Home

Wednesday 25 November 2020

காற்றினிலே வரும் கீதம் - கட்டுரை


இரவு மணி பதினொன்று. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி மேசைமீது வைத்துவிட்டு எழுந்தேன். படுக்கச் செல்வதற்கு முன்னால் வாசல் கதவில் தொடங்கி பின்கட்டுக் கதவு வரைக்கும் ஒவ்வொன்றையும் சரியாக சாத்தியிருக்கிறார்களா, தண்ணீர்க்குழாய்களை மூடியிருக்கிறார்களா என ஒருமுறை பார்த்துவிட்டு வருவது என் பழக்கம். நேற்றும் அப்படித்தான் பார்த்துக்கொண்டே சென்றேன். சமையல்கட்டு ஜன்னல் கதவுகள் இரண்டும் திறந்திருந்தன. அருகில் சென்று மூடுவதற்காக கைநீட்டி ஜன்னல் கதவை இழுத்தபோது வானத்தில் நிலா தெரிந்தது.

முக்கால் வட்ட நிலா. நீலமும் வெண்மையும் சரிவிகிதத்தில் கலந்த நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்தது வானம். ஒரு பெரிய பூப்பந்துபோல சுடர்விட்டபடி இருந்தது நிலா. எங்கள் தோட்டத்துத் தென்னைகளின் மீதும் மாமரங்களின் மீதும் நிலவின் ஒளியமுதம் தேங்கியிருந்தது. வேலியோரமாக நின்றிருந்த பன்னீர்மரங்களின் பூக்கள் கணக்கில்லாமல் தொங்கும் வெள்ளிக்கம்பிகள்போல காணப்பட்டன.

மறுகணமே நான் பின்கட்டுக் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்துக்குச் சென்று கனகாம்பரப் புதருக்கு அருகில் நின்றேன். அந்த ஒளிவட்டம் கண்முன்னால் சுழல்வதுபோல ஒருகணம் தோன்றியது. அதன் பேரழகைப் பார்க்கப் பார்க்க பித்தேறியது. பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. வேறு எதைப் பார்த்தாலும் அரைக்கணத்திலேயே பார்வை தானாகவே மீண்டும் நிலாவை நோக்கித் திரும்பியது. தன்னந்தனியான நிலா ஒரு அதிசயம். கீற்றுகளின் ஊடே தெரியும் நிலா மற்றொரு அதிசயம்.

கதவைத் திறந்துகொண்டு வெளியே நிலவொளியில் நனைந்தபடி நடந்துசெல்ல ஆசையாக இருந்தது. என் மனம் அக்கணமே ஏரிக்கரைக்குச் சென்று குளிர்ந்த காற்றில் நின்றுவிட்டது. நிலவு வெளிச்சத்தில் பட்டு விரித்ததுபோல நீண்டிருக்கும் பாதையில் உலோகத்தகடென மின்னும் தண்ணீர்ப்பரப்பையும் கரையோரத் தாவரங்களையும் பார்த்தபடி ஒரு முனையிலிருந்து நடக்கத் தொடங்கி வயல்கள் தொடங்கும் புள்ளி வரைக்கும் சென்று மீண்டது.

அந்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்வது குழப்பத்துகே வழிவகுக்கும் என்று தோன்றியதால் ஆசையை அடக்கிக்கொண்டேன்.  வீட்டையொட்டிச் செல்லும் படிக்கட்டில் ஏறி மெத்தைக்குச் சென்றேன். அந்த அறுநூறு அடி சதுர மெத்தை, அக்கணத்தில் ஒரு பெரிய ஏரியாக, புல்வெளியாக, தோட்டமாக, மைதானமாக கண்முன்னால் விரிந்திருந்தது. நான் அங்கு நின்று நிலவைப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன்.

நடக்க நடக்க, இதற்குமுன் நிலாவைப் பார்த்தபடி நடந்த பழைய நடையனுபவங்கள் நினைவில் மோதின. யமுனை, நர்மதை, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, துங்கபத்திரை நதிக்கரைகளில் நடந்த ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கோலங்களில் பார்க்க நேர்ந்த நிலாக்காட்சிகள் ஒவ்வொன்றும் மகத்தான அனுபவம். நிலவின் பிம்பத்தை புரண்டோடும் நதியில் பார்ப்பது ஒரு கனவை கண்முன்னால் பார்ப்பதுபோன்ற சிலிர்ப்பூட்டும் அனுபவம். அப்படிப் பார்க்கும் கணத்தில் நதிக்குள் தாவிப் பாய்ந்து அதை அள்ளியெடுத்து விடமாட்டோமா என்றொரு எண்ணம் எழுவதை யாராலும் தடுக்கமுடியாது.

நிலா மலர்ந்த இரவு என்றொரு சொல் மனத்தில் மிதப்பதை உணர்ந்து, ஒருகணம் திகைத்து மாடிச் சுவரோடு சாய்ந்தபடி நின்றேன். கண்கள் மட்டும் நிலவின் மீது பதிந்திருக்க அச்சொல் ஒரு படகுபோல மனத்தில் மிதக்கத் தொடங்கியது. எங்கோ கேட்ட வரி. எங்கு என்பது நினைவுக்கு வரவில்லை. நான் விடைக்கு தடுமாறித் தவிக்கத்தவிக்க, “என்ன, தெரிந்ததா?” என்று கேட்டுக்கேட்டு புன்னகையுடன் கண்சிமிட்டும் முகமென சுடர்விட்டது நிலா.

ஒரு குறுந்தொகைப் பாடல் நினைவுக்கு வந்தது. ஒரு முழுநிலா நாளில் தலைவனுடன் துய்த்த இன்பத்தை நினைத்து பெண் தனக்குள் சொல்லிக்கொள்வதுபோன்ற பாடல். கிளியோட்டும் பறைகளைப்போல தேரைகள் ஓயாமல் சத்தமெழுப்பியபடி நிறைந்திருக்கும் சுனைகள் மிகுந்த நாட்டிலிருந்து ஒரு முழுநிலா நாளில் தேடி வந்த தலைவன் அவளை நெஞ்சாரத் தழுவி இன்பம் துய்த்துவிட்டுச் சென்றுவிட்டான். இன்று முழுநிலவும் இல்லை. அவனும் அருகில் இல்லை. ஆனால் அவளைத் தழுவியபோது அவன் உடலிலிருந்து அவள் உடலுக்குப் பரவிய முல்லைமலரின் மணம் மட்டும் அப்படியே நீடித்திருக்கிறது. அந்த மணம் மற்ற அனைத்தையும் ஒவ்வொரு கணமும் நினைவுக்குக் கொண்டுவந்தபடி இருக்கிறது என்று நினைக்கிறாள் அவள்.

பல பாடல்கள் நினைவில் வந்து மோதின. பெரும்பாலான பாடல்களில் நிலா ஆணின் முகத்துக்கோ பெண்ணின் முகத்துக்கோ உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடலைப்போன்ற ஒரு சில பாடல்களில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒரு சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. நிலவு மலர்ந்த இரவு என்பது அழகு பொருந்திய வரி. நிலவையே ஒரு மலராக மாற்றிவிடும் அழகின் காரணமாகவே அந்த வரி நினைவில் தங்கிவிட்டது.

காற்று சற்றே வேகமாக வீசியபோது தென்னங்கீற்றுகள் அசைந்தன. அதுவரை கீற்றுகளின் தோளில் சாய்ந்திருந்ததுபோலத் தோன்றிய நிலா, சட்டென அலைகளில் மிதக்கும் படகெனத் தோன்றியது. காட்சிகளைக் கலைத்து புதிதாக அடுக்கிய காற்றின் ஆற்றலை நேருக்கு நேர் பார்த்தேன். கீற்றுகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள, ஓர் இசைத்துணுக்குபோல அந்த ஓசை  காற்றில் மிதந்தது. இனிய இசை. ஒற்றைத்தந்தியைத் தொட்டு மீட்டியதுபோல. ஆடைகளை உதறியதுபோல. வாய்க்குள்ளேயே முனகிக்கொண்டதுபோல. மிதக்கும் நிலவைப் பார்த்தபடி அந்த இசையில் லயித்திருப்பது ஆனந்தமாக இருந்தது.

என்னை அறியாமலேயே நிலவிடம் பேசுவதுபோலகாற்றினிலே வரும் கீதம்என்று சொன்னேன். அந்த வரியையே சொல்லிச்சொல்லி மீரா திரைப்படத்தில் அரண்மனைத் தோட்டத்தில் நடமாடியபடி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாட்டை வந்தடைந்துவிட்டேன். ஆச்சரியமாத்தான் இருந்தது. ஒரே கணத்தில் அந்த மாடியே அரண்மனைத்தோட்டமாக மாறிவிட, சற்று தொலைவில் தோட்டத்தின் செடிகளுக்கு நடுவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிக்கொண்டு செல்வதுபோலத் தோன்றியது. என் உடல் சிலிர்த்துவிட்டது.

காற்றினிலே வரும் கீதம் என மீண்டும் மீண்டும் முனகிக்கொண்டேன். அந்தப் பாட்டில்தான் நிலவை மலராக முன்வைக்கும் வரி வருகிறது. ’நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீலநிறத்து பாலகன் ஒருவன் குழலூதி நின்றான்என முழுவரியே நினைவுக்கு வந்துவிட்டது. புன்னகையுடன் வாய்விட்டு முணுமுணுத்தேன். அக்கணம் வெள்ளமெனப் பெருகிய ஆனந்தம் நெஞ்சை நிறைத்தது.

உண்மையில்காற்றினிலே வரும் கீதம்பாட்டை எம்.எஸ். குரலின் வழியாகக் கேட்பதற்கு முன்பாகவே  நான் கேட்டிருந்தேன். அதற்கு ஒரு பெரிய கதையே இருக்கிறது. அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆனந்தி எங்கள் வகுப்புத் தோழி. அவள் நன்றாகப் பாடுவாள். வாணி ஜெயராமுக்கு நிகரான குரல் அவளுக்கு இருந்தது. ராஜேந்திரன் அவளைப் பார்த்ததுமேகுட்மார்னிங் வாணி ஜெயராம்என்று சொல்வான். அதைக் கேட்டு அவள் முகம் பூரித்துவிடும். வெட்கமும் புன்னகையும் படர்ந்த முகத்தோடு ஆட்காட்டி விரலை அசைத்துஒத விழும் ஒனக்கு. அந்த அம்மா எங்க, நான் எங்க. அவுங்க மலை. நான் மடு. வித்தியாசம் தெரியாம பேசாதஎன்று செல்லமாக மிரட்டுவாள். அவள் அப்படிச் சொல்லாதே சொல்லாதே என்று சொல்வதே அவனை மீண்டும் மீண்டும் சொல்லவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. நாங்கள் பட்டம் பெற்று கல்லூரியிலிருந்து வெளியேறும் வரைக்கும் அவன் அவளை வாணி ஜெயராம் என்று அழைப்பதை நிறுத்தவே இல்லை.

கல்லூரியில் மதிய உணவு வேளையின் போது முந்திரி மரத்தடியில் ஆண்கள் தனிவட்டமாகவும் பெண்கள் தனிவட்டமாகவும் அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அப்போது நான், ராஜேந்திரன், மதிவாணன், சுப்பிரமணியன், பஷீர் எல்லாம் ஒரு செட். நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு கதைபேசிக் கொண்டிருந்த நேரத்தில், சட்டென ஒரு விரலை உதட்டின் மீது வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான் ராஜேந்திரன். ஒருகணம் எதுவும் புரியாமல் அவன் சொன்னதுபோல அமைதி காத்ததும் பாடும் குரலைக் கேட்க முடிந்தது. யார் பாடுவது என்று அவசரமாக நான் திரும்பிப் பார்க்க முனைந்ததும்  பார்வையாலேயே என்னைத் தடுத்து கட்டைவிரலால் முதுகுக்குப் பின் காட்டி தலையசைத்தான்.

அவன் ஊகித்தது உண்மைதான். எங்களுக்குப் பின்னால் சற்று தொலைவில் இன்னொரு மரத்தடியில் பெண்கள் கூட்டத்திலிருந்துதான் அந்தக் குரல் மிதந்து வந்தது. ’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் இதய சுரங்கத்தில் எத்தனை கேள்விபாடல். என் மனக்கண்ணில் மேடை மீது அமர்ந்து ஸ்ரீவித்யா மை தீட்டிய அகன்ற விழிகளுடன் பாடிக்கொண்டிருக்கும் காட்சி விரிந்தது. அந்தக் குரலுக்குரிய பெண் யாரென்று பார்க்கும் ஆவல் நெஞ்சில் முட்டி மோதியது. ஆனால் ராஜேந்திரனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அப்படியே சிலைகளென அமர்ந்து அந்தப் பாடல்மழையில் திளைத்திருந்தோம்.

ஒவ்வொரு சரணமாக பாடிக்கொண்டு சென்றது குரல். ‘நாளைப் பொழுதென்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க. வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப்போலஎன்று இறுதிச் சரணத்தைப் பாடும்போது அந்த வரிக்கு புதியதொரு பொருள் பிறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். ’எத்தனை பாடல்என்னும் இறுதிச்சொல்லில் பாடல் வந்து நிறைவுகொண்டதும் கைதட்டிப் பாராட்ட கையை அசைத்ததுமே தன் கண்ணசைவால் எங்களைத் தடுத்தான் ராஜேந்திரன். ”வீணா கூட்டம் சேர்ந்துரும். அனாவசியமா அவுங்களுக்கு சங்கடமாயிடும். எல்லா மரத்தடியிலயும் ஆளுங்க இருக்காங்கஎன்று அடங்கிய குரலில் அமைதிப்படுத்தினான்.

ஒரு நிமிஷம்என்று விரலைக் காட்டிவிட்டு அவன்மட்டும் எழுந்து அந்தப் பெண்கள் கூட்டத்துக்கு அருகில் சென்றான். புன்னகைத்தபடி அவர்களிடமிருந்து சற்று தள்ளி உட்கார்ந்துரொம்ப அருமையா பாடினிங்க. வாணி ஜெயராமே வந்து பாடினமாதிரி இருக்குது. ஒரு நிமிஷம் எங்கயோ ஒரு பாட்டுக்கச்சேரிக்கு போய் வந்தமாதிரி தோணுதுஎன்று பொறுமையாகச் சொன்னான். ஆனந்தி அவனைப் பார்த்து தலையசைத்தபடிரொம்ப தேங்க்ஸ்என்றாள். ராஜேந்திரன் உடனே எங்க க்ரூப் பசங்க உங்கள பாராட்டணும்னு சொன்னாங்க. நீங்க ம்னு சொன்னா….” என்று இழுத்தான். ஆனந்தி எந்தத் தயக்கமுமின்றிஅதனாலென்ன, வரச்சொல்லுங்கஎன்றாள். உடனே ராஜேந்திரன் எங்களைப் பார்த்து அருகில் வரும்படி கைகாட்டினான். நாங்கள் அவனுக்கு அருகில் சென்று உட்கார்ந்தபடி ஒவ்வொருவராக ஆனந்தியை வாழ்த்தினோம். அவள் முகம் மகிழ்ச்சியில் பூரிப்பதைப் பார்த்தேன். காதோரக் குழலை ஒரு விரலால் உருட்டியபடியும் ஜிமிக்கியைத் தொட்டு அசைத்தபடியும் நாங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டாள் அவள். ராஜேந்திரன் எங்களை அவளுக்குப் பெயர்சொல்லி அறிமுகப்படுத்த வாயெடுத்தான். அவள் அவனைத் தடுத்துதெரியும். எல்லாரும் நம்ம க்ளாஸ்தான?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

ராஜேந்திரன் மெதுவாகஎங்களுக்காக ஒரு சின்ன பாட்டு பாடுவிங்களா? ப்ளீஸ்என்றான். நாங்கள் அவள் பதிலைக் கேட்பதற்காக அவள் முகத்தையே பார்த்தோம். அவள் சரி என்று தலையசைத்தபடி ஒருகணம் குனிந்து சிந்தனையில் அமிழ்ந்தாள். பிறகுமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோஎன்று பாடத் தொடங்கினாள். நாங்கள் அவள் குரலின் மயக்கத்தில் மூழ்கிவிட்டோம்.

பாடி முடித்ததும் ஒரே குரலில் நாங்கள் அவளுக்கு நன்றி சொன்னோம். அவள் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டாள். அவள் சிரிக்கும்போது ஒரு மொக்குபோல தெரிந்த மேல்வரிசையின் தெத்துப்பல் அழகாக இருந்தது.

சரி கெளம்பலாம்என்று எழுந்தாள் ஆனந்தி. அப்போதுநாம எல்லாருமே ஒரே க்ளாஸ்தான். எல்லாருமே தெரிஞ்சவங்கதான். நாம ஏன் தனித்தனியா உட்கார்ந்து சாப்பிடணும்? நாளையிலேர்ந்து நாம ஒன்னா உக்காந்து சாப்பிடலாமா?” என்று கேட்டான் ராஜேந்திரன். ஆனந்தி தன் தோழிகள் ஒவ்வொருவரையும் அதே கேள்வியுடன் பார்த்தாள். எல்லோரும் பார்வையாலேயே சம்மதம் சொன்னார்கள். இறுதியாக ஆனந்திசரிஎன்றாள்.

எழுந்து நடக்கும்போதுநீங்க தெனமும் பாடினா நல்லா இருக்கும்என்றான் ராஜேந்திரன். “பாக்கலாம்என்றாள் ஆனந்தி.

ராஜேந்திரன் எதிர்பார்த்ததுபோல ஆனந்தி தினமும் பாடவில்லை. பாடும்படியான சூழலும் இல்லை. பாடங்கள் தொடர்பான சந்தேகங்களும் விளக்கங்களுமாகவே பொழுது போனது. ஆனால் ஓய்வாக இருக்கும் நேரங்களில் யாரும் கேட்காமல் அவளாகவே பாடினாள். எந்தப் பாடலைப் பாடினாலும் அதில் ஒரு தனித்துவம் இருந்தது. ’அன்னக்கிளி ஒன்னத் தேடுதே’, ’செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ ’ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குதுஎன ஒவ்வொரு பாடலையும் பாடும்போது அவள் முகத்தில் படிந்து பெருகும் பளபளப்பை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.

எங்கள் கூட்டத்தில் பஷீருக்கு மட்டுமே பாடுவதற்கு ஏற்ற குரல் இருந்தது. ”உங்க குரலுக்கு சி.எஸ்.ஜெயராமன் பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்என்று சொல்லிவிட்டு விண்ணோடும் முகிலோடும் பாட்டைப் பாடி பயிற்சி செய்யும்படி சொன்னாள். அவன் பத்து நாட்களில் சி.எஸ்.ஜெயராமனாகவே மாறிவிட்டான்.

கல்லூரி ஆண்டுவிழாவில் அவனும் ஆனந்தியும் ஒன்றாக மேடையேறினார்கள். வாத்தியங்களின் நீண்ட இசையைத் தொடர்ந்துவிண்ணோடும் முகிலோடும்என ஆனந்தி ஆரம்பித்த்தும் கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. பல்லவியைத் தொடர்ந்துஅலைபாயும் கடலோரம் இளமான்கள் போலேஎன்று பஷீர் பாடத் தொடங்கியதும் அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் உற்சாகத்தில் கைதட்டியபடி எழுந்து நின்றுவிட்டார்கள்.

அன்றுமுதல் கல்லூரியில் அனைவரும் அறிந்த நட்சத்திரமாக உயர்ந்துவிட்டாள் ஆனந்தி. அவள் பாடாத மேடையே இல்லை. மாணவமாணவிகள் விழா, ஆண்டு விழா, சுதந்திர தின விழா , பாரதியார் விழா, பாரதிதாசன் விழா என எல்லா விழாக்களிலும் அவள் பாடினாள். அவள் பெருமை கல்லூரியில் வளர்ந்துகொண்டே சென்றது. ஆனால் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதுபோலவே சாதாரணமாகவே நடந்துகொள்வாள் ஆனந்தி. எங்களை பெயர்சொல்லி அழைப்பதிலாகட்டும், எங்களோடு பழகுவதிலாகட்டும், எங்களுக்காக மதிய உணவு நேரத்தில் பாடலைப் பாடுவதிலாகட்டும் ஒருநாளும் அவள் ஒரு நூலளவு கூட மாறியதில்லை.

ஆண்டுவிழாவுக்கான நாள் குறிக்கப்பட்டதும் நாங்கள் ஆனந்தி பாடப்போகும் பாட்டுக்காக காத்திருந்தோம். அவள் இறுதிவரையில் தான் பாடப்போகும் பாட்டைப்பற்றி அவள் எங்களிடம் சொல்லவே இல்லை. தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும்  மேடையேறும் கணத்தில் மனத்தில் என்ன பாட்டு தோன்றுகிறதோ அதையே பாட இருப்பதாகவும் சொல்லிவிட்டாள். ஆயினும் நாங்கள் எங்களுக்கு விருப்பமான பாடலைத்தான் பாடவேண்டும் என்று ஒவ்வொருநாளும் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தோம். ’காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடிபாட்டைப் பாடும்படி நான் அவளிடம் சொன்னேன். ராஜேந்திரன்காலைப்பனியில் ஆடும் மலர்கள்பாடும்படி சொன்னான். ‘வாழ்வே மாயமா, பெருங்கதையா, கடும்புயலாபாடும்படி கேட்டுக்கொண்டான் மதிவாணன். அவள் எல்லாவற்றுக்கும் தலையசைத்துக்கொண்டாளே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.

ஆண்டுவிழா அன்று முதல்வரும் ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினரும் பேசிய பிறகு கலைவிழா தொடங்கியது. முதலில் மூன்று சின்னச்சின்ன நாடகங்கள். பிறகு மேளவாத்தியங்கள் மேடையில் ஏற பாடல் நிகழ்ச்சி தொடங்கியது. முதலாண்டு மாணவி ஒருத்தி பாரதியார் பாடலைப் பாடித் தொடங்கிவைத்தாள். நாலைந்து பாடல்களுக்குப் பிறகு ஆனந்தி மேடைக்கு வந்தாள். அப்போதே கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.  அவள் இசையமைப்பவர்களுக்கு அருகில் சென்று ஏதோ சொல்லிவிட்டு ஒலிவாங்கிக்கு அருகில் வந்து நின்றாள். நாங்கள் அவளையே ஆர்வத்தோடும் பதற்றத்தோடும் பார்த்திருந்தோம். ஒருகணம் எங்கெங்கும் ஆழ்ந்த அமைதி நிலவியது.

காற்றினிலே வரும் கீதம்என்று மெதுவாகத் தொடங்கினாள். அது எந்தப் படத்தில் இடம்பெற்ற பாட்டு என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் அதைக் கேட்டு திகைத்து எந்த எண்ணமும் எழாதவர்களாக அமர்ந்துவிட்டோம். அந்தப் பழைய பாட்டைக் கேட்டு அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் அனைவருடைய முகங்களிலும் ஏமாற்றம் தெரிந்தது. முதல் நான்கு வரிகள் வரைக்கும் அனைவரும் எதையோ நினைத்துக் குழம்பியவர்களாக அமைதியாக இருந்தார்கள். ஆனால் ஆனந்திபட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி கொஞ்சிடும் கீதம்என்று பாடத் தொடங்கியதும் ஓவென்று கூவத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு உடல் நடுங்கியது. ஒன்றும் செய்ய இயலாதவனாக அனைவரையும் பார்த்தேன். ஆனால் அதற்குள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டது.

ஆனந்தி அந்த ஆரவாரத்தை உணரவே இல்லை. அவள் வேறொரு உலகத்தில் இருந்தாள். அடுத்த வரி, அடுத்த வரி என்று தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தாள். நான் சுற்றியும் பரவியிருந்த கூச்சலை ஒதுக்கிவிட்டு அவள் குரலைமட்டும் மானசிகமாகப் பின்தொடர்ந்தபடி இருந்தேன். கேட்கக்கேட்க அந்தப் பாடல் எனக்குப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. எங்கிருந்தோ ஒரு பாடல் கேட்கிறது, அது எந்தத் திசையில் இருந்து வருகிறது என்பதைத் தேடிக்கொண்டே வருகிறாள் ஒருத்தி. வழியில் காண்பதையெல்லாம் பாட்டாகப் பாடிக்கொண்டே வருகிறாள். அந்தப் பாடல் செல்லும் தடத்தை சட்டென்று ஒரு கணத்தில் நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆனந்தியின் வரிகளின் ஊடாக என்னால் அக்காட்சியைப் பார்க்கமுடிந்தது.

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழலூதி நின்றான்என்று ஆனந்தி பாடியபோது அந்தக் கீதத்தை இசைத்தவன் யாரென நானே தேடிக் கண்டுபிடித்ததுபோல ஒரு பரவசத்தை அடைந்தேன். கண்ணன் கண்ணன் என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் கூட்டத்தின் ஆரவாரம் அதைப் பொருட்படுத்தவே இல்லை. உச்சக்கட்ட கூச்சலை எழுப்பிபடி இருந்தது.

பாடி முடித்ததும் வழக்கமான புன்னகையுடன் கைகுவித்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டாள் ஆனந்தி. வீட்டுக்குத் திரும்பும் வழிமுழுதும் அந்தப் பாடல் வரிகளையே அசைபோட்டபடி வந்தேன். நிலவுமகள், நிலவுப்பெண் என்று கேட்டுக்கேட்டு பழகிய காதுகளுக்கு நிலவை ஒரு மலராக முன்வைக்கும் வரி புதுமையாக இருந்தது. அந்தப் புதுமையின் காரணமாகவே அந்த வரி என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

வீட்டுக்கு வந்ததும் என் அம்மாவிடம் அந்தப் பாட்டைப்பற்றிச் சொன்னேன். “கூட படிக்கற பொண்ணுன்னு சொல்ற. அந்தக் கால பாட்ட ஏன் பாடினா? அது முப்பது வருஷத்துக்கு முன்னால பாடின பாட்டாச்சேஎன்றாள் அம்மா.

அந்த விழாவுக்குப் பிறகு ஆனந்தியைச் சந்திக்கவே இல்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு தேர்வு எழுதும் அறையில்தான் பார்த்தேன். உடனே நான் ராஜேந்திரனை அழைத்துக்கொண்டு அவளுக்கு அருகில் சென்றேன். அரங்கத்தில் எழுந்த கூச்சலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லத் தொடங்கினான் அவன். “உடு ராஜேந்திரன். உன்ன பத்தி எனக்குத் தெரியாதா? நான் அன்னைக்கே எல்லாத்தயும் மறந்துட்டேன். போ. போய் பரீட்சய நல்லா எழுதுஎன்று அனுப்பிவிட்டாள். அவள் முகத்தில் அதே புன்னகை. அதே பொலிவு. அதே அன்பு.

அதற்குப் பிறகு ஆனந்தியை நான் சந்திக்கவே இல்லை. ராஜேந்திரனுடைய திருமணத்துக்கு அழைப்பிதழை எடுத்துக்கொண்டு ஒருமுறை அவள் கொடுத்திருந்த முகவரியில் தேடிக்கொண்டு சென்றோம். அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பாகவே வீட்டைக் காலி செய்துகொண்டு சென்னைக்குச் சென்றுவிட்டதாக அந்த வீட்டின் உரிமையாளர் சொன்னார். திரும்பும்போதுஆனந்தியை சந்திச்சா கல்யாண கச்சேரியில எனக்காக ஒரு பாட்டு பாடுன்னு கேக்கணும் நெனச்சிட்டு வந்தேன்என்று ஏமாற்றத்துடன் சொன்னான் ராஜேந்திரன்.

நாங்கள் ஒன்றாகப் படித்த மூன்றாண்டுகளில் அவள் எங்களுக்காக பாடிய பாடல்கள் ஏராளம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்துகாற்றினிலே வரும் கீதம்மட்டும் நெஞ்சில் நின்றுவிட்டது.

கல்லூரியை விட்டு வெளியேறி நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போதே பழைய காலத்துப் பாட்டாக இருந்த அந்தப் பாடல், இப்போது இன்னும் பழைய பாடலாகிவிட்டது. மீரா என்னும் திரைப்படத்தையே யாருக்காவது இன்று நினைவிருக்குமா என்று தெரியவில்லை.

மேகங்கள் தொடர்ந்து வர, சென்றுகொண்டே இருக்கும் நிலவைப் பார்க்கப்பார்க்க மனம் பழைய நினைவுகளில் சென்று மோதியபடி இருந்தது. இதில் மீட்சியே இல்லை. இன்றைய இரவு முழுதும் இப்படித்தான் நீண்டுசெல்லப் போகிறது என்பது புரிந்துவிட்டது.

ஒருகணம் அந்த நிலவின் பாதையில் நான் ஆனந்தியின் முகத்தைப் பார்த்தேன். ’காற்றினிலே வரும் கீதம்என்று பாடியபடி அவள் கீதம் வரும் திசையைத் தேடியபடி அலைமோதுவதைப் பார்த்தேன். ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் நீலநிறத்துப் பாலகன் ஒருவன் கண்மூடிக் குழலூதுவதையும் அவனுக்கு அருகில் சென்று முகம்மலரச் சிரிக்கும் ஆனந்தியையும் பார்த்தேன்.

 

( பேசும் புதியசக்தி 2020 தீபாவளி மலரில் வெளிவந்த கட்டுரை )