Home

Wednesday, 3 August 2016

ஒரு ரயில் பயணம் (கட்டுரை)



                அலுவலக வேலைக்காக தும்கூருக்குச் சென்றிருந்தேன். வேலைகளை முடித்துக்கொண்டு புறநகரில் வசிக்கக்கூடிய நண்பரொருவரையும் பார்த்துவிட்டு, சாயங்காலமாகப் புறப்படும் பெங்களூர் வண்டியில் திரும்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் நான் நினைத்திருந்த அளவுக்கு வேலையை எளிதாக முடிக்கமுடியவில்லை. ஒரு பிரச்சினையைச் சரிசெய்யும்போது இன்னொரு புதிய பிரச்சினை முளைத்தது. அதையும் சரிப்படுத்திவிட்டுப் பார்த்தால் மற்றுமொரு பிரச்சினை தலைதூக்கியது. எதிர்பாராதவிதமான மின்வெட்டு என்னும் வடிவத்தில் வேறொரு சிக்கலும் முளைத்தது. மதிய உணவுக்குக்கூடச் செல்ல இயலவில்லை. மின்சாரம் திரும்பிய பிறகு, பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்து சரிசெய்வதற்குள் சாயங்காலமாகிவிட்டது. அலுவலகத்துக்கு வெளியே இருந்த கடையில் ஒரு தேநீர்மட்டும் அருந்திவிட்டு வேகவேகமாக தொடர்வண்டி நிலையத்தை அடைந்தேன். வண்டி புறப்பட இன்னும் ஐந்தே நிமிஷங்கள்மட்டுமே பாக்கியிருந்தன.

                பெட்டிக்குள் ஏறிய தருணத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தன. வாசலிலிருந்து பக்கவாட்டில் நாலாவது பிரிவில் ஒரேஒரு  ஒற்றையாள் இருக்கைமட்டும்  ஆளற்று  இருந்தது. வேகமாகச் சென்று அதில் உட்கார்ந்துகொண்டேன். அதற்குப் பிறகுதான் சற்றே நிம்மதியாக இருக்கமுடிந்தது. பதற்றம் தணிவதற்காக, இருக்கையில் சாய்ந்தபடி வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். ஒரே ஆரவாரம். வண்டியில் ஏற வந்தவர்கள், ஏற்ற வந்தவர்கள், வேறு வண்டிகளுக்காகக் காத்திருந்தவர்கள் எல்லாரும் எல்லாத் திசைகளிலும் காணப்பட்டார்கள். பழவண்டியின் முன்னால் ஒரு வடநாட்டுக் குடும்பம் வட்டமாக உட்கார்ந்திருந்தது. சீருடை அணிந்த தேநீர் விற்பனையாளர்களும் சிற்றுண்டி விற்பனையாளர்களும் பட்டாம்பூச்சியாக எல்லாப் பக்கங்களிலும் பறந்துகொண்டிருந்தார்கள். சாயங்காலச் செய்தித்தாள்களை சிறுவர்கள் எல்லாப் பக்கங்களிலும் கூவிக்கூவி விற்றார்கள். வயதான மூதாட்டி ஒருத்தி ஜன்னலோரமாக வந்து எல்லாரிடமும் சில்லறை கேட்டாள். காலிழந்த ஒரு பெரியவரை இழுவண்டியில் உட்கார்ந்தபடி பாடிக்கொண்டிருக்க, ஒரு சிறுமி அவ்வண்டியை மெதுவாக இழுத்தபடி சென்றாள். ஜன்னலைநோக்கி நீண்ட அவளுடைய தட்டில் சில்லறைகள் விழுந்தன. என் பையில் மூன்று ஆரஞ்சுப்பழங்கள் இருந்தனமதிய உணவுக்குச் சென்றிருந்த கடைவாசலில் வாங்கிப் போட்டவை. இரண்டு பழங்களை அவளுடைய தட்டில் வைத்துவிட்டு, ஒரு பழத்தை உரித்துத் தின்னத் தொடங்கியபோது பெரியவர் ஒருவர் வேகமாக வந்து, " பண்டி அனந்தப்பூரு போத்துந்தாண்டி?" என்று தெலுங்கில் பதற்றத்தோடு கேட்டார். இல்லை என்னும் பொருளில் வேகமாக தலையை அசைத்துவிட்டு, "இது பெங்களூர் வண்டி, பெங்களூர் வண்டி" என்று பதில்சொன்னேன். நான் சொன்னது அவர் காதில் விழவில்லையா அல்லது புரியவில்லையா என்பதை என்னால் பிரித்தறியமுடியவில்லை. அவர் தொடர்ந்து என் முகத்தையே பார்த்தார். குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் சொன்னதையே கைச்சைகை செய்துகாட்டினேன். அக்கணத்தில் வண்டி கிளம்பியது. அந்தப் பெரியவர் அசையாமல் அங்கேயே நின்றது விசித்திரமாக இருந்தது. நடைமேடையை விட்டு மெதுவாக ஊர்ந்து, நிலையத்தைவிட்டு வெளியேறிய பிறகுதான் வண்டி வேகமெடுத்தது. உடல்மீது படரத் தொடங்கிய காற்று, அவ்வளவு நேரமும் உடலைக் காந்திக்கொண்டிருந்த வெப்பத்திலிருந்து  சற்றே ஆசுவாசம் கொள்ளவைத்தது.
                வானில் மேகக்கூட்டம் அடர்ந்திருந்தது. இந்த வெப்பத்துக்கு மழைவந்தால் நல்லதுதான் என்று தோன்றியது. அசையாது நிற்கும் கரும்பாறையெனத் தோற்றமளித்த மேகங்களையே பார்த்தேன். சட்டென "ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கருத்து…..." என்னும் திருப்பாவை வரி நினைவில் மிதக்கத் தொடங்கியது. சிறிதுநேரத்துக்குப் பிறகு பையில்  வைத்திருந்த வார இதழை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். பத்துப்பதினைந்து நிமிடங்கள் மட்டுமே படிக்கமுடிந்தது. அதற்குள் வண்டியின் வேகம் கூடிவிட்டதால் ஊன்றிப் படிக்க சிரமமாக இருந்தது. புத்தகத்தை மூடி பைக்குள் வைக்கப் போகிற சமயத்தில் அடுத்த இருக்கைக்காரர் கைநீட்டிப் படிப்பதற்காக அதைக் கேட்டார். கொடுத்துவிட்டு கழப்பறைக்குச் செல்வதற்காக எழுந்துசென்றேன்.
                பெட்டியின் இறுதியில் இருந்த இரண்டு கழிப்பறைகளில் ஒன்று மூடியிருந்தது. உபயோகத்தில் இல்லாத மற்றொரு கழிப்பறையைத் திறக்க நினைத்த சமயத்தில் "சார் சார் தெறக்காதிங்க" என்று அவசரமாகத் தடுத்தார். "யாருன்னு தெரியலை சார், டாய்லெட் போயிருக்காங்க. தண்ணிய சரியா ஊத்தாம எல்லாமே மேல கெடக்குது. ஒரே கெட்ட நாத்தம். கொடல புடுங்குது. இந்த ரெண்டாயிரத்துப் பத்துலகூட இந்த மாதிரி ஆளுங்க இருக்கறாங்க பாருங்க. கருமம். கருமம்.." என்று முகச்சுளிப்போடு சொல்லிக்கொண்டே போனார். எங்கள் பெட்டியோடு இணைந்த அடுத்த பெட்டியின் கழிப்பறைகளின் முன்னால் ஏற்கனவே இரண்டு பேர் நின்றிருந்தார்கள். பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவதில் மக்களிடையே காணப்படுகிற உதாசீனங்களின் திசையில் அந்த உரையாடல் நீண்டு செல்லத் தொடங்கியது. நான் அமைதியாக என் இடத்துக்குச் சென்று உட்கார்ந்தேன்.
                "அஞ்சி ரூபாய்க்கு இருபத்தாறு வகையான ஊசி சார்" என்று திரும்பத்திரும்பச் சொன்னபடி பார்வையில்லாத ஒருவர் பயணிகளிடையே நடந்துவந்தார். குண்டூசி நீளத்துக்கு இருக்கும் ஊசி முதல் விரல்நீளத்துக்கு இருக்கும் ஊசிவரை வெவ்வேறு அளவுகளிலும் பருமன்களிலும் ஊசிகளை வரிசையாக குத்திவைக்கப்பட்ட அட்டைகளின் சரங்கள் அவருடைய இரண்டு முழங்கைகளிலும் தொங்கிக்கொண்டிருந்தன. அவருக்குப் பின்னாலேயே கழுத்தில் தொங்கவிடப்பட்ட பைநிறைய புத்தகங்களோடு, "பத்து ரூபாய்க்கு ஜெனரல் நாலெட்ஜ் புக் சார் பத்து ரூபாய்க்கு ஜெனரல் நாலெட்ஜ் புக் சார்.." என்று கூவி விற்றபடி தரையில் கைகளால் ஊன்றியபடி நகர்ந்துவந்தார். போலியாவால் பாதிக்கப்பட்டு சுருங்கிய கால்களை வேகமாக அவர் முன்னகர்த்தி வந்த வேகம் ஆச்சரியமாக இருந்தது. அவருடைய பேச்சின் வசீகரம் பலருடைய கவனம் அவர்மீது திரும்பக் காரணமாக இருந்தது.
                சிறுநீர் கழிக்க கழிப்பறைக்குச் செல்லவேண்டிய அவசரம் நெருக்கியபடி இருக்க என்னால் தொடர்ந்து அவர்மீது கவனத்தைக் குவிக்கமுடியவில்லை. ஒரு கண்ணை அவர்மீதும் இன்னொரு கண்ணை திறக்காத கழிப்பறைக்கதவின்மீதும் பதித்தபடி இருந்தேன். நேரம் கடந்தபடியே இருந்தாலும் அக்கதவு திறக்கும் அறிகுறியே இல்லை. கதவின் அருகே இப்போது நான்கு பேர் நின்றிருந்தார்கள்.
                "நம்ம ஆளுங்களுக்கெல்லாம் போனமா வந்தமான்னு வர பழக்கமே கெடையாது சார். அவங்கவங்களுக்கும் ஊட்டுக்குள்ள இருக்கற நெனப்பு போல. ஆளாளுக்கு இப்பிடி அரமணிநேரம் ஒருமணிநேரம்னு எடுத்தா, மத்தவங்க எல்லாம் எங்க போவாங்க சொல்லுங்க?" ஒல்லியாகவும் நெட்டையாகவும் காணப்பட்ட ஒருவர் சற்றே காட்டமான குரலில் முணுமுணுத்தார்.
                "இப்பல்லாம் யாரு சார் அடுத்தவங்க கஷ்டங்கள யோசிச்சி பாக்கறாங்க? அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க வேல நடந்தா சரிதான்....." வெறுப்பை உமிழ்ந்தபடி பக்கத்திலிருந்தவர் பேசினார்.
                "எங்க போனாலும் இப்பதான் கையில ஒரு போன வேற புடிச்சிறாங்க. வண்டிக்கு நிக்கும்போதும் போன். தெருவுல நடக்கும்போதும் போன். ஒன்னுக்கிருக்கும்போதும் போன். ரெண்டுக்கிருக்கும்போதும் போன். போனுங்களுக்கு ஒரு மரியாதயே இல்லாம போயிடுச்சி சார். பேச ஆரம்பிச்சா யாரும் முடிக்கறதே இல்ல. எப்படித்தான் போன் பில் கட்டறாங்களோ இவுங்கள்ளாம். மாசம் எரநூறு ரூபா கூப்பன் வாங்கறதுக்கே முழி பிதுங்கி போவுது நமக்கு..."
                "இவுங்களுக்கு செலவே கெடையாதாம் சார். எல்லாம் கம்பெனி செலவாம். போன் பில்லு, சாப்படற பில்லு, குடிக்கற பில்லு, ஊருங்களுக்கு போய்வர செலவு எல்லாத்தயும் இப்ப அந்தந்த கம்பெனிங்களே குடுக்குதுங்களாம் சார். அதனாலதான் நேரம் காலம் தெரியாம பேசிப்பேசியே காலத்த போக்குதுங்க இதுங்துக. இனாமா கெடச்ச மாட்ட நெலாவுல கட்டி ஓட்டுடா தம்பின்னு சொல்ற கததான் இவனுங்க கத...."
                "எவன் எக்கேடு கெட்டா என்ன சார்? கக்கூஸ் போறவங்க கக்கூஸ்தான் போவணும். போன் பேசறதுக்கு அங்கதானா எடத்த கண்டுபுடிக்கணும்கதவ மூடிகிட்டு போன் பேச ஒக்காந்துட்டா, கக்கூஸ் போறவங்க எங்க போவறது சொல்லுங்க? "
                "இவ்வளவு பேசறமே, உள்ள இருக்கறவங்க காதுல உழாமயா இருக்கும் சொல்லுங்க. கொஞ்சமாச்சிம் பொறுப்பிருக்கவங்களா இருந்தா, இந்நேரத்துக்கு கதவ தெறக்கவேணாமா? எருமாட்டுமேல மழபேஞ்ச மாதிரி அப்படியே எதுவுமே கேக்காததாட்டமா இருக்காங்க பாருங்க...."
                "வெளிய வரட்டும் சார், ஆம்பளையா இருந்தாலும் சரி, பொம்பளையா இருந்தாலும் சரி, நாக்க புடுங்கிக்கறாப்புல நாலு வார்த்த கேக்காம உடப்போறதே கெடையாது..."
                காத்திருப்பதில் பயனில்லை என்பது நன்றாகப் புரிந்துவிட்டதால் எழுந்து அடுத்த பெட்டியையும் கடந்து மூன்றாவது பெட்டியில் உள்ள கழிப்பறையைத் தேடிச் சென்றேன். நல்ல வேளை. அப்போதுதான் ஒரு பெண்மணி வெளியே வந்து கையைத் துடைத்தபடி நின்றிருந்தார். அவர் கடந்துசெல்லும்வரை காத்திருந்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன்.
                "இருக்கைக்குத் திரும்பிய பிறகும்கூட ஏற்கனவே காத்திருந்தவர்கள் அந்தக் கதவின்முன்னால் அப்படியே காத்திருந்தார்கள். அந்தப் பக்கத்துல காலியா இருக்குதுங்களா சார்?" நெட்டையானவர் கேட்டார். "காலியாதான் இருக்குது.. போங்க.." என்றேன். காத்திருந்த மூவரும் அதைநோக்கி நடந்தார்கள். நான் மூடியிருந்த கதவையே பார்த்தபடி நின்றேன். வண்டி புறப்பட்டு அரைமணிநேரத்துக்கும் அதிகமாகவே இருக்கும். யாராக இருந்தாலும் இவ்வளவு நீண்ட நேரம் கழிப்பறையில் இருக்க சாத்தியமில்லை  என்று தோன்றியது. நீரிழிவு நோயாளியான நண்பருடைய தந்தையார் ஒருவர் கழிப்பறைக்குள் மயங்கிக் கிடந்ததை, அவருடைய குடும்பத்தார்கள் தாமதமாக அறிந்துகொண்டார்கள் என்கிற செய்தி தற்செயலாக நினைவுக்கு வந்தது. உள்ளே சென்றவரருக்கும் அப்படி ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணம் எழுந்fதபோது என் பதற்றத்தைத் தவிர்க்கமுடியவில்லை. உதவிகளைக் கேட்கவோ பெறவோ முடியாதபடி அவர் விழுந்திருந்தால் என்ன செய்யமுடியும். சற்று அவசரமாகவே நான் கதவின் அருகில் சென்று இரண்டுமூன்று முறை தட்டினேன். எந்த அசைவும் இல்லை. குழப்பத்துடன் தள்ளி வந்து நின்று கதவையே பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு கணத்தில் கதவு திறப்பதுபோல ஒரு அசைவு தென்பட்டது. அக்கணம் நிம்மதியில் என்னையறியாமல் பெருமூச்சு வந்தது. எல்லாமே நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்தது என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் திறக்கவில்லை. காற்றின் வேகத்தாலும் வண்டியின் ஆட்டத்தாலும் அப்படி தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
                ஏமாற்றத்தோடு கதவையே பார்த்தபடி இருந்த தருணத்தில் கழிப்பறைக்காக இரண்டு பெட்டிகள் தாண்டிச் சென்றவர்கள் "என்ன சார், கதவு தெறந்ததா இல்லயா?" என்றபடி வந்து சேர்ந்தார்கள். நான் இல்லையென்பதற்கு அடையாளமாக உதட்டைப் பிதுக்கினேன். அதற்குள் பெட்டிக்குள்ளிருந்து மேலும் நாலைந்து பேர் எழுந்துவந்து நின்று கொண்டார்கள். எதிர்பாராத விதமாக ஒருவன் ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னபடி வேகமாக அந்தக் கதவை காலால் உதைத்தான். அவன் வேகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொருவர் "இரு இரு தம்பி, அவசரப்படாத.." என்று சொன்னதை அவன் காதிலேயே வாங்கவில்லை. மறுபடியும் வேகமாக உதைத்தான். "யாரோ குடிச்சிட்டு உள்ள உழுந்து கெடக்கறான்னு நெனைக்கறன் சார். இப்பிடியெல்லாம் அதிரடியா நடந்துகினாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க.." இரண்டு கைகளாலும் இடைவிடாமல் தட்டினான்.  "டேய், தேவடியா மொவனே, கதவ தெறடா. இது என்ன உங்க ஊடுன்னு நெனச்சிட்டியா?" பெட்டிக்குள் இருந்தவர்கள் எல்லாருடைய கவனமும் இப்போது கழிப்பறையின்மீது குவியத் தொடங்கியது. "மனசுல எவ்வளோ தைரியம் இருந்தா, வெளிய மனுசங்க நிக்கறாங்கன்னுகூட பாக்காம மூடன கதவு மூடனபடியே நிப்பான் சார். அவ்வளவும் கொழுப்பு சார். கொழுப்பு." தடதடவென்று வேகவேகமாக கதவை இடைவிடாமல் தட்டினான்.
                "விடுய்யா விடு. எப்படியா இருந்தாலும் பெங்களூருல எறங்கிதான ஆவணும். அப்ப வச்சிக்கலாம் விடு..." ஒரு பெரியவர் சொன்னபிறகுதான் அவன் அடங்கினான்.
                "உள்ள இருக்கற ஆளு கக்கூசுக்கு போன ஆளாட்டம் தெரியலை சார். எவனாவது வித்தவுட்டா இருப்பான். டிடிஆர்கிட்ட மாட்டிகிட்டா என்னாவறதுன்னு, எடம் பார்த்து மறஞ்சி நிக்கறான்னு தோணுது.
”அப்படின்னா இவன கண்டிப்பா டிடிஆர்கிட்ட புடிச்சிதான் குடுக்கணும் தெரிஞ்சிக்குங்க. ரயில்வே போலீஸ்ல வச்சி நாலு நாள் முட்டிக்கு முட்டி தட்டனா, தானா எல்லாம் சரியாயிடும்.."
                "கணடிப்பா அப்படி செய்யணும் சார். அப்பதான் இவனமாதிரி ஆளுங்களுக்கெல்லாம் புத்தி வரும்
”இவன் ஒருத்தனால இங்க பொட்டிக்குள்ள எத்தன பேருக்கு சங்கடம் பாருங்க."
                "ஒரு பக்கம் எந்த நாயோ சரியா கழுவாத போனதால, தெறக்கக்கூட முடியாம  நாறி கெடக்குது. இன்னொரு பக்கம் இந்த நாய் உள்ள போய் பூந்துகினு பூட்டி வச்சிக்குது. ஒரு அவசரம் ஆத்தரத்துக்கு, பொம்பளைங்க சின்னபுள்ளைங்கலாம் எங்க சார் போவும்? எல்லாராலயுமா நாலாவது பொட்டி அஞ்சாவது பொட்டினு தேடிம் போவமுடியும்?"
                "டி.டி.ஆர் வரட்டும். அவரே வந்து பாத்துட்டு இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும்."
                அந்த முடிவோடு தற்காலிகமாக விவாதம் நின்றது. கதவோரமாக, காற்று வாங்கியபடி சாய்ந்து நின்றிருந்த ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய பயணத்தில் கண்ட காட்சியொன்றை விவரிக்கத் தொடங்கினார்.
                "இப்படித்தான் ஒரு கக்கூஸ் ரொம்ப நேரமா கதவயே தெறக்காம மூடியே வச்சிருந்தாங்க. ஒரு மணிநேரமா எல்லாரும் தட்டிதட்டி பாத்துட்டு சீ போன்னு அசந்துபோய் உக்காந்துட்டாங்கஸ்டேஷன் வந்ததும் எல்லாரும் பொட்டி பைய தூக்கினு எறங்கற சமயத்துல திடீர்னு கக்கூஸ் கதவு தெறந்தது. என்னடா இவ்வளவு நேரமா தெறக்காத கதவு இப்ப தானா தெறக்குதேன்னு ஆச்சரியமா பாக்கறேன். ஒரு பொண்ணும் பையனும் தலய குனிஞ்சிகிட்டே வேகவேகமா எறங்கி போவுதுங்க. ஊரஉட்டு ஓடியாந்த கேஸோ என்னமோ தெரியலை. எல்லாரும் தூதூன்னு துப்பாத கொறதான். ஆனா கழுதைங்க காதுலயே வாங்கிக்காம ஓடிப் போயிடுச்சிங்க."
                கதையின் சுவாரசியத்தில் எல்லாரும் மூழ்கியிருக்கிற தருணத்தில் சுருட்டைமுடிக்காரன் ஒருவன் வேகமான குரலில் சொன்னான். "நீங்க அன்னிக்கு உட்டிருக்கலாம் சார். இன்னிக்குமட்டும் அப்படி யாராச்சிம் வந்தாங்கன்னு வைங்க. அப்படியே முடிய புடிச்சி இழுத்தும்போயி ரயில்வே போலிஸ்கிட்ட உட்டுட்டுதான் மறுவேல பாப்பன். ரயில்ன்னா இவுங்க அப்பன் ஊட்டு சொத்துன்னு நெனச்சிட்டாங்களா?" நின்ற இடத்திலிருந்து இரண்டு அடி தள்ளி, கதவுக்கருகே சென்று தடதடவென்று தட்டிவிட்ட சத்தம் போட்டான். "நல்லா கேட்டுக்குங்க, நீங்க யாரா இருந்தாலும் சரி, ஒழுங்கா இப்பவே வெளிய வந்துட்டிங்கன்னா பொழச்சிக்குவிங்க. இல்ல கண்டிப்பா போலீஸ்தான் பாத்துக்குங்க..."
                உள்பக்கத்திலிருந்து எந்த அசைவும் இல்லை. "கழுதைங்களுக்கு ரொம்பதான் நெஞ்சழுத்தம் சார். வெளிய வந்து மாட்டினு அனுபவிக்கட்டும் விடுங்க சார்..." தைல டப்பியிலிருந்து விரலால் தைலத்தை வழித்து நெற்றி மேட்டில் தடவிக்கொண்டு மூச்சுவாங்கியபடி சொன்னார் அவர்.
                இரண்டு நிமிடநேரம் ஒரு நிறுத்தத்தில் நின்று கிளம்பியபோது, டி.டி.ஆர் உள்ளே வந்தார். அவர் பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குவதற்கு முன்னால் எல்லாரும் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
"ஒன்றரமணிநேரம் பயணம் பண்றோம். ஒன்னுக்கு ரெண்டுக்கு போவறதுக்குக்கூட வழியில்லன்னா எப்படி சார்?"
                "இந்த வண்டிக்கு பராமரிக்கறவங்கள்ளாம் கெடையாதா சார்? பாருங்க சார், இந்த கக்கூஸ் நாறிங் கெடக்கற கோலத்த."
                "ஒரு கக்கூஸ் நாத்தமா நாறுது. இன்னொன்னு தெறக்கவே முடியலை. பயணம் பண்றவங்களுக்குன்னு இந்த சின்ன வசதிகூட செஞ்சி குடுக்கமுடியலைன்னா எப்படி சார்? "
                "டிக்கட்டுல பத்து பைசா கொறஞ்சா உட்டுருவாங்களா சார்? எங்க வசதியயும் அப்படி பாத்துக்க வேணாமா? "
                ஆளாளுக்கு அவரைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர் முதலில் சற்றே மிரண்டாலும், "இங்க பாருங்க, இந்த மாதிரி கேஸ்ங்கள ஸ்டேஷன்லதான் கம்ப்ளெய்ன்ட் பண்ணணும். என்கிட்ட சொல்லி என்ன லாபம்?" என்று முனகியபடியே கேட்டுக்கொண்டதற்காக செய்வதுபோல இரண்டுமூன்று தடவை கதவைத் தட்டிவிட்டு நிறுத்தினார். "என்ன சார் செய்யலாம், தெறக்கமாட்டறாங்களேஇதுக்குமேல நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்க. பெங்களூருக்கு இன்னும் கால்மணிநேரம்தான் இருக்குது. அதுக்குள்ள நூத்தியம்பது எரநூறு டிக்கட் செக்பண்ணி முடிக்கணும் தெரியுதுங்களா?" விவர அட்டையிலிருந்து அந்தப் பெட்டிக்குரிய தாளை பிரித்தெடுத்துக்கொண்டு முதலாவது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.
                ஒரு பெரிய திருப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. சலிப்போடு இருளத் தொடங்கிய வானத்தையும் நகரும் மர பிம்பங்களையும் வேடிக்கை பார்த்தார்கள். நிறுத்தம் நெருங்கிவிட்டதன் அடையாளமாக, வேகவேகமாக ஒலிப்பான் அலறுவதைக் கேட்கமுடிந்தது. வண்டி வேகம் குறைந்து மெதுவாக ஊர்ந்துசெல்லத் தொடங்கியது.
                "என்ன நடந்தாலும் சரி சார், உள்ள என்ன நடக்குதுன்னு பாக்காம போறதில்ல சார்..." இரண்டுபேர்மட்டும் தன் முடிவில் மிக உறுதியாக இருந்தார்கள்.
                கன்னடம், இந்தி, ஆங்கிலம் என மும்மொழியிலும் எடுத்துரைக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ஐந்தாவது நிறுத்தத்தில் வண்டி நின்றது. தேங்காய் மூட்டையை அவிழ்த்துக்கொட்டியமாதிரி, பெட்டியிலிருந்து இறங்கி எல்லாரும் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள்கடைசியாக பெட்டியிலிருந்து இறங்கிய நான், கழிப்பறைக்கதவு திறக்கப்படும் கணத்துக்காகக் காத்திருந்தேன். இரண்டு முறை விரலால் தட்டி ஓசையெழுப்பியும் பார்த்தேன்எந்த எதிர்வினையும் இல்லாததை நினைத்துக் குழப்பமாக இருந்தது.
நிலையத்தில் மக்கள்கூட்டம் அலைமோதியது. ஒருபக்கம் இடைவிடாமல் ஒலிக்கிற அறிவிப்புச் சத்தம். இன்னொருபக்கம் தூணுக்குத்தூண் பொருத்தபட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் சத்தம். சின்னச்சின்ன வியாபாரிகளின் சத்தம். அலைபேசிகளிலிருந்து வெளிப்பட்டு பரவும் பாடல்களின் சத்தம். நிற்க நேரமில்லாமல்  ஓடிக்கொண்டிருப்பவர்களின் சத்தம்.
                எங்கேயோ நின்றிருந்த காவலர்களை அவ்விருவரும் சேர்ந்து அழைத்துவந்தார்கள். "இந்த பொட்டிதான் சார். இழுத்து வெளிய போடுங்க சார் மொதல்ல. ஆம்பளையா இருந்தாலும் சரி, பொம்பளையா இருந்தாலும், ரெண்டு மிதி மிதிச்சாதான் மனசு அடங்கும்...."
                "இருங்க இருங்க பாக்கலாம்..."  காவலர்கள் பெட்டிக்குள் ஏறினார்கள். கழிப்பறையை பூட்ஸ் அணிந்த காலால் தட்டிப் பார்த்தார்கள். எல்லா விதங்களிலும் மிரட்டி எச்சரிக்கை விடுத்தார்கள். பல நிமிடங்கள் வரை எந்த எதிர்வினையும் இல்லாமல் போகவே, அவர்கள் மெதுவாக கதவை நெருங்கி இடைவெளிக்காகத் தேடினார்கள். ஒருவன்மட்டும் திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவனாக "ஏதாச்சிம் வெfஇகுண்டு கேஸா இருக்கப் போவுது மாப்பள. வேணுமின்னா ஸ்க்வாட மொதல்ல கூப்புட்டு காட்டலாம். அப்பறமா தைரியமா வேலையில எறங்கலாம்...." ஏற்கனவே தைரியமா இருந்தவனையும் அந்த வார்த்தை தடுமாறவைத்தது. "போன வருசத்துல பம்பாய குறிவச்சவன் இந்த வருசம் பெங்களூருன்னு குறிவச்சிருந்தா என்ன சார் செய்யமுடியும்?" சிறிது நேரம் தயங்கி நின்றாலும், ஒரு முடிவுக்கு வந்தவனாக தொப்பியைக் கழற்றி கையால் பிடித்துக்கொண்டு கதவின் இடுக்கில் தெரிந்த இடைவெளியில் கொண்டுவந்திருந்த நெம்புகோல்போன்ற ஆயுதத்தை நுழைத்து நெம்பினான். ஆறேழு முறை அசைத்த பிறகு, கதவு இடைவெளி கொடுத்தது. காவலர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். "நம்ம ஊருல யாருய்யா வந்து குண்டு வைக்கப் போறாங்க?"
                அடுத்த மூன்றாவது முயற்சியில் கதவு முழுமையாகத் திறந்தது. அடுத்த கணம் எல்லாரும் அதிர்ச்சியில் பின்வாங்கி உறைந்து நின்றார்கள். பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவனொருவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். கைகளும் கால்களும் ஒவ்வொரு திசையில் விறைத்திருந்தன. வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்தது. மூக்கிலிருந்து வழிந்த ரத்தம் கழுத்தில் இறங்கி மார்பு முழுவதும் நனைந்திருந்தது. குதத்திலிருந்து வெளிப்பட்ட ரத்தம் கால்களில் வழிந்து கழிப்பறைக் கோப்பையில் குளமாகத் தேங்கியிருந்தது. அந்தக் கோலத்தை ஒரு நொடிக்கும்மேல் ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. அப்படியே பின்னால் நடந்து உறைந்துபோய் ஒரு கம்பத்தருகே உட்கார்ந்தேன்.

(’யுகமாயினி’ இதழில்  2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கட்டுரை)