Home

Sunday, 22 March 2026

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 - (பகுதி 2)

 

இன்னொரு குறிப்பிடத்தக்க படம் ’இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடெண்ட்’. பெர்சிய மொழிப்படம். ஜாஃபர் பனாஹி என்னும் இயக்குநர் இயக்கிய படம். ஈரானிய அரசைத் தொடர்ந்து விமர்சிப்பவர் என்பதால் பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் அவர்.

செயற்கைக்கால் பொருத்திய ஒருவர் நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியோடும் சிறுமியான தன் மகளோடும் இருளடர்ந்த பாதையில் காரோட்டியபடி வரும் காட்சியோடு திரைப்படம் தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் ஒரு நாய் மீது கார் மோதிவிட, அங்கிருந்து தூக்கியெறியப்பட்ட நாய் சிறிது தொலைவில் விழுந்து இறந்துவிட்டது. அதை எதிர்பாராத விபத்து என்று சொல்கிறார் தந்தை. முதன் முறையாக ஒரு மரணத்தை நேருக்கு நேர் பார்த்த சிறுமி அதை கொலை என்று முனகுகிறாள். இரண்டு பதில்களும் இருவிதமான கோணங்கள். இந்தத் திரைப்படத்தை மொத்தமாகத் தாங்கி நிற்கும் இருவேறு கோணங்கள் அவை.

ஒருகணம் அக்காட்சி உறைந்து மீண்டும் இயங்கத் தொடங்கும்போது அவர் நின்றுவிட்ட காரை மீண்டும் இயக்கத் தொடங்குகிறார். அது இயங்கவில்லை. உடனே காரிலிருந்து இறங்கிச் சென்று காரைப் பரிசோதிக்கிறார்.   தற்செயலாக எதிர்த்திசையில் வந்த ஒரு பயணி தன் வாகனத்தை நிறுத்தி தற்காலிகமாக பழுது நீக்கிக் கொடுக்கிறார். பழுதை முழுமையாக நீக்க, மெக்கானிக்கைப் பார்க்கும்படி ஆலோசனை சொல்லிவிட்டுச் செல்கிறார். குறைவான வேகத்தோடு  காரை ஓட்டிக்கொண்டு வந்த  அவர் வழியில் மூடுவதற்குத் தயாராக இருந்த ஒரு மெக்கானிக் ஷெட் அருகில் காரை நிறுத்தி உதவி கேட்கிறார்.

கடையில் வேலை செய்யும் இளைஞன் இரக்கம் கொண்டு காரைச் சரிசெய்ய முயற்சி செய்கிறான். தனியனான அவனுக்கு உதவும்பொருட்டு கடைக்குள் இருந்த டூல்ஸ் பாக்ஸை அவரே எடுத்துவரச் செல்கிறார். சரக்சரக்கென ஓசையெழ செயற்கைக்காலோடு அடியெடுத்துவைத்து நடக்கும் அவருடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு மாடியில் இருந்த பிரதான மெக்கானிக்  வகீத் திகைத்து, இருக்கையிலிருந்து எழுந்து மறைந்து நின்று பார்க்கிறான். அந்தக் காலடிச்சத்தம் அவனை என்னவோ செய்கிறது. ஏதேதோ பழைய நினைவுகளைக் கிளறிவிடுகின்றது.

அரசியல் கைதியாக ஈரானியச் சிறையில் கண்களை மூடப்பட்ட நிலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நேரத்தில் தன்னையும் தன் கூட்டாளிகளையும் சித்திரவதை செய்த அதிகாரியின் அதே காலடிச்சத்தம். வகீத்துக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சட்டென்று மறைந்து நின்று அவரைக் கவனிக்கிறான். பழுது நீங்கியதும் காரை அவர் ஓட்டிச் செல்கிறார். சிறிது இடைவெளி விட்டு அவர் பின்னாலேயே தொடர்ந்து சென்று அவர் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு திரும்புகிறான் .

அடுத்தநாள் அவரை அந்த வீட்டிலிருந்து கடத்தி, கைகால்களையும் கண்களையும் கட்டி சிறைபிடிக்கிறான். தன் காரில் அவனை ஒரு பெட்டிக்குள் அடைத்து   அருகிலிருக்கும் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்கிறான். பெரிய குழியை வெட்டி அவனை உயிருடன் புதைக்கவேண்டும் என்பது அவன் திட்டம். சிறையில் அந்த அதிகாரியால் அவன் பட்ட அவமானங்களும் அடி உதைகளும் அவனை மூர்க்கம் கொள்ளவைக்கின்றன.

அந்த அதிகாரி அவரே என்பதில் வகீத்துக்குச் சந்தேகமில்லை. ஆயினும் அவர் வாயாலேயே அவருடைய அடையாளத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவன் விரும்புகிறான். “நீ இக்பால்தானே?” என்று கேட்கிறான். அவர் இல்லை என்று மறுக்கிறார். “என்னால் உன் குரலையும் உன் செயற்கைக்காலை இழுத்துக்கொண்டு நடந்துவரும் சத்தத்தையும் மறக்கவே முடியாது. சிறையில் எங்களையெல்லாம் சித்திரவதை செய்த இக்பால் நீதான். உன்னை உயிரோடு புதைக்கப்போகிறேன்” என்று சொல்கிறான். ”நான் செயற்கைக்கால் பொருத்தியவன்தான்.  ஆனால் நீ தேடும் இக்பால் நான் அல்ல” என்று மன்றாடுகிறார் அவர். அவர் சொற்களைக் கேட்க விரும்பாமல் அவரைக் குழியில் தள்ளி அவர் மீது மண்ணைச் சரிய விடுகிறான். ”நான் அவனில்லை. நான் அவனில்லை” என்று புலம்பிப் புலம்பிச் சோர்வுற்று குழியிலேயே மயக்கமடைந்துவிடுகிறார் அவர்.

அவர் உடல் மண்ணில் முற்றிலுமாக மறையப் போகிற நேரத்தில் அவன் மண்ணைத் தள்ளுவதை நிறுத்திவிடுகிறான். தம்மோடு வதைமுகாமில் அடைபட்டிருந்தவர்களில் யாராவது ஒருவரிடம் கேட்டு அவர் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் மனம் விழைகிறது. அதனால் மீண்டும் அவர் உடலைக் குழியிலிருந்து எடுத்து வண்டியில் ஏற்றி பெட்டிக்குள் அடைத்துவிட்டு தண்டனைக்கைதிகளில் ஒருவராக இருந்து, விடுதலைக்குப் பிறகு புத்தகக்கடை நடத்திவரும் சலார் என்பவரைச் சந்திக்கச் செல்கிறான். அவர் அவனுக்கு உதவ மறுத்துவிடுகிறார். பழிக்குப் பழி என்று தொடங்கிவிட்டால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் எஞ்சாது என்று அவனை எச்சரிக்கிறார். அவன் குற்றவாளியாகவே இருந்தாலும் இச்சூழலில் அவன் மீது இரக்கம் கொண்டு விட்டுவிடுவதே நல்லது என்று சொல்கிறார்.

அந்தக் கடையிலிருந்து கிளம்பி, விடுதலைக்குப் பிறகு திருமணத்தில் படமெடுக்கும் புகைப்படக்காரராக பணியாற்றும் ஷிவா என்னும் பெண்மணியைச் சந்தித்து, அவளுடைய உதவியைக் கேட்கிறான். முதலில் மறுத்தாலும் இறுதியில் அவள் தன் கண்களும் கட்டப்பட்டிருந்ததால் முக அடையாளம் தெரியாது என்றும் தனக்கு அருகில் நெருங்கிவந்த ஒவ்வொரு முறையும் அவன் உடலலிருந்து எழுந்துவந்த காட்டமான மணத்தை ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் சொல்கிறாள். அந்த மணத்தை வைத்து அவனைத் தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்று தெரிவிக்கிறாள். அது போதும் என்று சொல்லி அவளை அழைத்துவந்து காரில் உள்ள பெட்டியைத் திறந்து காட்டுகிறான் வகீத். அந்த உடலிலிருந்து எழுந்த மணம் அன்று வதைமுகாமில் நுகர்ந்த அதே மணம் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்று அவள் உறுதியாகச் சொல்கிறாள். முகம் தெரியாத நிலையில் நூறு விழுக்காடு உறுதி சொல்ல முடியாத நிலையில் ஒரு சின்ன தயக்கம் மட்டுமே அவளிடம் தென்படுகிறது.

இப்படியே அவர்கள் இன்னும் இருவரிடம் உதவி கேட்கிறார்கள். எல்லோருமே புலனுணர்வாலும் தொடு உணர்வாலும் மட்டுமே அந்த அதிகாரியை நினைவில் வைத்திருப்பவர்கள். கண்கள் கட்டப்பட்ட கைதியாக இருந்ததால் யாருக்கும் முக அடையாளம் தெரியவில்லை.

அந்த நேரத்தில் அந்த அதிகாரியின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு மீண்டும் மீண்டும் வருகிறது. தொடக்கத்தில் அதைப் பொருட்படுத்தாத வகீத், கடைசியில் அந்தக் கைப்பேசியை எடுத்து உரையாடுகிறான். அதிகாரியின் மகளுடைய அழைப்பு அது. அம்மா மயங்கி விழுந்திருப்பதாகவும் பிள்ளைப்பேறுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லி அழுகிறாள். 

அதைக் கேட்டதும் ஆத்திரம் மறைந்து வகீத்தின் நெஞ்சில் இரக்கம் பிறக்கிறது. அதிகாரியைக் கொல்லும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, எல்லோரும் அதிகாரியின் வீட்டுக்குச் சென்று மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆண் குழந்தை பிறக்கிறது.

அதற்குப் பிறகு அந்த அதிகாரி அடைத்துவைக்கப்பட்ட பெட்டியோடு மீண்டும் அவர்கள் ஊருக்கு வெளியே வருகிறார்கள்.  அதிகாரியும் மயக்கம் தெளிந்து உரையாடும் நிலையில் உள்ளார். வகீத் மீண்டும் தன் விசாரணையைத் தொடங்குகிறான். அவர் மறுபடியும் தான் அதிகாரியல்ல என்று சொல்லி சாதிக்க நினைக்கிறார். ஆனால் இப்போது விசாரிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதால் ஒவ்வொருவரும் அவரை அடிக்கத் தொடங்குகின்றனர்.

கடைசியில் அடி தாளாமல் அவர் அந்த அதிகாரி தானே என்று ஒப்புக்கொள்கிறார். அப்போதும் அவர் வதைமுகாம் நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு அதிகாரியின் கடமையாகக் கருதப்பட வேண்டியவை என்றும் சொல்கிறார். அதுசார்ந்து தனக்கு எவ்விதமான குற்ற உணர்வும் இல்லை என்று தெரிவிக்கிறார். அந்த எகத்தாளமான பதில் அவர்களை மீண்டும் சீண்டிவிடுகிறது. மீண்டும் அவரை அடிக்கிறார்கள். இறுதியில் அடி தாளாமல்  அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார் அவர். அந்தக் கோரிக்கையை ஏற்று அவர்கள் அவரைக் கொல்லாமல் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே ஒரு மரத்தடியில் மரத்தோடு சேர்த்து கட்டிவைத்து விலங்கிட்டுவிட்டு, அதன் சாவியை அருகிலேயே  வீசிவிட்டு, யாராவது காலையில் வந்து காப்பாற்றுவார்கள் என்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர்.

வதைபட்டவர்களிடம் இருக்கும் மனிதாபிமானத்தில் ஒரு சதவீதம் கூட வதைப்பவனுக்கு ஏன் இருப்பதில்லை என்பது முக்கியமான கேள்வி. அதிகாரம் ஒருவனுடைய கண்களை எப்படியெல்லாம் குருடாக்கிவைத்திருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது. பலர் கொலைகளை சாதாரணமான விபத்து என நினைத்துக் கடந்துபோக நினைக்கின்றனர். யாரைக் கொன்றாலும் கொலை கொலைதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது கதை.

லாஸ்ட் லேண்ட் என்பது மற்றொரு முக்கியமான படம். ஜப்பானிய இயக்குநர் அகியோ ஃப்யுஜிமோட்டோ என்பவர் இயக்கிய திரைப்படம். இன்று உலக அளவில் நாடற்ற இனமாக ஒவ்வொரு நாடாக வாழ்வைத் தேடி ஓடிக்கொண்டே இருப்பவர்கள் ரோகிங்கியா இஸ்லாமியர். ஒரு நூற்றாண்டு முன்புவரை பர்மாவில் வாழ்ந்துவந்தனர். வேலை நிமித்தமாக பங்களாதேஷுக்கு வந்தனர். அவர்களால் தம் வேலை வாய்ப்பு பறிபோவதாகக் குரலெழுப்பி அரசின் வழியாக அவர்களை நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேற்ற வைத்தனர்.

குடியுரிமை ஆவணம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படாததால் அவர்களால் முறையான வழியில் நாட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. திருட்டுத்தனமாக வெளியேறி தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அகதிகளாகச் செல்கிறார்கள். ஒரு நாட்டிலிருந்து வெளியேறி இன்னொரு நாட்டில் குடியேறுவது அத்தனை எளிதல்ல. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம். மனசாட்சியே இல்லாத முகவர்களிடம் தம் சேமிப்பைக் கொடுத்து நடுக்கடலில் உயிரைவிட்டவர்கள் பலர்.

புகலிடம் தேடி நாட்டைவிட்டுத் தப்பித்துச் செல்லும் ஒரு கூட்டத்தைப்பற்றிய கதையைத்தான் திரைப்படம் நமக்குக் காட்டுகிறது. அனைவரையும் பாதுகாப்பாக மலேசியாவுக்கு  அழைத்துச் செல்வதாக ஒரு முகவர் கப்பலில் ஏற்றிச் செல்கிறார். இருபது நாள் பயணத்துக்குப் பிறகு ஏதோ ஒரு கரையில் அவர்களைக் கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டு கப்பல் போய்விடுகிறது. ரோந்துப்படையினரின் குண்டுக்கு பலர் இரையாகிறார்கள். பலர் உயிர் பிழைக்க வேண்டி ஆளுக்கு ஒரு திசையில் ஓடி மறைகிறார்கள்.

ஒரு சிறுமியும் அவள் தம்பியும் இப்படி ஆதரவற்றவர்களாகிறார்கள். காட்டுக்குள் கால்போன போக்கில் நடந்து செல்கிறார்கள். வழியில் கிடைக்கும் கரும்பு, மாங்காய், வாழைக்காய் என கிடைத்ததையெல்லாம் உண்டு உயிர்த்திருக்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் அவர்களைப்போலவே மலேசியாவுக்குச் செல்வதற்காக காட்டுக்கு நடுவில் காத்திருக்கும் வேறொரு கூட்டத்திடம் அடைக்கலமாகச் சேர்கிறார்கள். அச்சிறுவர்களை அழைத்துச் செல்வதில் அவர்களுக்கு உள்ளூர விருப்பமில்லை. எனினும் இளைஞனொருவனின் இரக்கத்தின் காரணமாக வேண்டா வெறுப்பாக அழைத்துச் செல்கிறார்கள்.

இரவு வேளையில் மீண்டும் எல்லைக் காவலர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அப்போது நடக்கும் குண்டுவெடிப்பில் சிலர் மறைந்துபோகிறார்கள். அந்தச் சிறுவனின் சகோதரி இறந்துவிடுகிறாள். ஆதரவில்லாத அச்சிறுவனை இழுத்துக்கொண்டு ஓடித் தப்பிக்கிறாள் ஒரு தாய். கிட்டத்தட்ட மலேசியாவை நெருங்கிவிட்ட நிலை. முகவர் மீண்டும் பணம் கேட்கிறான். அச்சிறுவனுக்கு யார் பணம் கொடுப்பது என்னும் கேள்வி எழுகிறது. இரக்கமுள்ள அந்தத் தாய் அவனுக்கான பணத்தையும் சேர்த்துக்கொடுத்து தன்னோடு அழைத்துச் செல்கிறாள். மலேசியாவில் உள்ள அவளுடைய மகன் அவளை அழைத்துச் செல்கிறான். அவர்களோடு அச்சிறுவனும் செல்கிறான்.

எல்லாமே ஒரு நாள்தான். அவனுக்குப் பசியாற சாப்பாடு போட்டு துணி கொடுத்து தூங்கவைத்து, அவனைப் போர்வையோடு தூக்கிவந்து நகரத்தில் ஒரு மரத்தடியில் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். உறக்கத்திலிருந்து எழுந்த சிறுவனுக்கு எதுவும் புரியவில்லை. யாரோ தன்னிடம் குறும்பாக விளையாடுகிறார்கள், தாம் கண்களை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு எண்ணத் தொடங்கினால் பத்து சொல்லி முடிப்பதற்குள் தன்னை அழைத்துச் செல்ல வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு எண்ணத் தொடங்குகிறான்.

ஒரு அகதி உருவாகும் கதையை அழகான காட்சிக்கோர்வையாகச் சித்தரித்திருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது. இப்பிரச்சினையின் தீவிரமே இப்படத்தை பிடித்த படமாகக் கருதத் தூண்டியது. தான் வந்திருக்கக்கூடிய இடம் மலேசியா என்று கூடத் தெரியாமல் அந்த அம்மாவுக்கு அருகில் நிராதரவாக நின்றுகொண்டிருக்கிறான் அவன். அவனை அவள் அழைத்துச் செல்லப் போகிறாளா, அல்லது அப்படியே விட்டுவிட்டுச் செல்லப் போகிறாளா என நம் மனம் பதைபதைக்கிறது. மகன் வரும் காருக்காக அவள் பரபரப்பாக தெருவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போது நடக்கமுடியாத ஒரு நாய் நொண்டியபடி மெல்ல வந்து அவனுக்குப் பக்கத்தில் சிறிது நேரம் நிற்கிறது. இப்படத்தின் மிகச்சிறப்பான காட்சிகளில் ஒன்று அது. என் மனத்தைவிட்டு அது எப்போதும் நீங்காது. இந்த உலகத்தில் அகதிக்கு உரிய மதிப்பும் ஒரு நாய்க்கு உரிய மதிப்பும் ஒன்றுதான் என்பதைச் சொல்லாமல் சொல்லும் காட்சி அது.

ஒருவருடைய இரக்கத்தின் எல்லை எதுவரை என்கிற கேள்விக்கு இப்படத்தின் பல காட்சிகளில் பதில் பொதிந்திருப்பதைப் பார்த்தேன். ஒருவருடைய இறுதிக்கணம் வரை இரக்கம் துணை நிற்கவேண்டும் என ஒருவரும் கட்டாயப்படுத்தமுடியாது. இரக்கம் என்பது சாத்தியப்பாட்டுக்கு உட்பட்ட ஒன்றுதான். எவ்வகையிலான இரக்கமாக இருந்தாலும் அது உயர்ந்த இரக்கமே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு வீட்டின் முன்னால் சிறுவர்களுக்கு ஒரு பெண்மணி ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறாள். எல்லைக்காவலர்கள்  பார்வையில் பட இருந்த சிறுவர்களைக் காப்பாற்றிய இளைஞன் மலேசிய எல்லை வரைக்கும் அழைத்துவருகிறான். கூடுதல் பணம் கொடுத்து சிறுவனை மலேசிய நகரத்துக்கு அழைத்து வருகிறாள் ஒரு தாய். எல்லோருமே அவரவர் சாத்தியப்பாட்டின் எல்லைக்கு உட்பட்டு நடந்துகொள்கிறார்கள். அனைத்தையும் கடந்து அவன் சாலையோரத்தில் ஆதரவில்லாதவனாக நின்றிருக்கிறான். இவ்வளவு தொலைவு அவன் மீது கருணை காட்டிய தெய்வம் அச்சிறுவனை கைவிட்டுவிடுமா என்ன?

இன்னொரு முக்கியமான படம் மோர்ட்டிசியன் என்னும் கனடா தேசத்துப் படம். அப்தோல்ரெசா கஹானி என்பவர் இயக்கிய திரைப்படம். ஈரான் நாட்டில் நிகழும் அடக்குமுறையின் காரணமாகவும் வேலை வாய்ப்பின்மையின் காரணமாகவும் பலர் பல நாடுகளுக்குக் குடியேறி கிடைத்த வேலையைச் செய்து பிழைக்கிறார்கள்.

அந்த வகையில் மாண்ட்ரீல் நகரில் வசிக்கும் இரு வேறு ஆட்களைக் காலம் ஒன்றிணைக்கிறது. ஒருவர் நகரத்தில் உள்ள சவ அடக்க மையத்தில் கொண்டுவரப்படும் உடல்களைக் கழுவிக் குளிப்பாட்டி உடைமாற்றி பெட்டிக்குள் வைத்து குழியில் இறக்கும் வேலையை கர்மசிரத்தையோடு செய்யக்கூடியவர். ஈரானின் வசிக்கும் பத்து பேர் கொண்ட குடும்பத்தை அந்த வேலையில் கிடைக்கும் வருமானத்தை அனுப்பிக் காப்பாற்றுகிறவர். அவர்கள் அனைவருமே அங்கு வேலையற்றவர்களாக இருக்கின்றனர்.

இன்னொருவர் பிரபலமான பாடகி. ஆனால் ஈரானில் நிலவும் அடக்குமுறையையும் அநியாயங்களையும் தம் பாடல்கள் வழியே உலகுக்குத் தெரிவிக்கும் இளம்பெண். அவளைக் கொன்று ஈரானின் பெருமையைக் காப்பாற்றுவதற்காக பலர் வெவ்வேறு உருவங்களில் அவள் வசிக்கும் பகுதியில் அலைகிறார்கள்.

ஒருநாள் சவ அடக்க மையம் மூடப்பட்டுவிடுகிறது. திடீரென அவன் வேலையற்றவனாகிறான். அவனுக்கோ சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி. அப்போது அந்தப் பாடகியின் தொடர்பு கிடைக்கிறது. அவள் விரைவில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தான் இறந்தபின் தன் உடலைத் தகுந்த முறையில் அடக்கம் செய்யும் பொறுப்பை அவனிடம் கொடுக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவள் அரசியல் விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோவைப் பேசிப் பதிவு செய்கிறாள். அனைத்து வீடியோக்களையும் தன் மரணத்துக்குப் பிறகு வெளியிட வேண்டும் என்றும் அவனிடம் கேட்டுக்கொள்கிறாள். அவன் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான்.

ஒருநாள் யாருமற்ற நேரத்தில் அவளை வேவு பார்த்து அவளை நெருங்கும் எதிரிகள் அவளைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். அப்பழியை அவன் ஏற்றுக்கொன்ண்டு காவலர்களிடம் சரணடைய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் கொலைகாரர்கள். பழியை ஏற்றுக்கொள்ளவிட்டால் ஈரானில் இருக்கும் அவனுடைய குடும்பத்தினர் பத்து பேரும் மண்ணோடு மண்ணாகிவிடுவார்கள் என அச்சுறுத்துகிறார்கள்.  என்ன செய்வது என தீர்மானிக்கமுடியாத குழப்ப மனநிலையுடன் அந்தத் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு அவன் காவல் நிலையத்துக்குப் புறப்படுகிறான்.

அவன் என்ன செய்தான் என்பது சொல்லப்படவில்லை. அதைவிட முக்கியமான ஒரு அம்சத்தைத் திரைப்படம் உணர்த்துகிறது. கண்மூடித்தனமான, முரட்டுத்தனமான அரசியல் சார்பு மனிதகுலத்துக்கு ஏற்படுத்தும் சேதத்தை மெளனமாகச் சுட்டிக் காட்டுகிறது. அந்த அற்பர்கள் அதைத் தன் தேசபக்தி என்று அறிவித்துக் கொண்டாடுகிறார்கள். அரசும் அத்தகையோரை ஊக்குவிக்கிறது. எவ்வளவு பெரிய கேவலம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சில கணங்கள் வரைக்கும் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.

பிறிதொரு முக்கியமான திரைப்படம் அவுட் ஆப் லவ் என்னும் பிரெஞ்சு மொழிப் படம். நாதன் அம்ப்ரோசியானி என்பவர் இத்திரைப்படத்தின் இயக்குநர். இன்சூரன்ஸ் நிறுவனத்துக்காக பணிபுரியும் ஒரு நடுவயதுப் பெண்மணியின் தினசரி வாழ்க்கையைச் சொல்வதுபோல ஆரம்பக்காட்சிகள் அமைந்துள்ளன. எந்த நேரமும் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது, விளக்கம் சொல்வது, களநிலவரத்தை அறிந்துகொள்ள நேரிடையாகச் சென்று பரிசீலிப்பது என விழித்திருக்கும் பொழுதெல்லாம்  தேனீ போல சுறுசுறுப்பாக இயங்குகிறாள் அந்தப் பெண்மணி.

அவளுக்குக் கணவன் இல்லை. மண விலக்கு பெற்று தனியாக வந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. கணவனுக்குப் பிள்ளை பெற்று வளர்க்க வேண்டும் என்பது ஆசை. அவளுக்கு அந்த ஆசை இல்லை. வேலையில் மேன்மேலும் உயரவேண்டும் என்பதுதான் ஒரே இலக்கு. அதனால் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அவளுக்கு நண்பர்களும் குறைவானவர்களே. எதிர்வீட்டில் வசிக்கும் ஒரு பெண் ஓவியர். வழக்கறிஞர், காவலர் என இன்னும் சில நண்பர்கள் மட்டுமே. எல்லாமே நிறுவனம் வழியாகக் கிடைத்த நட்புகள்.

இந்த நீண்ட அறிமுகத்துக்குப் பின்னரே உண்மையான கதை தொடங்குகிறது. ஒருநாள் மாலையில் வெளியூரிலிருந்து அவளுடைய தங்கை தன் இரு பிள்ளைகளோடு காரில் வந்து இறங்குகிறாள். பல ஆண்டுகளாகத் தொடர்பிலேயே இல்லாமல் இருந்தவள் திடுதிப்பென வந்து இறங்கியதைப் பார்த்ததும் சற்றே திகைப்படைகிறாள் அவள். இரு சகோதரிகளுமே இளம்வயதிலேயே தாயை இழந்தவர்கள். பிடித்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு பிரிந்து போனவர்கள். ஒருத்திக்காவது இன்சூரன்ஸ் வேலை உள்ளது. இன்னொருத்தி வேலையற்றவள். இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த படாத பாடு படுகிறாள். ஒன்றிரண்டு நாட்கள் ஒரு மாறுதலுக்காகத் தங்கிவிட்டுச் செல்ல வந்துள்ளதாகத் தெரிவித்த  சொல்லை அவள் நம்புகிறாள். இரவு விருந்துக்கு உணவு தயாரிக்கிறாள். சாப்பிட்டுவிட்டு நீண்ட நேரம் பெசிக்கொண்டிருந்துவிட்டு அனைவரும் அவரவர்கள் அறைக்கு உறங்கச் செல்கின்றனர்.

விடிந்து எழுந்திருக்கும்போது பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு தங்கை வெளியேறியிருக்கும் செய்தி தெரிகிறது. கார் இல்லை. மொபைல் அணைத்துவைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் வந்துவிடலாம் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் இரவு வரை வரவில்லை என்றதும் குழந்தைகளைத் தம் பொறுப்பில் விட்டுவிட்டு அவள் மறைந்துவிட்டாள் என்னும் உண்மை மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்குகிறது அவளுக்கு. அவள் நிலைகுலைந்து விடுகிறாள்.

தன்னுடைய நண்பர்கள் துணையோடு அவள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள். ஒன்றும் பலனில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து மனம் மாறி திரும்பி வரக்கூடும் என்கிற அவளுடைய எண்ணம் பொய்த்துவிடுகிறது.  குழந்தை வளர்ப்பில் நாட்டமில்லாத காரணத்தால் மணவிலக்கு பெற்றுக்கொண்டு குடும்பத்தை விட்டு வெளியேறிய அவள் இரு குழந்தைகளைத் தாயாக இருந்து வளர்க்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறாள். அவளுக்கு தொடக்கத்தில் அது பெரிய சுமையாகத் தோன்றுகிறது. அந்தக் குழந்தைகள் அவளுக்கு எண்ணற்ற துன்பங்களை அளிக்கிறார்கள். அவள் பொறுமை காத்து அவற்றையெல்லாம் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக அக்குழந்தைகளுக்குத் தாயாகவே மாறிவிடுகிறாள்.  தாயாக இருக்க விரும்பாத ஒருத்தி தான் பெறாத குழந்தைகளுக்குத் தாயாக மாறி கனிந்து விடுகிறாள். இந்த மனமாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைப்படம்.

 

(பேசும் புதிய சக்தி – மார்ச் 2026)