Home

Wednesday 25 November 2020

பூக்காத மரம் - சிறுகதை

 

ஜஸ்ட் டொன்டி ஃபைவ் ருப்பீஸ்தான் சார். ஒரே ஒரு க்ரூப் போட்டா எடுத்துக்குங்க சார். லால்பாக நீங்க ஒரு சுத்து சுத்திட்டு வரதுக்குள்ள நான் ப்ரிண்ட் போட்டு குடுத்துருவன் சார். போஸ்ட் கார்ட் சைஸ் கலர் ப்ரின்ட்என்றேன். இன்று தென்பட்ட முதல் வாடிக்கை. பத்து பன்னிரண்டு பேர் கொண்ட அந்தக் கூட்டத்தை விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது. “இங்க பாருங்க சார். இது பூக்காத மரம். எந்தப் பருவத்துலயும் இது பூத்ததே இல்ல. ரொம்ப அபூர்வமான மரம் சார். இங்க வரவங்க எல்லாருமே இதுக்கு பக்கத்துல நின்னு படம் எடுத்துக்குவாங்க சார். வாங்க சார் வாங்க”. அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பி ஆர்வமூட்டுவதற்காகச் சொன்னேன்.

நடந்துகொண்டிருந்த கூட்டத்திலிருந்த ஒருவர் நின்று ஏளனமான சிரிப்புடன்என்னங்க தம்பி, கத உடறதுக்கும் ஒரு அளவில்லயா? பூக்காத மரம் காய்க்காத மரம்னு சொல்றிங்க? வெளியூருக்காரங்கன்னு சொன்னா காதுல பூ சுத்தலாம்னு பாக்கறிங்களா? எங்ககிட்ட நடக்குமா இது?” என்றார்.

சார், சத்தியமா இது பூக்காத மரம்தான் சார். நான் சொல்றத நம்புங்க. வேணும்ன்னா கிட்ட வந்து பாருங்க சார். அரசாங்கமே மரத்துல எழுதி ஒட்டி வச்சிருக்குது பாருங்க.”

நான் வேகமாக நடந்து சென்று மரத்தில் ஒட்டவைக்கப்பட்டிருந்த அறிவிப்புத்தாளைத் தொட்டுக் காட்டினேன். அதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறவர்கள்போல அவரும் அவருடைய குடும்பத்தாரும் பின்தொடர்ந்து வந்து அதைப் படித்தார்கள்.

ஒரு பூ இல்ல, ஒரு பிஞ்சி இல்ல. எரநூறு வருஷமா அப்படியே சின்னப்புள்ளயாட்டம் இந்த மரம் நின்னிட்டிருக்குது சார். அந்தக் காலத்துல திப்பு சுல்தானுக்கு கொழந்த பொறந்த சமயத்துல அதும் ஞாபகமா வச்ச மரம்னு சொல்வாங்க. இந்த லால்பாகே அவுங்கப்பா ஹைதரலி உருவாக்கனதுதான்.”

நான் அடுக்கிக்கொண்டே போனேன். கதை தூண்டிய ஆர்வத்தால் அவர்கள் நின்றுவிட்டார்கள். இரண்டு சிறுமிகள் அந்த மரத்தைச் சுற்றி ஓடி விளையாடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு சிறுமி எக்கி அதன் கிளையைப் பற்ற முயற்சி செய்தாள்.

என்ன மரம் இது?”

மாமரம்தான் சார். எலைய பாத்தா தெரியும் பாருங்க. ஆனா வச்ச நாள்லேருந்து பூத்ததில்ல, காய்ச்சதில்ல. அதிசயமான மரம்.”

தாழ்வாகப் பிரிந்து சென்ற கிளையிலிருந்து ஒரு இலையைப் பறித்தெடுத்து பார்த்துவிட்டு மற்றவர்களிடம் கொடுத்தார் ஒருவர். “சார். ஜஸ்ட் டொன்டி ஃபைவ் ருப்பீஸ்தான். இந்த மரத்துக்கு முன்னால நின்னு ஒரு க்ரூப் போட்டா எடுத்துக்கிட்டா அம்சமா இருக்கும் சார். ஒரு ஞாபகச்சின்னம் மாதிரி வச்சிக்கலாம்என்று நான் மீண்டும் என் பல்லவியை ஆரம்பித்தேன்.

அமைதியாக நின்றிருந்த கூட்டத்தில் ஒரு இளைஞனின் கண்களில் ஆர்வம் பளிச்சிட்டதைப் பார்த்தேன். நான் உடனடியாக அவனிடம் மீண்டும்டொன்டி பைவ்தான் சார். போஸ்ட் கார்ட் சைஸ். வாங்க சார்என்றேன்.

அவன் உடனே டொன்டி ஃபைவ் அதிகம். டொன்டி .கே.யா?” என்றான்.

சார், கலர் ப்ரிண்ட் சார். செலவு போக ஒரு படத்துக்கு எனக்கு அஞ்சி ரூபாதான் நிக்கும் சார். டெண்டி டூவாச்சிம் குடுங்க சார்.”

அதெல்லாம் எனக்குத் தெரியாது. டொன்டி ஓகேன்னா எடுங்க. இல்லைன்னா விடுங்கஎன்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். எனக்கு அவர்களை விட மனமில்லை. இன்று ஒரு நானூறு ஐநூறாவது கிடைக்கவேண்டும். சாயங்காலம் தேன்மொழிக்கு ஆஸ்பத்திரியில் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும். பிரசவ நேரம்.

சரி சார். நீங்கதான் முதல் கஸ்டமர். வாங்க சார். விடறதுக்கு மனசில்ல. வந்து நில்லுங்க சார்என்றேன். அந்த இளைஞன் ஆர்வத்துடன் தன் மனைவியின் கையைப் பற்றி இழுத்தபடி முன்னால் வந்தான். அவனுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவர்எதுக்குடா கணேசா இதெல்லாம்? வீண்செலவுஎன்று அலுத்துக்கொண்டார்.

இருக்கட்டும் வாங்கண்ணே. ஒரு ஞாபகமா ஆல்பத்துல வச்சிக்கலாம். 1997ல் பெங்களூர் சுற்றுலாவில் எடுக்கப்பட்ட படம்னு போட்டா பின்னால எழுதி வச்சிட்டா அப்படியே பொட்டியில புதையல்மாதிரி கெடக்கும்ண்ணே. ஒரு இருபத்தஞ்சி வருஷம் கழிச்சி பாத்தம்னு வைங்க, சும்மா கிக்கா இருக்கும்.”

படத்துல என்னடா கிக்கு. சுக்கு. சும்மா கிறுக்குமாதிரி பேசாத?”

இருபத்தஞ்சி வருஷம் கழிச்சி ஒடம்பு தளந்து, தலமுடி நரச்சி வெறும் குச்சிமாதிரி நாம இருப்பம்ண்ணே. ஆனா இந்தப் படம் மட்டும் அப்படியே இன்னைக்கு மாதிரியே இளமயா இருக்கும்.”

ஆள மயக்கறமாதிரி எதயாவது சொல்லுடா. எப்ப பாரு ஒனக்கு இதே வேல

அலுத்துக்கொண்டே எல்லோரும் மரத்தின் முன்னால் வந்து நின்றார்கள். இரண்டு பெண்கள் கைப்பையிலிருந்து உள்ளங்கை அளவிலான கண்ணாடியை எடுத்து கலைந்திருந்த தலைமுடியை சரிப்படுத்திக்கொண்டார்கள். முகங்கள் மீது நிழல் படிந்துவிடாமலும் போதுமான வெளிச்சம் படிந்திருக்கும் வகையிலும் ஒரு தோதான கோணத்தில் அவர்களை நிற்கவைக்க சிறிது நேரம் பிடித்தது.

ஏன் தம்பி, எங்கள வச்சி நீங்க என்னா சினிமாவா எடுக்கறீங்க? இப்பிடி திரும்பு அப்பிடி திரும்புனு மாத்திமாத்தி சொல்றீங்க?”

அப்பிடி இல்ல மேடம். படத்துல ஒங்க முகம் தெளிவா தெரிந்தாதான பாக்கும்போது திருப்தியா இருக்கும்…”

கேமிரா கோணத்தை மாற்றி சோதித்துக்கொண்டிருந்த போதுதான் சக்கரநாற்காலியுடன் அவர்களோடு சேர்ந்து வந்த ஒரு பெண்மணி மிகமிக விலகி நிற்பது கேமிரா வழியாகத் தெரிந்தது. ஒருவேளை அவள் மெதுவாக வந்து சேரக்கூடுமோ என்ற தயக்கத்துடன் சட்டென்று கேமிராவைத் தாழ்த்திவிட்டு நின்றேன். ஆனால் அந்தப் பெண்மணி என்னைக் கவனிக்கவே இல்லை. பாதையோரமாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுமியின் தோளைப் பற்றியிருந்தது அவள் கை.

அவுங்க வரலையா? அவுங்க அங்கயே நிக்கறாங்கஎன்று அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி கேட்டேன்.

உடனே ஒருவர் எரிச்சலோடு வந்து நிக்கறவங்கள எடுக்காம அவுங்க ஏன் வரலை இவுங்க ஏன் வரலைன்னு கேள்வியெல்லாம்  எதுக்குங்க? பேசாம ஒங்க வேலய பாருங்கஎன்றார்.

அந்தக் குரல் என்னுடைய பிழையை உணர்த்தினாலும், எனக்கு அந்த விலகல் விசித்திரமாக இருந்தது.

முழு மரத்தையும் பின்னணியாக வைத்து நல்லதொரு கோணத்தில் அந்தப் படத்தை எடுத்தேன்.

என்னங்க அதுக்குள்ள எடுத்துட்டிங்களா? ஸ்மைல் ப்ளீஸ்னு சொல்லவே இல்லயே?”

சிரிக்கத் தெரியாதவங்களுக்குத்தான் அத சொல்லணும். நீங்க எல்லாருமே சிரிச்ச முகமா இருக்கீங்க. படத்துக்குன்னு தனியா ஸ்மைல் பண்ணா ரொம்ப செயற்கையா போயிடும்.”

அவர்கள் கலையத் தொடங்கிய கணத்தில்சார் சார் ஒரு நிமிஷம்என்று சொல்லி நிறுத்தினேன்.

ஒக்காந்த மாதிரி ஒன்னு எடுக்கறேன் சார். சூப்பரா இருக்கும். நின்ன கோலத்துல ஒரு படம். உக்காந்த கோலத்துல ஒரு படம். ரெண்டயும் ஃப்ரேம் போட்டு வச்சிங்கன்னா அருமையா இருக்கும் சார்

படம் நல்லா இருக்குதோ இல்லயோ, உங்க பேச்சு நல்லா இருக்குது. சரி எடுங்க எடுங்க. நல்லா இருக்கணும். நல்லா இருந்தாதான் காச குடுப்பம். இல்லைன்னா இல்ல.”

அவர்கள் கலைந்து உட்காரத் தொடங்கினார்கள்.

சார், ஜென்ட்ஸ் ஒரு வரிசை, லேடீஸ் ஒரு வரிசை, குழந்தைங்க ஒரு வரிசைன்னு ஒருத்தவங்க பின்னால ஒருத்தவங்கன்னு மூனு வரிசையா உக்காருங்க சார். படம் அருமையா வரும்…”

படத்தை எடுத்துமுடித்ததும் பின்பக்கத்தைத் தட்டியவாறே ஒவ்வொருவராக எழுந்தார்கள்.

நான் அந்தச் சக்கரநாற்காலியைப் பிடித்திருக்கும் அம்மாவைப் பார்த்தேன். சிறுமியின் தலையில் வைக்கப்பட்டிருந்த ரோஜாப்பூவை சரிப்படுத்தியபடி நின்றிருந்தாள். இந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

எப்ப ரெடியாவுங்க தம்பி?”

சார், இப்ப மணி பத்தர ஆவுது. லால்பாக முழுசா ஒரு ரெளண்ட் அடிக்க ரெண்டு மணி நேரமாவும் சார். எரநூறு முந்நூறு ஏக்கர் எடம் சார். பன்னெண்டரைக்கெல்லாம் வாங்க சார். நான் இந்த மரத்தடியிலதான் நின்னிட்டிருப்பன்.”

இங்க என்னென்ன பாக்கலாம்?” சற்றே வயதான பெண்மணி கேட்டாள்.

நேரா போனிங்கன்னா ஒரு ஏரி வரும் மேடம். மிஸ் பண்ணாம பாருங்க. விதவிதமான கொக்குங்க அங்க இருக்குது. அப்படியே வந்திங்கன்னா ரோஸ் கார்டன். சுதந்திரநாள் அன்னைக்கு வச்ச மலர்க்கண்காட்சி இன்னும் அப்பிடியே வச்சிருக்காங்க. அதகூட பாக்கலாம்.”

அவ்ளோதானா?”

இங்க மரங்கள்தான் முக்கியம் மேடம். இந்தியாவுல இருக்கிற முக்கியமான மரங்கள் வகையில ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு சேம்பிள் மரம் இங்க இருக்குது. நின்னு நிதானமா பாத்தா சாய்ங்காலம் வரைக்கும் கூட பாக்கலாம்.”

சரி வாடி நேரமாவுது, போவலாம்என்றபடி என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெண்மணியின் தோளைத் தொட்டு சொன்னபடி காற்றில் கலைந்த புடவை மடிப்புகளை சீரமைத்துக்கொண்டாள் மற்றொருத்தி. அவள் உதடுகள் தடித்திருந்தன.

எல்லோரும் கலைந்த நேரத்தில்எங்கள மட்டும் ஒரு படம் எடுக்கறீங்களா?” என்று என்னைக் கேட்டான் இளைஞன். அவன்தான் என்னிடம் முதன்முதலாகப் பேசியவன். வெட்கப்படும் தன் மனைவியை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தினான்.

ஒன்னு என்னங்க சார். நூறு எடுக்கறேன். அதானே என் வேல. வந்து நில்லுங்கஎன்று உற்சாகப்படுத்தினேன். அக்கணமே அவர்கள் எல்லாக் காலத்திலும் பார்த்துப்பார்த்து பரவசமடையக்கூடிய அளவுக்கு அந்தப் படத்தை எடுத்துக் கொடுக்கவேண்டும் என்று முடிவுகட்டினேன். அழகான கோணம். அழகான பின்னணி. அளவான வெளிச்சம். அதற்காக கேமிரா வழியாக அவர்களைப் பார்த்தபடி நிற்கவேண்டிய புள்ளியைத் தீர்மானித்து நகர்த்திக்கொண்டிருந்தேன். அப்போது சற்றே வேகமாக வீசிய காற்றில் அவள் தலைமுடி கலைந்து அலைந்தது. அலையும் முடிக்கற்றையை அவள் தடுத்து நிறுத்த கைவிரல்களை தலையருகில் கொண்டு சென்றாள்.  இளைஞன் புன்னகையோடுஇருக்கட்டும் விடு விமலா. இயற்கையா இருக்கட்டும். அப்பதான் நல்லா இருக்கும்என்றான். அவனை சற்றே தலையுயர்த்திப் பார்க்கும் அவள் முகம். அவளை காதலுடன் குனிந்து பார்க்கும் அவன் முகம். அழகான கோணமென்று தோன்றியதுமே நான் அந்தத் தருணத்தைப் படம் பிடித்துவிட்டேன். இருவரும் கைகோர்த்துக்கொண்டு நிற்கும் நிலையில் போஸ் கொடுத்தபோது அதையும் எடுத்தேன்.

சார், இப்பிடி உக்காந்து மேடம் தோள தொட்டமாதிரி இருங்க சார். இன்னொரு படம் சூப்பரா எடுத்துடலாம்என்றேன். எந்த எதிர்க்குரலும் இல்லாமல் இருவரும் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உட்காந்தார்கள். நான் அந்தப் படத்தையும் எடுத்தேன். அந்தப் பெண் வேகமாக எழுந்து சென்று கூட்டத்தோடு சேர்ந்துகொண்டாள்.

என்னங்க சார், புதுக்கல்யாணமா?”

ஐயோ, மூனு வருஷம் ஆவுது சார். வீட்ட விட்டு வெளிய வந்தாவே அது அப்படித்தான். ரொம்ப வெட்கப்படும்

அவன் வேகமாகச் சென்று மற்றவர்களோடு இணைந்த சமயத்தில் உதடு தடித்த பெண்வாங்க, நாமும் நம்ம புள்ளைங்களும் சேந்து தனியா ஒரு படம் எடுத்துக்கலாம்என்று தன் கணவரை அழைப்பதைக் கண்டேன்.

நல்ல நேரம்டா ஒனக்கு நல்லமுத்துஎன்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். “ ஃபேமிலி போட்டாதான் பெஸ்ட் ஃபோட்டா. க்ரூப் ஃபோட்டாவ ஹால்ல வச்சா, ஃபேமிலி ஃபோட்டாவ பெட்ரூம்ல அழகா வச்சிக்கலாம். வாங்க சார்

அந்தப் பெண் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் வேகவேகமாக மரத்தடிக்கு வந்து புடவையை சீரமைக்கத் தொடங்கினாள். அவள் கணவனும் இரண்டு பிள்ளைகளும் தொடர்ந்து அவளோடு சேர்ந்து நின்றனர். நான் நல்ல கோணத்தில் அவர்களை நிறுத்தி அந்தப் படத்தை எடுத்தேன். அவர்கள் உட்கார்ந்த நிலையிலும் ஒரு படத்தை எடுக்கும்படி கேட்டனர்.

அவர்கள் சென்றதும் தானாகவே மற்றொரு ஜோடி வந்து நின்றார்கள். அந்தப் பெண்மணியின் தலைமுடிப்பின்னல் இடுப்புவரைக்கும் நீண்டு தொங்கியது. சாக்லெட் நிற சாயம் படிந்த அவள் கணவரின் தலைமுடி வெயிலில் மின்னியது. அவர்களுடைய இரு பிள்ளைகளும் ஒன்றாக அம்மாவின் பக்கத்தில் நின்றார்கள். “இந்தப் பக்கமா ஒரு ஆளு வரலாமே தம்பிஎன்று அவர்களைப் பார்த்துச் சொன்னேன் நான். இருவருமேம்ஹூம். நான் எங்க அம்மா பக்கத்துலதான் நிப்பேன்என்று சொல்லிவிட்டனர்.

நான் கேமிரா வழியாக கோணம் பார்க்கத் தொடங்கினேன். அதற்குள் அவர் எரிச்சலான குரலில்சீக்கிரம் எடுங்க தம்பி. ஒரு படத்த எடுக்கறதுக்கு எவ்ளோ நேரம்? லால்பாக சுத்திப் பாத்து முடிக்கணுமில்ல. இங்கயேவா நின்னுட்டிருக்க முடியும்?” என்றார். அவர் கண்கள் இலக்கில்லாமல் சுழன்றபடியே இருந்தன. “சீக்கிரம். வெயில் வேற ஏறிட்டே இருக்குதில்ல. ஒரே எடத்துல எவ்ளோ நேரம் நிக்கறது?”

மரத்தடியிலிருந்து சாலைக்கு வரும்போது இரு பிள்ளைகளும் என் அருகே வந்தார்கள். ஒருவன்இந்த கேமிரா பேரு என்ன?” என்று கேட்டான். அவன் புருவங்கள் அடர்த்தியாக பெண்களின் புருவத்தைப் போல இருந்தன.

இது கேனன் டிஜிட்டல் கேமிரா. வெளிநாட்டு கேமிரா. வெளிநாட்டுலேருந்து வந்த ஒருத்தர் எனக்கு கிஃப்டா கொடுத்தாரு. இது இல்லைன்னா என் பொழைப்பே நாறிப் போயிருக்கும்என்றேன்.

ஏன்?” என்று கேட்டான் அவன்.

அடிக்கடி ஃபில்ம் ரோல் வாங்கிட்டே இருக்கணுமில்ல. அதுக்குலாம் பணத்துக்கு எங்க போவறது? டிஜிட்டல்ல ரோல் பிரச்சன இல்ல. ஒரு தரம் சிப் வச்சிட்டா போதும். எவ்ளோ வேணும்ன்னாலும் எடுக்கலாம். செலவும் கொறச்சல். அதனாலதான் இருபத்தஞ்சி ரூபாய்க்கு ஒரு படம் கட்டுப்படியாவுது..”

நூறு படம் எடுக்கமுடியுமா?”

ம்

ஆயிரம் படம்?”

தாராளமா எடுக்கலாம்.”

அது எப்பிடி?”

இப்ப ஒன் மனசு இருக்குதுனு வச்சிக்கோ. நான் ஒனக்கு ஒரு கத சொல்றன். அது மனசுக்குள்ள ஸ்டோராயிடுது. அடுத்த நாள் பத்து கத சொல்றன். அதுவும் ஸ்டோராய்டுது. இன்னொரு நாள் இருபது கத சொல்றன்னு வை. அதுவும்தான் ஸ்டோராகும், இல்லயா? மனசு என்ன செய்யுது? வேணும்ங்கற ஞாபகத்துல வச்சிக்குது. வேணாங்கறத தானாவே மறந்துடுது. அதனால ஸ்பேஸ் ப்ராப்ளெம் வராது. நம்ம டிஜிட்டல் சிப் கூட அப்படித்தான்.”

அவன்ஓஹோஎன்றபடி என் கையிலிருந்த கேமிராவையே ஒரு கணம் பார்த்தான். பிறகு ரோலும் இல்லாம சிப்பும் இல்லாம கேமிரா வேல செய்யுமா?” திடீரென ஒரு கேள்வி கேட்டான். அதைக் கேட்டு ஒருகணம் திகைத்துவிட்டேன். “அது எப்பிடி முடியும்? எதுவுமே அதில பதியாதேஎன்று தடுமாறினேன்.

அவன் சிரித்துக்கொண்டேஇதுவரைக்கும் வரலை அங்கிள். ஆனா எதிர்காலத்துல நான் பெரிய சைன்டிஸ்டா மாறி கண்டுபிடிக்க போறேன்என்றான்.

என்ன படிக்கறே நீ?” என்று அவனைக் கேட்டேன்.

அவன்அஞ்சாங்கிளாஸ். பெரிய படிப்புலாம் படிச்சி நான் சீக்கிரமா சைன்டிஸ்ட் ஆயிடுவேன்என்றான். அடுத்தவன் தானாகவேநான் நாலாம் கிளாஸ்என்றான்.

சரி, ஒன்னா சேர்ந்து நில்லுங்க. ஒங்க ரெண்டு பேரயும் ஒரு படம் எடுக்கறன்என்றேன். இருவரும் தோளோடு தோள் உரச நின்றனர். நான் வெவ்வேறு கோணங்களில் அவர்களை இரு படங்கள் எடுத்தேன். அவர்கள்பை அங்கிள்என்று சொல்லிக்கொண்டே ஓடிச் சென்று அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள்.

எல்லோரும் ஏரியின் திசையில் நடக்கத் தொடங்கினார்கள். காற்றில் அவர்களுடைய முந்தானைகள் படபடத்தன. அனைவருக்கும் பின்னால் சக்கரநாற்காலியைத் தள்ளிக்கொண்டு அந்தப் பெண்மணி இறுதியாகச் என்றாள்.

மீண்டும் நான் பெருங்கூட்டமாகவோ ஜோடியாகவோ வருகிறவர்களுக்காக பாதையைப் பார்த்திருந்தேன். ஏராளமான ஆண்களும் பெண்களும் என்னைக் கடந்து சென்றார்கள். காது கேட்காததுபோலவே ஒவ்வொருவரும் என்னைக் கடந்து சென்றார்கள். புதுமணத்தம்பதிகளோடு ஒரு கூட்டம் கடந்து போனது. வழக்கம்போல டொன்டி பைவ் பல்லவியை அவர்களிடம் சொன்னேன். கூடுதலாககல்யாணப்படம் மாதிரி எடுத்துக் குடுக்கறன் சார். ஃப்ரேம் பண்ணி ஹால்ல வச்சா மங்களகரமா இருக்கும் சார். மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி சார் நீங்கஎன்று சில வார்த்தைகள் என்னை மீறி வந்துவிட்டன. அதைக் கேட்டு அந்தப் பெண் அப்படியே நின்றுவிட்டாள். நிமிர்ந்து தன் கணவனிடம் எதையோ சொன்னாள். அவன் என்னிடம் நேராக வந்துஇப்ப எடுத்தா எப்ப குடுப்பிங்க?” என்று கேட்டான். “ஒரு மணிக்கு ரெடியாய்டும் சார். இந்த இடத்துக்கே வந்து வாங்கிக்கலாம்என்றேன்.

காஸ்ட் என்ன?”

காஸ்ட்லாம் ஒரு மேட்டரா சார்? பெங்களூருக்கு வந்த சமயத்துல எடுத்த படம்ங்கறதுதான் முக்கியம். காலாகாலத்துக்கும் அந்த எண்ணம்தான் மனசுல நிக்கும். நீங்க பாத்து குடுங்க சார். வாங்க வந்து நில்லுங்க.”

இல்லிங்க, ஒங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க.”

எட்டுக்கு பத்து, இல்லைன்னா பத்துக்கு பதிமூணுல ப்ரிண்ட் போட்டு குடுக்கறன் சார். அப்பதான் ஹால்ல வைச்சா பார்வைக்கு எடுப்பா இருக்கும்

எல்லாம் சரி, இன்னும் நீங்க ரேட் சொல்லலயே

எட்டுக்கு பத்து நூத்தியம்பது ரூபா சார். பத்துக்கு பதிமூனு எரநூறு ரூபா சார்

அந்த மாப்பிள்ளை சில கணங்கள் யோசித்தான். பிறகுநீங்க கேட்ட பணத்த குடுக்கறன். ஆனா ரெண்டு காப்பியா குடுக்கணும். இல்லைன்னா நாங்க கெளம்பறம்

அந்த வாய்ப்பைவிட எனக்கு மனமில்லை. பல கோணங்களில் அவர்களை எடுத்தேன். பிறகு அவற்றில் இரண்டு படங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். “கொஞ்சம் அட்வான்ஸ்என்று இழுத்தபோதுமொத்தமாவே வாங்கிக்கங்க. ரெண்டு ரெண்டு காப்பி. நல்ல ப்ரிண்டா இருக்கணும். புரியுதா?” என்றபடி நானூறு ரூபாயைக் கொடுத்தான். “சார், நாலு ப்ரிண்ட் போடணும், பத்தாது சார், இன்னும் கொஞ்சம் குடுத்தா நல்லது சார்என்று தணிந்த குரலில் சொன்னேன். பெருமூச்சு விட்டபடியே இன்னும் ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டுச் சென்றான் மாப்பிள்ளைப்பையன். அதற்குப் பிறகு ஆறேழு க்ரூப் ஃபோட்டாக்கள் கிடைத்தன. லால்பாக் மணிக்கூண்டு பன்னிரண்டு அடித்து ஓய்ந்தது. நான் கேமிராவை பைக்குள் வைத்து மூடிக்கொண்டு வேகமாக லால்பாகுக்கு வெளியே இருந்த ஸ்டுடியோவுக்குச் சென்றேன்.

அச்சிட்ட படங்களையெல்லாம் தனித்தனி உறைகளில் போட்டு மூடி பைக்குள் வைத்துக்கொண்டு பூக்காத மரத்தடிக்கு வந்தபோது ஒரு மணியாகிவிட்டது. அவர்களுடைய முகம் எங்கேனும் தென்படுகிறதா என சுற்றுமுற்றும் பார்த்தபோது நிழலோரமாக சக்கரநாற்காலியோடு அந்தப் பெண்மணி மட்டும் நிற்பது தெரிந்தது. வேகமாக நான் அவளை நோக்கிச் சென்றேன்.

 ரொம்ப நேரமா உங்களுக்காகத்தான் காத்திட்டிருந்தாங்க. பசங்க ஐஸ்க்ரீம் வேணும்ன்னு கேட்டாங்க. அதுக்காக கட வரைக்கும் போயிருக்காங்கஎன்றாள்.

நான் பக்கத்திலிருந்த குழாயைத் திறந்து தண்ணீர் அருந்திவிட்டு வாயைத் துடைத்தபடி திரும்பினேன். “லால்பாகுக்கு வெளியே ஸ்டுடியோவுக்கு கொஞ்ச தூரம் நடந்துபோவணும். அதான் கொஞ்சம் லேட்டாய்டுச்சிஎன்றேன்.

சரி, நெழலா பாத்து ஒதுங்கி நில்லுங்க. வந்துடுவாங்க

கடைக்குச் சென்றவர்கள் வந்து சேரும்வரை ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக எந்த ஊருலேருந்து வந்திருக்கிங்க?” என்று கேள்வியை எழுப்பினேன்.

பாண்டிச்சேரி. எங்க ஊருக்காரர் பொண்ணுக்கு இங்க கல்யாணம்.  அதுக்காக வண்டி வச்சிகினு வந்தம். காலையிலயே முகூர்த்தம் முடிஞ்சிட்டுது. நாளைக்கி கெளம்பிடுவம்.”

நான் அப்போதுதான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுமியைப் பார்த்தேன். தலை ஒரு பக்கமாக சாய்ந்திருந்தது. க்ராப் போல வெட்டப்பட்ட தலைமுடி அழகாகச் சுருண்டிருந்தது.  முதுகுத்தண்டு பிரச்சினையாக இருக்குமோ என நினைத்தேன்.

குழந்தைக்கு என்ன?”

மனசு சரியில்ல.”

நான் அப்போதுதான் அதைக் கூர்ந்து நோக்கினேன். ”பாவம்என்று பெருமூச்சுவிட்டேன். “நடக்க முடியாதா?” என்று கேட்டேன். அவள் தலையசைத்தாள். ”ஒக்கார வச்சா ஒக்காரும். படுக்க வச்சா படுக்கும். ஊட்டிவிட்டா சாப்புடும். அவ்ளோதான் அதுக்கு தெரியும். காதும் கேக்காது. வாயும் பேசாது

அதைக் கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. அவளுக்கு  ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில்அதனாலதான் அவுங்க இந்த கொழந்தய க்ரூப் ஃபோட்டாவுல சேத்துக்கலயா?” என்றேன்.

அது எப்படி சேத்துக்குவாங்க? ஊருல நாலு பேரு பாத்து மெச்சிக்கணும்ங்கறதுக்காகத்தான் இப்பிடி வண்டி வச்சி அழச்சிகிட்டு வந்தாங்க. இத கண்டாலே அவுங்களுக்கு எளக்காரம். நடக்கற வழியில பீய பாத்தமாதிரி மூக்க மூடிகினு போயிடுவாங்க. ஒருநாள் கூட அவுங்க இத தொட்டதில்ல. இதுங்கூட பேசனதுமில்ல. இந்த மூனு பேருக்கும் மூத்தவரு ஒருத்தர் இருந்தாரு. அவுரு புள்ள இது?”

இப்ப அவரு இல்லயா?”

இல்ல. செத்துட்டாரு. அவரு இருந்தா இந்த அல்லக்கைங்கள கிட்டயே சேக்கமாட்டாரு. தங்கமான மனுஷன் அவரு. இந்த கொழந்தய என்னமா கொஞ்சுவாரு தெரியுமா? பாடுவாரு, பாடுவாரு. ராத்திரிலாம் கொழந்தய தோள்லயே வச்சிகினு சுந்தரி சுந்தரினு பாடுவாரு. தூங்கனாகூட கீழ கெடத்தமாட்டாரு. அப்பிடி ஒரு பாசம். இது சும்மா ர்ர்ர்ர்ர்னு இழுத்தா கூட போதும், ஐயோ என் தங்கம் சுந்தரி பேசுதுன்னு அப்பிடியே வானத்துக்கும் மண்ணுக்குமா குதிப்பாரு.”

அம்மா இல்லயா?”

இருந்தாங்க இருந்தாங்க. அவுங்கதான பெத்தாங்க. ஒரு வயசுக்கு அப்பறமாதான் கொழந்த நெலம சரியில்லன்னு புரிஞ்சது. ஒடனே ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்திட்டுது. கொழந்த வேணாம்ங்கறது அவுங்க. கட்சி. வேணும்ங்கறது இவுரு கட்சி. அந்த அம்மா கோவிச்சிகினு என்னமோ ஒரு வேலய தேடிகினு பிரான்ஸ்க்கு போயிட்டுது. கொழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்கமுடியாததால இவரால போவமுடியல. கொழந்தைக்காக இங்கயே தங்கிட்டாரு…”

கூடப் பொறந்தவங்க யாரும் அப்ப ஒத்தாசைக்கு வரலையா?”

அவுங்களா? கொஞ்சம் கூட மனசுல ஈரம் இல்லாத ஆளுங்க அவுங்க. பக்கத்துல கூட வந்து பாக்கலை.”

தனியா எப்படி சமாளிச்சாரு?”

என் ஊட்டுக்காரும் இவரும் சின்ன வயசு கூட்டாளிங்க. படிப்பு இல்லாததால எங்க ஆளு ரிக்ஷா இழுத்துட்டிருந்தாரு. இவருதான் மினிஸ்டர்கிட்ட சொல்லி ஆரோஃபுட்ல ஒரு வாட்ச்மேன் வேல வாங்கி குடுத்தாரு. அந்த நன்றி அவருக்கு. நீ போய் புள்ளய பாத்துக்க வள்ளிம்மானு என்ன அனுப்பிவச்சாரு. எனக்கும் மூனு புள்ள இருக்குது. நமக்கொன்னு இப்பிடி பொறந்தா நாம என்ன தூக்கியா போட்டுடுவம்ன்னு நெனச்சிகினு ராவும் பகலும் நானே பாத்துகிட்டேன். வேணாம் வேணாம்னு சொல்லியும் கேக்காம ஐயா எனக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பளம் குடுத்தாரு.”

அவரு எப்பிடி செத்தாரு?”

நான் வந்த ஆறாவது மாசத்தில அவரு ஸ்கூட்டர்ல போவும்போது ஒரு லாரில மோதி செத்துட்டாரு. அப்ப வந்து எட்டி பாத்துட்டு போச்சி இதும் அம்மா. அந்த அம்மா வழியில சொந்தம்னு யாருமில்ல. அதனால புருஷன்காரன் தம்பிங்க மூனு பேரயும் கூப்ட்டு இந்த பங்களாவுலயே நீங்க எத்தன வருஷம் வேணும்ன்னாலும் தங்கிக்கலாம். ஆனா கொழந்தய பத்தரமா பாத்துக்கணும்னு சொன்னாங்க. அது ஒன்னுதான் அவுங்க நிபந்தனை. சரி அண்ணி சரி அண்ணினு தலய ஆட்டிகினு எல்லாமே இங்க வந்து தங்கிட்டுதுங்க. எனக்கு சம்பளம்லாம் கூட அவுங்களே மாசாமாசம் அனுப்பிடுவாங்க. இதுங்களுக்கு ஒரு பைசா செலவில்ல. எல்லாமே இந்த பச்ச மண்ணுக்கு சேரவேண்டிய சொத்து. இது தெளியவும் கூடாது, சாகவும் கூடாது. அப்படி ஒரு எண்ணம் அவுங்களுக்கு. அப்பதான இந்த சொத்த நல்லா அனுபவிக்கலாம். ஒன்னொன்னுக்கும் ஒடம்புலாம் வெஷம். நண்டுசிண்டுக்குக்கூட நம்ம பெரியப்பா புள்ளயாச்சேன்னு ஒரு பாசம் கெடயாது. பற்று கெடயாது. அத நெனச்சாதான் மனசு ஆறமாட்டுது.”

இந்த மாதிரி ஆளுங்களுக்கு கடவுள் சரியான நேரத்துல புத்தி குடுப்பாரு, பாத்துகினே இருங்க.”

என்னத்த புத்தி குடுப்பாரோ தெரியல. ரெண்டு மாசத்துக்கு முன்னால இது திடீர்னு ஒக்காந்துட்டுது. நாற்காலி பூரா ரத்தம். மூளதான் வளரல. ஆனா ஒடம்பு வளந்துட்டுது. நான் போய் சொல்லிட்டு ஓடியாறேன். ஒருத்திக்கு மூனு பொம்பளைவோ இருக்காளுங்க.  ஒரு நாய்கூட வந்து எட்டி பாக்கலை. நான் கழுவி உட்டு, குளுப்பாட்டி துணிய மாத்தி உட்டு தினூரு பூசி விட்டு ராத்திரி பகலு காவல் காத்துகினு இருந்தன். தெனமும் இத குளுப்பாட்டி துணி மாத்தி உட்டு, வேளாவேளைக்கு சோறு ஊட்டி, நேரத்துக்கு பீ பேள வச்சி கழுவி உடறவரைக்கும் நான்தான் செஞ்சி உடறன். கடசியில இதயும் நீ செய்டினு என் தலையில எழுதிட்டான் போல…”

அந்த அம்மாள் திடீரென உடைந்து தேம்பி அழத் தொடங்கிவிட்டாள்.  என் உடல் நடுங்கிவிட்டது. அப்போதுதான் நான் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். என்ன அழகு. என்ன ஒளி. ஈரம் மின்னும் கண்கள். ஒரு சிற்பம் போல இருந்தது அவள் முகம். நாற்காலியின் பிடியை இறுகப் பற்றியபடி உடல்குலுங்க விசும்பும் வள்ளியம்மாவைத் தேற்றும் வழி தெரியாமல்  குழம்பினேன்.

சில நொடிகளில் அவளே மெல்ல மெல்ல மீண்டு வந்தாள்.

நான் அவுங்க அனுப்பற பணத்துக்காக இங்க இல்ல. இத தூக்கி வளத்து வளத்து இதுவும் என் புள்ளைதான்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டன். தெனமும் சாமிகிட்ட வெளக்கேத்தும்போது நான் வேண்டிங்கறது ஒன்னே ஒன்னுதான். இதும் மூச்சு இருக்கற வரைக்கும் எனக்கு ஆயுள குடுக்கணும். இல்லைன்னா, என் கண்ணு முன்னாலயே இத நீயே கூப்ட்டுக்கணும். அவ்ளோதான். வேற எதுவும் தேவயில்லை எனக்கு.”

நான் பெருமூச்சு விட்டபடி சாலைவிளிம்பில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் சென்று உட்கார்ந்துவிட்டேன். பெஞ்சுக்குப் பக்கத்தில் ஒரு இருவாட்சிமரம் நின்றிருந்தது. அதன் நிழலடியில் ஒரு நாய் படுத்திருந்தது. அதன் மடியில் ஆறேழு குட்டிகள் முட்டிமுட்டி பால் குடித்தன. பரவசத்தில் கண்மூடி ஒருவித கிறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னை நாயின் முகத்தைப் பார்த்தபோது ஒருகணம் என் உடல் சிலிர்த்தது. சட்டென பையிலிருந்து கேமிராவை எடுத்து அந்தக் காட்சியைப் படமெடுக்க வேண்டும் என்ற வேகம் எழுந்தது. அது திளைத்திருக்கும் ஆழத்தை நான் கலைத்துவிடுவேனோ என்னும் அச்சத்தால் சத்தம் காட்டாமல் எழுந்து சக்கரநாற்காலிக்கு அருகில் மீண்டும் வந்தேன். வள்ளியம்மாள் முந்தானையால் கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள்.

அங்கு நிலவிய மெளனத்தைக் கலைக்கவேண்டும் என்பதற்காகவேஎன்ன, போனவங்கள இன்னும் காணோம், இன்னுமா ஐஸ் கிரீம் சாப்படறாங்க?”  என்றேன். “ஐஸ்க்ரீம் மட்டுமா தின்னுங்க? ஒவ்வொன்னும் தீனி மாடுங்க. கடயில இருக்கற எல்லாத்தயும் வாங்கி தின்னுட்டுதான் வரும்ங்கஎன்று சிரித்தாள் அவள்.

சில கணங்களுக்குப் பிறகு தயக்கத்துடன்இங்க பாத் ரூம்லாம் இல்லயா?” என்று மெதுவாகக் கேட்டாள் அவள்.

இருக்குதே. அதோ அங்க உயரமா தைலமரம் தெரியுது பாருங்க, அதுக்குப் பக்கத்துல ஒன்னு இருக்குது. இதோ இந்த ஆலமரம் இருக்குதில்ல, அங்கயும் இருக்குதுஎன்றேன்.

சட்டென திரும்பிஏன், போவணுமா?” என்று கேட்டேன். அவள் சங்கடமான பார்வையுடன் தலையசைத்தாள்.

போய்ட்டு வாங்க. போய்ட்டு வாங்க. நான் பாத்துக்கறன் புள்ளய. நானும் ரெண்டு புள்ள பெத்தவன்தான். மூனாவது பொறக்கப்போவுது இப்பஎன்றேன்.

அவள் நாலடி தொலைவு நடந்த பிறகு ஞாபகம் வந்தவனாக சில்லற இருக்குதுங்களா?” என்று கேட்டேன். அவள் தலையசைத்தபடியே வேகமாக அந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

நான் நாற்காலியில் அமரவைக்கப்பட்ட சிறுமியைப் பார்த்தபடி சற்றே தள்ளியிருந்த மரத்தின் மீது சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன். மீண்டும் அந்த அழகைப் பார்த்தபோது என் கண்கள் தளும்பின. வேகமாக பையிலிருந்த கேமிராவை எடுத்து வெவ்வேறு கோணங்களில் நின்று படங்களை எடுக்கத் தொடங்கினேன். தெய்வத்தைப் பார்த்து சிரிப்பதுபோல தெரிந்த அதன் புன்னகையை படங்களில் வழிந்தோடச் செய்தேன்.

இன்னும் நல்ல கோணங்களுக்காக வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் நகர்ந்து கேமிரா வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் ட்வீக் ட்வீக் என சத்தமெழுப்பும் ஸ்ப்ரிங் செருப்பு அணிந்திருந்த ஒரு சிறுமி டக்டக் என நடந்துவந்து நாற்காலிச் சிறுமிக்கு அருகில் வந்து நின்றாள். தலையை இருபக்கமும் அசைத்து அசைத்து சிரித்தாள். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஆடிக் காட்டினாள். ட்வீக்ட்வீக் சத்தமெழ வேண்டுமென்றே துள்ளித்துள்ளி குதித்தாள். ர்ர்ர்ர்ரீ என்று அரும்புப்பற்களைக் காட்டிச் சிரித்தாள்.

மீண்டும் மீண்டும் அவள் ர்ர்ர்ர்ரீ என்றாள். எதிர்பாராத ஒரு கணத்தில் நாற்காலிச் சிறுமியிடமிருந்து ர்ர்ர்ர்ர்ரீ என சத்தமெழுவதை நான் பார்த்தேன்.

ர்ர்ர்ர்ர்ரீ

ர்ர்ர்ர்ர்ரீ

நாற்காலிச்சிறுமியின் கை மெல்ல நீண்டு சிறுமியின் கன்னத்தைத் தொட்டுத் தடவிச் சரிந்ததைப் பார்த்தேன்.

மாலுக்குட்டி, இங்க வந்துட்டியாடி கண்ணு. அப்பா ஒன்ன எங்கல்லாம் தேடனேன் தெரிமா?” என்றபடி வேகமாக வந்த இளைஞனொருவன் அச்சிறுமியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டபடி கடந்துபோனான். ர்ர்ர்ர்ரீயின் மிச்சம் உதடுகளில் தேங்கியிருக்க பரவசத்தில் திளைத்திருந்தாள் நாற்காலிச் சிறுமி.

 

(பேசும் புதியசக்தி 2020 தீபாவளி மலரில் வெளிவந்த சிறுகதை)