விடுமுறை
நாட்களில் காலையிலேயே சிற்றுண்டியை முடித்துவிட்டு தோள்பையில் புத்தகங்களோடு எங்காவது
ஒரு தோப்பை அல்லது மரத்தடியைத் தேடிப் பிடித்து உட்கார்ந்து படித்துவிட்டுத் திரும்புவது
என் சின்ன வயதிலிருந்து தொடர்ந்துவரும் பழக்கம். எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் அருகில்
இரண்டு ஆலமரங்கள், இரண்டு அரசமரங்கள், நான்கு இலுப்பைமரங்கள், மூன்று நாவல்மரங்கள்,
ஆறேழு புளியமரங்கள் உண்டு. சற்றே தள்ளியிருந்த இடுகாட்டுக்குச் செல்லும் பாதையின் இரண்டுபக்கங்களிலும்
ஏராளமான வேப்பமரங்கள் உண்டு. ஒரு சித்திரம்போல இந்தக் காட்சி என் மனத்தில் ஆழமாகப்
பதிந்திருக்கிறது. எந்த ஊரில் எந்த மரத்தடியில் அமர்ந்தாலும் அந்தக் காட்சியைக் காணமுடியும்.
அதன் நிழலும் காற்றும் மணமும் எனக்குள் இளம்பருவத்து நினைவுகளைத் தூண்டிவிடும். இலையுதிர்காலச்
சமயத்தில் நிழலும் இல்லாமல் இலைகளும் இல்லாமல் உயர்ந்திருக்கும் தைலமரங்களுக்கு அருகே
நிற்கும்போதுகூட கிராமத்து மரங்களின் நிழலை உணரமுடியும். அந்த நிழலும் காற்றும் ரத்த
ஓட்டத்தில் இரண்டறக் கலந்திருக்கின்றன.
எங்கள்
ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நான்கு வழிகள் உண்டு. எல்லா வழிகளும் பக்கவாட்டில் மரங்களைக்
கொண்டவை. எந்தப் பக்கம் திரும்பினாலும் வேப்பமரங்கள் அசைவது தெரியும். எண்ணிக்கையில்
அதற்கு அடுத்த இடம் புளியமரங்களுக்கும் சவண்டல் மரங்களுக்கும் உண்டு. மரத்தடியில் உட்கார்ந்து
படிக்கும்போது பறவைகளின் பாடல்களைக் கேட்டுக்கேட்டு, ஒருபோதும் அதைப் பிரித்தறியாதபடி
மனம் தன்னைத்தானே தகவமைத்துக்கொண்டது. ஒவ்வொரு தருணத்துக்கும் தகுந்தபடி குயில்களில்
குரலில்மட்டும் ஆறுவிதமான ஏற்றஇறக்கங்கள் தொனிப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். அந்தக்
குரல் ஆழமாக உள்ளே இறங்கிப் பதிந்தபிறகு, குயிலின் குரல் நம் நெஞ்சிலிருந்தே புறப்படுவதுபோன்ற
ஓர் எண்ணமெழும். மீண்டும் பெறமுடியாத அரிய செல்வத்தை ஒரே கணத்தில் பறிகொடுத்துவிட்டதுபோல.
நெஞ்சுவெடிக்க விம்மிவிம்மி அழுவதுபோல. தனக்குத் தெரிந்த வரியைத் தயங்கித்தயங்கி முன்வைப்பதுபோல.
ஆனந்தமான ஓர் அழைப்பைப்போல. மரங்களே இல்லாத அல்லது பறவைகளே இல்லாத ஓரிடத்தில் அமரநேரும்
பொழுதுகளில் மனம் அடையும் தவிப்புக்கு அளவே இல்லை. அக்கணமே திருவிழாச் சந்தடியில் தாயைத்
தேடிக் கலங்கி விம்முகிற குழந்தையைப்போல ஏங்கத் தொடங்கிவிடும்.
நான்
படித்த ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கூடம் ஆறேழு தூங்குமூஞ்சி மரங்களும் மையத்தில் கட்டிடமும்
உள்ள அமைப்பைக் கொண்டது. சில வகுப்புகள் கட்டிடத்துக்கு உள்ளே நடப்பதும் சில வகுப்புகள்
மரத்தடியில் நடப்பதும் தினசரிப்பழக்கம். நவநீதம் டீச்சர் பாடிக் காட்டும் பாட்டுக்கும்
ராமதாஸ் சார் நடத்திய பாடத்துக்கும் எங்களைப்போலவே மரங்களும் தலையசைத்துக் கேட்பதுபோல
இருக்கும். எங்கள் உயர்நிலைப்பள்ளியிலும் மரத்தடி வகுப்புகள் நடைபெறும். கரும்பலகையை
ஒரு தாங்கியில் நிறுத்திவிட்டு பாடம் நடத்திய ஆசிரியர்கள் முகங்கள் இன்னும் நெஞ்சிலேயே
உள்ளன. வகுப்பறைக்கு முன்னால் மரக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்ப்பதையும் விளையாட்டு
மைதானத்தில் முட்செடிகளை அகற்றுவதையும் கத்தாழைச்செடிகளை நட்டு வேலியெழுப்புவதையும்
ஒரு பாடமாகவே நடத்திய ஆசிரியர்களும் இருந்தார்கள்.
பெருநகரத்தை
நாடிவந்த எண்பதுகளில் விடுமுறையில் உட்கார்ந்து படிக்க மரத்தடிகள் கிடைக்குமோ கிடைக்காதோ
என எழுந்த அச்சம் முதல்நாளிலேயே பனிபோலக் கரைந்துபோனது. நான் வசித்த வீட்டுக்கு அக்கம்பக்கத்தில்
பூங்காக்களும் தோப்புகளுக்கும் குறைவே இல்லை. அலைந்து அலைந்து பல இடங்களை நான் தேர்ந்தெடுத்து
வைத்திருந்தேன். மனநிலைக்குத் தகுந்தபடி மரத்தடியை மாற்றிக்கொள்வேன். அது எனக்கு நானே
வகுத்துக்கொண்ட ஒரு சின்ன மனக்கணக்கு. ஒருநாள் தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகங்களை
மாற்றிக்கொண்டு ஏரியை ஒட்டி நடந்தபடி திரும்பிவந்தபோது சற்றே தொலைவில் மரங்கள் அடர்ந்த
ஒரு புதிய தோப்பை தற்செயலாகக் கண்டுபிடித்தேன். ஏரியின் மேற்கு விளிம்பிலிருந்து இருநூறடி
தொலைவில்தான் இருந்தது அந்தத் தோப்பு. மரங்களின் பச்சைநிறத்தால் வசீகரிக்கப்பட்டு வேகவேகமாக
நடந்து அந்த இடத்தை அடைந்தேன். உதிர்ந்தும் உதிராமலும் அரைகுறையாக நின்றுகொண்டிருந்த
சுற்றுச்சுவர்களுக்கு நடுவே பச்சைப்பசேலென்ற தோற்றமும் இடையில் பாழடைந்து இடிந்த கோலத்தில்
காணப்பட்ட ஒரு மாளிகையின் இருப்பும் ஒரு பழங்காலத்தன்மையை அந்த இடத்துக்கு வழங்கின.
ஏராளமான மழைமரங்கள். ஏழெட்டு புங்கமரங்கள். முட்புதர்கள். ஒரு மூலையில் இடிபாடிலிருந்து
சேகரிக்கப்பட்ட கற்களின் குவியல் கிடந்தது. நூறாண்டுக்கு முந்தைய தோற்றத்தில் அந்த
இடம் காணப்பட்டது. பரபரப்பு மிக்க அந்தத் தெருவின் மற்றொரு விளிம்புக்கும் அந்தத் தோப்புக்கும்
தொடர்பே இல்லாததுபோல விசித்திரமாக இருந்தது.
இடிபாடுகளிடையே
வழியை உண்டாக்கிக்கொண்டு தோப்புக்குள் சென்று சுற்றிப் பார்த்தேன். பறவைகளின் இரைச்சலைத்
தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. அண்ணாந்து பார்த்தால் வானமே தெரியாத அளவுக்கு மரக்கிளைகள்
எல்லாத் திசைகளிலும் வளர்ந்து அடைத்திருந்தன. ஒருகணம் கிராமத்து நினைவு மூண்டு கலைந்தது.
வசதியான ஒரு மரத்தடியைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து படிக்கத் தொடங்கிவிட்டேன். கிட்டத்தட்ட
மூன்றுமணி நேரம் கழிந்ததே தெரியவில்லை. புத்தகத்தை முடித்துவிட்டுத்தான் எழுந்தேன்.
அன்றுமுதல் நான் படிக்கும் இடங்களின் பட்டியலில் அந்தத் தோப்பையும் சேர்த்துக்கொண்டேன்.
தற்செயலாக
அந்தக் கட்டிடத்தைப்பற்றி நண்பரொருவரிடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டிருந்த தருணத்தில்தான்,
அதன் பெயர் பேகம் மஹால் என்பது தெரிந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக யாரோ ஒருவர்
தன் தாயின் நினைவாக அல்லது காதலியின் நினைவாக கட்டியெழுப்பிய மாளிகை என்றார். அதைப்
பராமரிக்கவோ அல்லது அந்த இடத்தில் தங்கியிருந்து வாழவோ வாரிசுகள் இல்லாததால் பல ஆண்டுகளாகப்
பாழடைந்து கிடப்பதாகவும் சொன்னார். ஆளில்லாத சொத்து என்பதால் கைக்குக் கிடைத்த மரச்சட்டங்களையும்
இரும்புகளையும் பலரும் பெயர்த்தெடுத்துச் சென்றுவிட, நிறம் மங்கிய வெறும் சுவர்கள்
மட்டுமே அந்த இடத்தில் எஞ்சியிருந்தன. மாடியில் உலவிக்கொண்டே அதிகாலைச் சூரியனையும்
அஸ்தமனச் சூரியனையும் நிறம்மாறும் வானத்தையும் நிலாவையும் ஆசைதீரப் பார்த்தபடியும்
நீர் தளும்பி நிற்கிற ஏரியிலிருந்து வீசுகிற குளிர்ந்த காற்றில் திளைத்தபடியும் வாழ்ந்த
பேகம் குடும்பத்தை ஒருகணம் கற்பனையிலேயே வரைந்து பார்த்துக்கொண்டேன். கோடையைக் கழிப்பதற்காக தனக்கென ஒரு மாளிகையை ஸ்ரீரங்கப்பட்டணத்தில்
திப்பு சுல்தான் கட்டியெழுப்பி வாழ்ந்ததைப்போல, யாரோ ஒரு பேகம் அல்லது அந்தப் பேகத்தின்
பெயரை மாளிகைக்குச் சூட்டி மகிழ்ச்சியடைந்த இஸ்லாமியச் செல்வந்தன் அந்த ஏரிக்கரையில் ஆனந்தமாக வாழ்ந்திருக்கக்கூடும்.
ஆனந்தத்தின் மிச்சமாக இன்று எஞ்சியிருப்பது அந்த இடிந்த மாளிகையும் தோப்பும்மட்டுமே.
அடுத்தமுறை
சென்றபோது அந்தக் கட்டிடத்தை அவசரமில்லாமல் சுற்றிப்பார்த்தேன். யாரோ ஒருவருடைய கனவுக்கு
அருகில் நடப்பதுபோல இருந்தது. என்னால் பார்க்கமுடியாத சிலர் என்னை ஏதோ ஒரு கோணத்திலிருந்து
உற்றுஉற்றுப் பார்ப்பதுபோல இருந்தது. ஒரு கை உள்ளிருந்து நீண்டு என் தோளைத் தொட முயற்சிசெய்வதைப்போல
நினைத்துக்கொண்டேன். அக்கணமே அடிவயிற்றில் ஒரு குளிர் படர்வதை உணர்ந்தேன். எருக்கஞ்செடிகளும்
முட்புதர்களும் அடர்ந்திருந்தன. உத்திரங்கள் சிதைந்தும் சுவர்கள் சரிந்து விழுந்தும்
வாசலை அடைத்திருந்தன. ஒரு குப்பைக்காடுபோல காட்சியளித்தது கூடம். ஒரு பெரிய தூணையும்
அதைச் சுற்றிக்கொண்டு மெத்தைக்குச் செல்லும் படிக்கட்டுகளையும் பார்க்கமுடிந்தது. உள்ளே
சென்று பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் அழுக்கின் நெடியால் ஏற்கனவே எனக்கு மூச்சு முட்டத்
தொடங்கியிருந்தது. இந்த முறை வேண்டாம், இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று நகர்ந்துவிட்டேன்.
தொடர்ந்து
வந்த இரண்டு விடுமுறையன்றும் வெளியூர்ப்பயணங்கள் இருந்ததால் தோப்புக்குச் செல்லமுடியாமல்
போனது. மூன்றாவது வாரத்தில்தான் செல்லமுடிந்தது. நின்று நிதானமாக இடிபாடுகளைச் சுற்றிப்
பார்க்கத் தொடங்கினேன். இடிந்துபோன ஒரு ஜன்னலுக்குக் கீழே சுவர்முழுக்க கரித்துண்டால்
கிறுக்கப்பட்ட வரிகளும் வக்கிரமான உடலுறவுச்சித்திரங்களும் காணப்பட்டன. கன்னடத்திலும் தமிழிலும் ஏராளமான பெயர்கள். எண்கள்.
தேதிகள். வாசகங்கள். இதயத்தை ஊடுருவிச் செல்லும் அம்பின் சித்திரங்கள் பல்வேறு அளவுகளில்
சுவர்முழுக்க நிறைந்திருந்தன.
காரணமே
இல்லாமல் அந்த எழுத்துகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். ஒன்றுக்கொன்று தொடர்பே
இல்லாமல் ஏராளமான வாசகங்கள். "இந்தியாதான் இந்திரா. இந்திராதான் இந்தியா."
"உன்னை நான் காதலிக்கிறேன். என்னை நீ காதலிப்பாயா?". "பாம்புப்புற்றில்கூட
கையை விடுவதற்குக்கூட யோசனை தேவையில்லை. ஆனால் ஒரு பெண்ணின் கையைத் தொடுவதற்குமுன்பாக
ஆயிரம்முறை யோசனை செய்". "இந்த நிலம், காற்று, தண்ணீர் எல்லாமே எங்களுடைய
உயிர்க்குச் சமமானவை". "காதலிப்பவர்கள் முட்டாள்கள். காதலித்துத் தோல்வியடைபவர்கள்
முண்டங்கள்". இப்படி ஏராளமான வரிகள். பல படிக்கக்கூட கூச்சம் தருகிற மோசமான வசைகள்.
ஒவ்வொரு சொல்லிலும் ஏராளமான எழுத்துப்பிழைகள். இடையிடையே வளைந்துவளைந்து பல கோடுகள்
குறுக்கும்நெடுக்குமாக காணப்பட்டன.
எதிர்பாராத
ஒரு கணத்தில் சுவரின் விளிம்பில் எழுதப்பட்ட வரிகள்மீது பார்வை பதிந்தது. "நான்
உன்னைக் காதலிக்கிறேன்". "நீ ஒரு பைத்தியம்". "நீ இல்லாமல் என்னால்
உயிர்வாழமுடியாது". "முட்டாள்கள் மரணம் நாட்டுக்கு நல்லது". "நாளை
அதிகாலை என் மரணச்செய்தி உன்னை வந்து சேரும்". ஒன்றின்கீழே ஒன்றாக அடுத்தடுத்து
எழுதப்பட்டிருந்த வரிகளைப் பார்த்ததும் அவற்றுக்கிடையே ஒரு தொடர்ச்சியிருப்பதுபோலத்
தோன்றியது. யாரோ இருவரிடையே நிகழ்ந்த உரையாடலாக அது இருக்கக்கூடும் என்று நம்பினேன்.
மீண்டும் அந்த வரிகளின் அடுக்கைப் படித்தேன். சந்தேகமே இல்லை. முதலில் இடம்பெறுவது
ஒரு கோரிக்கை. பிறகு இடம்பெறுவது ஆழமான மறுப்பு. தன் மனத்தில் இருப்பதை ஒருவர் மற்றவருக்கு
எழுதிக் காட்டியிருக்கிறார்கள். அந்த இறுதிவரி என்னை மிகவும் கலங்கவைத்தது. உயிர் அந்த
அளவுக்கு அற்பமாகிவிட்டதா? உரையாடல் நீண்டுசெல்லாமல் அத்துடன் முற்றுப்பெற்றிருந்த
விதம் பதற்றத்தை அளித்தது. அந்த வரியை எழுதிய ஆண் அல்லது பெண் உயிருடன் இருக்கவேண்டுமே
என்று சொல்லிக்கொண்டேன். அந்த இடம் தனிமை சூழ்ந்த இடம்மட்டுமல்ல, தனிமை தேவைப்படுகிற
பலரும் பற்பல தருணங்களில் வந்து போகிற இடம் என்பது அப்போது உறைத்தது. உடனே சுவர் முழுக்க
எழுதப்பட்டிருந்த வரிகளையெல்லாம் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த கவனத்துடன் படிக்கத் தொடங்கினேன்.
துண்டுதுண்டாக ஏராளமான உரையாடல்கள். கிண்டல்கள். சவால்கள். கெஞ்சல்கள். கோரிக்கைகள்.
வாக்குறுதிகள். கனவுகள். கற்பனைகள். அத்தோப்பு பலரும் வந்துபோகிற இடம் என்பது உறுதியானது.
ஏராளமான கண்கள் என்னைப் பார்த்தன. பலருடைய மூச்சுக்காற்று புதர்களில் முட்டி மோதியது
பறவைகளின் கீச்சுக்குரலைப்போலவே மறைந்திருப்பவர்களின் கிசுகிசுப்பு காற்றில் கரைந்து
பரவியது. அன்று அமைதியாக பத்துப் பக்கங்கள்கூட படிக்கமுடியவில்லை. சம்பந்தமே இல்லாமல்
பல முகங்கள் கண்ணெதிரே மிதந்துவந்து பிறகு கலைந்தன.
வேறொரு
விடுமுறையில் படிப்பதற்காக அந்தத் தோப்புக்குப் போயிருந்தபோது, முதலில் எதையும் வேடிக்கை
பார்த்து நேரத்தை வீணடிக்கக்கூடாது என்ற முடிவோடுதான் சென்றேன். கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம்
அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்துசென்றது. பிறகு, ஒரு மாறுதலுக்காக வேடிக்கை
பார்த்தபடி ஒரு சுற்று சுற்றிவரலாமே என எழுந்த எண்ணத்தால் உறுதி குலைந்தது. அதே வரிகள்.
அதே சித்திரங்கள். ஏதோ ஒரு வசீகரம்தான் என்னை அவற்றைநோக்கி இழுத்துச் சென்றது. பார்வையை
நகர்த்திய வேகத்தில் ஒரு சுவரின் விளிம்பில் சில வரிகளைக் கண்டுபிடித்தேன். முற்றிலும்
புதிய வரிகள். கடந்த வாரம் உறுதியாக இவை இடம்பெற்றிருக்கவில்லை என மனம் நம்பியது. என்
நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் எழுத்துகளில் தெரிந்த பளபளப்பு. அருகில் சென்று ஆர்வத்துடன்
படித்தேன். "காலை 11". "காலை
11". "மாலை 3.30". "பகல் 12". "காலை 11". வரிசையாக
இருந்தன. ஒரே விதமான கையெழுத்து. ஆனால் இந்த தகவல்குறிப்புகள் எதற்காக என்றுதான் குழப்பமாக
இருந்தது. சந்திப்புக்கான அழைப்பாக இருக்கக்கூடுமோ எனத் தோன்றியது. யார் யாருக்குத்
தெரிவிக்கிறார்கள்? எங்கே பார்த்துக்கொள்கிறார்கள்? இங்கே எழுதிவைத்துவிட்டு வேறொரு
இடத்தில் சந்தித்துக்கொள்கிறார்களா அல்லது
சந்திப்பதற்கான நேரத்தை முதலில் தெரிவித்துவிட்டு பிறகு இவ்விடத்திலேயே சந்தித்துக்கொள்கிறார்களா?
அவர்களைக் கண்டுபிடிக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒருகணம் தோன்றியது.
மறுகணமே என் அற்பத்தனத்தை நினைத்து என்னை நானே வெறுத்தேன். அந்தக் கசப்போடு தொடர்ந்து
அங்கே நிற்கமுடியாமல் அப்போதே அந்தத் தோப்பைவிட்டு வெளியேறினேன்.
அடுத்த
வாரம் காலையிலேயே கிளம்பிவிட்டேன். தோப்பை அடைந்ததும் படிக்க உட்கார்வதற்கு முன்பே
புதிதாக ஏதேனும் வரிகள் தென்படுகின்றனவா என்று பழைய சுவரின் பக்கமாக என் பார்வை தன்னிச்சையாகத்
திரும்பியது. என்னை நானே உள்ளூர வெறுத்துக்கொண்டாலும் அந்த விருப்பத்தைத் தடுக்க முடியவில்லை.
வேகமாக நடந்துசென்று பழைய வரிகளின்பக்கம் நின்றேன். இன்னும் கூடுதலாக சில வரிகள் காணப்பட்டன.
"பகல் 12.30". "இன்று இல்லை". "இன்று இல்லை".
"மாலை 4". "இன்று இல்லை நாளை வா". என் இதயத்துடிப்பு அதிகரிப்பதை
உணரமுடிந்தது. இவை சந்திப்பதற்கான வரிகள்தான் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இனிமேல்
இல்லை. ஏதோ காரணத்தை முன்னிட்டு சில நாட்களில் அந்தச் சந்திப்புக்கு வழிகிடைக்கிறது.
சில நாட்களில் கிடைக்கவில்லை. அந்த வரிகளைத் தொடர்ந்து எதையாவது எழுதிவைக்கலாமா என்று
உள்மனம் துடித்தது. கிண்டலாக, மகிழ்ச்சியாக, வசையாக, வாழ்த்தாக என பல சொற்கள் மனத்தில்
முட்டிமோதின. மறுகணமே பொங்கியெழுந்த அந்த வேகத்தை அடக்கிக்கொண்டேன். இப்படி, யாருமறியாமல்
பார்ப்பதையே நாகரிகத்தின் எல்லையைக் கடந்த செயல் என்று நினைத்து கூச்சமடைந்தேன். ஐயோ,
நான் ஏன் இப்படி மாறினேன் என்ற குழப்பத்தில் வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். கண்கள்
கூசின. மேகங்கள் பரிசில்களைப்போல வானில் மெதுவாக நகர்ந்துசென்றன. பார்வையைத் தாழ்த்திய
கணத்தில் காற்றின் வேகத்தில் கிளைகள் ஒன்றையொன்று தொட்டுத்தொட்டு விலகும் காட்சி தெரிந்தது.
அன்று முழுதும் படிப்பில் மனம் ஒட்டவில்லை. வேடிக்கை பார்த்தது கொஞ்சம். கற்பனையில்
மூழ்கிக்கிடந்தது கொஞ்சம். அப்படியே பொழுது ஓடிவிட்டது.
அதற்கடுத்த
வாரமும் தோப்புக்குச் செல்லவேண்டியிருந்தது. வரிகளின் தொடர்ச்சியை அறிந்துகொள்ளும்
வேகம் ஆட்டிப்படைத்தது. உள்ளே நுழைந்த வேகத்தில் அதைத்தான் கண்கள் தேடிக் கண்டடைந்தன.
"சொர்க்கம்". "பொங்கல்". "இன்று இல்லை". "இன்று
இல்லை". "அடைமழை". வழக்கமான நேரக்குறிப்புக்கு மாறாகத் தென்பட்ட ஒற்றைச்
சொற்குறிப்புகள் ஒருகணம் ஆச்சரியத்தைக் கொடுத்தன. அந்த வரிகளிடையே இரண்டு உருவங்கள்
ஓடி விளையாடிப் பிடிப்பதுபோலவும் ஆனந்தமாக அருவியொன்றில் குளிப்பதைப்போலவும் தழுவிக்
கிடப்பதைப்போலவும் பற்பல காட்சிகள் தோன்றி மறைந்தன. பரபரப்பின் உச்சத்தில் சட்டென குனிந்து
அருகில் கிடந்த கரித்துண்டை எடுத்து "காதல் ஜோதி எரியட்டும்" என்று வேகமாக
எழுதிவிட்டு நிமிர்ந்தேன்.
புங்கமரத்தடியில்
உட்கார்ந்தபடி நான் எழுதிய வரியை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். ஒருகணம் நகைச்சுவையாக
இருந்தாலும் அடுத்த கணமே அருவருப்பாக உணர்ந்தேன். கீழ்த்தரமாக நடந்துகொண்டதுபோல ஒரு
குற்றஉணர்ச்சி தகித்தது. ஊற்றென அது மெல்லமெல்லப் பொங்கிப் பெருகி, நெஞ்சையே அடைத்துக்கொள்ள,
தூள்தூளாக வெடித்துச் சிதறப்போகிறேன் என்று தோன்றியது. ஒருவித வெட்கம் கவிந்துகொள்ள,
அவ்விடத்தில் தொடர்ந்து அமர விருப்பமில்லாமல் வேகவேகமாக எழுந்து வெளியேறினேன். தன்னிச்சையாக
ஓடிவிளையாடிக்கொண்டிருந்த மான்ஜோடியை அம்பெய்து கலைத்துவிட்ட வேடனின் மனநிலையில் அப்போது
தவியாய்த் தவித்தேன்.
அடுத்த
வாரம் அந்தத் தோப்பின் பக்கம் செல்ல மனமே வரவில்லை. யாரையோ காயப்படுத்திவிட்டதுபோல
சங்கடமாக இருந்தது. யாராவது காத்திருந்து என் செயலுக்குப் பழிவாங்கக்கூடும் என்ற அச்சமாகவும்
இருந்தது. பழையபடி பூங்காக்களின்பக்கம் சென்று நேரத்தைச் செலவழித்தேன். உடல்தான் அந்தப்
புங்காவில் இருந்ததே தவிர மனம்முழுதும் பேகம் மஹாலையே சுற்றிச்சுற்றி வந்தது. தொடர்ந்து
வந்த இரண்டு வாரங்களும்கூட அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்தேன்.
என்
பதற்றம் தணிய கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்கவேண்டி இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த
வாரத்தில்தான் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பேகம் மஹால் தோப்புக்குச் சென்றேன். வழியில்
ஒருவர் மாவிலைக்கொத்துகளையும் வேப்பிலைக்கொத்துகளையும் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டோடு
நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் "இதக் கொஞ்சம் தூக்கி உடறிங்களா தம்பி?"
என்று கேட்டார். "எதுக்கு இது?" என்றபடி என் பையைக் கீழே வைத்துவிட்டு அந்தச்
சுமையைத் தூக்கி அவர் தன் தலையில் வைத்துக்கொள்ள உதவினேன். "ரெண்டு நாள்ள உகாதி
வருது. கூறுபோட்டு வித்தா ரெண்டு கிலோ அரிசிக்காவும். அதான்..." என்று சிரித்தார்.
பிறகு என்னைப் பார்த்து "நீங்க எதுக்கு இந்தப் பக்கம்?.." என்று இழுத்தார்.
"சும்மாதான், அப்படியே மரத்தடியில உக்காந்து புத்தகம் படிக்கலாம்ன்னு..."
என்று நானும் பதில் சொன்னேன். "பாத்துங்க தம்பி, பூச்சி பொட்டுங்க இருக்கப் போவுது..."
என்றபடி அவர் நடந்துபோனார்.
உட்பக்கமாக
நடந்து மரத்தடியில் முதலில் அமர்ந்தேன். பிறகு மெதுவாக சுவரின் பக்கமாக கரியெழுத்துகளின்
பக்கமாக பார்வையைத் திருப்பினேன். நான் எழுதிய வரிக்குப் பிறகு எதுவுமே இல்லை. அந்த
வெறுமை முகத்தில் அறைவதுபோல இருந்தது.
வேறு
எந்த இடத்திலாவது அந்த உரையாடல் தொடர்கிறதா என்றும் கவனமாகத் தேடிப் பார்த்தேன். எங்கும்
அந்த எழுத்தின் சாயல் இல்லை. தினம் ஒரு வரியென குறிப்பெழுதி வைத்து ஆசைகளைப் பரிமாறிக்கொண்டவர்களை
அவசரத்தில் நான் எழுதிவைத்த ஒற்றைவரிக்குறிப்பு மாதக்கணக்கில் முடக்கிவைத்துவிட்ட குற்றஉணர்ச்சி
ஒரு பாரமாக அழுத்தியது. அதற்குப் பிறகு ஒருகணம்கூட அந்த இடத்தில் என்னால் நிம்மதியாக
அமர்ந்திருக்கமுடியவில்லை. வேகவேகமாக எழுந்து வெளியே நடந்தேன். அதற்குப் பிறகு அந்தப்
பக்கம் செல்வதையே தவிர்த்துவந்தேன். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, இடிந்துபோன அந்த
மகாலுடன்கூடிய தோப்பை யாரோ விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்றும் அந்த மகாலை தரைமட்டமாக்கி
அப்புறப்படுத்தப் போகிறார்கள் என்றும் கேள்விப்பட்டபிறகுதான் மறுபடியும் நுழைந்து பார்த்தேன். பழைய காலத்து பேகத்தின் நினைவுகள் உறங்கும் மாடங்கள்,
கூடங்கள், இடிந்த சுவர்கள், நொறுங்கிச் சரிந்த தூண்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்தபடி
நடந்தபோது, சுவரில் மங்கியிருந்த பழைய கரிக்கிறுக்கல்களையும் பார்த்தேன். ஒரு பைத்தியத்தின்
வேகத்துடன் அன்று நான் எழுதிய குறிப்புக்குப் பிறகு எதுவுமே இல்லை. ஒவ்வொரு எழுத்தும்
ஒரு விழியாக மாறி என்னைத் துளைத்துப் பார்ப்பதுபோலத் தோன்றியதைத் தாங்கமுடியாமல் துயரத்துடன்
வெளியேறினேன்.
(‘யுகமாயினி’ இதழில் 2008 ஆம் ஆண்டில் எழுதிய
கட்டுரை)