நள்ளிரவு நேரத்தில் ஒருபக்கம் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. மற்றொரு பக்கத்தில் உறங்கமுடியாமல் தவிக்கும் பெண் இரவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி துக்கத்தில் மூழ்கி தவியாய்த் தவித்தபடி இருக்கிறாள். இருவேறு விதமான இக்காட்சிகளை முன்வைத்து சங்ககாலம் முதல் எழுதப்பட்ட பாடல்வரிகள் ஏராளமாக உள்ளன.
‘முட்டுவேன்கொல், தாக்குவேன்கொல், ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅஒல் எனக் கூவுவேன் கொல், அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே’
என்பது ஒளவையாரின் பாட்டு.
அத்தகு துக்கமும் இயலாமையும் அசலானவை என்பதாலேயே அந்தத் தருணம் இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு தகவல்களோடு பெண்ணின் குரலாகவும் ஆணின் குரலாகவும் இடம்பெற்றபடி இருக்கின்றன. புறக்காட்சிகள் மாறினாலும் அகத்தின் வேதனை ஒன்றாகவே இருக்கின்றது. ரத்னா வெங்கட் எழுதி வெளிவந்திருக்கும் புதிய கவிதைத்தொகுதியிலும் இந்த வரிசையில் பொருந்தக்கூடிய ஒரு கவிதை இருக்கிறது.
காரணமற்று
அழுது
ஓய்கிற
எதிர்வீட்டு
டாமி
உச்சுக்கொட்டி
பரிதாபப்படுகிற
சுவர்ப்பல்லி
தொடர்பற்ற
நிகழ்வுகளுக்கிடையே
தொலைதூரக்கனவில்
சுருண்டு
புரள்கிறது
கூடா
உறக்கம்
இனி, எங்கு பல்லியின் சத்தத்தையும் நாயின் சத்தத்தையும் கேட்கும்போதெல்லாம்
ரத்னா வெங்கட் எழுதியிருக்கும் வரிகளும் நினைவிற்கு வந்துவிடும். ஏதோ ஒரு வகையில் சங்கப்பாடலின்
நீட்சியாக இன்றைய காலத்துக்குப் பொருந்தும் வகையில் இக்கவிதை அமைந்துவிட்டது.
இதையொப்ப இன்னொரு காட்சியையும் குறிப்பிடத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தில்
மதுரைக்காண்டத்தில் புறஞ்சேரியிறுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் அடியெடுத்து
நுழையும் காட்சியை இளங்கோவடிகள் மிகச்சிறப்பாக எழுதியிருப்பார். மதுரை நகரத்துக்குள்
அந்தத் தம்பதியினர் காலெடுத்து வைத்ததுமே, அவர்கள் கண்கள் கோட்டையின் உச்சியில் பறக்கும்
பாண்டியனின் வெற்றிக்கொடியைத்தான் பார்க்கின்றன. காற்றின் வேகத்தில் அந்தக் கொடி வேகமாக
அசைந்து அசைந்து படபடத்துப் பறக்கிறது.
அக்காட்சியை எழுதும் இளங்கோவடிகள் ‘இந்த நகரத்துக்குள் நீங்கள்
வரவேண்டாம், வரவேண்டாம்’ என அறிவுறுத்துவதுபோல அசைந்து படபடத்துப் பறக்கிறது என எழுதியிருக்கிறார்.
நடக்கவிருக்கும் துக்கத்தை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியாக அந்தக் கொடி
மெளனமாக அறிவிப்பதுபோல இளங்கோவடிகள் கற்பனை செய்கிறார். இத்தகு தற்குறிப்பேற்ற வரிகள்
எல்லாக் காலங்களிலும் கவிதைக்கு ஓர் அழகை வழங்கிவந்திருக்கின்றன. ரத்னா வெங்கட் கவிதைகளிலும் இத்தகு நுட்பம் படிந்த
வரிகள் ஆங்காங்கே அமைந்துள்ளன.
இனி இறங்கப்
போவதில்லை
என்ற
வைராக்கியத்துடன்
சிமிட்டாத
இமைகளுக்குள்ளே
ஒட்டாது
சுழலும் சிறுதுளியை
அத்தனை
இதமாய்
சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறது
காற்றளையும்
சிற்றலைகளின்
சலம்பலைத்
தாண்டி
கண்ணெதிரே
தளும்பிக்கொண்டிருக்கிறது
ஏரி
’சமாதானம்’ என்னும் தலைப்பில் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்
ரத்னா வெங்கட். அழுததெல்லாம் போதும், இனி அழக்கூடாது என வைராக்கியம் பூண்டு உள்முகமாக
தன்னை இறுக்கிக்கொள்கிறாள் ஒரு பெண். அதனால் துடைத்து முடித்தபின் கண்ணீரில் எஞ்சிய
கடைசித்துளி கண்வளையத்துக்குள்ளேயே நின்றிருக்கிறது. ஒருமுறை விழிமூடி இமைத்துவிட்டாலோ
அல்லது துடைத்துக்கொண்டாலோ போதும், சட்டென அந்தக் கண்ணீர்த்துளி வழிந்தோடிவிடும். ஆனால்
சுயமரியாதையின் காரணமாக இமைக்காத அந்தக் கண்ணில் அந்தத் துளி அப்படியே தேங்கி நிற்கிறது.
அவள் நின்றிருப்பது ஓர் ஏரிக்கரை. ஏரி நிறைய தண்ணீர் நிறைந்து
தளும்பியபடி இருக்கிறது. கண்ணீர்த்துளியைத் தேக்கியபடி நின்றிருக்கும் பெண்ணைப் பார்த்து
அழவேண்டாம், அழவேண்டாம் என அந்த ஏரி அமைதிப்படுத்துவதுபோல இரு காட்சிகளையும் ஒருங்கிணைக்கிறார்
ரத்னா வெங்கட். அந்த இணைப்பின் கற்பனையில் லயித்திருக்கும் நொடியில், விழியிலிருந்து
சிதறாமல் தேங்கியிருப்பது ஒரு துளி. கண்ணீர் எனில், அவளருகில் தளும்பி நிறைந்த ஏரி
யாருடைய கண்ணீர் என்றொரு கேள்வி நம் நெஞ்சில் உருப்பெற்று விஸ்வரூபம் கொள்கிறது. அக்கேள்விக்கான
விடையைக் கண்டறிவது எளிதான விடையல்ல.
கண்ணீர் தொடர்பாக இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு
கவிதையும் முக்கியமானது.
நிறைந்து
வழிவதை
அடியோசைகள்
நெருங்குவதற்குள்
சுண்டி
எறிகிற வாக்கில்
புன்னகையை
ஒட்டவைக்கக்
கற்றுத்
தேர்ந்திருக்கிறாள்
தரையெங்கும்
பாதரசக்குண்டுகள்
உருள்வதைத்
தடுக்க இயலாமல்
சென்ற கவிதையில் சித்தரிக்கப்பட்ட, கண்ணீரை அடக்கிக்கொள்ளும்
வைராக்கியம் நிறைந்த பெண் போன்றவள் அல்ல இக்கவிதையில் இடம்பெற்றிருக்கும் பெண். சட்டென
அழுகையை மறைத்து புன்னகைக்கும் நிலைக்கு மாறும் ரசவாதம் தெரிந்தவளாக இருக்கிறாள். அருகில்
வருகிற அடியோசையை உணர்ந்த கணமே அவள் தன்னை உருமாற்றிக்கொள்ளும் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
ஆனால் அந்தக் கலை, அவள் முகத்தில் படிந்திருக்கும் அழுகைக்களையை மறைத்துக்கொள்ள மட்டுமே
அவளுக்கு உதவியாக இருக்கிறது. அக்கணம் வரை அழுது அழுது வழிந்த கண்ணீர்த்துளிகளைத் தொட்டுச்
சுண்டி வீசியதால் தரையில் படிந்திருக்கும் ஈரத்தை மறைக்க அது உதவவில்லை. அதை ஒருவராலும்
மறைக்கவே முடியாது. தரையில் படிந்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் பாதரசக்குண்டென மின்னியபடியே
இருக்கின்றது.
எதிர்பாராத
வளைவில்
மோதுகிற
நெருக்கத்தில்
தோன்றியவனை
நானறியேன்
அவனும்
என்னை
அறிந்திருக்கச்
சாத்தியமில்லை
புன்னகை
தெளித்து நகர்ந்தவனை
பதில்
புன்னகையோடு கடந்துவிட்டேன்
வேகமாக நகரும் ஒரு காட்சி சட்டென ஒருகணம் உறைந்து பிறகு மீண்டும்
நகரத்தொடங்குவதுபோல இக்காட்சி அமைந்திருக்கிறது. இருவருக்கும் இடையில் ஒரே ஒரு கணம்
மின்னி மறைந்த புன்னகையை, ஊசிமுள்ளால் தொட்டெடுத்த வைரத்துளியைப்போல ரத்னா வெங்கட்
கவிதையாக மாற்றி நம் முன் வைத்திருக்கிறார்.
பல கவிதைகளின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் அமைந்திருக்கும்
சில வரிகள், கவிதையை வாசித்துமுடித்த பிறகும் நினைவில் மிதந்தபடி இருக்கின்றன.
கொட்டித்
தீர்ந்தபின்
வான்
தெளியலாம்
காய்கிற
வரையில்
குழம்பித்தான்
கிடக்கும்
சகதியான
நிலம்
தெளிவடைதல் என்னும் நிலை அனைவருக்கும் கைவரக்கூடிய ஒன்றுதான்
என்றாலும் அதற்கான அவகாசம் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. சிலருக்கு சில விஷயங்கள்
விரைவில் நிகழ்கின்றன. அதே விஷயங்கள் வேறு சிலருக்கு நிகழ நீண்ட காலமாகிறது. ஒருசில
நேரங்களில் நிகழாமலேயே போய்விடுகிறது. அந்தந்தப்
பொருளின் தன்மைக்கு ஏற்பவே அந்தத் தெளிவு அமைகிறது. இப்படி பல்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாக
இந்த வரிகளின் மீது ஏற்றிவைத்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். அனைத்துக்கும்
இடமளித்தபடி அமைந்திருக்கின்றன இவ்வரிகள்.
நதி நதிதான்
குளம்
குளம்தான்
ஓடுவது
நின்றாலும்
நின்றது
ஓடினாலும்
நீரென
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. நீர் எங்கிருந்தாலும்
அது நீரே. அதுவே நம்மைப் புரந்து வளர்த்து ஓர் ஆளுமையென நிற்கவைக்கிறது. அந்த நன்றிக்கடனை
நம்மால் ஒருபோதும் தீர்க்கவே முடியாது. தண்ணீரின் தாய்மையுள்ளமும் அதை மனிதர்களிடம்
எதிர்ப்பார்ப்பதில்லை.
பிரம்மப்பிரயத்தனத்தின்
முடிவிலியில்
சிதறுண்டதெல்லாம்
ஒட்டுவதேயில்லை
சிதறாமல் இருக்கும் வரை மட்டுமே ஓர் உருவத்தை நாம் முழுமை பெற்ற
உருவம் என்று சொல்வோம். முழுமையான உருவத்துக்கு மட்டுமே இம்மண்ணில் பெயர் இருக்கிறது.
ஏதேனும் ஒரு காரணத்தால், அந்த முழுமை துண்டுகளென சிதறிவிட்டால், பிறகு ஒருபோதும் அவற்றை
இணைத்து முழுமையாக்க முடியாது. அவை பெயரற்று சிதைந்துபோவதை ஒருவராலும் தடுக்கமுடியாது.
அமர்ந்து
ஆடுவதற்கான
ஆசையைத்
தொலைத்த பிறகே
வாங்கிவைக்க
முடிகிறது
அலங்காரமாக
ஓர் ஊஞ்சல்
ஒரு பொன்மொழியின் சாயலில் அமைந்திருக்கும் இக்கவிதை இத்தொகுதியின்
மிகச்சிறந்த கவிதை. தோற்றத்தில் எளிமையானதாகக் காட்சியளித்தாலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்
ஆற்றல் இக்கவிதைக்கு இருக்கிறது. எல்லாம் சரி, இப்படி அமையக்கூடிய வாய்ப்பை நாம் அதிர்ஷ்டம்
என்பதா, அல்லது துரதிருஷ்டம் என்பதா என்பதுதான் புரியவில்லை. வாழ்க்கையைப்போலவே இதற்கான
விடையும் புதிராகவே இருக்கிறது.
(மெல்லச் சிதறு. கவிதைகள். ரத்னா வெங்கட்.
பரிதி பதிப்பகம். பாரத் கோயில் அருகில், ஜோலார்ப்பேட்டை-635851. விலை. ரூ.150)
(புக் டே – இணையதளம் –
15.07.2025)