ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள். அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.
அவள் தண்ணீர் அருந்தும்போது
பொன்னிறமான ஓர் இழை குவிந்த கைக்குள் விழுந்ததைப் பார்த்தாள். உடனே தண்ணீர்
அருந்துவதை நிறுத்திவிட்டு, அந்தப் பொன்னிழை என்ன என்று பார்த்தாள். அது என்ன
என்று யாருக்குமே தெரியவில்லை. எங்கிருந்து பறந்து வந்திருக்கும் என
சுற்றுமுற்றும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். அவளால் எதையும் கண்டுபிடிக்க
முடியவில்லை. பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குத் திரும்பி
நடந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் நடந்தனர்.
சிறிது தொலைவு நடந்த பிறகு
ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலால் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள்
கண்களுக்கு ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உருவம்
தெரிந்தது. அவனுடைய தலைமுடி பொன்னிழைகளைப்போல படிந்திருப்பதையும் பார்த்தாள்.
அக்கணமே மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு
அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தாள்.
வீட்டுக்குச் சென்றதுமே ஒரு
கருப்புத்துணியை எடுத்து தன் நெற்றியைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு
படுத்துவிட்டாள் இளவரசி. அவள் சோர்ந்து படுத்திருக்கும் செய்தி அப்போதே
அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அரசன் அவளுடைய அந்தப்புரத்துக்கு ஓடோடி
வந்தான். அரசனுக்கு அவள் ஒரே மகள். தாயில்லாமல் வளர்க்கப்பட்ட செல்ல மகள். அவளை
படுக்கையிலிருந்து எழுப்பி உட்காரவைக்க அரசன்
மிகவும் முயற்சி செய்தான். ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.
”என்னம்மா, உனக்கு என்ன
வேணும்? ஏன் இப்படி படுத்திருக்கே? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. உனக்குத்
தேவையானது எங்க இருந்தாலும், அதைக் கொண்டுவந்து உன்கிட்ட சேர்க்கறேன்” என்றான்
அரசன்.
அவள் அதைக் கேட்ட பிறகு
மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்.
“நம்ம நாட்டு எல்லைக்கு வெளியே இருக்கிற மலையடிவாரத்துல ஒரு ஆலமரம்
இருக்குது. அந்த மரத்து உச்சியில ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கான். அவனை நான்
பார்த்தேன். அவன் தலைமுடி தகதகன்னு தங்கம் மாதிரி மின்னுது. அவன் ரொம்ப அழகா
இருக்கான். அவனை எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க. நீங்க செஞ்சு
வைக்கறேன்னு எனக்கு சத்தியம் செஞ்சாதான், நான் இந்தப் படுக்கையிலிருந்து
எழுந்திருப்பேன்”
“அவ்ளோதானே? அதுக்கு ஏன்
இப்படி அடம் பிடிக்கணும்? இப்பவே ஆளுங்கள அனுப்பி அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன்.
ஒரு இளவரசியே ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும்போது, வேணாம்ன்னு சொல்றவங்க
இந்த உலகத்துல இருக்கறாங்களா என்ன?”
”அதெல்லாம் இருக்கட்டும்.
முதல்ல எனக்கு நீங்க சத்தியம் பண்ணுங்க. அப்பதான் எனக்கு நம்பிக்கை வரும்”
“சத்தியமா அவனை உனக்கு
கட்டிவைக்கறேன். போதுமா? எழுந்திரும்மா”
உடனே அரசன் நம்பிக்கைக்கு
உரிய ஏழு வேலைக்காரர்களை அழைத்து விவரத்தைச் சொல்லி ”அந்த இளைஞனை எங்க இருந்தாலும்
கண்டுபிடிச்சி உடனடியா அழைச்சிட்டு வாங்க” என்று கட்டளையிட்டான். வேலைக்காரர்கள்
அனைவரும் கூட்டமாக மலையடிவாரத்தை நோக்கிச் சென்றனர்.
அவர்கள் முதலில் அரசன்
குறிப்பிட்ட கிணற்றை அடைந்தார்கள். அதற்குப் பின் அந்த ஆலமரத்தை நோக்கிச்
சென்றார்கள். உச்சிக்கிளையில் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள்
நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கினார்கள்.
அந்த இளைஞனை கைதட்டி
அழைத்து “உன் கூட ஒரு விஷயம் பேசணுமாம். ராஜா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாரு”
என்றார்கள்.
”அதெல்லாம் வரமுடியாது.
போங்க” என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். அரசனின் அழைப்பை ஒருவன் மறுப்பான் என்பதையே
அவர்களால் நம்பமுடியவில்லை. எதைஎதையோ சொல்லி கெஞ்சியும் பார்த்தார்கள். ஆனாலும்
அவன் இறங்கி வரவில்லை. அவனைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின் மீது ஏறத்
தொடங்கினார்கள்.
அதைப் பார்த்ததும் அவன்
துன்ப நேரங்களில் இசைக்கும் புல்லாங்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான் இளைஞன்.
அந்த இசை விண்ணுலகத்தில் இருக்கும் பசுக்களுக்குக் கேட்டது. தம் மகன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்பதை அவை
புரிந்துகொண்டன.
அக்கணமே ஏழு பசுக்களும்
கூடி ஆலமரத்தை நோக்கி வந்தன. அரசனின் பணியாட்கள் இளைஞனிடம் வம்பு
செய்துகொண்டிருப்பதைப் பார்த்தன. உடனே அந்த ஆட்களோடு அவை மோதின. தம் கொம்புகளால்
அவர்களை முட்டி கீழே தள்ளின. அவர்கள் தரையில் விழுந்து உருண்டார்கள். திடீரென
நிகழ்ந்த தாக்குதலால் திகைத்த வேலைக்காரர்கள் அக்கணமே தப்பித்தால் போதும் என்ற
எண்ணத்துடன் அரண்மனைக்கு ஓடினார்கள். பசுக்கள் எல்லாம் கூடி இளைஞனுக்கு ஆறுதல்
கூறின. அவன் பசிக்கு பால் கொடுத்துவிட்டு, விண்ணுலகத்துக்கு விடைபெற்றுக்கொண்டு
சென்றன.
அரண்மனைக்கு ஓடிய
வேலைக்காரர்கள் அரசனிடம் நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். “இது என்ன,
விசித்திரமா இருக்குதே” என்று குழம்பினான் அரசன்.
பிறகு முப்பது பேரை
அழைத்துக்கொண்டு அவனே நேரில் அந்த இடத்துக்குச் சென்றான். அவர்கள் கூட்டமாக தன்னை
நோக்கி வருவதை மர உச்சியிலிருந்து இளைஞன் பார்த்துவிட்டான். உடனே வழக்கம்போல
துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான்.
உடனே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் அந்த இடத்துக்கு விரைந்துவந்தன. ஒரு
சிறிய படையே தன் மகனை எதிர்ப்பதற்குத் திரண்டு வருவதைப் பார்த்த பசுக்கள் அவர்களை
எதிர்கொண்டன. ஒவ்வொருவரையும் கால்களால் உதைத்து கீழே உருட்டிவிட்டன. கொம்பால்
முட்டி காயப்படுத்தின. அந்தத் திடீர்
தாக்குதலை எதிர்பார்க்காத அரசனின் படை வேறு வழியில்லாமல் பின்வாங்கி அரண்மனைக்குத்
திரும்பியது.
அரசன் தோல்வியோடு
அரண்மனைக்குத் திரும்பிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இளவரசி நிராசைக்குள்ளானாள்.
மனவேதனையுடன் எழுந்திருக்க விருப்பமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அந்தச்
செய்தியை அறிந்த அரசனின் மனம் துயரத்தில் மூழ்கியது.
அந்தப் பிரச்சினையை எப்படி
கையாள்வது என்று புரியாமல் இரவு முழுதும் தூக்கமின்றி அரண்மனைத் தோட்டத்தில்
உட்கார்ந்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான் அரசன்.
அப்போது பொழுது விடிந்தது.
சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையைத் தொடும் முன்பே தோட்டத்தில் இருந்த மரங்களில்
காகங்கள் கூடி கரையும் சத்தம் எழுந்தது. வானத்திலும் சில காகங்கள்
கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதைப் பார்த்தான். காகங்களின் காட்சியும் அவற்றின்
சத்தமும் அச்சமயத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்தன.
”இறைவனுடைய படைப்புல நீங்க
எல்லாம் ரொம்ப கொடுத்து வச்ச உயிரினம். எந்தத் துயரமும் இல்லாம ரொம்ப ஆனந்தமா
இருக்கீங்க. என்னை மாதிரி எந்தக் கஷ்டமும் உங்களுக்கு இல்லை” என்று மனத்துக்குள்
நினைத்து பெருமூச்சுவிட்டான்.
அப்போது அவன் முன்னால் ஒரு
காகம் வந்து உட்கார்ந்து அவனை நோக்கி குரல் கொடுத்தது. முதலில் அந்தச் சத்தத்தை அரசன்
அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ச்சியாக அந்தக் குரல் எழுந்ததும் ஆர்வத்துடன்
அந்தக் காக்கையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அந்தக் காக்கை தன்னை
நோக்கித்தான் தலையை அசைக்கிறது என்று நினைத்துக்கொண்டு அதைப் பார்த்து
புன்னகைத்தான்.
உடனே அந்தக் காக்கை
அரசனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தது. அரசனின் மனம் வியப்பில் மூழ்கியது. “அரசே,
உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன்”
என்று சொன்னது.
தன்னோடு பேசும் காக்கையைப்
பார்த்து அவனுடைய ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. எல்லாம் கடவுளின் கருணை
என நினைத்துக்கொண்டு மனத்துக்குள்ளேயே
கடவுளுக்கு நன்றி சொன்னான். நடந்த விஷயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்தக்
காக்கையிடம் விரிவாகச் சொன்னான் அரசன்.
“அவன்கிட்ட அதிசயமான ஒரு
புல்லாங்குழல் இருக்குது. எங்களைப்
பார்த்ததும் அவன் அதை எடுத்து வாசிச்சான். உடனே எங்கிருந்தோ பெரிய பெரிய கொம்பு
இருக்கிற பெரிய பெரிய பசுக்கள் ஆகாயத்துலேர்ந்து வந்து எங்களை முட்டி மோதி
விரட்டியடிச்சிடுச்சி. அந்தப் புல்லாங்குழலை
அவன்கிட்டேர்ந்து எப்படியாவது எடுத்துட்டோம்ன்னா, அவனை ரொம்ப சுலபமா நம்ம
வழிக்குத் திருப்பிடலாம்”
அதைக் கேட்டதும்
“கவலைப்படாதே. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு
பறந்துபோனது காக்கை. அரசனும் தன் தினசரி வேலைகளைப் பார்க்க நிம்மதியாக அரண்மனைக்குத்
திரும்பினான்.
அரசன் குறிப்பிட்ட
மலையடிவாரத்துக்குப் பறந்துசென்ற காக்கை, அங்கிருந்த ஆலமரத்தையும் அதன் உச்சியில்
உட்கார்ந்திருந்த இளைஞனையும் பார்த்தது. ஒருகணம் அவன் அழகைப் பார்த்து ரசித்தது.
“இப்படிப்பட்ட அழகன் மேல இளவரசி ஆசைப்பட்டதுல ஆச்சரியமே இல்லை” என்று
நினைத்துக்கொண்டது. அவன் உட்கார்ந்திருந்த கிளைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு
கிளைக்குச் சென்று சத்தம் காட்டாமல் அமர்ந்து அவனையே கண்ணிமைக்காமல்
பார்த்தது.
அப்போது அவன் தன்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருந்தான். அந்த இனிய
இசை மயக்கம் தருவதாக இருந்தது. அந்த இசையில் மயங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த
காக்கைக்கு சில கணங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. ”ஓ.
இந்தப் புல்லாங்குழலை வச்சிகிட்டுதான் ஆகாயத்துலேர்ந்து பசுக்களை வரவழைக்கிறியா?”
என்று நினைத்துக்கொண்டு மெல்ல அவனுக்கு அருகில் பறந்துவந்து சட்டென அந்தக் குழலை
தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்துபோனது.
சற்றும் அதை எதிர்பார்க்காத
இளைஞன் அதிர்ச்சியில் மூழ்கினான். இப்படி ஏமாந்துவிட்டோமே என நினைத்து துயரத்தில்
மூழ்கினான். சிறிது நேரம் என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை.
குழப்பத்தோடு அந்தக் காக்கை பறந்துபோன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். இப்படி
ஏமாந்து விட்டோமே என நினைத்தபோது அவனுக்கு வெட்கமாக இருந்தது.
பிறகுதான் அவனுக்கு
துன்பத்தில் இருக்கும்போது இசைக்கத்தக்க இன்னொரு குழலின் நினைவு வந்தது. உடனே அதை
எடுத்து இசைக்கத் தொடங்கினான். அடுத்த கணமே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும்
இறங்கி வந்தன. ”என்ன மகனே, என்ன துன்பம்?” என்று கேட்டன. அவன் நடந்த
செய்தியையெல்லாம் அவற்றிடம் சொன்னான்.
“போகட்டும் விடு. நடந்ததை
நெனச்சி கவலைப்படாதே. உனக்கு இன்னொரு புல்லாங்குழல் தரேன்” என்று பசுக்கள் ஆறுதல்
கூறின. புத்தம்புதிதாக இன்னொரு குழலை
வரவழைத்து அவனிடம் அளித்தன. பிறகு அவனோடு சிறிது நேரம் கொஞ்சியிருந்துவிட்டு
விண்ணுலகத்துக்குத் திரும்பின.
புல்லாங்குழலை எடுத்துச்
சென்ற காக்கை அரண்மனைக்குச் சென்று அரசனிடம் கொடுத்தது. அரசன் அந்தக் காக்கைக்கு
பலமுறை நன்றி சொன்னான். “கவலைப்படாதே
அரசே. எந்த சமயத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னை ஒரு நொடி நினைச்சிக்கோ.
நான் வந்து என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்” என்று சொல்லிவிட்டு பறந்துபோனது.
இனி, இளைஞனை வசப்படுத்தி அழைத்துவருவது எளிதான விஷயம் என நினைத்தான் அரசன்.
அடுத்தநாள் காலையில்
ஏற்கனவே மலையடிவாரத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களை அழைத்து அந்த இளைஞனை
அழைத்துவரும்படி சொன்னான். அவர்கள் அங்கு செல்லவே அஞ்சினர். “ஐயோ, அங்க அந்தப்
பசுக்கள் வந்து முட்டுமே” என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். “அப்படியெல்லாம்
ஒன்னும் நடக்காது. நான் சொல்றத நம்புங்க. போய் அழைச்சிட்டு வாங்க” என்று அவர்களை
அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தான்.
காலையில் சென்ற வீரர்கள்
அனைவரும் மாலையில் காயங்களோடு ஓடிவந்து அரசன் முன்னால் நின்றார்கள். “நீங்க போ
போன்னு சொன்னதால நாங்க கெளம்பிப் போனோம். நீங்க வரவே வராதுன்னு சொன்ன பசுக்கூட்டம்
இந்த முறையும் வந்துடுச்சி. எங்களையெல்லாம் முட்டிமுட்டி விரட்டியடிச்சிடுச்சி.
அந்த இளைஞன் ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். அவன்கிட்ட ஏதோ மந்திரம் இருக்குது.
ஒரு புல்லாங்குழல எடுத்து ஊதினா, எல்லாமே நடக்குது” என்று முறையிட்டார்கள்.
அவர்களை அனுப்பிவிட்டு தனிமையில்
உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கினான் அரசன். அவனுடைய புல்லாங்குழலை
காக்கை எடுத்துவந்த பிறகு இன்னொரு புல்லாங்குழல் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று
நினைத்துக் குழம்பினான்.
அந்தப் பிரச்சினைக்குத்
தீர்வு காண்பது எப்படி என பல கோணங்களில் யோசித்துப் பார்த்தான். ஒன்றும் பிடி
கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் காக்கையிடம்
உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்தபடி அதை மனத்துக்குள் நினைத்து
தியானித்தான். அடுத்து சில கணங்களிலேயே அவனுக்கு எதிரில் கா கா என கரைந்தபடி
காக்கை தோன்றியது.
”துக்கத்துக்கு என்ன
காரணம்? இன்னும் பிரச்சினை ஓயவில்லையா?” என்று கேட்டது. அரசன் நடந்த விஷயங்கள்
எல்லாவற்றையும் காக்கையிடம் பகிர்ந்துகொண்டான்.
காக்கை எந்தப் பதிலும்
சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தது. “ஏதோ
ஒரு பிழை நடந்திருக்குது. ஒரு ரெண்டுநாள் பொறுத்துக்கோ. நானே கண்டுபிடிச்சி சரி
செய்றேன்” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.
இளைஞன் உட்கார்ந்திருந்த
ஆலமரத்தின் வேறொரு கிளையில் சத்தம் காட்டாமல் அமர்ந்தபடி அவனுடைய நடவடிக்கைகளை
ஒன்றுவிடாமல் கவனிக்கத் தொடங்கிது காக்கை. நாலைந்து நாட்கள் அவனைக் கவனிக்கும்
வேலை நீடித்தது. அப்போதுதான் அவனிடம்
இரண்டு புல்லாங்குழல்கள் இருப்பதையும் துக்கமான நேரத்தில் இசைக்க ஒரு குழலையும்
மகிழ்ச்சியான சமயத்தில் இசைக்க இன்னொரு குழலையும் அவன் மாறிமாறிப் பயன்படுத்தும்
ரகசியத்தையும் அது கண்டுபிடித்தது. கடந்த முறை குழலை எடுக்கும்போது என்ன பிழை
நடந்தது என்பதை காகத்துக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. மேலும் ஒரு நாள் காத்திருந்து அவன்
மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இளைஞன் மகிழ்ச்சிக்குழலை
இசைத்துக்கொண்டிருந்த சமயத்தில், சந்தடி காட்டாமல் அவனுக்கு அருகில் சென்று, அவன் தனக்குப்
பக்கத்திலேயே வைத்திருந்த துன்பக்குழலைக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது.
விண்ணுலகத்திலிருந்த
பசுக்கள் இளைஞனின் இன்பக்குழலின் இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. தன் மைந்தன்
நலமாகவே இருக்கிறான் என நினைத்து மகிழ்ச்சியடைந்தன.
குழலின் இசையில் தன்னை
மறந்து கண்ணை மூடி லயித்திருந்த இளைஞன் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கண்களைத்
திறந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு அருகில் வைத்திருந்த
துன்பக்குழலைக் காணவில்லை என்பதை அவன் உணர்ந்தான். கீழே எங்காவது விழுந்திருக்குமோ
என அவனுக்கு சந்தேகம் வந்தது. மரத்திலிருந்து இறங்கிவந்து தரையெங்கும் தேடிப்
பார்த்தான். கிடைக்கவில்லை. கிளையிடுக்குளில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகத்துடன்
ஒவ்வொரு கிளையாக ஏறி நின்று மீண்டும் தேடிப் பார்த்தான். அங்கும் கிடைக்கவில்லை.
மனமுடைந்து மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.
புதையலைப்போல தனக்குக்
கிடைத்த அபூர்வமான குழலைத் தொலைத்துவிட்டோமே என அவன் மனம் துயரத்தில் மூழ்கியது.
தான் குழலைத் தொலைத்த செய்தியை எப்படியாவது தன் பசுக்களுக்குத்
தெரியப்படுத்தவேண்டும் என நினைத்தான். ஆனால் தன்னிடம் துன்பக்குழல் இல்லாத
நிலையில் அச்செய்தியைத் தெரிவிப்பது எப்படி என புரியாமல் குழம்பினான். பித்துப்
பிடித்தவனைப்போல மகிழ்ச்சிக்குழலை எடுத்து மீண்டும் மீண்டும் இசைத்தான் அவன்.
விண்ணுலகத்தில் இருந்தபடி அந்த இசையின் நாதத்தைக் கேட்ட பசுக்கள் தன் மைந்தன்
மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைத் தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவையும்
மகிழ்ச்சியில் திளைத்தன.
அப்போது தொலைவில் அரசன்
அனுப்பிய ஆட்களின் கூட்டமொன்று ஆலமரத்தை நெருங்கிவருவது தெரிந்தது. அவர்களை எப்படி
எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் மரத்தடியிலேயே அமைதியாக நின்றான். அவனை
நெருங்கிவந்த அரசனின் ஆட்கள் அவனைத் தூக்கி ஒரு சிம்மாசனத்தில் உட்காரவைத்து,
அதைத் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடந்துசென்றனர். கடுமையான தாக்குதலை
எதிர்பார்த்திருந்த அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவன் வருகையை ஆவலோடு
எதிர்பார்த்தபடி அரண்மனையின் வாசலிலேயே அரசன் நின்றிருந்தான். ”வருக வருக” என இளைஞனை
வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்தப்புரத்திலிருந்த
இளவரசியை தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் அவனுக்கும் அரசன் திருமணம்
செய்துவைத்தான். அங்கிருந்த அவைப்பெரியவர்கள் அவனை மகிழ்ச்சியோடு
வாழ்த்தினர்.
ஆசைப்பட்ட கணவன் கிடைத்ததை
ஒட்டி இளவரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அந்த இளைஞனால்
மகிழ்ச்சியோடு இருக்கமுடியவில்லை. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும்
என அவன் விரும்பினான். ஆனால் அதற்குச் சரியான வழி தெரியாமல் தவித்தான்.
ஒரு மாதம் கழிந்தது. அந்த
இளைஞன் முகம் மலரவே இல்லை. குழல் இசைப்பதையும் விட்டுவிட்டான். ஒவ்வொரு நாளும்
மலையடிவாரத்துக்குச் சென்று நெடுங்காலமாக தான் தங்கியிருந்த ஆலமரத்துக்கு அடியில்
சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவான். அவனிடம் மகிழ்ச்சிக்குழல் மட்டுமே
இருந்தது. மகிழ்ச்சியே இல்லாத அத்தருணத்தில் அக்குழலை எடுத்து இசைக்க அவன் மனம்
விரும்பவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அன்புக்குரிய பசுக்கள் எங்காவது
தென்படுகிறதா என அங்குமிங்கும் தேடிப் பார்ப்பான். பிறகு ஏமாற்றத்தோடு
திரும்பிவிடுவான்.
இப்படியே ஒரு மாதம்
ஓடிவிட்டது. துயரம் படிந்த இளைஞனுடைய முகம் மலரவே இல்லை. இளவரசியோடு முகம்
கொடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று அவள் கேட்டாலும் அவன் ஒரு பதிலும்
சொல்வதில்லை.
ஒருநாள் அவன் வழக்கம்போல
காலை உணவுக்குப் பிறகு மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது
அவனுக்குத் தெரியாமல் அந்த இளவரசியும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.
விண்ணுலகத்தில் வசித்துவந்த
பசுக்களும் இளைஞனிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே என நினைத்து குழப்பத்தில்
மூழ்கியிருந்தன. இன்பக்குழலின் இசையும் வரவில்லை, துன்பக்குழலின் இசையும் வரவில்லை
என்பதால் ஏதோ ஒரு சிக்கலில் அவன் சிக்கியிருப்பதாக அவை நினைத்தன. எதுவாக இருந்தாலும் ஒருமுறை நேரில் சென்று
பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து அதே நாளில் அவையும் பூமிக்கு வந்து சேர்ந்தன.
வழக்கமாக இளைஞன்
உட்கார்ந்திருக்கும் மரக்கிளையில் அவன் காணவில்லை. ஆலமரத்தைச் சுற்றி கண்ணுக்கு
எட்டிய தொலைவு வரைக்கும் அவனைத் தேடிப் பார்த்தன பசுக்கள். எங்கும் அவன் தென்படவில்லை.
ஆளுக்கு ஒருபக்கம் நடந்து சென்று தேடிப் பார்க்கலாம் என முடிவெடுத்து ஒவ்வொரு
பசுவும் ஒவ்வொரு பக்கம் நடந்துசென்றது.
மலையடிவாரத்தை நோக்கி வந்த
இளைஞன் மரத்தை நெருங்கிவரும் சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒரு பசுவைக் கண்டான். தன்
குழலோசை கேட்காமல் விண்ணுலகத்திலிருந்து தம் பசுக்கள் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை
என நினைத்து முதலில் அப்பசுவை அவன் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டே
இருந்தான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோற்றத்தில் தன் பசுவைப்போலவே அப்பசுவும்
காணப்பட்டதால் ஒரு சின்ன சந்தேகத்துடன் நின்றான்.
ஒரு காலத்தில் பசுக்களை
அழைக்க வழக்கமாக எழுப்பும் ஓசையை எழுப்பி அதை அழைத்தான். அவன் அழைப்புக்குரலைக்
கேட்டதும் அந்தப் பசு திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டது. உடனே ஓடோடி
வந்தது. அவனும் அதை நோக்கி ஓடினான். அதன் கழுத்தைப் பிடித்து நெற்றியில்
முத்தமிட்டான். அதன் முதுகில் ஏறிப் படுத்தான். ம்மே ம்மே என வெவ்வேறு விதமாக
குரலெழுப்பி அவனும் பசுவும் கொஞ்சினர். மறைவிடத்திலிருந்து அக்காட்சியைப் பார்த்த
இளவரசி ஆச்சரியத்தில் உறைந்துபோனாள். முதன்முறையாக அந்த இளைஞன் முகம்
மலர்ந்திருப்பதை அவள் பார்த்து மகிழ்ந்தாள். அவள் விழிகளிலிருந்து ஆனந்தக்கண்ணீர்
வடிந்தது.
அந்தப் பசு எழுப்பிய
குரலைக் கேட்டதும் வெவ்வேறு திசைகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்த பிற பசுக்களும்
அந்த இடத்தை நோக்கி ஓடிவந்தன. இளைஞனைப் பார்த்ததும் அவையும் மகிழ்ச்சியில்
துள்ளின. ஒவ்வொன்றும் ஓடிவந்து அவனை முட்டி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தது. ஏழு
பசுக்களிடையில் அவன் ஒரு சிறுவன் போல மகிழ்ச்சியோடு நின்றிருந்தான்.
கொஞ்சல் எல்லாம் முடிந்த
பிறகு அப்பசுக்களிடம் தன்னிடமிருந்த துன்பக்குழல் தொலைந்துபோன செய்தியைத்
தெரிவித்தான் அவன். குழல் இசைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்றும்
தெரிவித்தான். “கவலைப்படாதே” என்று சொன்ன ஒரு பசு அவனுக்கு புதியதொரு குழலைக்
கொடுத்தது. “இனிமேல் நீ இதையே துன்பக்குழலா பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தது. ஒரு
பெரிய புதையலைப் பெற்றுக்கொள்வதுபோல அவன் அக்குழலைப் பெற்றுக்கொண்டான்.
இளைஞனும் பசுக்களும்
உரையாடலில் மூழ்கியிருந்த நேரத்தில் இளவரசி தன் மறைவிடத்திலிருந்து வெளியே
வந்தாள். பசுக்களின் முன்னால் தோன்றி வணங்கினாள். இளைஞன் அவளை அங்கு சற்றும்
எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களையெல்லாம் பசுக்களிடம் சுருக்கமாகச்
சொல்லிவிட்டு, அவளை பசுக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.
அவனுடைய குழல்
தொலைந்துபோனதற்கு தானும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துவிட்டதாகத் தெரிவித்து
இளைஞனிடமும் பசுக்களிடமும் மனமார மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் அவள்.
”அவன் மேல நான் வச்ச
ஆசைதான் எல்லாத்துக்கும் காரணமே தவிர, எனக்கு வேற எந்த கெட்ட நோக்கமும்
இல்லை”
அவளுடைய முகத்தில்
வெளிப்படையாகத் தெரிந்த காதலை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான். அந்தப் பசுக்களும்
புரிந்துகொண்டன.
“நூறாண்டு காலம் மாறாத
அன்போடு நீடித்து வாழ்க” என இருவரையும் பசுக்கள் வாழ்த்தின. இருவரும் பசுக்களின்
கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
“குழல்களை பத்திரமா
வச்சிக்கோ. எப்ப வேணும்ன்னாலும் எங்களை நீ கூப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டே
விடைபெற்று ஆகாயத்தில் பறந்துசென்றன.
பசுக்களுக்கு விடைகொடுத்து
அனுப்பிய பிறகு இளவரசியும் இளைஞனும் வெகுநேரம் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை
பேசினார்கள். இளைஞன் தன் கதையை முழுமையாக அவளுக்கு விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.
பொழுது சாயும் வரைக்கும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு இருவரும்
அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
(கிழக்கு டுடே – இணைய இதழ் – 30.05.2025)