Home

Tuesday 19 May 2015

என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓடும் இறுதியோட்டத்தின் விளைவு அது. வழக்கமாக ஏழு அல்லது ஏழரைக்குள் மாறிவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தொடர்கதை.  வந்ததும் ஒரு குளியல். சிற்றுண்டி. திரும்பிவிடுவேன். இந்த மார்ச் வாரங்களில் அது ஒன்பது அல்லது ஒன்பதரையாக காலையில் படிக்காமல் விட்ட தினசரிகளின் கட்டுரை வாசிப்பு. திரும்பிப் பார்த்தால் சுவர்க்கடிகாரம் பத்தரை அல்லது பதினொன்றைக் காட்டும். ஏப்ரல் பிறந்து நாலைந்து நாட்களில் வழக்கமாக அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வாரம் கடந்துபோய்விட்ட நிலையிலும் பரபரப்பு ஓயவில்லை. மனத்தில் வேலையைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. அப்படி ஒரு ஓட்டம். எட்டாம் தேதியன்றும் தாமதமாகத் திரும்பி, தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது.
மிதமிஞ்சிய சோர்வில் படுத்த ஐந்து நிமிடங்களுக்குள் உறக்கம் வந்துவிட்டது. உறக்கத்தில் திடீரென கைப்பேசி மணி ஒலித்தது. என் மனைவி எடுத்துப் பேசுவதும் பதில் சொல்வதும் அரைமயக்கத்தில் எங்கோ கனவில் கேட்பதுபோலக் கேட்டது. அவள் என் அருகில் வந்து நின்று, தயங்கி நின்றிருக்கும்போதே நான் என் விழிகளைத் திறந்துஎன்ன?” என்று கேட்டேன். அவள் தயங்கிஎழுத்தாளர் ஜெயகாந்தான் செத்துட்டாராம்என்று சொன்னாள். வேகமாக பதறி எழுந்து உட்கார்ந்தேன்.யாரு பேசனாங்க? என்ன சொன்னாங்க?” என்றேன்.சம்பந்தம் சொன்னாருஎன்று பதில் சொன்னாள். நான் உடனே அவர் எண்ணை அழைத்து விசாரித்தேன். அவருக்கு சென்னை நண்பர்கள் செய்தி அனுப்பியதைச் சொல்லிவிட்டுஉங்களுக்கு தெரியுமான்னு கேக்கறதுக்குத்தான் போன் செஞ்சேன்என்றார்.  ”இல்லை, எனக்குத் தெரியாது. நீங்கதான் மொதமொதல்ல சொல்றிங்கஎன்றேன்.

ஒரு கலைஞனின் கதை - சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’

1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக  நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார்.  அவர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருந்தார். பகலில் கல்லூரி, இரவில் பணி என்பது அவர் வழி. என் தமிழிலக்கிய நாட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய ஆங்கில இலக்கிய நாட்டம் எனக்கும் பிடித்திருந்தது. நான் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் தனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருநாள் சோமர்செட்மாம் எழுதியநிலவும் ஆறு நாணயங்களும்என்கிற நாவலை எடுத்துவந்து, ‘ரொம்ப முக்கியமான நாவல். படிச்சிப் பாருங்கஎன்றார்.பால் காகின்னு ஒரு முக்கியமான ஓவியர் பாரீஸ்ல இருந்தார். வான்காவுடைய நண்பர். அவருடைய வாழ்க்கையை அடிப்படையா வச்சி இத எழுதியிருக்கார்என்று கூடுதல் தகவலையும்

அளித்தார். வான்காவின்  சுயசரிதையானவாழும் விருப்பம்புத்தகத்தை அப்போதுதான் படித்து முடித்திருந்தேன். அதனால் நசீர் கொடுத்த கூடுதல் குறிப்பு, அப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. விட்டுவிட்டு, ஒரு வார காலத்தில் அதைப் படித்து முடித்தேன். தரகனாகவும் ஓவியனாகவும் வாழ்கிற ஒரு மனிதன், ஒரு கட்டத்தில் ஓவியனாகமட்டுமே வாழ்வது என்று குடும்பத்தைத் துறந்து வெளியேறி அடையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அவமானங்களையும் சிரமங்களையும் தொகுத்து முன்வைத்திருந்த அந்தப் படைப்பு என்னை மிகவும் கலங்கவைத்துவிட்டது. கலையைப் பின்தொடர்ந்து செல்லும் கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கலான வாழ்வா என்று நினைத்து நிலைகுலைந்திருந்தேன். நசீருடன் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.உலகம் முழுக்க கலையை வாழவைக்க, கலைஞர்கள் இப்படி வாழ்ந்து வதைபட்டிருக்கிறார்கள்என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னார் அவர். மேலும், ‘நம் பாரதியார், புதுமைப்பித்தன்னு எழுத்துக்கலைஞர்கள் சந்தித்த வாழ்க்கை நெருக்கடிகள்போல, நெருக்கடிக்கு ஆளான ஓவியக் கலைஞர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள்என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Tuesday 12 May 2015

நெஞ்சையள்ளும் குருவாசகக்கோவை

வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது. அதை நடத்தி வருபவர் ஒரு கன்னடியர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அகராதியை மலிவான விலைக்கு அவர் எனக்குக் கொடுத்தார். அன்றுமுதல் எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உருவாகிவிட்டது.  
போன வாரம் ஞாயிறு அன்று மாலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் அவருடைய கடைக்குச் சென்று  வழக்கம்போல உரையாடிகொண்டிருந்தேன். அவர் எடைக்கு வாங்கிய புத்தகங்களின் குவியல் கடைவாசலில் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே அடுக்கி வைத்தபடி இருந்தேன். எல்லாமே கன்னட, தெலுங்கு புத்தகங்கள். சில தமிழ், வங்கமொழிப் புத்தகங்களும் இருந்தன. தன் மேசையில் இருந்த புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை இழுத்து, “இந்தாங்க, இத பாருங்க. தமிழ் புஸ்தகம்தான். ஒங்களுக்குப் புடிக்குமேன்னு எடுத்து வச்சேன்என்றபடி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார் அவர்.