Home

Tuesday 12 May 2015

நெஞ்சையள்ளும் குருவாசகக்கோவை

வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது. அதை நடத்தி வருபவர் ஒரு கன்னடியர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அகராதியை மலிவான விலைக்கு அவர் எனக்குக் கொடுத்தார். அன்றுமுதல் எனக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உருவாகிவிட்டது.  
போன வாரம் ஞாயிறு அன்று மாலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு சிறிது நேரம் அவருடைய கடைக்குச் சென்று  வழக்கம்போல உரையாடிகொண்டிருந்தேன். அவர் எடைக்கு வாங்கிய புத்தகங்களின் குவியல் கடைவாசலில் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே அடுக்கி வைத்தபடி இருந்தேன். எல்லாமே கன்னட, தெலுங்கு புத்தகங்கள். சில தமிழ், வங்கமொழிப் புத்தகங்களும் இருந்தன. தன் மேசையில் இருந்த புத்தக அடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை இழுத்து, “இந்தாங்க, இத பாருங்க. தமிழ் புஸ்தகம்தான். ஒங்களுக்குப் புடிக்குமேன்னு எடுத்து வச்சேன்என்றபடி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார் அவர்.

வெளிர்நீல நிற அட்டையைக் கொண்ட புத்தகம். அட்டையில் பாஸ்போர்ட் படத்துக்குரிய அளவில் ரமணரின் படம் இருந்தது. புத்தகத்தின் பெயர் பரமார்த்த தீபம் என்னும் குருவாசகக்கோவை. திருவாசகம் என்னும் சொல்லிலிருந்து குருவாசகம் என்னும் சொல்லை உருவாக்கியிருந்த விதம் முதற்கணத்திலேயே எனக்குப் பிடித்துவிட்டது. நூலாசிரியர்  ஸ்ரீமுருகனார் என்பவர். ரமணர் மீது கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, அவருடைய உபதேசங்களைக் கேட்டபடியும் ஆசிரமத்திலேயே சேவை செய்தபடியும் தன் வாழ்நாளைக் கழித்தவர். அவர் கவிஞராகவும் இருந்ததால், ரமணரின் எண்ணங்களுக்குக் கவிதை வடிவம் கொடுக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. கூடுதலான விவரங்களுக்காக நூலைப் பிரித்துப் படித்தேன். 1939 ஆம் ஆண்டில் திருவண்ணா மலையைச் சேர்ந்த ரமணாசிரமம் வெளியிட்ட புத்தகம் அது. நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்பாக்கள். எல்லாமே ரமணரின் உபதேசங்களை மையமாகக் கொண்டவை. நூலாசிரியரால் ஒவ்வொரு வெண்பாவுக்குக் கீழும் மிகச்சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில் பொருளும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வடிவமைப்பு பிடித்திருந்ததால், தன்னிச்சையாக ஒரு பக்கத்தை புரட்டி, அதிலிருந்த வெண்பாவைப் படித்தேன்.

சித்தமலங் கெட்டு சிவமயமாய்த் தாமொளிரும்
வித்தகர்தாம் அல்லால் வேறாரே உய்த்துணர்வார்
குற்றம் குறையொன்றும் கூடாப் பெருமைசால்
சிற்றம்பலத்தின் சிறப்பு
வெண்பாவின் மொழியோட்டம் வசீகரமாக இருந்தது. சித்தமலம் என்னும் சொல் படித்த கணத்திலேயே மனத்தில் பதிந்துவிட்டது. உயிர்கள் இறைவனைக் கண்டடைந்து சேர்வதை உயிர்களிடம் உறைந்திருக்கும் மும்மலங்கள் தடுத்தபடி இருக்கின்றன என்பது சைவ சித்தாந்தத்தின் நெறி. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் ஒன்றாக்கி அவற்றை சித்தத்தில் வாழும் மலம் எனப் பொருள்படும்படி சித்தமலம் எனக் குறிப்பிட்டிருக்கும் கவித்துவம் கவர்ச்சி நிறைந்ததாக இருந்தது. ஆணவம் என்பது நெல்லில் உள்ள உமி போன்றதென்றும் கன்மம் என்பது நெல்லில் உள்ள முளை போன்றதென்றும் மாயை என்பது தவிடு போன்றதென்றும் எப்போதோ படித்த நினைவு வந்து போனது. நெல்லைச் சுற்றியும் உள்ள இப்பொருட்களைப்போல, மூன்று மலங்களும் சித்தத்தில் உறைந்து சித்தத்தை நேர்வழியில் செயல்படாதபடி தடுத்துக் கொண்டிருக்கின்றன என்னும் பொருளை, சொல்லாமல் சொன்னபடி இருந்தது அந்தப் புதிய சொல்.

அந்தச் சொல் ஊட்டிய உற்சாகத்தால் வேறொரு பக்கத்தைப் புரட்டி கண்ணில் தென்பட்ட வெண்பாவைப் படித்தேன்.
உடலுணர்வை மாய்க்கல் உறுவதன்றி மெய்யாம்
திடமுயற்சி மற்றெதுவும் செய்யேல் உடலகந்தை
தானே அகில சமுசார துக்கத்துக்
கானதோர் ஏது அறி
இந்த வெண்பாவிலும் உடலகந்தை என்னும் சொல் வசீகரமாக இருந்தது. அகந்தையை மன உலகம் சார்ந்த ஒன்றாகவே அனைவரும் எண்ணியிருக்கும் தருணத்தில் வெண்பாவை இயற்றியவர் உடலகந்தை என்று புதிதாக ஒரு சொல்லை உருவாக்கியிருப்பது விசித்திரமாகத் தோன்றியது. உடலகந்தை என்பது எதுவாக இருக்கக்கூடும் என்று ஒருகணம் நினைத்துப் பார்த்தேன். தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, அழிந்து மண்ணோடு மண்ணாகிவிடக்கூடிய தசையாலான இந்த உடலையே நான் என ஆணவத்தின் காரணமாக அல்லது அறியாமையின் காரணமாக நினைத்துக்கொள்ளும் பேதைமையையே அவர் சுட்டிக் காட்டுகிறார் எனத் தோன்றியது.

உடனே அந்தப் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டேன்.படிச்சி பாருங்க, புடிக்கலைன்னா ரெண்டுமூணு நாளுக்குள்ள திருப்பி எடுத்தாந்துடுங்கஎன்று நண்பர் எனக்கு வழக்கமாக கொடுக்கும் சலுகையையும் கொடுத்தார். புன்னகையோடு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். ஸ்ரீமுருகனார் ரமணர் அருகிலேயே வாழும் பெரும்பேறு பெற்றவர். கவிதையியற்றும் திறமை கைவரப் பெற்றவர். சீடர்கள் சூழ்ந்திருக்கும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகளையும் அவற்றையொட்டி ரமணர் அளித்த விடைகளையும் அருகில் இருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளும் நற்பேறு பெற்றவர் அவர். சிறுகச்சிறுகக் கேட்ட அந்த உபதேச விளக்கங்களையே அவர் அழகான வெண்பாக்களாக இயற்றினார். ரமணரை அவர் இறைவனின் அவதாரம் என்றே எண்ணுகிறார். தன் பாடல்களில் அவரை பகவான் என்னும் சொல்லாலேயே குறிப்பிடுகிறார். ஒவ்வொரு நாளும் ரமணர் தன் உரையை நிகழ்த்தி முடித்ததும், அவர் உரைத்த அரிய கருத்துகளை அழகான வெண்பாக்களாக வடித்து, அக்கருத்துகள் சரியாக அமைந்துள்ளனவா என ரமணரிடமே காட்டி சரிபார்த்து வந்திருக்கிறார் ஸ்ரீமுருகனார். மொத்தத்தில் தத்துவ ஆராய்ச்சியியல், தத்துவ அநுசந்தானவியல், தத்துவ அனுபவவியல் என மூன்று இயல்கள். அவற்றில் 1254 வெண்பாக்கள்.  அரிதான கருத்தை எளிய சொற்களால் சொல்ல விழையும் விருப்பத்தை ஒவ்வொரு பாட்டிலும் புரிந்துகொள்ள முடிந்தது.

வரிசைப்படி படிக்காமல், விரல் புரட்டி நிறுத்திய பக்கத்தில் தெரிந்த வெண்பாவை மனம் போனபடி படித்தபடியிருந்தேன். எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சொற்கள் இன்றும் படிக்கும்வகையில் புதுமை குன்றா அழகோடு இருப்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தேன்.

கள்ளப் புலத்தை கருத்தால் உழுதிடர்ப்பட்(டு) எள்ளத் தனைமகிழ்வுக் கேங்குவார் உள்ளலெழும்
உள்ளப் புலத்தை உணர்வால் உழுதுவிளை
வெள்ளமகிழ் வேண்டார் வியப்பு.
கள்ளப்புலம், வெள்ளப்புலம் என்ற எதிரெதிர் சொற்சேர்க்கைகளை வாய்க்குள்ளேயே

சொல்லிப் பார்த்தபோது மனம் துள்ளியது.  உண்மையில் கள்ளப்புலம், உள்ளப்புலம் இரண்டும் வேறுவேறானதல்ல. புலம் ஒன்றே.  மானுடனின் இதயம்தான் அது. கள்ளத் தன்மையோடு ஒரு பகுதி. கள்ளமின்மையுடன் இன்னொரு பகுதி. உண்மையான நல்ல விளைச்சலுக்கான விதைகளை ஏற்றுக்கொள்ளும்போது இதயத்துக்கு உள்ளப்புலம் என்ற பெயர் கிடைக்கிறது. அற்பமான சின்னஞ்சிறு விளைச்சலுக்கான விதைகளை ஏற்றுக் கொள்ளும்போது இதயத்துக்கு கள்ளப்புலம் என்ற பெயர் கிடைக்கிறது. அற்ப விளைச்சலுக்கு ஏங்கும் மக்கள் உண்மை விளைச்சலை ஏன் விரும்ப மறுக்கிறார்கள் என்பது புரியாத புதிர் என்கிறது வெண்பா. அந்தப் புதிர் அளிக்கும் வியப்புதான் வெண்பா.
அந்த வெண்பாவுக்கு அருகிலேயே இன்னொரு வெண்பாவில் பயன்படுத்தப்பட்டிருந்த ஓர் உவமை பொட்டில் அறைந்தமாதிரி இருந்தது.

உலகின் மயற்கை ஒழிந்தாலே உண்மை
குலவுபர முத்திகை கூடும் உலகுக்கு
வற்புறுத்தி உண்மை வழங்கல் பரத்தைக்கு
கற்புறுத்துங் காமக் கதழ்
நம்பும்படி வற்புறுத்தி ஓர் உண்மையைச் சொல்வதே பிசகு என்னும் தொனி ஒலிப்பதை ஒரு கணம் உணரமுடிந்தது. பிறகுதான் எனக்கும் அந்த உண்மை புரிந்தது. உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்கிற நாட்டமும் தேடலுணர்வும் இல்லாத ஒருவனிடம் எடுத்துரைக்கும் ஒவ்வொரு வாசகமும் வீணானது. விழலுக்கு இறைத்த நீர். தேடலுணர்வு உள்ளவன் நெருங்கி வந்து கேட்கும்போது, எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துரைக்கலாம். பாத்திரத்துடன் வருபவன் அவன். நாம் வழங்கும் ஒவ்வொன்றும் அந்தப் பாத்திரத்தை நிரப்பும். பாத்திரமே இல்லாதவனிடம் நாம் வழங்கும் எதுவும் தங்காது. எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகும். ஆன்மிகக் கருத்துக்கு மட்டுமல்ல, பொதுவான எக்கருத்துக்கும் இது பொருந்தக்கூடிய ஒன்று. இதைப் புரிந்துகொள்ள பரத்தைக்கு கற்பை வலியுறுத்துவதுபோல என அவர் பயன்படுத்தியிருக்கும் உவமையும் பொருத்தமாக இருப்பதுபோலவே தோன்றியது.  

பின்னப் படாவிசும்பு பேணுங்கால் காரியமாம்
பின்னத் தசும்பே பிறங்காதேற் பின்னத்
தசும்பசைவு கொண்டு தசும்புதனில் உற்ற
விசும்பசைவு கூறன் மிகை.
இந்த வெண்பாவிலும் விசும்பு, தசும்பு என்னும்
எதிரெதிர் சொற்களைக் கையாண்ட விதமே என் கவனத்தை இழுத்தது. விசும்பு என்பது வானம். தசும்பு என்பது நீர்நிரம்பிய மண்ணாலான குடம். அழகான ஒரு காட்சியை இங்கே விவரிக்கிறது வெண்பா. மேலே அகண்ட வானம். தரையில் குடத்தின் நீருக்குள் நிழலாகத் தெரியும் வானத்தின் பிம்பம். ஒன்று நிஜ வானம். இன்னொன்று நிழல் வானம். எது நம்மை மயக்குகிறது? நிஜமான வானத்தின் கோலமா? நிழல் வானத்தின் கோலமா? நாம் எதை நாடப் போகிறோம்? நிஜத்தையா, நிழலையா? ஒரு புதிர்போல நீளும் வெண்பாவின் பாதை முடிவற்ற சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. முடிவற்ற சாத்தியத்தைக் கொண்டிருப்பதாலேயே, வெண்பாவின் அழகு தனித்துத் தெரிகிறது.

இன்னொரு பக்கத்தில் எளிமையான வடிவில் ஒரு வெண்பாவை படித்ததும் மனத்தைத் தொட்டுவிட, அதையே ஆறேழுமுறை மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்தேன்.

உடலொழிந் தில்லை உலகம் உடலும்
உளமொழிந் தோர்காலும் இல்லை உளமும்
உணர்வொழிந் தோர்காலும் இல்லை உணர்வேயும்
உண்மையொழிந் தோர்காலும் இல்
சின்னச்சின்ன சமன்பாடுகளை அடுக்கியபடி மேலேறிச் செல்லும் அழகான வெண்பா. உடல் இல்லாமல் இந்த உலகமில்லை. உள்ளம் இல்லாமல் இந்த உடலும் இல்லை. இந்த உடலுக்கு ஒரு பொருளையும் தகுதியையும் வழங்குவது இந்த உள்ளம். உள்ளத்தின் அடிப்படை உணர்வு. உணர்வு என்பது இல்லாத உள்ளம் உள்ளமே இல்லை. உணர்வுக்கு அடிப்படையானது உண்மை. உண்மையின்றி உணர்வுக்கு ஒருவித பயனும் இல்லை. உண்மையே அடிப்படைக் கூறு. அதுவே ஞானம். அதுவே வாழ்க்கை. எது அந்த உண்மை? அதை வெண்பா நேரிடையாகச் சுட்டவில்லை. அறிந்து தெளியும் சாத்தியங்களை வாசிப்பவர்களுக்கு வழங்கிவிடுகிறது.   திருமந்திரத்தின் சாயலை உடைய இந்த வெண்பா, தன் எளிய சொற்கட்டுமானத்தாலேயே மனத்தில் மீண்டும்மீண்டும் மிதந்துவந்தபடி இருக்கிறது. இதேபோல எளிமையான இன்னொரு வெண்பாவை வேறொரு பக்கத்தில் பார்த்தேன்.
அகந்தை அழிந்தால் அடியரும் ஆவர்
அகந்தை அழிந்தால் அறிஞரும் ஆவர்
அகந்தை அழிந்தால் அண்ணலும் ஆவர்
அகந்தை அழிந்தால் அருள்வெளி அன்றே
பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லாமல் ஒரே வாசிப்பில் உண்மையை
உணர்ந்துகொள்ளும்படி அமைந்திருக்கிறது வெண்பா. அகந்தையே அழிவுக்குக் காரணம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு படியிலும் அகந்தையைத் துறந்து சென்றபடி இருக்க வேண்டும்.  அகந்தையைத் துறக்கத்துறக்க அதுவரை சாத்தியப்படாத ஒவ்வொன்றும் நமக்குச் சாத்தியப்படுகிறது. அகந்தையை முற்றிலும் துறக்கும்போதுதான், நாம் எவ்வளவு பெரிய அடர் இருளில் இருந்தோம் என்பது புரியும். அந்த இருளிலிருந்து வெளியேறினால்மட்டுமே, நம்மால் வெளிச்சம் படர்ந்த வெளியை அடையமுடியும். ஆனந்தமும் அருளும் நிறைந்த வெளி அது.

சொற்சேர்க்கையின் தன்மையால் மனத்தைக் கவரும் வெண்பாவைத் தேடித்தேடி பக்கங்களைப் புரட்டியபோது ஒரு வெண்பா கண்ணில் பட்டது.

முதலையைக் கட்டையா முன்னிப் புனற்கு
மதலையாக் கொண்டுகைத்தான் மானும் குதலை
உடன்மல்கும் ஆர்த்தியராய்த் தம்முயிரைக் காண
உடன்முயல்வ தாவுரைப்பார் மாண்பு
முதலை ஆற்றில் வாழும் விலங்கு. மதலை அதே ஆற்றைக் கடந்துசெல்வதற்காக பயன்படும் தெப்பம். தெப்பத்தின் வடிவத்தில் கரையோரம் முதலை ஒதுங்கிக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, அதைத் தெப்பமென எண்ணி அதிலேறி ஆற்றைக் கடந்துபோக முடியுமா? அதுபோல அற்பமான ஆசைகள் நிரம்பிய மனத்துடன் திரிபவர்கள்  எவ்வளவு அலைந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியுமா?
மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்டாலும் ஒவ்வொரு வெண்பாவும் நுட்பமான பொருளைச் சுட்டும்வண்ணம் விரிவோடும் ஆழத்தோடும் இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆன்மிகக் கருத்துகளில் எவ்விதமான பெரிய நாட்டமும் எனக்கு இல்லை. ஆனால், அந்த மாபெரும் கடலை நோக்கிச் செலுத்தும் வகையில் ஒவ்வொரு வெண்பாவும் அமைந்திருப்பதை என்னால் உணர்ந்த்கொள்ள முடிந்தது.
வாக்குமனம் எட்டாத வாய்மையறி வானந்தச்
சூக்குமமே எண்ணாது தூலமாம் யாக்கைத்
தொழிலுக் குழைத்தல் துலாமிதித்துத் தண்ணீர்
விழலுக் கிறைத்து விடல்.
இந்த வெண்பாவின் உவமையை ஒரு காட்சியாக என் மனத்தில் விரிவாக்கிப் பார்க்கமுடிகிறது. ஒரு பெரிய கிணறு. அதில் இயங்கும் ஒரு ஏற்றம். அதிகாலையிலிருந்து அந்த ஏற்றத்தில் ஏறி ஒருவன் தண்ணீர் இறைத்தபடி இருக்கிறான். அவ்வளவு துன்பப்பட்டு, அவன் இறைக்கும் தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடுகிறது. அது நெல்வயல் நோக்கி ஓடவில்லை. விழல் விளைந்த இடத்தை நோக்கி ஓடுகிறது. நாம் இறைக்கும் நீர் எங்கே செல்கிறது என்கிற புரிதல் கூட இல்லாமல், நாள் முழுதும் ஏற்றம் இறைத்தபடி இருப்பவனைப்பற்றி என்ன சொல்வது? உண்மை எது என உணராதவன் பக்திக்கு அந்த உவமையைச் சொல்கிறது வெண்பா.
அகந்தை சட்டென ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. ஒரு முறை ஒட்டிக்கொண்டதை உதிர்ப்பது மிகவும் அரிது. மாபெரும் மனிதர்கள் என பெயரெடுத்த மனிதர்களிடம்கூட அகந்தை ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த அகந்தையை அகற்றுவதுதான் உலகிலேயே அரிதான செயல் என்றொரு கருத்தை முன்வைக்கிறது ஒரு வெண்பா.
ஊன வகந்தை ஒழித்தவுர வோனேமெய்
யானதுற வோன்மறையோ னாயிடினும் மானத்
துறவோர் மறையோர் சுமக்கும் அகந்தை
அறவோய்தல் அம்மா அரிது.
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஒளவையின் வரி நினைவுக்கு வந்தது. அந்த மானிடருக்குள் துறவோராகவும் மறையோராகவும் உயர்ந்த நிலையை எய்துவது அரிது. அத்தகையோரிடம்  கூட சிற்சில சமயங்களில்நான் துறவி, நான் மறையோன்என்ற எண்ணம் குடியேறி அகந்தைக்குக் காரணமாக மாறிவிடும். அந்த அகந்தையின் தடத்தை அறவே அழித்தல் அரிது என்கிறது வெண்பா.
புத்தகத்தைப் புரட்டப்புரட்ட பல நல்ல வெண்பாக்கள் பார்வையில் பட்டபடி இருந்தன. ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வகையிலேயே இருந்தன. சட்டென ஒரு பக்கத்தில் ஒரு காட்சியையே உவமையாக கையாண்டிருந்த ஒரு வெண்பாவைப் பார்த்தேன். படித்த கணத்திலேயே மனத்தில் பதிந்தது. அவ்வெண்பாவில் கவிஞர் ஒரு புதிய சொல்லையும் உருவாக்கியிருந்தார். புகைவண்டி என்பதை பொங்கழலின் வண்டி என்று குறிப்பிடுகிறார். அழல் என்பது நெருப்பு. பொங்கும் நெருப்பின் உதவியால் எழும் நீராவியால் ஓடும் வண்டி என்ற பொருளைக் கொடுக்கும் வகையில் பொங்கழலின் வண்டி என்கிறார் கவிஞர். வெண்பாவுக்குள் அச்சொல் அழகாகப் பொருந்துகிறது.
அரும்பாரச் சுமைகள்நீ ராவிவளி யாலே துரும்பாகக் கொண்டுநெடுந் தூரம் விரைந்தோடும் 
பொங்கழலின் வண்டியிலே போமறிஞர் தஞ்சுமையைத்
தங்கள்தலை மேல்சுமவார் தாம்
மனிதர்களையும் அவர்கள் எடுத்துச் செல்லும் சுமைகளையும் மற்ற சரக்குகளையும் சுமந்துகொண்டு நீராவியின் வலிமையால் புகைவண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது. புகைவண்டியில் பயணம் செய்யும் மனிதர்கள் யாரும் தம் சுமைகளை தம் தலைமேல் சுமந்தபடி செல்வதில்லை. அச்சுமைகளையும் சேர்த்து வண்டியே சுமந்துகொண்டு செல்கிற்து. ஒரு வாகனம், ஒரு பயணம், ஒரு மனிதன், ஒரு சுமை என நான்கு புள்ளிகளிடையே உள்ள கோலமே இவ்வெண்பா. இந்த வாகனமே தன் பயணத்துக்கு உரிய வாகனம் என்று முடிவெடுத்து, வாகனத்தில் ஏறி பயணத்தைத் தொடங்கிய பிறகு, தன்னைப்பற்றிய கவலையோ அல்லது தன் சுமைகளைப்பற்றிய கவலையோ சிறிதுமின்றி நிம்மதியாகப் பயணம் செய்யலாம். பயணத்தையும் தொடங்கிவிட்டு, சுமைகளை தலையிலிருந்து இறக்காமல் தன் தலையிலேயே வைத்திருக்கும் செயலை யாரும் செய்யமாட்டார்கள். ஒருவேளை அப்படிச் செய்பவர்களின் பயணம் ஒருவகையில் நிம்மதியிழந்த பயணமாகவே இருக்கும். வாகனம் என்று கவிஞர் குறிப்பிடுவது இறையருள். இறையருளே பெருந்துணை என எண்ணியபிறகு, மனத்திலிருக்கும் சுமைகளையெல்லாம் இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாகப் பயணம் செய்வதே நல்லது. நம்மையே சுமையாகச் சுமக்கும் இறையருள், நம் சுமைகளையும் சேர்ந்தே சுமக்கும். ஒரு நவீன வாகனப் பயணத்தை வெண்பாவுக்குள் ஓர் உவமையாகக் கையாண்டிருந்த விதம் புதுமையாக இருந்தது.  
காட்சியை உவமையாகக் காட்டும் இன்னொரு வெண்பாவையும் பார்க்கமுடிந்தது.
வறட்டெலும்பு கவ்வித்தன் வாய்நனிபுண் ணாகப்
பறட்டுப் பறட்டெனத்தன் பல்லால்- கறித்துமகிழ்ந்து
என்புபோல் இன்சுவைவே றின்றெனவப் புண்ணீராற்
புன்புலநாய் போற்றும் புகழ்ந்து
பசிகொண்ட ஒரு நாய் வழியில் தனக்குக் கிடைத்த எலும்புத் துண்டொன்றைக் கவ்வியெடுத்துத் தின்னத் தொடங்குகிறது. வழித்தெடுத்துச் சுவைக்க, அந்த எலும்பில் ஒரு துண்டு தசைகூட இல்லை. வெறும் எலும்புத் துண்டு. பசிதாங்காத நாய், அந்தத் துண்டையே பறட்டுப்பறட்டென பல்லால் கடித்துச் சுவைக்க முயற்சி செய்கிறது. பல்லும் ஈறும் காயம் பட்டு ரத்தம் கசிகிறது. உமிழ்நீருடன் அந்த ரத்தமும் கசிகிறது. புண்ணிலிருந்து வடியும் அந்த நீரையே தனக்குக் கிட்டிய இரையென நினைத்துச் சுவைத்து மகிழ்கிறது நாய். பிறகு, இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன அருமையான சுவை என அந்தச் சுவையைப் பாராட்டவும் செய்கிறது. வஞ்சப்புகழ்ச்சியணி போல விரிகிறது வெண்பா. உவமையை மட்டும் முன்வைத்துவிட்டு, உவமேயத்தைத் தவிர்த்திருக்கிறார் கவிஞர். இறைவனருள் என்னும் அருஞ்சுவை உணவை நாடாமல், தனக்குக் கிட்டியதையெல்லாம் அருஞ்சுவை உணவாக பிழையாக நினைத்து லயித்துக் கிடக்கும் செய்கையில் ஈடுபடுகிறவர்களை மறைமுகமாக அடையாளம் காட்டுகிறார்.
எது நல்ல நட்பு என்கிற இலக்கணத்தை ஒரு வெண்பா வரையறுத்துச் சொல்வதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
சித்தங் கலங்கித் திருவாய் சளசளக்கும்
பித்தரினஞ் சேரிற் பிழைபலவாம்- செத்துமனம்
சுத்தமாம் மோனந் துலங்கப்பெற் றாருறவே
உத்தமநட் பாகும் உணர்
பயனற்ற வெற்றுப் பேச்சைப் பேசும் மனிதர்களின் நடவடிக்கையையும் நட்பையும்திருவாய் சளசளக்கும்என கூர்மையான அங்கதம் தொனிக்க எழுதிச் சென்றிருக்கும் விதம் நன்றாக இருந்தது.  
ஓட்டை யடைத்துள் ளுணர்வுதேக் காது
பூட்டை யுடைத்துப் பொறிவழிப் போக்கல்
கோட்டை யிடித்துக் குளநீரைப் போக்கி
நாட்டை யழிக்கும் நவைச்செய லாமே
ஒரு பாத்திரத்தில் நீரைச் சேமித்துவைக்க நினைப்பவர்கள் முதலில் அந்தப் பாத்திரத்தில் உள்ள ஓட்டையை அடைத்த பிறகே தண்ணீரை ஊற்றவேண்டும். ஓட்டையை அடைக்காமல் எவ்வளவு தண்ணீரை ஊற்றினாலும் அந்தப் பாத்திரம் நிரம்பப் போவதில்லை. ஞானத்தைத் தேக்கிக் கொள்ளவும் இதுவே உகந்த வழியாகும். முதலில் உண்மையான உணர்வுகளைத் தேக்கிக்கொள்ளும்போது, அது ஞானமாகக் கனியும். ஐம்புலன்களுக்கும் உள்ள கட்டுப்பாடு என்னும் பூட்டுகளை உடைத்து, உணர்வுகளை வெளியே கசியவிடும்போது, நெஞ்சில் எதுவும் தங்காது. குளத்தின் கரைகளை உடைத்து, குளநீரையெல்லாம் வெளியேற வழிசெய்யும்போது, குளத்துடன் ஊரும் அழிந்துபோவதை யாராலும் தடுக்கமுடியாது. குளத்தின் கரையைப் பாதுகாப்பதுபோல மனத்தின் கரையையும் பாதுகாத்து, உண்மைவழியில் நின்றுன் உணர்வுகளையும் பாதுகாக்கவேண்டும். ஞானத்தின் பாதை அப்போதுதான் புலனாகும்.
செத்தாலே வீட்டுலகஞ் சேரலாம் அன்றிமற்
றெத்தாலும் சேரல் இயையாதே- செத்தொழிகை
எவ்வதெனின் யானெனதை மாய்த்தலே அன்றிமற்
றிவ்வுடம்பை மாய்த்தல் இழுக்கு
ஒருமுறை படிக்கும்போதே இன்னொரு முறையும் படித்துவிட்டு அசைபோடவைக்கும் வெண்பா இது.
இருவித மரணங்களை முன்வைத்து, ஒரு கோணத்தில் நுட்பமாகவும் இன்னொரு கோணத்தில் வெளிப்படையாகவும் வீடு பேறு பற்றிப் பேசுகிறது வெண்பா. ஒன்று உயிரைத் துறக்கும் மரணம். இன்னொன்று யான், எனது என்னும் செருக்கைத் துறக்கும் மரணம். அகந்தையைத் துறப்பதுகூட ஒருவகையில் மரணமுற்று புதிதாகப் பிறத்தலே. வீடு பேறு என்பது உயிர் துறந்தபிறகு அடையத்தக்க ஒன்றல்ல. செருக்கைத் துறந்தவனுக்கு மட்டுமே அந்த வீடுபேறு சாத்தியம்.எத்தாலும் சேரல் இயையாதேஎன்னும் வரியில் தென்படும் தீர்மானமான அனுபவம் வெண்பாவை பலமடங்கு அழகுள்ளதாக ஆக்குகிறது.
ஆயிரத்துச் சொச்ச வெண்பாக்களில் இப்படி ஏராளமான வெண்பாக்கள் கண்ணில் பட்டபடி இருந்தன. விட்டுவிட்டு மூன்று நாட்களில் புத்தகத்தைப் படித்துமுடித்தேன். தத்துவ பாரம் எதுவும் இல்லாமல் மிக எளிமையான உவமைகளையும் காட்சிகளையும் முன்வைத்து எழுதப்பட்டிருந்ததால், மிக எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. பல புதிய சொற்சேர்க்கைகளை மீண்டும்மீண்டும் அசைபோட்டபடி இருந்தேன். 1939 ஆம் ஆண்டில் இந்த வெண்பாக்கள் நூல்வடிவம் பெற்றிருக்கிறது என்னும் குறிப்பை வைத்துப் பார்க்கும்போது, அதற்கு இருபதுமுப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே, இவை இயற்றப்பட்டிருக்கலாம். தோராயமாக ஒரு நூற்றாண்டைக் கடந்த வெண்பாக்கள் என்று தோன்றியது. அது ஒரு சிறப்பு. ரமணரே படித்துப் பார்த்து தத்துவ உட்பொருளைச் சரிபார்த்துக் கொடுத்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. ரமணர் படித்த வெண்பாக்கள் எனக்குப் படிக்க கிடைத்திருக்கின்றன என்று மனத்துக்குள் உச்சரித்துக்கொள்ளும்போது ஒரு நெருக்கத்தை உணரமுடிந்தது.
நேற்று ஞாயிறு அன்று மீண்டும் அந்தப் புத்தகக்கடைக்குச் சென்றிருந்தேன்.வாங்க சார், நேத்து ஒரு பெரிய கட்டு வந்து எறங்கியிருக்குது, பாருங்கஎன்று அவற்றையெல்லாம் தூக்கி என் முன்னால் வைத்தார். புரட்டிப் பார்க்கத் தொடங்கிய என்னை இடைமறித்த நண்பர் ஏதோ நினைவு வந்தவராக, “போன வாரம் எடுத்தும் போனிங்களே, அந்த புத்தகத்த படிச்சிட்டிங்களா, புடிச்சிருந்தா வச்சிக்குங்க. புடிக்கலைன்னா திருப்பிக் குடுத்துரலாம்என்று சொன்னார். நான் புன்னகையோடு, “படிச்சிட்டேன், நானே வச்சிக்கறேன்என்றேன். அவரும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.


(உங்கள் நூலகம் ஏப்ரல் மாத இதழில் வெளிவந்த கட்டுரை )