒவ்வொரு நாளும் எங்கள் முன்னால் விலைமதிப்பற்ற புதையல்களை அவர் அள்ளிப்போட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பாடங்களையெல்லாம் நடத்துகிற சமயத்தில் கொஞ்ச நேரம் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவேண்டிய அவசியம் இருந்தது அவருக்கு. ஆனால், சரித்திரம், பூகோளம் நடத்துவதற்கு எந்தப் புத்தகத்தையும் புரட்டிப் பார்க்கிற அவசியமே இருந்ததில்லை. அப்படியே நேரிடையாக நினைவிலிருந்து அருவிபோலப் பொழியத் தொடங்கிவிடுவார்.

Wednesday 23 November 2016

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் - வசனம்


எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். கடைவேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்வார். பிறகு விறகு வெட்டுவார்.  அருகில் ஓடும் துங்கபத்திரை கால்வாயிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். துணிதுவைக்கும் வேலையில் மனைவிக்கு உதவியாக இருப்பார். அடிக்கடி அவர் சொல்லும் ‘காயகவே கைலாச’ என்னும் தொடருக்கு, ஒருநாள் அவரிடமே பொருள்சொல்லும்படி கேட்டேன். உழைப்புதான் கைலாசம் என்று சொன்னார் அவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தமிழிலும் ஒரு தொடர் உண்டு என்றேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.

Friday 18 November 2016

ஞானியின் பார்வை- விதையும் உரமும்


1957ஆம் ஆண்டில் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரை குமுதம் இதழில் க.நா.சு. எழுதினார். பிறகு அமுதநிலையம் அக்கட்டுரைகளை ஒரு நூலாக வெளியிட்டது.  வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், எஸ்.எம்.நடேச சாஸ்திரியின் தீனதயாளு, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாட்சி ஆகிய நாவல்களை முன்வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அந்தக் காலத்தில் நாவல் கலை என்பது தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தரமுயன்றவர்கள் இந்த நாவல்களின் படைப்பாளிகள். இலக்கியத்திலே எந்த ஒரு முயற்சிக்கும் மரபு என்பதுதான் ஆணிவேர். இன்று தமிழ்க்கலையுலகில் நாவல் என்னும் ஆலமரம் எல்லாத் திசைகளிலும் விழுதுவிட்டு வேரூன்றி உறுதியாக நிற்கிறது. அதற்கு வழிசெய்து கொடுத்தவர்கள் இந்த நாவல் முன்னோடிகள் என்கிற மதிப்புள்ளவராக இருந்தார் க.நா.சு. அவர்களுடைய முயற்சிகளை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்தத் தொடரை எழுதியதாக அந்தப் புத்தகத்துக்காக எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் க.நா.சு. 

காலபைரவனின் கதைகள் - கட்டுரை



சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளரும் என் நண்பருமான அ.முத்துலிங்கம் ஒரு வாசகனுக்கு பல நூல்களைப்பற்றிய அறிமுகங்கள் ஒரே தருணத்தில் கிடைக்கும்வண்ணம் ஒரு தொகுதியை உருவாக்க எண்ணினார். அதையொட்டி ஒவ்வொரு எழுத்தாளரிடமும் அச்சமயத்தில் தான் படித்துக்கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அனுப்பும்படி கேட்டார். தற்செயலாக அப்போதுதான் காலபைரவனின் முதல் சிறுகதைத்தொகுதியான ‘புலிப்பாணி ஜோதிடர்’ புத்தகத்தைப் படித்துமுடித்திருந்தேன். உடனே அதைப்பற்றி ஒரு கட்டுரையை விரிவாகவே எழுதி அனுப்பினேன். ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் அ.முத்துலிங்கம் அத்தொகுதியைக் கொண்டுவந்தார்.

Thursday 10 November 2016

இருவேறு தோற்றங்கள் - மா.அரங்கநாதனின் சிறுகதைகள்


ங்கள்  இளம்பருவத்துநாட்களில் விழாக்கால மகிழ்ச்சிக்கு ஒருநாளும் குறைவந்ததே இல்லை. ஒவ்வொரு விழா சமயத்திலும் ஒரு புதுவிதமான விளையாட்டுப்பொருள் எங்கள் கைக்குக் கிடைத்துவிடும். ’அவன் கையில் இருந்ததுபோலவே எனக்கும் வேண்டும்என்று வீட்டுப் பெரியவர்களிடம் அழுது அடம்பிடித்து எல்லோருமே வாங்கிவிடுவோம். ஆட்டப்பொருளின் கவர்ச்சி தீரும்வரைக்கும் கீழே வைக்கவே மனம் வராமல் ஆடித் தீர்ப்போம். விழாக்காலக் கடைகளில் எங்களுக்காகவே புதுப்புது விளையாட்டுப்பொருள்கள் வந்தபடியிருக்கும்.

Tuesday 8 November 2016

புதிய கதைகள் புதிய அனுபவங்கள் (கட்டுரை)

என் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. விடுமுறை நாளில் எங்கள் ஆசிரியர் மிதிவண்டியிலேயே உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வார். இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள், ஏரிகள், பறவைகள் சரணாலயங்கள், கோவில்கள் எல்லா இடங்களையும் அவர்தான் எங்களைப் பார்க்க வைத்தார். ஒரு முறை வீடூரில் உள்ள அணைக்கட்டுக்கு அழைத் துச் சென்றிருந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முறையாக ஒரு அணைக்கட்டை நேருக்கு நேர் பார்க்கிறோம். அணைக்கட்டில் அப்போது நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. வெயியில் வெள்ளிக்குழம்புபோல மின்னியது நீர். கடலெனக் கொந்தளித்துப் பொங்கும் அப்பரப்பை நாங்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த் தோம். காற்று எங்களை அப்படியே அள்ளிச் சென்று தண்ணீருக்குள் வீசிவிடுமோ என்றொரு அச்சம் நெஞ்சில் படர, ஆசையாக சுவர்களில் மோதும் அதன் அலைகளைப் பார்த்தோம். எவ்வளவு தண்ணீர், எவ்வளவு தண்ணீர் என்று வாய் ஓயாமல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம். அணைக்கட்டு ஓரமாகவே உரை யாடியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுது போக்கினோம். ஓரமாக நிழலில் உட்கார்ந்து எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.

புதிய கதைகள் புதிய அனுபவங்கள் (கட்டுரை)

என் கல்லூரிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. விடுமுறை நாளில் எங்கள் ஆசிரியர் மிதிவண்டியிலேயே உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வார். இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள், ஏரிகள், பறவைகள் சரணாலயங்கள், கோவில்கள் எல்லா இடங்களையும் அவர்தான் எங்களைப் பார்க்க வைத்தார். ஒரு முறை வீடூரில் உள்ள அணைக்கட்டுக்கு அழைத் துச் சென்றிருந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முறையாக ஒரு அணைக்கட்டை நேருக்கு நேர் பார்க்கிறோம். அணைக்கட்டில் அப்போது நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. வெயியில் வெள்ளிக்குழம்புபோல மின்னியது நீர். கடலெனக் கொந்தளித்துப் பொங்கும் அப்பரப்பை நாங்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த் தோம். காற்று எங்களை அப்படியே அள்ளிச் சென்று தண்ணீருக்குள் வீசிவிடுமோ என்றொரு அச்சம் நெஞ்சில் படர, ஆசையாக சுவர்களில் மோதும் அதன் அலைகளைப் பார்த்தோம். எவ்வளவு தண்ணீர், எவ்வளவு தண்ணீர் என்று வாய் ஓயாமல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம். அணைக்கட்டு ஓரமாகவே உரை யாடியபடியும் வேடிக்கை பார்த்தபடியும் பொழுது போக்கினோம். ஓரமாக நிழலில் உட்கார்ந்து எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிட்டு முடித்தோம்.

பெர்னியரின் கண்கள் - (புத்தக அறிமுகம்)

ன் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ காரணங்களை அடுக்கி விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பத்தை அவருக்காக எழுதிக் கொடுக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடுவார். என் முணுமுணுப்புகளை அவர் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அந்தப் பத்து நாட்களில் ஊர் சுற்றிய அனுபவத்தை அவர் விவரித்துச் சொல்வதைக் கேட்டு மனம் மயங்கி அவருக்காக அந்த வேலையைச் செய்துகொடுப்பேன். ஊர்சுற்றுவதும் திரிந்தலைந்த சங்கதிகளை விவரிப்பதும் அவரைப் பொறுத்த அளவில் மகத்தான அனுபவங்கள். பொருள்செலவு, சம்பள இழப்பு, மற்றவர்கள் உரைக்கும் மதிப்பற்ற சொற்கள் எதையுமே அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார். இன்னொரு நண்பர் இவருக்கு நேர்மாறான குணமுடையவர். அவசர வேலை என்று சொல்லி நான்கு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு செல்வார். ஆனால் இரண்டே நாள்களில் வேலையை முடித்துக்கொண்டு அலுவலகத்துக்குத் திரும்பிவிடுவார். அதற்கென்று ஒரு கடிதம் எழுதி, எடுக்காத விடுப்பு நாள்களை மீண்டும் கணக்கில் இணைத்துக்கொள்ளக் கோரும் கடிதத்தையும் அவருக்கு நான்தான் எழுதவேண்டும். காரணம் இல்லாமல் ஊரில் எதற்காக அலையவேண்டும்? அலுவலகத்துக்கு வந்தால் வேலையாவது பார்க்கலாமே என்று சொல்வார். இருவருமே இரண்டு துருவங்கள். ஒருவருக்கு பயணம் என்றால் கொள்ளை ஆசை. இன்னொருவருக்கு பயணம் என்பதே வீண்வேலை. பயணங்களை முன்வைத்து உலகோர் அனைவரும் இப்படி இருபிரிவாகத்தான் பிரிந்திருக்கிறார்கள். பயணம் என்பது ஒரு மகத்தான அனுபவம். அது ஒரு கனவு. தேடல். அறிதல்முறை.

Friday 4 November 2016

சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)


 மகாகவி பர்த்ருஹரியின் சுபாஷிதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதிநூல். மதுமிதா இந்த நீதிநூலை சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சுபாஷிதத்தில் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று பெரும்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பத்து உட்பிரிவுகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள். ஒவ்வொரு சதகத்திலும் நூறு பாடல்கள் என்கிற கணக்கின்படி சுபாஷிதத்தில் முன்னூறு பாடல்கள் உள்ளன. படித்து முடிப்பதற்கான பாடல்கள் அல்ல இவை. நினைக்கும்போதெல்லாம் எடுத்து மீண்டும்மீண்டும் படித்துப்படித்து அசைபோடத்தக்க பாடல்கள். திருக்குறளைப் படிப்பதுபோல எங்கிருந்துவேண்டுமானாலும் தொடங்கி நாலைந்து பகுதிகளைமட்டும் படித்துவிட்டு மூடிவைத்துவிடலாம். அந்த வாசிப்பில் மனத்தைத் தொடும் வரிகள்வழியாக ஒட்டியும் வெட்டியும் விரிவடையும் எண்ணங்களின் தொகுப்பே அவை வழங்கும் அனுபவம். அந்த அனுபவம் ஒரு புதையல். சில சமயங்களில் நேரிடையாகவே கண்களில் தென்படும். சில சமயங்களில் ஒவ்வொன்றையும் விலக்கிவிலக்கி நடையாய் நடந்தபிறகுதான் கண்டடையமுடியும். சுபாஷிதம் வாசிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு புதையலைக் கண்டெடுக்கலாம்.

Thursday 3 November 2016

தன்னம்பிக்கையின் வெற்றி - (புத்தக அறிமுகம் )


இறந்துபோன தன் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டி நின்ற ஒரு தாயிடம் மரணமே நிகழாத ஒரு வீட்டிலிருந்து கடுகு வாங்கி வரும்படி சொல்கிறார் புத்தர். ஆவலோடு ஒவ்வொரு வாசலிலும் நின்று கடுகுக்காக யாசிக்கிறாள் அந்தத் தாய். ஆனால் எந்த வீட்டிலிருந்தும் அவளால் கடுகைப் பெறமுடியவில்லை. எல்லோருடைய வீடுகளிலும் ஏதோ ஒருவகையில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அத்தருணத்தில் பிறப்பைப்போலவே இறப்பும் இயற்கையானது என்பதையும் மரணத்தைத் தடுப்பது சாத்தியமற்ற செயல் என்பதையும் அந்தத் தாய் புரிந்துகொள்கிறாள். அன்றுமுதல் கடுகு என்பது மரணத்தோடு தொடர்புள்ள ஒரு குறியீடாக நிலைத்துவிட்டது. கடுகு வாங்கி வருவது என்பது, மரணத்திலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு நிகரானது.

Wednesday 26 October 2016

நம்பிக்கைத் தடங்களைத் தேடும் பயணம் - (புத்தக அறிமுகம்)



மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன. சண்டை போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்கின்றனஎன்னும் வாக்கியத்திலிருந்து தல்ஸ்தோயின்அன்னா கரினினாநாவல் தொடங்குகிறது. இது குடும்பத்துக்கு மட்டுமல்ல, எல்லா அமைப்புகளுக்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மை. முக்கியமாக மதம். ஒவ்வொரு மதமும் மோதலுக்கான காரணத்துக்காகக் காத்திருக்கிறது. நெருக்கடி மிகுந்த நவீன வாழ்வில் பொருளாதாரம், அரசியல், வசிப்பிடம், சமூகம், குடும்பம், தேசம், பாலியல், தன்னலம் எனப் பல்வேறு காரணங்களால் தனிமனிதனின் மனத்திலும் சமூக மனத்திலும் வன்முறை சிறுகச்சிறுக உருவாகி வளர்ந்து பெருகிப் பொங்கியபடி இருக்கிறது. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் இந்த வன்முறை மோதலாக உடனடியாக வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் பெருகி வரும் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மதமோதல்களுக்கும் கலவரங்களுக்கும் கூடுதலான முக்கியத்துவத்தை வழங்குகின்றன. அவ்வப்போது நிகழும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் தற்கொலைப்படைத் தாக்குதல்களும் அந்த முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க செய்கின்றன. இதன் விளைவாகத் தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் மதத்தின்மீது, தீவிரவாத முத்திரை விழுந்துவிட்டது. இதில் திரைப்படங்களின் பங்கு ஒரு முக்கியமான அம்சம். திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்க்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகளில் எல்லாத் திரைப்படங்களிலும் தீவிரவாதிகளை முஸ்லிம் பிரிவினராகத் தொடர்ச்சியாகச் சித்தரிப்பதன் வழியாக, முஸ்லிம்கள்மீது தீவிரவாத முத்திரை அழுத்தமாகவே விழுந்துவிட்ட சூழலில் நாம் வசிக்கிறோம். தம்மிடையே வாழும் முஸ்லிம்களை அவநம்பிக்கையோடும் கசப்போடும் பார்க்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Tuesday 25 October 2016

ஒரு புதிய மனிதனின் கதை - ( புத்தக அறிமுகம் )

  
விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால் அந்தப் பள்ளி செயல்படாத பள்ளியாகவே இருக்கிறது. அந்தச் சூழலில் சுகவனம் என்னும் இளைஞர் பயிற்சி பெற்ற ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு வருகிறார். மாணவமாணவிகளுக்கு பேச்சில் இருக்கிற ஆர்வம் படிப்பதிலோ எழுதுவதிலோ இல்லை. வகுப்பறை எப்போதும் சத்தமாகவே இருக்கிறது. அவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தெரியாமல் தொடக்கத்தில் திணறும் சுகவனம், இக்கட்டான ஒரு தருணத்தில் தானாகவே ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார். 

ஒரு புதிய வழிமுறை - தமிழகக் கோட்டைகள் - ( நூல் அறிமுகம் )


மானுட வரலாற்றில் அங்கங்கே சிதறியிருந்த இனக்குழுக்களை ஒன்று திரட்டி, குடிமக்களாக்கி அவர்களை ஆட்சி செய்கிற அரசு என்கிற அமைப்பு உருவான தருணத்திலேயே கோட்டை என்னும் கருத்தாக்கம் உருவாகிவிட்டது. ஒருபுறத்தில் கோட்டை அரண்மனைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. இன்னொரு புறத்தில்  மற்ற அரசுகளின் மதிப்பில் கெளரவத்துக்குரிய தோற்றத்தைச் சம்பாதித்துக்கொள்கிறது. அரசகுல வரலாற்றில் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதும் ஒருவர் கோட்டையை இன்னொருவர் இடிப்பதும் மாறிமாறி நிகழ்ந்திருக்கிறது. சிலர் இயற்கையாகவே உள்ள மலையரண்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோட்டைகளை எழுப்பினார்கள். சமவெளிப்பிரதேசத்தில் அரசாண்டவர்கள் புதிய கோட்டையை தமக்கு விருப்பமான வகையில் வடிவமைத்துக்கொண்டார்கள். எல்லாமே வெற்றியின் அடையாளங்கள்.

சுடர்மிகுந்த வரிகள் - (கட்டுரை)


புத்தகக்கடைகளுக்குச் சென்று திரும்பும் ஒவ்வொருமுறையும் ஒருசில கவிதைத்தொகுதிகளை விருப்பத்தோடு வாங்குவது என் வழக்கம். கவிதைகள் எப்போதும் என் விருப்பத்துக்குரிய உலகம். அசைபோட்டபடி நடப்பதற்கு கவிதைவரிபோன்ற உற்ற துணை உலகத்திலேயே இல்லை என்று நினைப்பவன் நான். புதியவர்களின் கவிதைத்தொகுதிகளை விருப்பத்துடன் படிப்பதுமட்டுமன்றி, அவற்றைப்பற்றி ஒருசில வரிகளையாவது என் குறிப்பேட்டில் குறித்துக்கொள்வதையும் ஒரு பழக்கமாகக் கடைபிடித்து வருகிறேன். நாற்பது, ஐம்பது கவிதைகள் கொண்ட ஒரு தொகுதியில் பத்து கவிதைகள் சிறப்பானவையாக இருந்தால் போதும், அதை ஒரு நல்ல தொகுதி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஐந்து கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை ஒரு நல்ல முயற்சி என்றும் சொல்வேன். அதைக்கூட என் வாசிப்பில் கண்டுபிடிக்க முடியாமல் போகிற நிலையில்தான் என் மனம் ஏமாற்றமடைகிறது. கவிதை பற்றிய ஒரு தெளிவு கவிஞர்களிடம் இல்லை என்பதை அவர்களுடைய வரிகள் உணர்த்திவிடுகின்றன.

Monday 24 October 2016

வண்ணதாசனுக்கு வணக்கம் - (கட்டுரை)


எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன். எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம் இருந்தது. நேரம் கிட்டும் போதெல்லாம் அந்த நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகருடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது. அவருக்குத் தேவையான சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொடுத்ததால் அவர் எனக்குச் சில சலுகைகள் கொடுத்திருந்தார்.  அறைக்குள் தாங்கிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைத் தொட்டுப் புரட்டலாம். எடுத்துக்கொண்டு வந்து அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம். உறுப்பினராக இல்லாத எனக்கு அது பெரிய சலுகை.

சத்யஜித்ரேயின் சிறுகதைகள் - (புத்தக அறிமுகம்)



சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் ஆண்டில் ஏதோ ஓர் ஆர்வம் உந்த தன் நாற்பதாவது வயதில் சத்யஜித்ரே தன் நண்பரொருவருடன் சேர்ந்து நின்றுபோயிருந்த சந்தேஷ் இதழுக்குப் புத்துயிரூட்டத் தொடங்கினார். இதழில் தன் பங்களிப்பாக சில படைப்புகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகளை தொடர்ந்து எழுதினார். சிறுவர்களுக்கானவை என்பதால், சுவாரசியத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய புதிய பின்னணியில் கற்பனை வளத்தோடு எழுதினார் ரே. தன்  திரைப்படங்களின் வழியாக அவர் ஒரு தவிர்க்கப்பட முடியாத இந்திய ஆளுமையாக வளர்ந்த பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவருடைய சந்தேஷ் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வெளிவரத்தொடங்கின. பிறகு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.

Sunday 16 October 2016

அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள் - (புத்தக அறிமுகம்)



தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக   கொலராடோ பல்கலைக்கழகத்தில் இணைந்து, அங்கேயே சில ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒஹையா பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாக நீரியல் வள மேலாண்மைத்துறையின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிறுகதைகளையும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். அவருடைய சிறுகதைத்தொகுதிக்கு, இவ்வாண்டுக்குரிய இயல் விருது கிடைத்துள்ளது.

Sunday 9 October 2016

வள்ளல் - (சிறுகதை)


“இன்னைக்காவது எம்ஜியாரு வருவாராடா?” என்று கிண்டலான குரலில் பன்னீர் கேட்டதுமே தங்கமணிக்குக் கோபம் வந்தது. அவனும் ரங்கசாமியும் அப்போது தண்டவாளத்துக்கு இரண்டு பக்கமும் ஊஞ்சல்போல தொங்கிக்கொண்டிருந்த லெவல் கிராஸிங் தடுப்புச்சங்கிலிகளில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். பன்னீரின் வார்த்தைகளை கொஞ்சம்கூட கவனிக்காதவன்போல சின்னச்சின்ன கற்களாக தேடியெடுத்து  தண்டவாளத்தின்மீது வைப்பதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தான் தங்கமணி. “உங்கிட்டதான்டா  கேக்கறன் செவுடா? காதுல என்ன பஞ்சியா வச்சி அடச்சிருக்குது?” என்று மறுபடியும் கேட்டுவிட்டுச் சிரித்தான் பன்னீர்.

Thursday 29 September 2016

வாழ்க வளமுடன் - (சிறுகதை )



ழ்ந்த மயக்கத்திலிருந்து சாமிநாதனுக்கு விழிப்பு வந்ததும் முதல் கணம் ரத்தம் வழிய விழுந்துகிடந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. அருகில் “என்னங்க, என்னங்க” என்றொரு துயர் மிகுந்த பெண்குரல் கேட்டது. ”பயப்படாதீங்க. மனசுக்குள்ள வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்னு சொல்லிட்டே இருங்க” என்றது. அவர் கால்கள் ரத்தத்தில் நனைந்த மரக்கட்டைகள்போல அருகில் இருந்தன. காட்சிகள் குழம்பிக் கலைந்து விலக வேதனையுடன் விழிகள் மீண்டும் மூடி சில கணங்களுக்குப் பிறகு திறந்தன. அறை முழுதும் பல படுக்கைகள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும் ஒருவர் படுத்திருப்பதையும் பார்த்தார் சாமிநாதன்.

Friday 23 September 2016

மீசைக்காரப்பூனை தொகுதியிலிருந்து சில பாடல்கள்

தக்காளியின் கதை


கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு
கால் முளைத்ததாம்
கூடத்திலிருந்து வாசலுக்கு
துள்ளிக் குதித்ததாம்

துள்ளிக் குதித்த தக்காளி
தூணில் இடித்ததாம்
தூணிலிருந்து சுவரை நோக்கி
உருண்டு போனதாம்

முப்பத்தெட்டு மேதைகள் - (கட்டுரை)


சி மாதங்களுக்கு முன்பாக தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகத்தாங்கிகளில் படிந்திருக்கும்  ஒட்டடையையும் தூசையும் துடைத்து, புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கிவைக்கும் வேலை பகுதிபகுதியாக நடந்துகொண்டிருந்தது. அதனால் பல நாட்களாக அந்தப் பக்கமாக செல்லவே இல்லை. போன வாரம் சென்றிருந்தபோது தூய்மைப்படுத்தும் வேலை முற்றிலும் முடிந்து நூலகமே புதுக்கோலத்தில் காட்சியளித்தது. எல்லாத் தாங்கிகளும் பளிச்சென்றிருந்தனஎழுத்தாளர்களுடைய பெயர்களின் அகரவரிசைப்படி புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Thursday 22 September 2016

மீசைக்காரப்பூனை - சிறுவர் பாடல் தொகுதி





முன்னுரை


ரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு எதிரில் அம்மா, அப்பா, இரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் கோவாவுக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய உரையாடலிலிருந்து நானே புரிந்துகொண்டேன். இரண்டு பிள்ளைகளும் மாறிமாறி தம் அம்மாவிடமும் அப்பாவிடமும் கேள்விகள் கேட்டபடியே இருந்தார்கள். பெரியவனுக்கு ஆறு வயதும் சின்னவனுக்கு நான்கு வயதும் இருக்கலாம்.  நீண்ட நேரம் அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தபடியே இருந்தது. 

ஒளி குன்றாத புள்ளிகள் - வண்ணநிலவனின் சிறுகதைகள்



 
காலை நேரத்தில் அலுவலகத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றிருக்கும்போது தினந்தோறும் ஒரு பெரியவரைப் பார்ப்பேன். இரண்டடிக்கு மூன்றடி அளவுள்ள பைகளை கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மிகமிக மெதுவாக நடந்து வருவார். இரண்டு பைகளிலும் எலுமிச்சை, தயிர்ச்சோறுப் பொட்டலங்கள். சுமை தாங்கமுடியாமல் இருபது முப்பது அடிகளுக்கு ஒருமுறை பைகளைத் தரையில் வைத்துவிட்டு சிறிதுநேரம் நிற்பார். இறுகிவிடும் கைவிரல்களைத் தளர்த்தி ஊதிவிட்டுக்கொள்வார். வலது கையால் இடதுதோளையும் இடதுகையால் வலதுதோளையும் மாறிமாறிப் பிடித்துக்கொள்வார். இரண்டு கைகளையும் இடுப்புக்குப் பின்னால் அழுத்தியபடி கழுத்தை அண்ணாந்து மடக்குவார். ஆசுவாசமடைந்த பிறகு மீண்டும் பைகளை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குவார்இரண்டுமூன்று கட்ட ஓய்வுகளுக்குப் பிறகு நிறுத்தத்துக்கு வந்து சேர்வார். நெற்றியில் முத்துமுத்தாகத் தேங்கி நிற்கும் வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தபிறகு வலிக்கும் கைகளை உதறித் தளர்த்திக்கொள்வார்இப்படி கைகளை உதறியும் கால்களை நீவிவிட்டுக்கொண்டும் கழுத்தை நிமிர்த்தித் திருப்பியும் சுமைவலியிலிருந்து சற்றே நிவாரணமடைந்து மீண்டும் சுமந்துசெல்ல முயற்சி செய்யும் முதியவர்களும் பெண்களும் சிறுவர்களும் நகரத்தில்  பல இடங்களில் பார்வையில் தினந்தோறும் பட்டபடி இருக்கிறார்கள்சுமைவலி என்பது ஒருவகையில் வாழும் வலிஅது அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டபடி இருக்கிறது. வாழும் வலியால் தவிப்பவர்கள் காலம்காலமாக நகரின் விளிம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெரிய வெற்றியையும் பற்றிய கனவுகள் அவர்கள் நெஞ்சில் இல்லைநிம்மதியாக ஒருநாள் பொழுது கழிந்தால் போதும் என்று இருப்பவர்கள் அவர்கள்ஒவ்வொரு கணமும் வலியோடு வாழ்ந்து மறைபவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டக்கூடும். நகரத்துக்கோ அல்லது உலகத்துக்கோ, ஒருபோதும் அவர்கள் முகங்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் அவர்களுடைய தடங்கள் எழுத்துலகில் காணக்கிடைக்கின்றன. முக்கியமாக  வண்ணநிலவனின் கதைகளில்.