1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை
கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான
புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த
எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள்
எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும்
கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும்
நான் ஆர்வமுள்ளவன் என்று தெரிந்தபோதும்கூட, அவர்கள் என் மீது எப்போதும் போலவே நட்புணர்வுடன் இருந்தார்கள். எனக்குப் புத்தகங்களைக்
கொண்டு வந்து கொடுப்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதே இல்லை. நான் புதுச்சேரியில்
இருந்தவரைக்கும் எனக்குத் தேவையான புதிய புத்தகங்களை அவர்கள் வழியாகவே பெற்றுப் படித்தேன்.
இடதுசாரிச் சார்புள்ள அஸ்வகோஷ் என்னும் ராஜேந்திர சோழன், தணிகைச்செல்வன், பா.ஜெயப்பிரகாசம்,
பூமணி என ஏராளமான படைப்பாளிகளின் புத்தகங்களை நான் அப்போது விரும்பிப் படித்தேன். அந்த
வரிசையில்தான் இன்குலாப் எழுதிய சூரியனைச் சுமப்பவர்கள்
என்னும் கவிதைத்தொகுதியைப் படித்தேன்.
தொழிற்சங்க நூலகத்தில் அனைவரும் வாசிப்பதற்காக
வைத்திருக்கும் இதழ்களில் கார்க்கி என்னும் இதழில் சில முறை இன்குலாப் எழுதிய கவிதைகளை
ஏற்கனவே படித்திருந்ததால், அத்தொகுதியை உடனே எடுத்துச் சென்று படித்துமுடித்தேன். ஏனைய முற்போக்குக்கவிஞர்களின் அழகியலுக்கும் அவருடைய
கவிதை அழகியலுக்கும் உள்ள வேறுபாட்டை உடனடியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. செட்டான
வாக்கியங்கள். அருவிபோல பொங்கி வழிந்க்தோடும் நடை. வசீகரமான மொழி. வாழ்வின் அவலங்களைக்
கணந்தோறும் காண்பதால் உருவாகும் துயரம். கனிவும் ஆவேசமும் இழைந்தோடும் வரிகள். இன்குலாபின்
கவிதைகளில் கண்ட அனைத்து அம்சங்களும் என்னை அப்போது கவர்ந்தன. எளிய டு ன்னும் புனைபெயர் மிகவும் வசீகரமாக
இருந்தது. அந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளையெல்லாம் படித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம்
எழுதினேன். எனக்குப் பிடித்த கவிதைகள், பிடிக்காத கவிதைகள் என தனித்தனியாகப் பட்டியல்
போட்டு குறிப்பிட்டு எழுதியிருந்தேன். பத்து நாட்கள் இடைவெளியில் எனக்கு அவரிடமிருந்து
பதில் வந்தது. ’பெரிய கவிஞர்கள் எனப் பேரெடுத்த பலரிடமிருந்து அத்தொகுதியைப்பற்றி ஒரு
சொல் கூட வெளிவராத நிலையில் ஓர் இளைஞரின் கடிதம் எனக்கு உற்சாகமாக இருக்கிறது’ என்று
எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து என்னுடைய கவிதைகள் சிலவற்றை அவருடைய கருத்தை அறிவதற்காக
அனுப்பிவைத்தேன். அவரும் அக்கறையோடு அவற்றைப் படித்துவிட்டு எனக்கு பதில் எழுதியிருந்தார். ’பழைய வாசமடிக்கும் சொல்வழக்கை
உதறிவிட்டு புதிய விதமாக எழுதுவதே புதுக்கவிதைக்குப் பொருத்தமாக இருக்கும். வடிவம்
மட்டுமல்ல, வார்த்தைகளும் புதியவையாக இருக்கவேண்டும்’ என்று எழுதியிருந்தார். புதுக்கவிதைக்கும்
மரபுக்கவிதைக்கும் பெரிய வாதவிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது. மரபுக்கவிதை
மரபிலிருந்து புதுக்கவிதையை நோக்கி வந்தவன் நான்.
அந்தக் கடிதத்தை ‘தொடர்ந்து எழுதுங்கள்’ என்ற வாழ்த்தோடு கடிதத்தை முடித்திருந்தார்
இன்குலாப். அக்கணத்தில் எனக்கு அது ஒரு முக்கியமான சொல்லாக இருந்தது. முகமறியாத அந்த
மனிதர்மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் பிறந்தது. அவருடைய கடிதம் பெரிய அளவில்
உற்சாகத்தை அளித்தது. முழுமையான அளவில் அவருடைய பாராட்டைப் பெறும் விதமாக ஒரு நல்ல
படைப்போடுதான் அவருக்கு அடுத்த கடிதத்தை எழுதவேண்டும் என நான் எனக்குள் ஒரு முடிவெடுத்தேன்.
வாசிப்பிலும் எழுத்து முயற்சியிலும் மூழ்கியிருந்த
அந்தத் தருணத்தில் எனக்குக் கிடைத்த புதிய வேலை என் வாழ்க்கைத்திசையையே மாற்றியது. கர்நாடகத்தில் இளம்பொறியாளர்
வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவிக்குத் தேவையான பயிற்சியைப் பெறுவதற்காக ஐதராபாத்
பயிற்சி நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். அங்கே ஓராண்டுக் காலம் தங்கியிருந்தேன்.
உறவினர்களோ, நண்பர்களோ யாருமற்ற அந்தத் தனிமை பெரிய வதை. அதை வாசிப்பின் வழியாகவும்
எழுதுவதன் வழியாகவும் மட்டுமே நான் கடந்து வந்தேன்.
ஒரு நாள் இரவு உணவுக்குப் பிறகு வழக்கம்போல
எங்கள் விடுதி இருந்த வீதியின் கடைசித்திருப்பம் வரைக்கும் நடந்து சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்.
ஒரு வீட்டின் முன் ஏராளமானோர் கூட்டமாக நின்றிருந்தார்கள். ஒரு பக்கம் மெளனம். ஒரு
பக்கம் ஒரே சத்தம். அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அரைகுறையாகச் செய்தி கிடைத்தது.
அன்று அதிகாலையில் அந்த வீட்டுக்குள் கூட்டமாக நுழைந்த சிலர் யாரையோ கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார்களென்றும்
மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல்களின் வருகைக்காக உறவினர்கள் காத்திருக்கிறார்களென்றும்
புரிந்துகொண்டேன்.
மரணச்செய்திகள் என்னை எப்போதும் நிலைகுலையவைத்துவிடும்.
அன்றும் அமைதியிழந்து போனேன். அறைக்குத் திரும்பிய பிறகும் எந்தச் செயலிலும் மனம் குவிய
மறுத்தது. ஏதேதோ சிந்தனைகள். குழப்பத்தின் கட்டிலில் படுத்தபடி சுவரின் மூலையையே பார்த்தபடி
இருந்தேன். அறை நண்பன் மிகவும் அஞ்சிவிட்டான். என்ன என்ன என்று கேட்டான். விஷயத்தைச்
சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அதெல்லாம் சரி, அதற்கு நீ ஏன் இப்படி இருக்கிறாய்?
நாளைக்குத் தேர்வு, தெரியுமில்லையா? உட்கார்ந்து படிக்கிற வேலையைப் பார்” என்று அறிவுரை
சொன்னான். அவன் திருப்திக்காக நானும் புத்தகத்தை எடுத்து பாடத்தில் மனத்தைச் செலுத்த
முயற்சி செய்தேன். முடியவில்லை. தன்னிச்சையாக பல படுகொலைச்செய்திகள் தொடர்ச்சியாக நினைவில்
வந்து மோதியபடி இருந்தன. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பீகார் மாநிலத்தில்
பெல்ச்சி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பூமிகர் என்னும் மேல்சாதியினரால்
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே நிலைகுலைய வைத்த ஒன்று. எல்லாப் பத்திரிகைகளும்
அதைப்பற்றிய கட்டுரைகளையும் படங்களையும் அப்போது வெளியிட்டன. சாலை வசதியே இல்லாத அந்த
ஊருக்கு யானை மீது ஏறிச் சென்று இந்திரா காந்தி பார்வையிட்ட படம் எல்லாப் பத்திரிகைகளிலும்
வெளிவந்திருந்தது. அதனாலேயே அந்தப் படம் பிரபலமாகியிருந்தது. அந்தச் சம்பவத்தை மையமாக்கி
ஒரு படைப்பை எழுதவேண்டும் என அக்கணத்திலேயே முடிவு செய்தேன். ஒரு நீண்ட காவியத்துக்கான
விதை எனக்குள் விழுந்தது. தொடர்ந்து எது முதற்பகுதியாக அமையவேண்டும், எந்தெந்த விஷயங்களை
இடையில் அமைக்கவேண்டும், எப்படி முடிக்கவேண்டும் என அடுத்தடுத்த யோசனைகள் அலைபாய்ந்தபடி
இருந்தன.
’பதிலைத் தேடும் பட்டாளம்’ என்னும் தலைப்பில்
புதுக்கவிதை வடிவிலேயே ஒரு நீண்ட குறுங்காவியத்தை அப்படித்தான் எழுதத் தொடங்கினேன்.
ஒரு வார இடைவெளியில் எழுதி முடித்து, மேலுமொரு வாரத்தில் செழுமைப்படுத்தி நகலெடுத்து
முடித்தேன். கையெழுத்துப் பிரதியில் அறுபது எழுபது பக்கங்கள் வந்தது. புத்தக வடிவில்
தைத்து முடித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று மாலையே அதை இன்குலாப் அவர்களுக்கு
அஞ்சலில் அனுப்பிவைத்தேன். வீட்டு எண் மட்டுமே நினைவிலில்லையே தவிர, ஜானிஜான் கான்
சாலை, இராயப்பேட்டை, சென்னை என்னும் முகவரி இன்னும் என் மனத்தில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.
அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து
வரப்போகும் கடிதத்துக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். அந்த மாத இறுதியில் அவருடைய
கடிதம் கிடைத்தது. குறுங்காவியம் தனக்கு மிகவும் பிடித்தமான விதத்தில் அமைந்திருக்கிறது
என்றும் பழைய கவிதைகளின் வரிகளுக்கும் இக்கவிதைகளின் வரிகளுக்கும் இடையில் தெரியும்
வளர்ச்சியை ரசித்ததாகவும் எழுதியிருந்தார். அன்று இரவு நான் உறங்கவே இல்லை. அக்கடிதத்தை
மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்தபடியே இருந்தேன். ஒரு கவிஞனாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக
அதை நினைத்து மகிழ்ந்தேன். மறுநாளே அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கடிதமெழுதினேன்.
இறுதியில் அக்காவியம் புத்தகவடிவம் பெற உதவி செய்யமுடியுமா என்று கேட்டிருந்தேன். தமிழ்ப்பதிப்புலகம்
இயங்கும் விதத்தைப்பற்றி எவ்விதமான ஞானமும் இல்லாத இளம்பருவத்தின் வேகத்தால் அப்படி
எழுதிவிட்டேன். எழுத்தாளர்களின் படைப்புகளுக்காக பதிப்பாசிரியர்கள் காத்திருப்பார்கள்
என்றும் எழுதிக் கொடுத்ததுமே மறுபேச்சில்லாமல் புத்தகமாக வெளியிட்டுவிடுவார்கள் என்பதுதான்
என் எண்ணமாக இருந்தது. அந்தக் கனவில்தான் அப்படி எழுதிவிட்டேன்.
அந்த மாத இறுதியில் அவரிடமிருந்து மீண்டுமொரு
கடிதம் வந்தது. தனக்குத் தெரிந்த சில பதிப்பாசிரியர்களை அணுகி கையெழுத்துப் பிரதியைக்
கொடுப்பத்தாகக் குறிப்பிட்டிருந்தார். என் கனவு நனவாகும் நாளுக்காக ஒவ்வொரு நாளும்
காத்திருந்தேன்.
காலம் நகர்ந்தபடி இருந்தது. அந்தக் கனவு
நிகழவே இல்லை. இதற்கிடையில் என் வசமிருந்த கையெழுத்துப் பிரதியைப் பார்த்து மீண்டும்
சில பிரதிகளை எழுதி உருவாக்கி ஊரிலிருந்த தொழிற்சங்க நண்பர்களுக்கும் என் பால்ய நண்பன்
பழனிக்கும் அனுப்பியிருந்தேன். அவ்வப்போது அவர்களிடமிருந்து வந்த பதில் கடிதங்களும்
பாராட்டு வரிகளும் மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தன. முதல் பதிப்பாசிரியரிடம் கொடுத்திருந்த
கையெழுத்துப் பிரதியை வாங்கி இன்னொரு பதிப்பாசிரியரிடம் அளித்திருப்பதாகவும் பதிலுக்காகக்
காத்திருப்பதாகவும் இன்குலாப் தனது அடுத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கணத்தில்
என் எழுத்தார்வமும் கவிதைக்களத்திலிருந்து விரிந்து சிறுகதைகளை நோக்கி திசைமாறியது.
வாரத்துக்கு ஒன்று அல்லது இரு சிறுகதைகளை எழுதுவது அப்போது வழக்கமாக இருந்தது. எல்லாமே
எழுத்துக்கான பயிற்சிக்கதைகள். என்னோடு பயிற்சிநிலையத்தில்
தங்கியிருந்தவர்களில் ராஜசேகரன், சீனிவாசன் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் என் அறைக்கு வரும்போதெல்லாம் மேசைமீது எழுதி அடுக்கிவைத்திருக்கும் கையெழுத்துப்
பிரதிகளைப் படித்துவிட்டு கருத்தைச் சொல்வார்கள். பிரசுரத்துக்கு கதைகளை அனுப்பிவைக்கும்படி
அவர்களே என்னைத் தூண்டினார்கள். அவ்விதமாக அனுப்பப்பட்ட ஒரு சிறுகதைதான் தீபம் என்னும் இதழில் முதன்முதலாக வெளிவந்தது.
நான் உடனே அச்செய்தியை இன்குலாப்புக்கு கடிதம்
எழுதித் தெரிவித்தேன். அவரும் அக்கதையைத் தேடிப் பார்த்துவிட்டு எனக்கு பதில் எழுதியிருந்தார்.
அக்கதை தன் கிராமத்து வாழ்க்கையை நினைவூட்டுவதாகவும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தார். தீபம், கணையாழி, மன ஓசை, தாமரை என பல இதழ்களில் என் கதைகள் பிரசுரமாகத்
தொடங்கின. அவற்றைப்பற்றி இன்குலாப்புக்கு உடனுக்குடன் செய்தியை எழுதித் தெரிவித்துக்கொண்டே
இருந்தேன். அவரிடமிருந்து பதில் வராத பொழுதுகளிலெல்லாம் என் மனம் கூம்பி வாடிவிடும்.
அன்பான, உற்சாகமான ஒரு சொல்லுக்காக ஏங்கிக் காத்திருந்த காலம் அது. ஒரு கதையைப் படிக்க
எவ்வளவு நேரமாகிவிடும், அதைப்பற்றி எழுத எவ்வளவு
காலம் பிடித்துவிடும், ஏன் இந்த மனிதர்கள் அதைச் செய்வதில்லை. அப்படி என்ன இதைவிட முக்கியமான
வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்துக் குழப்பிக்கொள்வேன். அவருடைய
கடிதம் வந்த மறுகணமே எல்லாக் குழப்பங்களும் மாயமாக மறைந்துபோய்விடும். அந்த வரிகள்
கொடுக்கும் ஊக்கத்தில் உடனே இன்னொரு கதையை எழுதத் தொடங்கிவிடுவேன்.
பயிற்சி முடிந்து ஹோஸ்பெட் என்னும் இடத்தில்
நான் வேலையில் சேர்ந்தேன். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துக் கிடைத்த விடுமுறையில் ஊருக்குப்
புறப்பட்டேன். இன்குலாபைச் சந்திக்கவேண்டும் என்பதாலேயே என் பயணத்தை சென்னை வழியாக
அமைத்துக்கொண்டேன்.
ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அருகில் பேருந்தில்
இறங்கி, முகவரியை விசாரித்தபடியே சென்று அவருடைய வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர்
இல்லம் மாடியில் இருந்தது. கூடத்தில் அவரும் வேறொரு நண்பரும் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
நான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் எழுந்து வந்து என்னை ஒரு தந்தையைப்போல
தழுவிக்கொண்டார். வாய்நிறையப் புன்னகையோடும் கனிவான பார்வையோடும் என்னை எதிர்கொண்ட
அந்த முகத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அருகில் இருந்த நண்பரிடம் என்னை அறிமுகப்படுத்தி
“எழுதி வச்சிக்குங்க தோழர், இன்னும் பத்து வருஷத்துல இவர் தமிழில் எழுதக்கூடிய ஆளுமைகளில்
ஒருவரா இருப்பார்” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் என் முதுகில் செல்லமாகத் தட்டினார்.
“நல்லா எழுதறீங்க தம்பி. கதை, கவிதை ரெண்டுமே
ரொம்ப நல்லா வருது. எதுல சிறப்பா செயல்பட முடியும்ன்னு நீங்கதான் முடிவெடுத்து செயல்படணும்”
மறுபடியும் அவர் சிரித்தபடி நான் அமர்வதற்கு
ஓர் இருக்கையைக் கொண்டுவந்து போட்டார். “குடும்பத்துல எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க…”
என்று சொன்னபடி அருகில் இருந்த மேசையின் பக்கம் சென்று ஏதோ ஒரு கோப்பைப் புரட்டி ஓர்
உறையை எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். நான்
அவருக்கு அனுப்பிவைத்திருந்த கையெழுத்துப் பிரதி.
“மூணு பதிப்பாசிரியர்கள் படிச்சிட்டாங்க.
எல்லோருமே பிடிச்சிருக்குது பிடிச்சிருக்குதுன்னுதான் சொல்றாங்க. ரொம்ப நல்ல கவிதைன்னுதான்
சொல்றாங்க. ஆனா புஸ்தகமா போட செலவுக்கு பயப்படறாங்க. முதலீடு போட்டு புத்தகம் கொண்டுவர
தயங்கறாங்க. நம்ம பதிப்புச்சூழலே இப்படித்தான் இருக்குது.”
அவர் மிகவும் தயக்கமான குரலில் நான் புண்பட்டுவிடக்கூடாது
என்னும் எச்சரிக்கையுணர்வுடன் பொறுமையாக எடுத்துச் சொன்னார். ஒருகணம் சற்றே உடைந்துபோனேன்
என்றாலும் மறுகணமே என்னை நான் திரட்டிக்கொண்டு உற்சாகமாகவே அவரைப் பார்த்துப் பேசினேன்.
“பரவாயில்லிங்க சார், பரவாயில்லிங்க சார்” என்று மீண்டும் மீண்டும் சொன்னேன்.
“என்னுடைய தொகுதியைப் போடுவதற்குக்கூட நான்
கொஞ்சம் பணத்தை கல்லூரியிலிருந்து கடனாக வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது. நீங்க இப்பதானே
வேலைக்கு போயிருக்கிங்க. அவசரப்பட்டு இதுக்காக பணத்தை செலவு செய்யவேணாம்” என்றார்.
பிறகு மன ஓசை இதழில் வெளிவந்திருந்த என்னுடைய
சிறுகதையொன்றைப்பற்றி உரையாடல் திரும்பியது. மதிய உணவு நேரம் வரைக்கும் இப்படி சிறுகதைகள்,
கவிதைகள் பற்றியே தொடர்ந்து பேசினோம். உணவு நேரத்தில் அவர் வீட்டுக்கு அருகில் இருந்த
விடுதியொன்றுக்குச் சென்று சாப்பிட்டோம். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அவர் தன்னிடமிருந்த
சில இதழ்களையும் புத்தகங்களையும் எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்தார். நான் அவரிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டு ஊருக்குக் கிளம்பினேன்.
ஹோஸ்பெட்டுக்குத் திரும்பிய பிறகு என் ஓய்வுப்
பொழுதை படிப்பதிலும் எழுதுவதிலும் புதிய இடங்களைக் காணும் பயணங்களிலுமாகக் கழித்தேன்.
அவருடைய கவிதைகளை எங்காவது படிக்க நேரும்போது உடனே அவருக்கு எழுத வேண்டும் என்று தோன்றும்.
சில சமயங்களில் எழுதுவேன். சில சமயங்களில் எழுத முடியாமல் போய்விடும். ஏதோ ஒரு தருணத்தில்
எங்களிடையில் மடல் போக்குவரத்து குறைந்துபோனது.
ஈழத்தில் தமிழர் பிரச்சினை கொந்தளித்துக்கொண்டிருந்த
நேரம். சிறையில் அடைபட்டிருந்தவர்களின் கண்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தைக் கேட்டு உலகமே
கொதித்தது. பிரச்சினை முடிச்சுகள் இறுகியபடி இருந்தன. தமிழர்கள் பாதுகாப்புக்கு ஏதேனும்
குறைவந்துவிடுமோ என்றொரு அச்சம் எல்லாரிடமும் இருந்தது. அப்போது போராட்டத்தை உயிர்ப்போடு
வைத்திருக்கவும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்திய அரசின் துணையை போராட்டக்காரர்கள்
நாடிப் பெற்றார்கள் என்றொரு செய்தி நிலவத் தொடங்கியது. அந்த நடவடிக்கையை சிலர் சரியென்றார்கள்.
சிலர் வரவேற்றார்கள். சிலர் பிழையென்றார்கள். அரசியல் சரி, தவறுகளைக் கடந்து அது அறமற்ற
செயல் என்னும் குரல் தொனிக்கும் விதமாக இன்குலாப் தன் உணர்வுகளை ஒரு கவிதையாக எழுதி
வெளியிட்டார்.
கம்சனின் பிடியில்
ஈழக்குழந்தை
கதறி அழுகிறது உண்மைதான்
அதற்காக
பூதகியிடம் போய்
பாலூட்டச் சொல்லாதீர்கள்
என்னும் அந்த வரிகள் இன்னும் என் நெஞ்சில்
மனப்பாடமாகவே உள்ளது. கிட்டத்தட்ட இந்தச் சொற்கள் சரியென்றே நினைக்கிறேன். அவருடைய
நிலைபாடு எனக்கும் உடன்பாடான ஒரு விஷயமாகவே இருந்தது. எடுத்துரைப்பு முறையில் ஒரு புராணப்படிமத்தை
பொருத்தமாக அவர் எடுத்தாண்டிருந்த விதமும் எனக்குப் பிடித்திருந்தது. வலிமையானதொரு புராணப்படிமம் ஒரு வாசகனுடைய புரிதலை
எளிதாக்கிவிடுகிறது. அதைப் பாராட்டி உடனே அவருக்கு நான் ஒரு கடிதமெழுதினேன். ஆனால்
என் ரசனைக்கு நேர்மாறாக, தமிழ்க்கவிதையுலகில் பலருக்கு அந்தப் பிரயோகத்தை விரும்பவில்லை.
இன்குலாப் ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்துவிட்டதுபோல பலர் கட்டுரை எழுதினார்கள். அது
எனக்கு வருத்தமாக இருந்தது. விமர்சனங்களால்
தான் புண்படவில்லை என்றும் எனது கடிதம் வழக்கம்போல தனக்கு உற்சாகமளித்ததாகவும் எழுதினார்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை வழியாக
நான் ஊருக்குச் சென்றபோது, மறுபடியும் அவரைப் பார்க்கச் சென்றேன். வழக்கம்போல அவரும்
உற்சாகமாக உரையாடினார். ஏறத்தாழ இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அவருடைய எதிர்காலத் திட்டங்களைப்பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். சில சிறுகதைகளையும்
நாடகங்களையும் எழுதிப் பார்க்கும் ஆவல் சமீப காலமாக தோன்றுவதாகச் சொன்னார். புதிய மனிதன்
என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தப் போவதாகவும் சொன்னார். அந்த முயற்சி செயல்வடிவம்
கொள்ளுமெனில் அவ்விதழுக்கு நான் சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. “கண்டிப்பா எழுதுவேன் சார்” என்று அவருக்கு வாக்களித்துவிட்டுத்
திரும்பினேன்.
1985 ஆம் ஆண்டில் அஞ்சலில் எனக்கொரு பத்திரிகை
வந்தது. பிரித்துப் பார்த்தேன். புதிய மனிதன். இன்குலாப்தான் அனுப்பியிருந்தார். அவர்
கனவு நனவானதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். அவர்தான் அவ்விதழுக்கு சிறப்பாசிரியர்.
அவசரமாக இதழில் உள்ளடக்கத்தை அறிய புரட்டினேன். பிரபஞ்சன் ‘பிறை’ என்னும் தலைப்பில்
நல்லதொரு சிறுகதையை எழுதியிருந்தார். இதழுக்குள் ஒரு துண்டுக் கடிதமும் ஒரு பக்கத்தில்
ஓரமாக ஒட்டப்பட்டிருந்தது. தனக்கு உடனடியாக ஒரு கதை தேவைப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
நான்கு வரிகள்தான். ஆனால் அதைப் படித்துவிட்டு எனக்குப் பறப்பதுபோல இருந்தது. அதுவரை
நானாகவே எல்லா இதழ்களுக்கும் கதைகளைப் பிரதியெடுத்து அனுப்பிவைத்தபடி இருந்தேன். அதுதான்
பழக்கம். யாரும் என்னிடம் கதை அனுப்பும்படி கேட்டு எழுதியதில்லை. அதன் காரணமாக இன்ன்
குலாபின் கடிதத்தைப் படித்ததும் வானத்தில் மிதப்பதுபோல இருந்தது. ஒரே வார இடைவெளியில்
அவருக்காக ஒரு சிறுகதையை எழுதி அனுப்பிவைத்தேன். அதற்கடுத்த மாதத்தில் அக்கதை அந்த
இதழில் வெளிவந்தது. சில வாரங்களுக்குப் பிறகு அவருக்கு நான் மூன்று சிறுகதைகளை மொத்தமாக
அனுப்பிவைத்தேன். தகுந்த இடைவெளியோடு அவர் அக்கதைகளை வெளியிட்டார். இரண்டு கதைகள் வெளிவந்தன.
மூன்றாவது கதை வெளிவரவில்லை. அதற்குள் இதழ் நின்றுவிட்டது என்னும் செய்தியை அறிந்தேன்.
1986 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த சிறுகதையாக
கணையாழி இதழில் வெளிவந்திருந்த என்னுடைய முள் சிறுகதையைத் தேர்ந்தெடுத்த இலக்கியச்
சிந்தனை அமைப்பு 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடத்திய
விழாவில் விருதை அளித்துப் பாராட்டியது. அந்த விழாவுக்கு இன்குலாப் வந்திருந்தார்.
விழா முடிவடையும் வரைக்கும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். மேடையில் இருந்து
இறங்கிவந்ததும் என் கைகளைப் பற்றி குலுக்கு நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். பற்கள் தெரிய
புன்னகைக்கும் அவருடைய கனிவான முகத்தை அக்கணத்தில் நான் மறுபடியும் கண்டேன். பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டு, அதே
மண்டபத்தில் அதே இலக்கியச்சிந்தனை அமைப்பு என்னுடைய பாய்மரக்கப்பல் நாவலுக்கு விருதளித்து
கெளரவித்தபோதும் அவர் என் கைகளைக் குலுக்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். ”உங்க நாவல
படிச்சேன். எங்க குடும்பமும் ஒரு விவசாயக்குடும்பதான். என்னால சுலபமா உங்க நாவலோடு ஒட்டிக்கொள்ள முடிஞ்சது” என்று புன்னகைத்தார்.
மறுபடியும் அதே புன்னகை. அதே முகம். நான் அவரைச் சந்திக்கச் சென்ற முதல் தருணத்தில்
ஏதோ ஒரு நம்பிக்கை உந்த அவர் சொன்ன சொற்களை அக்கணத்தில் நினைத்துக்கொண்டேன். என்னைப்
பற்றிய அவருடைய கைகளை விட எனக்கு மனமே வரவில்லை.
இருபதாண்டுகள் கழித்து கடந்த 01.12.2016
அன்றைய செய்தித்தாளில் அவருடைய மரணச்செய்தியைப் படித்தபோது ஒருகணம் பித்துற்றதுபோல
உறைந்து மீண்டேன். இருபதாண்டுகள் இவ்வளவு விரைவாக ஓடிவிட்டதா என்றொரு பிள்ளைத்தனமாக
கேள்வி எனக்குள் முளைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் அவரை ஒருமுறையும் சந்திக்காததை
நினைத்து ஒருவித குற்ற உணர்வும் எழுந்தது. என்னை நானே கசப்புடன் நொந்துகொண்டேன். அதைத்
தொடர்ந்து வழக்கமான அவருடைய கனிவும் புன்னகையும் தேங்கிய முகம் நெஞ்சில் அசைந்து என்னைக்
கலங்கவைத்தது. இலக்கிய உலகில் ஒரு செடியாக வளர்ந்து இந்த மண்ணில் வேர்களைப் பரப்பிப்
பற்றிக்கொள்ளும் வகையில் எனக்கு நீர் வார்த்த பல கைகளில் அவர் அள்ளியூற்றிய கைநீரும்
உண்டு. அதை நான் ஒருபோதும் மறந்ததில்லை. மானசிகமாக இக்கணத்தில் அவருடைய பாதங்களைத்
தொட்டு வணங்குகிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.