சிறுவர் பாடல்களுக்குரிய அடிப்படைகளாக
இரண்டு குணங்களை வரையறுக்கமுடியும். ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பாடக்கூடிய இனிமையான
தாளக்கட்டில் இருக்கவேண்டும் என்பது முதல் வரையறை. குழந்தைகள் நாவில் புழங்கக்கூடிய
சொற்களால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அடுத்த வரையறை. அப்படிப்பட்ட பாடல்களை
மிக அபூர்வமாகவே காணமுடிகிறது.
ஏராளமான அறிவுரைகளைச் சொல்வதற்கும்
நீதி நெறிமுறைகளை எடுத்துச் சொல்வதற்கும் சிறுவர் பாடல்களை ஒரு வழிமுறையாக வகுத்துக்கொள்வது,
சிறுவர் பாடல்களைத் தொடர்ந்து எழுதும் பல கவிஞர்களிடையே ஒரு பொதுப்போக்காக இருக்கிறது.
காந்தி, நேரு, நேதாஜி போன்ற தலைவர்களை அறிமுகப்படுத்தவும் தீபாவளி, பொங்கல், சித்திரைத்திருநாள்,
சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தினங்களின் அருமை பெருமைகளைத் தெரியப்படுத்தவும்
கூட சிலர் சிறுவர் பாடல்கள் என்னும் வடிவத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவை அனைத்துமே
சிறுவர்களை முன்னிட்டு பெரியவர்களுடைய மனத்தில் எழும் வரிகள். ஒருவகையில் சிறுவர்களுடைய
மனம் என்னும் நிலத்தில் விதைப்பதற்காக நம் மனத்தில் பாதுகாத்துவைத்திருக்கும் விதைகள்
அவை.
சிறுவர்களுடைய நாவில் புழங்கும்
சொற்கள் என்பவை ஒருவகையில் அவர்களுடைய மனத்தில் பெருகிப் பொங்கும் சொற்களே. அவற்றுக்குரிய
ஒரே அடிப்படை ஆனந்தம் அல்லது விளையாட்டு மட்டுமே. அந்த மனநிலையை ஒரு கவிஞன் வேண்டித்
தவமிருந்து பெற்றால் மட்டுமே உண்மையான பாடல்கள் பீறிட்டெழும். அமிழ்தினும் ஆற்ற இனிதே
தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் என்று வள்ளுவர் சொல்தைப்போல குழந்தைகள் நெஞ்சிலிருந்து
பீறிட்டெழும் ஒவ்வொரு சொல்லும் அமுதைவிட இனிமையானவை. அச்சொற்களை தானே ஒரு குழந்தையாக
மாறி வசப்படுத்துபவனே குழந்தைகளுக்காக எழுதும் கவிஞன். செந்தில்பாலா அந்த வரிசையில்
இடம்பெற்றிருக்கும் இன்றைய கவிஞர். 32 பக்கங்கள் மட்டுமே கொண்ட அவருடைய ‘இங்கா’ தொகுதி
அவருடைய தகுதியைப் பறைசாற்றும் சாட்சியாக விளங்குகிறது.
வா வா மழையே
வரட்டுமா வெளியே
நீயும் நானும் தனியே
ஆடலாமா இனியே
வீட்டில் யாரும் இல்லையே
நமக்கு இல்லை தொல்லையே
‘ரெய்ன் ரெய்ன் கோ அவே, லிட்டில்
ஜானி வாண்ட்ஸ் டு ப்ளே’ என்னும் ஆங்கிலேய மண்ணில் மனநிலைக்கு மாறாக, நமது மண்ணின் மனநிலைக்கு
உகந்ததாக அமைந்திருக்கிறது இந்தப் பாட்டு.
நெல் அரிசி சோறு
வடிச்சி வச்சது யாரு
தினை அரிசி சோறு
செய்து வச்சது யாரு
சீக்கிரமா கூறு
பார்க்கப் போறேன் தேரு
கற்பனையும் விளையாட்டு மனமும்
இணைந்து பொங்கி வரும் பாட்டாக எழுதியிருக்கிறார் செந்தில் பாலா. படிக்கும்போதே நம்
அகமனம் அக்காட்சியைத் தீட்டிவிடுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கூரை ஓலை அப்பளம்
தென்னங்குச்சி பாயாசம்
ஓட்டாங்கச்சி பணியாரம்
கொட்டாங்கச்சி இட்டிலி
மண்ண கொழச்சி சட்டினி
நம்ம வீட்டு விருந்து டோய்
சீக்கிரமா அருந்து டோய்
அப்பா வர நேரம் டோய்
படிக்க போலாம் ஓடு டோய்
விளையாடுபவனே விளையாட்டை விவரிப்பதுபோன்ற
பாடல்களை செந்தில்பாலா மிகவும் திறமையாக எழுதியிருக்கிறார்.
இங்கா என்னும் இத்தொகுதி இப்படிப்பட்ட
பல பாடல்களால் நிறைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒருவிதமாக உள்ளது. ஆனால் எல்லாமே குழந்தைகள்
இடம்பெறும் களங்கள்.
சிறார் பாடல்கள் உலகத்துக்கு
நம்பிக்கையூட்டும் ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார் என்பதற்கு இத்தொகுதி ஒரு முக்கியமான
அடையாளம்.
(இங்கா – சிறார் பாடல்கள். செந்தில் பாலா.
நறுமுகை வெளியீடு. 29/35, தேசூர் பாட்டை, நெகனூர் புதூர், செஞ்சி-604 202. விலை. ரூ.20)