Home

Monday 29 August 2016

அட்டை - (சிறுகதை)



வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதேரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டாஎன்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன். “எங்களுக்குள்ள கூப்ட்டுக்கறதுக்குத்தான் பட்டப்பேரு, ஒனக்கு கெடயாதுன்னு எத்தன தரம் சொன்னாலும் எப்படித்தான் மறந்துபோவுமோ தெரியலைஎன்றேன். அம்மா சிரித்தபடியே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டுசரிடா, ரொம்பத்தான் முறுக்கிக்காத. ஒன் அரும கூட்டுக்காரன் கோபால் வந்துட்டு போனான். போதுமா?” என்றாள். பிறகு, ‘ஒன்ன செல்லுல கூப்ட்டானாம். நீ ஏன் எடுக்கலை?” என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குச் சென்றாள். சந்தேகத்தோடு கைப்பேசியை எடுத்துச் சோதித்தேன். சுத்தமாக சார்ஜ் இல்லை. அவசரமாக சார்ஜரில் பொருத்திவிட்டுஎன்னவாம்? என்றபடி அவள் பின்னாலேயே நடந்துசென்று நின்றேன். ”அவன் எங்கடா நின்னு பேசனான்? இன்னும் நீ வரலைன்னு சொன்னதுமே அப்படியே வாசலோட போயிட்டான்என்றாள்

கற்பனையும் விளையாட்டும் - செந்தில் பாலாவின் ‘இங்கா’- (புத்தக அறிமுகம்)


சிறுவர் பாடல்களுக்குரிய அடிப்படைகளாக இரண்டு குணங்களை வரையறுக்கமுடியும். ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பாடக்கூடிய இனிமையான தாளக்கட்டில் இருக்கவேண்டும் என்பது முதல் வரையறை. குழந்தைகள் நாவில் புழங்கக்கூடிய சொற்களால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அடுத்த வரையறை. அப்படிப்பட்ட பாடல்களை மிக அபூர்வமாகவே காணமுடிகிறது.

Monday 22 August 2016

நாவல் கலை - கொற்றவை முதல் குறத்தியாறு வரை


தமிழ் நாவல்கள் கடந்து வந்திருக்கும் சமீபத்திய பத்தாண்டுகளை ஒருவிதத்தில் ‘வரலாற்றுப் புனைகதைகளின் பொற்காலம்’ என்று குறிப்பிடலாம். வரலாற்றுப் புனைகதை என்னும் வகைமையில் அடங்கும் படைப்புகள், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வாசகர்கள் முன்னிலையில் பரப்பிவைக்கும் எளிய முயற்சிகளல்ல. அதே சமயத்தில் அந்த உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு, வரலாற்றின் பெயரால் சொந்தக் கற்பனைகளை அழகிய புனைவுமொழியில் கவர்ச்சிகரமாகக் கட்டியெழுப்பி நிறுத்தும் முயற்சிகளுமல்ல. வரலாற்றின் உண்மைகளை முன்வைத்து,  அதன் இடைவெளிகளை தர்க்கபூர்வமான கற்பனைகளால் நிரப்பி, முற்றிலும் புதியதொரு வரலாறாக புனைந்து காட்டும் முயற்சிகள் என்று வரையறுத்துக்கொள்ளலாம். வரலாற்றுத்தகவல்கள் வரலாற்றின் களத்தில் வீற்றிருக்க, வரலாற்றுப்புனைகதைகள் இலக்கியத்தளத்தில் கால்கொள்கின்றன. அதைக்கொண்டு இதை மதிப்பிடவும், இதைக்கொண்டு அதை மதிப்பிடவுமான எல்லாச் சாத்தியங்களையும் ஒரு வாசகன் மேற்கொள்ளலாம். இதுவரை அடைந்து கிடந்த காட்டுக்குள் செல்வதற்கான ஒரு புதிய தடம் வரலாற்றுப்புனைகதைகள்.

Wednesday 17 August 2016

பேகம் மஹால் - (கட்டுரை)



     விடுமுறை நாட்களில் காலையிலேயே சிற்றுண்டியை முடித்துவிட்டு தோள்பையில் புத்தகங்களோடு எங்காவது ஒரு தோப்பை அல்லது மரத்தடியைத் தேடிப் பிடித்து உட்கார்ந்து படித்துவிட்டுத் திரும்புவது என் சின்ன வயதிலிருந்து தொடர்ந்துவரும் பழக்கம். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இரண்டு ஆலமரங்கள், இரண்டு அரசமரங்கள், நான்கு இலுப்பைமரங்கள், மூன்று நாவல்மரங்கள், ஆறேழு புளியமரங்கள் உண்டு. சற்றே தள்ளியிருந்த இடுகாட்டுக்குச் செல்லும் பாதையின் இரண்டுபக்கங்களிலும் ஏராளமான வேப்பமரங்கள் உண்டு. ஒரு சித்திரம்போல இந்தக் காட்சி என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. எந்த ஊரில் எந்த மரத்தடியில் அமர்ந்தாலும் அந்தக் காட்சியைக் காணமுடியும். அதன் நிழலும் காற்றும் மணமும் எனக்குள் இளம்பருவத்து நினைவுகளைத் தூண்டிவிடும். இலையுதிர்காலச் சமயத்தில் நிழலும் இல்லாமல் இலைகளும் இல்லாமல் உயர்ந்திருக்கும் தைலமரங்களுக்கு அருகே நிற்கும்போதுகூட கிராமத்து மரங்களின் நிழலை உணரமுடியும். அந்த நிழலும் காற்றும் ரத்த ஓட்டத்தில் இரண்டறக் கலந்திருக்கின்றன.

விடைசொல்லமுடியாத கேள்வி - (கட்டுரை)



     ஆதர்ஷா திரையரங்கிலிருந்து செல்லும் சாலை ஒரு செங்குத்துக்கோடுபோல பழைய சென்னைச்சாலையைத் தொட்டு முடிகிறது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி பத்து நிமிடநேரம் நடந்துசென்றால் ஏரியை அடைந்துவிடலாம். யாருமே அதை சாதாரணமாக ஏரி என்று சொல்வதில்லை. அல்சூர் ஏரி என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். ஒரு செல்லப்பெயர்போல. ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்த ஏரி. கணந்தோறும் புகை கக்கியபடி ஓடுகிற வாகனங்களுக்கிடையே உலரவைக்கப்பட்ட பள்ளிக்கூட வெள்ளைச் சீருடைபோல பளபளக்கும். ஏரியையொட்டிய சாலையில் நடக்கும்போது உணரக்கூடிய காற்றின் குளுமையில் திளைப்பது எப்போதும் இனிய அனுபவம்.

Wednesday 10 August 2016

இருட்டின் தடம் - (கட்டுரை)



     என்னைத் தேடிவரும் புதிய நண்பர்களை வீட்டுக்கு அருகே உள்ள ஆதர்ஷா திரையரங்கத்துக்கு வந்துவிடச் சொல்வதுதான் என் வழக்கம். பிறகு, அந்த இடத்துக்குச் சென்று காத்திருந்து, அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்.  இந்த ஏற்பாட்டில் சில நன்மைகள் உண்டு. பேருந்தில் வருகிறவர்கள் அந்தத் திரையரங்கின் அருகில் உள்ள நிறுத்தத்தில் இறங்கிவிடலாம். ஆட்டோ அல்லது சொந்த வாகனத்தில் வருகிறவர்கள் விசாரித்துக் கண்டுபிடிப்பது எளிது. இது முதல் நன்மை. மொழியும் புரியாமல் தெரு அடையாளமும் புரியாமல் திண்டாடுகிற அலைச்சலை முற்றிலும் தவிர்க்கலாம். இது இரண்டாவது நன்மை.

ஆற்றின் விழிகள் - (கட்டுரை)



     நேத்ராவதி நதியில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது தர்மஸ்தலாவைப் பார்க்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். மழைநாட்களில் சின்னச்சின்ன கிளைகளாக உருவாகி மலைப்பகுதிகளைத் தழுவி ஓடிவந்து இணைந்து நேத்ராவதி என வடிவமெடுத்துப் பொங்கிப் புரளும்போதுதான் புதுவெள்ளம் எழுச்சியோடு பாய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தைப்பற்றிய செய்தியைப் படிக்கும்போது மனம் பரபரக்கும்.  அக்கணமே வண்டியைப் பிடித்துப் பயணம்செய்து குளிர்மேங்கள் கவிந்திருக்கிற மலையடிவாரத்தில் நின்றுவிடவேண்டும் என்று தோன்றும். ஆனால் வேலைநெருக்கடிகளால் அந்தக்கனவு அப்படியே நொறுங்கிவிடும். ஒரேஒரு முறை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் என் ஆசைப்படியே புறப்பட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அன்று இரவே வண்டியேறித் தூக்கமில்லாமல் பயணம் செய்து அடுத்த நாள் காலை தர்மஸ்தலாவில் இறங்கினேன்.

Wednesday 3 August 2016

ஒரு ரயில் பயணம் (கட்டுரை)



                அலுவலக வேலைக்காக தும்கூருக்குச் சென்றிருந்தேன். வேலைகளை முடித்துக்கொண்டு புறநகரில் வசிக்கக்கூடிய நண்பரொருவரையும் பார்த்துவிட்டு, சாயங்காலமாகப் புறப்படும் பெங்களூர் வண்டியில் திரும்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் நான் நினைத்திருந்த அளவுக்கு வேலையை எளிதாக முடிக்கமுடியவில்லை. ஒரு பிரச்சினையைச் சரிசெய்யும்போது இன்னொரு புதிய பிரச்சினை முளைத்தது. அதையும் சரிப்படுத்திவிட்டுப் பார்த்தால் மற்றுமொரு பிரச்சினை தலைதூக்கியது. எதிர்பாராதவிதமான மின்வெட்டு என்னும் வடிவத்தில் வேறொரு சிக்கலும் முளைத்தது. மதிய உணவுக்குக்கூடச் செல்ல இயலவில்லை. மின்சாரம் திரும்பிய பிறகு, பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்து சரிசெய்வதற்குள் சாயங்காலமாகிவிட்டது. அலுவலகத்துக்கு வெளியே இருந்த கடையில் ஒரு தேநீர்மட்டும் அருந்திவிட்டு வேகவேகமாக தொடர்வண்டி நிலையத்தை அடைந்தேன். வண்டி புறப்பட இன்னும் ஐந்தே நிமிஷங்கள்மட்டுமே பாக்கியிருந்தன.

கவித்துவப் புள்ளிகள் (நூல் அறிமுகம்)


செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’

ஒரு புறக்காட்சியில் மானுட வாழ்வின் சாரத்துக்கு இசைவான  அம்சத்தைக் கண்டடைவதை ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும். கவிதைக்குள் அந்த அனுபவத்தைப் பொருத்தமான சொற்களால் கட்டியெழுப்பும்போது, அது மகத்தான அனுபவமாக உருமாறிவிடும். பிறகு, கச்சிதமாகச் செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு கோவில் சிற்பம்போல மொழிக்குள் அந்த அனுபவம் நிலைத்திருக்கத் தொடங்கிவிடும். எழுத்துப் பயணத்தில் இந்தத் தேடலின் விசையால் உந்தப்படாத கவிஞர்களே இல்லை. அந்தரங்கம் தொகுதியின் வழியாக தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் செல்வராஜ் ஜெகதீசன். சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை அவருடைய ஐந்தாவது தொகுதியாக  வெளிவந்துள்ளது. அவருடைய தேடல் பயணம் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.