பதினேழாவது உலகத் திரைப்பட விழா பெங்களூரு மாநகரில் 29.01.2026 முதல் 06.02.2026 வரை லூலு மால் என்னும் வணிக வளாகத் திரையரங்குகளில் நடைபெற்றது. முதல்நாள் தொடக்கவிழா மட்டுமே நிகழ்ந்தது. அடுத்தநாள் காலையிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
லூலுமால் வணிக வளாகத்தில் மொத்தம் எட்டு அரங்குகள் உள்ளன. ஒவ்வொன்றும்
150 பேர் முதல் 350 பேர் வரை உட்கார்ந்து திரைப்படங்களைக் காணத்தக்க அரங்குகள். ஒவ்வொரு
நாளும் காலையில் பத்துமணிக்குத் தொடங்கி இரவு பத்து மணிக்கு முடிவடையும் வகையில் காட்சிகள்
வடிவமைக்கப்பட்டிருந்தன. ஏழு நாட்களில் அனைத்து அரங்குகளிலுமாக முன்னூறுக்கும் மேற்பட்ட
திரைப்படங்கள் திரையிடப்பட்டன. எதைப் பார்ப்பது, எதை விடுப்பது என்பது எப்போதும் விடுவிக்க
முடியாத புதிராகவே இருந்தது.
ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு படங்கள் பார்க்கக்கூடிய ஒருவர்
இந்தத் திரைப்பட விழாவில் தோராயமாக முப்பது படங்கள் பார்த்திருக்கலாம். என்னால் பதினைந்து
படங்கள் மட்டுமே பார்க்கமுடிந்தது. பல நேரங்களில் நான் பார்க்க விரும்பிய படத்துக்கு
நீண்ட நேரம் வரிசையில் நின்று வாசலை நெருங்கிச் செல்லும் போது இடங்கள் நிறைந்துவிட்டன
என்று அறிவித்துவிடுவார்கள். அந்த நேரத்தில் வேறொரு அரங்கில் நுழைந்து கிடைத்த படத்தைப்
பார்க்கத் தொடங்கிவிடுவேன். அந்த வகையிலும் ஒருசில நல்ல படங்கள் பார்க்க வாய்த்தன.
மொத்தத்தில் அது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.
விழா முடிவடைந்து ஒரு வாரத்துக்கு மேல் ஓடிவிட்டது. இப்போது
ஒவ்வொரு திரைப்படமாக மனத்தில் அசைபோட்டுப் பார்க்கிறேன். அவற்றில் ஆறு திரைப்படங்களை
மிகச்சிறந்த படங்கள் என்று நான் கருதுகிறேன். அவற்றின் காட்சிமொழி மறக்கமுடியாத சித்திரமாக
என் நெஞ்சில் பதிந்துள்ளது.
1958இல் வெளிவந்த ஒரு பழைய திரைப்படத்தைத்தான் இந்தத் திரைப்பட
விழாவில் முதல் படமாகப் பார்த்தேன். படத்தின் பெயர் கெய்ரோ ஸ்டேஷன். எகிப்து நாட்டுப்படம்.
யூசுஃப் சஹைன் என்பவர் இயக்கிய கருப்பு வெள்ளைத் திரைப்படம்.
கெய்ரோ ஸ்டேஷன் என்னும் படத்தின் பெயரைப் படித்ததும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் சிறுகதையை ஒரு கணம் நினைத்துக்கொண்டேன். அந்த ஸ்டேஷன் ஒருவருடைய அனுபவத்தில் ஒருநாள் அலுப்பும் சலிப்பும் மண்டிய இடமாகத் தோற்றமளிக்கிறது. இன்னொரு நாளில் அதே ஸ்டேஷன் தியாகமும் பெருந்தன்மையும் கருணையும் இரக்கமும் இணைந்து கனிந்த இடமாகத் தோற்றமளிக்கிறது. ஒரு மனப்பதிவு என்பது எப்போதும் அந்தக் கணத்துக்குரியது மட்டுமே, முழுமுற்றான வரையறையாக நாம் அந்த மனப்பதிவை நம்பிவிடக்கூடாது என்பதை அக்கதையின் வழியாகத்தான் புரிந்துகொண்டேன்.
ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்குரிய எல்லா விதமான பரபரப்போடும் சலசலப்போடும்
கெய்ரோ ஸ்டேஷன் ஆரம்பக்காட்சியில் திரையில் தெரியத் தொடங்கியதும் அந்த ஸ்டேஷனில் செய்தித்தாள்
கடை வைத்திருக்கும் பெரியவர் ஒரு கதையைப் பார்வையாளருக்குச் சொல்லத் தொடங்குகிறார்.
அது ஸ்டேஷனைப்பற்றிய கதையல்ல. அந்த ஸ்டேஷனில் அனாதையாக ஆதரவற்றுக் கிடந்த மனவளர்ச்சி
குறைந்த இளைஞனொருவனை அழைத்துவந்து ஆதரித்து வளர்த்த கதை. கினுவா என்னும் அந்த இளைஞனின்
கதையோடு கெய்ரோ ஸ்டேஷன் கதையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு சில ஆரம்ப வாக்கியங்களுக்குப்
பிறகு அவர் உரை காட்சிகளாகவே விரிவடையத் தொடங்குகின்றன.
கரிய எஞ்சின் புகை மேல்நோக்கி ஒரு மேகத்தைப்போல நெளிந்துநெளிந்து
செல்ல, ரயில்கள் நடைமேடைக்கு வருவதும் புறப்படுவதுமாக இருக்கிறது. எண்ணற்ற பிரயாணிகள்
நடைமேடையில் நிறைந்திருக்கிறார்கள். பிரயாணிகளுக்குப் பின்னால் சுமைகூலித் தொழிலாளர்கள்
அவர்களுடைய பெட்டிகளைச் சுமந்தபடி செல்கிறார்கள். விற்பனையாளர் உரிமம் பெறாத இளம்பெண்கள்
வாளியில் குளிர்பான பாட்டில்களை நிரப்பி எடுத்துவந்து பிரயாணிகளிடையில் புகுந்து சாமர்த்தியமாக
விற்பனை செய்கிறார்கள். உரிமம் பெறாத விற்பனைப்பெண்களை கையும் களவுமாகப் பிடிக்கும்
மும்முரத்தில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்குகிறார்கள் காவலர்கள். அவர்களை ஏமாற்றிவிட்டு கண்மூடிக் கண் திறக்கும்
நேரத்தில் குளிர்பானங்களோடு தப்பித்து விடுகிறார்கள் பெண்கள். இப்படி கணம்தோறும் பரபரப்போடு
இயங்கியபடி இருக்கும் கெய்ரோ ஸ்டேஷனுக்கு நடுவில்தான் செய்தித்தாட்களை விற்பனை செய்பவரின்
கடையும் இருக்கிறது.
ஒருநாள் சுவரோரமாக பாதி உடல் நிழலிலும் பாதி உடல் வெயிலுமாக
படுத்துக் கிடக்கும் இளைஞன் மீது பரிதாபப்பட்டு சாப்பாடு கொடுத்துக் காப்பாற்றுகிறார்
அந்தப் பெரியவர். கால் ஊனம் உள்ளவன் அவன். ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ச்சியும்
இல்லாதவன். அவனைப் பார்க்கப்பார்க்க அவருக்கு வருத்தமாக இருக்கிறது. தன்னுடைய கடையிலிருந்து
செய்தித்தாட்களை எடுத்துச் சென்று நடைமேடைகளில் அலைந்து விற்பனை செய்யும் வேலையை அவனுக்குக்
கொடுக்கிறார் அவர். அந்த விற்பனைத்தொகையில் அவனுக்குச் சம்பளமும் கொடுக்கிறார். ஸ்டேஷனிலேயே
ஒரு மூலையில் சிதைந்து பாழடைந்த ஒரு கூடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு தங்கிக்கொள்ளச்
சொல்கிறார். வேளாவேளைக்குச் சாப்பாடு சாப்பிடத் தொடங்கியதுமே அவன் உடலில் ஒரு நிமிர்வு
ஏற்படுகிறது. அவன் பெயர் கினாவி.
அங்கு குளிர்பானம் விற்பனை செய்யும் பெண்கள் கினாவியை வம்புக்கிழுத்து
உரையாடிப் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக வைத்துக்கொள்கிறார்கள். அந்தப் பேச்சில் எந்தப்
பொருளும் இல்லை. இரண்டு ரயில்கள் வருவதற்கும் செல்வதற்கும் இடைப்பட்ட நேரத்தைப் போக்குவதற்கான
அரட்டையாகத்தான் அந்தப் பெண்கள் அதை நினைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மனநிலை சரியில்லாதவனிடம்
பேசி வம்பிழுப்பதை அவர்கள் ஒருவித களியாட்டமாகவே நினைக்கிறார்கள். ஆனால் அவனோ அவர்களுடைய
பேச்சை உண்மையாகவே எடுத்துக்கொள்கிறான். ஹன்னுமா
என்னும் இளம்பெண்ணின் உரையாடல் கினாவியின் மனத்துக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவளை அவன் உளமாரக் காதலிக்கத்
தொடங்குகிறான்.
திடீரென ஒருநாள் ஒரு சுமைகூலித் தொழிலாளிக்கு, சுமைப்பெட்டியோடு
பிரயாணியை ரயிலில் ஏற்றிவிட்டு இறங்கும்போது தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து காலில்
அடிபட்டுவிடுகிறது. அனைவரும் சேர்ந்து அவனைக் காப்பாற்றுகிறார்கள். தொழிலாளி பாதிக்கப்படும்போது
நிர்வாகம் அதில் அக்கறை காட்டுவதில்லை. எந்த மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை. இப்படி
நடைபெற்ற பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவுபடுத்தி, தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பும்
உரிமையும் கிடைக்கும் வகையில் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குரலெழுப்புகிறான்
ஒருவன்.
நிர்வாகத்தை எதிர்க்க அஞ்சிய பல தொழிலாளர்கள் அவனுடைய முடிவை
ஆதரிப்பதில்லை. குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஒருசிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவு தருகிறார்கள்.
பலர் அது வேண்டாத வேலை என்று அதை எதிர்க்கிறார்கள். நிர்வாகம் அனைவரும் ஒற்றுமையாகச்
சேர்ந்து வந்தால் சங்கம் அமைக்கும் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று
தேவையானவற்றைச் செய்துதர முடியும் என வாக்களிக்கிறது. எப்படியாவது ரயில்வே தொழிற்சங்கத்தை
உருவாக்கியே தீரவேண்டும் என்னும் உறுதியோடு மனம் தளராமல் தொழிலாளர்களை ஒன்று திரட்டப்
படாத பாடு படுகிறான் அவன். அதுவே ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. அவன் பெயர் அபு
சிரி.
அவன் தன் லட்சியத்துக்காக உண்மையிலேயே பாடுபடுகிறான். அந்த ஸ்டேஷனில்
குளிர்பானம் விற்பனை செய்கிற ஹன்னுமாவை அவன் மனம் விரும்புகிறது. அவளும் அவனை
மணக்க விரும்புகிறாள். இருவருக்குமிடையில் காதல் வளர்கிறது. அவளைத் திருமணம் செய்துகொண்டு
இல்லறவாழ்வைத் தொடங்க நினைக்கிறான். அதுவும் அவனுடைய ஒரு லட்சியம்.
இரண்டு இலட்சியங்களிலும் அவன் தோற்றுவிடும் வகையில் ஒவ்வொரு
நாளும் ஸ்டேஷனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிக்கலானபடி உள்ளன. ஒவ்வொரு சிக்கலுக்கும்
தீர்வு கண்டு, இறுதியாக இரு இலட்சியங்களிலும் வெற்றி பெறுகிறான் அபு சிரி. கெய்ரோ ஸ்டேஷனின்
வரலாற்றில் அபு சிரிக்கு ஓர் இடம் ஏற்படுகிறது.
கால் ஊனம் கொண்ட, மனவளர்ச்சியற்ற கினாவி பகல் முழுக்க நடைமேடைகளில்
அலைந்து அலைந்து செய்தித்தாட்களையும் பத்திரிகைகளையும் விற்கிறான். பத்திரிகைகளில்
வெளிவரும் நடிகைகளின் படங்களை வெட்டிச் சேகரித்து வைப்பதும் ஓய்வு நேரங்களில் அவற்றைப்
பிரித்து தனக்கு முன்னால் அடுக்கி வேடிக்கை பார்ப்பதும் அவன் பொழுதுபோக்கு.
நடைமேடையில் ரயில்கள் வந்து நின்றதும் மின்னல் வேகத்தில் பெட்டிக்குள்
புகுந்து குளிர்பானங்களை விற்றுவிட்டு இறங்கி ஓடும் விற்பனைப்பெண்ணான ஹன்னுமாவை அவன்
ஒருதலையாக மனமார விரும்புகிறான். ஒரு தருணத்தில்
அவளிடம் அதைத் தெரியப்படுத்தவும் அவன் தயங்கவில்லை. ஆனால் அவள் அதை நிராகரித்துவிடுகிறாள்.
அது அவனுக்குப் பேரிடியாக இருக்கிறது. தனக்குக் கிட்டாத அவள் வேறு யாருக்கும் கிடைத்துவிடக்
கூடாது என்கிற வெறி எழுகிறது. அவளைக் கொல்லத் திட்டமிட்டு ஒரு நீண்ட கத்தி வாங்கி வைத்துக்கொண்டு
அவளைக் கொல்வதற்காக ஸ்டேஷன் முழுதும் அலைகிறான்.
ஒரு குறிப்பிட்ட நாளில் உரிமமற்ற விற்பனைப்பெண்களின் பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் அதிரடியாக ஸ்டேஷனில் இறங்கி விற்பனைப்பெண்களை
விரட்டுகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் குளிர்பான பாட்டில்கள் அடங்கிய வாளிதான் அவர்களுக்கான
அடையாளம். காவலர்கள் விரட்டி வருவதை அறிந்த ஹன்னுமா தற்செயலாக ஒரு பெட்டிக்கு அருகில்
நின்றிருந்த கினாவியின் அருகில் வாளியைப் போட்டுவிட்டு அவனுடைய கூடாரத்துக்கு எடுத்துச்
சென்றுவிடுமாறும் பிறகு வந்து எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துவிட்டு தப்பித்துச்
சென்றுவிடுகிறாள்.
ஹன்னுமாவைக் கொல்வதற்கு தக்க தருணத்துக்காகக் காத்திருந்த கினாவி அந்த வாளியை
உடனடியாக தன் கூடாரத்துக்கு எடுத்துச் சென்று மறைத்துவைக்கிறான். அதை எடுத்துச் செல்ல வரும்போது அவளைக் கொல்லவேண்டும்
என திட்டமிட்டு கத்தியோடு காத்திருக்கத் தொடங்குகிறான்.
பொழுது சாயும் வரை காவலர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறைவிடங்களில்
மறைந்திருந்த பெண்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து
ஒன்றிணைகிறார்கள். ஹன்னுமா தன் தோழியிடம் கினாவியைச் சந்தித்து தன் வாளியை வாங்கிக்கொண்டு
வருமாறு சொல்லிவிட்டு தன் இருப்பிடத்துக்குச் செல்கிறாள்.
வாளியை எடுக்க வந்த பெண்ணை இருட்டில் ஹன்னுமா என நினைக்கும்
கினாவி அவளைக் கொன்று சரக்குரயிலில் ஏற்றுவதற்காக கொண்டுவந்து போடப்பட்டிருந்த ஒரு
நீண்ட பெட்டிக்குள் அவளைத் தள்ளி அடைத்து மூடிவிட்டுச் செல்கிறான். அபு சிரி அந்தப்
பெட்டியை தன் தள்ளுவண்டியில் ஏற்றித் தள்ளிக்கொண்டு வந்து சரக்கு ரயில் பெட்டிக்குள்
வைத்துவிட்டுச் செல்கிறான்.
சிறிது நேரத்தில் அந்தப் பெட்டியிலிருந்து வழிந்த ரத்தத்தைப்
பார்த்து கூச்சலிட ஒரு பெருங்கூட்டமே அங்கு சேர்ந்துவிடுகிறது. புறப்பட வேண்டிய சரக்குரயில்
நிறுத்திவைக்கப்படுகிறது. காவல் துறையினர் ஓடிவந்து சோதனை செய்யும்போது பெட்டிக்குள்
ஒரு பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்கின்றனர். அந்தப் பெட்டியை ஏற்றியவன்
அபு சிரி என்பதால் அவனைக் கைது செய்கிறார்கள் காவல் துறையினர்.
இரு தரப்பிலும் வாக்குவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில்
இறந்தவளாகக் கருதப்பட்ட பெண்ணின் உடல் அசைவதை அனைவரும் பார்க்கிறார்கள். அக்கணமே அவளைப்
பெட்டியிலிருந்து தூக்கி வெளியே படுக்கவைத்து முதலுதவி செய்து காப்பாற்றுகின்றனர்.
அங்கே நிகழும் உரையாடலைக் கேட்டுவிட்டு, தன்னைக் கொன்றவன் அபு சிரி அல்ல என்றும், கினாவி
என்றும் அவள் தெரிவிக்கிறாள்.
உடனே அவனை அனைவரும் தேடி ஓடுகின்றனர். அவன் அவர்களிடமிருந்து
தப்பித்து ஓடுகிறான். போகும் வழியில் ஹன்னுமா நடந்துவருவதைப் பார்த்ததும் ஒரு பிணைக்கைதியாக
அவளைத் தாவிப் பற்றிக்கொள்கிறான். யாராவது நெருங்கிவந்தால் அவளைக் கொன்றுவிடுவதாகச்
சொல்லி மிரட்டுகிறான். வேறு வழியின்றி, சற்று தொலைவிலேயே அனைவரும் நின்றுவிடுகிறார்கள்.
ஒருவராலும்
அவனை நெருங்கமுடியவில்லை. அவன் கையிலிருக்கும் கத்திமுனை ஹன்னுமாவின் கழுத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.
ஒரு தந்தையைப்போல அவனைக் காப்பாற்றி வளர்த்த செய்தித்தாள் கடைக்காரர்,
துணிந்து அவனோடு உரையாடியபடி அவனை நோக்கி நடந்து செல்கிறார். இருவருக்கும் தானே திருமணம்
செய்துவைப்பதாகவும் அவனை மாப்பிள்ளைக்கோலத்தில் பார்ப்பதற்காகவே மாப்பிள்ளை கோட்டோடு
வந்திருப்பதாகச் சொல்லி ஒரு புதிய கோட்டை கண்முன்னால் காட்டியபடி அவனை மெல்ல மெல்ல நெருங்கிச் செல்கிறார். திருமண
ஆசை கினுவாவை நெகிழவைக்கிறது. கோட்டை வாங்குவதற்காக ஆசையோடு கையை நீட்டுகிறான். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக்
கோட்டாலேயே அவன் முகத்தை மூடிவிட்டு அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிவிடுகிறார்
அந்தப் பெரியவர். அடுத்த கணமே காவலர்கள் அவனை நெருங்கி அவனைப் பிடித்து கையில் விலங்கு
மாட்டி கைது செய்து இழுத்துச் சென்றுவிடுகின்றனர்.
சிறைப்பட்டுவிட்ட கினாவி ஒருவித இயலாமையுடனும் ஏமாற்றத்தோடும்
ஹன்னுமாவையும் பெரியவரையும் பிறரையும் பார்த்தபடி செல்கிறான். அவனுடைய நிறைவேறாத காதல்
ஒரு துளியாக அந்தக் கூட்டத்தில் கரைந்துபோகிறது.
கெய்ரோ ஸ்டேஷனின் வரலாற்றில் கினாவிக்கு ஓர் இடம் ஏற்படுகிறது.
கத்திக்காயம் பட்ட பெண்ணுக்கும் தாக்குதலால் அடிபட்ட காயங்களோடு
நடுங்கிக்கொண்டிருந்த ஹன்னுமாவுக்கும் பிற விற்பனைப்பெண்கள் சேர்ந்து நின்று உதவி செய்து
இயல்புநிலைக்குக் கொண்டுவருகிறார்கள். மெல்ல மெல்ல திகைப்பிலிருந்து மீண்டு வந்த அவர்களை
அனைவரும் சூழ்ந்து நின்று ஆதரவோடு உரையாடத் தொடங்குகிறார்கள். குளிர்பான விற்பனைப்பெண்கள்
இல்லாமல் கெய்ரோ ஸ்டேஷனின் வரலாற்றை ஒருவராலும் எழுதமுடியாது.
பசியால் ஒடுங்கிக் கிடந்தவனைக் கண்டெடுத்து ஆதரவு அளித்து வாழ்க்கை
கொடுத்த கையாலேயே அவனைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பில் சிக்கிக்கொண்ட
தருணத்தை நினைத்து தன்னைத்தானே வெறுத்துக்கொள்கிறார் அந்தப் பெரியவர். கினுவா பார்க்கும் பார்வையை அவரால் எதிர்கொள்ள முடியாமல்
திரும்பிக்கொள்கிறார். அனைவருக்கும் ஆதரவு அளித்து இதமாகப் பேசும் தன்னுடைய இயல்பு
ஒரு ஆயுதமாகவும் தந்திரமாகவும் மாறிவிட்டதை நினைத்து கசந்துபோகிறார் அவர். ஒரு பெரிய
தோப்பில் நிற்கும் பழைய ஆலமரத்தைப்போல கெய்ரோ ஸ்டேஷனின் வரலாற்றில் ஒரு பிரதான பாத்திரமாக
அவர் காட்சியளிக்கிறார்.
கினுவா கைதாகி காவலர்கள் அழைத்துச் சென்ற பிறகு ஒரு முக்கியத்
திருப்பம் ஏற்படுகிறது. அபு சிரியின் தூய அர்ப்பணிப்புணர்வு உள்ள உழைப்பை பிற தொழிலாளர்கள்
அனைவரும் புரிந்துகொள்கின்றனர். அனைவரும் அவனுக்கு ஆதரவு அளிக்க, நிர்வாகத்தின் உதவியோடு
அந்த ஸ்டேஷனில் ஒரு தொழிற்சங்கம் உருவாகிறது. கெய்ரோ ஸ்டேஷன் வரலாற்றில் அது ஒரு முக்கியமான
தருணமாக அமைகிறது.
வரலாற்றின் பல அடுக்குகளைக் கொண்ட ஒரு தருணத்தைக் கட்டியமைத்து
கெய்ரோ ஸ்டேஷன் கதையை இயக்குநர் சொல்லியிருந்த விதம் அருமையாக இருந்தது. எல்லா வகையிலும்
நிறைவான திரைப்படம். குமாரபுரம் ஸ்டேஷன் சிறுகதையைப்போலவே கெய்ரோ ஸ்டேஷனும் பலவிதமான
உணர்ச்சித்தொகுப்புகளின் அடுக்காக இருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
இன்னொரு குறிப்பிடத்தக்க திரைப்படம் டிஜே அஹமத். துருக்கி மொழியில் ஜார்ஜி எம்.உன்கோவ்ஸ்கி என்னும் இயக்குநர் இயக்கிய திரைப்படம். டிஜே என்பது டிஸ்க் ஜாக்கி என்பதன் சுருக்கம். இசைப்பாடலைப் பாடிப்பாடிப் பரப்புகிறவன் என்பது பொருள். நகரத்துப் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் அஹமத் என்பவனின் கதைதான் படத்தின் மையம்.
இசையில் அளவற்ற நாட்டம் கொண்டவன் அஹமத். அவனும் அவனுடைய நண்பனொருவனும்
சேர்ந்து கைப்பேசியில் இசைப்பாடலை ஒலிக்கவிட்டு
அதன் தாளத்துக்குத் தகுந்தபடி உடலை அசைத்து அந்த இசையில் மெய்மறந்திருக்கும் சூழலோடுதான்
முதல் காட்சி தொடங்குகிறது. அந்தக் கனவின் இன்பத்துக்குக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலிருக்கும்
வேறுபாடுகள் அவன் முன் எழுந்து அவனைப் பின்னோக்கி இழுக்கின்றன. ஆயினும் கனவின் மீது
கொண்ட பற்றின் காரணமாக இடைவிடாமல் போராடி, சரிந்துவிடாமல் மேலெழுந்துவந்து இசையோடு
இணைந்துகொள்வதுமாக அடுத்தடுத்த காட்சிகள் இடம்பெறுகின்றன.
அஹமத் குடும்பத்தின் மூத்த மகன். அவனுக்கு பத்து
வயதில் ஒரு தம்பி இருக்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய தாயார் நோய்வாய்ப்பட்டு
இறந்துவிட்டார். அம்மாவின் மரணத்தை ஏற்கமுடியாத இளையமகன் பேச்சிழந்து மெளனத்தில் உறைந்துவிடுகிறான்.
அவர்களுடைய அப்பாவுக்குச் சொந்தமாக ஆடுகள் உள்ளன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது,
பால் கறந்து விற்பனைக்கு எடுத்துச் செல்வது எல்லாவற்றையும் அவரே செய்கிறார்.
ஒருநாள் நகரத்தில் வசிக்கும் பேராசை பிடித்த வைத்தியரொருவர்
தன்னால் பேச்சு வராதவருக்கு பேச்சு வரவழைக்கமுடியும் என்று சொன்னதைக் கேட்டு மதி மயங்கிவிடுகிறார்
அந்தத் தந்தை. உடனே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பள்ளியிலிருந்து அஹமத்தை அழைத்து
வந்துவிடுகிறார். இளையவனின் மருத்துவம் நீடிக்கும் வரை வீட்டுப் பொறுப்பையும் ஆடுகளை
மேய்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வைக்கிறார். முதல்நாள் மாலைவரையில் இசையே வாழ்க்கை
என இருந்த அஹமத்தின் நிலைமை தலைகீழாகத் திரும்பிவிடுகிறது. ஆடு மேய்ப்பதே அவன் வாழ்க்கை
என மாறிவிடுகிறது.
அவன் அடிக்கடி இசை கேட்பது அவனுடைய அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.
வீட்டில் மறைத்துவைத்திருந்த இசைக்கருவிகளைத் தேடியெடுத்து உடைத்தெறிகிறார். அதிர்ச்சியின்
காரணமாக நின்றுவிட்ட பேச்சு என்றேனும் ஒருநாள் திரும்ப வரும் என்று தான் சொல்வதை நம்பாமல்
வைத்தியத்துக்குத் தினந்தோறும் தம்பியை அழைத்துக்கொண்டு அலைக்கழிக்கும் அப்பாவை அவனுக்குப்
பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையிலான சீரற்ற உறவு பல கசப்புகளுக்குக் காரணமாகிறது.
ஒருநாள் இரவில் ஆடுகள் பட்டியிலிருந்து வெளியேறி தப்பிவிடுகின்றன.
நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக எழுந்த அஹமத் பட்டியில் ஆடுகள் இல்லாததைக் கண்டு திகைத்து
உறைந்துவிடுகிறான். பிறகு டார்ச் லைட் உதவியோடு வழக்கமாக மேய்வதற்கு அழைத்துச் செல்லும்
திசையில் தேடிச் செல்கிறான். எங்கும் இல்லை.
நடுக்காட்டிலிருந்து எழுந்து வந்த இசையின் ஒலி அவனைத் திசை திருப்புகிறது.
இசை வந்த திசையில் நடந்து செல்கிறான். அங்கு ஒருசில இளைஞர்களும் இளம்பெண்களும்
இசையும் நடனமும் பழகுவதை ஒதுங்கியிருந்து பார்க்கிறான். அக்கூட்டத்தில் அவனுடைய கிராமத்தைச் சேர்ந்த பணக்கார
வீட்டுப் பெண்ணொருத்தியும் இருக்கிறாள்.
சிறிது நேரத்தில் அவனுடைய ஆடுகள் தாமாகவே அங்கு வந்து சேர்கின்றன.
ஆடுகளைக் கண்ட இளைஞர்கள் விளையாட்டு வேகத்தில் அவற்றின் முன் உச்ச ஸ்தாயியில் இசையை
முழக்குகிறார்கள். உடனே ஆடுகள் மிரண்டு நாலாதிசையிலும் ஓடுகின்றன. அஹமத் அவற்றைத் தேடிக்
கண்டுபிடித்து ஒன்றிணைத்து தன் வீட்டுக்கு நடந்துசெல்கிறான். பட்டியில் அடைக்கும் சமயத்தில்
எண்ணிப் பார்க்கும்போது ஓர் ஆடு குறைவதை அவன் உணர்கிறான். கண்டுபிடிக்க முடியாத அந்த
ஆட்டின் காரணமாக அவன் மீது அப்பா கொண்டிருக்கும் கசப்பு அதிகரிக்கிறது. அவன் படுக்கையை
அறையிலிருந்து ஆட்டுக்கொட்டடிக்கு மாற்றிவிடுகிறார். அதுதான் அவர் அளிக்கும் தண்டனை.
அமைதியாக அவன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
அடுத்த நாள் வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறான்
அஹமத். தற்செயலாக காற்றில் மிதந்துவந்த இசைத்துணுக்கு அவனைத் திரும்பிப் பார்க்கவைக்கிறது.
அதே புல்வெளியில் வேறொரு மூலையில் செல்வந்தர் வீட்டு இளம்பெண்ணும் பிற பெண்களும் கைப்பேசியில்
பதிவு செய்த இசையை ஒலிக்கவிட்டு நடனமாடிப் பழகுவதைப் பார்க்கிறான்.
இசையின் நாட்டத்தால் அவன் அவர்களை நெருங்கிச் செல்கிறான். இசை
இருவரும் உரையாடுவதற்கு ஒரு பொது விஷயமாக மாறுகிறது. தன்னிடம் இதைவிட சிறப்பான இசைக்கோவைகள்
இருக்கின்றன என்றும் தம் வீட்டில் இணைய இணைப்பு இல்லாததால் அவற்றைக் கேட்க முடிவதில்லை
என்றும் அவன் தெரிவிக்கிறான். அவள் தன் வீட்டின் இணைய இணைப்பின் கடவுச்சொல்லை அவனுக்குத்
தெரிவிக்கிறாள். தேவைப்படும்போது தன் வீட்டுக்கு
அருகில் வந்து நின்று கேட்கத் தடையில்லை என்றும் சொல்கிறாள். அன்றிரவு அவளுக்கு அவன்
அவ்வகையில் சில புதிய இசைக்கோவைகளை அனுப்பிவைக்கிறான்.
அந்தப் பெண்ணின் குடும்பமோ இசைக்கும் நடனத்துக்கும் எதிராக,
பழமையில் ஊறிய இஸ்லாமியக் குடும்பம். அந்தப் பெண்ணுக்கு அவள் வீட்டினர் திருமண ஏற்பாடுகளைச்
செய்கிறார்கள். அவளுக்கு அதில் விருப்பமில்லை. தன் இசையார்வத்தை வெளிப்படையாகக் காட்டினால்
மாப்பிள்ளை வீட்டார் மணத்தைத் தாமாகவே நிறுத்திவிடுவார்கள் எனத் திட்டமிடுகிறாள். ஆகவே
புதிய இசையையும் நடனத்தையும் இளைஞனின் உதவியோடு கற்று, ஒருநாள் ஒரு நிகழ்ச்சியில் ஆடுகிறாள்.
இளைஞனும் அவளும் காதல் வசப்படுகிறார்கள். அவள் திட்டமிட்டபடி திருமணம் நின்றுவிடுகிறது.
அதனால் வெகுண்டெழுந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் இளைஞன் அவமானப்படுத்தப்படுகிறான்.
தன் மகன் தலைகுனிந்து நிற்கும் தருணத்தில் அவனுக்காக அந்த ஊரில்
அவனுடைய அப்பா மட்டுமே குரல் கொடுத்துப் பேசுகிறார். அனைவரும் மெளனமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.
அடிபட்ட மகனை ஆதரவோடு அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவருகிறார் அவர்.
அடுத்தநாள் இரு பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு ஆடு மேய்க்க
தந்தையே செல்கிறார். பணம் செலவு செய்து பிள்ளைகளுக்கு பாட்டிசைக்கும் கருவி வாங்கிக்
கொடுக்கிறார். அதற்குப் பிறகான நாட்களில் பாட்டிசைக்கும் கருவியைக் கழுத்தில் மாட்டி
இசை கேட்டபடி இரு சகோதரர்களும் ஒன்றாக ஆடு
மேய்க்கின்றனர். பெண்ணின் தந்தை அவளை அடுத்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். அந்த
இளைஞன் காதலில் தோற்றுவிடுகிறான். ஆனால் அந்தத் தோல்விதான் அப்பா - மகன் உறவை சரிசெய்கிறது.
ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெறுகிறான் அஹமத். மனநிறைவளித்த படம்.
(தொடரும்.........)
(பேசும் புதிய சக்தி - மார்ச் 2026)

