தமிழ் நாவல்கள் கடந்து வந்திருக்கும்
சமீபத்திய பத்தாண்டுகளை ஒருவிதத்தில் ‘வரலாற்றுப் புனைகதைகளின் பொற்காலம்’ என்று குறிப்பிடலாம்.
வரலாற்றுப் புனைகதை என்னும் வகைமையில் அடங்கும் படைப்புகள், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட
வரலாற்றின் உண்மைகளை வாசகர்கள் முன்னிலையில் பரப்பிவைக்கும் எளிய முயற்சிகளல்ல. அதே
சமயத்தில் அந்த உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு, வரலாற்றின் பெயரால் சொந்தக் கற்பனைகளை
அழகிய புனைவுமொழியில் கவர்ச்சிகரமாகக் கட்டியெழுப்பி நிறுத்தும் முயற்சிகளுமல்ல. வரலாற்றின்
உண்மைகளை முன்வைத்து, அதன் இடைவெளிகளை தர்க்கபூர்வமான
கற்பனைகளால் நிரப்பி, முற்றிலும் புதியதொரு வரலாறாக புனைந்து காட்டும் முயற்சிகள் என்று
வரையறுத்துக்கொள்ளலாம். வரலாற்றுத்தகவல்கள் வரலாற்றின் களத்தில் வீற்றிருக்க, வரலாற்றுப்புனைகதைகள்
இலக்கியத்தளத்தில் கால்கொள்கின்றன. அதைக்கொண்டு இதை மதிப்பிடவும், இதைக்கொண்டு அதை
மதிப்பிடவுமான எல்லாச் சாத்தியங்களையும் ஒரு வாசகன் மேற்கொள்ளலாம். இதுவரை அடைந்து
கிடந்த காட்டுக்குள் செல்வதற்கான ஒரு புதிய தடம் வரலாற்றுப்புனைகதைகள்.
தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றை
தாய்த்தெய்வ மரபைச் சார்ந்து புனைவாக மாற்றி ஒரு காவியத்தின் சாயலில் ஜெயமோகன் முன்வைத்திருக்கும்
கொற்றவை தமிழ் நாவல்களில் ஒரு திருப்புமுனையை
உருவாக்கிய படைப்பு என்றே சொல்லவேண்டும். ஏராளமான குறுங்கதைகள், குலக்கதைகள், பாடல்கள்,
சிலப்பதிகாரக்கதை என எல்லாவற்றின் வழியாகவும் கொற்றவை நாவல் விரிந்து புதிய வகையானதொரு
தொன்மத்தைக் கட்டியெழுப்புகிறது. நிலம், நீர், காற்று, எரி, வானம் என பஞ்சபூதங்களின்
பெயர்களால் பிரிந்திருக்கும் ஐந்து பகுதிகளை நாவல் ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு பகுதியும்
ஒவ்வொரு விதமாக நாவலில் இடம்பெற்றிருக்கிறது. கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டத்தில் தொடங்கும்
கதை அழிந்துபோகும் மதுரையின் சித்தரிப்பில் முடிகிறது. ஒரு கோணத்தில் மொத்த நாவலையும்
அழிவுச்சித்திரங்களின் தொகுப்பு என்று அடையாளப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. ஆயினும்,
அனைத்து அழிவுகளையும் எருவாக உட்கொண்டுதானே புதியவை பிறக்கின்றன என்னும் எண்ணம் எழுந்ததுமே,
நாவல் புத்தாக்கத்தின் தொகுப்பாக தோற்றம் தரத் தொடங்கிவிடுகிறது.
சங்ககால வாழ்க்கைமுறை எப்படி
இருந்திருக்கக்கூடும் என்பதைப்பற்றிய விவரங்களை ஓரளவு முயற்சி செய்தால் சங்கச்செய்யுட்களை
முன்வைத்து நம்மால் தீட்டிவிட முடியும். ஓலைச்சுவடிகள், செய்யுட்கள், கல்வெட்டுகள்
என எதுவுமே கிடைக்காத சங்க காலத்துக்கும் முந்தைய தொன்மைக்காலத்தின் வாழ்க்கைமுறை எப்படி
இருந்திருக்கும் என்பதை கற்பனையால் மட்டுமே விரித்தெடுக்க முடியும். அப்படிப்பட்ட தொன்மைக்காலத்தின் வாழ்க்கைமுறையை இனிய
சொற்கட்டோடும் கவித்துவத்தோடும் நாவலில் விவரித்திருக்கிறார் ஜெயமோகன். அங்கிருந்து
வரலாற்றைத் தொடங்குகிறார் அவர். எல்லாத் தெய்வங்களுக்கும் முன்னால் பேராச்சி என்னும்
தாய்தெய்வம் உருவான விதத்தை முதல் பகுதியிலும் அதே தெய்வம் குமரித்தெய்வமாக உருமாறும்
விதத்தை இடைப்பகுதியிலும் கண்ணகி ஒரு தெய்வமாக உருவாகும் விதத்தை இறுதிப்பகுதியிலும்
காணலாம். தெய்வங்கள் உருவாகும் விதத்தை வரலாற்றின் வழியாக அறிந்துகொள்ளும் ஒரு முயற்சி
என்றும் இப்படைப்பாக்கத்தைச் சொல்லலாம்.
வளமான குமரிக்கண்டம் கடல்கோளால்
அழிகிறது. பிறகு கபாடபுரம் தோன்றுகிறது. அதுவும் ஓங்கி வளர்ந்து சிறப்புற விளங்கி,
மீண்டும் கடலால் அழிகிறது. வரலாற்றில் அடுத்த கட்டமாக மதுரை உருவாகிறது. கண்ணகிக்கு
ஆதரவுக்குரல் கொடுக்கும் மக்கள் எழுச்சியால் மதுரையும் அழிகிறது. பஞ்சபூதங்களின் விளையாட்டாக
ஆக்கமும் அழிவும் மாறிமாறி இடம்பெற்றிருப்பதைத்
தீட்டிக் காட்டும் இந்த நாவல் புனைவின் அனைத்துச் சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ்மண்ணின் வெவ்வேறு விதமான
நிலப்பகுதிகளையும் இயற்கைக்காட்சிகளையும் நுட்பமான விவரங்களோடு கட்டியெழுப்பும் ஜெயமோகன்
பாராட்டுக்குரியவர். கொற்றவை நாவல் முழுக்க சீராக வந்துகொண்டே இருக்கும் இந்தத் தகவல்களின்
பின்னலில் எழும் தமிழ்நிலத்தில் சித்திரம் வாசகர்களின் நெஞ்சை நிரப்பிவிடும் ஆற்றல்
மிக்கதாகும்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கால
மீனவர் வரலாற்றைக் கட்டியெழுப்பியிருக்கும் நாவல் ஆழிசூழ் உலகு. எழுதியவர் ஜோ டி குரூஸ். தன் முதல் படைப்பின் வழியாகவே தமிழ்
இலக்கிய உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். சிலுவை, சூசை, கோத்ரா என்னும் மூன்று
நண்பர்கள் சேர்ந்து சுறா பிடிக்கச் செல்லும் காட்சியில் தொடங்குகிறது நாவல். அவர்கள்
செல்லும் கட்டுமரம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்துவிட தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள்.
அவர்களுடைய நினைவோட்டங்கள் வழியாக விரிந்து பரவுகிறது நாவல். நிகழ்காலத்தலைமுறை, முந்தைய
தலைமுறை, அதற்கும் முந்தைய தலைமுறை என பின்னோக்கிப் பயணப்பட்டபடி செல்கிறது. அந்தப்
பயணத்தில் மீனவர்களின் வணிகம் நாடார்களின் வணிகமாக இடம்மாறிய புதிரை நுட்பமாக உணர்த்துகிறார். அதுவரை ஏராளமான சிற்றூர்களால் சூழப்பட்டிருந்த ஒரு
சிற்றூர் மெல்ல மெல்ல ஒரு நகரமாக உருமாறுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். நாவல்
முழுதும் இடம்பெறும் மனிதர்கள் அல்லது நீண்டுசெல்லும் வலிமையான சம்பவம் என ஏதும் நாவலில்
இல்லை. மாறாக எண்ணற்ற மனிதர்கள் வந்துவந்து செல்கிறார்கள். இப்படிப்பட்ட காட்சிகளின்
தொகுப்பைக் கவனிக்கும்போது ஒரு சிற்றூரையே பார்த்ததுபோல உள்ளது.
ஆமந்துறை தூத்துக்குடியான மாறிய
வரலாற்றின் சித்திரமே ஆழிசூழ் உலகு என ஒரு வசதிக்காக சுருக்கிச் சொல்லமுடியும். இந்த
மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை எழுத்தின் வழியாக நிகழ்த்திக் காட்டுகிறார் ஜோ டி
குரூஸ். அதுவே அவர் ஓர் எழுத்தாளராக அடைந்திருக்கும் வெற்றி. முதலில் பாத்திரங்களை
அறிமுகப்படுத்தி, பிறகு அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் விருப்பங்களையும் ஊக்கங்களையும்
படிப்படியாகச் சொல்லி, உறவுகளையும் பிரிவுகளையும் விவரித்து, அவர்களைப் பெரியவர்களாக
வளரச் செய்கிறார். அவர்கள் வளரவளர, வாழ்க்கை மெல்ல மெல்ல முன்னோக்கி நகர்ந்து வருகிறது.
ஒரு வரலாற்றை உருவாக்கும் மனிதர்கள் வழியாகவே வரலாறு உணர்த்தப்படுகிறது. நாவலில் தனுஷ்கோடியை
புயல் தாக்கி அழிக்கும் பகுதிகளும் சுறா வேட்டை இடம்பெற்றிருக்கும் பகுதிகளும் காகு
சாமியார் என்னும் பாதிரியாரைப்பற்றிய பகுதிகளும் ஜோ டி குரூஸின் எழுத்தாளுமைக்குச்
சான்று.
ஆழிசூழ் உலகின் தொடர்ச்சியாகப்
பார்க்கப்படவேண்டிய மற்றொரு நாவல் அவரே எழுதிய கொற்கை. கொற்கை துறைமுகப்பிரதேசத்தைக் களமாகக் கொண்டு கடந்த நூற்றாண்டின் வரலாற்றை எழுதிப் பார்க்க முயற்சி செய்கிறது. நாவல்
நெடுக வரலாற்றுத் தகவல்களும் புனைவுகளும் மாறிமாறிப் பின்னலிட்டு நீண்டிருக்கின்றன.
வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளுடைய உள்ளார்ந்த வேட்கைகளை அடையாளப்படுத்துவதில்
தொடங்கி, மீனவர்கள் மற்றும் நாடார்களின் உள்ளார்ந்த வேட்கைகளை அடையாளப்படுத்துவதில்
முடியும் நாவல் என்று கொற்கையைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அடையாளப்படுத்துதல்
என்பது கூட ஒருவகையில் சமூக இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே.
கடலோடிகளின் கப்பல் பயண வாழ்க்கையைப்பற்றிய
சித்தரிப்புகள் மனம் மயக்கவைக்கின்றன. குரூஸின் கடல்பற்றிய ஞானம் மகத்தானது. மீனவ சமூகம்
ஏழைக்குடும்பங்களாலும் செல்வாக்கு மிக்க பணக்காரக் குடும்பங்களாலும் நிறைந்திருக்கின்றது.
தம் அயராத முயற்சியால் ஏழைக்குடும்பங்கள் மெல்ல மெல்ல வாழ்க்கை என்னும் ஏணிப்படிகளில்
ஒவ்வொரு அடியாக ஏறிச் செல்கின்றன. தன் ஊதாரித் தனத்தாலும் கேளிக்கை ஈடுபாட்டாலும் பணக்காரக்குடும்பங்கள்
ஒவ்வொரு அடியாக கீழே இறங்கி தரையில் சரிந்து விழுந்துவிடுகின்றன. இயற்கையான சித்தரிப்புகள்
வழியாக அலைகள் உயர்ந்து தாழ்வதுபோல நேரும் இந்த வாழ்க்கை மாற்றத்தை வலிமையாகத் தீட்டிக்
காட்டுகிறார் குரூஸ்.
மீனவ சமூகத்துக்கு இணையாக வணிகத்தில்
ஈடுபடும் நாடார் சமூகத்தைப்பற்றிய பகுதிகளும் நாவலில் நிறைந்துள்ளன. மீனவர்களின் கடல்
பயணத்தை தம் வணிகத்துக்கு முதலில் பயன்படுத்திக்கொள்ளும் நாடார் சமூகம் மெல்ல மெல்ல
கப்பல் வணிகத்தில் காலடி எடுத்து வைத்து வேகவேகமாக வளர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். அந்த
வெற்றிய கடலிலேயே வாழும் மீனவர்களால் அடையமுடியவில்லை.
நாவலின் மையத்துடன் பெரிய அளவில்
தொடர்பற்றிருந்த போதிலும் நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு சின்ன நிகழ்ச்சியை வாசிக்கும்போது
அடைந்த பதற்றத்தையும் மனபாரத்தையும் மறக்கமுடியாது. அந்தப் பெண்ணின் பெயர் மதலேனா.
யாருமற்ற அனாதை. அவளை மணந்துகொள்ளும் ஆண் அவளைப் படாத பாடு படுத்துகிறான். ஒருபுறம்,
விருப்பமில்லாத் தருணங்களில் கூட அவன் கொடுக்கும் பாலியல் இம்சை. இன்னொரு புறம், அவள்
நடத்தையின் மீதான சந்தேகக் கண்ணோட்டத்துடன் அவன் கொட்டும் கொடுமையான வசைகள். அவள் மனம் அந்தக்
கொடுமையிலிருந்து ஒரு விடுதலையை நாடுகிறது. போதையில் இருக்கும் அவனை ஒரு நாற்காலியில்
கட்டிப் போட்டுவிட்டு, அவன் கண்ணெதிரிலேயே தூக்கு போட்டுக்கொண்டு மரணத்தைத் தேடிக்கொள்கிறாள்
அவள். மதலேனா ஒரு சின்ன எடுத்துக்காட்டு. விரிந்து செல்லும் குரூஸின் நாவல் பக்கங்களில்
இப்படிப்பட்ட எண்ணற்றவர்களின் சித்திரங்கள் நிறைந்திருக்கின்றன. வரலாற்றில் கரைந்துபோகும்
சிறுதுளிகள் இவர்கள்.
கொல்லங்கோடு கடற்கரைப்பகுதியின்
வரலாறாக கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நாவல் துறைவன்.
காலம்காலமாக சமூகத்தில் தம்மை அடையாளப்படுத்த சூட்டப்பட்டிருக்கும் பெயரை மறுத்து புதிய
பெயரை வகுத்து வாழ்ந்த மீனவ மக்களின் வரலாற்றை கிறிஸ்டோபர் ஆண்றனி துடிப்போடு சித்தரித்துள்ளார்.
கேரளக் கடற்கரையில் முதன்முதலாக மீனவர்களைக் கண்ட வாஸ்கோடகாமா, அவர்களை முக்குவர் என்று
குறிப்பிட்டார். அது ஒரு சாதிப்பெயர் அல்ல. அவர்களுடைய சாதி என்ன என்று அறிந்துகொள்ளக்கூட
வாஸ்கோடகாமா விழையவில்லை. மொசாம்பிக் நாட்டில் பண்படாத காட்டுமிராண்டிக் குழுவினரைக்
குறிக்கும் சொல்லான முக்குவா அல்லது மக்குவா என்னும் இனத்தின் பெயரையே அவர்களுக்கும்
சூட்டிவிட்டார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, சாமியார் படிப்பைப் படிக்கச் செல்லும்
கடற்கரையோரத்து இளைஞனொருவன், அங்கு கற்பிக்கப்படும் புத்தகம் வழியாக அந்தத் தகவலை அறிந்துவந்து
தம் மக்களுடன் பகிர்ந்துகொள்கிறான். அது அவர்களைக் கொந்தளிக்கவைக்கிறது. வரலாற்றால்
வஞ்சிக்கப்பட்ட கோபத்தால் அவர்கள் குமுறுகிறார்கள். தம் மீது திணிக்கப்பட்ட முக்குவர்
அடையாளத்தை மறுத்து, துறைவன் என அழைக்கப்படவேண்டும் என்று விழிப்புணர்வு கொள்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் மதம் மாறியவர்கள்.
ஆயினும் அதுவரைக்கும் கடைபிடித்து வந்த தொல்மரபுகளிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும்
அவர்களால் அவ்வளவு எளிதாக வெளியே வரமுடியவில்லை. ஒட்டியும் ஒட்டாமலுமாகவே அவர்கள் வாழ்கிறார்கள். இவ்விதமாக ஒருபுறம் வரலாற்றையும்
மறுபுறம் மானுட உணர்வுச்சிக்கல்களையும் இணைத்தபடி
முன்னோகி நகர்கிறது துறைவன் நாவல். மார்த்தாண்டவர்மா என்னும் கேரளத்து அரசன்
தம் எதிரிகளின் பெண்களை மீனவர்களுக்கு வழங்கியது, போர்த்துகீசியப் பாதிரிகளின் வருகை,
மதமாற்றம், மதத்தின் பெயரால் நிகழும் சுரண்டல்கள், மதத்தின் வழியாக கிடைக்கக்கூடிய
வேவைகள், காமராஜர் காலம், எம்.ஜி.ஆர்.காலம் என சில நூற்றாண்டுகளின் வரலாற்றுச் சித்திரங்கள்
நாவலில் காணப்படுகின்றன. அவை எங்கும் வெற்றுத் தகவலாக துருத்திக்கொண்டிராதபடி நாவலின்
கதைப்போக்கில் நுட்பமுடன் இணைத்திருக்கிறார் கிறிஸ்டோபர்.
சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் ஒருவகையில்
சமகால வரலாற்றை முன்வைக்கும் படைப்பு. எளிய தலித் குடும்பத்தில் பிறந்து கல்வி கற்று
அரசாங்கத்தில் உயர்பதவியை வகிக்கத் தொடங்கும் ஒரு பெண், தன் சமூகத்துக்கு உரிய உரிமைகளும்
சலுகைகளும் நீதியும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அந்த விருப்பம் சார்ந்து,
தன் சமூக மக்களை ஒன்றுதிரட்டி, அரசியல் உணர்வூட்டி, தம் உரிமைகளுக்காக அவர்கள் மேற்கொள்ளவேண்டிய
போராட்டங்களைப்பற்றி எடுத்துரைக்கிறாள். அவளுக்குள் திரண்டெழும் கனவுகளும் போர்க்குணமும்
ஒரு பக்கம். கனவுகளை நனவாக்கும் திசையில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் எழும் சிக்கல்களும்
மோதல்களும் இன்னொரு பக்கம். இரண்டுக்கும் இடையில் அவள் அடையும் வேதனையும் துக்கமும்
ஒரு பெரிய வரலாறாகவே விரிந்திருக்கிறது. நாவலை எழுதிய சிவகாமி இந்திய ஆட்சிப்பணித்
துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நாவலில் இடம்பெற்றிருக்கும் பாத்திரமான
நீலாவும் அத்தகையவரே. நீலாவின் பாத்திர வார்ப்பில் சிவகாமியின் சாயலை உணரமுடிகிறது.
அரசு அமைப்புகள் அனைத்தும் மக்கள்
நலனுக்காகவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் உருவாக்கப்பட்டவை. அவை
சீரான முறையில் செயல்படவும் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு பாலமாக இயங்கவும்
அதிகாரிகளும் அவர்களுக்கு உறுதுணை செய்ய அலுவலர்களும் தேவைப்படுகிறார்கள். ஒரு எளிய
குடிமகன் இந்த அமைப்புக்குப் பொறுப்பாளர்களாக இயங்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள்
வழியாகவே அரசை அணுகமுடியும். விதிப்படி இந்த இயங்குமுறையில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாது.
ஆனால் எதார்த்தத்தில் எல்லாச் சிக்கல்களும் இருக்கின்றன. இந்தச் சிக்கல்களை உருவாக்குகிறவர்கள்
அதிகாரிகளும் அலுவலகர்களும் சேர்ந்த ஒரு வட்டம். இந்தியாவில் இன்றைய தேதியில் மிகப்பெரிய
சவால், இந்த வட்டத்தைச் சமாளிப்பது எப்படி என்பதுதான். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
கடக்கமுடியாத பெருஞ்சுவர்களாக, நந்திகளாக வழிமறித்து
நிற்கிறார்கள். அவர்கள் விதிக்கும் தடைகளின் முன்னால் எளிய மனிதர்கள் சோர்வுற்று மனம்கசந்து
கையறு நிலையில் தடுமாறி நிற்கிறார்கள். அரசை அணுகுவது என்பதே ஒரு மாபெரும் கனவாக மாறும்
அவலம் நேர்கிறது. ஓர் எளிய மனிதன் அப்படி தடுமாறி நிற்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், ஓர் அதிகாரியே சோர்ந்து தடுமாறி நிற்பது எவ்வளவு பெரிய சங்கடம்? அவரைத் தடுமாறவைப்பவர்கள்
சக அதிகாரிகள் அல்லது மேல் அதிகாரிகள் என்பது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம்? நீலா அத்தகு
சங்கடங்களுக்கு நடுவில் பல தருணங்களில் நிற்க நேர்கிறது. சோர்வை மீறி ஒவ்வொரு முறையும்
அவர் போர்க்குணம் கொள்கிறார். போராடுகிறார்.
இழப்பவை அதிகமாகவும் பெறுபவை மிகக்குறைவாக இருந்தபோதும், மனம் தளராமல் தன் குரலை ஒலிக்கவைத்தபடி
இருக்கிறாள். நாவல் நெடுக பல தவறுகளையும் சுரண்டல்களையும் தொடர்ச்சியாக நீலா அரசு எந்திரத்தின்
கவனத்துக்குக் கொண்டு சென்றபடி இருக்கிறாள். நியாயத்துக்காக வாதாடியபடி இருக்கிறாள்.
ஆனாலும் முழு வெற்றி என சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் அவளால் சாதிக்கமுடிவதில்லை.
பெரும்பாலும் ஒத்திப் போடப்படுகின்றன. அல்லது ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் செய்துவிட்டு,
மற்றவற்றை தள்ளிவைக்கின்றன. சலித்துப்போய் அரசு அமைப்பைவிட்டு அவள் வெளியேறுகிறாள்.
மக்களைத் திரட்டி அரசுக்கு எதிர்ப்புள்ளியில் நிறுத்தி நியாயத்தைப் பெறமுடியும் என்று
திட்டமிடுகிறாள். கொஞ்சம்கொஞ்சமாக மக்கள் அமைப்பும் அரசு அமைப்பைப்போலவே இயங்கக்கூடிய
மற்றொரு அமைப்பு என்னும் கசப்பான உண்மையைப் புரிந்துகொள்கிறாள். அரசு அமைப்பு ஒருவிதமான
அதிகாரம் சார்ந்த சூத்திரத்தின் அடிப்படையில்
இயங்குகிறது என்றால், மக்கள் அமைப்பு இன்னொரு விதமான அதிகாரம் சார்ந்த சூத்திரங்களின்
பிடியில் இருப்பதை அதிர்ச்சியுடன் உணர்கிறாள் நீலா. ஒருவகையான அதிகார இச்சையே எல்லோரையும்
செலுத்தும் விசையாக இருக்கிறது. நாவல் முழுதும் மாறிமாறி இடம்பெற்றிருக்கும் இந்த நடிப்புகளும்
பொய்ப்பேச்சுகளும் சமகால வாழ்க்கையில் நாம் நித்தமும் பார்த்தபடியும் கேட்டபடியும்
இருப்பவை. அதனால் தன்னால் எதையும் சாதிக்கமுடியவில்லையே என நீலா அடையும் சோர்வை நம்
மனமும் அடைவதைத் தவிர்க்கமுடியவில்லை. நெஞ்சைச் சுடும் இந்த உண்மைகளையே ஓர் ஆவணமாக
இந்த நாவல் தொகுத்து வழங்குகிறது என்றும் சொல்லலாம்.
தந்திரமும் அதிகார ஏணிப்படிகளில்
விரைந்தேறும் தாகமும் இலட்சியவாதிகளிடையேயும்
நிறைந்திருப்பதை அதிர்ச்சியுடனும் நம்பமுடியாமலும் பார்க்கும் நீலாவின் பார்வையில்
அசிந்தா ஓர் அபூர்வ பாத்திரமாக தென்படுகிறார். மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாகக்
கொண்டவர் அவர். தோல்விகளைக் கண்டு சோர்ந்துவிடாமல் சேவைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்
அவரைக் கண்டடைவது என்பது நீலாவின் வாழ்வில் முக்கியமானதொரு தருணம். இலட்சியவாதத்தின்
உண்மையான அடையாளமாக அவர் வாழ்வதைக் கண்டு மனஎழுச்சி கொள்கிறார். அதுவரை நீலாவின் மனத்தை
அழுத்திக்கொண்டிருந்த அவநம்பிக்கை அசிந்தாவின் முன் கரைந்துபோய்விடுகிறது. தன் பயணம் எவ்விதமான தடைகளையும் கண்டு சோர்வுறாமல்
தொடர்வதற்குத் தேவையான ஆற்றலையும் நம்பிக்கையையும் அவள் பெறுகிறாள்.
சு.வெங்கடேசனின்
காவல்கோட்டம் மதுரை நகரத்தை இன்னொரு வரலாற்றின்
வழியாக அணுக உதவி செய்கிறது. இந்த நாவல் முழுதும்
கதைக்குள் கதைகளென எண்ணற்ற குறுங்கதைகள் நிறைந்திருக்கின்றன. வாய்மொழிக்கதைகளின்
தொகுப்புபோல அவை காட்சியளித்தாலும், மக்களின் உரையாடலின் வழியே வளர்ந்து பெருகிய ஒரு
வரலாற்றின் தடத்தையே அக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன் என்று நினைக்கத் தோன்றுகிறது.
மதுரையைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட முக்கியமான பல வரலாற்றுத் தகவல்களையெல்லாம்
ஓர் இழையாகவும் வரலாறாகப் பதிவு பெற்றிராத இனவரலாறொன்றை இன்னொரு இழையாகவும் இணைத்து
நெய்யப்பட்ட தோற்றத்தைத் தருகிறது சு.வெங்கடேசனின் நாவல். மதுரை நகரின் காவல் பொறுப்பு
ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் வழங்கப்பட்டிருந்தது. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக் காபூரின் தாக்குதலில் அந்நகரத்தின் காவல்காரனாகப்
பணிபுரிந்த கருப்பணன் கொல்லப்படுகிறான். அவனுடைய மனைவி சடைச்சி நகரைவிட்டு வெளியேறி
சமணமலை அடிவாரத்தில் தாதனூர் என்னும் இடத்தில் வசிக்கத் தொடங்குகிறாள். அவள் கொடிவழியைச்
சேர்ந்த மக்கள் அங்கே வாழ்ந்து பெருகுகிறார்கள். களவை ஒரு தொழிலாகச் செய்வதில் அவர்களுக்கு
எவ்விதமான குற்ற உணர்வும் இல்லை. அவர்கள் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மதுரையை நாயக்கர்
வம்சம் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கியபோது, கட்டுக்காவல் மிக்க திருமலை நாயக்கர்
அரண்மனைக்குள் நுழைந்து அவருடைய அரசமுத்திரையைத் திருடிவிடுகிறான். அரச முத்திரையைக்
கண்டுபிடித்துத் தருகிறவனுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார் அரசர்.
திருடியவனை அரசர் முன்னால் அழைத்துச் சென்று நிறுத்துகிறார்கள் தாதனூர்க்காரர்கள்.
அவன் அரண்மனைக்குள் புகுந்து திருடிய சூட்சுமத்தை அரசர் முன்னிலையில் பகிர்ந்துகொள்கிறான்.
அவன் செய்தது திருட்டே என்றபோதும், அவனுடைய திறமையை மெச்சிய திருமலை நாயக்கர், திருடிய
குற்றத்துக்காக மூன்று சவுக்கடிகளை தண்டனையாக விதிக்கிறார். அத்துடன் கோட்டைக் காவலன்
என்னும் பொறுப்பும் அவனுக்கு அளிக்கப்படுகிறது.
சுல்தான் படையெடுப்பில் இழந்த உரிமையை அந்தக் குடியினர் மீண்டும் அடைகிறார்கள்.
ஒருவகையில்
இதுவே நாவலின் தொடக்கப்புள்ளி. காவல் செய்த இனம் களவில் ஈடுபட்டு வாழத் தொடங்கி, இறுதியில்
மீண்டும் காவல் பணியை அடையும் விதத்தை கச்சிதமான காட்சிகள் வழியாகக் கட்டியெழுப்பியிருக்கிறார்
வெங்கடேசன். ஆனால் அவ்வினத்தின் வாழ்க்கை சீரானதாக இல்லை. கடலலைபோல உயர்ந்தும் தாழ்ந்தும்
மாறிமாறி நகர்ந்தபடியே இருக்கிறது. அரசவம்சம் மாறும்போதெல்லாம் அவர்கள் நிலைகளிலும்
மாற்றம் ஏற்படுகிறது. காவல் பொறுப்பில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவ்வினம் களவில்
ஈடுபடுவதில்லை. அதே சமயத்தில் காவல் பொறுப்பிலிருந்து அவர்கள் விலக்கப்படும் போதெல்லாம்
அவர்களுக்கு களவைத் தவிர பிழைப்பதற்கு வேறு வழி தெரியவில்லை. காவலர்களாகவும் கள்வர்களாகவும்
மாறிமாறி வாழ்கிறார்கள். காவலும் களவும் தாதனூரின் இரட்டைப்பிள்ளைகள் என்றொரு குறிப்பு
சொல்கிறது.
விஸ்வநாத நாயக்கர்
காலத்தில் மதுரையில் பெரியதொரு கோட்டை கட்டப்படுகிறது. கோட்டையின் காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள்
அடைகிறார்கள். மதுரை கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டதைத் தொடர்ந்து கோட்டையும்
அவர்கள் வசம் போய்விடுகிறது. நகரை விரிவு படுத்துவதற்காக கோட்டையை இடிக்க கட்டளையிடுகிறார்
கலெக்டர் பிளாக்பெர்ன். அதைத் தொடர்ந்து நகரமெங்கும் காவல் காப்பதற்காக காவல் துறை
உருவாகிறது. தாதனூர்க்காரர்கள் மறுபடியும்
தன் உரிமையை இழக்கிறார்கள்.
இந்த உரிமை
இழப்பை ஒருவித காவியத்தன்மையுடன் படைத்திருக்கிறார் வெங்கடேசன். கோட்டை இடிபடும்போது,
கோட்டைக்காவலர்களால் வாசல்தோறும் நிலைநிறுத்தப்பட்ட தெய்வங்கள் அலறிக் கதறியபடி வெளியேறும்
காட்சியை உயிர்த்துடிப்போடும் கவித்துவத்தோடும் எழுதியிருக்கும் முறை பாராட்டுக்குரியது.
அரசுக்கும்
கள்ளரினத்தவருக்கும் இடையிலான மோதலில் அரசு
குற்றப்பரம்பரைச் சட்டத்தை இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவருகிறது. எல்லோருடைய விரல்ரேகையும் பெற்று பதிவு செய்யப்படுகிறது.
அதை எதிர்க்கும் மக்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிறார்கள். ஒரு கொலையில் தொடங்கும்
நாவல் பல கொலைகளில் முடிவடைகிறது.
யாமம் என்னும் அத்தரைப்பற்றிய
புனைகதையை எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல்
முன்வைக்கிறது. யாமம் என்னும் சொல்லின் நேரடிப்பொருளான இருளையும் இந்த அத்தரின் மணத்தையும்
இணைத்து, அதன் விளைவாக வாழ்க்கையின் கோலங்களைத் தொகுத்து முன்வைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
வரலாற்றின் தகவல்களை கச்சிதமாகவும் நுட்பமாகவும் நாவலின் மையத்தோடு இணைத்திருப்பதில்
எஸ்.ராமகிருஷ்ணனின் கலையாற்றல் வெற்றி பெற்றிருக்கிறது.
மதராசப்பட்டணத்தில் அத்தர் வணிகம்
செய்து வருபவர் அப்துல் கரீம். ஒருநாள் இரவில் அவருடைய கனவில் ஒரு சூஃபி தோன்றி வசீகரமான
அத்தரை உருவாக்கும் விதத்தைச் சொல்கிறார். அத்தரின் மணம் ஒவ்வொருவருடைய இரவையும் ஆட்கொள்கிறது.
இரவுகளில் இனிமையைக் காண்கிறவர்களின் வாழ்க்கையையும் அமைதியைத் தொலைத்துவிட்டு இரவுகளில்
தனித்தலைபவர்களின் வாழ்க்கையையும் தொகுத்துக் காட்டுகிறது நாவல். ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாவிட்டாலும்,
ஏதோ ஒரு வகையில் ஒன்றை ஒன்று தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக விரிந்திருக்கிறது வாழ்க்கை. வாழ்க்கை என்னும் வலை இப்படி பல நூறு கண்ணிகளால்
தற்செயலாக இணைக்கப்பட்ட ஒரு பேருருவம். அந்தப் பேருருவத்தை நம் கண்முன்னால் ஒருகணம்
தோன்றச் செய்து ஓய்கிறது நாவல்.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாக
லண்டனில் ஒரு வணிக நிறுவனம் உருவாகிறது. அவர்களுடைய முதன்மை நோக்கம் குறுமிளகு கொள்முதல்.
அவர்கள் இந்தியாவுக்கு வந்து முகலாய மன்னர் ஷாஜகானைச் சந்தித்துப் பேசி வணிக உரிமை
பெறுகிறார்கள். அதன் விளைவு தெற்கே வங்காள விரிகுடாவுக்கு அருகில் சில கிராமங்கள் ஆங்கிலேயர்களின்
கைவசம் செல்கின்றன. அவர்கள் மதராசப்பட்டணத்தில் ஒரு கோட்டையைக் கட்டியெழுப்பிக் கொள்கிறார்கள்.
அந்தப் புதிய நகரத்தில் வாழத் தொடங்கும் மனிதர்களின் இரவுகளை இன்பம் நிறைந்ததாக ஆக்குகிறது
யாமம் என்னும் அத்தர். செல்வந்தர்களும் உயர்குடிகளும் அந்த அத்தரை வாங்கி உடல்முழுதும்
பூசிக்கொள்கிறார்கள். உடலில் பூக்கள் மலர்வதைப்போல காமத்தை அரும்பச் செய்கிறது அத்தர்.
அத்தர் வணிகத்தில் ஏராளமான அளவில்
செல்வமீட்டும் கரீம் ஏற்கனவே மனைவி இருக்கும் நிலையில் புதுப்பெண் ஒருத்தியைத் தேடி
மணந்துகொள்கிறார். செல்வமும் பணமயக்கமும் அவரை சூதாட்டத்தின் பக்கம் செலுத்துகிறது.
எப்படியோ அதன் அடிமையாகிவிடுகிறார். சொத்துகள் அனைத்தும் கைவிட்டுப் போக, அவர் நாடோடியாக
ஊரைவிட்டே சென்றுவிடுகிறார். அவருடைய மனைவிகள் மீன் விற்றுப் பிழைக்கிறார்கள்.
சிதைவுக்கு ஆளாகும் இன்னொரு
கதை பத்ரகிரியின் கதை. அம்மாவின் மரணம். அப்பாவின் புறக்கணிப்பு. சித்தி வழங்கும் அடைக்கலம்.
சிறு குழந்தையான தம்பியை ஒரு தந்தையாக நின்று வளர்த்து ஆளாக்கி மணம் செய்துவைத்து,
மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறான் அவன். தனிமையில் வசிக்கும் தம்பி
மனைவிக்கும் அவனுக்கும் இடையில் எப்படியோ ஓர் உறவு உருவாகிவிடுகிறது. படிப்பை முடித்துக்கொண்டு
ஊருக்குத் திரும்பி வரும் தம்பி சிதைந்த உறவைக் கண்டு திகைப்பில் மூழ்கிவிடுகிறான்.
சொத்துகளையெல்லாம் இழந்துபோன
நிலையிலும் தனக்கு விருப்பமான தாசி மீதான நாட்டத்தை இழக்க விரும்பாதவராக இருக்கிறார்
கிருஷ்ணப்ப கரையாளர். காமம் அவரையும் அலைக்கழிக்கிறது.
இரவும் காமமும் மனிதனை எப்போதும்
வதைத்தபடி இருக்கின்றன. அவனை வேறொருவனாக ஒரே கணத்தில் மாற்றிவிடுகின்றன. அக்கணத்தின்
தொடர்ச்சியாக அவன் எதையெதையோ செய்துவிடுகிறான். எல்லாமே ஏராளமான தற்செயல்களின் பெருந்தொகுப்பாக
இருக்கிறது. அத்தொகுப்பின் அடித்தளமாக உள்ள தற்செயல்களின் பின்னலில் நறுமணமும் ஓர்
இழையாக இருக்கிறது. பொதுவான நிலையில் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் எனக் கருதத்தக்க
ஒரு செயலை, அந்த நறுமணத்தால் அவர்கள் மனம்
நிறைந்திருக்கும் கணங்களில் அவர்களை அறியாமல் செய்ய முனைந்துவிடுகிறார்கள். அவர்களால்
வகுத்துக்கொள்ள முடியாத அந்த உள்ளுணர்வுகள் பல திசைகளை நோக்கி அவர்களைச் செலுத்திவிடுகின்றன.
அந்த உள்ளுணர்வுகளையெல்லாம் தொகுத்து மனத்தின் இரவுப்பகுதி என அடையாளப்படுத்தினால்,
அத்தகு கடுமையும் கசப்பும் நிறைந்த இரவின் கதைக்களனை யாமம் என்று குறிப்பிடலாம்.
சுகுமாரன் எழுதிய வெலிங்டன் நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க
முயற்சி. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீலகிரி மலைத்தொடரை ஒட்டி அவர்கள் ஓர் ஊரை உருவாக்க
முடிவெடுத்தார்கள். நீலகிரி மலைத்தொடர் தமக்குகந்த குளிரும் குளிர்சார்ந்த பகுதியாக
இருந்ததால் ஆங்கிலேயர்கள் அந்த முடிவுக்கு வந்தார்கள். ராணுவத்தேவைக்காக என்னும் காரணம்
அந்த முடிவைத் தவிர்க்கமுடியாததாக மாற்றியது. இதற்காக காலம் காலமாக அந்த மலைத்தொடரை
ஒட்டி வாழ்ந்த பூர்வ குடியினரான படகர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
அந்தப் புதிய நகரில் அந்நியர்களும் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்யும் மற்றவர்களும் குடியேறி வாழத் தொடங்கினார்கள். ஆவணப்படுத்தப்பட்ட
இந்த வரலாற்றுத் தகவல்களை செறிவான மொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுகுமாரன்.
ஏறத்தாழ நூற்றியைம்பது ஆண்டு கால வரலாற்றை இச்சித்திரங்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.
இன்றும் ஒரு ராணுவ மையமாகவே அந்த நகரம் அமைந்திருக்கிறது. நாவலின் மையப்பாத்திரம் ஒரு
சிறுவன். வெலிங்டன் நகரில் பிறந்து வளர்ந்தவன். அவன் அந்த நகரைப் புரிந்துகொள்ளும்
போக்கில் இந்த வரலாற்றையும் புரிந்துகொள்கிறான். ஒரு சிறுவனின் பார்வையில் இந்த வரலாறும்
வரலாற்று மனிதர்களும் வாழ்க்கையும் மதிப்பிடப்படுகின்றன என்பதே, இந்த நாவலை முக்கியத்துவம்
மிக்கதாக மாற்றுகிறது. சிறுவனின் பார்வைக்கோணம் என்பதாலேயே ஒரு சாதகமான அம்சம் இந்த
நாவலுக்குக் கிடைக்கிறது. பெரிய உலக மதிப்பீடுகள் சார்ந்தோ அல்லது உயர்வு தாழ்வு சார்ந்தோ
எதையும் பார்க்காமல், பார்ப்பவற்றை சிந்தாமல் சிதறாமல் தொகுத்து முன்வைக்க, இந்த அம்சம்
சுகுமாரனுக்கு உதவியாக இருக்கிறது. சுகுமாரனும் அந்த அம்சத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.
படகர்கள், மலையாளிகள், கெளடர்கள்,
இஸ்லாமியர்கள், ராணுவக் குடியினர் என பலவகைப்பட்ட மனிதர்களால் நிறைந்திருக்கிறது வெலிங்டன்
நகரம். ஒருவகையில் அந்நகரத்தில் ஏற்கனவே வாழ்ந்த மனிதர்களின் தொடர்ச்சி அவர்கள். ஒவ்வொருவருடைய
வாழ்க்கையிலும் பலவிதமான சிக்கல்கள். துன்பங்கள். அவற்றை கடந்துவரும் வழியறியாமல் அவற்றிலேயே
உழன்றபடி இருக்கிறார்கள். ஏராளமான உறவினர்களுக்கிடயே வளரும் சிறுவன் தன் எல்லாக் குறும்புகளோடும்
விளையாட்டுத்தனங்களோடும் இந்த மனிதர்களை நோக்கியபடி இருக்கிறான். உறவின் கசப்புகள்,
சிக்கல்கள், தந்திரங்கள், ஏமாற்றங்கள் அனைத்தையும் அவன் பார்க்கிறான். அந்த அடையாளங்களோடு
அம்மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் அவன் முயற்சி செய்கிறான். உண்மை வரலாற்றையும் அந்த வரலாற்றுக்கிடையே வாழ்ந்திருக்க
சாத்தியமான மனிதர்களின் புனைவு வரலாற்றையும் இணைத்து நெய்கிறது சுகுமாரனின் நாவல்.
இம்மனிதர்கள் பெரிய இனமோ அல்ல்து சொல்லிக்கொள்ளும்படியா கூட்டமோ அல்ல. மிக எளிய மனிதர்கள்.
அதனாலேயே இந்தப் படைப்புக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய வெளிச்சம் கிடைக்காமல்
போனதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு சிறு வரலாற்றுத் தகவலை முன்வைத்து,
1878 ஆம் ஆண்டு காலகட்டத்தையே தம் எழுத்தாற்றலால் நம்மை உணரும்படி ஜெயமோகன் எழுதிய
நாவல் வெள்ளையானை. ஆங்கிலேயர் ஆட்சி செய்துவந்த
மதராசப்பட்டணத்தில் ஐஸ் ஹவுஸ் என்னும் இடத்தில் பிரடெரிக் டியுடர் அண்ட் கம்பெனி இயங்கி
வந்தது. ஆட்சிப்பணியில் இருந்தவர்களின் விருந்துக்கூடங்களில், அவர்கள் அருந்தும் மதுவுடன்
கலக்கும் பொருட்டு தொடக்க காலத்தில் லண்டன் நகரிலிருந்தே பனிப்பாளங்கள் கப்பல் வழியாக
இறக்குமதி செய்யப்பட்டன. துறைமுகத்தில் வந்து இறங்கிய பனிப்பாளங்கள் ஐஸ் ஹவுஸ் இருட்டறையில்
சேமிக்கப்பட்டன. பிறகு அப்பாளங்கள் துண்டுகளாக உடைக்கப்பட்டு மரப்பெட்டிகளில் அடுக்கப்பட்டு
விற்பனைக்கு அனுப்பப்பட்டன. வெள்ளை யானைகள் போல காட்சியளிக்கும் இந்தப் பனிப்பாளங்களை
உடைக்க, பஞ்சத்துக்காக தம் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வந்த தலித் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
எவ்விதமான தொழில் பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களுடைய மரணங்கள் பொருட்படுத்தப்படாமல் கடந்துசெல்ல, எதிர்பாராத ஒரு தருணத்தில் அவர்களிடையே
அசாதாரணமான ஓர் எழுச்சி ஏற்படடது. அந்த எழுச்சி நிறுவனத்தின் தந்திரங்களாலும் ஆட்சிப்பணியில்
இருப்பவர்களின் முடிவாலும் சிறிது கால இடைவெளியிலேயே அடக்கப்பட்டது.
இந்த நாவலின் மிகச்சிறப்பான
பகுதிகள் தாதுவருஷப் பஞ்சத்தைச் சித்தரித்துக் காட்டும் காட்சிகள். முற்றிலும் தன்
புனைவாற்றலால் மிகுந்த உக்கிரமுள்ளதாக அக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் ஜெயமோகன்.
பஞ்சத்தால் கூட்டம் கூட்டமாக தம் சொந்த ஊர்களை
விட்டு வெளியேறும் மக்கள், சென்னையை நோக்கி வரும் வழியில் பசி தாளாமல் மடிந்துபோகிறார்கள்.
உடல்களை அகற்றக்கூட யாருமற்ற நிலையில் அவை தெருவோரங்களிலேயே கிடந்து அழுகி நாறுகின்றன.
சென்னையை அடைந்தவர்களோ வேறொரு விதமான அவலமான சூழலில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
சேறும் சகதியும் நிறைந்த புறநகர்ப்பகுதிகளில் வாழ்கிறார்கள் அவர்கள். அங்கிருந்து பனிப்பாறைகளை
உடைப்பதற்குச் செல்பவர்கள் நோய்வாய்ப்பட்டு வலிமை குன்றி உயிர்துறக்கிறார்கள். உயிர்
வாழ்வதற்காக நகரத்தை நோக்கி வந்தவர்கள் உயிரையே பலி கொடுக்கிறார்கள். துன்பமயமான அவ்வாழ்க்கையைத்
தம் புனைவாற்றலால் வலிமையோடு சித்தரித்திருக்கிறார் ஜெயமோகன்.
சாதி அடையாளம் மனிதர்களை மனசாட்சியற்றவர்களாக
மாற்றிவிடுகிறது. மரணத்தையும் அவலத்தையும் அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது.
சாதியின் காரணமாக மனிதர்களை மனிதர்களே கைவிடுகிறார்கள். எய்டன், ஆண்ட்ரூ என்னும் இரு
ஆங்கிலேயர்களை இந்த நாவலில் படைத்திருக்கிறார் ஜெயமோகன். எய்டன் அதிகாரம் சார்ந்த பணியில்
இருப்பவன். கைவிடப்பட்ட மக்கள் மீது உள்ளூர பரிவுள்ளவனாக இருப்பவன். அவர்களுக்காக வாதாடச்
செல்பவன். அதற்காக பனிக்கட்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவர்களுடன்
பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளிகளுக்கான சலுகைகளைப் பெற்றுத் தரவோ அவன் ஒருபோதும்
தயங்கவில்லை. ஆனால் அவனுக்கு மேல் இயங்கும் அதிகாரம் அவனை ஒடுக்குகிறது. மெல்ல மெல்ல
அவனையும் தன்னைப்போலவே மாற்றி தன்னோடு சேர்த்துக்கொள்கிறது. எய்டனிடம் அரைகுறையாகத்
தென்பட்ட கருணை, ஆண்ட்ரூவிடம் முழுமையான அளவில் வெளிப்படுகிறது. உயிரைத் தவிர அவனிடம்
இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏழைகளை அணைத்துக்கொள்வதற்காக அந்த உயிர் போகுமென்றால் அந்தத்
தியாகத்துக்கும் அவன் தயாராகவே இருக்கிறான். ஒருபுறம் ஆண்ட்ரூ, இன்னொருபுறம் காத்தவராயன்
என இரு நம்பிக்கைப்புள்ளிகள் இந்த நாவலில் தென்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு
இவ்விருவர் மூலமாக ஆறுதலும் நீதியும் கிடைக்கிறது.
இரு வரலாற்று உண்மைகளை நேர்த்தியாக இணைத்துக் காட்டுவதில் வெற்றியடைந்த படைப்பாக மலர்ந்திருக்கிறது
வெள்ளையானை நாவல்.
தாது வருஷப் பஞ்சச் சித்தரிப்பை
தனக்குள் கொண்ட இன்னொரு முக்கிய நாவல் பூமணியின் அஞ்ஞாடி. தமிழகத்தின் தெற்குமூலையில் கலிங்கல் என்னும் ஒரு கற்பனைக்கிராமத்தை
தம் நாவலின் தளமாக கட்டியெழுப்பிக்கொள்கிறார் பூமணி. அங்கு வாழும் பள்ளர் குடியைச்
சேர்ந்த மாரிக்கும் வண்ணார் குடியைச் சேர்ந்த ஆண்டிக்கும் இடையில் நட்பு மலர்கிறது.
அவர்களுடைய குழந்தைப்பருவத்தோடு தொடங்குகிறது நாவல். ஆனால் அவர்களைப்பற்றி மட்டும்
பேசவில்லை. சமணர் கழுவேற்றம், மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்களின் வீழ்ச்சி, விஜயநகரப்
பேரரசை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வருகை, எட்டயபுர சமஸ்தானம், கழுகுமலையிலும்
சிவகாசியிலும் நடைபெற்ற சாதிக்கலவரங்கள், நாடார் சமூகத்தின் எழுச்சி, மதமாற்றங்கள்
என பல நூற்றாண்டு வரலாற்றுத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் ஆவணமாகவும் செயல்படுகிறது.
மேலும் அப்பர், அருகர், நாயன்மார், வைகுண்டசாமி போன்றோரைப்பற்றிய தகவல்களும் கான்சாகிப்,
கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை போன்றோரின் கதைகளும் அங்கங்கே பொருத்தமாக
எடுத்தாளப்படுகின்றன.
மாரிக்கும் ஆண்டிக்கும் இடையிலான நட்பில் காவியத்தன்மை
மிளிர்கிறது. சேர்ந்து விளையாடுவதால் பெரியவர்களிடமிருந்து அடியும் உதையும் பெற்றாலும்
அவர்களிடையேயான நட்புக்கு எவ்விதமான பாதிப்பும் நேர்வதில்லை. ஒருமுறை ஓடைச் சகதியில்
அகப்பட்டுத் தவிக்கும் ஆண்டியை மாரிதான் காப்பாற்றுகிறான். இருவருக்கும் இடையிலான உரையாடல்கள்
துள்ளலும் விளையாட்டுத்தனமும் நிறைந்ததாக உள்ளன. மாரி ஒரு தேர்ந்த கதைசொல்லி. மாரி
கழுதையோடு நிலவுக்குச் சென்று வரும் கதையை யாராலும் மறக்கமுடியாது. மரணத்தறுவாயில்
கூட அவன் தன் கதைசொல்லும் இயல்பைக் கைவிடுவதில்லை. அவன் இறந்த பிறகு ஆண்டி காணும் ஒரு
கனவில் அவன் கதைகளோடு ஆமையின் மீதேறி அவனைப் பார்க்க வருகிறான்.
நாவலில் மனத்தைப் பதறவைக்கும்
காட்சி ஒன்றுண்டு. வெளியே சொல்லிக்கொள்ள முடியாத உறவின் விளைவாக ஒவ்வொரு முறையும் கருவுறுகிறாள்
ஒருத்தி. பெற்றெடுக்க முடியாத அவளுக்கு அக்கருவைக் கலைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அந்த எச்சங்களை ஒவ்வொரு முறையும் கொண்டு சென்று
புதைப்பவன் அவளோடு கூடிய ஆண். பிறப்பை அறியாத அந்த ஒவ்வொரு கருவும் அப்பெண்ணின் கனவிலெழுந்து
வதைக்கத் தொடங்குகின்றன. அவளால் அந்த உறவையும் தவிர்க்கமுடியவில்லை. கனவையும் தவிர்க்கமுடியவில்லை.
இரண்டுக்கும் இடையில் கிடந்து அல்லாடுகிறாள் அந்தப் பெண்.
சமகால வரலாற்றையும் தொன்மமாகிவிட்ட
பழைய வரலாற்றையும் புனைவின் வழியாக இணைத்து இரா.முருகவேள் படைத்திருக்கும் நாவல் மிளிர்கல். முல்லை என்னும் பெண் தில்லியிலிருந்து
தமிழகத்துக்கு வருகிறாள். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஊர்களைப் பார்க்கவும் அவற்றை
ஆவணப்படுத்தவும் அவள் விரும்புகிறாள். இடதுசாரி இயக்கத்துடன் உறவுள்ள நவீன் என்னும்
இளைஞனுடன் பூம்புகாருக்குச் செல்கிறாள். அங்கே ஆய்வறிஞரான ஸ்ரீகுமார் அறிமுகமாகிறார். மூவரும் இணைந்து கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு
நடந்த பாதையில் பயணம் செய்கிறார்கள். அந்தப் பயணம் கோவலனை வெட்டிக் கொன்ற கோவலன்பொட்டல்
ஊர் வரைக்கும் நீள்கிறது. கோவலன் பொட்டலில் இன்னும் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல்லின்
மீது வைத்துத்தான் கோவலன் கொல்லப்பட்டான் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் தொடர்ந்து
பயணம் சென்று கொடுங்காளூரையும் தொடுகிறார்கள். இந்தப் பயணத்தில்தான் அபூர்வமான கற்களைப்பற்றிய
கதையும் சேர்ந்துகொள்கிறது. அதைத் தேடும் பன்னாட்டு நிறுவனங்கள். அவர்களுக்குத் துணைபுரியும்
இந்நாட்டுத் தரகர்கள், அரசியல்வாதிகள், உள்ளூர் தாதாக்கள் என ஏராளமான கண்ணிகளுடன் வலையென
நாவல் விரிகிறது.
நாவல் முழுதும் சலிக்காதபடி
ஏராளமான கேள்விகளும் பதில்களும் அடங்கியிருக்கின்றன. கோவலனும் கண்ணகியும் உண்மையான
மாந்தர்கள்தாமா? கண்ணகியை கொங்கர்குலச் செல்வி என ஏன் அழைக்கிறார்கள்? அவளுக்கும் கொங்கு
நாட்டுக்கும் என்ன தொடர்பு? சோழ நாட்டைவிடவும் பாண்டிய நாட்டைவிடவும் சேர நாட்டில்
அவளுக்கு ஏன் முக்கியத்துவம் அளித்தது? எல்லாக் கேள்விகளுக்கும் ஆய்வாளர் விடையளிக்கிறார்.
இந்த வினா விடைகளின் வழியாக தமிழ்நில வரலாற்றின் உண்மைகள் மதிப்பீடு செய்யப்பட்டு மறுவரையறை
கொள்கின்றன. உரையாடல்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ராகுல சாங்கிருத்தியாயன்,
நீலகண்ட சாஸ்திரி, கோசம்பி என பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் வந்து செல்கிறார்கள்.
எதிர்பாராத விதமாக பேராசிரியர்
கடத்தப்படுகிறார். அதன் வழியாக நாவல் சமகால அரசியலுக்குள் நுழைந்துவிடுகிறது. கண்ணகியின்
காற்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல்களின் பிறப்பிடமான கொங்குச் சமவெளி கதைக்குள் இடம்பிடிக்கிறது.
ரோமானிய வணிகர்களையும் யவனர்களையும் ஒருகாலத்தில் வசீகரித்த ரத்தினக்கற்கள் கண்ணகி-கோவலன்
பயணப்பாதையெங்கும் விரிந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உறுதி செய்யப்படுகின்றன.
ரத்தினக்கல் வியாபாரத்தில் நிகழும்
மோசடிகளையும் கற்களைப் பட்டை தீட்டும் தொழிலாலர்களின் வாழ்க்கைத் துயரத்தையும் முருகவேள்
சமகால வரலாறாகப் பதிவு செய்கிறார். ஆழ்நிலத்தில் புதைந்திருந்தாலும் ரத்தினக்கற்கள்
தமக்குள் உள்ள ஒளியை ஒருபோதும் இழப்பதில்லை என்னும் உண்மையை உணர உதவி செய்கிறது நாவல்.
எஸ்.அர்ஷியாவின் அப்பாஸ்பாய் தோப்பு வரலாற்றுப் புனைகதை அல்ல.
ஆனால் அது முக்கியமான வரலாற்றுத் தருணங்களின் முரண்பட்ட இயக்கத்தை காட்சிப்படுத்துகிறது.
ஆகவே இந்த வரிசையில் வைத்து வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்றே அதைச் சொல்லலாம். அப்பாஸ்பாய்
என்பவரிடம் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வந்தார்கள். அவர்கள்
அனைவரும் தங்கிப் பணியாற்ற வசதியாக, ஆற்றின் கரையை ஒட்டி ஒரு வசிப்பிடத்தை உருவாக்கி
அளித்தார். அதுவே அப்பாஸ்பாய் தோப்பாக பெயர்பெறுகிறது. அது அவர் மக்கள் மீது கொண்டிருந்த
கருணைக்குச் சான்றாக நிலைத்திருக்கிறது. நாலைந்து தலைமுறைகளுக்குப் பிறகும், அந்த வம்சத்தினர் அங்கே நிலைத்திருக்கிறார்கள். அவர்கள் பணியிடங்கள்
வேறுவேறானாலும் அவர்களுடைய வசிப்பிடம் அப்பாஸ்பாய் தோப்பாகவே இருக்கிறது. எதிர்பாராமல்
ஒருமுறை பெருகி வந்த ஒரு வெள்ளம் நகரைச் சூழ்ந்து அனைத்தையும் அழிக்கிறது. வெள்ளம்
வடிந்ததும் ஆற்றை ஒட்டியிருந்த வடிகால் பகுதிகளைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகளில்
இறங்குகிறது அரசு. அதையொட்டி கரையை ஒட்டியிருந்த அப்பாஸ்பாய் தோப்பு கையகப்படுத்தப்பட்டு
அழிக்கப்படுகிறது. அங்கிருந்த மக்கள் வெளியேற்றப் படுகிறார்கள். வரலாற்றின் ஒரு தருணம்
மக்களை ஒன்றிணைந்து வாழத்தக்க ஒரு சூழலை உருவாக்கி அளிக்கிறது. அதே வரலாற்றின் மற்றொரு
தருணம் மக்களைக் கலைத்து வெளியேறும்படி செய்கிறது. தருணங்களின் முரண்கள் வழியாக இயங்கும்
வரலாறு விசித்திரமான ஒன்றாகத் தோற்றமளிக்கிறது.
கிட்டத்தட்ட இதே காரணத்துக்காகவே
குறிப்பிடத்தக்க நாவலாகச் சொல்லப்படவேண்டிய ஒரு படைப்பு எஸ்.செந்தில்குமாரின் முறிமருந்து. அவர் அந்த நாவலில் ஒரு சந்தையைப்பற்றிய
செய்தியை முன்வைக்கிறார். அதன் பெயர் உப்புக்கிணறுச்சந்தை. அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுத்தகவலை
இணைத்திருக்கிறார் செந்தில்குமார். தொடக்கத்தில் அது நல்ல கிணறாகவே இருந்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அப்பகுதிக்கான பொறுப்பில் இருந்த அதிகாரிகள் அங்கே ஒரு காவல்
நிலையத்தைக் கட்ட முடிவெடுக்கிறார்கள். கிணற்றை இடித்தால் கிணற்றில் விழுந்து தற்கொலை
செய்துகொள்ளப் போவதாக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மக்களின் எதிர்ப்பை எதிர்பார்க்காத
அதிகாரிகள் தம் நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். வேறொரு இடத்தில் காவல் நிலையம்
கட்டப்படுகிறது. ஆனாலும் தோல்வியுணர்வால் உருவான வன்மம் அதிகாரிகள் மனத்தில் நிரந்தரமாகத்
தங்கிவிடுகிறது. ஒருநாள் இரவில் அடையாளம் தெரியாத நபர்கள் வழியாக வண்டிவண்டியாக ஏராளமான
உப்புமூட்டைகள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் கொட்டப்படுகின்றன. நல்ல கிணறு உப்புக் கிணறாக
மாறிவிடுகிறது. பயன்படாத கிணறு தானாகவே பாழடைந்து இடிபட்டு, இறுதியில் தூர்க்கப்பட்டு,
மெல்ல மெல்ல சந்தைக்கடையாக மாறிவிடுகிறது.
அதுவே உப்புக்கிணறுச்சந்தை. ஆங்கிலேயன் மறைந்தாலும் அந்த வன்மம் காலம்காலமாக அந்த மண்ணில்
தொடர்ந்தபடி இருக்கிறது. ”பாசத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்று கேள்வி கேட்கிற
அளவுக்கு மனிதர்களுக்குள் வன்மம் இயங்குகிறது. ஓர் எளிய வரலாற்றுத்தகவலை முன்வைத்து
புனைவு வரலாறொன்றை எழுதிய செந்தில்குமார், அங்கும் மனிதர்களின் ஆழ்மனத்தில் இயங்கும்
கருமையைத் தொட்டு மீள்கிறார்.
கெளதம் சன்னாவின் குறத்தியாறு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு
முயற்சி. வரலாற்றுத் தகவல்களுக்கு மாறாக நாட்டார் கதைகளின் வழியாக ஒரு வரலாற்றைச் கட்டியெழுப்பும்
விதமாக விரிந்திருப்பதே இந்த நாவலின் சிறப்பு. ஒருவகையில் குறத்தியாறுக்காக எழுதப்பட்ட புதிய புராணம்
என்றே இதைச் சொல்லலாம். ஓர் ஆற்றை முக்கிய பாத்திரமாகக் கொண்ட இந்த நாவலின் கதைக்களம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின் மொன்னேட்டுச் சேரி. நாவலில்
செம்பேட்டுக் கிழவனும் பித்தன் கண்ணாயிரமும் மாறிமாறி கதைகளைச் சொல்கிறார்கள்.
நாட்டார் கதைக்கே உரிய வசீகரத்துடன்
நாவலின் ஒவ்வொரு பகுதியும் காணப்படுகிறது. இத்தகு பகுதிகள் நம்மை கனவை நோக்கி இழுத்துச்
செல்கின்றன. மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு ஏழு கன்னிமாரின் புனலாட்டம் பற்றிய பகுதி.
அப்பெண்கள் நீரை உருட்டி ஒரு பந்தாக மாற்றுகிறார்கள். அந்தப் பந்துக்குள் ஒரு மீன்
அகப்பட்டுக்கொள்கிறது. நிலவைப்போல பந்து சுடரும் விதமும் அதற்குள் அகப்பட்டுவிட்ட மீன்
தன்னைச்சுற்றி நின்று விளையாடும் கன்னியரின் புனலாட்டத்தில் திளைக்கும் விதமும் அழகுற
காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஏழு கன்னிமார்களில் ஒருத்தி கோலம் இருக்கும்
மணல்வெளியை, அந்தக் கோலத்தோடு ஒரு புடவையாக மாற்றிக் கட்டிக் கொள்கிறாள். ஏராளமான இத்தகு
குறுங்கதைகள் அழகான காட்சிப்படிமங்களின் தொகையாக நாவல் முழுதும் விரவியுள்ளன.
மனத்தைப் பதற்றமுறவைக்கும் முக்கியமானதொரு
கதை கொதிக்கும் வெயிலில் மணலாற்றில் குழந்தையை முதுகுத்தூளியில் சுமந்தபடி குறத்தி
நடக்கும் கதை. வெயிலின் தகிப்பிலிருந்து வேகமாகத் தப்பிக்கவேண்டும் என்னும் முனைப்பில்
மணலில் வேகவேகமாக நடந்து செல்கிறாள் குறத்தி. ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக
அவள் நினைத்து விடுகிறாள். எனினும் அக்குழந்தை ஒருகணம் விழிதிறந்து அவளைப் பார்த்துப்
புன்னகைத்துவிட்டு மரணமடைந்துவிடுகிறது.
குறத்தியாறு கட்டியெழுப்பும்
புதிய புராண மாந்தர்கள் எளிய மனிதர்கள். தன் மொழிவலிமையால் அவர்களுக்கு ஒரு வரலாற்றைக்
கட்டியெழுப்பியிருக்கிறார் கெளதம் சன்னா.
வரலாற்றுப் புனைகதைகள் ஒருவகையில்
வரலாற்றுக்கு இணையாக வைத்துப் படிக்கத்தக்கவை எனலாம். வரலாற்றில் விடுபட்டுப் போன அனைத்துக்கும்
அப்புனைகதைகள் புதியதொரு வரலாற்றை எழுதி அளிக்கின்றன. ஓர் அடையாளத்தை உருவாக்கி வழங்குகின்றன.
அடையாளத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் பெறும் வெற்றிகளை முன்வைத்து மட்டுமே அப்படைப்புகளுக்கு
ஒரு முகம் உருவாகிறது. இன்று கொற்றவை முதல் குறத்தியாறு வரையிலான படைப்புகள் தமிழ்ச்சூழலில்
அடைந்திருக்கும் வெற்றி மிகமுக்கியமானது. இந்த நூற்றாண்டில் எதிர்காலத்தில் தமிழ்ப்படைப்புகள்
அடையப்போகும் பெருமைக்கு இது ஒரு நல்ல தொடக்கம்.
(பத்தாண்டு சிறப்பிதழாக ஆகஸ்டு மாதத்தில் வெளிவந்திருக்கும் அம்ருதா இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை )