Home

Friday 2 December 2016

தெப்பத்தை கரைசேர்க்கும் கலைஞன் - வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’


வண்ணதாசனின் சிறுகதைகளின் மையங்கள் ஏறக்குறைய இளந்தூறலைப் போன்றவை. இளந்தூறலோடு இணைந்து வருகின்றன மண்ணின் மணமும் மழையின் மணமும். மழை வலுக்கக்கூடும் என்ற எண்ணத்தால் பொங்குகிறது கிளர்ச்சி. வானெங்கும் இருண்டு அடர்ந்த மேகத்திரள் அந்தக் கிளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டுகிறது. நனைந்தபடி நடக்கவும் நடனமிடவும் தூண்டும் ஆசைக்கு அளவே இல்லை. வயலின் இசையென தூறலோடு சேர்ந்தொலிக்கிறது ஒரு சிறு இசைக்கோர்வை. இசையின் காந்த இழுப்பில் தளைகளை விலக்கி மனிதர்கள் வாசலை விட்டிறங்கி தூறலில் நனைகிறார்கள். எதிர்பாராத விதமாக திசைதெரியாமல் குழம்பி வீசும் காற்றின் வேகத்தில் தூறல் சட்டென நிற்கிறது. இசையும் நிற்கிறது. கணநேர இன்பத்தை அல்லது இன்பம் போன்ற கனவை மட்டுமே மனத்தில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குத் திரும்பி வந்து சேர்கிறார்கள். இளந்தூறல் ஒரே நேரத்தில் இன்பத்தின் படிமமாகவும் இழப்பின் அல்லது வலியின் குறியீடாகவும் அமைந்துவிடுகிறது.


இளந்தூறலென அமையும் விருப்பப்பெண் அல்லது விருப்ப ஆண் சார்ந்து உருவாகிற ஒரு சிறுநேர ஒட்டுதலை அல்லது உறவை உதறவும் முடியாமல் தொடரவும் முடியாமல் மனம் படும் பாடுகளையே வண்ணதாசன் தன் கதைகளுக்குரிய பேசுபொருளாக தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். ஏறத்தாழ அக்கதைகளின் மையங்களை பாலியல் தளத்துக்குரியவை என்றே சொல்லமுடியும். ஆனால் வண்ணதாசன் பாலியல் தளத்தில் அவற்றை விரித்தெடுப்பதில்லை. மாறாக, நட்பு உறவுகளின் தளத்தில் அல்லது குடும்ப உறவுகளின் தளத்தில் வைத்து விரித்தெடுக்கிறார். அதனாலேயே அவருடைய சிறுகதைகளில் ஒருவித ஈர்பும் நம்பகத்தன்மையும் அமைந்துவிடுகின்றன. நகைக்கடையில் காட்சிக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு நகையின் கல்துணுக்கிலும் கடையின் தோற்றம் மின்னிப் பிரதிபலிப்பதுபோல  கதையில் இடம்பெறும் ஒவ்வொரு குறிப்பிலும் அல்லது ஒவ்வொரு தகவலிலும் கதைமையத்தின் பிம்பம் பிரதிபலிக்கும்படி அமைக்கும் கலையில் வண்ணதாசன் கைதேர்ந்தவராக இருக்கிறார்.  இந்தத் தலைமுறையின் மகத்தான சிறுகதைக்கலைஞர் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.

தொகுப்பின் தலைப்புச் சிறுகதையான ஒரு சிறு இசை விருந்தாளியாக வந்து வீட்டில் தங்கியிருந்த மூக்கம்மா ஆச்சி எதிர்பாராத விதமாக மரணமடைந்துவிட்ட செய்தியிலிருந்து தொடங்குகிறது. பிறகு நினைவுகள் வழியாக மூக்கம்மா ஆச்சியைப்பற்றிய கோட்டுச்சித்திரம் தீட்டப்படுகிறது. மிகக்குறைவான கோடுகள் வழியாகவே அவள் முகம் திரண்டு வந்துவிடுகிறது. மூக்கம்மா ஆச்சி கதைசொல்லியின் அம்மாச்சியுடைய ஒன்றுவிட்ட சகோதரி. அம்மாச்சியின் அறையில் அவரோடு பழைய கதைகள் பேசியபடி படுத்துக்கொள்ளும் பழக்கமுள்ளவர். அம்மாச்சியின் மரணத்துக்குப் பிறகும் அந்தப் பழக்கம் தொடர்கிறது.  அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு அம்மாச்சியைவிட மூக்கம்மா ஆச்சியுடன் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. அவர் ஊருக்கு வரும் நேரத்துக்குக் காத்திருந்து நேரம் காலம் மறந்து கதை பேசுகிறார்கள். நினைவுகளை அசைபோடுவது வழியாகவே பழைய சம்பவங்கள் துண்டுதுண்டாக சொல்லப்படுகின்றன. நிலைக்காமல் போய்விட்ட அவளுடைய திருமணவாழ்க்கை ஒரு தகவலாக வந்துபோகிறது. ஒருநாள் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த தாத்தாவின் சட்டையில் முகம் புதைத்து நுகர்ந்துபார்க்கும் மூக்கம்மா ஆச்சியின் சித்திரம் கூட ஒரு தகவலாகவே பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஒரே கணம்தான். இளந்தூறலில் நனைவதுபோல சட்டை வேர்வையின் மணத்தில் அவள் மனம் தோய்ந்து நிறைகிறது. எதிர்பாராத விதமாக அக்காட்சி அம்மாச்சியின் பார்வையில் பட்டுவிடுகிறது. பதறி விலகிச் சென்றுவிடுகிறார் மூக்கம்மா ஆச்சி. அதைப்பற்றி இருவருமே பேசிக்கொள்வதில்லை. அன்று மட்டுமல்ல, என்றுமே அதைப்பற்றிய உரையாடல் எழவே இல்லை. ஏதோ ஒரு சமயத்தில் மூக்கம்மா ஆச்சியை கதைசொல்லியின் அப்பா படமெடுத்த போது, தனக்கு வேண்டுமெனச் சொல்லி அப்படத்தை வாங்கி தன் பெட்டிக்குள் வைத்துக்கொள்கிறார் அம்மாச்சி. அவர் மரணத்துக்குப் பிறகு அவருடைய அறையின் மூலையிலேயே அந்தப் பெட்டி இருக்கிறது. மரணத்தையொட்டி எழுதப்படும் நல்லடக்க அறிவிப்புச் சுவரொட்டியில் பிரசுரிப்பதற்காக படத்தின் தேவை எழுந்ததை முன்னிட்டு அந்தப் பெட்டி திறக்கப்படுகிறது. அந்தப் பெட்டிக்குள் வட்டக்கழுத்து வைத்த தாத்தாவின் சட்டைமீது மூக்கம்மா ஆச்சியின் படம் வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தோற்றத்துக்கு மூக்கம்மா ஆச்சியின் கதைபோல இருந்தாலும், உண்மையில் இது ஒரு விழைவின் கதை. வெளிப்படுத்த முடியாமல் ஆழ்மனத்துக்குள்ளேயே பூட்டிவைத்துக்கொண்ட விருப்பத்தின் கதை. அம்மாச்சியின் பெட்டியைப்பற்றிய வர்ணனைக்குறிப்புகள் வயலின் இசையின் உச்சம்போல தோற்றமளிக்கின்றன. அந்தப் பெட்டியின் தோற்றத்தைச் சொல்ல முனையும் வண்ணதாசன் ஹார்மோனியப் பெட்டியை உவமையாக முன்வைக்கிறார். ஒருவகையில் அம்மாச்சியின் மனம்தான் அந்தப் பெட்டி. பெட்டியைத் திறக்கும்போது எழும் இசை நெஞ்சிலிருந்து எழும் இசை. அம்மாச்சிக்குச் சொந்தமானவை என்று சொல்லத்தக்க விதமாக சில புடவைகள், ஸ்படிகமணி எல்லாம் அதற்குள் இருக்கின்றன. அவற்றுக்கும் அடியில்தான் அந்தச் சட்டையும் படமும் இருக்கின்றன. இரண்டு ஆச்சிகளுக்குமே மணமுறை உள்ளவர்தான் தாத்தா. ஆனால் ஆச்சியோடுதான் திருமணம் நிகழ்ந்தது. போன வேகத்தில் வாழா வெட்டியாக வந்துவிட்ட சகோதரிக்கு தன் கணவனையே வழங்கிவிடலாம் என்று ஆச்சிக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் அதை அவர் நேரிடையாகச் செய்ய முடியாது. அதற்குச் சமூக ஒப்புதல் கிடையாது. நேரடியாகச் செய்ய முடியாத ஒன்றை மிகவும் அமைதியாக சட்டையையும் படத்தையும் ஒன்றாக சேர்த்துவைத்து நிறைவடைந்து விடுகிறார்.

ஆச்சியுடைய இரண்டு தடுப்பு கொண்ட பெட்டியைப்போன்றதல்லவா மனிதமனம் என ஒருகணம் தோன்றுகிறது. அப்பெட்டிக்குள் ஏராளமான ரகசியங்கள். மனிதர்கள் அப்பெட்டியை ஒருபோதும் திறப்பதே இல்லை. திறக்காததாலேயே நெஞ்சிலிருந்து எழும் இசை வெளிப்படுவதே இல்லை. அல்லது நெஞ்சைத் திறக்கும் கணத்தில் மட்டுமே வெளிப்பட்டு மறைகிறது  இசை. அதனாலேயே அது சிறு இசை.

தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் சிறுகதையில் தண்டவாளமாக உருவகிப்படுவதும் சிறு இசை போன்ற விழைவு அல்லது உறவுதான். தண்டவாளம் எவ்வளவு கச்சிதமான படிமம். இணைந்திருப்பதுபோன்ற ஒரு தோற்றம். ஆனால் ஒருபோதும் இணைவதற்குச் சாத்தியமற்ற இருப்பின் வேதனை. தலைமையாசிரியரான அப்பாவுக்கும் காந்தி டீச்சருக்கும் இடையிலான உறவைச் சுட்டிக்காட்ட இன்றைய வாழ்க்கைத்தளத்தில்  பெயரில்லை.  விருப்பப்பெண் அல்லது விருப்ப ஆண் என்னும் தகுதியைக் கொண்டது அது. அப்பா மணமானவர். காந்தி டீச்சர் மணமாகாதவர். அப்பாவின் குடும்பத்தை தன் கட்டற்ற அன்பால் நிறைப்பவர் அவர். அவர் மகன் புதுமனைவியோடு வீட்டில் கலகலப்பாக இருக்கும் நேரத்தில் அந்த வீடு வரைக்கும் அழைத்து வந்து ஆசி வழங்கவைத்து அதை மறக்க முடியாத அனுபவமாக்க டீச்சருக்குத் தெரிந்திருக்கிறது. இளரத்தத்தின் வேகத்தில் யாரோ ஒரு இளைஞனோடு வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்ட சரஸ்வதியை ரகசியமாகக் கண்டுபிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துவரவும் அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் கூட அவளுக்குத் தெரிந்திருக்கிறது. உடைந்துபோய் கலங்கி நிற்கும் அப்பாவின் முதுகைத் தட்டி கைகளைப்பற்றி ஆறுதல் சொல்லும் தருணமும் சரி, ஒரே உறவாக இருந்த அப்பாவின் மரணத்தை ஒட்டி கலங்கிப் போய் நிற்கும் டீச்சருக்குத் துணையாக அப்பா நின்று உதவிய தருணமும் சரி, எல்லோரும் பார்க்கும் வகையிலேயே அமைந்தவை. அந்த உறவுக்கு மறைமுகமாக எல்லோருடைய ஒப்புதலும் இருக்கிறது. ஆனால் திடீரென காந்தி டீச்சர் அந்த உறவின் வளையத்திலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிடுகிறார். அவரை எங்கோ ஒரு ஆசிரமத்தில் பார்த்ததாகச் சொல்பவர்கள் உங்களுக்கு தகவலே தெரியாதா என்று கேட்கிறார்கள். பாதையில் நடக்கும்போது குறுக்கிடும் தண்டவாளத்தைத் தாண்டுவதுபோல டீச்சர் அந்த உறவைக் கடந்துபோய்விடுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை தண்டவாளத்தைக் கடந்து நடக்கும் கோலத்தில் கடைத்தெருவில் பார்க்கும் நமசு தன் வீட்டுக்குத்தான் வந்து செல்கிறாரோ என்னமோ என நினைத்தபடி வீட்டுக்குத் திரும்பி விசாரிக்கும்போது அவர் அங்கே வரவில்லை என்னும் உண்மை புரிகிறது. அவர் ஏன் சாமியாரகப் போனார் என்னும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. “எல்லாம் போதும்னு தோணியிருக்கும்” என்று ஒரு பொதுவான பதிலைத்தான் அப்பாவால் சொல்லமுடிகிறது. அதைச் சொல்லிவிட்டு எழுந்துபோகிறார் அப்பா.  அப்போது தரையில் சிந்திப் பரவியிருக்கிறது தண்ணீர்த்தடம். சகஜமாக நடக்கும் ஒருவர் அதை மிதித்து நடப்பதற்கான வாய்ப்பே மிகுதி. ஆனாலும் அப்பா கவனமாக அதை தண்டவாளத்தைத் தாண்டிக் கடப்பதுபோல கடந்துபோகிறார்.

அந்தக் கவனம் அல்லது எச்சரிக்கை ஒரு முக்கியமான புள்ளி. சம்பவங்களில் திளைத்து அசைபோடும் போக்கில் கவனத்திலிருந்து நழுவிப் போகும் வாய்ப்பை மிகுதியாகக் கொண்ட புள்ளி அது. இன்னொரு புள்ளி, தன் அப்பாவின் மரணத்துக்குப் பிறகு யாரிடமும் சொல்லாமலேயே காந்தி டீச்சர் ஊரைவிட்டு வெளியேறும் புள்ளி. ”எங்களோடேயே வந்து இருங்களேன்” என்று அம்மா முன்வைக்கும் அழைப்பு நிகழ்ந்துவிடக் கூடாதே என எச்சரிக்கையோடு எடுக்கப்பட்ட முடிவோ என தோன்றவைக்கும் புள்ளி. இரண்டு புள்ளிகளுக்கும் அடியில் காணப்படும் கவனம் அல்லது எச்சரிக்கை மிகமுக்கியமானது.   

இந்தக் கதையிலும் ஒரு இசை இடம்பெற்றிருக்கிறது. காந்தி டீச்சரின் அப்பாவின் புல்புல்தாராவிலிருந்து எழும் இசை. அவர் மரணத்துக்குப் பிறகு அதை எடுத்து அப்பா ‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்’ என வாசிக்கும் இசை. ஆழ்மன இச்சையை வெளிப்படுத்தும் அந்த இசையை காலம் முழுக்க சுமந்து அலைந்தபடியே இருக்கிறது காற்று.

தண்ணீருக்கு மேல் தண்ணீருக்குக் கீழ் இன்னொரு சிறப்பான சிறுகதை. ஒரு கவிதையின் வரியைப்போலத் தோன்றும் தலைப்பின் வசீகரம் கதையின் மையத்தோடு ஒட்டிப்போகிறது. வழக்கமான விருப்ப ஆண், விருப்பப்பெண் சார்ந்த மையமே என்றாலும் அதைச் செலுத்தியிருக்கிற விதத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிற விதத்திலும் தனித்தன்மை மிக்க வண்ணதாசனின் கலையாளுமை வெளிப்படுகிறது. தண்ணீருக்கு மேல் தெரியும் பூவைப் பார்க்கும் விழிகளுக்கு தண்ணீருக்குக் கீழே நீண்டிருக்கும் தண்டின் நீளத்தைப் பார்க்க முடிவதில்லை. தண்ணீரில் மூழ்கி தண்டைப் பார்க்கும் விழிகளுக்கு தண்ணீருக்கு மேல் மலர்ந்து விரிந்திருக்கும் பூவைப் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் இயற்கை ஒரு விதியை வகுத்து வைத்திருக்கும்போல. விதியை மீறி குளத்திலிருந்து கொத்தோடு இழுப்பவனுடைய பார்வைக்கு ஒருகணம் பூவும் தண்டும் ஒருங்கே அப்பட்டமாகத் தெரியக்கூடும். ஆனால் அது பூவின் இறுதிக்கணமாக மாறிவிடுவது மிகப்பெரிய துரதிருஷ்டம். வண்ணதாசன் தன் கண்ணில் படும் காட்சியின்மீது கதைமையத்துக்குத் தகுந்த விதத்தில் படிமத்தன்மையை ஏற்றுகிறாரா அல்லது படிமத்தன்மை மிகுந்த காட்சியைக் கண்ட பிறகு கதைமையத்தைக் கண்டடைகிறாரா என்பது மகத்தானதொரு புதிர். அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் இசைவாக இருக்கிறது. இசைவாக இருக்கமுடியாத ஓர் உறவைப்பற்றி இவ்வளவு இசைவாக எழுத்தில் அமைக்கும் கலையில் வண்ணதாசலுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. இந்தக் கதையில்தான் எத்தனை எத்தனை உறவுகள். அப்பா – செல்லம்மா, தாத்தா- பழனியம்மா ஆச்சி, மணி-பெரியநாயகி என  பல அடுக்குகள். சிக்கலில்லாமல் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டுக் கடந்து செல்கிறார் வண்ணதாசன்.

இத்தகு மையங்களைக் கொண்ட சிறுகதைகளை ஒரு கைதேர்ந்த சிற்பியைப்போல வடிவமைக்கிறார் வண்ணதாசன். அவர் கைவிரல் பட்ட ஒவ்வொன்றுமே ஒரு சிற்பமாக காட்சியளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல சற்றே கவனம் பிசகினாலும் நிலைகுலைந்து போவதற்கு வாய்ப்புள்ள மையங்களை மிக லாவகமாக கையாள்கிறார் அவர்.   தனுமை அவருடைய பழைய கதைகளில் ஒன்று. சிறந்த சிறுகதையாக இலக்கியச்சிந்தனையின் பரிசைப் பெற்ற கதை. அந்தக் கதையை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே இப்படிப்பட்ட மையத்தைத் தொட்டுத்தொட்டு வந்திருக்கிறார் வண்ணதாசன். ‘தனலட்சுமிதான் வேணுமாக்கும்’ என்று சொன்னபடி ஞானப்பனை ஒருகணம் அணைத்துத் தழுவிவிட்டுச் செல்லும் டெய்ஸியை எப்படி மறக்கமுடியும். அந்த டெய்ஸியும் தனலட்சுமியும் ஞானப்பனும்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு கோலங்களில் வெவ்வேறு தளங்களில் வண்ணதாசனின் கதைகளில் வெளிப்பட்டபடி இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தன் படைப்பை புத்தம்புதிதாக மாற்றிவிடுகிறார். அவருடைய கலை வெள்ளத்தில் எதிர்த்துடுப்பு போட்டு தெப்பத்தை கரைசேர்க்கும் கலை. 

இத்தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. சமீபத்தில் இவ்வளவு நிறைவான சிறுகதைகளை நான் படித்ததில்லை. தினமும் இசை கேட்பதுபோல தினமும் ஏதேனும் ஒரு சிறுகதையை மீண்டும் மீண்டும்  படித்து அசைபோட்டபடி இருக்கிறேன். பனிச்சிகரத்தின் அடிவாரத்தில் நடக்கும் சுற்றுலாப்பயணியின் மனம்முழுக்க நிறைந்திருக்கும் கோடை வெயிலைப்போல அல்லது கோடை வெயிலில் வேர்வை வழிய நடந்துபோகும் சுற்றுலாப்பயணியின் நெஞ்சில் நிறைந்திருக்கும் பனிச்சாரலின் கனவைப்போல விருப்பங்களைச் சுமந்தலையும் மனிதர்களை தம் கதைகளில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியபடி செல்கிறார் வண்ணதாசன். ஓவியங்களிடையே மறைந்திருக்கும் ரகசியக்குறியீடுகளைப்போல கவித்துவம் மிக்க தன் சொல்லோவியங்களின் நடுவில் ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ரகசிய விருப்பத்தையும் ஒரு சிறு ஓவியமாக தீட்டி நிறைத்துவிடுகிறார். ஓவியங்களோடு ஓவியமாக கலந்து காணப்படுவதால் நம் பார்வைக்கு அவை சட்டென புலப்படுவதில்லை. புலப்படும்போதோ வைரக்கல் போல அவை சுடர்விட்டு ஒளிர்வதைப் பார்ப்பதிலிருந்து விழிகளை விலக்கமுடிவதில்லை. 


(ஒரு சிறு இசை- சிறுகதைத்தொகுதி. வண்ணதாசன். சந்தியா பதிப்பகம். 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை-83. விலை.ரூ.130)