Home

Showing posts with label யாமம். Show all posts
Showing posts with label யாமம். Show all posts

Monday, 22 August 2016

நாவல் கலை - கொற்றவை முதல் குறத்தியாறு வரை


தமிழ் நாவல்கள் கடந்து வந்திருக்கும் சமீபத்திய பத்தாண்டுகளை ஒருவிதத்தில் ‘வரலாற்றுப் புனைகதைகளின் பொற்காலம்’ என்று குறிப்பிடலாம். வரலாற்றுப் புனைகதை என்னும் வகைமையில் அடங்கும் படைப்புகள், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வாசகர்கள் முன்னிலையில் பரப்பிவைக்கும் எளிய முயற்சிகளல்ல. அதே சமயத்தில் அந்த உண்மைகளைப் புறக்கணித்துவிட்டு, வரலாற்றின் பெயரால் சொந்தக் கற்பனைகளை அழகிய புனைவுமொழியில் கவர்ச்சிகரமாகக் கட்டியெழுப்பி நிறுத்தும் முயற்சிகளுமல்ல. வரலாற்றின் உண்மைகளை முன்வைத்து,  அதன் இடைவெளிகளை தர்க்கபூர்வமான கற்பனைகளால் நிரப்பி, முற்றிலும் புதியதொரு வரலாறாக புனைந்து காட்டும் முயற்சிகள் என்று வரையறுத்துக்கொள்ளலாம். வரலாற்றுத்தகவல்கள் வரலாற்றின் களத்தில் வீற்றிருக்க, வரலாற்றுப்புனைகதைகள் இலக்கியத்தளத்தில் கால்கொள்கின்றன. அதைக்கொண்டு இதை மதிப்பிடவும், இதைக்கொண்டு அதை மதிப்பிடவுமான எல்லாச் சாத்தியங்களையும் ஒரு வாசகன் மேற்கொள்ளலாம். இதுவரை அடைந்து கிடந்த காட்டுக்குள் செல்வதற்கான ஒரு புதிய தடம் வரலாற்றுப்புனைகதைகள்.