’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்பது மெளனி எழுதிய ‘அழியாச்சுடர்’ என்னும் சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் பிரபலமான வரி. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஒரு செயலின் நிழலாக, ஓர் எண்ணத்தின் நிழலாக, ஒரு கதையின் நிழலாக, ஒரு நினைவின் நிழலாக நாம் இம்மண்ணில் நீட்சி கொண்டிருக்கிறோம். நம் அடையாளம் என்பது நாமா அல்லது நம் நிழலா என்ற கேள்விக்கு ஒருவராலும் உடனடியாகப் பதில் சொல்லமுடிவதில்லை. இப்படி ஒரு நிழல்மயக்கம் நம் வாழ்நாள் முழுதும் தொடர்கிறது.
உருவமும் நிழலும் போல நம் முன் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் இரு விடைகள் காத்திருக்கின்றன. நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது நமக்கே தெரியாத புதிராகவே கடைசிவரைக்கும் இருக்கிறது. மீண்டுமொரு வாய்ப்பு என்பதே கிடையாது என்னும் சூழலில் தவறானதைத் தேர்ந்தெடுத்துவிட்டு துன்பத்தில் மூழ்கிவிடுகிறவர்களும் உண்டு. சரியானதைத் தேர்ந்தெடுத்து ஆறுதல் அடைகிறவர்களும் உண்டு.
எல்லோரிடமும்
இருக்கிறது
ஒரு கடல்
கிளிஞ்சல்களோடு
அமைதியடைவதும்
சிப்பிக்குள்
மழை வீழக் காத்திருப்பதும்
அவரவர்
கண்ட கரை
எல்லோரிடமும்
இருக்கிறது
ஒரு மலை
நதியாகித்
தரை தொடுவதும்
இறுகித்
தூரமாவதும்
அவரவர்
நிற்கும் நிலை
இக்கவிதையில் இரு வாய்ப்புகளுக்கும் வழியுள்ள ஒரு தருணத்தை நம்
முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் விஜயானந்தலட்சுமி. ஆனால் நாம் காத்திருக்கவேண்டுமா
அல்லது கிடைப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டுமா என்பதைப்பற்றி எந்த ஆலோசனையையும் முன்வைக்கவில்லை.
அந்த முடிவை எடுக்கும் சுதந்திரத்தை நமக்கே வழங்கிவிடுகிறார் கவிஞர். சுதந்திரமே மிகப்பெரிய
கட்டுப்பாடு என்பதை இப்படிப்பட்ட தருணங்கள் நமக்கு உணர்த்திவிடுகின்றன.
மிகப்பெரிய பேறு என உணரத்தக்க ஒரு பொற்கணத்தை விஜயானந்தலட்சுமி
ஒரு கவிதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆற்றைக்
கடக்கும்போதெல்லாம்
முகம்
பார்க்கவே செய்கிறது
நிலவு
எப்போதாவது
பார்க்கிறோம்
இரண்டையும்
நாம்
நிலப்பரப்பில் எங்கோ ஒருசில பகுதிகளில் மட்டுமே ஆறுகள் பாய்கின்றன.
எங்கோ ஒரு திசையில் பிறந்து இன்னொரு திசையை நோக்கி ஓடிச் செல்வதையே அவை வாழ்க்கைப்பயணமாகக்
கொண்டிருக்கின்றன. ஆற்றைப்போலவே வானத்தில் எங்கோ ஓரிடத்தில் உதித்து இன்னொரு இடத்தைத்
தொட்டு அமைவதையே தன் வாழ்க்கைப் பயணமாகக் கொண்டிருக்கிறது நிலவு. ஆற்றின் பயணம் நிலத்தில்
எனில், நிலவின் பயணம் வானத்தில் நிகழ்கிறது. இரண்டின் பயணங்களும் ஏதோ ஓர் அரிதான கணத்தில்
ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதாக அமைகிறது. நிலவின் முகம் ஆற்றில் தெரிவதுபோல ஆற்றின்
முகமும் நிலவில் தெரியக்கூடும். ஆற்றங்கரைக்குச் செல்லும் வெகுசிலரே ஆற்றின் அழகைக்
கண்டு ரசிக்கிறார்கள். இரவு நேரங்களில் ஆற்றங்கரைக்குச் செல்பவர்கள் அவர்களிலும் வெகுசிலரே.
அந்தச் சிலரிலும் சிலரே ஆற்றுத்தண்ணீரில் தெரியும் நிலவின் முகத்தைப் பார்க்கிறார்கள்.
நிலவையும் நிலவின் நிழலையும் ஒரே நேரத்தில் பார்க்கும் தருணத்தைப் பொற்கணம் என்றே சொல்லவேண்டும்.
மறதி என்பது மானுட வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம். விவசாய
நிலத்தில் ஏரோட்டும் கலப்பை மேல்மண்ணைக் கீழ்மண்ணாகவும் கீழ்மண்ணை மேல்மண்ணாகவும் புரட்டிவிடுவதுபோல
நினைவுகளையெல்லாம் கலைத்துவிடுகிறது மறதி. பழையதை அழித்து புதியவற்றால் நிரப்பிவைக்கிறது.
இயற்கையாக நிகழும் இத்தகு தகவமைப்புகளை மீறி, ஒன்றிரண்டு நினைவுகள் வடுக்களென நிரந்தரமாகத்
தங்கிவிடுகின்றன. அவை ஒருபோதும் கலைவதுமில்லை. அழிவதுமில்லை. நெருப்பென எரிந்து சுட்டெரித்தபடியே
இருக்கும் அத்தகைய ஒரு நினைவு ஒரு கவிதையின் பதிவாகியிருக்கிறது.
சேமித்திருந்த
கூழாங்கற்களை
கிரானைட்
பதிக்கவென்று
தூக்கிப்போடுகிறார்கள்
அவள்
வீட்டில்
சட்டைப்
பொத்தான்களை
மாற்றிப்
போடும்
எதிர்வீட்டுக்
குழந்தைக்கு
பல்லொளிர்கிறது
கண்ணாடிப்
பிம்பத்தில்
வெளிநாட்டு
வேலைக்கென
முன்னெப்போதோ
கலைக்கப்பட்ட
கருவின்
காயத்திற்கான
அழுகை
ஆயத்தமாகிறது
இப்போது
அவளுக்கும்
கூழாங்கல்
வடிவத்தில்
எவ்விதமான கூடுதல் விளக்கமும் தேவைப்படாத அளவுக்கு செறிவாக அமைந்திருக்கிறது
இக்கவிதை. இழப்பின் தழும்பு கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கி வரும் சூழலில் எதிர்பாராத விதமாக
கண்ணுக்கு முன்னால் கண்ட காட்சி அந்தப் பழைய தழும்பைக் கீறி ரத்தத்தைப் பெருகவைக்கும்
தருணத்தைச் சித்தரிக்கிறது.
இப்படி அமையும் ஒரு கணத்தை மட்டும் முன்வைத்து, தற்செயல்கள்
அனைத்தும் முழுக்கமுழுக்க இழப்புகளின் திசையில் நம்மைத் திருப்பிவிடும் விசை என நாம்
ஒருபோதும் வரையறுத்துவிட முடியாது. ஒருசில சமயங்களில் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நோக்கிய
ஒரு பயணமாகவும் அது அமையலாம். குறைந்தபட்சமாக தற்காலிக மனநிறைவை அளிக்கக்கூடிய ஒரு
பயணமாக இருக்கலாம்.
திருவிழாவில்
அம்மாவின்
சாயலில்
யார்
முந்தானையையோ பிடித்தபடி
போய்க்கொண்டிருக்கிறது
குழந்தை
கூட்டம்
கடந்து
தன் நினைவு
அப்பெண்ணுக்கு
வரும்
வரைக்குமோ
நடக்கும்
கால்கள் தொய்ந்தும்
வாரி
எடுக்க நீளாத கைகளை
குழந்தை
அறியும் வரைக்குமோ
கண்காணாமல்
கூடவே
நடக்கிறது
தாய்சேய்
உறவு
இக்கவிதையில் அம்மாவின் தோற்றமுள்ள ஒருவரின் முந்தானையை ஒரு
குழந்தை பிடிப்பதும் அதை உணராதபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி அந்த அம்மா நடந்தபடி செல்வதும்
தற்செயலே. ஆயினும் அந்த மாயக்கணத்தில் ஒரு தாய்சேய் உறவு உருவாகிக் கலைந்துவிடுகிறது.
உருவானது அதிர்ஷ்டம் என்றால், கலைந்தது துரதிருஷ்டவசமானது.
இன்னொரு விதமாக இணைக்கப்பட்ட இருவேறு காட்சிகளின் தொகுப்பை முன்வைத்திருக்கும்
மற்றொரு கவிதையும் தற்செயல் வகைமை சார்ந்த கவிதையாகும்.
உடைத்து
விளையாடப்
பிள்ளை
இல்லாதவள்
முழு
வளையல்களைத்
தூர எறிகிறாள்
நொறுங்கிய
சில்லுகளைப்
பொறுக்கும்
சிறுவனிடம்
வேறோருலகத்தைத்
திருப்புகிறது
கலைடாஸ்கோப்
வெவ்வேறு விதமான முரண்களின் களமான இவ்வாழ்வை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இத்தகு கவிதைகள்
உருவாக்குகின்றவோ என்று தோன்றுகிறது.
நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது ராமசாமி என்னும்
ஆசிரியர் ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் பற்றிய பாடத்தை நடத்தியதைக் கேட்ட அனுபவம்
இன்றளவும் என் மனத்தில் பசுமையாக நிறைந்திருக்கிறது. அன்று தன் சொற்களாலேயே ஆல்ப்ஸ் மலையை அவர் எங்கள்
கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். ஆயிரம் மைல் நீளம் கொண்ட அம்மலை எங்கள்
கற்பனையில் விரிந்துகொண்டே சென்றது. ஒரு பிறையின் வடிவத்தில் அமைந்த அதன் காலடியில்
பரவியிருக்கும் எட்டு நாடுகளும் அந்த மலையின்
உச்சியில் எவரெஸ்ட் மாதிரி நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் நின்றிருப்பதும் எங்கள்
மனக்கண்ணில் தெரிந்தன. பாட வேளையான முக்கால்
மணி நேரத்தில், அவர் அந்த ஆல்ப்ஸ் மலையை ஒரு சொற்சித்திரமாகத் தீட்டி எங்கள் நினைவில்
நிலைநிறுத்திவிட்டார். இத்தனைக்கும் அவர் சென்னைக்கு அப்பால் எந்த ஊருக்கும் சென்று
பார்த்தவர் அல்ல. ஆனால் ஆல்ப்ஸ் மலையை தினந்தினமும் நேரில் பார்த்துவிட்டு வருபவரைப்போல
அவர் அதைப்பற்றி எங்களிடம் சித்தரித்தார். இன்றுவரை நானும் அந்த ஆல்ப்ஸ் மலையைப் பார்த்ததில்லை.
ஆயினும் அந்தப் பெயரை உச்சரித்தாலே அந்த மலையைப் பலமுறை பார்த்துவிட்டது போன்ற ஒரு
பரவச உணர்ச்சி தானாகவே எழுந்து மனத்தை நிறைக்கிறது. இப்போது
அந்த ஆல்ப்ஸ் மலை நினைவுக்கு வருவதற்கு ஒரு முக்கியமான காரணம் விஜயானந்தலட்சுமி எழுதியிருக்கும்
ஒரு கவிதை.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தேர்த்திருவிழாவுக்குப் புறப்பட்ட
நேரத்தில், எதிர்பாராமல் வீட்டுவிலக்கான காரணத்தால் அவர்களோடு ஒருத்தியாய்ச் செல்லமுடியாத
சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்தான் அக்கவிதையின் முக்கியப் பாத்திரம்.
வீடே
கிளம்பிச் சென்றது
வீடே
திரும்பி வந்தது
அங்கேயே
நின்றுவிட்டது
அவர்களிடம்
காட்சி
வீட்டு
விலக்காகிப்
போகாமல்
இருந்தவளிடம்
நாளெல்லாம்
உலவுகிறாள்
திருவிழாச்
சப்பரத்தில்
அம்மன்
தேரோட்டத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்கள் அந்த அனுபவத்தை
அப்போதே மறந்துவிட, தேரோட்டத்துக்குச் செல்லமுடியாதவள் தன் மனத்தில் அக்காட்சியை மீண்டும்
மீண்டும் அசைபோட்டபடி இருக்கிறாள். அந்த அம்மனும் நாள்முழுதும் அவள் நினைவில் நகரும்
தேரில் அமர்ந்து உலா சென்றபடி இருக்கிறாள்.
கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளத்தக்க வகையில் இப்படி பல கவிதைகள்
இத்தொகுதியில் நிறைந்துள்ளன. இவற்றுக்கிடையில் வாளைப்போல கூர்மையோடு அமைந்திருக்கிறது
ஒரு கவிதை.
ஒரு பேரிளம்பெண்ணைப்போல
இருக்கிறது
அந்த
மரம்
அதை
குழந்தையைப்
போல ஆக்குகிறது
அணில்
ஒன்று
கூடுதலான விளக்கம் எதுவும் தேவைப்படாமலேயே நம் மனம் இக்கவிதையை
வாசித்த கணமே உள்வாங்கிக்கொள்கிறது. ஒரு வரத்தைக் கொடுக்காத தெய்வம் இன்னொரு வரத்தைத்
தானாகவே அருள்கிறது. இதை மகிழ்ச்சிக்குரிய தருணம் என்பதா, துயரத்துக்குரிய தருணம் என்பதா
என்பதைத் தீர்மானமாகச் சொல்லத் தெரியவில்லை. இந்த வாழ்க்கையை இத்தகு ஏராளமான புதிர்களின்
களம் என நினைத்து அமைதியடைவதைத் தவிர, வேறு வழி தெரியவில்லை.
(நிழல் மயக்கம். கவிதைகள். விஜயானந்தலட்சுமி.
சந்தியா பதிப்பகம். புதிய எண்.77, 53வது தெரு, 9-வது அவென்யு, அசோக் நகர், சென்னை
-600083. விலை. ரூ.130)
(புக் டே – இணையதளம் –
20.07.2025)