சத்திரத்துக் கல்திண்ணையும், ரெட்டியார் வாங்கிப் போட்ட தினத்தந்தியும் பொது அறிவுப் பொக்கிஷங்களாக இருந்த நாட்கள் அவை. வாயில் வெற்றிலையை மென்று குதப்பியபடி ரெட்டியாரும், கிராமணியும் அரசியல் பேசுவார்கள். சூடு குறையும்போதெல்லாம் சுந்தரவேலு நாயுடு குத்திக்கிளறி விடுவார். வார்த்தைகள் சரம்சரமாய் விழும். கேள்விகள், பதில்கள், எக்களிப்புகள், பரிகாசங்கள், நடுநடுவே சோடாக்கடை கிராமபோனில் புறப்பட்டு வரும் என் அபிமான நடிகரின் லட்சிய கீத வரிகள். என் ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு ஏறும். படு கிளர்ச்சியான மனநிலையில் இருப்பேன். மரத்தடியில் எவனாவது ஒருவன் அதே நடிகரின் அங்க அசைவுகளோடு ஆடிக்காட்டி வித்தை செய்வான். இறுதியில் விழும் காசுகளைக் கும்பிட்டுவிட்டு பொறுக்கிக்கொள்வான்.