Home

Sunday, 13 July 2025

நினைக்கப்படும்

 

புதுச்சேரியிலிருந்து நண்பரொருவர் பெங்களூருக்கு வந்திருந்தார். கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்தவர் அவர். அவருடைய மகள் வீடு மாரதஹள்ளிக்கு அருகில் இருந்தது. வந்து இறங்கியதுமே கைப்பேசியில் அழைத்து ”நான் மூனு நாள் இங்க இருப்பேன். ஒருநாள் நான் கெளம்பிவந்து உங்களைப் பார்க்கட்டுமா? எந்த நேரம் உங்களுக்கு வசதியா இருக்கும்?” என்று கேட்டார். “அவசரப்படாதீங்க. வடக்கு தெற்கு புரியாத ஊருல உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? நானே வந்து பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு முகவரியை மட்டும் கேட்டு வாங்கிக் குறித்துக்கொண்டேன்.  ஆனால் புறப்படுவதற்கு உகந்ததாக அன்றைய பொழுது அமையவில்லை. மறுநாள்தான் புறப்பட முடிந்தது.

எனக்காக அவர் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார். உள்ளே அழைத்துச் சென்று மகளுக்கும் மருமகனுக்கும் அறிமுகப்படுத்தினார். பிறகு ஊரில் நடந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்திகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார். இடையிடையே ஒன்றிரண்டு கேள்விகள் மட்டுமே அவர் தொடர்ந்து பேசுவதற்குப் போதுமானவையாக இருந்தன. ஒரு மனிதருக்கு பேச்சு எந்த அளவுக்குச் சிறந்த வடிகாலாக அமைந்திருக்கிறது என்பதை அன்று புரிந்துகொண்டேன். மதிய உணவுக்குப் பிறகு அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்ததால் தொலைவு ஒரு பொருட்டாகவே இல்லை.

ஒரு திருப்பத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. அதன் அடையாளமாக கட்டுமானப்பகுதியைச் சுற்றி அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயரமான இரும்புக்கம்பங்களை நட்டு நீலவண்ன பிளாஸ்டிக் துணியைக் கட்டி ஒரு மறைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு கோணத்தில் அக்காட்சி நிறுத்தி வைக்கப்பட்ட வாயகன்ற நீலநிறத் தொட்டியைப்போல இருந்தது.

அதைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தபோது, துணிமறைப்பை ஒட்டி ஓர் அமரர் ஊர்தி நிற்பதையும் அதற்குப் பக்கத்திலேயே நாலைந்து இருசக்கர வாகனங்கள் நிற்பதையும் பார்த்தேன். ஒரு மூலையில் தகரத்தகடு வேயப்பட்ட நாலைந்து கூடாரங்கள் காணப்பட்டன. சிறிது தூர இடைவெளியில் பத்து இருபது பேர் கூட்டமாக நின்றிருந்தனர். ஏதோ ஒரு துக்ககரமான செய்தி என்பதை அச்சூழலே உணர்த்தியது. அங்கிருந்து விலகி நடந்துவிட கால்கள் நினைத்தாலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் மனம் அந்தக் கூட்டத்தை நோக்கியே என்னைச் செலுத்தியது.

எல்லோருமே வட இந்தியத் தொழிலாளர்கள். வேகவேகமாக அவர்கள் பேசிய இந்தி மொழி உரையாடல்களை உடனுக்குடன் புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது.  எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கூடாரத்துக்குச் செல்வதும் திரும்புவதுமாக இருந்தனர்.  வெள்ளைச் சீருடை அணிந்த அமரர் ஊர்தி ஓட்டுநர் அவர்களிடம் ஏதோ சொல்லி அவசரப்படுத்திக்கொண்டிருந்தார்.

அவர்களுடைய உரையாடலைக் கூர்ந்து கவனித்தபோது, அந்தக் கூடாரத்தில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்பதையும் இறந்தவரின் உடலை தகனமையத்துக்கு எடுத்துச் செல்ல அந்த ஊர்தி வந்து காத்திருக்கிறது என்பதையும் கூடாரத்திலிருந்து ஊர்தி வரைக்கும் உடலைக் கொண்டுவர முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கிறார்கள் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ வந்த இடத்தில் ஒரு மரணம் ஒருவருடைய நெஞ்சில் ஏற்படுத்தக்கூடிய வேதனையை நினைத்தபோது மனம் கனத்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஓரமாக ஒதுங்கி நின்றுவிட்டேன்.

சில நிமிடங்களுக்குப் பின் அழுது வீங்கிய முகத்தோடு தலைவிரி கோலத்துடன் ஒரு குழந்தையை நெஞ்சோடு அழுத்தி அணைத்தபடி ஒரு பெண் மூலையிலிருந்த கூடாரத்திலிருந்து வெளியே வருவதைப் பார்த்ததும் திகைப்பில் உறைந்துவிட்டேன். ஒரே கணத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் விலகி அவளுக்கு வழிவிட, அவள் ஊர்திக்கு அருகில் வந்து நின்றாள்.

அதைப் பார்த்ததும் ஊர்திக்குள் இருந்தவர்கள் சட்டென எழுந்து நின்று குழந்தையைத் தம்மிடம் கொடுக்கும்படி அவளை நோக்கி கைகளை நீட்டினர்.  ஆனால் அவள் தன் குழந்தையை தன் மார்போடு மேலும் இறுக்கிப் பிடித்தபடி தலையசைத்து மறுத்தாள். அந்த உறுதியின் முன் ஒருவராலும் எதுவும் செய்ய இயலவில்லை.  யாரோ ஒருவர் “அவரே எடுத்துட்டு வரட்டும், விடுங்கப்பா” என்று சொல்ல, அவள் குழந்தையுடன் ஊர்திக்குள் ஏறிவர அவர்கள் உதவி செய்தனர். ஊர்தியின் பக்கவாட்டு இருக்கையில் உட்கார்ந்துகொண்டாள். அப்போதும் அவள் கைகள் குழந்தையின் முதுகுப்புறத்தை அழுத்திப் பிடித்தபடி இருந்தன.

அந்தப் பெண்ணைத் தொடர்ந்து இன்னும் சிலர் வேகமாக ஊர்தியிக்குள் ஏறிக் கொண்டதும் ஊர்தி புறப்பட்டுச் சென்றது.  வேறு சிலர் இரு சக்கரவண்டிகளில் ஏறி அந்த ஊர்தியைப் பின்தொடர்ந்து சென்றனர். ஒரே கணத்தில் அந்த இடத்தில் வெறுமை சூழ்ந்தது. எல்லோரும் கலையத் தொடங்கியதும் நானும் அந்த இடத்திலிருந்து வெளியேறினேன்.

இறந்துவிட்ட குழந்தையின் உடலை மார்போடு அணைத்தபடி அமர்ந்திருந்த அப்பெண்ணின் முகத்தை என்னால் மறக்கவே இயலவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் என் மனைவியிடம் நான் கண்ட காட்சியை விரிவாகப் பகிர்ந்துகொண்டேன். அடுத்தடுத்த நாட்களிலும் நான் சந்திக்க நேர்ந்தவர்களிடமெல்லாம் துயரமான அக்காட்சியைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த வார இறுதியில் நண்பர் விட்டல்ராவைச் சந்திக்கச் சென்ற சமயத்தில், அவரிடமும் அக்காட்சியை விரிவாக எடுத்துரைத்தேன்.

“மரணம்னு சொன்னாலே துக்கம்தான் பாவண்ணன். அதுவும் ஒரு குழந்தையுடைய மரணம் மிகப்பெரிய துக்கம். பல மரணங்களைப் பார்த்தவன்ங்கற முறையில எனக்கு ஒரு எண்ணம் தோணுது. சொந்த ஊருல ஒருவேளை அந்த அம்மாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருந்தா, அவுங்களை சுத்தி சொந்தபந்தம் எல்லாருமே ஒத்தாசையா நின்னிருப்பாங்க. அவுங்களுடைய துக்கம் ஓரளவு குறைஞ்சிருக்கறதுக்கு வாய்ப்பு இருந்திருக்கும். நீங்க சொல்ற அளவுக்கு இறுக்கம் இருந்திருக்காது. தனக்கு ஆதரவா யாரும் இல்லைங்கற சூழல்லதான் இப்படிப்பட்ட இறுக்கம் ஏற்படுது…..”

எங்கோ பார்வையைப் பதித்தபடி ஒவ்வொரு வாக்கியமாக விட்டல்ராவ் சொன்னார். அந்த உரையாடலைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் அளவுக்கு அனுபவம் இல்லாதவன் என்பதால், நான் அமைதியாக அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். அவர் முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகள் மாறிக்கொண்டே இருந்தன.

“மகாபாரதத்துல யட்சனுக்கும் தருமனுக்கும் நடுவுல ஒரு பெரிய உரையாடல் நடக்கும். யட்சன் கேள்வி கேட்பான். தருமன் பதில் சொல்வான். இந்த உலகத்துல எது தினந்தோறும் நடக்கிற நிகழ்ச்சிங்கறது ஒரு கேள்வி. அதுக்கு உயிரினங்கள் இறந்து எமலோகம் போயிட்டே இருக்கறதுதான் தினசரி நடக்கிற நிகழ்ச்சின்னு பதில் சொல்றாரு. எது ஆச்சரியம் தரக்கூடிய நிகழ்ச்சிங்கறது அடுத்த கேள்வி. தினசரியும் மரணத்தைப் பார்த்துட்டே இருந்தாலும் கூட ஒருத்தன் தனக்கு மரணமே வராதுன்னு நம்பி நல்ல கதியை அடையற முயற்சியில ஈடுபடாம வாழ்க்கையை ஓட்டறதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்னு தருமன் பதில் சொல்றாரு. நல்ல கேள்விதான். நல்ல பதில்தான். ஆனா தருமர் மாதிரியான ஆட்கள் அப்படிச் சொல்லலாம். நம்ம மாதிரியான சாமானியமான ஆட்களால அப்படி நினைச்சிக்கூட பார்க்கமுடியாது. ஒரு மரணத்தை நேருக்கு நேரா கண்முன்னால பார்க்கற அனுபவம் ஏதோ ஒரு ஆற்றல் நம்ம துண்டுதுண்டா வெட்டிப்போடற மாதிரியான அனுபவம். அந்த அம்மா செத்துப்போன குழந்தையை தானே இறுக்கிக் கட்டிப்புடிச்சிகிட்டு போனாங்கன்னு சொன்னீங்களே, அவுங்களுக்கு அந்த நேரத்துல அப்படித்தான் இருந்திருக்கும்…”

ஏதோ ஒரு புள்ளியில் வேகமாக சொல்லத் தொடங்கிய விட்டல்ராவ் அப்படியே அந்தப் பேச்சை அந்தப் புள்ளியில் நிறுத்திவிட்டு மெளனமாக ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தார். பிறகு தன் படிப்பறைக்குள் சென்று ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துவந்தார். அதைப் புரட்டி ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திருப்பி என் பக்கமாக “இங்க பாருங்க” என்று  காட்டினார்.

என்ன என்று புரிந்துகொள்ள முடியாமல் நான் அப்புத்தகத்தை வாங்கினேன். அது ஒரு புகைப்படப்புத்தகம். அவர் காட்டியது ஒரு சிற்பத்தின் புகைப்படம். ஒரு பெரிய அறையில் தனிமையில் ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி குனிந்து அழுவதுபோல அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் உருவம் அதில் இருந்தது.

அதைப் பார்த்ததுமே ஒரு கணம் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அச்சு அசலாக, நாலைந்து நாட்கள் முன்னால் நான் பார்த்த வட இந்தியப் பெண்ணும் இறந்துபோன தன் குழந்தையைப் பிடித்தபடி இதே போலத்தான் அமர்ந்திருந்தாள். கனவா, நனவா என புரியாமல் குழம்பினேன்.

“சார், இதே போலத்தான் அந்த அம்மாவும் இருந்தாங்க” என்று திகைப்பு நீங்காமலேயே அவரிடம் சொன்னேன். சற்றே வேகமாக “யாரு எடுத்த படம் சார் இது?” என்று கேட்டேன்.

“படம் இல்லை பாவண்ணன். இது ஒரு சிற்பத்தின் படம்” என்றார் விட்டல்ராவ்.

“சிற்பமா?”

“ஆமாம். சிற்பம்தான். கதே கால்விட்ஸ்ங்கற ஒரு ஜெர்மனி நாட்டுக் கலைஞர் செதுக்கிய சிற்பம்.

“இது எப்படி சார்? என்னால நம்பவே முடியலை. எந்த வருஷத்துல செஞ்ச சிற்பம் இது?”

ஒருகணம் விட்டல்ராவ் யோசித்தார். பிறகு “எப்படியும் நூறு வருஷத்துக்கு மேல இருக்கும் பாவண்ணன். முதல் உலகப் போர் சமயத்துல செஞ்ச சிற்பம்” என்றார்.

”ஆச்சரியமா இருக்குது சார்” என்றபடி நான் அந்தச் சிற்பத்தின் படத்தை மீண்டும் பார்த்தேன்.

“இதுல ஆச்சரியம் என்ன இருக்குது பாவண்ணன். உலகம் முழுக்க மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கறாங்க. துக்கம், ஆனந்தம் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்குது. ஜெர்மனியா இருந்தா என்ன, இந்தியாவா இருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்”

நான் அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தேன். அறுபது, எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியின் படம் இருந்தது. பக்கவாட்டில் கதே கால்விட்ஸ் என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

“சார், இவுங்கதான் கதே கால்விட்ஸா?”

”ஆமாம்”

“இது புகைப்படமா, சிற்பமா?”

“ரெண்டும் இல்லை. இது ஓவியம். கால்விட்ஸ் தன்னைத்தானே போட்டுகிட்ட ஓவியம். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ர்ந்த மிகச்சிறந்த ஓவியர்கள்ல இந்த அம்மாவும் ஒரு முக்கியமான ஓவியர். இவுங்க ஓவியர் மட்டுமில்லை. நல்ல சிற்பியும் கூட. உலோகச்சிற்பி. அதுதான் அவுங்களுடைய சிறப்பு”

நான் விட்டல்ராவுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லச்சொல்ல கேட்கவேண்டும் போல இருந்தது.

“நான் அவுங்களுடைய சில ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்த்திருக்கேன். 1967ஆம் வருஷம்னு நெனைக்கறேன். மெட்ராஸ்ல மேக்ஸ்முல்லர் பவன்ல கால்விட்ஸுடைய சில ஓவியங்களையும் சில சிற்பங்களையும் கொண்ட  ஒரு கண்காட்சி வச்சிருந்தாங்க. அதுக்கு நான் போயிருந்தேன். கண்காட்சி நடக்கற அறைக்குள்ள போகறதுக்கு முன்னால வாசலுக்கு வெளியே நடுக்கூடத்துல கால்விட்ஸுடைய சிற்பத்தை வச்சிருந்தாங்க. தன்னைத்தானே ஓவியமா வரைஞ்சிக்கின மாதிரி, கால்விட்ஸ் தன்னைத்தானே ஒரு சிற்பமாவும் செஞ்சி வச்சிருந்தாங்க. நேருல பார்த்தபோது உண்மையிலேயே ஒரு வயதான அம்மா வந்து உக்காந்திருக்கிற மாதிரி இருந்தது அந்த சிற்பம். என் வாழ்க்கையில அது ஒரு அருமையான அனுபவம்.”

கால்விட்ஸுடைய ஓவியங்களின் நுட்பங்களைப்பற்றி விரிவாக எடுத்துரைத்தார் விட்டல்ராவ். ஒருகணம் கால்விட்ஸ் கண்காட்சிக்கு வெளியே நின்று நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பதுபோல நினைத்துக்கொண்டேன். விட்டல்ராவ் தன் எண்ணங்கள் வழியே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அப்படியே கடந்துசென்றுவிட்டார்.

“கண்காட்சியை நான் சுத்திப் பார்த்திட்டிருந்த சமயத்துல  மேக்ஸ்முல்லர் பவன்ல பெரிய ரேங்க்ல இருக்கிற ஒரு அதிகாரி காமிரா வச்சிட்டிருந்த ஒரு பத்திரிகைக்கார நண்பர்கிட்ட கால்விட்ஸ் பக்கத்துல நிக்கிறமாதிரி தன்னை ஒரு போட்டோ எடுத்துக் கொடுக்கும்படி கேட்டாரு. அந்தக் காமிராமேனும் கால்விட்ஸ் சிற்பத்துக்கு பக்கத்துல வெளிச்சம் விழற இடத்துல அவரை நிக்கவைச்சி நாலஞ்சி கோணத்துல படம் எடுத்தாரு. அதுக்கப்புறம், அந்த அதிகாரி கால்விட்ஸ் சிற்பத்துக்கு முன்னாலயே ரொம்ப நேரம் நின்னு உத்துப் பார்த்துட்டே இருந்தாரு. சட்டுனு ஒரு வேகத்துல, அந்தச் சிற்பத்துடைய கன்னத்தை தன்னுடைய விரலால தொட்டு, அந்த விரலுக்கு முத்தம் கொடுத்தாரு. நான் அப்ப அந்தச் சிற்பத்துக்கு பக்கத்துலதான் நின்னுட்டிருந்தேன். அதைப் பார்த்தபோது இப்படியும் செய்வாங்களான்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது. அந்த நேரத்துல நான் அவரைக் கவனிக்கிறதை அவரும் கவனிச்சிட்டாரு. கால்விட்ஸ் எனக்கு அம்மா மாதிரி. எனக்கு மட்டுமில்ல, ஜெர்மனிக்கே அம்மா மாதிரின்னு உணர்ச்சிவசப்பட்ட குரல்ல சொல்லிட்டு போயிட்டாரு.”

அந்தத் தருணத்தை அவர் சொற்கள் வழியாக மீண்டும் சித்தரித்த விதம் அற்புதமாக இருந்தது. எந்தக் குறுக்குக்கேள்வியும் கேட்காமல் அவர் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஜெர்மனியில ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்தவங்க கால்விட்ஸ். அவுங்க அப்பா கட்டடவேலை செய்யறவரு. அவருக்குப் படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னுடைய பிள்ளைகளை நல்லபடியா படிக்கவைக்கணும்ங்கற எண்ணம் மட்டும் அவருக்கு இருந்தது. பத்து பன்னெண்டு வயசுலயே படம் போட ஆரம்பிச்ச தன்னுடைய பொண்ணப் பத்தி அவருக்குப் பெருமையா இருந்தது. தன்னுடைய பொண்ணைப்பத்தி எல்லார்கிட்டயும் பெருமையா பேசிட்டே இருப்பாரு. படிப்பை நிறுத்திட்டு மூனிச்சுக்கு அனுப்பி ஓவியப்பள்ளியில சேர்ந்து கத்துக்க வச்சாரு. அவுங்களும் ரொம்ப ஆர்வமா எல்லாத்தயும் கத்துகிட்டாங்க”

“இப்படி கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டு ஒரு கலையை ஆர்வத்தோடு கத்துக்கறதுலாம் பெரிய விஷயம். அதுக்குலாம் ஒரு தனிப்பட்ட மனப்பக்குவம் வேணும். கலை மீது அளவுகடந்த ஈடுபாடு இருக்கறவங்களாலதான் அப்படி செய்யமுடியும். ஆர்வம் இல்லைன்னா, சொல்லிக் கொடுக்கிற ஆளு சொந்த வீட்டுலயே இருந்தா கூட யாராலயும் கத்துக்கமுடியாது. உண்மையிலயே அந்த அம்மா பெரிய ஆள் சார்”

“ஓவியம் மட்டுமில்லை, சிற்பக்கலையிலயும் அவுங்க நல்ல பயிற்சி எடுத்துகிட்டாங்க. உலோகத்தை உருக்கி உறைய வச்சி, அதுக்கப்புறமா தேவையில்லாததையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி வீசிட்டு சிற்பத்தை உருவாக்கற முறையில அவுங்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. நீங்க பார்த்த இறந்த குழந்தையை நெஞ்சோடு அணைச்சிகிட்டு இருக்கற தாயுடைய படம் அப்படி உருவாக்கப்பட்ட ஒரு சிற்பத்துடைய படம். இன்னைக்கும் போர்க்காலக் கொடுமையைச் சித்தரிக்கிற அடையாளமா இந்தப் படத்தை எல்லாருமே சொல்வாங்க”

ஒரு படத்துக்குள் இவ்வளவு கதையா என ஆச்சரியமாக இருந்தது. அப்புத்தகத்தை நான் மெல்ல ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினேன். அந்தப் படங்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்களைப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. விவசாயிகள், நெசவாளிகள், கட்டுமானத்தொழிலாளர்கள், ஆலைத்தொழிலாளர்கள் என ஏராளமான தலைப்புகளில் அப்படங்கள் அமைந்திருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிக்கொண்டிருந்தபோதே “இதெல்லாம் ஓவியங்கள்” என்றார் விட்டல்ராவ்.

“எல்லாமே உழைக்கும் மக்கள் தொடர்பானதாவே இருக்குது” என்று குறிப்பிட்டபடி விட்டல்ராவைப் பார்த்தேன்.

“ஆமாம். அவுங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மேல ஒரு ஈடுபாடும் நம்பிக்கையும் உண்டு. கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கையிலேர்ந்து அவுங்க விலகவே இல்லை. ரொம்ப உறுதியா இருந்தாங்க. ஆனா அவுங்க தன்னுடைய நம்பிக்கையை யார் மேலயும் திணிச்சதில்லை”

அந்தப் புத்தகத்தில் நெசவாளர் ஊர்வலம் என்றொரு ஓவியம் இருந்தது. மிகச்சிறிய அளவில் சுருக்கப்பட்ட வடிவில் அப்படம் அச்சிடப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு உருவமும் உயிர்ப்போடு இருந்தது. உலகப்போரில் கைது செய்யப்பட்ட மனிதர்களின் படமும் பெண் கைதிகளின் படமும் மனத்தை உருக்குவதாக இருந்தன.

“உலகப்போர் நடக்கிற சமயத்துல அந்த நாட்டுலயே இருந்தவங்க இந்த அம்மா. ஒவ்வொரு காட்சியையும் நேருக்கு நேரா பார்த்தவங்க. அந்த அனுபவத்துடைய அடிப்படையிலதான் ஓவியங்களையும் சிற்பங்களையும் உருவாக்கினாங்க”

அவர் சொல்வதைக் காதில் வாங்கியபடி பக்கங்களைப் புரட்டினேன்.

“ஜெர்மனியில நடந்த ரெண்டு உலகப்போர்களும் அவுங்க வாழ்க்கையில பெரிய பாதிப்பை ஏற்படுத்திடுச்சி” என்றார் விட்டல்ராவ்.

“பாதிப்பா?” ஓவியங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

“ஆமாம். அந்த அம்மா தன்னுடைய மூத்த மகனை முதல் உலகப்போருல பறிகொடுத்துட்டாங்க. மூத்த பேரனை ரெண்டாவது உலகப்போருல பறிகொடுத்துட்டாங்க. ஈடுகட்ட முடியாத இழப்பு”

“ஐயையோ. கேக்கவே மனசு கஷ்டமா இருக்குது சார்”

“உலகப்போரை முன்வைச்சி அவுங்க வரைஞ்ச ஓவியங்களும் உருவாக்கிய சிற்பங்களும் ஏராளமா இருக்கும். அந்தக் காலத்துல பெல்ஜியத்துல ஒரு கல்லறைக்குப் பக்கத்துல க்ரீவிங் பேரண்ட்ஸ்ங்கற பேருல ஒரு நினைவகத்தை உருவாக்கினாங்க. அந்த அம்மா தன்னுடைய பல படைப்புகளை அந்த நினைவகத்துக்குக் கொடுத்துட்டாங்க”

“ம்”

“அங்க மரத்துல செதுக்கப்பட்ட ஒரு வாசகம் இருக்குது. ரொம்ப புகழ்பெற்ற வாசகம் அது”

“என்ன வாசகம்?”

ஒரு கண யோசனைக்குப் பிறகு இந்த உலகத்தில் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு போர்மரணங்கள் நிகழ்ந்துட்டுது. இனியாவது போர்மரணங்கள் நிகழாமல் இருக்கட்டும்ங்கறதுதான் அந்த வாசகம். ஆழ்மனசுக்குள்ள எவ்வளவு துக்கமும் வலியும் இருந்தா இந்த வார்த்தைகள் இப்படி வெளிப்பட்டிருக்கும். கொஞ்சம் யோசிச்சி பாருங்க” என்றார்.

“உண்மைதான் சார்”

“வாழ்க்கையில அந்த அம்மா கடைசிவரைக்கும் துன்பத்தைத்தான் அனுபவிச்சிட்டே இருந்தாங்க பாவண்ணன். அந்தக் கால ஜெர்மனியே துக்கத்துல முழுகிட்டிருந்தது. அந்தத் துக்கத்தைத்தான் அந்த அம்மா கலையா மாத்தினாங்க.”

“கலையை அவுங்க ஒரு வடிகாலா வச்சிகிட்டாங்க”

“ஆமாம். ஒருவகையில கலை அவுங்களை காப்பாத்தியிருக்குது. கலையுடைய துணை இல்லாம போயிருந்தா, மனம் பேதலிச்சி பித்து புடிச்சிருக்கும். யுத்த காலத்துல லட்சக்கணக்கான பேருக்கு அப்படித்தானே நடந்தது?”

“ம்”

“இதெல்லாம் ஒருவகையான துன்பம்னு சொன்னா, இன்னொரு வகையிலயும் அவுங்க வாழ்க்கையில துன்பம் சூழ்ந்துகிடுச்சி”

”அது என்ன சார்?”

“ஆட்சி மாறிய சமயத்துல அதிகாரத்துல இருந்தவங்க அந்த அம்மாவை வெளியேத்திட்டாங்க. கேலரியில வைக்கப்பட்டிருந்த அவுங்களுடைய ஓவியங்கள். சிற்பங்கள் எல்லாத்தையும் வெளியே வீசிட்டாங்க. ஆதரிக்க ஆளில்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க”

“ஐயோ, அப்புறம்?”

“அந்த அளவுக்கு தரைமட்டத்துக்கு அவுங்களை இழுத்த பிறகும் கூட அதிகாரிகள் அவுங்களை விட்டுவைக்கலை. தொடர்ந்து அவுங்க இருக்கற இடம் தேடி வந்து துன்பம் கொடுத்தாங்க. பெர்லின் நகரத்தைவிட்டே அவுங்கள வெளியேத்தினாங்க. அவுங்க வாழ்ந்த வீட்டை குண்டு வீசி சுக்குநூறா ஆக்கினாங்க. வீட்டுக்குள்ள வச்சிருந்த ஏராளமான ஓவியங்கள், சிற்பங்கள், ஆவணங்கள் எல்லாமே நெருப்புல எரிஞ்சி சாம்பலாயிடுச்சி”

“என்ன சார் இது? ஒரு கலைஞருக்கு இவ்வளவு துன்பங்களா? கேக்கவே ரொம்ப வேதனையா இருக்குது”

“பெர்லினை விட்டு வெளியே போனவங்களுக்கு எங்கயோ ஒரு கிராமத்துல்ல யாரோ ஒரு நல்ல மனசுக்காரர் ஆதரவு கொடுத்தார். அவுங்களை தன்னுடைய வீட்டுல தங்கவச்சி பார்த்துகிட்டாரு.”

அதைக் கேட்டபோது மனத்தில் சற்றே  நிம்மதி படர்ந்தது. எல்லோரும் கைவிட்ட நிலையில் முற்றிலுமாக கீழே சரிந்துவிழுந்துவிடாமல் யாரோ ஒருவர் கைகொடுத்ததால் நிலைத்து நின்ற பலரை இந்த வாழ்க்கையில் பல தருணங்களில் நான் சந்தித்திருக்கிறேன். அதனாலேயே முற்றிலுமாக கைவிடப்பட்டவர்கள் என ஒருவரும் இந்த உலகில் இல்லை என்கிற கருத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கதே கால்விட்ஸ் விஷயத்திலும் இப்படி ஒரு தருணம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அறிந்தபோது அந்த எண்ணத்தைத்தான் மனத்துக்குள் அசைபோட்டுக்கொண்டேன்.

“அதுக்கப்புறம் அவுங்க பெர்லினுக்குத் திரும்பி வரலையா?”

இல்லை என்பதுபோல உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தார் விட்டல்ராவ். “இன்னும் ரெண்டுமூனு வாரத்துல யுத்தம் முடியப் போவுதுங்கற கட்டத்துல ஆதரவு கொடுத்த கிராமத்துக்காரர் வீட்டுலயே அவுங்க உயிர் பிரிஞ்சிடுது”

அதைக் கேட்டபோது ஒரு பெருமூச்சுதான் எழுந்தது. விட்டல்ராவும் ஒருகணம் பேச்சின்றி இருந்தார்.

“அதுக்கப்புறம் ஜெர்மனி ரெண்டா உடைஞ்சது. புது அரசாங்கம் வந்தது. பத்து பதினஞ்சி வருஷம் கழிச்சி புது அரசாங்கம் அவுங்க நினைவா ஒரு சிலையை வைச்சாங்க. கால்விட்ஸுடைய கோடுகள் முதுகெலும்பை ஊடுருவி சிலிர்க்கவைக்கிற அழுகைக்குரல் போன்றவைன்னு அந்த சிலைக்குக் கீழே எழுத்துல பொறிச்சிவச்சாங்க. அதுதான் அவுங்க தன்னுடைய வாழ்க்கையில ஈட்டிய பெரிய விருது”

அவர் குறிப்பிட்ட அந்த வரிகளை நான் இரண்டுமூன்றுமுறை மனசுக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆழ்நெஞ்சில் மெலிதான கசப்பு படர்வதைத் தவிர்க்கமுடியவில்லை.

“என்ன மாதிரியான சமூகம் சார் இது. ஒரு கட்டத்துல அழுகிற யாருடைய குரலையும் கேக்கமாட்டேன்னு கழுத்தப் புடிச்சி சாகடிக்குது. இன்னொரு கட்டத்துல அழுகுரலுடைய வலிமையைப் பெருமையா பேசுது. இந்த சமூகத்தைப் புரிஞ்சிக்கவே முடியலையே சார்”

ஒரு சொல்லும் பேசாமல் விட்டல்ராவும் சிந்தனைவசப்பட்டவராக ஒருசில கணங்கள் உட்கார்ந்திருந்தார். மேசை மீது ஒருபக்கம் அடுக்கி  வைத்திருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வேறொரு பக்கத்தில் அடுக்கிவைத்தார். ஒரு பெருமூச்சுக்குப் பிறகு என் பக்கம் திரும்பி “திருவள்ளுவர் ஒரு குறள்ல நினைக்கப்படும்னு ஒரு வார்த்தையை பயன்படுத்தியிருக்காரு, ஞாபகம் இருக்குதில்லையா?” என்று கேட்டார். அவர் கேள்வியின் நோக்கம் புரியாமலேயே நான் அந்தத் திருக்குறள் வரிகளை முழுமையாகச் சொன்னேன். “அதான். அதான். அதேதான். அவர் நினைக்கப்படும்னு சொல்றாரே, அதே மாதிரி நீங்க சொல்ற சமூகச்சூழல்களும் நினைக்கப்படும்ங்கறதுதான் உங்க கேள்விக்குப் பதில்” என்றார்.

அதைத் தொடர்ந்து நானும் எதையும் பேசமுடியாத நிலையில் இருந்தேன். கதே கால்விட்ஸ் பற்றிய குறிப்புச்சுவடியைப் புரட்டி அச்சிடப்பட்டிருந்த இறந்துபோன குழந்தையின் உடலை மார்போடு அணைத்திருக்கும் பெண்மணியின் படத்தைப் பார்த்தேன்.

 

(ஜுலை – அம்ருதா 2025)