1980 ஆம் ஆண்டில் புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் டெலிபோன் ஆபரேட்டராக நான் பணியில் சேர்ந்தேன். இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கும் அந்த நிலையத்தில் பல்வேறு நேரப் பிரிவுகளில் வந்து பணியாற்றுகிறவர்களாக நூறு பேருக்கும் மேல் வேலை செய்துவந்தனர். தொலைபேசி நிலைய வளாகத்திலேயே, இரவு நேரப் பிரிவில் வேலை செய்ய வந்தவர்கள் படுத்துறங்கி ஓய்வெடுத்துவிட்டுச் செல்வதற்கும் தொலைவான இடங்களிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வருபவர்கள் இளைப்பாறுவதற்கும் வசதியாக ஒரு பெரிய ஓய்வறையும் அதற்கு அருகிலேயே ஒரு படிப்பறையுடன் கூடிய பொழுதுபோக்கு அறையும் இருந்தன.
அந்தப் படிப்பறையில் ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளும் பிற
புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன. எல்லா அரசியல் கருத்துத் தரப்பினருக்குமான செய்தித்தாட்களும் இருந்தன. உட்கார்ந்து படிக்க
வசதியாக நாற்காலிகளும் மேசையும் உண்டு.
தொலைபேசி நிலையத்துக்குள் செல்வதற்கு ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு
முன்னால் படிப்பறைக்கு வந்து புத்தகங்களைப் படிப்பதும் வேலை முடிந்த பிறகு கூடுதலான
நேரம் தங்கி படித்துவிட்டுப் புறப்படுவதும் என் தினசரிப்பழக்கம். பல நேரங்களில் விடுமுறை
நாட்களில் கூட புத்தகங்களை வாசிப்பதற்காகவென்றே வீட்டிலிருந்து புறப்பட்டு தொலைபேசி
நிலையத்துக்கு வந்துவிடுவேன். அந்தப் படிப்பறையில்தான் எனக்கு பல நண்பர்களின் நட்பு
கிடைத்தது.
அந்நண்பர்களில் இருவரைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.
ஒருவர் பெயர் மகேந்திரன். நான் வாசிக்கும் வேகத்தைப் பார்த்துவிட்டு, தொழிற்சங்கக்கூட்டம்
தொடர்பாக எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு விற்கும் புதிய புத்தகங்களை வாங்கிவந்து
“நீதான் படிக்கிற ஆளாச்சே. இந்தா படி” என்று புன்னகையோடு கொடுத்துவிட்டுச் சென்ற அவரை
நான் ஒருபோதும் மறக்கமுடியாது. இடதுசாரிச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்
அவர். ஆயினும் அவர் ஒரு சகோதரனிடம் பழகுவதுபோல தோளில் கைவைத்து என்னோடு பேசிப் பழகினார்.
அப்போது நான் மரபு வடிவத்தில் அமைந்த பாடல்களை அதிக அளவிலும் வசனகவிதை அமைப்பிலான கவிதைகளை
குறைவான அளவிலும் மாறிமாறி எழுதிவந்தேன். அதனாலேயே அவர் பல நேரங்களில் என்னைச் செல்லமாக
“கவிஞரே, கவிஞரே” என்று அழைப்பார். அவர் வழியாகத்தான் எனக்கு மதியழகன் என்ற மற்றொரு
நண்பர் கிடைத்தார். “இவரும் கவிஞர்தான். கவிஞரும் கவிஞரும் நல்லா ஒட்டிக்குங்க” என்று
புன்னகைத்தபடி அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றார் மகேந்திரன்.
நான் எழுதிய கவிதைகளையெல்லாம் வாங்கிப் படித்த மதியழகன் அடுத்தநாள்
தன் கவிதைகளைக் கொண்டுவந்து கொடுத்தார். பல நாட்களில் நாங்கள் இருவரும் இரவு வேளைப்
பணியில் ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பு அமைந்தது. அப்போதெல்லாம் நேரம் போவது தெரியாமல்
கவிதைகளைக் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே
இருப்போம். கசடதபற, வானம்பாடி, தாமரை, கொல்லிப்பாவை, யாத்ரா என பல இதழ்களின் தொகுதிகளைக்
கொண்டுவந்து அவர்தான் என்னிடம் படிப்பதற்குக் கொடுத்தார். அவற்றையெல்லாம் அப்போதுதான்
நான் முதன்முதலாகப் பார்த்தேன். எல்லாமே ஏற்கனவே வந்த இதழ்களை இணைத்துத் தைத்து பைண்டு
செய்யப்பட்ட தொகுதிகள். பல ஆண்டு கால வாசிப்பின் அடையாளமாக அவர் அத்தொகுதிகளைப் பாதுகாத்து
வைத்திருந்தார். “பத்திரம், பத்திரம்” என சொன்னபடிதான் அவர் ஒவ்வொருமுறையும் அவற்றை
என்னிடம் கொடுப்பார். அவ்விதழ்களில் எழுதிய படைப்பாளிகள் பலரையும் படிப்பதற்கு மதியழகனுடைய
அறிமுகம் எனக்கு மிகவும் துணையாக அமைந்தது.
ஒருநாள் மதியழகன் இரவுப்பணிக்கு வந்தபோது கையடக்கமான ஒரு புத்தகத்தை
என்னிடம் கொடுத்தார். அதன் பெயர் வெள்ளம். “என்னங்க சார் இது. பாஸ்போர்ட்டைவிட சின்ன
அளவுல இருக்குது?” என்று கேட்டுக்கொண்டே அப்புத்தகத்தை வாங்கினேன். ”அளவுலதான் சின்னது.
ஆனால் கவிதைத்தரத்தில ரொம்ப முக்கியமானது. படிச்சிப் பாருங்க” என்றார். அட்டையில் கலாப்ரியா
என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தேன். அதைப் படித்ததுமே “யாரு சார்? பெண் கவிஞரா?”
என்று சட்டென்று கேட்டுவிட்டேன். அவர் அவசரமாகத் தலையசைத்து மறுத்தபடி “இல்லை இல்லை.
ஆண் கவிஞர்தான். அந்தப் பேருல எழுதறாரு. இப்ப சுஜாதா எழுதலையா? அந்த மாதிரி எழுதறாருன்னு
வச்சிக்குங்களேன்” என்றார். என் தவறுக்கு நாணியபடி
அந்தப் புத்தகத்தை அப்போதே பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
வடிவ அளவில் எல்லாமே சின்னச்சின்ன கவிதைகள். முப்பது, நாற்பது
கவிதைகள்தான் இருக்கும். ஒருபக்கம் தொலைபேசி வழியாக அழைக்கும் வாடிக்கையாளர்களுக்குத்
தேவையான சேவையை வழங்கியபடியே மேசையின் ஓரமாக அப்புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு
படித்துமுடித்துவிட்டேன்.
தேநீர் இடைவேளை நேரத்தில் வெளியே வந்ததும் “படிச்சிட்டேன் சார்”
என்றபடி தொகுதியை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். “அவ்ளோ சீக்கிரமா படிச்சிட்டீங்களா?”
என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியபடி “எப்படி இருக்குது?” என்று கேட்டார். “ரொம்ப புடிச்சிருக்குது
சார். ஒரு போட்டோ ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்த மாதிரி இருக்குது சார்” என்றேன். சட்டென
நான் சொன்ன அந்த உவமை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. “என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க?”
என்று தன்னை மீறி மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ச்சியில் புன்னகைத்தார். “புதுசா எழுத
வந்திருக்காரு. பிச்சமூர்த்தி, பிரமிள், நகுலன், பசுவய்யா மாதிரி இல்லாம ஒரு புது வடிவத்துல
கவிதைகளை எழுதறதுக்கு முயற்சி செய்றாரு. இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்குது” என்றார்.
தொடர்ந்து அவருடைய கவிதைகளை முன்வைத்து உரையாடியபடியே தேநீர் அருந்திவிட்டு, மீண்டும்
நிலையத்துக்குள் சென்றுவிட்டோம்.
நான் ஒருபக்கம் பணியில் மூழ்கியிருந்தாலும், அத்தொகுதியில் சற்றுமுன்
படித்து நெஞ்சிலேயே தங்கிவிட்ட இரண்டு கவிதைகளின் காட்சிகளை மீண்டும் மீண்டும் மனக்கண்
முன்னால் கொண்டுவந்து நிறுத்திவைத்து அசைபோட்டபடி இருந்தேன். தற்செயலாக இரண்டுமே குருவிகள்
தொடர்பான கவிதைகள்.
கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச் சாகும்வரை
என்பது
ஒரு கவிதை
அந்திக் கருக்கலில்
இந்தத் திசைதவறிய பெண்பறவை
தன் கூட்டுக்காய்
குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கு அதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கு அதன் பாஷை புரியவில்லை
என்பது
இன்னொரு கவிதை.
இறப்பின் சாட்சியாக ஒரு கவிதை. இயலாமையின் வெளிப்பாடாக இன்னொரு
கவிதை. இவ்விரு கவிதைகளையும் நான் படித்து ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.
ஆயினும், இன்றும் ஒரு கனவு பொய்த்துப்போய் நிற்கும் தருணத்திலும் இறப்பைத் தரிசிக்கும்
தருணத்திலும் இயலாமையில் ஒடுங்கி நிற்கும் தருணத்திலும் இக்கவிதைகளையும் அப்பாவிகளான
அக்குருவிகளையும் நினைத்துக்கொள்கிறேன். அந்த அளவுக்கு அந்தக் காட்சிகள் என் மனத்தில்
ஆழமாக பதிந்திருக்கின்றன.
சில நாட்களுக்குப் பிறகு நண்பர் மதியழகன் தீர்த்த யாத்திரை என்னும்
மற்றொரு தொகுப்பைக் கொண்டுவந்து கொடுத்தார். அந்தத் தலைப்பைப் பார்த்துவிட்டு ”பயணக்கட்டுரைப்
புத்தகமா?” என்று அவசரமாகக் கேட்டுவிட்டேன்.
மதியழகன் புன்னகைத்துக்கொண்டே “இல்லை இல்லை. கவிதைப்புத்தகம்தான். படிச்சிப் பாருங்க”
என்றார். அதற்குப் பிறகுதான் நான் அட்டையில் இருந்த பெயரைப் பார்த்தேன். உடனே அவசரத்தோடும்
ஆவலோடும் “ஆகா, கலாப்ரியாவா? அந்தக் குருவி
கவிஞர்தானே? கொடுங்க கொடுங்க” என்று கைநீட்டிப் பெற்றுக்கொண்டேன்.
அத்தொகுதியில் ஒவ்வொரு கவிதையும் புதுவிதமாக இருந்தது. காலம்காலமாக
ஒரு சொல்லுக்கு ஒரு தளம் சார்ந்துமட்டுமே நிலவிவந்த பொருளை, இன்னொரு தளத்தை நோக்கிச்
செலுத்தி, இன்னொருவிதமான பொருளை நிலைநிறுத்தும் விதமாக இருந்தது. திகைக்கவைத்த அந்த
அதிர்ச்சிதான் அக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது.
தீர்த்தயாத்திரை என்னும் தலைப்புக்கவிதையே அந்தப் பாணியில்தான்
இருந்தது. நாடெங்கும் வெவ்வேறு இடங்களில் உள்ள புனிதத்தலங்களை நாடிச் செல்லும் ஒரு
பயணத்தைத்தான் ஒவ்வொருவரும் தீர்த்தயாத்திரை என்று சொல்வது வழக்கம். ஆனால் அந்தத் தலைப்பைக்
கொண்ட கவிதையில், கல்லடி பட்ட காலில்லாத ஒரு நாய் தாகத்தைத் தணித்துக்கொள்ளவும் பசியைத்
தணித்துக்கொள்ளவும் ஒவ்வொரு இடமாக நாடிச் செல்லும் காட்சியை கலாப்ரியா விவரித்திருந்தார்.
ஒவ்வொரு இடத்திலும் அந்த நாய்க்கு தோல்வியே கிடைக்கிறது. அதன் பசியறிந்து ஒரு வாய் உணவு கொடுப்பவர்கள் யாருமில்லை.
ஏமாற்றத்தில் துவண்டுபோனாலும் நம்பிக்கையோடு மீண்டும் மற்றொரு இடத்தை நாடிச் செல்கிறது
அந்த நாய். அதன் பயணத்தைத்தான் அவர் தீர்த்தயாத்திரை என்று குறிப்பிட்டிருந்தார். மரபான
முறையில் அமைதிக்காகவும் புண்ணியத்துக்காகவுமான பயணம் என்னும் பொருளையுடைய சொல்லின் மீது, பசியையும் தாகத்தையும் தணித்துக்கொள்வதற்கான
பயணத்தை கலாப்ரியா ஏற்றிவைத்திருந்தார்.
அத்தொகுதியில் புதிய பொருளுக்குரியதாக மாற்றமடைந்த இன்னொரு சொல்
எம்பாவாய். பக்தி யுகத்துக் கவிஞர் ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இடம்பெறும் சொல்
எம்பாவாய். மார்கழி மாதம் பாவை நோன்பிருக்கும் இளம்பெண்களை அதிகாலையில் எழுப்பி நீராடவைத்து
எம்பெருமானை வழிபட வைப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறாள் ஆண்டாள். தோழியரைக் குறித்த
அவளுடைய அன்புவிளிதான் எம்பாவாய் என்னும் சொல். பக்திவழிக்கே உரிய அச்சொல்லை கலாப்ரியா
தன் கவிதையில் சமகால சமூகத்தில் எவ்விதமான வசதிகளுமின்றி குடிசைகளில் வசிக்கும் பெண்களுக்குரியதாக
திருப்பிவைக்கிறார். அதிகாலைக் கருக்கலில் ஆள் நடமாட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ஊருக்கு
வெளியே சென்று காலைக்கடன்களைக் கழித்துவிட்டு வருவதற்காகச் செல்லும் நகரத்துக் குடிசைவாழ்
பெண்களின் கூட்டத்தைத்தான் அவர் எம்பாவாய் என்று அழைக்கிறார். ஆன்மிகத்துக்கு மட்டுமே
உரியதாக இருந்த ஒரு சொல்லை, கலாப்ரியா ஒரு சமூகப்பிரச்சினையை எடுத்துரைப்பதற்குப் பயன்படுத்துகிறார்.
தொகுதி முழுக்க இவ்விதமாக எனக்குப் பிடித்த பல காட்சிகளும் சொற்களும்
நிறைந்திருந்தன. ஒவ்வொரு கவிதையும் சொற்சித்திரம் என்பதாலேயே இத்தனை ஆண்டுகளுக்குப்
பிறகும் அவை நினைவிலேயே தங்கியிருக்கின்றன. மதியழகனும் நானும் அவற்றைப்பற்றி வெகுநேரம்
பேசிக்கொண்டிருந்தோம்.
மதியழகன் தொடர்ச்சியாக கவிதைத்தொகுதிகளைத் தேடி வாங்கிப் படிக்கும்
பழக்கம் கொண்டிருந்தார். தான் படித்த ஒவ்வொரு புத்தகத்தையும் என்னிடம் கொடுத்து படிக்கச்
சொல்வார். பிறகு அதைத் தொடர்ந்து அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ நாங்கள் இருவருமே எங்களுக்குப்
பிடித்த கவிதைகளை முன்வைத்துப் பேசுவோம்.
நான் அந்தத் தொலைபேசி நிலையத்தில் ஓராண்டு காலம் மட்டுமே வேலை
செய்தேன். அதற்குப் பிறகு கர்நாடக மாநிலத் தொலைபேசித் துறை வழியாக நான் இளநிலை பொறியாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டதால், எல்லோரையும் விட்டுப் பிரிந்து இடம் மாறிச் சென்றுவிட்டேன்.
மெல்ல மெல்ல என் ஆர்வம் மரபுவழிப் பாடல்களிலிருந்து நவீன கவிதைகளின் திசையிலும் புனைகதைகளின்
திசையிலும் திரும்பியது.
ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்தபோது க்ரியா பதிப்பகத்தில்
விற்பனைக்கு வைத்திருந்த பல கவிதைத்தொகுதிகளையும்
சிறுகதைத்தொகுதிகளையும் வாங்கிவந்து ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். அன்று
வாங்கிவந்த தொகுதிகளில் ஒன்று கலாப்ரியாவின் எட்டயபுரம். அப்பெயரைப் பார்த்ததுமே நானும்
மதியழகனும் சேர்ந்து படித்த தொகுதிகளின் பெயர்கள் நினைவுக்கு வந்துவிட்டன. அது ஒரு குறுங்காவியம். வாழ்வில் தடுமாறாமல் காலூன்றி
நின்றுகொள்ள ஒரு பிடிமானத்தைத் தேடி அலையும் ஒரு சராசரி இந்தியனின் வேதனையான வாழ்க்கைச்
சித்திரத்தையே அவர் அத்தலைப்பில் நீள்கவிதையாக எழுதியிருந்தார். கிட்டத்தட்ட தீர்த்தயாத்திரையின்
இன்னொரு பரிமாணமாக அது உருவாகியிருந்தது.
அச்சமயத்தில்தான் நான் என்னுடைய முதல் சிறுகதையை எழுதி முடித்தேன்.
தீபம், கணையாழி இதழ்களில் என்னுடைய சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. அப்பிரசுரம் என்னுடைய
எழுத்தார்வத்தை மேலும் மேலும் வளர்த்தன. தமிழில்
அப்போது வெளிவந்துகொண்டிருந்த எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் சந்தா செலுத்தி அஞ்சலில்
வரவழைத்துப் படித்தேன். சமகால இலக்கியச்சூழலை அறிந்துகொள்வதற்கு எனக்கு உதவியாக இருந்தது.
கலாப்ரியாவின் பெயரை எந்தப் பத்திரிகையில் பார்த்தாலும் உடனே
அவர் எழுதியிருக்கும் கவிதையை உடனுக்குடன் படித்துவிடுவேன். என்னுடைய பிரியத்துக்குரிய
கவிஞராக அவர் இருந்தார். அவரையும் அவருடைய கவிதைகளையும் நான் அறிந்துவைத்திருந்தேன்
என்றபோதும், அவரை நான் 1998இல் நடைபெற்ற குற்றாலம் பட்டறையில்தான் முதன்முதலாகச் சந்தித்தேன்.
பட்டறை தொடர்பான அறிவிப்பு வந்ததுமே என் வருகையை
அவருக்குக் கடிதம் வழியாகத் தெரிவித்தேன். நான் என்னுடைய மனைவியோடும் மகனோடும் சென்றிருந்தேன்.
என் மகனுக்கு அப்போது பத்து வயது. கலாப்ரியா தன் பிள்ளைகளோடு வந்திருந்தார். நண்பர்
ஜெயமோகனும் தன் மனைவியோடும் மகனோடும் வந்திருந்தார். தேவதேவனும் தன் மகனோடு வந்திருந்தார்.
அப்போது நடைபெற்ற எல்லாப் பட்டறைகளிலும் நாங்கள் அனைவரும் குடும்பத்தோடு
சென்று கலந்துகொள்வது ஒரு வழக்கமாகவே இருந்தது. நிகழ்ச்சிகளுக்குப் பிறகு எல்லோருமே
ஒரே இடத்தில் கூடியமர்ந்து விளையாட்டுக்கதைபேசி, சிரித்து, பாட்டு பாடி மகிழ்ந்திருப்போம்.
(சமீபத்தில் இந்தப் பிள்ளைகள் மட்டுமே ஒன்றாகக் கூடி அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை
கலாப்ரியா பகிர்ந்திருந்தார். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.) அந்தப் பட்டறையில்தான்
நான் ரவி சுப்பிரமணியன், யுவன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், அப்பாஸ் என பல படைப்பாளர்களை
முதன்முதலாகச் சந்தித்து உரையாடினேன். பட்டறை
நடைபெற்ற திவான் பங்களாவுக்கு அருகிலேயே நடந்துசெல்லும் தொலைவில் எல்.ஐ.சி. நிறுவனத்தின்
பயிற்சி நிலையமொன்று இருந்தது. பயிற்சியாளர்களுக்கென அமைந்திருந்த கேண்டீன் நிர்வாகத்தைக்
கவனித்துக்கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த, இலக்கிய ஆர்வம் கொண்ட தர்மராஜன் என்னும்
இளைஞரும் அன்றுதான் எனக்கு முதன்முதலாக அறிமுகமானார்.
2000 ஆம் ஆண்டில் டிசம்பர் இறுதி மூன்று நாட்களில் குற்றாலத்தில்
அடுத்த பட்டறை நிகழ்ந்தது. வழக்கம்போல கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமை சார்ந்த
படைப்புகளும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன. கலாப்ரியாவின் ஆலோசனையின்
பேரில் புதுமையான ஒரு முயற்சியாக, பிறமொழிக் கவிஞர்களையும் அப்பட்டறையில் நாங்கள் அழைத்துவந்து
அறிமுகப்படுத்தினோம். ஜெயமோகன் தன்னோடு சில மலையாளக்கவிஞர்களை அழைத்துவந்திருந்தார்.
அவர்களுடைய கவிதைகள் முதலில் மலையாளத்திலும் பிறகு தமிழிலும் வாசிக்கப்பட்டன. மொழிபெயர்த்த
ஜெயமோகனே ஒருங்கிணைப்பாளராக இருந்து அந்த அமர்வை வழிநடத்தினார். நான் என்னோடு இரு கன்னடக்
கவிஞர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அவர்களுடைய கவிதைகள் முதலில் கன்னடத்திலும் பிறகு
தமிழிலும் வாசிக்கப்பட்டன. அந்த அமர்வை நான் ஒருங்கிணைத்தேன். அந்த முயற்சிக்கு நல்ல
வரவேற்பு கிடைத்தது. அந்தப் பட்டறையில் சில கவிதை நூல்களும் வெளியிடப்பட்டன.
2001ஆம் ஆண்டில் நடைபெற்ற பட்டறையிலும் நான் வழக்கம்போல குடும்பத்துடன்
சென்று கலந்துகொண்டேன். பட்டறை முடிந்ததும் புறப்பட்டுவிடாமல், கூடுதலாக ஒன்றிரண்டு
நாட்கள் தங்கி குற்றாலத்தின் எல்லா அருவிகளுக்கும் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
தேனருவிப் பயணம் மறக்கமுடியாத அனுபவம். திரும்பிவந்த பிறகும் நீண்ட காலத்துக்கு அந்த
அருவிக்காட்சிகள் என் கனவில் மீண்டும் மீண்டும் வந்தபடி இருந்தன. அந்த அனுபவத்தை முன்வைத்து
ஒரு சில கவிதைகளையும் நான் எழுதினேன்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சீரான இடைவெளியில் கலாப்ரியாவின் கவிதைத்தொகுதிகள்
வந்தபடி இருந்தன. அனிச்சம், வனம் புகுதல், எல்லாம் கலந்த காற்று, உளமுற்ற தீ, தண்ணீர்ச்சிறகுகள்,
பனிக்கால ஊஞ்சல்கள் என வெளிவந்த எல்லாத் தொகுதிகளையும் நான் படித்தேன்.
அந்திமழை அச்சிதழாக வெளிவருவதற்கு முன்பாக இணைய இதழாகவே சில
ஆண்டுகள் வந்தது. அவ்விதழில் கலாப்ரியா நினைவின் தாழ்வாரங்கள் என்னும் தலைப்பில் ஒரு
தொடரை எழுதத் தொடங்கினார். அனைத்தும் தன்வரலாற்றுத்தன்மை கொண்ட கட்டுரைகள். ஒவ்வொரு
அத்தியாயத்தையும் நான் காத்திருந்து அப்போது படிப்பேன். பெரும்பாலானவை அவருடைய இளம்பருவத்து
நினைவுகள். சில பள்ளி வாழ்க்கை சார்ந்தவை.
சில குடும்பஉறவுகள் சார்ந்தவை. சில நட்பு சார்ந்தவை. அவை அனைத்தும் நினைவின் தாழ்வாரங்கள்,
உருள்பெருந்தேர் என இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்தன.
கவிதை போலவே அவருக்கு உரைநடையும் அழகாகக் கைவந்தது. ஓடும் நதி,
காற்றின் பாடல், போகின்ற பாதையெலாம் என வெவேறு தலைப்புகளில் கலாப்ரியா மேலும் சில தன்வரலாற்றுச்
சாயலைக் கொண்ட கட்டுரைகளை எழுதி நூல்களாக வெளியிட்டார். அந்த ஆற்றல் கொடுத்த நம்பிக்கையின்
உந்துதலால் நாவல்களும் எழுதினார். ஐந்தாண்டு கால இடைவெளியில் வேனல், பெயரிடப்படாத படம்,
பேரருவி, மாக்காளை என நான்கு நாவல்கள் வெளிவந்துவிட்டன.
பேரருவி நாவலை நான் மென்பிரதி வடிவிலேயே அச்சுக்குச் செல்லும்முன்பாக வாசித்தேன். அருவிக்காட்சிகளும்
தாமிரபரணி ஆற்றின் காட்சிகளும் கவித்துவத்தோடு அந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருப்பதை
என்னால் உணரமுடிந்தது. அந்த ஆற்றில் ஒரு முறை கலாப்ரியாவும் அவர் பிள்ளைகளும் என் குடும்பத்தினரும்
நாங்கள் படகில் பயணம் செய்ததையும் வெகுதொலைவில் அருவி விழும் புள்ளி வரைக்கும் சென்று
பார்த்திருந்துவிட்டுத் திரும்பியதையும் நினைத்துக்கொண்டேன். அந்தப் படகுப்பயணமும்
அவருடைய உரையாடலும், நான் மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடும் காட்சிகளில் ஒன்று.
என் வீட்டுத் திண்ணையில்
சற்றே தங்கி நீரருந்திச் சென்ற
நாடோடிப் பெண்ணின்
வியர்வை வாசனையை
வீட்டுக்குள் எடுத்து வந்தேன்
காலித் தம்ளருடன்
என்பது கலாப்ரியாவின் கவிதைகளில் ஒன்று. என் மனத்தில்
பதிந்திருக்கும் அந்தப் படகுப்பயணக்காட்சியும் அத்தகு அனுபவங்களில் ஒன்று. அது கலாப்ரியாவையும்
அவருடைய கவிதைகளையும் மிக நெருக்கமாக உணரவைக்கிறது. நினைக்குந்தோறும் அந்த நெருக்கம்
பெருகியபடி இருக்கிறது.
பத்து பன்னிரண்டு வரிகளில் அழகான ஒரு காட்சியை தன் கவிதையில் நேர்த்தியாகச் சித்தரிப்பதில் கலாப்ரியாவிடம் வெளிப்படும் ஆற்றல்
பாராட்டுக்குரியது. பலருக்கும் கைவராத கலை அது.
பூ வாடும் வரை
நாரைச் சூடிக்
கொண்டிருப்பதாய்
யாரும் நினைப்பதில்லை
என்பது கலாப்ரியா எழுதியிருக்கும் ஒரு சின்ன கவிதைச் சித்திரம். நாம் சூடிக்கொள்ளும் பூச்சரம் என்பது பூக்களையும் நாரையும் கொண்டது. ஆனால் பூச்சரத்தைச் சூடிக்கொண்டிருக்கும்போது, அனைவருடைய பார்வையிலும் பூ மட்டுமே தெரிகிறது.
பூக்கள் அனைத்தும் வாடி உதிர்ந்த பிறகுதான் நார் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. ஆனால் வெறும் நாருக்கு ஒரு மதிப்பும் இல்லை. அடுத்தடுத்த வாசிப்புகளில் நார் ஒருபோதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத அம்சத்தின் அடையாளம் என்பதை உணர்ந்துகொள்ளலாம். நாரின் நிலைக்கு நிகரான மனித வாழ்க்கையின் திசையில் நம் எண்ணங்கள் திரும்பும் கணத்தில் கவிதையின் வட்டம் மேலும் விரிவடைவதை நம்மால் உணரமுடியும்.
சுற்றாத
காற்றாலைச் சிறகில்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு பறவை
என்பது கலாப்ரியாவின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. இரு பறவைகள் நெருங்கி உட்கார்ந்திருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஒரு கணம் உருவாக்கி மறைகிறது அக்கவிதை. ஒன்று உண்மையான பறவை. இன்னொன்று சிறகுகளைக் கொண்டிருப்பதாலேயே பறவையென்றான பறவை. சுற்றாத பறவையோடு பறக்காத பறவை உட்கார்ந்திருக்கிறது. அபூர்வமான காட்சியை முன்வைக்கும் அரிய சொற்சித்திரம்.
வற்றிக்கொண்டிருக்கும்
குளச்சகதியில்
நீரருந்த வரும்
குட்டி ஆட்டைக்
கடைசிக் கனிவுடன்
பார்க்கிறது
மெலிந்த
ஒற்றைத் தாமரை
முதன்முதலாக இக்கவிதையைப் படித்தபோது இயேசு தன் சீடர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கடைசி விருந்துக் காட்சியை நினைத்துக்கொண்டேன். வற்றிக்கொண்டிருக்கும் குளத்தின் சகதிநீர் நாளை எஞ்சியிருக்குமா என்று சொல்லமுடியாது. அச்சேற்றில் உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் மெலிந்த ஒற்றைத் தாமரையும் நாளை உயிருடன் இருக்குமா என்றும் சொல்லமுடியாது. பழக்கத்தின் விளைவாக நீரருந்த வரும் குட்டி ஆட்டை நாளைக்குப் பார்க்கமுடியுமா என்பதும் தெரியாது. எதுவுமே நிரந்தரமற்ற சூழலில் தாமரையின் பார்வையில் கடைசிச் சந்திப்பின் பாரம் அழுந்தியிருக்கிறது.
நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு
எண்ணாமல்
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை.
வழக்கமாக கடைத்தெருவில் அனைவரும் பார்க்கத்தக்க
காட்சிதான் இது. ஆனால் அதைமட்டும் கலாப்ரியாவின் கவிதை சித்தரிக்கவில்லை. அதற்கு அப்பால்,
பூவைக் கேட்ட கணத்துக்கும் கொடுத்த கணத்துக்கும் இடையில் தன்னிச்சையாக நிகழ்ந்த ஒரு
மாயத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் கலாப்ரியாவின் கவித்துவம். பத்து கண்ணிகளை கூடுதலாகக் கொடுக்கும் கனிவார்ந்த
கணத்தையும் நம்மைக் கவனிக்கவைக்கிறார் கலாப்ரியா.
தன்னிச்சையாக நிகழும் அக்கனிவு மானுடத்தின் கொடை. அது சிலரிடம் நிகழலாம். சிலரிடம் நிகழாமலும் போகலாம்.
ஆனால் நிகழ்வதற்கு இசைவாக மன அமைப்பு கொண்டவர்களே இவ்வுலகில் கவனிக்கத்தக்கவர்கள்.
‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்று வள்ளுவர் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பாக எழுதிய வரியை கலாப்ரியாவின் கவிதை வேறொரு வகையில் வகுத்து மீண்டும் எழுதிச் செல்கிறது.
அவருடைய படைப்புகளை வாசிக்கும்போது
ஒரு வாசகனாக அந்த அனுபவங்களை ஒரு குருவி தானியத்தை எடுப்பதுபோல தனித்து எடுத்துக்கொள்ளவே
என் மனம் விழைகிறது. ஏன் அப்படிச் செய்கிறேன் என்பதை நான் தொடக்கக்காலத்தில் யோசித்ததில்லை.
பிற்காலத்தில் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தபோதுதான் அதற்குரிய விடையை நான் கண்டுபிடித்தேன்.
அவர் வாழ்ந்த இடம் வேறு. காலம் வேறு. நான் வாழ்ந்த இடமும் காலமும் வேறு. ஆனால் ஏதோ
ஒரு வகையில் எங்களுடைய வாழ்வில் ஒரு பொதுத்தன்மை இருப்பதாக என் மனம் உணர்கிறது. பல
நேரங்களில் அவர் முன்வைக்கும் காட்சிகள் என்
இளமையையும் என் கிராமத்தையும் நோக்கி என் எண்ணத்தைத் திசைதிருப்பிவைக்கின்றன. நான்
கண்ட காட்சிகளை அசைபோட வைக்கின்றன. நான் காணத் தவறிய காட்சிகளையும் அவை சுட்டிக் காட்டுகின்றன.
அதுவே அவருடைய படைப்புகளை என்னை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது.
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்பாக ஒரு கவிஞராக தன் எழுத்துப்பயணத்தைத் தொடங்கிய கலாப்ரியா, இன்று கட்டுரை, சிறுகதை,
நாவல் என எல்லா வகைமைகளிலும் சிறப்பாக எழுதிவரும் மாபெரும் கலைஞராக மலர்ந்திருக்கிறார்.
அதே சமயத்தில் அவர் எந்த வடிவத்தில் எழுதினாலும் அரிய காட்சியனுபவங்கள் அவருடைய எழுத்துடன்
இணைந்துகொள்கின்றன. அவருடைய உள்ளார்ந்த தேடலின் விளைவாக, அவர் மனம் புதியபுதிய காட்சிகளைத்
தேடித்தேடிக் கண்டடைந்தபடி இருக்கிறது. ஒரு கானுயிர் புகைப்படக்கலைஞர் படமெடுத்தபடி
காட்டுக்குள் பயணம் சென்றபடி இருப்பதுபோல அவருடைய எழுத்துப்பயணமும் ஓய்வின்றித் தொடர்ந்தபடி
இருக்கிறது. அது அவரே கண்டடைந்த தனிவழி. அவருடைய தனிவழிப்பயணம் இனிதே தொடரட்டும். எழுபத்தைந்தாவது
அகவையை நிறைவு செய்யும் பவளவிழா நாயகரான கலாப்ரியாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
( கவிஞர்
கலாப்ரியாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பவளவிழா சங்கரன்கோவிலில்
27.07.2025 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பவளவிழா வெளியீடாக, பஃறுளி என்னும் தலைப்பில்
தயாரிக்கப்பட்டிருந்த இலக்கிய மலரும் வெளியிடப்பட்டது.
அந்த மலரில் இக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.)