Home

Sunday 15 November 2020

க.அருணாசலம் : அமரத்துவமும் மதுரமும்

 


கதராடைகள் மீதான ஈடுபாட்டை வளர்த்தல், தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்துதல், நிதி திரட்டுதல் ஆகிய நோக்கங்களுடன் இருபதுகளின் இறுதியில் காந்தியடிகள் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். அன்று மாலை பொதுமக்களிடையே அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்கு அருகிலிருந்த மேசைமீது கட்டுகட்டாக கதர்த்துணிகள் இருந்தன. கதர் நிதிக்காக கொடுக்கப்பட்ட துணிக்கட்டுகள் அவை. நிகழ்ச்சியின் இறுதியில் ஏலத்துக்கு விடப்பட்டு கிடைக்கும் பணத்தை நிதிக்கணக்கில் சேர்த்துக்கொள்வதற்காக அவை வைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலி வட்டாரத்தில் அறம்வளர்த்தநாதன் பிள்ளை, விஸ்வநாதன் பிள்ளை இருவரும் சிறுவர்சிறுமியருக்கு நூல்நூற்கும் பயிற்சியை அளிக்கும் ஒரு நிலையத்தை நடத்தி வந்தார்கள். அவர்களுடைய சேவையையும் சிறுவர்சிறுமியரின் ஆர்வத்தையும் பற்றி தம் உரையில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் காந்தியடிகள். பதினேழு கெஜம் நீளமுள்ள கதர்த்துணியை நெய்வதற்குத் தேவையான நூலை ஒரு வார காலத்தில் நூற்றுமுடித்த சிறுவர்களின் திறமையை மனமாரப் பாராட்டினார். இதுவரை கதரைப்பற்றி நினைக்காதவர்கள் சிறுவர்கள் வழியில் முயற்சி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கதர் என்பது வெறும் துணியல்ல, வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக நம்மையும் உணரும் எண்ணத்தின் அடையாளமாகும் என்றார். வாடும் மக்களுக்காக உழைக்க நினைப்பவர்கள் முதலில் கதரை உயிருக்குயிராக நேசிக்கவேண்டும் என்று அழுத்தம்திருத்தமாகக் கூறினார்.

அடுத்து, மற்றவர்களைவிட தம்மை மேலானவர்களாக காட்டிக்கொள்ள விழையும் ஆணவம் மிக்க மனப்போக்கின் விளைவாகவே  தீண்டாமை உருவாகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டார் காந்தியடிகள். தீண்டாமை என்பது மிகப்பெரிய பாவம். அனைவரையும் சமமாகக் கருதிப் பழகும் எண்ணத்தை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தீண்டாமையை அழிக்கமுடியும். தீண்டாமையை நாம் கைவிடவில்லை என்றால், அது நஞ்சாக மாறி நம்மையே முதலில் அழித்துவிடும். அடுத்து இந்து மதத்தையே மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கும் என்று எச்சரிக்கும் குரலில் சொன்னார்.

தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வரும் வழியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்டு அசுத்தமாகக் காணப்பட்ட குப்பைக்குவியலைக் கண்டு வேதனையுற்றதாகக் குறிப்பிட்டார் காந்தியடிகள். அசுத்தங்களைச் சுத்தமாக்குவது என்பது இன்னொருவர் வேலை என்னும் அலட்சிய மனப்போக்கே இப்படிப்பட்ட செயல்களுக்கெல்லாம் ஊற்றுக்கண். நம் வீட்டு அசுத்தங்களையும் கழிவுகளையும் இன்னொருவர் வந்து சுத்தம் செய்வார் என்று நினைக்கும் ஆணவத்தின் நீட்சியாகவே இதைப் பார்க்கவேண்டும். இத்தகு மனப்பான்மையே சுத்தப்படுத்துவதற்கென ஒரு வகுப்பையே சமூகத்தில் உருவாக்கிவிட்டது. தீண்டாமை உருவாக இதுவும் ஒரு காரணம். இந்த ஆணவம் முதலில் அகலவேண்டும். நம் வீட்டுக் கழிவை நாமே அகற்றி சுத்தம் செய்வதுதான் தீண்டாமை ஒழிப்பின் முதல் படி.

ஆயிரக்கணக்கான மக்களிடையில் அன்று காந்தியடிகள் ஆற்றிய  உரையைக் கேட்டு ஊக்கம் கொண்டவர்கள் பலர். நாளடைவில் அவர்கள் களப்பணியாளர்களாக மாறி காந்திய இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள். அன்று பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி இளைஞனாக இருந்த .அருணாசலமும் அவர்களில் ஒருவர். இயல்பாகவே தொண்டுள்ளம் கொண்ட அவர் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கைப்பணியென அன்றே வகுத்துக்கொண்டார். ஏற்கனவே விவேகானந்தரின் கருத்துகளில் மனம் பறிகொடுத்து பிரம்மச்சரியமே தனக்குகந்த வாழ்க்கைமுறை என முடிவெடுத்தவர் அவர். அன்று காந்தியடிகளின் உரையைக் கேட்டதைத் தொடர்ந்து தொண்டின் பாதையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் தீர்மானத்துக்கு வந்தார்.

காந்தியடிகளைப் பார்க்கும் முன்பாகவே கல்லூரி ஆசிரியரான சித்தரஞ்சன் ரெட்டி பீட்டர் வழியாகவும் கல்லூரித்தோழரான புதுமைப்பித்தன் வழியாகவும் காந்தியடிகளைப்பற்றிய தகவல்களை அருணாசலம் அறிந்துவைத்திருந்தார். காந்தியடிகளின் எளிமை, அகிம்சை, தென்னாப்பிரிக்க வாழ்க்கை, சத்தியாகிரக வழிமுறை, விடுதலை வேட்கை போன்ற செய்திகளைப்பற்றி அவர்கள் சொல்லும் தகவல்களை ஆர்வத்துடன் கேட்டதுண்டு. அந்தச் சிறுசிறு தகவல்களைக்கொண்டு அவர் தன் மனத்துக்குள் தெளிவில்லாமலேயே தீட்டிவைத்திருந்த கோட்டோவியம், காந்தியடிகளை நேரில் கண்டதும் தானாகவே முழுமையடைந்தது.

அடுத்த வாரம் முதல் தன்னைப்போன்ற ஒத்த எண்ணம் கொண்ட இளைஞர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, நகரையொட்டி இருந்த இடங்களுக்குச் சென்று தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் குவிந்திருந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தத் தொடங்கினார் அருணாசலம். அவரோடு கல்லூரியில் படித்தவர்களும் உறவினர்களும் அவருடைய செயல்பாடுகளை வெறுத்து அருவருப்போடு ஒதுங்கிச் சென்றபோதும் தன் கடமையில் சிறிதும் பின்வாங்காமல் செயல்பட்டார்.

முதலாண்டு பட்டப்படிப்புக்குரிய தேர்வுகள் முடிவடைந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்தருணத்தில், பெங்களூரில் இயங்கிவந்த காந்தி குருகுலம் தன்னைப்போன்ற தொண்டர்களுக்காக ஒரு பயிற்சி முகாமை நடத்துவதாக சில நண்பர்கள் மூலம் அவருக்கு ஒரு செய்தி கிடைத்தது. இன்னும் சிறப்பான வழியில் தொண்டாற்ற முறையான பயிற்சிகள் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் அம்முகாமில் கலந்துகொள்ள அருணாசலம் பெங்களூருக்குச் சென்றார்.

குருகுலத்தின் அமைதியான சூழல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.  பெங்களூரைச் சேர்ந்த ராமச்சந்திரா, ராமா ராவ், விஷ்வானந்தா, புருஷோத்தமன் ஆகிய நான்கு காந்தியர்களால் தொடங்கப்பட்ட ஆசிரமம் அது. காந்தியக்கொள்கைகளின் அடிப்படையில் மக்களிடையில் தன்னலமின்றி சேவையாற்றும் வகையில் இளைஞர்களைத் திரட்டி பயிற்சி கொடுத்து வந்தது குருகுலம். அங்கு பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் நகரச்சேரிகளில் வாழ்ந்துவந்த ஏழை மக்களிடையில் இரவுப்பள்ளி நடத்துதல், நூல்நூற்கும் பயிற்சியை வழங்குதல், விரும்பும் தொழிற்பயிற்சியை அளித்தல், சுற்றுப்புறத் தூய்மையில் ஈடுபடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களுடனான உரையாடல்கள் அருணாசலத்துக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையும் அளித்தன.

ஒவ்வொரு நாளும் பயிற்சிவகுப்புகளில் ஆர்வத்தோடு பங்கேற்றார் அவர். அவரோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த பலரும் அவருக்கு நண்பர்களானார்கள். அவர்களோடு அருணாசலமும் அன்போடு பழகினார். குருகுலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா தமிழ்நாட்டுச் சூழலைப்பற்றி அருணாசலத்திடம் பல கேள்விகள் கேட்டு விளக்கங்கள் பெறுவதில் ஆர்வம் காட்டினார். கல்லூரி நாட்களில் ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் இணைந்து தான் ஆற்றும் சேவைகளைப்பற்றி அவரிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் அருணாசலம்.

அத்தருணத்தில் தண்டி கடற்கரையில் சட்டத்தை மீறி உப்பு எடுத்ததற்காக காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் ஐந்து நாட்கள் மட்டுமே நடைபெற்ற அப்பயிற்சி முகாம் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது. வகுப்புகள்தான் நடக்கவில்லையே தவிர, களச்செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றன. அதனால் தினமும் குருகுலத் தொண்டர்களோடு இணைந்து தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்கும் கூலித்தொழிலாளிகள் வாழும் பகுதிகளுக்கும் சென்று எழுத்துப்பயிற்சி இல்லாதவர்களுக்கு ஆரம்பக்கட்டமாக எழுதக் கற்றுக்கொடுத்தல், எழுத்தறிவு உள்ளவர்களுக்கு படிப்பு சொல்லித் தருதல், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்தல், வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கையை ஊட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

விடுமுறைக்காலம் முடிந்து புறப்படும் தருணத்தில் ராமச்சந்திரா அருணாசலத்தின் தொண்டுள்ளத்தைப் பாராட்டி விடைகொடுத்தார். தொண்டு முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தம்மை எல்லா நிலைகளிலும் தகுதியுள்ளவராக வளர்த்துக்கொள்வது மிகமிக முக்கியமானது என்றும் எதிர்காலத்தில் அது நிச்சயம் நன்மை பயக்குமென்றும் எடுத்துரைத்தார். தொடர்ந்துஎந்தக் காரணத்தை முன்னிட்டும் படிப்பை பாதியில் நிறுத்திவிடவேண்டாம். எப்பாடு பட்டாவது முதுநிலை பட்டப்படிப்பை முடிக்கவேண்டும். அது மிகவும் முக்கியம்என்றும் ஆலோசனை வழங்கினார்.

பாளையங்கோட்டைக்குத் திரும்பிய பிறகு, வழக்கம்போல பகலில் படிப்பு, இரவில் சேவை என்று ஒவ்வொரு நாளையும் பகுத்துக்கொண்டார் அருணாசலம். விடுமுறைக்காலத்தில் வீட்டுக்குக்கூட செல்லாமல் மக்கள் தொண்டிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆண்டு விடுமுறை வரும்போது மட்டும் பெங்களூர் குருகுலத்துக்குச் சென்று தங்குவதை அவர் மனம் விரும்பியது. குருகுல வாசம் பல விதங்களில் தனக்கு உதவியாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்குமென அவர் நம்பினார்.  அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. ராமச்சந்திரா தவிர மேலும் சிலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

முதுநிலை பட்டப்படிப்பு முடிந்ததும் அருணாசலம் உற்சாகத்தோடு குருகுலத்துக்குக் கிளம்பினார். குருகுலத்தில் உள்ள வேலைகளை அங்கிருந்த தொண்டர்களே பகிர்ந்துகொண்டார்கள். அனைவரும் அணிகளாகப் பிரிந்து தூய்மை செய்தல், தோட்டவேலை, கிணற்றில் தண்ணீர் இறைத்தல், கழிப்பறை தூய்மை, சமையல்  பாத்திரங்கள் கழுவுதல் என அனைத்து வேலைகளையும் முறைவைத்து பகிர்ந்துகொண்டார்கள். அவர்களிடையில் சாதிமத வேறுபாடுகளுக்கு இடமில்லை. அனைவரும் ஒரு தாய் மக்களென்றே பழகினார்கள்.

01.06.1934 அன்று காந்தியடிகள் அந்தக் குருகுலத்துக்கு வருகை புரிந்தார். அவரைக் காண்பதற்காக பெங்களூரைச் சேர்ந்தவர்களும் புறநகரச் சேரிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்டோரும் திரண்டு வந்திருந்தனர்.  குருகுலத்துக்கு அருகே நகர நிர்வாகத்தினரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒரு கிணறு வெட்டப்பட்டிருந்தது. குருகுல வளாகத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு பெரிய ஊர்வலமாக குருகுலத்திலிருந்து நெடுஞ்சாலையைக் கடந்து கிணற்றை நோக்கி நடந்தார் காந்தியடிகள். கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த இராட்டை வழியாக குடத்தை கிணற்றில் இறக்கி முதன்முதலாக தண்ணீரை எடுத்தார். இரண்டு கைகளையும் குழிவாக்கிக் குவித்து தண்ணீரை எடுத்து முதலில் அருந்தினார் அவர். பிறகு அருகிலிருந்த மக்கள் அனைவருக்கும் வழங்கினார். சாதி வேறுபாடின்றி அனைவரும் நீரருந்தி தாகம் தணித்துக்கொண்டதும் மக்களிடையில் அவர் உரைநிகழ்த்தினார். தீண்டாமை ஒழியவேண்டியதன் அவசியத்தையும் மேல்கீழ் என்னும் வேறுபாடுகளைப் புறந்தள்ளி, ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளோர் அனைவரையும் தனக்குச் சமமாக நடத்தவேண்டியதன் அவசியத்தையும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அன்று குருகுலத்தில் கிராம சேவை மையமொன்றையும் தொடங்கிவைத்தார் காந்தியடிகள். அதைத் தொடர்ந்து குருகுலத் தொண்டர்களிடையில் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார். குருகுலத்தொண்டர்களுடைய தொண்டுகள் நகரச்சேரிகளோடு தேங்கி நின்றுவிடக்கூடாது. நகரத்துக்கு வெகுதொலைவில் உள்ள சின்னச்சின்ன கிராமங்களுக்கும் அவர்களுடைய சேவை கிடைக்கவேண்டும். நம்முடைய நிர்மாணப்பணிகள் கிராமங்களில்தான் முக்கியமாக நிகழவேண்டும். கல்வியறிவும் சுற்றுப்புறத்தூய்மை பற்றிய விழிப்புணர்வும் அங்கு பெருகவேண்டும். மேலும் கூட்டுறவு முயற்சிகள் அங்கு உருவாக நாம் துணைசெய்யவேண்டும் என்று கூறி முடித்தார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் அனைவருடைய நெஞ்சிலும் ஆழமாகப் பதிந்தது.

அன்று இரவு ஆசிரமத்திலேயே தங்கினார் காந்தியடிகள். இரவு வேளையில் ஓய்வாக ஒவ்வொரு தொண்டரைப்பற்றியும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அருணாசலமும் தன்னைப்பற்றி அவரிடம் தெரிவித்தார். அவர் தமிழகத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னதும் காந்தியடிகள்கன்னடமும் தெலுங்கும் அதிக அளவில் பேசக்கூடிய இந்த இடத்தில். அந்த மொழிகளை அறியாமல் முழு ஆற்றலுடன் மக்களிடையில் சேவை செய்வதில் நிறைய குழப்பங்கள் உருவாகவே வாய்ப்புண்டு. அதனால் நீங்கள் தமிழகத்துக்குச் சென்று சேவை செய்வதே பொருத்தமாக இருக்கும்என்று பொறுமையாக எடுத்துரைத்தார். அருணாசலமும் அதை ஏற்றுக்கொண்டார்.

மறுநாளே குருகுலத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டு திருச்செங்கோடு ஆசிரமத்துக்குச் சென்று இராஜாஜியைச் சந்தித்தார். “இங்கே ஆசிரமத்தில் போதுமான தொண்டர்கள் இருக்கிறார்கள். உன்னைப்போன்ற இளைஞர்களின் சேவை தென்மாவட்டங்களுக்குத்தான் அவசியம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் மதுரைக்குச் சென்று என்.எம்.ஆர்.சுப்பராமனையும் வைத்தியநாதையரையும் பாருங்கள்என்று சொல்லி அருணாசலத்தை மதுரைக்கு அனுப்பிவைத்தார் இராஜாஜி.

மதுரைக்கு வந்து என்.எம்.ஆர்.சுப்பராமனைச் சந்தித்து வணங்கினார் அருணாசலம். விவேகானந்தரின் வழியில் பிரம்மச்சரிய விரதமேற்று, காந்திய வழியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவையாற்ற விரும்பி பெங்களூர் குருகுலத்தில் இணைந்து தொண்டாற்றிக்கொண்டிருந்ததாகவும் குருகுலத்துக்கு வந்த காந்தியடிகள் தமிழ்நாட்டுக்குச் சென்று சேவை செய்யும்படி அனுப்பிவைத்ததாகவும் அவரிடம் தெரிவித்தார். அருணாசலத்தின் எளிய கதராடைக்கோலத்தைக் கண்டதுமே  அவர்மீது நம்பிக்கை கொண்டார் சுப்பராமன். ஏற்கனவே மதுரைப்பகுதியில் அரிஜன சேவையில் ஈடுபட்டு வந்த இராமாச்சாரி என்பவரோடு அருணாசலத்தையும் சேர்ந்துகொள்ளச் செய்தார். இராமாச்சாரியுடன் அருணாசலமும் இணைந்து தொண்டாற்றத் தொடங்கினார்.

மதுரையில் அருணாசலத்துடைய அண்ணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். குடும்பத்துடன் அவர் மதுரையிலேயே தங்கியிருந்தார். ஆனால் அருணாசலம் அண்ணனுடைய வீட்டுக்குச் சென்று தங்கியிருக்க விரும்பவில்லை. யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என்று நினைத்தார் அவர். அதனால் ஒவ்வொரு இரவும் கண்ணுக்குத் தென்படும் ஏதேனும் ஒரு இடத்தில் உறங்கி பொழுதைக் கழித்தார். எங்கேனும் ஓரிடத்தில் நிலையாகத் தங்கப் பொருத்தமான இடம்  அவருக்குக் கிடைக்கவில்லை.  

வைகைக்கரை ஓரமாக மண்டகப்படி செய்வதற்காக பல மண்டபங்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன. ஏதேனும் ஒரு மண்டபத்தில் தங்கிக்கொள்ளலாம் என அவர் நினைத்தார். ஆனால் சில உரிமையாளர்கள் அரிஜன சேவை செய்பவர்களை மண்டபத்தில் தங்க அனுமதிக்கமுடியாது என மறுத்துவிட்டனர். யாரோ ஒருவர் மட்டும் திருவிழாக்காலத்தில் மண்டபத்தை சுத்தமாகக் கழுவி வெள்ளையடித்து புதுப்பித்துத் தரவேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி கொடுத்தார். பயன்பாட்டில் இல்லாததால் அழுக்கும் குப்பையுமாக இருந்த மண்டபத்தை சுத்தப்படுத்திவிட்டு, அங்கு குடியேறினார் அருணாசலம். அப்போது அரிஜன சங்கத் தலைவராக இருந்தவர் வைத்தியநாதையர். அருணாசலத்தின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கவனித்த வைத்தியநாதையர் அவரை அரிஜன சேவை அமைப்பாளர்களில் ஒருவராக நியமித்தார்.

தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் சுற்றுப்புறத்தூய்மையில் ஈடுபடுவதும் மக்களிடையே தூய்மையைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதும் சிறுவர்சிறுமியர்க்கு கல்வியறிவு புகட்டுவதும் அருணாசலத்தின் முக்கியப் பணிகளாக இருந்தன. பகல்முழுதும் அங்கேயே அவர் நடமாடிக்கொண்டிருந்ததால் பொதுமக்களிடையே அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். அருணாசலமும் எல்லோரோடும் நட்புணர்வுடன் பழகினார். ஒருமுறை அவர் தாழ்த்தப்பட்டவர் ஒருவரிடம் வெள்ளை வேட்டியும் மேலாடையும் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்தார். குளித்துவிட்டு புத்தாடை அணிந்துகொண்டு அருணாசலத்தின் முன்னால் வந்து நின்றார் அவர். அவருடைய தோற்றம் அருணாசலத்துக்கு மகிழ்ச்சியை அளித்தது. புதிதாக ஒரு ஜோடி காலணிகளையும் வாங்கிக் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்தார். பிறகு விடைகொடுத்து அனுப்பினார்.

ஒருசில மணிநேரங்களிலேயே அவர் அலங்கோலமாகத் திரும்பி வந்து நின்றதைப் பார்த்து அருணாசலம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.  வேட்டி செருப்போடு அவர் தெருவில் நடந்து சென்றபோது ஒருசிலர் மட்டுமே பார்த்தும் பாராததுபோல அமைதியாக இருந்தனர் என்றும் ஒருசிலர் வாய்க்கு வந்தபடி வசைபாடி அனுப்பிவைத்தனர் என்றும் அம்பலக்காரர் தெரு வழியாகச் சென்றபோது அங்கிருந்தவர்கள் அவரைக் கடுமையாக அடித்து உதைத்துவிட்டார்கள் என்றும் தொடர்ந்து கேவலப்படுத்தும் விதமாக அவர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அனுப்பிவைத்தனர் என்றும் குனிந்த தலையுடன் சொன்னார். அதைக் கேட்டு பதற்றமுற்ற அருணாசலம் வேகமாகச் சென்று  வைத்தியநாதையரிடம் செய்தியைத் தெரிவித்தார். அவர் உடனே வெகுண்டெழுந்து அவமானத்துக்குள்ளான நண்பரையும் அருணாசலத்தையும் அழைத்துக்கொண்டு அந்தத் தெருவுக்கே சென்று அங்கிருந்த மேல்சாதிக்காரர்களிடம் வாதாடினார். அவர்கள் உடனே அவமானப்படுத்தியவரை அழைத்துவரச் செய்து விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டு அவருக்கு அபராதம் விதித்தனர்.

அப்போது மதுரைக்கு வடக்கே அழகர்கோவில் சாலையில் இரட்சண்யபுரம் என்னும் கிறித்துவ சேவை அமைப்பொன்று இயங்கிவந்தது. அதில் மனோன்மணி என்பவர் பணியாற்றிவந்தார். சென்னையில் அவர் ஒரு கல்லூரிப்பேராசிரியராக இருந்தவர். ஆயினும் எளிய ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்ற விருப்பத்தால் உந்தப்பெற்று பிரம்மச்சரிய விரதமேற்று இரட்சண்யபுரத்தின் சேவை நிலையத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். அவருடைய வரிந்தேற்ற வறுமை நிலை அங்கிருந்தோருக்கு வியப்பை அளித்தது.

ஒருநாள் தற்செயலாக தொண்டாற்றச் சென்ற இடத்தில் மனோன்மணியும் அருணாசலமும் சந்தித்துக்கொண்டனர். வரிந்தேற்ற வறுமை என்னும் கொள்கையும் தொண்டுணர்வும் இருவருக்கும் பொதுகுணங்களாக இருந்தன. இருவருமே ஒருவரை ஒருவர் விரும்பினர். இருவருமே பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர்கள். இருவரும் இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இணைந்து வாழமுடியும் என நம்பினர். பிரம்மச்சரியம் ஏற்பவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழவேண்டும் என்பதை காந்தியம் ஏற்றுக்கொள்வதில்லை. பிரம்மச்சரியம் என்பது சமுதாய சேவைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் ஆற்றலைக் கொண்டதென்பதே காந்தியப்பார்வை. இருவரும் தாம் ஏற்றுக்கொண்ட பிரம்மச்சரியத்துக்கு ஊறு நேராதவண்ணம் இணைந்து செயலாற்றலாம் என்னும் செயல்திட்டப்படி மதமாற்றத்துக்கு இடமின்றி திருமணம் புரிந்துகொண்டனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரியநாயகன் பாளையத்தில் அவிநாசிலிங்கம் செட்டியாரின் ஆலோசனைப்படி கிராமிய நிர்மாணப்பணிகளில் தொண்டாற்றுவதற்காக அருணாசலத்தை அனுப்பிவைத்தார் சுப்பராமன். அவரும் பெரியநாயகன் பாளையத்தைச் சேர்ந்த சில இளைஞர்களோடு இணைந்து கிராம சேவைகளில் ஈடுபட்டார். கல்விப்பயிற்சி இல்லாத சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் எழுத்தறிவூட்டுவதே அவருடைய முக்கியமான பணியாக இருந்தது. அருணாசலதிடம் காணப்பட்ட கல்வி சார்ந்த ஈடுபாட்டைக் கண்ட அவிநாசிலிங்கம் காந்தியடிகளின் புதிய கல்விக்கொள்கையின்படி உருவாக்கப்பட்ட அடிப்படைக்கல்வியில் பயிற்சி பெற்று வருவதற்காக அருணாசலத்தை சேவாகிராம ஆசிரமத்துக்கு அனுப்பிவைத்தார்.

அடிப்படைக்கல்வி என்பது காந்தியடிகள் உருவாக்கிய கல்விக்கொள்கை. அதை அவர் நயி தாலிம் என்று குறிப்பிட்டார்.  இது அறிவுத்துறையையும் வேலைகளையும் வேறுவேறு என பிரித்துப் பார்க்காமல் இரண்டும் ஒன்றே என்னும் எண்ணத்தை விதைக்கிறது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய காலனியக் கல்விமுறை இந்தியக் குழந்தைகளை இந்தியப்பண்பாட்டிலிருந்து முற்றிலும் துண்டிக்க முனைவதையும் வேலையை ஈட்டித்தரும் ஒரு நல்வாய்ப்பாகவே கல்வியைக் கருதும் பார்வையை அளிப்பதையும் காந்தியடிகள் உணர்ந்தார். இவ்விரண்டு அம்சங்களுமே எதிர்காலத்தில் இந்தியக் குழந்தைகளுக்கு தீங்கு  விளைவிக்கும் என நினைத்து அஞ்சினார். வேலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எண்ணப்போக்கு பெருகப்பெருக, கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் சமூகக்கட்டமைப்பிலிருந்து அந்நியப்பட்டுவிடுவார்கள் என்றும் அவர் கவலைப்பட்டார்.  உடலுழைப்புசார்ந்த துறைகளையும் உழைப்பாளர்களையும் கல்வியறிவு பெற்றவர்கள் வெறுத்து விலகி நின்று பார்க்கத் தொடங்கும் போக்கு என்பது நம் நாட்டுக்கு மிகப்பெரிய பேரழிவையே கொண்டுவரும் என்றும் அவர் நினைத்தார். கல்வி என்பது அடிப்படையில் ஒரு மனிதனிடத்தில் அற உணர்ச்சியை வளர்த்தெடுக்கும் கருவியாக இருக்கவேண்டும் என்றும் எல்லா விதங்களிலும் அவனை முழுமைப்படுத்தும் பேராற்றலாக விளங்கவேண்டும் என நினைத்தார் காந்தியடிகள். அந்த நோக்கங்களையே புதிய கல்விக்கொள்கையாகக் கொண்டு அவர் அடிப்படைக்கல்வியையும் அதற்கான பாடத்திட்டங்களையும் உருவாக்கினார்.

பதின்மூன்று மாத காலம் சேவாகிராமத்தில் அப்பயிற்சி நடைபெற்றது. அதை முடித்துக்கொண்டு ஊர் திரும்பினார் அருணாசலம். பெரியநாயகன் பாளையத்தின் பள்ளியை ஆதாரப்பள்ளியாக நடத்திக்கொள்ள, வட்டார வாரியத்தின் தலைவரான வெள்ளியங்கிரி கவுண்டரிடமிருந்து இசைவைப் பெற்றார் அருணாசலம். அங்கு செயல்பட்டு வந்த அங்கப்பச் செட்டியார் அறக்கட்டளை அளித்த உதவியால் பள்ளி இயங்குவதற்குத் தேவையான கட்டடத்தைக் கட்டி முடித்து, பள்ளிக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கினார். வேலையோடு சேர்த்து கல்வியும் புகட்டப்படும் படிப்புமுறை என்பதால் முதலில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆயினும் குறைவான மாணவர்களோடு பள்ளி இயங்கத் தொடங்கியது. அங்கு படித்து வந்த மாணவர்களின் உயர்வான கல்வித்தரம், நல்ல பழக்கவழக்கங்கள், பண்புநலன்கள், சுற்றுப்புறத்தூய்மை அனைத்தையும் பார்த்தபிறகு படிப்படியாக மக்கள் மனம் மாறினர். மெல்ல மெல்ல ஆரம்பக்கட்ட தயக்கங்களை உதறிவிட்டு தம் பிள்ளைகளையும் அழைத்துவந்து அந்தப் பள்ளியில் சேர்த்தனர்.

ஒரு பள்ளியில் கல்வி போதிப்பவர் முறையாக ஆசிரியர் பயிற்சிப்படிப்பை முடித்திருக்கவேண்டும் என அரசு ஒரு விதியைக் கொண்டுவந்தது. அதனால் வேறு வழியின்றி 1939இல் சென்னை மெஸ்டன் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதே துறையில் அயோவா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மேல்பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, அதைப் பயன்படுத்திக்கொண்டு அருணாசலம் அமெரிக்கா சென்று படித்துவிட்டுத் திரும்பினார். கோவைக்குத் திரும்பியதும் காந்தி ஆதாரக் கல்விப்பயிற்சிப்பள்ளியில் முதலில் ஆசிரியராகவும் பிறகு தலைமையாசிரியராகவும் 1949 வரைக்கும்  பணியாற்றினார். அதையடுத்து ராமகிருஷ்ணா வித்யாலய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றச் சென்றார். தொடர்ந்து அதே கல்லூரியின் முதல்வராகவும் நான்காண்டு காலம் பணியாற்றினார்.

1956இல் வினோபா தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அருணாசலம் கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி சர்வோதயப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். சிறிது காலம் தமிழக அரசு அமைத்த பூதான வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பிறகு கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு நிர்மாணப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். நூல்நூற்பதும் கதர் நெய்வதும் அவருடைய முக்கிய ஆர்வங்களாக இருந்தன. பம்பாயைச் சேர்ந்த கதர், கிராமத்தொழில் அமைப்பின் உதவியோடு கிராமத்தொழில்கள் விரிவாக்க அலுவலர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கும் விதமாக காதி வித்யாலயத்தை அருணாசலம்  உருவாக்கினார். இதனால் இங்கிருந்த உற்பத்தி நிலையங்களுக்கும் அந்த அமைப்பின் உதவி கிடைத்தது. கதர்த்துறையில் அவர் ஆற்றிய தொண்டுக்காக 1974இல் அவருக்கு காதி ஆச்சார்ய விருது வழங்கப்பட்டது

1975இல் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் முன்னின்று நடத்திய தேசிய அளவிலான போராட்டத்தில் சத்தியாகிரக வழியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அருணாசலம். விடுதலைக்குப் பிறகு மீண்டும் கதர்த்தொண்டில் ஈடுபட்டார். காதி கிராமத்தொழில் கமிஷனில் உறுப்பினராகவும் அகில இந்திய காந்தி நினைவு நிதியின் தலவராகவும் அருணாசலம் ஆற்றிய பணிகள் முக்கியமானவை.

1986 இல் அருணாசலத்தின் மனைவி மறைந்தார். இறக்கும் தருணத்தில் கூட தன் பிரிவால் தன் கணவர் மேற்கொண்டிருக்கும் சமுதாயப்பணிகளில் ஒருபோதும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே அவர் பிரார்த்தனையாக இருந்தது. அருணாசலமும் ஓய்வை நாடாத உழைப்பாளியாகவே இருந்தார். அதே ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் நிகழ்ந்தபோது முதுமை படிந்த 76வது வயதிலும் அம்மாநிலத்தில் அமைதி நிலவும்பொருட்டு தொண்டர்களோடு அமைதிப் பாதயாத்திரையை மேற்கொண்டார். அவருடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி காந்திகிராம் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தையும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த விஷ்வ உந்நயன சம்ஸத் நிறுவனம் அவருக்கு மகரிஷி என்னும் பட்டத்தையும் அளித்து கெளரவித்தன.

குடும்பப்பங்காக தனக்குக் கிடைத்த வீட்டையும் தன் மனைவிக்குச் சொந்தமான வீட்டையும் விற்று கிடைத்த பணத்தில் சின்னஒவுலாபுரம் என்னும் ஊரில் ஒரு வீட்டைக் கட்டியெழுப்பி தன் தந்தையின் நினைவாக கந்தசாமிப்பிள்ளை அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி நூற்புப்பணிக்காக சர்வோதய நூற்பு நிலையத்துக்கு அந்த வீட்டை அன்பளிப்பாக அளித்துவிட்டார். அருணாசலம் 85 வயதை நிறைவுசெய்தபோது, அவரைப் பாராட்டும் விதமாக எடுக்கப்பட்ட விழாவில் தொண்டர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு ஒரு பணமுடிப்பு நன்கொடையாக அளித்தனர். ஆனால், அதே நிகழ்ச்சியில் அந்தத் தொகையை மூலதனமாகக்கொண்டு காந்தியப்பணிகளுக்கு உதவும்படி அமைப்பாளர்களிடமேயே அருணாசலம் அன்பளிப்பாக அளித்துவிட்டார்.

ஒருமுறை இமயமலை அடிவாரத்தில் கூலு பள்ளத்தாக்கில் செயல்பட்டுவரும் சுவாமி ஷியாம் ஆசிரமத்துக்கு அருணாசலம் சென்றிருந்தார். அங்கு அமரம் ஹம் மதுரம் ஹம் என்னும் மரணமில்லாப் பெருவாழ்வைச் சுட்டிக்காட்டும் மந்திரச்சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைக் கேட்டார். மனிதகுலத்துக்கு தன்னல நோக்கமின்றி ஒருவர் ஆற்றும் சேவையே மரணமிலாப் பெருவாழ்வுக்கான வழி என்பது அருணாசலம் தன் சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் அறிந்துகொண்ட பேருண்மை. தான் அடைந்த அனுபவத்தின் உண்மையையே சாரமாக்கி அந்தச் சொல் ஒலிப்பதை அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்தச் சொல் மிகவும் ஈர்ப்புடையதாக இருந்தது. அதனால் அவரும் அதே சொல்லை தன்னைச் சூழ இருந்தவர்களிடம் தெரிவித்தார்.

ஒரு சொல்லின் ஆழத்தை, நாம் ஒருபோதும் ஒரு சொல்லாக மட்டுமே அறிந்துவிட முடியாது. அனுபவத்தின் வழியாகமட்டுமே அச்சாரத்தின் புள்ளியைத் தொட்டறிவது சாத்தியமாகக்கூடும். அந்த வழியே அருணாசலத்தின் வழி.

(சர்வோதயம் மலர்கிறது – நவம்பர் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )