Home

Sunday 15 November 2020

முறியாத இலட்சியமும் முறிந்த காலும் - கட்டுரை

 

கடந்த நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக நாடெங்கும் மிகப்பெரிய எழுச்சி உருவாகி வந்த சூழலில், தமிழகத்தில் ஆலயப்பிரவேசம் நடைபெற்ற முதல் நகரம் மதுரை. மதுரையை முன்மாதிரியாகக் கொண்டு பிற நகரங்களிலும் கிராமங்களிலும் அடுத்தடுத்து ஆலயப்பிரவேசம் நிகழ்ந்தது. அதன் வழியாக, சாதி சார்ந்த வேறுபாடுகளின்றி எல்லா ஆலயங்களிலும் அனைவரும் நுழைந்து தெய்வத்தை வணங்கி வழிபடும் உரிமை உறுதி செய்யப்பட்டது. பிறகு அது சட்டமாகவும் இயற்றப்பட்டது. ஆலயபிரவேசம் என்பது தமிழ்ப்பண்பாட்டுத் துறையில் நிகழ்ந்த பெரிய மாற்றத்தின் தொடக்கம்.

இச்சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வேளையில் படிப்படியாக பொதுப்போக்குவரத்து, பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், சந்தைகள், பொதுவிழாக்கள் போன்ற பல இடங்களிலும் தீண்டாமையைக் கடைபிடிக்கும் பழக்கம் விலகி மறைந்துவிட்டது. ஆயினும் சிற்சில தேநீர்க்கடைகள், காபி நிலையங்கள், முடி திருத்தகங்கள் போன்றவற்றில் அப்போதும் தீண்டாமை நீடித்திருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி உள்ள தேநீர்க்கடைகளில் தேங்காய்ச்சிரட்டைகளிலும் தனித்தம்ளர்களிலும் தகரப்பாத்திரங்களிலும் மட்டுமே தேநீர் வழங்கப்பட்டது. சாதி இந்துக்களுக்கு துணிவெளுப்பவரும் முடிதிருத்தம் செய்பவர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்ய மறுத்தனர். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் கிணறுகளிலும் தொட்டிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சத்திரங்களிலும் தங்கும் விடுதிகளிலும் கூட அவர்களால் அவசரத்துக்குக்கூட தங்க முடியாமல் இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1952இல் அரிஜன சேவா சங்கத்தின் பொறுப்பை ஏற்று மதுரையை அடுத்த மேலூர் கிராமத்தில் பணியாற்ற கேரளத்திலிருந்து ஒருவர் வந்தார். அவர் ஆனந்த ஷெனாய் என்கிற ஆனந்த தீர்த்தர். நாராயண குரு, காந்தியடிகள் வழிவந்தவர் அவர். தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பல ஆண்டுகளாக ஆசிரமங்களை நடத்திய அனுபவம் வாய்ந்தவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக கேரளப்பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் நலன் சார்ந்து சேவையாற்றியவர்.

மனமாற்றத்தின் வழியாக மனிதர்களுக்கிடையில் நிரந்தர சமத்துவத்தை உருவாக்குவதன் மூலம் தீண்டாமையை அகற்ற முடியும் என்று நம்பியவர் காந்தியடிகள். தாழ்த்தப்பட்டோர் நலனை முதன்மை இலக்காகக் கொண்டவர் என்கிற நிலையில், காந்தியடிகள் நம்பியதைப்போல இயல்பான மனமாற்றத்துக்குக் காத்திருக்காமல் அகிம்சை முறையிலேயே சட்டத்தின் உதவியை நாடி அந்தச் சமத்துவத்தைச் சாத்தியப்படுத்த விழைந்தவர் ஆனந்த தீர்த்தர். அதற்காக எண்ணற்ற துன்பங்களையும் வேதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்.

அகிம்சைவழிப் போராட்டக்காரர்கள் என்றால் ஊர்வலம் செல்பவர், உண்ணாவிரதம் இருப்பவர், உபதேச மொழிகள் சொல்பவர், சிறைக்குச் செல்பவர் என்ற எண்ணமே எல்லா ஊர்களிலும் பரவியிருந்த காலம் அது. ஆனந்த தீர்த்தரிடமும் இத்தகு பண்புகள் நிறைந்திருந்தன. கூடுதலாக அடி, உதை பட்டாலாவது தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக வெற்றியை ஈட்டும் அர்ப்பணிப்புணர்வும் இருந்தது.  மற்ற காந்தியர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தி நிலைநிறுத்தும் முக்கியமான அம்சம் இது.

பொதுவாழ்வில் அவர் அடிவாங்கிய தருணங்களே அதிகம். அவர் பெற்ற அனைத்து அடிகளுக்கும் பின்னால் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றும் நோக்கமே அடிப்படையாக இருந்தது என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மை. நாடு முழுக்கத் தேடினாலும் அப்படி இன்னொருவரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. தம் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் அவர் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் ஏற்றுக்கொள்வதில் அகிம்சையைக் கடைபிடித்தார். இலட்சியத்துக்காகப் பாடுபடும் உண்மையான சத்தியாகிரகியாக நடந்துகொண்டார்.

ஆனந்த தீர்த்தர் தம் இருபத்தோராவது வயதில் முதன்முதலாக பொதுமக்களிடமிருந்து அடிவாங்கும் சத்தியாகிரக வாழ்க்கையைத் தொடங்கினார்.  பாலக்காடு பகுதியில் கல்பாத்தி என்னும் இடத்தில் பொதுச்சாலையில் நடப்பதற்கும் கடைவீதிகளில் வேலை செய்வதற்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்டிருந்தார்கள். 1926இல் அதை எதிர்த்து ஆரிய சமாஜம் ஒரு போராட்டத்தை நிகழ்த்தியது. அதன் சார்பில் அப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆனந்த தீர்த்தரை மேல்சாதிக்காரர்கள் இணைந்து தாக்கினர். ஆயினும் அவர் தன் போராட்டத்தை கைவிடவில்லை. இறுதியில் அவருடைய போராட்டத்தின் விளைவாக தாழ்த்தப்பட்டோருக்கு அச்சாலையில் நடமாடும் உரிமை கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் கல்லுகுளங்காரா சிவராத்திரி விழாவில் ஹேமாம்பிகா கோவிலுக்கு அருகில் நடைபெற்ற கண்காட்சியைக் காண்பதற்காக விரும்பிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களை அழைத்துச் சென்ற ஆனந்த தீர்த்தரை சாதி இந்துக்கள் கடுமையாகத் தாக்கி வீழ்த்தினார்கள்.

ஊருக்கு நடுவில் ஒரு கோவில். கோவிலை ஒட்டி ஒருபுறம் கடைவீதிகள். மறுபுறம் பள்ளிக்கூடம் என்பது கேரளத்து ஊர்களின் பொது அமைப்பாகும். கோவிலும் கோவிலை ஒட்டிய பகுதிகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு தடை செய்யப்பட்ட இடங்களாக இருந்ததால் பள்ளிகளுக்கும் கடைவீதிகளுக்கும் அவர்களால் செல்லமுடியாததாக இருந்தது., உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தம் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்ப விரும்பாதவர்களாக இருந்தனர். அவர்கள் உழைத்தால் கிடைக்கக்கூடிய தொகையை பல சமயங்களில் ஆனந்த தீர்த்தர் தானே அவர்களுக்கு வழங்கிவிட்டு கல்விநிலையங்களுக்கு சிறுவர்சிறுமிகளை அழைத்து வந்து சேர்த்தார். அவ்விதமாக சேர்க்கப்பட்ட நாலைந்து சிறுவர்கள் கூட தம் வீட்டிலிருந்து புறப்பட்டு கல்விநிலையங்களுக்கு வந்து சேரமுடியாத அளவுக்கு சமூகத்தடைகள் இருப்பதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் தாமே அப்பிள்ளைகளுக்குத் துணையாக அழைத்துச் செல்வதும் அழைத்துவந்து விடுவதுமாக இருந்தார். தருணம் பார்த்து அவரை மறித்த உயர்சாதியினர் ஒருநாள் கடுமையாகத் தாக்கி வீழ்த்தினர். அப்போதும் தம் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக உள்ளூர் நிர்வாக அதிகாரியை அணுகி, அதற்குரிய ஆணையைப் பெற்றார் ஆனந்த தீர்த்தர். அவர் வாழ்நாள் முழுதும், அவர் செல்லும் ஊர்களிலெல்லாம் அடிவாங்கும் படலமும் அதிகாரிகளிடமிருந்து தாழ்த்தப்பட்டோர் நலனைப் பாதுகாக்கும் ஆணைகளைப் பெறும் படலமும்  தொடர்கதைகளாகவே இருந்தன.

தமிழகத்தில் மேலூர் வட்டாரத்தில் சேவா சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வந்த இடத்திலும் தாழ்த்தப்பட்டோர் நலனை மட்டுமே முதன்மை இலக்காகக் கொண்டு பணியாற்றினார் அவர். கீழவளவு என்னும் இடத்தில் பொது ஊருணியில் தண்ணீர் எடுக்கவந்த தாழ்த்தப்பட்டோர் அச்சுறுத்தி விரட்டப்பட்டனர். ஆட்டுக்குளம் என்னும் ஊரில் பொது ஊருணியில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக சாதி இந்துக்களே பொதுக்கிணற்றில் இரவு நேரங்களில் மண்ணை அள்ளிப் போட்டுக் கலக்கிவைத்தனர். திருவாரூர், நொண்டி கோவில்பட்டி போன்ற ஊர்களில் தண்ணீர் எடுக்கச் சென்ற தாழ்த்தப்பட்டோரின் பானைகள் உடைக்கப்பட்டன. பரளி, மேலவளவு என்னும் இடத்தில் தேநீர்க்கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தம்ளர் முறை கடைபிடிக்கப்பட்டது. எட்டிமங்கலத்திலும் சூரக்குடியிலும் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான விளைநிலங்களில் புகுந்த மேல்சாதிக்காரர்கள் விளைந்திருந்த நெற்பயிர்களை மொத்தமாக அழித்துவிட்டுச் சென்றனர். கிடாரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டவரின் இறுதி ஊர்வலங்கள் பொதுவழியில் செல்லக்கூடாது என்று தடுக்கப்பட்டன. நாவினிப்பட்டி என்னும் கிராமத்தில் கண்ணியமான ஆடைகள் அணிந்து சென்றதைக் கண்டித்து அவர்களுடைய மேலாடையை உருவிவிட்டு, இடுப்புத்துணியோடு செல்லும்படி விரட்டியடிக்கப்பட்டனர். ஆனந்த தீர்த்தர் மேலூரில் பணியாற்றிய ஐந்தாண்டு காலத்தில் இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு சம்பவத்தின் போதும் ஆனந்த தீர்த்தர் தாழ்த்தப்பட்டோர் சார்பில் குரல் கொடுத்தார். மேல்சாதிக்காரர்கள்  செவிமடுக்க மறுத்தபோது காவல் துறையில் புகாரளித்தார். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் போக்கு காட்டியபோது தயக்கமின்றி வழக்குமன்றத்தை நாடினார். சட்டவழியிலான தீர்வுக்காக அவர் நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தொடுத்தார். இவையனைத்தும் உயர்சாதிக்காரர்களையும் காவல்துறையைச் சேர்ந்தவர்களையும் சீற்றம் கொள்ளவைத்தன. அவர்கள் அனைவருமே தருணம் பார்த்து காத்திருந்தார்கள்.

பொது ஊருணியில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும் உரிமையை மறுத்த ஊர்களில் ஒன்று மாங்குளம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆனந்ததீர்த்தர் தாழ்த்தப்பட்டோருக்கு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தார். அதனால் வழக்கமாக தாழ்த்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய உயர்சாதிக்காரர்கள் தந்திரமாக வேலைவாய்ப்புகளை மறுக்கத் தொடங்கினர். இதனால் அவர்கள் வருமானமின்றி வறுமையில் வாடினர். இச்சூழலில் ஒருநாள் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுடன் தேநீர் அருந்துவதற்காகக் கடைக்குச் சென்ற ஆனந்த தீர்த்தரை மேல்சாதிக் காரர்கள் கொடுமையான முறையில் விறகுக்கட்டைகளால் தாக்கினர். அவர் காலில் முறிவு ஏற்பட்டது. அமைதியைக் குலைக்கும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டதாக ஆனந்த தீர்த்தர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. அதுதான் அவலத்தின் உச்சம். ஒருபக்கம் கால்முறிவு. இன்னொரு பக்கம் அவமானப்படுத்தும் வழக்கு. அவருக்குத் துணையாக இருக்கவேண்டிய சேவாசங்கம் 1955இல் அவரை மேலூரிலிருந்து மாற்றல் கொடுத்து மதுரைக்கு வரவழைத்தனர். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தையே முதன்மை இலக்காகக் கொண்ட அவரால் அங்கும் அமைதியாகப் பணிபுரிய முடியவில்லை. எல்லா இடங்களிலும் அவருக்கு இடையூறுகள் முளைத்தபடி இருந்தன. 1958இல் மனம் சலித்து அவர் கேரளத்துக்கே திரும்பிச் சென்றார்.

ஆனந்த தீர்த்தருக்கு நிகழ்ந்த கால்முறிவு என்பது சமூக அளவில் இலட்சியங்களை முடக்கும் ஆணவத்தின் வெளிப்பாடு. ஆணவத்தின் அடிகளோடும் உதைகளோடும் தொடங்கிய ஆனந்த தீர்த்தரின் பொதுவாழ்க்கை அதே வகையான அடிகளோடும் உதைகளோடும் வசைகளோடும் முடிவடைந்தது. தீண்டாமைக்கோடு எந்த அளவுக்கு அழுத்தமாக மக்கள் மனத்தில் விழுந்திருக்கிறது என்பதற்கு ஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை ஒரு பெரிய எடுத்துக்காட்டு. மத நல்லிணக்கத்தைப்பற்றிய கருத்துகளையும் சாதி நல்லிணக்கத்தைப்பற்றிய கருத்துகளையும் மேடைகளில் கேட்டு கைதட்டுவதோடு மக்கள் மறந்துபோய்விடுகிறார்கள் என்பது துரதிருஷ்டமான உண்மை. ஒற்றுமையைப்பற்றி காலம் காலமாக பேசினாலும், ஒற்றுமையின் மீது மனிதர்களுக்கு உண்மையிலேயே நாட்டமில்லையோ என்று நினைக்கும்போது மனம் பதறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காந்திய ஆளுமைகளின் கதைகளை நான் எழுதத் தொடங்கிய சமயத்தில் ஆனந்த தீர்த்தரைப்பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். அதற்கான தகவல்களைத் தேடி பல இடங்களில் அலைந்து, பலரிடம் விசாரித்தும் என்னால் சிற்சில பொது விவரங்களுக்கு அப்பால் பெரிய அளவில் எதையும் திரட்ட முடியவில்லை. பல நூலகங்களில் தேடியபோதும் ஒரு புத்தகம், ஒரு பிரசுரம், ஒரு கட்டுரையைக் கூட  என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறாண்டு காலம் தமிழகத்தில் தங்கி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக சேவையாற்றியவரைப் பற்றி ஒரு தகவலையும் திரட்ட முடியவில்லையே என வருத்தத்தில்   மூழ்கியிருந்தேன். ஒருநாள் தற்செயலாக இணையத்தில் சமூக ஆய்வுக்கட்டுரைகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளும் ஓர் இணைய தளத்தில் அவரைப்பற்றிய ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் கண்டேன். என் கட்டுரையை எழுதி முடிக்கத் தேவையான தகவல்கள் அதில் கிடைத்தன. என்னைப்போலவே இன்னொரு திசையில் ஆனந்த தீர்த்தரைப்பற்றிய தகவல்களுக்காக வரலாற்றுப் பேராசிரியரான இராம். பொன்னுவும் தேடியலைந்திருக்கிறார் என்பதை அவர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகத்தைப் படிக்கும்போது உணரமுடிகிறது. ஒரு வரலாற்றாசிரியருக்கே உரிய வகையில் பல வரலாற்றுத்தகவல்களையும் கேரள வரலாற்று நிகழ்ச்சிகளையும் பத்திரிகைச் செய்திகளையும் ஆய்வு செய்து ஒரு முதன்மைநூலை எழுதியிருக்கிறார். இதன் மூலம் ஆனந்த தீர்த்தரைப்பற்றிய ஒரு முக்கியமான தமிழ் ஆவணத்தை இராம்.பொன்னு உருவாக்கியிருக்கிறார். பாராட்டுக்குரிய அவர் முயற்சிக்கு ஆய்வுலகமும் தமிழ்வாசக உலகமும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றன.

 

(சுவாமி ஆனந்த தீர்த்தர். வாழ்க்கை வரலாறு. இராம்.பொன்னு. சர்வோதய இலக்கியப்பண்ணை, மேலவெளி வீதி, மதுரை – 625001. விலை.100 )

(சர்வோதயம் மலர்கிறது – நவம்பர் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)