உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும் அவர் எழுதிய போரும் அமைதியும், அன்னா கரினினா, புத்துயிர்ப்பு போன்ற நாவல்கள் இன்றளவும் தொடர்ந்து புதிய வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
அவர் வாழும் காலத்திலேயே அவருடைய படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. அத்தகு மாமனிதர் சிறார்களும் விரும்பிப் படிக்கும் வகையில் எளிமையான மொழியில் ஏராளமான சிறுகதைகளையும் எழுதினார். அவர் எழுத்தாளராக மட்டுமன்றி, ஒரு செயல்பாட்டாளராகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். எல்லாத் தரப்பினருக்கும் கல்வி சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில் அவரே பள்ளிக்கூடங்களை நடத்தினார். குழந்தைகள் படிக்கத்தக்க பாடங்கள் தொடர்பான பாடத்திட்டத்தை வகுத்து, அதற்கேற்ற புத்தகங்களையும் அவரே எழுதி வெளியிட்டார். அரசியல் களத்தில் அகிம்சைவழி ஒத்துழையாமையை ஓர் எதிர்ப்புக்குரலாக முன்னெடுத்தவரும் அவரே.
ராதுகா
பதிப்பகம் செயல்பட்டு வந்த காலத்தில் டால்ஸ்டாய் எழுதிய சில குழந்தைக்கதைகள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. அது ஒரு முக்கியமான ஆரம்பமுயற்சி. எதிர்பாராத
விதமாக அந்த முயற்சி தொடரவில்லை. ராதுகா பதிப்பகமும் செயல்படாமல் நின்றுவிட்டது.
தமிழிலேயே
இயங்கிவந்த மொழிபெயர்ப்பாளர்களின் கவனமும் வெவ்வேறு திசைகளை நோக்கித் திரும்பிவிட்டது.
அதனால் குழந்தைகள் சார்ந்து டால்ஸ்டாய் எழுதிய படைப்புகள் தமிழ்ச்சூழலில் போதிய கவனத்தைப்
பெறாமலேயே நின்றுவிட்டன. இத்தகு பின்னணியில் ஏற்கனவே சிறார்களுக்கென பல நூல்களை ஆர்வமுடன்
எழுதிவரும் கொ.மா.கோ.இளங்கோ குழந்தைகளுக்காக டால்ஸ்டாய் எழுதிய பதின்மூன்று கதைகளைத்
தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்’
என்னும் தலைப்பில் பாரதி புத்தகாலயம் அத்தொகுதியை கருப்புவெள்ளையில் அமைந்த நல்ல படங்களோடு
அழகாக வெளியிட்டிருக்கிறது. பாராட்டத்தக்க
இப்பணி தொடர்ந்து நிகழவேண்டும்.
இத்தொகுப்பின்
முதல் சிறுகதை பூனைக்குட்டி. ஒரு வீட்டில் வாஸ்யா, காத்யா என இரு சிறுவர்கள் வசிக்கிறார்கள்.
வாஸ்யா அண்ணன், காத்யா தங்கை. அவர்கள் ஒரு பூனையை வளர்க்கிறார்கள். ஒருநாள் பூனை காணாமல்
போய்விடுகிறது. வீட்டில் எங்கு தேடினாலும் அவர்களால் அந்தப் பூனையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
அப்போது இறவாணத்தில் ஏதோ முனகல் சத்தம் கேட்கிறது. அது பூனையின் குரல் போலத் தோன்றுகிறது
வாஸ்யாவுக்கு. உடனே அவன் ஏணி வழியாக ஏறி இறவாணத்தை அடைந்து பார்க்கிறான்.
பூனை
அன்று ஈன்றெடுத்த ஐந்து குட்டிகளோடு அங்கு இருக்கிறது. அச்செய்தியை மகிழ்ச்சியோடு தங்கைக்குத்
தெரிவிக்கிறான் அண்ணன். அக்குட்டிகளுக்கு ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துச் சென்று வைக்கிறாள்
அவள்.
குட்டிகள்
வளர்ச்சியடைந்ததும் பூனை அவற்றை அழைத்துக்கொண்டு கீழே வந்து விளையாடத் தொடங்குகிறது.
காத்யா சாம்பல் நிறம் கொண்ட ஒரு குட்டியை மட்டும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். பிற
குட்டிகளை அக்கம்பக்கத்தில் வசிக்கும் வீட்டினருக்கு அவள் தாய் கொடுத்துவிடுகிறாள்.
அதற்குப் பிறகு அண்ணனும் தங்கையும் விளையாடச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் குட்டியையும்
எடுத்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தக் குட்டியின் மீது அவர்கள் பிரியத்தைக்
காட்டி வளர்க்கிறார்கள்.
ஒருநாள்
ஒரு வேட்டைக்காரனும் அவனுடைய நாய்களும் அச்சிறார்கள் வசிக்கும் வீட்டு வாசல் வழியில்
போனார்கள். அப்போது அந்த நாய்கள் அந்தப் பூனைக்குட்டியைப் பார்த்துவிட்டன. உடனே அதைப்
பிடிக்க பாய்ந்துவந்தன. காத்யா ஓடிச்சென்று அந்தக் குட்டியின் மீது படுத்து, நாய்களின்
தாக்குதலிலிருந்து பூனையைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாள். நாய்களின் எண்ணத்தை அறிந்த
வேட்டைக்காரனும் அக்கணத்தில் விரைந்துவந்து நாய்களை விரட்டிக்கொண்டு சென்றுவிடுகிறான்.
விவரித்து
எழுதினால் ஆறேழு பக்கங்கள் அளவுக்கு எழுதத்தக்க ஒரு கதையை மிகவும் சுருக்கமாக மூன்றே
பக்கங்களில் டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். வழக்கமான நீதிக்கதையாக டால்ஸ்டாய் அக்கதையை
எழுதவில்லை. மாறாக, குழந்தைகளின் உலகத்தைச் சித்தரிப்பதையே நோக்கமாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.
இத்தொகுதியில்
இடம்பெற்றிருக்கும் கழுகு என்னும் கதையும்
மிகவும் முக்கியமானது. ஒரு கழுகு தன் குஞ்சுகளோடு ஊர்க்கடைசியில் உள்ள ஒரு மரத்தில்
கூடு கட்டி வசிக்கிறது. ஒருநாள் தன் குஞ்சுகளின் பசியைத் தணிப்பதற்காக இரைதேடி கூட்டிலிருந்து
பறந்துபோகிறது கழுகு. நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரு பெரிய மீனைக் கவ்வி எடுத்துக்கொண்டு
கூட்டுக்குத் திரும்பி வருகிறது.
அப்போது
ஊர்க்காரர்கள் சிலர் அந்த மரத்தடியில் கூடி ஏதோ வேலை செய்கிறார்கள். அவர்கள் மீனோடு
மரத்தை நெருங்கும் கழுகைப் பார்த்துவிடுகிறார்கள். அந்த மீனை கழுகிடமிருந்து தட்டிப்
பறித்துவிடவேண்டும் என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள். கழுகைத் தாக்கும் விதமாக கல்லால்
குறிபார்த்து அடிக்கிறார்கள். தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கு வேறு வழி தெரியாமல்
மீனை நழுவவிடுகிறது கழுகு. மனிதர்கள் அந்தப் பெரிய மீனை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
குஞ்சுகள்
பசியில் அலறுகின்றன. ஏமாற்றத்தாலும் களைப்பினாலும் சோர்ந்துபோன கழுகு செய்வதறியாமல்
தவிக்கிறது. குஞ்சுகளை அரவணைத்து அமைதிப்படுத்துகிறது. மனிதர்கள் வசிக்கும் இடத்துக்குச்
சென்று மீனைக் கொண்டுவரும் எண்ணத்தை அது உதறிவிடுகிறது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு
மீண்டும் இரைதேடி பறந்துசெல்கிறது.
நீண்ட
நேரத்துக்குப் பிறகு ஒரு மீனைக் கவ்வி எடுத்துக்கொண்டு கூட்டுக்குத் திரும்பி வருகிறது.
கூட்டை நெருங்கியதும் மனிதநடமாட்டம் இருக்கிறதா இல்லையா என ஒருமுறை ஒதுங்கி நின்று
எச்சரிக்கையாகப் பார்த்துவிட்டு கூட்டுக்குத் திரும்புகிறது. கொண்டுவந்த இரையைத் தன்
அலகால் துண்டுதுண்டாகப் பிய்த்துப் பிய்த்து குஞ்சுகளுக்கு ஊட்டி பசியைத் தணிக்கிறது.
பூனை
சிறுகதை குழந்தைகளுக்கு பிராணிகள் மீது இருக்கும் அன்பை முன்வைக்கிறது. கழுகு சிறுகதை
ஒரு பறவை தன் குஞ்சுகளிடம் செலுத்தும் அன்பை முன்வைக்கிறது. இப்படி வெவ்வேறு களம் சார்ந்து
அன்பை முன்வைக்கும் பதின்மூன்று சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. அனைத்தும் குழந்தைகள்
உலகத்துக்கு நெருக்கமான கதைகள். தடையில்லாமல் வாசிக்கத்தக்க அளவில் மொழிபெயர்த்திருக்கும்
கொ.மா.கோ.இளங்கோ பாராட்டுக்குரியவர்.
(குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள். லியோ டால்ஸ்டாய்.
தமிழில்: கெ.மா.கோ.இளங்கோ, பாரதி புத்தகாலயம். 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை
-600018. விலை. ரூ.60)
(புக் டே – இணையதளம் – 28.07.2025)