Home

Monday 27 July 2015

நினைவில் வாழும் கதைகள் - எஸ்.செந்தில்குமாரின் ‘அலெக்ஸாண்டர் என்கிற கிளி’

புத்தாயிரத்தாண்டிலிருந்து எழுதத் தொடங்கிய சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.செந்தில்குமார். வலிமையான சித்தரிப்பு மொழியும் மிகக்குறைந்த நுட்பமான வரிகள் வழியாகவே பாத்திரங்களை அறிமுகப்படுத்தி நடமாடவைத்துவிடும் ஆற்றலும் செந்தில்குமாருக்கு கைவந்த கலைகள். தற்செயலாக எங்கோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி தன்னிச்சையாக பயணப்படுவதுபோல அவருடைய சிறுகதைகள் தோற்றமளித்தாலும், கதையைப் படித்து முடித்ததும் ஓர் அம்பின் பயணத்தைப்போல மிகச்சீரானதாகவும் துல்லியமானதாகவும் அமைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். கடைத்தெரு, ரயில்வே ஸ்டேஷன், பூங்கா, அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, மண்டி என நடமாட்டம் மிகுந்த இடங்களில் கண்ணில் தென்படும் எந்த ஆண் பாத்திரத்தையும் பெண் பாத்திரத்தையும் மிகுந்த உயிர்த்துடிப்போடு தன் கதைக்குள் கச்சிதமாக கொண்டு வந்துவிடும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது. இது செந்தில்குமாருடைய மிகப்பெரிய பலம்.

பிரயாணம்

பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது.  ஆனால் கண்களைத் திறக்கவில்லை.  கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார்.  வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுச் சென்று மூன்றுமணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது.  விரைவாகவே எழுந்துவிடுவார் என்றும் பசிக்கு ஏதாவது கேட்டால் சூடான கஞ்சித் தண்ணீர் மட்டும் தந்தால் போதும் என்றும் வைத்தியர் சொல்லியிருந்தார். சில கணங்களுக்குப் பிறகுவீர்ப்பா வீர்ப்பாஎன அவருடைய குரல் மட்டும் எழுந்தது. தரையில் உட்கார்ந்து அவருடைய பாதங்களைத் தேய்த்து சூடு உண்டாக்கியபடி இருந்த வீரப்பன் சட்டென்று துள்ளியெழுந்து முசேயின் முகத்தைப் பார்த்தான்.  அக்கணமே அவர் அசைவற்ற ஆழத்துக்குப் போய்விட்டார். காதில் விழுந்த அவருடைய குரல் கனவா அல்லது நனவா என்று தடுமாறியது அவன் மனம்.  மெதுவாகமுசே முசேஎன்று இரண்டு மூன்று முறை அழைத்தான்.  அவர் படுத்திருந்த கோலத்தில் துளிகூட மாற்றமில்லை.
பாலேடு நிறத்தைக் கொண்ட அவர் உடல் நலிவின் காரணமாக மேலும் வெளுத்துப் போயிருந்தது.  மூன்று நாட்களாக மழிக்கப்படாத முடி கன்னமெங்கும் படர்ந்திருந்தது. அடிப்பகுதி பருத்து செதுக்கப்பட்டதுபோல காணப்பட்ட முசேயின் மூக்கையே வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றான் வீரப்பன்.. மூச்சு சீரான அளவில் தன்னிச்சையாக உட்செல்வதும் வெளியேறுவதுமாக இருந்தது.  அறையின் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தபடி மதாம் மரியாகண் தெறந்தாரா வீர்ப்பா?” என்று கேட்டாள்.இல்ல மதாம்என்றபடி முசேயின் காலடியில் உட்கார்ந்து பாதத்தை அழுத்தித் தேய்க்கத் தொடங்கினான்.

Monday 13 July 2015

அடைக்கலம்

                பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல் மிதப்பதுபோலவே இருந்தது உடல். காதுக்கு வெகு அருகில் யாரோ உறுமுவதுபோன்ற ஓசை கேட்டது. வேகமாகப் பொங்கிவந்த அலையொன்று அவன் நடந்துவந்த காலடித்தடங்களை அழித்துவிட்டுச் சென்றது. உச்சிவெயிலில் கண்கள் கூசின.

கனவுகள் அடர்ந்த காடு - விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’

சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் நிலைபாடு. ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஏராளமான அளவில் பணத்தைச் செலவுசெய்யவேண்டியிருக்கிறது. ஏராளமாக முதலீடு செய்பவர்கள் ஏராளமாக லாபத்தை எதிர்பார்ப்பது இயற்கையானது. தன் லாபம் பாதிக்காதபடி கலையம்சங்கள் இடம்பெறுவதில் அவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஒருபோதும் அது தன் எல்லையைத் தாண்டிவிடக்கூடாது. அடிப்படையில் அது ஒரு வணிகம் மட்டுமே என்பது இரண்டாவது அணியினரின் நிலைபாடு. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மீண்டும்மீண்டும் தம் நேர்காணல்களில்இது ஒரு வணிகம், இது ஒரு வணிகம்என்று அழுத்தம் கொடுத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்விரண்டு கருத்துகளும் தமிழ்ச்சினிமாவின் தொடக்கத்திலிருந்தே நிலவி வந்திருக்கின்றன. கலையாளுமை மிக்க இயக்குநர்களும் கலைவிருப்பம் கொண்ட தயாரிப்பாளர்களும் ஒன்றிணையும் தருணங்களில் கலையொருமை பொருந்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. மற்ற தருணங்களில் வணிகநோக்கத்தை நிறைவேற்றுகிற திரைப்படங்களே அதிக அளவில் வெளிவருகின்றன. அவற்றை கலையொருமை குறைந்த படங்கள் என்று சொல்லலாம். தமிழில் முதன்முதலாக 1917-ல் மெளனப்படம் எடுக்கப்பட்டு, 1931 முதல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றளவும் அது வெற்றிகரமாக தொடர்ந்தபடி இருக்கிறது.  தமிழ் சினிமாவின் வரலாறு ஒருவகையில் தமிழ் ரசனையின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். விட்டல்ராவ் எழுதியிருக்கும்தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்அந்தப் பார்வையைத் தொகுத்துக்கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ள முக்கியமான புத்தகமாகும்.