இரண்டு புல்லாங்குழல்கள்
ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்குச் ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.
இருவரும் பேசிப்பேசி தம் காதலை வளர்த்துக்கொண்டனர். அவனுக்கும்
பெற்றோர் என சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை. அவளுக்கும் பெற்றோர் இல்லை. அதனால் அவர்களுடைய
காதலுக்குத் தடை சொல்ல ஒருவரும் இல்லை. அதனால் அவர்களாகவே ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு
கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே ஊரில் வசித்தார்கள். ஒவ்வொரு
பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. அவன் காலையில்
எழுந்ததும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுவெட்டக் கிளம்பிவிடுவான். அவளும் பூந்தோட்டத்துக்குச்
சென்று பூக்களை வாங்கிவந்து மாலையாகக் கட்டி விற்பதற்காகக் கிளம்பிவிடுவாள். அவர்கள்
சம்பாதித்துக் கொண்டுவரும் பணம் அவர்களுடைய தேவைக்குப் போதுமானதாக இருந்தது. இருவருடைய இல்வாழ்க்கையும் இனிமையாகக் கழிந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக்கொண்டனர். திருமணமாகி
ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை பிறக்கவில்லை.
அது ஒன்றுதான் அவர்களுக்கு மனக்குறையாக இருந்தது..
அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக் கோவில்களுக்கும் அவர்கள் சென்று
குழந்தைக்காக வேண்டிக்கொண்டனர். ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு வழியாக அவள் கருவுற்றாள்.
அவர்களுக்கு அழகான ஓர் ஆண்குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு
நான்கு வயது நடக்கும்போது, திடீரென அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். விறகுவெட்டிக்கு
என்ன செய்வது என்றே புரியவில்லை.
நான்கு வயது பிள்ளையை தனியாக வளர்க்க அவன் படாத பாடுபட்டான்.
விறகு வெட்டச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறுவனையும் அவன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதாக
இருந்தது. அவனால் விறகு வெட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. சிறுவனையும்
சரியான முறையில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக வேறு வழி தெரியாமல், சிறுவனைப்
பார்த்துக்கொள்வதற்காக இன்னொரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டான்.
தாயில்லாத சிறுவனுக்குத் தாயாக இருந்து நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள
வேண்டும் என்று பல விதங்களில் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத்தான் அவன் அந்தத் திருமணத்தைச்
செய்துகொண்டான். புதிதாக வந்த மனைவியும் தொடக்கத்தில் அச்சிறுவனிடம் மிகுந்த பாசத்தோடு
இருந்தாள். சிறுவனும் அந்தப் பெண்ணிடம் கிடைத்த தாய்ப்பாசத்தில் மகிழ்ந்து கவலையில்லாமல்
இருந்தான். சித்தியாக இருந்தாலும் அம்மா என்றே அழைத்து மகிழ்ந்தான்.
எல்லாமே அவளுக்கு என ஒரு குழந்தை பிறக்கிறவரை சரியாகத்தான் இருந்தது.
அதற்குப் பின் அவள் குணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அந்தச் சிறுவனை அவள் மெல்ல
மெல்ல வெறுக்கத் தொடங்கினாள். அற்பமான விஷயங்களுக்கெல்லாம் அவன் மீது கோபம் கொண்டு
வசைபாடினாள். அவனுடைய தேவைகளை அவள் உதாசீனம் செய்யத் தொடங்கினாள். அச்சிறுவன் வயதில்
சின்னவனாக இருந்தாலும் தன் சித்தியிடம் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொண்டான்.
அதனால் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தான். அவள்
அச்சிறுவனை ஓர் அடிமை போல நடத்தினாள்.
ஒருநாள் அவளை அவன் அம்மா என்று அழைத்தபோது “இனிமேல என்னை அம்மான்னு
கூப்புடாத, புரியுதா? நானா உன்ன பெத்தேன்? யாரோ ஒருத்தி உன்ன பெத்துட்டு என் தலையில
கட்டிட்டு போயிட்டா. ஒழுங்கா சித்தின்னு கூப்புடு, புரியுதா?” என்று கடுமையான குரலில்
சொன்னாள். அவனும் அன்றுமுதல் அம்மா என்று அழைப்பதை விட்டுவிட்டான். தனிமையில் இருக்கும்போது
அதை நினைத்து அவனுக்கு அழுகையாக வரும். சிறிது நேரம் அழுது மனவேதனையைக் குறைத்துக்கொள்வான்.
சிறுவன் பத்து வயதைத் தொடும் வரை அவள் அமைதியாக இருந்தாள். பிறகு
ஒருநாள் கணவன் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில் “இன்னும் எத்தனை நாளுக்கு இவனை இப்படியே
வீட்டுக்குள்ள வச்சிருக்கறது? பத்து வயசு ஆயிடுச்சி. இப்பவே உலகத்தைப் புரிஞ்சிக்கறதுக்கு
அவனைப் பழக்கினாதானே நல்லது” என்று சொன்னாள்.
“சரி, அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?” என்று கேட்டான் கணவன்.
“நீ வேலைக்குப் போற இடத்துக்கு அவனையும் அழைச்சிட்டு போய் நாலு
விஷயங்களை கத்துக் கொடுக்கறதுதான் நல்லது”
“விறகுவெட்டக் கத்துக் கொடுக்கணும்னு சொல்றியா?”
“அதுல என்ன தப்பு? மெல்ல மெல்ல பழகினாதான எல்லாத்தயும் கத்துக்க
முடியும்”
“அதுக்கென்ன இப்ப அவசரம்? அவனால ஒழுங்கா கோடாலியை தூக்கி நிறுத்தமுடியுமான்னு
கூட தெரியலை. உடம்புல சக்தி வேணாம? இன்னும் கொஞ்சம் நாள் போவட்டும். பார்ப்போம்”
அதற்குப் பின் அவள் அந்தப் பேச்சை நிறுத்திவிட்டாள். ஒரு பத்து
நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பேச்சு தொடங்கியது.
“வயசுப்பிள்ளை இப்படி ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு சுத்திட்டு
வந்தா, எதிர்காலத்துல எதுக்கும் உருப்படியில்லாம போயிடுவான். நான் சொல்றத கேளு. ஏதாவது
ஒரு வேலைக்கு அவனை அனுப்பு. அதுதான் அவனுக்கும் நல்லது. நமக்கும் நல்லது”
“அனுப்பலாம். அனுப்பலாம்.
இரு. கொஞ்ச நாள் போவட்டும்”
“பெத்தவளா இருந்தா, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனா வளர்ப்பாளா?
மாத்தாந்தாயா இருந்ததாலதான் இப்படி தறுதலையா வளர்த்திருக்கான்னு எதிர்காலத்துல என்னை
யாரும் விரலை நீட்டி சொல்லிடக் கூடாது. அந்த பயத்தாலதான் நான் சொல்றேன். அத நீ புரிஞ்சிக்கணும்”
“சரி, அவனை இப்ப என்ன வேலைக்கு அனுப்பலாம். அதையும் நீயே சொல்லு”
“எங்கயும் அவன் வேலைக்குப் போவவேணாம். யாருகிட்டயும் கைகட்டி
வேலை செய்யவும் வேணாம். இங்க பாரு. நம்மகிட்டயே ஏழு பசுமாடுங்க இருக்குது. அந்த மாடுங்களை
தினமும் விளையாட்டா ஏரிப்பக்கமோ, காட்டுப்பக்கமோ, மலையடிவாரத்துக்கோ ஓட்டிட்டுப் போய்
மேய்ச்சிட்டு வந்தாவே போதும். அதுவும் ஒரு வேலைதான?”
அவள் எடுத்துச் சொன்ன விதம் அவனுக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது.
“சரி, ஏதாவது செய்” என்று அவளுடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டான்.
அடுத்தநாள் காலையில் அவள் தொழுவத்தில் இருந்த ஏழு பசுமாடுகளையும்
அழைத்துவந்து அவனிடம் கொடுத்தாள். “ஊருக்கு வெளியில மலையடிவாரத்துல பச்சைப்பசேல்னு
நல்ல புல்வெளி இருக்குது. அங்க கொண்டுபோய் மேய்ச்சிட்டு வா” என்று சொன்னாள். மதிய உணவுக்காக ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை நிரப்பிக்
கொடுத்து அனுப்பிவைத்தாள்.
மலையடிவாரத்தின் பக்கமாக நல்ல பசுமையான புல்வெளி இருந்தது. அந்தப்
புல்வெளியின் பக்கம் பசுக்களை மேய விட்டுவிட்டு, அவற்றின் பின்னாலேயே பாட்டுப் பாடி
திரிந்தான். ஒவ்வொரு பசுவுக்கும் அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான். அந்தப் பெயரைச்
சொல்லித்தான் அவன் அந்தப் பசுவைக் கூப்பிட்டான். எந்தப் பசுவையும் அவன் பசுவாகவே நினைக்கவில்லை.
தன் வயதை ஒத்த சிறுவர்களாகவே அவற்றை அவன் நினைத்தான். ஏழு பசுக்களும் அவனுக்கு ஏழு நண்பர்கள்.
மதிய வேளையில் வெயில் உச்சிக்கு ஏறியதும் பசுக்களை பக்கத்தில்
இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கவைத்தான். பிறகு மெதுவாக அவற்றை
ஓட்டி வந்து நிழலில் உட்கார்ந்து இளைப்பாறவைத்தான். அதற்குப் பிறகுதான் அவன் தான் கொண்டுவந்திருந்த
தூக்குவாளியைத் திறந்தான். தூக்குவாளியில் நிறைந்திருந்த நீராகாரத்துக்குள் கையை விட்டு
சோற்றைப் பிசைந்தான். அப்போது அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த
பசுக்கள் எல்லாம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.
“என்னங்கடா, சோறு சாப்புடறீங்களா?” என்று கேட்டான். அவை தலையசைத்ததைப்
பார்த்துவிட்டு அவை ஆமாம் என்று சொல்வதாக அவன் நினைத்துக்கொண்டான். ”ஆகா, உங்களுக்கும்
சோறு சாப்பிடணும்ன்னு ஆசை வந்துடிச்சா?” என்று கேட்டுக்கொண்டே ஏழு பசுக்களுக்கும் நடுவில்
சென்று உட்கார்ந்துகொண்டான்.
முதலில் அவன் ஒரு கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிட்டான். அடுத்து
மீண்டும் கை நிறைய சோற்றை அள்ளி முதல் பசுவின் வாய்க்குள் ஊட்டினான். அந்தப் பசு பழைய
சோற்றை ருசித்துச் சாப்பிட்டு அசைபோட்டது. இப்படியாக அவனும் ஏழு பசுக்களும் சாப்பிட்டு
முடித்தார்கள். அதற்குப் பிறகு அவன் அவற்றுக்கு
கதைகள் சொன்னான். அவற்றின் முன்னால் பாட்டுப் பாடி ஆடினான். அவையும் அவன் சொல்வதையெல்லாம்
புரிந்துகொண்டதுபோல தலையை உயர்த்தி ம்மே ம்மே ம்மே என்று விதம்விதமாக குரலெழுப்பி உடலைக்
குலுக்கின.
அவன் சாப்பிட்ட பழைய சோறு கொஞ்ச நேரத்துக்குக் கூட தாங்கவில்லை.
அடுத்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கத் தொடங்கியது. ஆயினும் சாப்பிட வழி இல்லாத
இடத்தில் அதைப்பற்றி நினைப்பதால் ஒரு பயனுமில்லை என்ற எண்ணத்துடன் மெளனமாக பசுக்கள்
பின்னால் நடந்துசென்றான்.
அவனுடைய மெளனத்தைக் கொண்டே அவனுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட ஒரு
பசு, அவனுக்குப் பின்னால் வந்து அவனை முட்டி தலையாலேயே தள்ளிக்கொண்டு சென்றது. இன்னொரு
பசுவுக்கு அருகில் வந்ததும் அவனைக் கீழே தள்ளியது. அவன் அந்தப் பசுவின் பால்மடிக்கு
அருகில் விழுந்தான். அதன் மடியில் பால் குடி என்பதுபோல தன் கொம்பால் அவனை முட்டி முட்டி
உணர்த்தியது. முகத்துக்கு அருகில் பால்மடியைப் பார்த்ததும் பசு சொல்லவருவது என்ன என்பது
அவனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த கணமே அவன் அதன் மடியில் பால் அருந்தத் தொடங்கினான்.
பால் வயிற்றில் நிறையத் தொடங்கியதும் அவன் பசி அடங்கியது. அதற்குப் பிறகு பசிக்கிற
வேளையில் எல்லாம் அவனுக்கு பசுவின் பாலே அமுதமானது.
அவனுக்கு பழைய சோற்றைக் கொடுத்து அனுப்பும் அவனுடைய சித்தி,
தன்னுடைய சொந்தப் பிள்ளைக்கு மட்டும் பலவிதமான கறிகளோடு ருசியாக சோறு சமைத்துப் போட்டு,
அவன் சாப்பிடுவதை பக்கத்தில் உட்கார்ந்து அழகு பார்த்தாள்.
இரவிலும் அவனுக்கு எல்லோரும் சாப்பிட்டு எஞ்சிய சோறுதான் கிடைத்தது.
அவன் எதைப்பற்றியும் எந்தக் குறையும் சொன்னதில்லை. பசி அடங்க ஏதோ ஒரு சாப்பாடு என்பதுதான்
அவன் கணக்கு. சாப்பிட்டு முடித்ததும் பசுக்களோடு சேர்ந்து தொழுவத்திலேயே படுத்துக்கொண்டான்.
கஷ்டம் கொடுத்தால் அவனாகவே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவான்
என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எந்த மாற்றமும்
ஏற்படவில்லை. எல்லாக் கஷ்டங்களையும் அவன் சகித்துக்கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக
இருந்தது.
என்றைக்காவது அவன் மனச்சோர்வில் முகம்சுருங்கி உட்கார்ந்துவிட்டால்,
ஒவ்வொரு பசுவாக அவனை நெருங்கிவந்து அவன் முதுகில் முட்டும். அவன் தோள்பட்டையை நாவால்
நக்கும். எழுந்து வா என்று சொல்வதுபோல ம்மே என்று குரல் கொடுக்கும்.
பழைய சோறு சாப்பிட்டாலும் அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவே
இருந்தான். சத்தான உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அவள் பெற்ற
சிறுவன் எலும்புத் தோற்றத்துடன் குச்சியாகவே இருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய
எரிச்சல் பலமடங்கு கூடுதலானது. மனத்தில் பொறாமைத்தீ
பற்றி எரிந்தது.
அந்தப் பொறாமைத்தீயிலேயே அவள் மனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வெந்து
கொதிப்பேறியது.
அவன் இருபது வயது இளைஞனாக வளர்ந்து நின்றான். ஐந்து வயதில் இருந்த
அமைதியைவிட அப்போது இன்னும் கூடுதலான அமைதி அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குள்
செல்வதே குறைந்துவிட்டது. சாப்பிடுவதற்கு மட்டுமே அவன் வீட்டுக்குள் சென்றான். மற்றபடி
பகல் முழுக்க மலையடிவாரத்துப் புல்வெளியிலும் மரத்தடியிலும் இரவு முழுக்க மாட்டுத்தொழுவத்திலும்
கழித்தான்.
அவனுடைய வாட்டசாட்டமான தோற்றத்தையும் மகிழ்ச்சியான முகத்தையும்
பார்க்கப்பார்க்க அவள் மனச்சங்கடம் பெருகியது. தான் பெற்ற மகன் அதுபோல இல்லையே என்று
நினைத்து பொறாமைப்பட்டாள். அவனை எப்படியாவது அந்த வீட்டைவிட்டு வெள்யேற்றினால்தான்
நிம்மதியாக இருக்கமுடியும் என்று அவள் நினைத்தாள்.
அடுத்தநாள் காலை. கோடாலியை எடுத்துக்கொண்டு சந்தை நடைபெறும்
ஊருக்கு விறகு வெட்டுவதற்காக அவன் புறப்பட்டான். அப்போது அவள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு
வலிப்பதுபோல முனகியபடி இருந்தாள். ஒரு கருப்புத்துணியை எடுத்து நெற்றியைச் சுற்றிக்
கட்டிக்கொண்டு வலியால் துடிப்பதுபோல நடித்தாள்.
“ஏன், என்னாச்சி?” என்று அவளுக்கு அருகில் வந்து கேட்டான் விறகுவெட்டி.
“தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குது”
அவன் அவள் நெற்றியைத் தொடுவதற்காகக் குனிந்தான். “ஐயையோ, தொடாதீங்க. வலி தாங்க முடியலை” என்று கண்ணீர்
விட்டு அழுதாள்.
“சரி, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. நான் ஓட்டமா ஓடிப்போய் நாட்டு
வைத்தியரை அழைச்சிட்டு வரேன்”
“அதெல்லாம் வேணாம், இங்க பக்கத்திலயே இரு”
“பக்கத்திலயே நின்னுட்டிருந்தா, எப்படி குணமாவும் சொல்லு. பைத்தியமா
நீ?”
“நான் சொல்றதை கோபப்படாம கேக்கறதா இருந்தா, இத எப்படி குணப்படுத்தறதுன்னு
நானே சொல்றேன். இதுக்கு என்ன மருந்துன்னு எனக்கு
நல்லா தெரியும்.”
“என்ன மருந்து, சொல்லு. எங்க இருந்தாலும் தேடிப் பார்த்து வாங்கியாறேன்”
“கண்டிப்பா எடுத்துவரேன்னு சத்தியம் பண்ணு. அப்பதான் சொல்வேன்”
“உன் தலைவலி நல்லாவறதைவிட வேற எது எனக்கு முக்கியம்? எதை எடுத்துட்டு
வரணும்னு சொல்லு. ஒரே ஓட்டமா ஓடிப் போய் எடுத்துட்டு வரேன்”
”சத்தியம் பண்ணு”
“எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் சத்தியமா எடுத்துட்டு
வரேன். போதுமா? சொல்லு. எங்க இருக்குது மருந்து?”
”உன் பெரிய பையனை கொன்னு,
அவனுடைய ரத்தத்தை எடுத்துட்டு வா. அதைக் கொண்டுவந்து என் நெத்தியில பூசு. அப்பதான்
என் வலி சரியாவும். இதை நீ செஞ்சா, இங்க உன் கூட நான் இருப்பேன். இல்லைன்னா என் புள்ளைய
தூக்கிகிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்”
“என்ன சொல்ற நீ? கைக்கு உசந்த புள்ள அவன். அவனைப்
போய் எப்படி கொல்றது?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனைக் கொன்னு ரத்தத்தை
எடுத்துவந்த பிறகு எங்கிட்ட பேசு. இப்ப கெளம்பு”
என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு கண்களை
மூடிக்கொண்டு படுத்திருந்த மனைவியை ஒருமுறை அவன் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சோடு
கோடாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அவனுடைய கால்கள் தாமாகவே மலையடிவாரத்தை
நோக்கி நடக்கத் தொடங்கின. அவனுடைய முதல் மனைவியின் முகமும் மகனுடைய முகமும் மாறி மாறி
அவன் நெஞ்சில் எழுந்து மறைந்தன.
கோடாலியோடு நடந்து வந்த விறகுவெட்டியை பசுக்கள்தான்
முதன்முதலில் பார்த்தன. அவனுடைய வருகையின் நோக்கத்தை அவை எப்படியோ தம் நுண்ணுணர்வால்
புரிந்துகொண்டன. ஒரு அப்பாவாக இருந்துகொண்டு இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துவிட்டானே
என்று நினைத்து அவன் மீது அருவருப்பு கொண்டன. உடனே அந்த மரத்தடியில் நிழலில் உட்கார்ந்திருந்த
இளைஞனை அவன் சுலபமாக நெருங்கி விடாதபடி அரண்போல சுற்றி வளைத்துக்கொண்டு நின்றன.
பசுக்களுக்கு அருகில் நெருங்கி வந்த பிறகு விறகுவெட்டி
தன் மகனைப் பெயர் சொல்லி அழைத்தான். தன் அப்பா தன்னைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்திருப்பதை
உணர்ந்த அந்த இளைஞன் ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எழுந்து நின்று பார்த்தான். அவரை
நெருங்குவதற்காக அடியெடுத்து வைத்தான். ஆனால் பசுக்கள் அவனை அடியெடுத்து வைத்து விடாதபடி
முதுகாலும் கொம்பாலும் முட்டிமுட்டித் தடுத்தன. அவை தன்னைத் தடுக்கவேண்டுமென்றால் ஏதோ
காரணம் இருக்கவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.
ஏழு பசுக்களும் ஆக்ரோஷமாக விறகுவெட்டியைப் பார்த்து
குரலெழுப்பின. நெருங்கி வந்துவிடாதபடி கொம்பைச் சுழற்றி மிரட்டின. அதைப் பொருட்படுத்தாமல்,
மகனைக் கொல்லும் ஆவேசத்துடன் கோடாலியை உயர்த்திப் பிடித்தபடி முன்னோக்கி நடந்துவந்தான்.
அக்கணமே ஒரு பசு கண்ணைமூடி கண்ணைத் திறக்கும் வேகத்தில்
அவனை நோக்கி அடியெடுத்துவைத்து முன்னால் சென்று தன் கொம்பால் அவனை முட்டித் தள்ளியது.
இன்னொரு பசு முன்னேறி வந்து அவன் கால்களை மிதித்தது. மற்றொரு பசு வேகமாக வந்து அவனுடைய
தோள் மீது காலால் உதைத்தது. கோடாலி ஒருபக்கம் நழுவிவிழ, அவன் இன்னொரு பக்கம் விழுந்து
உருண்டான். நீண்ட கொம்புடைய ஒரு பசு அவனை தன் கொம்பாலேயே முட்டிக்கொண்டு சென்று உருட்டிவிட்டது.
இன்னொரு பசு காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டது. அவன் உருண்டோடி கீழே விழுந்தான். அடுத்த
கணமே விறகுவெட்டி மீண்டும் நெருங்கிவிடாதபடி இளைஞனை தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
மலை உச்சியை நோக்கி நடந்தது பசு. பிற பசுக்களும் அந்தப் பசுவுக்குப் பாதுகாப்பாக சுற்றிவளைத்தபடி
கூடவே நடந்தன.
பசு முட்டி உருட்டிவிட்டதால் ஏற்பட்ட சோர்வும் அவமானமும்
விறகுவெட்டியைப் பாடாய்ப் படுத்தின. பசுக்கள் சூழ தன் மகன் தப்பித்துச் செல்லும் திசையையே
ஒருவித இயலாமையோடு பார்த்தான். “சரி, இதுவும் நல்லதுக்குத்தான்” என மனத்துக்குள் ஆறுதலாக
நினைத்துக்கொண்டான். அப்போதுதான் தன் மனைவி ரத்தம் எடுத்துவரச் சொன்ன கோரிக்கை அவனுடைய
நினைவுக்கு வந்தது. மகனே தப்பித்துப் போய்விட்ட பிறகு, ரத்தத்துக்கு என்ன செய்வது என
நினைத்துக் குழம்பினான்.
அப்போது அவன் விழுந்துகிடந்த மரத்தைச் சுற்றி இரண்டு
அணில்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்தான். உடனே
அவற்றை நோக்கி தன் கோடாலியை வீசினான். கோடாலியின் கூர்மையான பகுதியில் வெட்டுப்பட்டு
ஓர் அணில் அந்த இடத்திலேயே இறந்தது. அந்த ரத்தம் கோடாலியின் கூர்மையான பகுதியில் படிந்து
சொட்டியது. விறகுவெட்டி இறந்துகிடந்த அணிலை நோக்கி வேகமாகச் சென்றான். தன்னிடம் இருந்த
துணியை அணிலின் ரத்தத்தில் தோய்த்து நனைத்தான். பிறகு அத்துணியை பாதுகாப்பாக தன் பைக்குள்
வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
அவன் தொலைவில் வரும்போதே அவன் வருகையை
உணர்ந்துகொண்ட அவனுடைய மனைவி வேகவேகமாக கட்டிலுக்கு அருகில் சென்று
படுத்துக்கொண்டாள். அம்மா அம்மா என்று வலியில் முனகுவதுபோல முனகத் தொடங்கினாள்.
அவளைப் பெயர் சொல்லி
அழைத்தபடி வீட்டுக்குள்ளே வந்த விறகுவெட்டி “இதோ, நீ கேட்ட ரத்தம். அவனைக் கொன்று
எடுத்துவந்துட்டேன்” என்று ரத்தம் தோய்ந்த துணியை எடுத்து நீட்டினேன்.
“நீங்களே நெத்தியை சுத்தி
கட்டிவிடுங்க. வலி தாங்கமுடியலையே” என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல பேசினாள்
அவள். கட்டிலில் அவளுக்கு அருகில் உட்கார்ந்த விறகுவெட்டி ரத்தம் படிந்த துணியை
அவளுடைய நெற்றியைச் சுற்றி கட்டினான்.
சில நிமிடங்களிலேயே
“அப்பாடி, இப்பதான் வலி போச்சி” என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அவள்.
மலை உச்சிக்கு இளைஞனை
அழைத்துச் சென்ற பசுக்கள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் நிழலில் இறக்கிவிட்டது.
ஒவ்வொரு பசுவையும் கட்டியணைத்து அதன் நெற்றியில் நன்றியோடு முத்தம் கொடுத்தான்
அவன். இனி வீட்டுப்பக்கம் செல்வதில் பொருள் இல்லை என்று அவன் மனம் நினைத்தது.
பசுக்களுக்கும் அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை. இந்த பூமியில்
வாழ்ந்த காலம் போதும் என அவை நினைத்தன.
ஏழு பசுக்களும்
ஒருகாலத்தில் தம் முன்னோர்கள் வாழ்ந்த காமதேனுவின் உலகத்துக்குச் செல்லப் போவதாக
அவனுக்கு வெவ்வேறு குரல்மாற்றத்தின் மூலம் உணர்த்தின. “கவனமாக இரு. உனக்கு நல்ல எதிர்காலம்
இருக்குது” என்று அவனை வாழ்த்தின. பிறகு அவனிடம் இரு புல்லாங்குழல்களைப் பரிசாகக்
கொடுத்தன.
“நாங்க வேற உலகத்துல
இருந்தாலும் உன்னை எப்பவும் நினைச்சிட்டிருப்போம். நீ எங்களுக்குப் புள்ளை
மாதிரி. நீ மகிழ்ச்சியா இருக்கற சமயத்துல
இந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அந்த இசையைக் கேட்டு நீ சந்தோஷமா
இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். நீ துக்கமா இருக்கற சமயத்துல இந்த இன்னொரு
புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அதைக் கேட்டு நீ துன்பத்துல இருக்கறத நாங்க
புரிஞ்சிக்குவோம். உன் உதவிக்கு உடனே நாங்க வந்து உன் துன்பத்தைப் போக்குவோம்”
என்று மூத்த பசு சொன்னது.
பிறகு அவனை அந்த ஆலமரத்தடியில்
உட்காரவைத்துவிட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தம் உலகத்துக்குச் சென்றன.
அவன் அந்த மரத்தடியையே தன் உலகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொண்டான்.
பசிக்கும் நேரங்களில் மலைப்பகுதியில் இருக்கும் செடிகளிலும் மரங்களிலும் பழுத்துத்
தொங்கும் கனிகளைப் பறித்துச் சாப்பிடுவான். எதுவுமே கிடைக்காத நேரத்தில்
துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய புல்லாங்குழலை எடுத்து வாசிப்பான். சில
நொடிகளில் ஏழு பசுக்களும் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவனுக்குத் தன் பாலையே
உணவாகக் கொடுத்து பசியாற்றிவிட்டுச் செல்லும். சந்தோஷமான நேரங்களில் அவன்
வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு, அவையும் சந்தோஷத்துடன் அவனை
நினைத்துக்கொள்ளும்.
(தொடரும்.... )