அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். “வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா?” என்றபடி உள்ளே வந்தார் நண்பர். “வாங்க வாங்க” என்று அவரை வரவேற்று என் படிப்பு மேசைக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரும்படி கைகாட்டினேன். புத்தகத்தை மூடி மேசையில் வைத்துவிட்டுத் திரும்பினேன்.
“ஞாயித்துக்கெழமையாச்சே, வீட்டுல இருப்பீங்களோ இல்லையோன்னு நெனச்சிகிட்டே
வந்தேன்”
“படிக்க ஆரம்பிச்சேன். சுவாரசியமா இருந்தது. சரி, எந்த வேலையா
இருந்தாலும் நாளைக்குப் பார்த்த்துக்கலாம்ன்னு அப்படியே உக்காந்துட்டேன்”
மேசை மீது வைத்த புறநானூறு புத்தகத்தை அவர் எடுத்துப் பிரித்தார்.
அந்தக் காலத்தில் புலியூர்க்கேசிகன் உரையோடு வெளிவந்த புத்தகம். முதலில் சில பக்கங்களைப்
புரட்டிய பிறகு, நான் அதற்குள் அடையாளமிட்டு வைத்திருந்த பக்கத்தைத் திருப்பினார் நண்பர்.
“என்ன திடீர்னு புறநானூறு படிக்க ஆரம்பிச்சிட்டீங்க?”
“திடீர்னுலாம் கெடையாது. அது என்ன நாவலா, எடுத்தோம் முடிச்சோம்னு
படிக்கறதுக்கு? அப்பப்ப நேரம் இருக்கும்போது ரெண்டு மூனு பாட்டு படிப்பேன். அவ்ளோதான்
முடியும். அந்த வரிகளை அசைபோட்டு அசைபோட்டு அர்த்தங்களை ஆராய்ச்சி செய்றதுலயே ஒரு நாள்
ஓடிடும்”
என் சொற்களைக் கேட்டு ஒருபக்கம் தலையசைத்துக்கொண்டே, இன்னொரு
பக்கம் பிரித்துவைத்த பக்கத்திலிருந்த பாட்டை ஒவ்வொரு சொல்லாக வாய்திறந்து படித்தார்
நண்பர்.
”குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள் அன்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமளியின் இடர்ப்படுத்து இரீஇய
மதுகை இன்றி வயிற்றுத்தீர் தணிய
தாம் இரந்துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத்தானே”
ஆறு வரிகளை அவர் நிறுத்தி நிறுத்திப் படித்துவிட்டு என்னைப்
பார்த்து புன்னகைத்தார். “என்ன சார் இது? என்னமோ கல்வெட்டு எழுத்த படிக்கிறமாதிரி இருக்குது.
இன்னைய காலத்துல புழக்கத்துல இருக்கற ஒரு சொல் கூட இதுல இல்லையே” என்றார்.
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இறப்பு, பிறப்பு, வயிறு, வாள்,
உலகம் எல்லாமே இன்னைக்கும் இருக்கற சொல்தானே? நமக்குத் தெரியலைங்கறதுக்காக யாருக்குமே
தெரியாதுன்னு சொல்றது எந்த வகையில நியாயம்?”
என் குரலில் என் கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டுவிட்ட அழுத்தத்தை
அவர் உடனே உணர்ந்துகொண்டார். உடனே ”நான் சும்மா ஒரு பேச்சுக்காக சொன்னேன் சார். தப்பா
எடுத்துக்க வேணாம்” என்று சொன்னார். தொடர்ந்து “இந்தப் பாட்டுடைய அர்த்தம் என்னன்னு
தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்குது. தயவுசெஞ்சி நீங்க எனக்கு அந்தப் பாட்டுக்கு விளக்கம்
சொல்லணும்” என்று கேட்டார்.
“புறநானூறுல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. ஒன்பதாம் வகுப்பு
பாடத்துல எங்களுக்கு இந்தப் பாட்டு பாடமா இருந்தது. அப்ப எங்களுக்கு ராதாகிருஷ்ணன்னு
ஒரு தமிழாசிரியர்தான் பாடம் எடுத்தாரு. விழுப்புரத்திலேர்ந்து வருவாரு. ஒவ்வொரு வரிக்கும்
அர்த்தமும் கதையுமா சொல்லி எங்களுக்கு அதை விளக்கமா புரியவைச்சாரு. இந்தப் பாட்டைப்
படிக்கும்போதுலாம் நான் அவரைத்தான் நெனைச்சிக்குவேன்.”
“அப்படியா? தயவு செஞ்சி எனக்கும் அதைச் சொல்லுங்க சார். எனக்கும்
அதையெல்லாம் கேக்கணும்னு ஆசையா இருக்குது”
அவருடைய ஆர்வம் எனக்கும் ஒரு தூண்டுதலைக் கொடுத்தது.
“அடிப்படையில இந்தப் பாட்டு ஒரு மனிதனுக்கு தன்மானம்ங்கறது எந்த
அளவுக்கு முக்கியமானதுன்னு சொல்ற பாட்டு. மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர்
மானம் வரின்னு ஒரு குறள் இருக்குது தெரியுமா? அந்தக் குறளுக்குப் பொருத்தமான இலக்கணம்
இந்தப் பாட்டு.”
“அதுவும் இதுவும் எப்படி பொருந்திப் போவுது?”
”இந்தப் பாட்டுக்குப் பின்னால ஒரு கதை இருக்குது. அதையும் சொன்னாதான்
அந்தப் பொருத்தப்பாடு புரியும்”
“சொல்லுங்க”
“கணைக்கால் இரும்பொறைன்னு ஒரு சேரநாட்டு அரசன் இருந்தான். அவன் எழுதன பாட்டுதான் இது. ஒருமுறை அவனுக்கும் சோழ
அரசனான செங்கணான்ங்கறவனுக்கும் திருப்போர்ப்புறம்ங்கற ஊருல போர் நடந்தது. அந்தப் போர்ல
சேரன் தோத்துடறான். அவனை சங்கிலியால கட்டி உறையூர் குடவாயிற்கோட்டத்துல சிறை வைச்சிடறான்
சோழன். அவனை அடைச்சி வைச்சிருக்கிற அறையைச் சுத்தி அல்லும் பகலும் காவல் காக்கற ஆளுங்க
நின்னுட்டிருக்காங்க.”
“சரி”
“ஒருதரம் அந்தச் சேர அரசனுக்கு தண்ணீர் தாகம் அதிகமா இருந்திச்சி.
வேற வழி தெரியாம பக்கத்துல நின்னுட்டிருந்த காவல்காரன்கிட்ட தண்ணி வேணும்னு கேட்டான்.
ஆனா அந்தக் காவல்காரன் காதுலயே விழாதமாதிரி நின்னுட்டிருந்தான். அரசன் மறுபடியும் மறுபடியும்
கேட்டப்பறம்தான் அவன் திரும்பி என்னன்னு அலட்சியமா விசாரிச்சான். தண்ணி வேணும்ன்னு
மறுபடியும் கேட்டான் அரசன். எந்தப் பதிலும் சொல்லாம தலையை ஆட்டிகிட்டே வெளியே போய்
ஒரு பாத்திரத்துல தண்ணி கொண்டாந்து கதவுகிட்ட வச்சிகிட்டு அலட்சியமா திரும்பிக் கூட
பார்க்காம போயிட்டான். காவல்காரனுடைய நடவடிக்கை
எல்லாமே ஏதோ ஒரு விதத்துல அவமானப்படுத்தற மாதிரி இருக்கறதா அரசனுக்குத் தோணுது. அப்பவே
அவனுக்கு அது ஒரு தன்மானப் பிரச்சினையா மாறிடுது. மானம் கெட்டு அந்தத் தண்ணியக் குடிச்சி உயிர்வாழணும்ங்கற அவசியம் இல்லைன்னு மனசுக்குள்ள
ஒரு முடிவுக்கு வந்துடறான். அந்தத் தண்ணி இருந்த பாத்திரத்தை அவன் திரும்பிக் கூட பார்க்கலை.
அதுக்கப்புறம் அவனுக்கு தரப்பட்ட சாப்பாடு, தண்ணி எதையுமே அவன் தொடலை. அப்படி சில நாட்கள்
பட்டினியாவே இருந்து தன் உயிரை போக்கிகிட்டான். சாகறதுக்கு முன்னால இப்படி ஒரு பாட்டை
எழுதிவச்சிட்டு செத்துப் போயிட்டான்.”
“ஆச்சரியமா இருக்குது”
“உயிர் முக்கியம்தான். ஆனா அதை விட தன்மானம் முக்கியம்னு நினைக்கிறவங்களும்
இருக்காங்கன்னு இந்த உலகத்துக்கு இந்தப் பாட்டு ஞாபகப்படுத்திகிட்டே இருக்குது”
ஓரிரு கணங்கள் பாட்டின் வரிகளை மனசுக்குள்ளேயே படித்துப் பார்த்துவிட்டு
“நீங்க சொன்னத கேட்டுப் புரிஞ்சிகிட்ட பிறகு படிச்சிப் பார்க்கற சமயத்துல எல்லா வரிகளும்
புரியறமாதிரி இருக்குது சார்” என்று புன்னகைத்தார் நண்பர்.
சில கணங்களுக்குப் பிறகு “இந்தப் பாட்டை விட்டுடுங்க. நான் பொதுவா
ஒரு கேள்வி கேக்கறேன். உயிர் வாழறதுக்காக தன்மானத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தா என்ன
தப்பு? அந்த அளவுக்கு நம்ம தன்மானத்தை கட்டிக் காக்கணுமா? நம்ம உயிருக்காக, நம்ம நம்பி
இருக்கற குடும்பத்தின் உயிருங்களுக்காக, கொஞ்சம் முன்னபின்ன இருக்கக்கூடாதா?” என்று
கேட்டார்.
ஏதோ ஒரு ஐயம் அவர் மனத்தில் குடையத் தொடங்கிவிட்டது என்பதை என்னால்
புரிந்துகொள்ள முடிந்தது. “இங்க பாருங்க. இந்த உலகத்துல கண்டிப்பா பின்பற்றியே ஆகணும்னு
எந்த விதியும் கிடையாது. எப்பவுமே எல்லாத்துக்கும் ரெண்டு பாதை இருக்குது. கறாரான வழிமுறையை
நம்பி போகிற பாதை ஒன்னு. முடியறவரைக்கும் பின்பற்றிட்டு, முடியாத சமயத்துல கொஞ்சம்
சமரசமா இருந்துக்கலாம்னு நடந்து போகிற பாதை இன்னொன்னு. எந்த வழியில நடக்கப் போறோம்ங்கற
முடிவை நாமதான் எடுக்கணும். அந்த முடிவுதான் நாம யாரா இருக்கறோம்ங்கறத நமக்கே உணர்த்தும்
அம்சம். ஒரு கண்ணாடி மாதிரி”
சொன்னதையெல்லாம் திரட்டி மனசுக்குள் அசைபோடுவதுபோல சில கணங்கள்
அமைதியாக இருந்தார் நண்பர். பிறகு “எனக்குச் சரியா புரியலை. இன்னும் கொஞ்சம் விளக்கமா
சொன்னா நல்லா இருக்கும்” என்று சொன்னார். அவருடைய தடுமாற்றத்தை என்னால் புரிந்துகொள்ள
முடிந்தது.
“இங்க பாருங்க. நாம செய்யற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்குது,
இல்லையா? நாம வீட்டுக்கு அரிசிமூட்டை வாங்கிப் போடறோம். வீட்டுல புள்ளைங்க எல்லாரும்
பசியில்லாம சாப்பிடறாங்க. சில சமயங்கள்ல புது சட்டைகள் வாங்கித் தரோம். அதை ஆனந்தமா
எல்லாரும் போட்டுக்கிறாங்க. இல்லையா?”
”ஆமாம்”
“அந்த நன்மைகள், மகிழ்ச்சி, ஆனந்தம் எல்லாமே
பணத்தால விளையக்கூடிய புறவிளைவுகள், இல்லையா?”.
“ஆமாம்”
“நாம சம்பாதிக்கிற பணம் எந்த வழியில வந்ததா
இருந்தாலும் இந்த நன்மைக்கோ மகிழ்ச்சிக்கோ குறையே இருக்காது, இல்லையா?”
“ஆமாம்”
“அதே சமயத்துல, அந்தப் பணத்தை நாம கையில தொடும்போது
நம்ம மனசுக்குள்ள அது வந்த வழியைப்பத்தி ஏதாவது ஒரு எண்ணம் தோணுமா, தோணாதா?”
“கண்டிப்பா தோணும்”
“அதுக்குப் பேருதான் அகவிளைவு”
“சரி”
“ஒரு காரியத்தால புறவிளைவும் உண்டு, அகவிளைவும்
உண்டுங்கற நிலைமையில, நாம அகவிளைவைப் பத்தி எந்தக் கவலையும் படாம இருக்கமுடியுமா?”
”அது எப்படி சார்? அதுதான மனசாட்சி. மனசாட்சிக்கு
துரோகம் பண்ணிட்டு ஒரு வேலையை எப்படி செய்ய முடியும்?”
“முடியவே முடியாது. ஒருவேளை துரோகம் செஞ்சாலும்
அது முள்மாதிரி என்னென்னைக்கும் குத்திகிட்டே இருக்கும், இல்லையா?”
“உண்மைதான் சார்”
“தன்மானம் கூட ஒரு வகையில மனசாட்சி மாதிரிதான். தன்மானம் கெட்டு வாழறதுங்கறது ஒரு வேதனை. அதுவும்
ஒரு முள் மாதிரிதான். தன்மானத்தோடு உறுதியா நிக்கறதால நமக்கு சில இழப்புகள் வரலாம்.
சில சமயங்கள்ல மரணம் கூட நேரலாம். அந்த சேர அரசன் கணைக்கால் இரும்பொறை செத்தமாதிரி
சாகறதுக்கும் வாய்ப்புண்டு. ஆனா, அதனால மனசுக்குக் கிடைக்கக்கூடிய நிம்மதி இருக்குதே,
அது கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்னு. உயிரைவிட அந்த நிம்மதி போதும்ன்னு நெனச்சதாலதான்
அந்தச் சேர மன்னன் உயிரை விட்டான். இப்ப பாட்டு புரியுதான்னு படிச்சிப் பாருங்க”
தலையசைத்தபடியே நண்பர் மீண்டும் அந்தப் பாட்டைப்
படித்துவிட்டு தெளிவடைந்ததன் அடையாளமாகப் புன்னகை புரிந்தார்.
“இந்தப் பிரச்சினையை ஏதோ சங்ககாலத்து சங்கதின்னு
நெனச்சிக்க வேணாம். இன்னைக்கும் எல்லாருடைய வாழ்க்கையிலயும் உண்டாகக்கூடிய பிரச்சினைதான்
அது. அதைப்பத்திய ஏராளமான சிறுகதைகளை நம்ம எழுத்தாளர்கள் எழுதியிருக்காங்க”
“கதையா? ஒன்னு ரெண்டு சொல்லுங்க. புரிஞ்சிக்க இன்னும் வசதியா இருக்கும்”
நண்பர் கதை கேட்கும் ஆர்வத்துடன் என் முகத்தைப்
பார்க்கத் தொடங்கினார். அவருடைய பிடியிலிருந்து தப்பமுடியாது என்று தோன்றியது. மேலும்
அவ்வளவு தொலைவு வரைக்கும் அழைத்துவந்துவிட்டவரை கரை சேர்ப்பது நம் கடமை என்றும் தோன்றியது.
“உங்களுக்கு எழுத்தாளர் சுஜாதா தெரியுமில்லையா?
இந்தத் தன்மானப் பின்னணியில அவர் ஒரு அற்புதமான கதையை எழுதியிருக்காரு”
சுஜாதா என்ற பெயரைக் கேட்டதும் அவர் உற்சாகம்
கொண்டார். “சொல்லுங்க, சொல்லுங்க” என்று அவசரப்படுத்தினார்.
“அந்தக் கதையுடைய பேரு காணிக்கை. ஸ்ரீரங்கம்
கோவில்ல சுற்றுலா வரக்கூடிய ஆட்களுக்கு கோவிலை சுத்திக் காட்டி, ஒவ்வொன்னைப் பத்தியும்
விவரம் சொல்லி, சாமி தரிசனம் செய்யவச்சி அனுப்பிவைக்கிற வேலை செய்யறவர். அந்த ஆட்கள்
கொடுக்கிற ஒன்னோ ரெண்டோதான் அவருடைய வருமானம். வீட்டுல பொண்டாட்டிக்கும் நாலு புள்ளைங்களுக்கும்
அந்த வருமானத்துலதான் சோறு போடணும். அப்படி ஒரு வாழ்க்கை அவருக்கு. ஏராளமான ஏத்த இறக்கம்
இருந்தாலும் இருபது முப்பது வருஷமா அவருடைய வண்டி அந்த மாதிரிதான் ஓடிட்டிருக்குது.”
“சரி”
“ஒரு குறிப்பிட்ட நாள்ல கோவில் வாசல்ல அவரு
யாராவது டூரீஸ்ட்காரங்க கிடைக்கமாட்டாங்களான்னு நிக்கறாரு. ரொம்ப நேரமா ஒருத்தரும்
கிடைக்கலை. ரெண்டுமூனு நாளாவே ஒன்னும் சரியா அமையலை. இன்னைக்கும் அந்த மாதிரி அமைஞ்சா,
உயிரோடு இருக்கறதுல அர்த்தமே இல்லைன்னு ஆயிடும்னு நினைச்சி மனவேதனைப்படறாரு. அந்த ரங்கநாதப்
பெருமாள்தான் யார் மூலமாவது பணம் கிடைக்க ஏற்பாடு செய்யணும்னு மனசுக்குள்ளயே உருக்கமா
வேண்டிக்கிறார்.”
“அப்புறம்?”
“அந்த நேரத்துல ஒரு கார் வந்து அவருக்குப்
பக்கத்துல நிக்குது. அவர் ஓடிப் போய் அவுங்கள வாங்க வாங்கன்னு கூப்புடறாரு. கார்லேர்ந்து
ரெண்டு பேரு எறங்கி வராங்க. ஆனா அந்த ஆளுங்க அவரை லட்சியம் பண்ணவே இல்லை. அவருதான்
நான் உங்களுக்கு சுத்திக் காட்டறேன் சார்னு அவங்களுக்குப் பின்னாலயே ஓடறாரு.”
“ஐயோ”
“அந்த ரெண்டு பேரும் அவரைப் பார்த்து ஐயோ பாவம்ன்னு
நெனச்சி, கூடவே வந்து காட்டுன்னு சொல்றாங்க. அவுங்களுக்கு கோவிலையோ, சாமியையோ, மண்டபத்தையோ
அலங்காரங்களையோ, கலைச்சிற்பங்களையோ பார்க்கறதுல கொஞ்சம் கூட ஆர்வமில்லை. கொஞ்சம் அப்படி
இப்படி உடலுறுப்புகள் தெரியறமாதிரியான பெண்சிற்பங்களை மட்டும்தான் அவுங்க ஆர்வத்தோடு
பார்க்கறாங்க. பேச்சு அப்படியே நடனம், தேவதாசிகள்னு மாறி அந்தத் தொழில் செய்யற பெண்கள்
இருக்கற இடம் தெரியுமான்னு கேக்கற அளவுக்குப் போகுது. தெரியாதுன்னு சொன்னாலும், அவுங்க
துருவித்துருவிக் கேக்கறாங்க. அவருக்கு ஒரு மாதிரி சீன்னு போயிடுது.”
“சரி”
”அப்ப அவருடைய பொண்ணு கிழிசல் ஜாக்கெட்டோட
அவரைத் தேடி கோவில் வாசலுக்கு வருது. ரேஷன் கோதுமை வாங்கறதுக்கு காசு இருந்தா கொடுன்னு
கேக்குது. போ வீட்டுக்கு நான் அப்பறமா வரேன்னு அந்தப் பொண்ண திட்டி அனுப்பிவைக்கறாரு அவரு. அந்த ரெண்டு டூரீஸ்ட் ஆளுங்களும்
அந்தப் பொண்ண பார்த்துட்டே நிக்கறாங்க. யாருய்யா அது, உன் பொண்ணான்னு கேக்கறாங்க. அவரை
பக்கத்துல அழைச்சி ஒரு பத்து ரூபா நோட்ட எடுத்துக் குடுத்துட்டு கெளம்பறாங்க. அவருடைய
வேலைக்கு ஒரு ரூபா கெடைச்சாலே அதிகம். ஆனா அவுங்க பத்து ரூபா கொடுத்துட்டு போறாங்க.
என்ன செய்யறதுன்னு புரியாம கொழப்பத்தோடு அங்கயே நிக்கறாரு அவரு.”
“இதுல என்ன குழப்பம்? நாலு நாளா வருமானம் இல்லாதவரு.
நாலு நாள் வருமானத்தையும் யார் வழியாவோ பெருமாள் கிடைக்க வச்சிருக்காருன்னு சந்தோஷமா
வாங்கிட்டு போக வேண்டிதுதான்”
நண்பருடைய அவசரத்தைப் பார்த்தபோது எனக்குச்
சிரிப்பாக இருந்தது. ”நாமா இருந்தா, அப்படித்தான் செஞ்சிருப்போமோ என்னமோ?. ஆனா அவரு
அப்படி செய்யலை. பெருமாளே, நீதான் இந்தப் பணத்தை எனக்குக் கிடைக்கிறமாதிரி செஞ்சே,
உனக்கே இதைக் கொடுத்துடறேன்னு கோவில் உண்டியல்ல காணிக்கையா போட்டுடறாரு” என்றேன்.
”இது என்ன? பைத்தியக்காரத்தனமா இருக்குதே”
“அந்த ஆளுங்க அந்தப் பணத்தை அவருடைய ஒத்தாசைக்காகவோ
தகவல் அறிவுக்காகவோ கொடுக்கலை. கோபிகையர்களுடைய சிற்பங்களை வெறும் அங்கங்களால் ஆன உடலா
பார்த்தவங்க அவுங்க. கிழிஞ்ச ஜாக்கெட்டோடு வந்த அவருடைய பொண்ணையும் அதே கண்ணோட்டத்தோடுதான்
பார்த்தாங்க. அதையெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்தவருக்கு தனக்குக் கொடுக்கப்பட்ட
பணத்தை வெறும் சர்வீஸ் சார்ஜ்தான்னு நெனக்கத் தோணுமா? அதுவும் ஒரு ரூபா வேலைக்கு ஒருத்தன்
பத்து ரூபாய் கொடுக்கறான்னு சொன்னா, ஒரு சந்தேகம் வருமா வராதா?”
நண்பர் ஒரு கணம் என் கண்களையே பார்த்தார்.
பிறகு தலையசைத்தபடி “ஆமாம். வரும்” என்றார்.
“அவரு ஏழைதான். பணத்துக்கு வழி இல்லாதவருதான்.
ஆனா தான் பெத்த பொண்ண ஒருத்தன் விரசமான எண்ணங்களோடு பார்த்துட்டு கொடுக்கிற பணத்தை
வாங்கினா, அது அவர் தன்மானத்துக்கே இழுக்கு இல்லையா?”
“ஆமாம்.”
“அதனாலதான் அந்தப் பணம் தனக்கு வேணாம்னு எடுத்தும்
போயி கோவில் உண்டியல்ல போட்டுட்டு வந்துடறாரு அவரு”
“அதெல்லாம் சரி சார். வாங்கி உண்டியல்ல போடறதுக்குப்
பதிலா அந்த ஆளுங்ககிட்டேர்ந்து அந்தப் பணத்தை வாங்காமயே இருந்திருக்கலாம், இல்லையா?”
“உண்மைதான். வாங்காமயே இருந்திருக்கலாம். ஆனா நாம எல்லாருமே
ஏதோ ஒரு வகையில சாதாரண நடுத்தர வர்க்கத்து தொடைநடுங்கிகள்தானே? எல்லாமே கொஞ்சம் லேட்டாதான்
நம்ம மண்டைக்குப் புரியும். புரியாத சமயத்துல வாங்கிட்டாரு. புரிஞ்சதும் உண்டியல்ல
காணிக்கையா போட்டுட்டாரு. பணம் நஷ்டப்பட்டாலும் அவருடைய மனசு பாரம் எதுவும் இல்லாம
நிம்மதியா இருந்தது. தன் தன்மானத்தை காசுக்காக இழக்கலைங்கற தெளிவும் இருந்தது. புற
நெருக்கடிகள் இருந்தாலும் அகநெருக்கடிகள் இல்லாத ஒரு வாழ்க்கையை தன்மான உணர்வு கொடுக்குது.
இப்ப சொல்லுங்க, தன்மானம் பெரிசா, இல்லையா?”
”சந்தேகமே இல்லை. தன்மானம்தான் பெரிசு”
“விமோசனம்னு இன்னொரு கதையும் ஞாபகத்துக்கு
வருது. அது அசோகமித்திரன் கதை. அதுலயும் இந்தத் தன்மானப் பிரச்சினைதான் மையம்”
“அது என்ன கதை, சொல்லுங்க?”
“அது ஒரு புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்கற
கதை. சரஸ்வதின்னு ஒரு பொண்ணு இருக்கா. அவளுடைய புருஷன் மகாசோம்பேறி. வீட்டுக்கு சம்பாதிச்சி
கொடுக்கணும்ங்கற எண்ணமே இல்லாதவன். ஆனா வீட்டுல இருக்கற பொம்பளை ஒவ்வொரு வேளையும் வக்கணையா
சமைச்சி வச்சிருக்கணும்னு நெனைக்கறவன். அவுங்களுக்கு ஒரு கைக்குழந்தையும் இருக்குது”
“சரி”
“ஒரு குடும்பத்துல குடும்பத்தலைவனா இருக்கறவன்
உழைச்சி சம்பாதிச்சி பணம் கொண்டு வந்து கொடுத்தாதான் அந்தக் குடும்பத்துக்கு விமோசனம்
பொறக்கும். உருப்படும். அந்த அமைப்பு செயல்படாத குடும்பத்துக்கு விமோசனமே கிடையாது.
கடவுளாலயும் அந்தக் குடும்பத்தைக் காப்பாத்த முடியாது”
“நீங்க சொல்றது நூத்துல ஒரு வார்த்தை”
“அசோகமித்திரன் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை
அந்தக் கதையில காட்டறாரு. சரஸ்வதி தங்கமான பொண்ணு. புருஷன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு
நடக்கணும்னு நெனைக்கறவள். ஆனா புருஷன் ஊக்கமான ஆள் கிடையாது. சோம்பேறி, கர்வம், அலட்சியம்
எல்லாம் இருக்கற ஆளு.”
“சரி”
“ஒருநாள் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும்
குழந்தையை தூக்கிகிட்டு கஷ்டகாலத்துலேர்ந்து விமோசனம் கிடைக்கணும்னு ஊருல புதுசா வந்திருக்கிற
சாமியாரைப் பார்த்துட்டு வராங்க. ராத்திரி
வீட்டுக்குத் திரும்பறதுக்கு லேட்டாயிடுது. வீட்டுக்கு வந்ததுமே சாப்பாடு போடுன்னு
சொல்றான் புருஷன். மதியம் ஆக்கி வச்ச சாப்பாட்ட எடுத்து வைக்கிறா சரஸ்வதி. அப்பளம்
இல்லையா, பொரியல் இல்லையான்னு சத்தம் போடறான் அவன். எல்லா பக்கத்துலயும் கடன் வாங்கியாச்சுன்னு
அவ சொல்றா. எதையோ முணுமுணுத்துட்டு அவன் சாப்ட்டுட்டு படுத்துக்கறான். நடுராத்திரியில
தூக்கத்துலேர்ந்து குழந்தை எழுந்து பாலுக்கு அழுவுது. அப்பதான் பால்புட்டியை சாமியார்
வீட்டுல வச்சிட்டு வந்த விஷயம் அவளுக்கு ஞாபகத்துக்கு வருது. புட்டி இல்லாம குழந்தை
பால் குடிக்கமாட்டுது. வீல்வீல்னு சத்தமா அழுது. புருஷன்காரன் எழுந்து அவ முதுவுலயும்
தலையிலயும் அடிக்கிறான். அவளும் ரொம்ப நேரம் அந்த அடியையும் வேதனையையும் தாங்கிக்கறா.
எல்லாத்துக்கும் அவனே காரணமா இருந்துட்டு, மத்தவங்களை பார்த்து குறை சொல்றானேங்கற கடுப்புல
அவ தன்மான உணர்ச்சியோடு சட்டுனு நிமுந்து நிக்கிறா. ”ம்?” னு ஒரே ஒரு வார்த்தை அவனைப்
பார்த்து அவ வேகமா சொல்றா. அந்த வேகம், அந்தப் பார்வை, அந்த அழுத்தம் அந்த நிமிஷத்துல
அவனை என்னமோ செஞ்சிடுது. சட்டுனு அடங்கி, அப்படியே பம்மிப் பின்வாங்கி தூங்கப் போயிடறான்.
அடுத்தநாள் அவளோடு பேச்சுவார்த்தையை நிறுத்திக்கறான். அதுக்கு அடுத்தநாள் வீட்டுப்
பக்கம் வராம, எங்கயோ போயிடறான். தன் வாழ்க்கை
இப்படி ஆயிடுச்சே, இதுக்கு ஒரு விமோசனம் இல்லையான்னு கேக்கறதுக்கு அந்தச் சாமியார்
வீட்டுக்கு வழி விசாரிச்சிட்டு போய் பார்த்துட்டு வரா சரஸ்வதி. அவ நெனைச்ச மாதிரி எதுவும்
சரியா அமையலை. முதல் நாள் தொலைச்சிட்டு வந்த பால்புட்டி மட்டும் கிடைக்குது. அது ஒன்னுதான்
அந்தப் பயணத்துல அவளுக்குக் கிடைச்ச லாபம். அன்னைக்கு ராத்திரியும் அவ புருஷன் வீட்டுக்கு
வரலை, அதுக்கப்புறம் அவன் என்னைக்குமே வீட்டுக்கு வரலைங்கற குறிப்போடு அந்தக் கதையை
அசோகமித்திரன் அழகா முடிச்சிருக்காரு. அவ விரும்பன விமோசனம் வேற வழியில அவளுக்குக்
கிடைச்சிடுது”
“நல்ல கதைதான். ஆனா நீங்க சொல்ற தன்மானத்துக்கும்
விமோசனத்துக்கும் என்ன தொடர்புன்னு மட்டும்தான் புரியலை.”
“ஆரம்பத்துல தன்னுடைய வாழ்க்கைப்பிரச்சினைக்கு
விமோசனம் வெளியில இருக்குதுன்னு நம்பற நடுத்தரக்
குடும்பத்துப் பொண்ணா அவ இருக்கறா. அதனாலதான் புருஷன்காரன் அடிச்சா ஒரு வார்த்தையும்
பேசாம அவ எல்லா அடிகளையும் வாங்கிக்கிறா. ஏதோ ஒரு நேரத்துல அவளுக்குள்ள ஒரு தன்மான
எண்ணம் நெருப்பு மாதிரி வெளிப்பட்டுடுது. அதனாலதான் அடிய மறந்து நிமுந்து பார்த்து
”ஹ்ஹ்ம்?”ன்னு சத்தம் கொடுக்கிறா. அந்தக் குரல் முன்னால அவனால நிக்கமுடியலை. ஆடிப்
போயிடறான். ஒருநாள் கழிச்சி வீட்டைவிட்டே போயிடறான். அதுவரைக்கும் வெளியேயிருந்து வரும்ன்னு
அவ நினைச்சிட்டிருந்த விமோசனம் தனக்குத்தானே கட்டமைச்சிக்க வேண்டிய ஒன்னுன்னு அவளுக்குப்
புரிஞ்சிடுது. தன்மானத்தால அவ அடையக்கூடிய விடுதலை எப்படிப்பட்டதுன்னு ஒரு நிமிஷம்
அவளுக்குப் புரிஞ்சிடுது. ஆனால் சுஜாதா தன்னுடைய கதையில வெளிப்படையா சொன்ன அளவுக்கு
அசோகமித்திரன் அந்தக் கதையில வெளிப்படையா பேசலை. ஒரு வாசகனே நுட்பமா உணர்ந்துக்கற அளவுக்கு
விவரிச்சி விட்டுடறாரு.”
”ரெண்டுமே நல்ல கதைகள் சார். தன்மானத்தால கிடைக்கக்கூடிய
விடுதலையும் நிம்மதியும் எப்படிப்பட்டதுங்கற புரிஞ்சிக்க நல்ல எடுத்துக்காட்டு”
“சொல்லிட்டே போவலாம். இன்னும் நெறய கதைகள்
இருக்குது.”
“சரி சரி. நீங்களே எல்லாத்தையும் சொல்லிடாதீங்க
சார். கிடைக்கிறதை தேடிப் படிச்சிட்டு நான் மறுபடியும் உங்களை வந்து பாக்கறேன்”
விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார் நண்பர். வாசல்
வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவிட்டுத் திரும்பினேன்.
(சங்கு
– காலாண்டிதழ் – ஜூலை 2025)