Home

Monday 9 November 2020

கெய்த்தான் : சோர்வும் துயரமும் தொண்டருக்கில்லை

 


1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் வெகுவேகமாகப் பரவி தீவிரமடைந்தது. அகிம்சைவழியில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் பெண்களும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சிறைபுகுந்தனர். அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணித்தல், அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கள்ளுண்ணாமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல், கள்ளுக்கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கதராடைகளை அணியும்படி பிரச்சாரம் செய்தல், நூல்நூற்றல் போன்ற செயல்களையும் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் படிப்படியாக இணைத்துக்கொண்டார். கதராடைகளைப் பயன்படுத்துவது பெருகப்பெருக, மிகக்குறைந்த  வருமானமுடைய ஏழைகள்கூட நிறைவான வாழ்க்கையை வாழமுடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். 

கதராடைகளைப் பயன்படுத்துவதைப்பற்றி காந்தியடிகள்யங் இந்தியாஇதழில் தொடர்ச்சியாக பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இராட்டையைப் புறக்கணிப்பதும் கதராடைகளைப் புறக்கணிப்பதும் ஒருவன் தன்னுடைய நுரையீரல்களுக்கு தானே தீங்கைத் தேடிக்கொள்வதற்குச் சமம். பழுதான நுரையீரல்கள் மரணத்தைக் கொண்டுவருவது உறுதி. இராட்டையைப் போற்றி கதராடைகளை அணியத் தொடங்குவது மட்டுமே இந்திய மக்கள் தம் நுரையீரல்களைப் பழுதடையாமல் காப்பாற்றிக்கொள்வதற்கான வழி. மரணமற்ற பெருவாழ்வுக்கு கதராடைகளே துணை என்று காந்தியடிகள் உறுதியாக எடுத்துரைத்தார்.

இராட்டை என்பது தேசத்துடைய எளிமைக்கும் நல்வாழ்வுக்கும் விடுதலைக்குமான குறியீடு. நம் நல்லெண்ணத்தையும்  நம் காலில் நாம் நிற்கிறோம் என்கிற செய்தியையும் அது உலகுக்கு எடுத்துரைக்கிறது. அதற்கு எவ்விதமான இராணுவப்பாதுகாப்பும் தேவையில்லை. அதற்கு மற்ற நாடுகளின் அமைதியைக் கெடுத்து வளங்களைச் சுரண்டவேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொருவரும் தினந்தோறும் சமைப்பதுபோல, உழைப்பதுபோல, தினந்தோறும் செய்யவேண்டிய ஒரு கடமை என்னும் மன உறுதி மட்டும் இருந்தால் போதும். இராட்டை சுழலும் ஒவ்வொரு சுற்றிலும் அன்பும் அமைதியும் நல்லெண்ணமும் வெளிப்படுகிறது. அதற்கு நேர்மாறாக, அது சுழலாமல் நிற்கும் ஒவ்வொரு கணமும் நம் மீது அடிமைத்தனம் கவிழ்கிறது. இராட்டையும் கதரும் நம் நாட்டின் விடுதலைக்கான வழிகள். எளிமை என்பது இறைவனின் இருப்பிடம் என்பதையே ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு சொற்கள் வழியாக காந்தியடிகள் எழுதினார்.

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்று 1925இல் மானாமதுரைக்கு அருட்பணியாளராக  வந்து சேர்ந்த இருபத்தேழு வயதுள்ள இளைஞரொருவர் யங் இந்தியா இதழில் காந்தியடிகள் எழுதி வந்த கட்டுரைகளை மிகவும் விரும்பிப் படிப்பவராக இருந்தார். இயல்பாகவே எளிமையின் மீதும் உண்மையின் மீதும் ஆழமான பற்றுகொண்ட அவரை காந்தியின் கருத்துகள் ஈர்த்தன. ’உனக்கு அருகில் வசிப்பவரிடம் அமர்வதற்கு எதுவுமற்ற நிலையில் நீ இரண்டு நாற்காலிகள் வைத்திருப்பது மிகப்பெரிய குற்றம். கிட்டத்தட்ட அது திருட்டுக்குச் சமம்என ஒரு கட்டுரையில் காந்தியடிகள் எழுதியிருந்த குறிப்பு அந்த இளைஞரின் மனத்தைத் தொட்டது. காந்தியடிகள் எழுதும் ஒவ்வொரு கருத்தும் அவருக்கு ஏதோ ஒருவகையில் ஏசுவின் கருத்தை நினைவூட்டுவதாகவே இருந்தது. காந்தியடிகளைப் பார்க்காமலேயே, அவரைத் தன் மனத்துக்கு நெருக்கமான தலைவராக உணர்ந்தார் அவர். அந்த இளைஞரின் பெயர் ரால்ப் ரிச்சர்ட் கெய்த்தான்.(RALPH RICHARD KEITHAHN)

கெய்த்தான் அமெரிக்காவில் வசிக்கும்போதே ஆடம்பரமான ஆடைகளை ஒதுக்கி எளிய ஆடைகளைமட்டுமே அணிந்துகொள்ளும் பழக்கமுடையவராக இருந்தார். எங்கு பயணம் செய்ய நேர்ந்தாலும் மூன்றாம் வகுப்பில் எளிய மக்களில் ஒருவராகவே அவர் பயணம் செய்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அனைவரும் தேவாலயத்துக்கு, நண்பர்கள் சந்திப்புக்கு, விருந்துக்கு, மக்கள் உரையாடலுக்கு என ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகளை அணிந்தபடி நடமாடும்போது, எப்போதும் எளிமையான ஒரே ஆடையை அணிந்து நடமாடியவர் அவர். அருட்பணியாளராக பணியாற்ற அவரைத் தேர்வு செய்து இந்தியாவுக்கு அனுப்பிவைத்த குழு இந்தியாவுக்குச் சென்றதுமே ஆடம்பரமான மேலங்கிகளை வாங்கி அணியுமாறு சொன்ன அறிவுரையை அவர் கேட்டுக்கொண்டாரே தவிர செயல்படுத்தவில்லை.

மானாமதுரைக்கு வரும்போது மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அவரிடம் உடைகள் இருந்தன. தன்னைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்களைப் பார்த்து மனமிரங்கி, அவர்களைப்போலவே அவரும் எளிய உடைகளை அணியத் தொடங்கினார். அவர்களுள் ஒருவராகவே தன்னையும் கருதினார். ஒரு கட்டத்தில் அவர் கதராடைகளை அணியத் தொடங்கியதும் ஆங்கிலேய நண்பர்களும் பிற அருட்பணியாளர்களும் அவருடன் பணிபுரிகிறவர்களும் அதிர்ச்சியில் திகைத்துவிட்டனர். மேற்கு நாகரிக உடைகளை ஒதுக்குவது என்பது, அவர் ஏற்றுக்கொண்ட பதவிக்குரிய கெளரவத்துக்கே இழுக்கு என இடித்துரைக்கத் தொடங்கினர். ஆனால் கெய்த்தான் அச்சொற்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. அவர் கதராடைகளை அணிந்துகொண்டு அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களுக்குச் செல்லும்போது, அவரையறியாமல் ரகசிய காவல்துறையைச் சேர்ந்த ஆட்கள் பின்தொடர்ந்து வந்து  கண்காணிக்கத் தொடங்கினார்கள். கெய்த்தானுக்கு அரசியல் இயக்கங்களோடு தொடர்பு இருக்குமோ என்ற ஐயம் அவர்களுக்கு இருந்தது. ஆயினும் அதைப்பற்றிய அச்சமோ கவலையோ எதுவுமின்றி கதராடைகளையே அவர் தொடர்ந்து அணிந்தார்.

மானாமதுரையிலிருந்து பசுமலைக்கு அவர் மாற்றலாகி வந்தபோது அவர் வசிப்பதற்கு ஒரு பெரிய பங்களா ஒதுக்கப்பட்டது. அதன் ஆடம்பரத்தைக் கண்டு அவர் மனம்கூசினார். அதை மறுத்து, எளிய குடில் ஒன்றில் வசிக்கத் தொடங்கினார். தேவாலயத்தில் வழிபாடு நடைபெறும் சமயத்தில் கிறித்துவர்களாக மதம்மாறிய மேல்சாதிக்காரர்கள் தேவாலயத்துக்கு உள்ளேயும் தாழ்ந்த சாதிக்காரர்கள் தேவாலயத்துக்கு வெளியேயும் உட்காரவைக்கப்பட்டிருப்பதை முதன்முதலாகக் கண்டபோது திகைத்துவிட்டார். சாதியத்தை கிறித்துவத்துக்குள் அனுமதித்திருக்கும் சிறுமையைச் சுட்டிக்காட்டி உரையாடியபோது, ஏனைய அருட்பணியாளர்கள் அவரை அமைதிப்படுத்த முனைந்தனரே தவிர, பதில் அளிக்க முன்வரவில்லை.

ஒருமுறை ஜார்ஜ் (PASTOR GEORGE) என்னும் அருட்பணியாளர் அவருடைய முகாமிலிருந்து வேறொரு முகாமுக்கு மாற்றல் பெற்றுச் சென்றார். அப்போது தலைமைப்பொறுப்பிலிருந்தவரின் துணைவியார் தகுந்த மதிப்புக்குரிய விதத்தில் அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவைக்க விரும்பினார். அதை எப்படிச் செய்யலாம் என்று கெய்த்தானிடம் ஆலோசனை கேட்டார். மாலை விருந்துக்கும் அதைத் தொடர்ந்து பிரார்த்தனையில் கலந்துகொள்ளவும் அவரை அழைக்கலாம் என ஆலோசனை வழங்கினார் கெய்த்தான். “அந்த அழைப்பை ஜார்ஜ் ஏற்றுக்கொள்வாரா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்த பிறகு, ஜார்ஜை அழைத்தார் அந்த அம்மையார். விருந்தும் பிரார்த்தனையும் இனிதே நடைபெற, விடைகொடுத்து அனுப்பும் விழா நல்லமுறையில் நடந்துமுடிந்தது.  அடுத்தநாள் காலையில் அந்த அம்மையாரைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர் மறுபடியும்அந்த மாலைச் சந்திப்பு ஜார்ஜுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியளித்திருக்குமா?” என்று கெய்த்தானிடம் கேட்டார். அதற்குப் பிறகுதான் கெய்த்தானுக்கு ஓர் உண்மை புரிந்தது. ஜார்ஜ் ஓர் இந்தியர். ஆங்கிலேயர்களின் விருந்தறைக்குள்ளும் பிரார்த்தனை அறைக்குள்ளும் ஒருமுறை கூட இந்தியர்கள் அழைக்கப்பட்டது கிடையாது. தீண்டாமையை எழுதாத ஒரு விதியைப்போல அவர்கள் கடைபிடித்தார்கள். அந்த எண்ணமே கெய்த்தானுக்கு மிகவும் துன்பத்தைத் தந்தது. எந்த விதியையும் பொருட்படுத்தாமல் விருந்துக்கு ஏற்பாடு செய்த அந்த அம்மையாரை மனமாரப் பாராட்டினார் கெய்த்தான்.

ஜார்ஜின் மாமனாரான தைலர் (PASTOR TAYLOR) என்பவர்தான் கெய்த்தானுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தவர். இருவரோடும் கெய்த்தானுக்கு நல்ல நட்பு இருந்தது. அக்கம்பக்கத்தில் உள்ள பல இடங்களுக்கு அவர்களோடு சேர்ந்து பயணம் செல்வது அவர் வழக்கம். ஒருமுறை தன் பிறந்தநாளை ஒட்டி, தன் வீட்டில் அவர்களுக்கு ஒரு விருந்தளித்தார் கெய்த்தான். இருவரையும் இணைக்கும் புள்ளி கிறித்துவமே என்றபோதும் ஓர் இந்திய அருட்பணியாளர் மற்றொரு அயல்நாட்டு அருட்பணியாளரின் வீட்டுக்குச் சென்று உணவுண்ணும் பழக்கம் என்பது அதுவரை இருந்ததில்லை. அதைத் தகர்த்து கெய்த்தான் அந்த விருந்தை ஏற்பாடு செய்தார். அதையொட்டி அவருடைய குழு அவர்மீது குற்றம் சுமத்தியது. எதிர்ப்பையும் தெரிவித்தது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் மனத்துக்குச் சரியெனப் பட்டதைச் செய்பவராக இருந்தார் கெய்த்தான்.

ஏழைகளுக்குச் சேவைசெய்வதே கிறித்துவுக்குச் செய்யும் ஊழியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட கெய்த்தான் எளிய மக்களுக்கு நடுவில் ஒரு கூரைவீட்டிலேயே வசித்தார். கதராடைகளை அணிந்தபடி மிக எளிய உணவையே உட்கொண்டு வேலைக்காரர்களின்றி எளிய வாழ்க்கையையே அவரும் வாழ்ந்தார். தம்மைச் சந்தித்துப் பேச வரும் ஏழைகளை எல்லா அருட்பணியாளர்களும் வீட்டுக்கு வெளியே நிற்கவைத்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்த சூழலில், கெய்த்தான் அவர்களை அன்போடு வீட்டுக்குள் வரவேற்று உட்காரவைத்து உரையாடி அனுப்பினார். சில சமயங்களில் அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அவர்கள் வழங்கும் கூழை உவகையோடு அருந்திவிட்டுத் திரும்பினார்.

கொடைக்கானல் பள்ளியில் பணியாற்றியபோது, அதன் தலைமையாசிரியராக இருந்தவர் ஆபிரகாம் (V.M.ABRAHAM) என்பவர். தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து மதம்மாறி கிறித்துவரானவர். அவருடைய எளிமையையும் கிறித்துவத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் பற்றையும் கண்டு அவரோடு நட்புடன் பழகினார் கெய்த்தான். அவருடைய மனைவியும் குழந்தைகளும் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் தங்கியிருந்தனர். ஒருமுறை அதிகாலை நடைப்பயிற்சியின்போது ஆசிரியர் வேலையை உதறிவிட்டு, கிறித்துவத்துக்கு தொண்டாற்றுவதற்காக கிராமத்துக்குச் செல்லவிருப்பதாக கெய்த்தானிடம் தெரிவித்தார் ஆபிரகாம். ஆசிரியர் பணியில் அவருடைய திறமையையும் அர்ப்பணிப்பையும் நேருக்கு நேர் பார்த்த அனுபவத்தில், ஆசிரியர் வேலையே அவருக்கு உகந்ததென ஆபிரகாமிடம் எடுத்துரைத்தார் கெய்த்தான். கிராமசேவையே கிறித்துவுக்குச் செய்யும் மகத்தான சேவையென்றும் கிராமத்துக்குச் செல் என தன் உள்ளத்திலிருந்து கிறித்து கட்டளையிடுவதாகவும் சொன்னார் ஆபிரகாம். குடும்பத்தையும் குழந்தைகளையும் அவருக்கு நினைவூட்டி, அவருடைய முடிவைத் தடுப்பதற்காக முயற்சி செய்தார் கெய்த்தான். இறைவனின் அழைப்பை தன்னால் ஒருபோதும் நிராகரிக்கமுடியாது என்ற ஆபிரகாம் உறுதியான முடிவோடு பள்ளியைவிட்டு வெளியேறி தொலைதூரத்தில் இருந்த கிராமத்துக்குச் சேவையாற்ற சென்றுவிட்டார். பசியையும் பிணியையும் பொருட்டாகவே கருதாமல் ஓய்வின்றி உழைத்ததன் விளைவாக நோய்வாய்ப்பட்டு ஐந்தாறு ஆண்டுகளில் அவர் இயற்கையெய்தினார். எளிமையின் மீதும் தொண்டுணர்வின் மீதும் எப்போதும் ஈடுபாடு கொண்ட கெய்த்தானுக்கு ஆபிரகாமின் எளிமையும் தொண்டுணர்வும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தன.

பசுமலையில் கல்விப்பணியில் ஈடுபட்டிருக்கும்போதே, ஓய்வுப்பொழுதுகளில் ஏழைமக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் செய்துவந்தார் கெய்த்தான். ஒருமுறை பொதுமக்களிடம் எளிமையைப்பற்றியும் தன்னடக்கத்தைப் பற்றியும் பேசுவதற்காக திருச்செங்கோடு ஆசிரமத்தில் வசித்துவந்த இராஜாஜியை அழைத்துவந்தார் கெய்த்தான். கெய்த்தானின் எளிமையும் ஆர்வமும் இராஜாஜியை மிகவும் கவர்ந்தன. ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களிடையில் நீண்ட நேரம் உரையாற்றினார். அந்த உரையைத் தொடர்ந்து கெய்த்தானுடனும் தனிப்பட்ட வகையில் உரையாடிய பிறகு ஊருக்குத் திரும்பினார் இராஜாஜி.

1929ஆம் ஆண்டில் அகிம்சையைப்பற்றி உரையாடும் விருப்பத்தில் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றார் கெய்த்தான். காந்தியடிகள் அவரை வரவேற்று நீண்ட நேரம் உரையாடினார். அகிம்சையைப்பற்றியும் சத்தியத்தைப்பற்றியும் கெய்த்தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கங்களைச் சொன்னார் காந்தியடிகள். காலைநேர நடையிலும் மாலைநேர நடையிலும்  கெய்த்தான் காந்தியடிகளோடு கலந்துகொண்டார். பல தொண்டர்களும் தலைவர்களும் சூழ அவர் நடந்துசெல்லும்போது, அவர்களோடு கெய்த்தானும் சேர்ந்து நடந்தார். நடைப்பயிற்சியின்போது ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விக்கு இயல்பான வகையில் பதிலுரைத்தபடியே நடப்பது காந்தியடிகளின் வழக்கம்.

மதங்களைப்பற்றியும் மதநிறுவனங்களைப்பற்றியும் அவருக்கென தனித்த கருத்துகள் இருந்தன. மதத்துடன் தொடர்புடையவர்கள் மக்கள் தொண்டாற்றுவதில் ஒரு பிழையும் இல்லை. அன்பும் கருணையுமே தொண்டுக்கான அடிப்படை. அது ஒருபோதும் தன்னை நோக்கி ஒருவரை இழுக்கும் விசையாக மாறிவிடக்கூடாது என்னும் எண்ணத்தில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். அடிப்படையில் உலகில் தோன்றிய எல்லா மதங்களும் சமமானவையே. ஒன்றைவிட ஒன்று உயர்வானது என்னும் பேச்சுக்கே இடமில்லை. பல மதங்களைச் சேர்ந்தவர்களோடு இணைந்து வாழ்கிற ஒரு சூழலில் ஒருவர் மற்றவருடைய மதத்தை மதிக்கக் கற்றுக்கொள்வது மிகமிக முக்கியம். சகித்துக்கொள்வது என்பதைவிட மதிப்பது இன்றியமையாதது.  சொந்த மதத்தைத் துறந்து இன்னொரு மதத்தை ஏற்றுக்கொள்ள விழைபவர்கள் முதலில் மாற்றத்துக்கான காரணங்களைத் தேடி அடுக்குவதைவிட, சொந்த மதத்தை நெஞ்சுக்கு நேர்மையாக பின்பற்றுகிறவராக இருக்கவேண்டும். மதமாற்றம் என்பதே சில நோய்களால் உருவாகும் விளைவு. நோயையும் நோய்க்கான காரணத்தையும் கண்டறிந்து விலக்கும்போது மதமாற்றமும் தானாக மறையத் தொடங்கிவிடும் என்பது காந்தியடிகளின் கருத்து. ஏழை எளிய மக்களிடையே கெய்த்தான் ஆற்றிவரும் கல்வித்தொண்டையும் மருத்துவத்தொண்டையும் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், அவற்றைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்கப்பிரிவைச் சேர்ந்த ராபர்ட் தெ நோப்ளி (ROBERT DE NOBILI)  போன்றவர்களும் பிராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சார்லி ஆந்த்ரூஸ்(CHARLIE ANDREWS), காக்வா (DR.KAGWA) போன்றவர்களும் கெய்த்தானின் காலத்தில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மானுடச்சேவையில் பணியாற்றியவர்கள். மக்களுக்கு ஆற்றும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையென்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்கள். தம்மை இந்தியர்களாகவே மாற்றிக்கொண்டவர்கள். அவர்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் காந்தியடிகளின் எளிமையாலும் உண்மையாலும் கவரப்பட்டவர்கள். காந்தியடிகளோடும் தாகூரோடும் வாழ்நாள் முழுதும் இணைந்து நின்றவர்கள். அத்தகையோரின் உரைகளால் தன் மாணவர்கள் தொண்டுணர்ச்சியோடு செயலூக்கம் கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தில், அவர்களை அழைக்க கெய்த்தான் விரும்பினார். ஆனால் தேவாலயமும் மறைப்பணியாளர்கள் குழுவும் அதை ஏற்கவில்லை. கிறித்துவர்களாக இருந்தபோதும் அவர்கள் உண்மையான கிறித்துவர்களல்லர் என்று சொல்லி மறுத்துவிட்டனர்.

பல நூல்கள் வழியாக புத்தமதத் தத்துவங்களையும் சமணமதத் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தார் கெய்த்தான். இவ்விரு மரபுகளும் இந்திய மண்ணில் ஆழமாக வேரோடி இருப்பதாலேயே காந்தியடிகளைப்போன்ற ஆளுமை மலர முடிந்திருக்கிறது என்று வெளிப்படையாகவே உரைத்தார் கெய்த்தான். ஒருமுறை  திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்து உரையாடினார் கெய்த்தான். அவருடைய தியான மண்டபத்தில் நுழைந்தபோது, முதல் கணத்திலேயே ஒரு பேராளுமையின் இருப்பை தனக்கு அருகில் உணரமுடிந்ததாக அவர் தெரிவித்தார். கேரளத்தைச் சேர்ந்த சுவாமி ராமதாஸ் என்பவரையும் நாராயண குருவையும் அவர் சந்தித்து உரையாடினார்.

கெய்த்தானுடைய செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்துவந்த பரப்புநர் குழுத்தலைமை பல முறை அவரை நேரில் அழைத்து கண்டித்தது. ஆயினும் தம் செயல்பாடுகளை அவர் கைவிடவில்லை. அதைக் கண்ட தலைமை, தேவாலயங்களிலும் வீடுகளிலும் கிறித்துவச்சடங்குகளைச் செய்துவைக்கும் உரிமையை ரத்து செய்தது. புரட்சிக்காரர் என்ற முத்திரையிட்டு எல்லாச் சடங்குகளிலிருந்தும் அவரை ஒதுக்கிவைத்தனர். அதைக் கண்டு அவர் துளியும் சோர்வுறவில்லை. தன் செயல்களில் ஊக்கம் குன்றாதவராகவே அவர் பணியாற்றினார். நிசேயா நம்பிக்கை அறிக்கை என்பது தொன்றுதொட்டு கிறித்துவத்தின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத்தொகுப்பாகும். பிராட்டஸ்டண்ட் தேவாலயங்களில் வாசிக்கப்படும் அந்த நம்பிக்கை அறிக்கை இன்றைய காலகட்டத்தின் தேவையை உரியவகையில் நிறைவேற்றும் ஆற்றலற்றவை என்று அவர் உரைத்தபோது, மரபுவாதிகள் அவர்மீது சீற்றம் கொண்டனர். பலரும் அவரை வசைபாடினர். தேவாலயக் குழுக்களில் அவரோடு பணியாற்றும் பலரும் அவருடனான நட்பை முறித்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அலகாபாத் நகரில் நடைபெற்ற அனைத்திந்திய கிறித்துவ மாநாட்டுக்கு இராட்டையோடு சென்று அவர் கலந்துகொண்டபோது, ஏற்கனவே அவர் மீது பிறர் கொண்டிருந்த வெறுப்பு மேலும் பெருகியது.

மதுரையில் அப்போது ஹால் (Hall) என்பவர் ஆட்சியராக பணிபுரிந்து வந்தார். கெய்த்தானின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற அவர் 1930ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டைவிட்டு மூன்று வார காலத்துக்கு வெளியேறும்படி கட்டளையிட்டார். கெய்த்தான் உடனே சென்னை மாகாண கவர்னரிடம் முறையிட, அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு தன் சொந்தச் செலவில் அமெரிக்காவுக்குச் சென்ற கெய்த்தான் திருமணம் செய்துகொண்டு புதுமனைவியோடு தமிழகத்துக்கு மீண்டும் வந்து குடியேறினார்.

கெய்த்தான் ஒருபோதும் நாலு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தவர் அல்ல. புதிய புதிய வேலைகளைத் தாமாகவே உருவாக்கிக்கொண்டு, அதற்காக உழைப்பவர். இளைஞர்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு, அவர்களை ஆக்கவேலைகளிலும் அவர் ஈடுபடுத்தினார். மானாமதுரை, பசுமலை, ஒட்டன்சத்திரம், திருப்பத்தூர் என அவர் தங்கியிருந்த ஒவ்வொரு இடத்திலும் அங்கு வசித்த இளைஞர்களோடு நல்ல தொடர்புள்ளவராகவே வாழ்ந்தார். அவர்களை ஒருங்கிணைக்கவும் வேலைகளில் ஈடுபடுத்தவும் கல்லூரிக்காலத்தில் அவர் பெற்றிருந்த சாரணர் பயிற்சி அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. பெங்களூரில் தங்கியிருந்த சமயத்தில் கூட, குடிசைப்பகுதிகளில் வாழ்ந்துவந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்கள் கல்வி கற்க உதவி செய்தார் கெய்த்தான்.

கெய்த்தானுக்குப் பின்னால் ஓர் இளைஞர் கூட்டம் எப்போதும் காத்திருந்தது. தன் ஆசிரமத்துக்கு அவர் ஆனந்த ஆசிரமம் என்று பெயர்சூட்டினார். கல்வி கற்கும் நேரம் போக எஞ்சிய நேரத்தில் ஆசிரமத்தின் இளைஞர்களை அருகிலிருந்த தேயிலைத்தோட்டத்துக்குச் சென்று, அங்கிருப்பவர்களுக்கு எழுத்தறிவு புகட்டவும் கைத்தொழில் பயிற்சியளிக்கவும் செய்தார். அந்தச் சேவையை இளைஞர்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து இயங்கினர். ஒவ்வொரு இளைஞரும் தன் வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய இளைஞர்களுடன் இணைந்து நலவாழ்வு மையங்களை உருவாக்கி ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குடிசைப்பகுதியிலும் ஒரு மையம் என்கிற கணக்கில் 26 மையங்கள் செயல்படத் தொடங்கின. அதன் பின்னணியில் கிரியா ஊக்கியாகச் செயல்பட்டவர் கெய்த்தான்.

ஒருமுறை ஓர் ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்தபோது, அங்கே சாப்பிட்ட பலரும், இலையிலேயே பாதிக்கும் மிகுதியான உணவு எஞ்சியிருக்க  எழுந்து செல்வதைக் கண்டார். வெளியே எடுத்து வீசப்பட்ட அந்த இலைகளை சின்னஞ்சிறுவர்கள் சூழ்ந்துகொண்டு அந்த எச்சில் உணவை உண்பதைப் பார்த்து அவர் மனம் கலங்கினார். ஒவ்வொருவரும்  தனக்குத் தேவையான அளவு மட்டுமே உணவை வாங்கி உட்கொண்டால், எஞ்சிய உணவை அதே சிறுவர்களுக்கு கெளரவமான முறையில் வழங்கலாமே என அவர் நினைத்தார். அதை உடனடியாக தான் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் அமைப்பிலேயே செயல்படுத்தினார். வெளியே பசியோடு காத்திருக்கும் சிறுவர்சிறுமியரை உள்ளே அழைத்து இலைபோட்டு பாத்திரங்களில் எஞ்சிய உணவை பரிமாறும்படி செய்தார். ஒருசிறிதும் உணவு வீணாகாமல், இரு தரப்பினரும் வயிறார உண்பதற்கு அது ஒரு சிறந்த வழியென்பதை இளைஞர்கள் அன்று புரிந்துகொண்டனர்.

பெங்களூர் ஆசிரமத்தின் சேவையைப்பற்றிய பேச்சு நாடெங்கும் பரவியதால் வங்காளத்திலிருந்து சித்தரஞ்சன் தாஸும் மற்ற தலைவர்களும் ஆசிரமத்துக்கு வந்து பார்வையிட்டுச் சென்றனர். கெய்த்தானின் ஆசிரமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் செயல்பாடுகளைப்பற்றி யாரோ ஒருவர் தவறான செய்தியைக் கொடுக்க, அதைக் கேட்டு வெகுண்டெழுந்த பெங்களூர் ஆட்சியர் 1942இல் அவர் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது அவருக்கு உதவ யாருமில்லை. நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவரை மும்பை துறைமுகம் வரைக்கும் அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பினர்.

சுதந்திரப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமயத்திலேயே சுதந்திர தேசத்தில் வாழப்போகிற மக்களுடைய நல்வாழ்வைப் பற்றியும் யோசித்து சில திட்டங்களை அறிவித்தார் காந்தியடிகள். மத நல்லிணக்கம், தீண்டாமையை அகற்றுதல், மதுவிலக்கு, கதர், கிராமத்தொழில் மேம்பாடு, கிராம சுகாதாரம், புதிய அடிப்படைக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியத்தைப்பற்றியும் தூய்மையைப்பற்றியுமான விழிப்புணர்வு, தாய்மொழி, தேசிய மொழி, பொருளாதார பேதங்களை அகற்றுதல், விவசாயிகள், தொழிலாளிகள், மலைவாழ்மக்கள், மாணவர்கள் நலன்காத்தல், தொழுநோயை ஒழித்தல் ஆகியவை அத்திட்டங்களில் அடங்கும். காந்தியடிகள் இவற்றை சமூக நிர்மாணத்திட்டங்கள் என்று குறிப்பிட்டார். இவையும் முழுமையான அளவில் நிறைவேறும்போதுதான், நாம் அடையும் சுயராஜ்ஜியம், பூரண சுயராஜ்ஜியமாக இருக்குமென்று அவர் உறுதியாக நம்பினார்.

1947இல் இந்தியா விடுதலையடைந்ததும் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றுக்கொண்ட இராஜாஜிசுதந்திர இந்தியாவைக் காண வருகஎன்று கெய்த்தானுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். உடனே கெய்த்தான் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். காந்தியடிகளின் கிராம நிர்மாணத்திட்டத்தை மனத்தில் கொண்டு ஜே.சி.குமரப்பாவின் ஒத்துழைப்போடு உடனடியாக கிராமத்தொழில் பயிற்சி நிலையமொன்றை காந்திகிராமில் தொடங்கினார் கெய்த்தான்.  எண்ணற்ற ஆண்களும் பெண்களும் அந்நிலையத்தில் பயிற்சி பெற்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் பெற்ற மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி திண்டுக்கல்லுக்கு அருகில் மருத்துவ வசதியே இல்லாத ஒட்டன்சத்திரம் என்னும் ஊரில் நலவாழ்வு மையமொன்றைத் தொடங்கினார்.

இவ்விரண்டு மையங்களும் ஊக்கத்துடன் செயல்படத்  தொடங்கிய வேளையில் தமிழகம் கடுமையான வறட்சியால் தவித்தது. பசுமை என்பதையே கண்ணால் பார்க்கமுடியாத நிலை. பாசனக்கிணறுகள் வற்றிவிட்டன. விவசாயம் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டது. பிழைப்பதற்காக மனிதர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறத் தொடங்கினர். மக்களின் துயரத்தைக் கண்டு மனம்கரைந்த கெய்த்தான் ஊரில் வசித்துவந்த தொண்டுள்ளம் கொண்டவர்களை இணைத்துக்கொண்டு கிராமராஜ்ஜிய நிர்மாண சங்கத்தைக் கட்டியெழுப்பினார். கிராமக் கைத்தொழில்கள் வழியாக அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. உழைக்கும் அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது. கைத்தொழிலால் உருவான பொருள்கள் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு, திரண்டுவந்த தொகை அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட்டது. வாழ்க்கையில் துயர்மிக்க ஒரு காலகட்டத்தில் அந்தத் தொகை மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

விவசாயத்தை மறுபடியும் நிலைநிறுத்தும் விதமாக வற்றிய கிணறுகளுக்குள் பிள்ளைக்கிணறு வெட்டப்பட்டன. கிணறுகளே இல்லாத இடங்களில் புதிய கிணறுகள் உருவாக்கப்பட்டன. உள்ளூர் நீர்நிலைகளான ஏரிகளிலும் குளங்களிலும் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. காடுகளில் காணப்படும் மேடுபள்ளங்கள் சரிசெய்து சீரமைக்கப்பட்டன. பயிர்செய்வதற்குத் தோதான வகையில் நிலங்களும் பண்படுத்தப்பட்டன. பொருள்விற்பனையில் தொழிலாளர்களுக்குப் பிரித்தளித்ததுபோக எஞ்சியிருந்த பணம் இந்த வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும் தேவைப்பட்ட தொகையை ஜெர்மனியைச் சேர்ந்த தொழிலதிபரான மேயர் (mayor) என்பவரைத் தொடர்புகொண்டு பெற்றுத்தந்தார் கெய்த்தான். திருமங்கலத்துக்கு அருகில் குராயூரைச் சேர்ந்த அவையன் என்னும் பட்டதாரி, சென்னையில் உயர்பதவியில் நல்ல சம்பளத்தில் இருந்தபோதும், சொந்த ஊரின் வறட்சிநிலையைப் போக்கவேண்டும் என்ற வேகத்தில் வேலையை உதறிவிட்டு கிராமத்துக்கு வந்து கெய்த்தானுக்குத் துணைநின்றார்.

வினோபா மதுரைக்கு வந்திருந்தபோது, அவருடைய பாதயாத்திரையில் கெய்த்தானும் இணைந்துகொண்டார். வினோபா புறப்பட்டுச் சென்றபிறகு ஜெகந்நாதனும் கெய்த்தானும் கிருஷ்ணம்மாளும் தொடர்ந்து பாடுபட்டனர். ஒரு கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக வளைத்துவைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடிய அறுநூறு ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களோடு அவர் சத்தியாகிரக வழியில் உண்ணாவிரதம் இருந்தார். அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆயினும் வெளியே இருந்த தொண்டர்கள் அகிம்சை வழியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். நீண்ட கால முயற்சிக்குப் பிறகு, போராட்டம் வெற்றியில் முடிந்தது. மீட்கப்பட்ட நிலம் அங்கு வசித்துவந்த தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டது.

கெய்த்தானுக்கு அறுபது வயது நிறைவடைந்த சமயத்தில், அவருடைய சேவையை கெளரவிக்கும் விதமாக தமிழ்நாடு சர்வோதய சங்கம் வத்தலகுண்டுக்கு அருகில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக்கொடுத்தது..

ஒட்டன்சத்திரம் ஆசிரமத்திலும் கொடைக்கானல் ஆசிரமத்திலும் மாறிமாறித் தங்கி தன் சேவைகளைத் தொடர்ந்தார் கெய்த்தான். அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி தென்னிந்திய கிறித்துவ சபை அவருடைய இறுதிக்காலத்தில் மிகச்சிறந்த சமயகுரு என்னும் பட்டத்தை அளித்து கெளரவித்தது. சிகாகோ பல்கலைக்கழகமும் காந்திகிராம பல்கலைக்கழகமும் அடுத்தடுத்து மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கிப் பாராட்டின. 1973இல் தன் ஈடுபாடுகளைப்பற்றியும் சேவைகளைப்பற்றியும் விரிவான அளவில் PILGRIMAGE IN INDIA என்னும் தலைப்பில் அவர் எழுதிய  தன்வரலாற்று நூல் வெளிவந்தது. இறுதிமூச்சு வரைக்கும் எளிய மக்களுக்காக சேவையாற்றிய அத்தொண்டர் 1984இல் மறைந்தார். அவர் பணியாற்றிய ஒட்டன்சத்திரம் கிராமத்திலேயே அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

எளிமையே வாழ்க்கையின் சாரம். மனிதர்களின் உண்மையான மகிழ்ச்சி எளிமையிலேயே அடங்கியிருக்கிறது. நன்மையும் பெருமையும் எளிமையால் விளைபவை. எளிமையின் வழியாக எண்ணற்றோர் இதயங்களில் இடம்பிடித்தவர் கெய்த்தான்.

(கிராம ராஜ்ஜியம் – நவம்பர் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)