Home

Sunday, 13 July 2025

அற்புத உலகம்

 

இரு மாதங்களாக புக் டே இணைய தளத்தில் மூத்த எழுத்தாளரான விட்டல்ராவ் எழுதும் ‘வகுப்பறைக்கதைகள்’ என்னும் தொடரை ஒவ்வொரு வாரமும் படித்து வருகிறேன். அனைத்துக்கதைகளும் அவர் தொடக்கப்பள்ளியில் பயின்ற காலத்தில் வகுப்பறைகளில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்ச்சிகள், படித்த பாடங்கள், பாடல்கள்,  சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் தொடர்பான நினைவலைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் தொடக்கப்பள்ளியில் பயின்றவர் அவர்.  ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் தம் வகுப்பில் படித்த பாடல்கள் பற்றிய நினைவுகள் அவர் நெஞ்சில் பசுமையாக நிறைந்திருக்கின்றன.  இன்று தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ இத்தகு இனிய அனுபவங்களும் நினைவுகளும் வாய்த்திருக்குமா என்பதை என்னால் உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

அன்றைய வகுப்பறைகளில் இருந்த நூலகவாசிப்பு வகுப்பு, பாடல் வகுப்பு, கதைகூறும் வகுப்பு, தோட்டக்கலை வகுப்பு, தறிவேலை வகுப்பு போன்ற பல்வேறு வகுப்புகள் இன்றைய பாடத்திட்டத்திலேயே இல்லை. அவற்றுக்குப் பதிலாக வெவ்வேறு பாடங்கள் வந்து நிறைந்துவிட்டன. பள்ளிகளே கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுக் கொடுக்கும்  நுட்பத்தைச் சொல்லிக்கொடுக்கும் பட்டறைகளாக மாறிவிட்டன. வகுப்பறையை ஒரு நுகர்வுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறது நம் சமூகம்.

சமீபத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகைச்செய்தியைக் குறிப்பிடுவது இந்தத் தருணத்தில் பொருத்தமாக இருக்கும். ஒரு வகுப்பில் சிக்கலான அறிவியல் பாடத்தை நடத்திய ஆசிரியர் அதை மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் காரணத்தால் முதலில் ஒரு கதையைச் சொல்லி அதன் தளத்தைப் புரிந்துகொள்ள வைத்துவிட்டு, பிறகு பாடத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் பாடங்களில் ஆர்வம் கொண்ட ஒரு மாணவன் ஆர்வக்கோளாறின் காரணமாக அக்கதைகளை வீட்டுக்குச் சென்ற பிறகு தம் பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டான். ஒவ்வொரு நாளும் தன் மகன் ஒரு புதிய கதையை வீட்டுக்கு வந்து சொல்வதைக் கேட்டு பெற்றோர்கள் பதற்றமடைந்தனர்.

பாடத்துக்குப் பதிலாக வகுப்பறையில் கதைதான் சொல்லப்படுகிறதோ என்று மனத்தில் சந்தேகத்தை வளர்த்துக்கொண்டனர். அடுத்த நாள் காலையிலேயே பள்ளியின் தலைமையாசிரியரைச் சந்தித்து பாடத்துக்குப் பதிலாக கதை கூறும் ஆசிரியரைக் கண்டித்து வைக்கும்படி புகார் அளித்தனர். அந்தத் தலைமையாசிரியரும் என்ன ஏது என்று முழுமையாக விசாரிக்காமல் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து அந்தப் பெற்றோர் முன்னிலையிலேயே கடுமையாகக் கண்டித்து அனுப்பி வைத்துவிட்டார்.

விட்டல்ராவ் காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடைப்பட்ட முக்கால் நூற்றண்டில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான மாற்றம் இது. குழந்தைகளிடம் கற்பனையையும் கல்வியாற்றலையும் விதைத்து வளர்க்கும் பொறுப்பு தம்மிடம் இருப்பதாக அக்காலத்து ஆசிரியர்கள் நினைத்தார்கள். சமூகம் தமக்கு வழங்கிய அப்பொறுப்பைத் தலையாய கடமையாகக் கொண்டு அவர்கள் அதை நிறைவேற்றினர். இன்று தம் குழந்தைகளிடம் கல்வியாற்றலையும் வாழும் விதத்தையும் அதற்கு ஏற்ற திறமையையும் வளர்க்கும் பொறுப்பு தம்மிடம் மட்டுமே இருக்கவேண்டுமென ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவாக கதையும் பாடலும் இல்லாத ஒரு தலைமுறை இன்று தோன்றி வளர்ந்துகொண்டிருக்கிறது. அதைத்தான் நாம் இன்று பார்த்துவருகிறோம்.

அந்தச் சூழலை மாற்றும் விதமான முயற்சிகளில் இன்று பல்வேறு வாசிப்பு இயக்கங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அது ஒரு நம்பிக்கையூட்டும் அம்சமாக உள்ளது. வகுப்பறைகளுக்கு வெளியே பல்வேறு இடங்களில் வாசிப்பு மையங்கள் மெல்ல மெல்ல உருவாகி வருகின்றன. குழந்தைகளுக்கு உரிய குதூகலத்தையும் கொண்டாட்ட மனப்பான்மையையும் மேன்மேலும் வளர்க்கும் விதமாக பாடல்களையும் கதைகளையும் எழுதும் எழுத்தாளர்களும் உருவாகிவருகிறார்கள். மாறிவரும் இச்சூழல் ஓரளவு நம்பிக்கையளிக்கிறது.

குழந்தைகளுக்கான பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் முக்கியமான பங்களிப்பைச் செலுத்திவரும் கவிஞர்களில் ஒருவர் குருங்குளம் முத்து ராஜா. குழந்தைகளுக்கே உரிய சொற்களஞ்சியத்தில் உள்ள சொற்களை எடுத்து சிக்கனமாகப் பயன்படுத்தி அழகான தாளக்கட்டோடு தம் பாடல்களை அமைத்துள்ளார்.

எங்கும் அறிவுரை இல்லை. செய், செய்யாதே என்று சொல்லும் ஆலோசனைகளும் இல்லை. மாறாக, கொண்டாட்டம், குறும்புச்செயல்கள், கற்பனை, வியப்பு மட்டுமே உள்ளன. சிறுவர்களின் கண்களைக் கொண்டு, சிறுவர்களுக்கே உரிய உலகப் பார்த்து, சிறுவர்களுக்கே உரிய சொற்கள் வழியாக உருவான சித்திரங்களே முத்து ராஜாவின் பாடல்களில் நிறைந்திருக்கின்றன. சிறுவர்களின் மனமறிந்த கவிஞராக முத்து ராஜா விளங்குகிறார்.

இத்தொகுப்பில் உள்ள பட்டம் பற்றிய பாட்டு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

 

தாளை வெட்டி வாலும் ஒட்டி

நூலும் முடிஞ்சாச்சு

மெல்லத் தூக்கி விட்ட பட்டம்

மேலே பறந்து போச்சு

 

தண்ணியிலே மீனைப் போல

வானத்திலே நீந்துது

தரையில் நடக்கும் மனிதர்களை

குனிந்து பார்த்து சிரிக்குது

 

படமெடுக்கும் பாம்பு போல

தலையை உயர்த்தி ஆடுது

பட்டென்று நூலைச் சொடுக்க

குட்டிக்கரணம் போடுது

 

இறங்கி வர அடம் பிடிச்சு

எட்ட எட்ட போகும்

இன்னும் கொஞ்சம் நூலை விட்டா

ஏரோப்பிளேனையும் மோதும்

 

பட்டத்தின் செய்முறை பற்றிய விவரணையை முதற்பகுதியாகவும் வானைத் தொட்ட பட்டத்தின் நடனம் பற்றிய விவரணையையும் குதூகலத்தையும் இரண்டாம் பகுதியாகவும் ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து முன்வைக்கும் கவிஞர் இறுதிப்பகுதியில் பால்யத்துக்கே உரிய கற்பனையைச் சித்தரிக்கும் வரிகளோடு பாட்டை நிறைவு செய்திருக்கிறார். ’ஏரோப்பிளேனையும் மோதும்’ என்னும் வரியைப் படிக்கும்போது புன்னகைக்காதவர்களே இருக்கமுடியாது.

’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’ சுவையான கற்பனைக்காட்சிகளின் தொகுப்பாக வடிவெடுத்திருக்கிறது. காட்டுக்குள் இயங்கும் சித்திரமான பள்ளிக்கூடத்தில் மணி அடிப்பதற்கு இணையாக நரி ஊளையிடுகிறது. ஒட்டகச்சிவிங்கி ஆசிரியரைப்போல மிடுக்காக நடந்துவந்து பாடம் நடத்துகிறது. யானை தன் வயிற்றையே கரும்பலகையாகக் காட்டி நிற்கிறது. வகுப்பில் முன்வரிசையில் முயல் குட்டிகள் உட்கார்ந்திருக்கின்றன. கடைசி வரிசையில் குரங்குகள் உட்கார்ந்திருக்கின்றன. சிங்கமும் எலிகளும் சீருடையில் வந்து அமர்ந்திருக்கின்றன.  குயிலும் குருவியும் பாட்டு வகுப்பு நடத்துகின்றன. மயில் நடனவகுப்பு நடத்துகின்றது. நீளம் தாண்டும் போட்டியில் மான் பங்கேற்று வெற்றி பெறுகிறது. மிதிவண்டி ஓட்டும் போட்டியில் ஆமை வெற்றி பெறுகிறது. வீட்டுப்பாடமே இல்லாத அந்தக் காட்டுப்பள்ளிக்கூடத்தில் உற்சாகம் நிறைந்து ததும்பியபடி இருக்கிறது. எளிய, இனிய சொற்களோடும் நல்ல தாளக்கட்டோடும் அப்பாடலை எழுதியிருக்கிறார் முத்து ராஜா.

’சூரியனுக்கு ஒரு கேள்வி’ என்னும் பாடல் பால்யத்துகே உரிய கேள்விகளால் நிறைந்திருக்கிறது. உச்சிவானில் ஏறி நிற்க ஏணியைக் கொண்டுவந்து கொடுத்தது யார் என்று கேட்கும் கேள்வியில் அறியாச் சிறுவனொருவனின் வியப்பைப் பார்க்கமுடிகிறது. மேற்கில் விழுந்து மறைந்து கிழக்கி எழுந்து உதயமாகும் விசித்திரத்தைப் பார்த்து அவன் மேலும் வியப்பில் மூழ்கிவிடுகிறான். சூரியன் இல்லாத இருளில் வானில் நடமாடி வெளிச்சத்தை வழங்கும் நிலாவை சூரியனின் மகள் என நினைத்துக்கொண்டு அப்பாவித்தனமாகக் கேட்கும் கேள்வி புன்னகையை எழுப்புகிறது.

’பொம்மை விளையாட்டு’  குறும்பும் கற்பனையும் நிறைந்த மற்றுமொரு பாடல். அறை நிறைய பொம்மைகளைப் பரப்பி வைத்துக்கொண்டு ஒரு குழந்தை பொழுதுபோக்காக விளையாடும் காட்சியிலிருந்து பாடல் தொடங்குகிறது. அதைச் சுற்றி விலங்குப்பொம்மைகள், பறவைப்பொம்மைகள், மனிதப்பொம்மைகள் என ஏராளமாக பரவியிருக்கின்றன. ஒவ்வொரு பொம்மையோடும் குழந்தை விளையாடுகிறது. எடுத்து வீசுகிறது. கீழே உருண்டு கிடக்கும் பொம்மையை எடுத்து நிற்கவைக்கிறது. நின்றிருக்கும் பொம்மையை எடுத்து படுக்கவைக்கிறது. அந்தப் பொம்மைகளையும் அவற்றுக்கு நடுவில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தைகளையும் தற்செயலாக அந்த அறைக்குள் வந்த எலி பார்க்கிறது. எல்லா விலங்குகளும் பொம்மைகளாக இருப்பதைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறது. சிரித்துக்கொண்டே தரையில் உருண்டு புரள்கிறது. உருண்டோடிச் சென்று பொம்மை என நினைத்து ஒரு பூனையின் முன்னால் குறுக்கே விழுகிறது. அது பொம்மையல்ல, உண்மையான பூனை என்பது,  அது கவ்விய பிறகே அந்த எலிக்குத் தெரிகிறது.

விடுகதைப்பாடல் அமைப்பில் எழுதப்பட்டிருக்கும் யார் இவர் என்னும் பாடல் சுவாரசியமான கேள்விகளால் நிறைந்திருக்கின்றன. பதில்கள் சொல்லப்படாமல் ஊகத்துக்கு விடப்பட்டிருக்கின்றன.

 

நாலுகால் மண்டபம் போல்

நகர்ந்து வருகுது

நடுவில் ஒரு கையும் கூட

இதுக்கு இருக்குது

 

யானையை மண்டபம் என்று குறிப்பிடும் கற்பனை, அந்தப் பாட்டை மனப்பாடமாக மாற்றிக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

 

’கத்துக் கொடுங்க’ என்னும் பாடலில் ஓசைநயமும் கற்பனையும் நிறைந்திருக்கின்றன. தாவிக் குதிக்கும் வித்தையை தவளையாரிடமும் வட்டமடித்துப் பறக்கும் வித்தையைத் தட்டாம்பூச்சியிடமும் பாடும் வித்தையைக் குயிலிடமும் மரம் ஏறும் கலையை அணிலிடமும் குட்டிக்கரணம் அடிக்கும் கலையைக் குரங்கிடமும் கற்றுக்கொள்ள ஆசை கொண்ட சிறுமியின் விண்ணப்பம் போல எழுதப்பட்ட பாடல் இது.

’யாருக்காகப் பழுத்தாய்?’ பாடல் வினாவிடை அமைப்பில் எழுதப்பட்ட சுவாரசியமான பாடல். ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் வழக்கமான நடமாட்டப் பாதையில் பழுத்திருக்கும் கொய்யாப்பழம், கோவைப்பழம், ஆலம்பழம், வேப்பம்பழம், நாவல் பழம் என எல்லாப் பழங்களிடமும் ‘நீ ஏன் பழுத்தாய்?’ என்றொரு கேள்வியைக் கேட்பதுபோலவும் அந்தப் பழங்கள் அதற்கு விடை சொல்வதுபோலவும் பாடல் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பழமும் ஒரு பதிலைச் சொல்கிறது. எல்லாப் பதில்களுமே சுவாரசியமாக அமைந்துள்ளன. எல்லாப் பழங்களும் பதில் அளித்தபிறகு நிறைவாக இலந்தம்பழத்திடம் அதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. உடனே அந்தப் பழம் ‘பள்ளிவிட்டு ஓடிவரும் சிறுவருக்காகப் பழுத்தேன்’ என்று மகிழச்சியோடு பதில் சொல்கிறது.

’மழை பெய்யுது’ மீண்டும் மீண்டும் படிப்பதற்குச் சுவையான பாடல்.

 

குடை மேலே பெய்த மழை

படபடவென தெறிக்குது

கூரை மேலே பெய்த மழை

சரம் சரமாய் வழியுது

மலைமேலே பெய்த மழை

அருவியாகக் கொட்டுது

இலைமேலே பெய்தமழை

வெள்ளிமுத்தாய் உருளுது

கடல்மேலே பெய்த மழை

உப்புத் தண்ணீர் ஆனது என்

தலை மேலே பெய்த மழை

மூக்கு நுனியில் சொட்டுது

 

எளியதொரு காட்சியனுபவமே இப்பாடலை மிகச்சிறந்த பாடலாக மாற்றுகிறது.

வேடிக்கையும் விளையாட்டும் குறும்பும் குதூகலமும் நிறைந்தது சிறுவர்சிறுமியரின் உலகம். அவர்களுள் ஒருவராக தம்மைத் தகவமைத்துக்கொள்கிற ஒருவரால் மட்டுமே அந்த உலகத்தின் அற்புத ஆற்றலை பிறருக்கு உணர்த்தமுடியும். குருங்குளம் முத்து ராஜா அந்த அற்புத ஆற்றலை உணர்ந்தவராக மட்டுமன்றி, அதை அற்புதமான தாளக்கட்டோடு கூடிய பாடல்களாக உருமாற்றி வாசகர்களுக்கு உணர்த்தும் வலிமையையும் பெற்றிருக்கிறார்.

 

 

(காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். சிறுவர் பாடல்கள். குருங்குளம் முத்து ராஜா. மேஜிக் லாம்ப், 96, நியு ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -642002. விலை. ரூ.150)

 

(புக் டே – இணைய தளம் – 30.06.2025)