Home

Wednesday, 3 August 2016

கவித்துவப் புள்ளிகள் (நூல் அறிமுகம்)


செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’

ஒரு புறக்காட்சியில் மானுட வாழ்வின் சாரத்துக்கு இசைவான  அம்சத்தைக் கண்டடைவதை ஒரு பேரனுபவம் என்றே சொல்லவேண்டும். கவிதைக்குள் அந்த அனுபவத்தைப் பொருத்தமான சொற்களால் கட்டியெழுப்பும்போது, அது மகத்தான அனுபவமாக உருமாறிவிடும். பிறகு, கச்சிதமாகச் செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு கோவில் சிற்பம்போல மொழிக்குள் அந்த அனுபவம் நிலைத்திருக்கத் தொடங்கிவிடும். எழுத்துப் பயணத்தில் இந்தத் தேடலின் விசையால் உந்தப்படாத கவிஞர்களே இல்லை. அந்தரங்கம் தொகுதியின் வழியாக தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் செல்வராஜ் ஜெகதீசன். சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை அவருடைய ஐந்தாவது தொகுதியாக  வெளிவந்துள்ளது. அவருடைய தேடல் பயணம் இடைவிடாமல் தொடர்ந்தபடி இருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

விட்டு விடுதலையாகி
வீழ்ந்து கிடந்த
சிட்டுக் குருவியின்
சிறகொன்றில்
தத்திக்கொண்டிருக்கிறது
ஒரு ஈ
     வீழ்ந்துகிடக்கும் சிறகையும் பறப்பதற்கு முன்பாக தத்திக்கொண்டிருக்கும் ஈயையும் இணைத்திருக்கும் காட்சி மிகச்சிறந்த படிமம். ஒருபுறம் மரணம். ஒருபுறம் உயிரின் சலனம். மரணங்களும் பிறப்புகளும் கண்ணிகளாக மாறிமாறி இணைந்து நீளும் மானுட வாழ்க்கைச்சங்கிலியின் தோற்றம் ஒருகணம் அக்காட்சியில் மின்னி மறைகிறது. ”ஓரில் நெய்தல் கறங்க ஓரில் ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப….” என வியக்கும் பக்குடுக்கை நன்கணியாரின் வரிகள் மனத்தில் எழுகின்றன. சிறகு மரணத்தைமட்டும் குறிக்கும் சொல்லாக இல்லை. அதற்கும் மேலாக, நேற்றைய வரையிலான வாழ்வனுபவத்தின் அடையாளமாக இருக்கிறது. அந்த அனுபவத்தின் மீது தத்தித்தத்தி நடை பழகுகிறது இன்றைய ஈ. இந்த ஈயின் சிறகுகளும் என்றோ ஒருநாள் உதிர்ந்துவிழக்கூடும். அன்று புதிதாக ஊரத் தொடங்கும் ஏதோ ஓர் எறும்பு அதன்மீது ஊர்ந்து செல்லக்கூடும். எண்ணங்கள் இப்படி விரிந்துவிரிந்து படிமம் மனத்துக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிடுகிறது. மாபெரும் படிமங்களே மாபெரும் கவிஞர்கள் ஒரு மொழிக்குத் தேடிவைத்துவிட்டுச் செல்லும் சொத்து.
     செல்வராஜ் ஜெகதீசன் இந்தக் கவிதையை இன்னும் சில வரிகளோடு நீட்டிச் சொல்ல முனையும்போது, கவிதையின் வலிமை குன்றிவிடுகிறது.
இப்படி ஒரு தொடக்கம்
எந்த ஒரு
நாளுக்கும்
கவிதைக்கும்
இல்லாமல் போகக்
கடவதாக
என்னும் பிற்பகுதி வரிகள் எவ்விதத்திலும் மேற்சொன்ன முற்பகுதி வரிகளோடு பொருந்திப் போகவில்லை.  அது மட்டுமல்ல, சிறுகச்சிறுகக் கட்டியெழுப்பிய படிமத்தின் அழகைக் குலைப்பதாகவும் அமைந்துபோய்விடுகிறது.
கவிதையம்சம் பொருந்திய ஒரு காட்சியின் சித்தரிப்பைத் தொடர்ந்து கவிதைக்கு சிறிதும் பொருந்தாத சில வரிகளை ஏதோ ஒரு வேகத்தில் கட்டுப்பாடின்றி எழுதிவிடுகிறார் செல்வராஜ் ஜெகதீசன். அதிசயம் என்னும் கவிதை இன்னொரு எடுத்துக்காட்டு.
நடந்துகொண்டிருந்தோம்
‘என்ன அதிசயம் பார்’
என்றான் மகன்
அடுக்கக மாடியொன்றிலிருந்து
மூக்கு நுனியில்
விழுந்த நீர்த்துளியைக் காட்டி
எளியதொரு அழகான சித்தரிப்பு. கபடற்ற குழந்தைமையின் பார்வையை முன்வைக்கும் சித்தரிப்பு. தரையில் மட்டுமே தண்ணீரைப் பார்த்துப் பழகிய  குழந்தையின் மனம், வானத்திலிருந்து விழும் தண்ணீர்த்துளியை முதன்முதலாகப் பார்த்து அதிசயமென குதித்தாடி முகம் மலர்கிறது. அதிசயமெனக் கண்டடைந்து தேடித்தேடி சேகரித்துக்கொண்ட அறிதல்களே மெல்லமெல்ல அனுபவங்களாக மாற்றமடைகின்றன. சித்தரிப்பை வாசித்த கணத்திலேயே, ஒரு நடையில் ஒரு குழந்தை எதைஎதையெல்லாம் பார்த்து அதிசயப்படக்கூடும் என்று நம் மனம் அசைபோடத் தொடங்கிவிடுகிறது. உண்மையில் நம் பால்யத்திலிருந்தே அந்தப் பட்டியலை நம் மனம் உருவாக்கிக்கொள்கிறது. இன்றைய அதிசயங்களிலிருந்து நேற்றைய அதிசயங்களை நோக்கி மனம் ஓர் உள்முகப்பயணத்தில் ஈடுபடுகிறது. அகத்தையும் புறத்தையும் இணைக்கிறது அந்தத் தருணம். ஆனால் செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை அத்துடன் நிறுத்தாமல் மேலும் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.
நமக்குத்தான்
அதிசயம் என்றால்
என்னென்னமோ வேண்டியிருக்கிறது
என்ற வரிகளைப் படித்ததுமே பறக்கத் தொடங்கிய ஒரு பறவையை இழுத்துப் பிடித்து கழுத்தைச் சுற்றிக் கட்டிப் போட்டதுபோல இருக்கிறது.  கவிதை ஒருபோதும் புலம்பல் அல்ல. அது கண்டடையும் களம். இப்படிப்பட்ட பிசகுகளைக் கடந்துதான் ஜெகதீசனின் தொகுப்பில் நல்ல கவிதைகளைத் தேடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது.
     இன்னுமொரு முறை என்றொரு கவிதையில் செல்வராஜ் ஜெகதீசன் சித்தரிக்கும் காட்சி சுவாரசியமானது. இத்தொகுப்பில் நல்ல கவிதைகளில் ஒன்றாக இதைச் சொல்லலாம். புதுமஞ்சள் தாலியோடு கணவனின் காதோரம் ஏதோ கிசுகிசுத்தபடி போய்க்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான் கவிதையின் விவரணையாளன். அவன் ஏற்கனவே அந்தப் பெண்ணை தன் நண்பனின் காதலியாக அறிந்தவன். அவளுடைய பெயரின் முதலெழுத்தையும் தன் பெயரின் முதலெழுத்தையும் தீக்கம்பி கொண்டு தன் இடதுகை மணிக்கட்டில் எழுதிக் காதலித்தவன் அவன். எங்கோ திசைமாறி ஏதோ ஒரு பேருந்தில் நடத்துநராக பிழைப்பை இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறான் அவன். இருவருக்கும் இடையிலான காதல் வீட்டாருக்குத் தெரிந்து உதைபட்ட நாளில் இன்னுமொரு முறை அவ்வெழுத்துகளின் மேல் தீக்கம்பியால் அழுத்தி எழுதிக்கொண்டவன். நண்பனின் செய்கையைத் தடுக்க முடியாமல் மெளன சாட்சியாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறான் கவிதையின் விவரணையாளன். அப்பெண்ணைப் பார்த்த கணத்தில் விவரணையாளனின் ஆழ்மனத்திலிருந்து எல்லா நினைவுகளும் பொங்கி எழுகின்றன. இன்னுமொரு முறை என்னும் வரியில் உள்ள அழுத்தம் மிகவும் முக்கியமானது. இந்தக் காதல் நிலைக்காது அல்லது தொடராது எனத் தெரிந்த பின்னரும் இன்னுமொரு முறை தீக்கம்பியால் எழுதிக்கொள்வதன் மூலம் அவன் எதைத் தெரிவிக்க விரும்புகிறான். தன் காதலியை தன்னிடமிருந்து பிரித்துச் சென்றாலும் தன் நெஞ்சிலுள்ள காதலைப் பிரித்தெடுக்க முடியாது என்கிறானா? ஒரு வடுபோல தன் காதலை தன் மனம் நிரந்தரமாக சுமந்தலையும் என்கிறானா? காதலின் அழிவின்மையைச் சுட்டும் அடையாளமா அது? இந்தச் சித்தரிப்பில் தீக்கம்பியால் எழுதிக் கொண்டது ஓர் ஆணாக இருக்கிறான். இன்னொரு சித்தரிப்பில் அது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். பிரித்தெடுத்துச் சென்ற சக்திகளிடம் அந்த வடு ஒரு செய்தியை அமைதியாகச் சொன்னபடி இருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த உலகம் ஏற்கனவே அறிந்த செய்திதான் அது. ஆயினும் அதே செய்தியை இன்னுமொரு முறை இந்த உலகுக்கு அழுத்தமாக சொல்கிறது அந்த வடு.
இன்னொரு நல்ல கவிதை ஒரு கொலை அல்லது மரணம். அதுவும் ஒரு சித்தரிப்பையே முன்வைக்கிறது. சட்டென்று கண்டடையப்பட்ட ஒரு காட்சியாக அது விரிகிறது.
ஒரு அதிகாலையில்
அரைமணிநேரம் பயணித்து
சர்வீஸுக்குக் கொடுத்த வண்டியின்
சஸ்பென்சன் பகுதியில்
செத்துப் போயிருந்தது ஒரு பூனை
சிதறிய ரத்தக்கறைகளோடு
ஒரு சிறிய தொகையில் பின்
சுத்தம் செய்யப்பட்டது
எப்போது எப்படி
என்றெதுவும் அறியாமல்
நிகழ்ந்த
ஒரு கொலை அல்லது
ஒரு மரணம்
ஒரு மரணத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் ஒருபோதும் வரையறுக்கப்பட முடியாதவை. அது விலங்குகளின் மரணமாக இருந்தாலும் சரி, மனிதமரணமாக இருந்தாலும் சரி. தூங்குகையில் வாங்குகிற மூச்சு சுழிமாறிப் போகக்கூடிய சாத்தியப்பாடுகள் மிகுதி. மரணம் தீராத ஒரு புதிர். எளியதொரு காட்சியிலிருந்து கவிதை அந்தப் புதிரை நோக்கி சட்டெனத் தாவிவிடுகிறது.
அம்மாவைப்பற்றிச் சொல்லும் நிற்கும் பிம்பம் என்னும் கவிதையும் இப்படி ஒரு புதிர்த்தன்மையைக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. வாழ்நாள் முழுதும் உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் மட்டுமே பார்த்த தன் அம்மாவை, அவள் மரணத்துக்குப் பிறகு வந்த கனவுகளில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். அதைப் பார்த்து பதற்றம் கொள்கிறான் ஒருவன். நின்ற கோலத்தில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்னும் புதிருக்கு விடை தெரியாமல் தவிக்கிறான். இறுதியில் விடை வேண்டி அவளையே தஞ்சமடைகிறான். 
நவீன வாழ்வில் மறைந்திருக்கும் குரூரத்தைச் சித்தரிக்கிறது சாசனமாய் ஒரு கவிதை என்னும் கவிதை. தன் மகனுக்குப் பிடிக்கக்கூடும் என ஒருநாள் எங்கிருந்தோ ஒரு நாய்க்குட்டியைத் தேடிக் கொண்டுவருகிறான் ஒருவன். அவனுக்கும் அந்தக் குட்டியை மிகவும் பிடித்துவிடுகிறது. அந்தப் பையனோடு ஒட்டி உறவாடியபடி வளர்கிறது நாய்க்குட்டி. அவனுடன் சேர்ந்து அவன் தம்பியும் நாயுடன் விளையாடி மகிழ்கிறான். வீடு மாறும்போதும் அந்த நாயை தம்மோடு அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்கள். ஏறத்தாழ பத்தாண்டு காலம் அவர்களோடு வாழ்கிறது அந்த நாய். நாய் முதுமையடைந்துவிடுகிறது. பிள்ளைகளும் வளர்ந்துவிடுகிறார்கள். விளையாடுவதற்கு நாய் தேவைப்படாத உலகத்துக்குள் அவர்கள் தம்மை பொருத்திக்கொள்கிறார்கள். முதுமை பெற்று, வீட்டின் மூலையில் இடத்தை அடைத்தபடி சுருண்டு படுத்துக் கிடக்கிறது நாய். அதன் பயனின்மையை உணர்ந்த குடும்பத்தினர் அடுக்ககத்தின் ஆறாவது மாடிக் குடியிருப்பிலிருந்து குப்பைகளை வீசும் குழாய் வழியே அதைத் தள்ளிவிடுகிறார்கள். ஒளியிழந்த கண்களில் ஏக்கமும் குழப்பமும் வெளிப்பட முதுமையடைந்த அந்த நாய் மறைந்துபோகிறது. பிரிந்துபோன நாயின் இருப்புக்குச் சாட்சியாக மனிதன் கவிதை எழுதிவைக்கிறான். குரூரத்தை ஒரு கவிதை வழியாகக் கடந்து செல்ல நினைக்கும் மானுட அற்பத்தனத்தை சித்திரமாக முன்வைக்கிறது கவிதை.
சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை என்னும் தலைப்புக் கவிதையும் ஒரு சித்தரிப்பின் வழியாக ஒரு புதிரைநோக்கித் தாவிச் செல்லும் கவிதை. நாற்புறச்சாலைச் சந்திப்பில் நின்றிருக்கும் சமிக்ஞைக் கம்பங்களில் மாறிமாறி ஒளிரும் சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை விளக்குகள் இடைவிடாது ஒளிர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாகனங்களைக் கட்டுப்படுத்தி அனுப்பியபடி இருக்கின்றன. ஓடும் வாகனங்கள் ஒருபுறம். சலனமே இல்லாமல் நின்றிருக்கும் வண்ணவிளக்குகள் இன்னொரு புறம்.  வண்ண விளக்குகளை நவீன வாழ்க்கையில் கிடைத்த ஒரு வரமென்றே சொல்லவேண்டும். இருளடர்ந்த பாதைகள் வழியாக அச்சத்தோடு பயணம் செய்த பழைய காலம்போல இன்றைய பயணம் இல்லை. இன்றைய நவீன பயணம் வசதியாக இருக்கிறது. தடுமாற்றமின்றி தெளிவாக இருக்கிறது. அதே சமயத்தில் பழகிய தடமென்பதால் சலிப்பாகவும் இருக்கிறது என்பது உண்மை. வண்ண விளக்குகள் பல கோணங்களில் எண்ணங்களை இழுத்துச் செல்கின்றன. எண்ணங்களையும் கற்பனைகளையும் விரிவடையச் செய்யும் சக்தி கொண்டதே நல்ல கவிதை.
கடற்கரையில் அலைகள் ஒதுக்கும் வண்ணமயமான கிளிஞ்சல்களுக்காக கரையோரமாக நடந்துகொண்டே இருக்கும் சிறுமியைப்போல, தினசரி வாழ்க்கையில் கவித்துவக் கணங்களைத் தேடித்தேடி காலமெல்லாம் அலைகிறவனாக இருக்கிறான் கவிஞன். பல தருணங்களில் ஏமாற்றமே எஞ்சினாலும் ஒரு சில தருணங்களில்  அவன் கண்கள் வசீகரமான கிளிஞ்சல்களைக் கண்டடைகின்றன. அவன் அலைதலுக்கு அவையே பொருள் தருகின்றன. அத்தகு அபூர்வமான சில தருணங்களை செல்வராஜ் ஜெகதீசனுடைய இத்தொகுதியில் பார்க்கமுடிகிறது.

(சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை. செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள். அகநாழிகை பதிப்பகம், 33, மண்டபம் தெரு, மதுராந்தகம். விலை. ரூ.70 )