Home

Sunday, 20 July 2025

பிரபஞ்சத்தின் விளையாட்டு

 

கவிதைகளின் வடிவத்தில் காலம்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன. சங்ககாலக் கவிதைகளின் வடிவத்தைப்போல சங்கம் மருவிய காலகட்டத்தின் வடிவம் இல்லை. காப்பிய காலத்தில் மேலும் புதிய மாற்றங்கள் வந்து சேர்ந்தன. கவிராயர்கள் பெருகிய காலத்தில் இன்னும் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டு வரைக்கும் இலக்கணம் வகுத்தளித்த பல்வேறு வடிவங்களில் கவிதைகள் எழுதப்பட்டு வந்த சூழலில் பாரதியார் முதன்முதலில் இலக்கண விதிகளுக்கு அப்பால் சென்று உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வசனகவிதை என்னும் புதிய வடிவத்தில் கவிதைகளை பரிசோதனை முயற்சியாக எழுதினார். உரைநடைக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை என அவ்வடிவத்தில் மெல்ல மெல்ல மெருகேறி வளர்ச்சி பெற்றது.

சுதந்திரக் கவிதையின் வடிவத்தை அறிமுகப்படுத்திய பாரதியார், அக்காலத்தில் ஜப்பானில் பிரபலமாகி வந்த மூன்று வரிகளாலான புத்தம்புதிய கவிதை வடிவத்தையும் தன் வாசிப்பின் விளைவாகத் தெரிந்துகொண்டார். அவருடைய விரிவான வாசிப்பு ஆர்வம்தான் இதற்குக் காரணம். அவ்வடிவத்தை அவர் முதன்முதலாக 1916இல்  தமிழில் அறிமுகப்படுத்தினார். அந்த வடிவத்தை ‘ஹொக்கு’ என அவர் அழைத்தார். எடுத்துக்காட்டுக்காக, இயோனி குச்சி என்னும் கவிஞரின் கவிதையையும் அவரே மொழிபெயர்த்து வெளியிட்டார்.

புதுமை விரும்பியான அவர் வழியாகவே கவிதையின் புதிய வடிவமான ஹைக்கூ தமிழில் அறிமுகமானது. கீழ்த்திசை புத்த சிந்தனையில் உருவாகி, சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய ஜென் பண்பாட்டில் மலர்ந்து மணம் வீசிய ஹைக்கூ வடிவத்தை தொடக்க காலத் தமிழ்க்கவிஞர்கள் ஒருவித தயக்கக் கண்ணோட்டத்தோடு அணுகினாலும், படிப்படியாக ஏற்றுக்கொண்டனர்.

பாரதியார் தொடங்கிய வசனகவிதை மரபை வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் என பிச்சமூர்த்தியையும் க.நா.சு.வையும் சொல்லமுடியும். க.நா.சு.வுக்கு ஜென் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. இலக்கியவட்டம் என்னும் பத்திரிகையில் பல ஜென் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவர் மொழிபெயர்ப்பு வழியாக நமக்கு அறிமுகமான பாஷோ, மஸாஹி டே, க்யோஷி, டைரி, ஸாயு, ஸோருஹி, ஜோஸோ என அனைவருமே அத்தேசத்தின் முக்கியக் கவிஞர்கள்.  இலக்கியவட்டம், கசடதபற போன்ற பத்திரிகைகளில், வெவ்வேறு தருணங்களில் 1965 வாக்கில் க.நா.சு. மொழிபெயர்த்த ஹைக்கூ கவிதைகள் அடுத்தடுத்து வெளிவந்து வாசக கனவம் பெற்றன. அவற்றையெல்லாம் தேடியெடுத்து ஒரு தொகுப்பாக இப்போது உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீநிவாச கோபாலன். அவருடைய முயற்சிக்குத் தமிழுலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.

(க.நா.சு.வைத் தொடர்ந்து 1966இல் சுஜாதா சில ஜப்பானிய ஹைக்கு கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். அதன் பிறகு சி.மணி, அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்கள் அடுத்தடுத்து அவ்வகையான கவிதைகளைச் சொந்தமாகவே எழுதி வெளியிட்டனர். அதன் பிறகே ஹைக்கூ வடிவத்துக்கு தமிழில் ஒரு தளம் உருவாகி நிலைபெற்றது.)

ஜென் வாழ்வும் அதன் வழிகளும் என்ற தலைப்பில் க.நா.சுப்ரமன்யம் எழுதிய ஒரு கட்டுரை, இத்தொகுதியின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைக்கூ முயற்சிகளையும் செல்திசையையும் புரிந்துகொள்ள இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

கவிதையைப் படித்ததுமே, அது முன்வைக்கும் பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளத் தவிப்பவர்கள் பலர். அப்படி அறிந்துகொள்ள முடியவில்லை என்றால் சீற்றம் கொண்டு கவிதையை ஒதுக்கிவைப்பவர்களும் இருக்கிறார்கள். ஜென் கவிதை அல்லது ஹைக்கூ கவிதை என்பது அப்படிப்பட்ட கவிதையல்ல. புறக்காட்சிகளிலோ அல்லது அக எண்ணங்களிலோ மூழ்கியிருப்பவர்கள் தன்னைத் திளைக்கவைத்திருக்கும் அம்சத்தை ஒரு சொற்சித்திரமாகத் தீட்டிவைக்கச் செய்யும் முயற்சிகளாகவே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அச்சித்திரம் பல பரிமாணங்களைக் கொண்டது என்பதுதான் சிறப்பு.

கவிதையில் முன்வைக்கப்படுவது முன்னும் பின்னும் தொடர்ச்சியில்லாத ஒரு துளி கணம் அல்லது ஒரு துளி காட்சி. வைரத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பார்த்துப்பார்த்து மகிழ்வதுபோல அந்தக் கவிதையைப் பார்த்தும் படித்தும் மகிழவேண்டும். அம்மகிழ்ச்சியின் ஊடே சில வெளிச்சக்கீற்றுகளை நம் மனம் கண்டடையலாம். அந்த நேரத்துக்கு அந்த அனுபவமே கவிதையின் விளக்கம். அடுத்த கணம் அது மாறலாம். அல்லது மேன்மேலும் விரிவு கொள்ளலாம்.    

 

இலையற்ற மரக்கிளையிலே

ஜாக்கிரதையாகத் துளிர்க்கிறது

மாலைச் சூரியனைக் காணும் ஒரு காகம்

 

இது பாஷோவின் ஒரு கவிதை. இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு நிற்கிற ஒரு மரத்தின் முன்னால் நாம் நின்றுகொண்டிருப்பதாக நினைத்துக்கொள்ளலாம். காலை, மதியம், மாலை, இரவு என நம்மைச் சுற்றி நேரம் மாறிக்கொண்டே இருக்கிறது. வெயில், பனி, குளிர் என சூழலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இலையற்ற அந்தத் தனிமரம் ஏகாந்தமான சூழலில் கிளைகளை விரித்து நின்றுகொண்டே இருக்கிறது. தனிமையின் இனிமைக்கு அடையாளமாக அந்த மரத்தின் இருப்பு தோற்றமளிக்கிறது.

ஒருநாள் மாலை சூரியன் அடங்கும் பொழுதில் மீண்டும் நாம் அம்மரத்தின் முன் நிற்கிறோம். மெல்ல மெல்ல அஸ்தமனத்துச் சூரியன் வானத்தில் விளிம்பை நோக்கி இறங்கி வருகிறது. மரம் முன்னே நிற்க, சூரியன்  உருண்டுவரும் தோற்றம் பின்னால் தெரிகிறது. இறங்கிவரும் சூரியன் ஒரு கணத்தில் இலைகளற்று நீண்டிருக்கும் ஒரு கிளையை ஒட்டி வந்து நிற்கிறது.  அதே நேரத்தில் மாலை நேரத்தில் கூடு திரும்பும் அல்லது தன் கூட்டைத் தேடும் ஒரு காகம் அதே மரக்கிளையில் வந்து உட்கார்கிறது.  அந்தச் சூரியனை நாம் பார்ப்பதுபோலவே பார்க்கிறது.

ஒரே ஒரு கணம். அந்தக் காகம் அக்கிளையில் அரும்பிய இலையெனக் காட்சியளிக்கிறது. அந்தப் புதிய இலை சூரியனை நோக்கிப் படபடப்பதைப்போல இருக்கிறது. அந்த எண்ணமும் அனுபவமும்தான் அக்கவிதை.

இந்த அனுபவத்தை எட்டாமலேயே ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப் புரட்டிப் பார்ப்பதுபோலவும் இக்கவிதையைப் படிக்கலாம். அப்போது கிட்டும் மகிழ்ச்சியும் ஒருவித அனுபவமே. இவ்வாறாக, ஒரு வாசகரை வெவ்வேறு அனுபவங்களுக்கு ஆட்படுத்தும் பண்பைக் கொண்டிருப்பதுதான் ஹைக்கூ கவிதையின் சிறப்பு.

 

முலாம்பழப் பண்ணையில்

திருடன் முன் எதிர்ப்பட்டது

ஒரு குள்ளநரி

 

டைகி என்பவரின் கவிதை இது. ஒரு முலாம்பழப்பண்ணை. ஒரு பக்கத்தில் பழத்தைத் திருடி எடுத்துச் செல்ல வந்து நின்றிருக்கிறான் ஒரு திருடன். இன்னொரு பக்கத்தில் பழத்தைத் திருட்டுத்தனமாகத் தின்றுவிட்டுச் செல்ல வந்து நின்றிருக்கிறது குள்ளநரி. பழத்தைத் திருடுவதற்காக வெவ்வேறு வழிகள் வழியாக வந்திருந்த திருடனும் நரியும் தற்செயலாக எதிரும்புதிருமாகச் சந்தித்துக்கொள்கிறார்கள்.

இப்படி ஒரு தருணம் நேருமா, நேராதா என்பதல்ல பிரச்சினை. நேர்ந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் சுவாரசியத்தை அளிக்கிறது. திருடன் என்ன செய்யக்கூடும்? நரியை விரட்டிவிட்டு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். அல்லது நரி திருடனை அச்சுறுத்தி விரட்டிவிட்டு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். அல்லது அந்தப் பழத்துக்காக நரியும் திருடனும் சண்டை போட்டுக்கொள்ளலாம். அல்லது நரியும் திருடனும் பாதி பாதியாகக்கூட பழத்தைத் துண்டாக்கிப் பங்கு போட்டுத் தின்னலாம்.

அக்காட்சியைப் பார்த்ததும் எல்லாச் சாத்தியங்களையும் நம் மனம் அசைபோடத் தொடங்குகிறது. எல்லாமே உண்மைதான். ஆனால் அந்த எளிய உண்மையை முன்வைப்பதற்காகவா ஒருவர் கவிதை எழுதவேண்டும் என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால் அதன் போதாமையை உணர்ந்துகொள்ளலாம்.

கவிதையின் ஆழத்தை அறிய நாம் மேன்மேலும் ஆழமாகச் சிந்திக்கவேண்டும். பழம், திருடன், நரி மூன்றுமே மூன்று வகைமைகளின் அடையாளங்கள். இம்மூன்றுமே இப்பிரபஞ்சம் உருவாக்கியவை. இதில் ஒரு தரப்பாக நின்று பேச எதுவுமில்லை. ஆடுபுலி ஆட்டத்தைப்போல பழம், திருடன், நரி ஆட்டத்தை ஆடுகிறது பிரபஞ்சம். இது பிரபஞ்சத்தின் ஆட்டம். அந்த நுட்பத்தை ஒரு கணம் அனுபவமாக உணரவைக்கிறது இக்கவிதை.

 

காற்றடித்து அடித்து

மரத்தின் நிழலை

என் காலடிக்குக் கொணர்ந்தது

 

யஸ-பி என்பவரின் கவிதை இது. இக்கவிதையின் அனுபவமும் மகத்தானது. கோடைவெயிலில் நடந்துசெல்லும் நாம் ஒரு கணம் களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழே ஒதுங்கி நிற்பதாக நினைத்துக்கொள்வோம். நாம் நிற்கச் சென்ற கணத்தில் மரத்தின் நிழல் வேறொரு பக்கத்தில் வேறொரு கோணத்தில் விழுந்திருக்கிறது என்றும் நினைத்துக்கொள்வோம். நாம் நிற்கும் இடத்திலிருந்து ஓர் அடி கூட எடுத்துவைக்கமுடியாத அளவுக்கு நாம் களைப்பில் தோய்ந்திருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். தீராத வேட்கையோடு நின்ற இடத்திலேயே நிற்கிறோம். பொழுது சாயச்சாய நிழலின் கோணம் மாறியபடி இருப்பதை நாம் பார்க்கிறோம். நிழலின் இடமாற்றத்தை, காற்று கொஞ்சம்கொஞ்சமாக நிழலை நமக்காகத் தள்ளி இழுத்துக்கொண்டு வருவதாக நினைக்கத் தொடங்குகிறோம். இதுவும் பிரபஞ்சத்தின் ஓர் ஆட்டம்.

 

இதோ இந்தப் புஷ்பம்

பறவைக்கோ வண்ணத்துப்பூச்சிக்கோ

தெரியாது – மாலை வானம்

 

இது பாஷோவின் கவிதை. ஒரு மலர்ச்செடியில் சென்று அமராத பறவையோ, மலரில் அமர்ந்து தேன் அருந்தாத வண்ணத்துப்பூச்சியோ உலகத்தில் இருக்கமுடியாது. தும்பைப்பூ போல அளவில் சிறிய பூவாக இருந்தாலும், தாமரைப்பூ போல அளவில் பெரிய பூவாக இருந்தாலும் அவை பறவைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் ஈர்த்துவிடும் ஆற்றல் கொண்டவை. ஆனால் ஏதோ ஒரு மலர் மலர்ந்திருப்பதை இரண்டுமே பொருட்படுத்தாமல் பறந்துபோய்விட்டன. அல்லது அதன் இருப்பைப்பற்றிய தெளிவே இரண்டுக்கும் இல்லாமல் போய்விட்டன. ஒவ்வொரு வரியாகப் படிக்கப்படிக்க இந்த எண்ணத்தைத்தான் நாம் வந்தடைகிறோம். எது அந்த மலர்? அஸ்தமன வானம்தான் அந்தப் பூந்தோட்டம்.

செவ்வண்ணம் படிந்த அந்தத் தோட்டத்தில் பூ பூத்துக் குலுங்கியபடி இருக்கிறது. அதன் இருப்பைக் கவனிக்காமல்தான் பறவைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் பறந்து செல்கின்றன. சரி, அவை போகட்டும். அவற்றின் பார்வையில் அக்காட்சி தென்படவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அக்காட்சியைத் தன் இரு கண்களாலும் பார்க்கும் மனிதர்களும் ஒரு கண நேரம் நின்று அதைக் கவனிக்காமல் பறவைகளைப்போலவும் பூச்சிகளைப்போலவும் பறந்துபோவதற்கு என்ன காரணம் சொல்லமுடியும். உணரத் தெரிந்த உயிர்களுக்குப் பார்க்கத் தெரியவில்லை. பார்க்கத் தெரிந்த உயிர்களுக்கு உணரத் தெரியவில்லை. இதுவும் ஒருவகை பிரபஞ்சத்தின் விளையாட்டு என்றே தோன்றுகிறது.

 

லேசாகப் புதுச்சந்திரன்

ஒரு ஹெய்குவை

அலைகள் மேல் எழுதுகிறது

 

க்யோஷி எழுதிய கவிதை இது. சூரியன் மறைந்து நிலவு மெல்ல எழுந்து வருகிறது. பால்போன்ற நிலவின் வெளிச்சம் நீளவண்ணத்தில் கொந்தளிக்கும் கடலலைப்பரப்பின் மீது தன் மொழியில் ஒரு கவிதையை எழுதுகிறது. ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்கலில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்ற பிரமிளின் கவிதைவரியை நினைத்துக்கொள்ளாமல் இக்கவிதையைக் கடந்துசெல்ல முடியவில்லை. இங்கு, கடலலையின் பக்கங்கள் மீது நிலவொளி எழுதிய கவிதையைக் காட்டுகிறார் கவிஞர். அலையின் உலகமோ, நிலவின் உலகமோ அறியாத நாம் அக்கவிதையை எப்படிப் புரிந்துகொள்வது. ஒருவேளை ஞானம் என்பதே புரிந்துகொள்ள முடியாமையின் முன் கணந்தோறும் நின்றிருத்தல்தானோ?

இக்கவிதைகளைப் படிக்கும்போது, இவையனைத்தும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்க்கப்பட்டவை என்ற எண்ணமே எழவில்லை. மொழிபெயர்த்து சில நாட்களே ஆனவை என்கிற எண்ணமே எழுகிறது. அனுபவம் புதுசாக இருப்பதால் வரிகளும் தம் புதுமைத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. நம் மொழியின் தேவையை உணர்ந்து ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கும் க.நா.சுப்ரமண்யம் நன்றிக்குரியவர். எங்கெங்கோ சிதறியிருந்த அக்கவிதைகளைத் தேடியெடுத்து முதன்முதலாக நூலுருவம் கொடுத்திருக்கும் ஸ்ரீநிவாசன் கோபாலனும் நம் நன்றிக்குரியவர்.

 

(என்ன ஆனந்தம். ஜென் கவிதைகள். மொழிபெயர்ப்பு: க.நா.சுப்ரமண்யம். பதிப்பாசிரியர் ஸ்ரீநிவாச கோபாலன். அழிசி பதிப்பகம், 1-37, சன்னதி தெரு, கீழநத்தம், திருநெல்வேலி -627353. விலை. ரூ. 100)

 

(புக் டே – இணையதளம் – 17.07.2025)