Home

Sunday, 1 March 2026

நமக்குக் கிடைத்த பரிசு

 

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே பல இடங்களில் நம்மை அறியாமல் பழக்கத்தின் காரணமாகச் சொல்லியிருக்கவும் கூடும்.  ஆனால் உறவு வகைகளிலும் நட்பு வட்டாரங்களிலும் பொதுவாக துயரங்களைப் பகிர்ந்துகொள்கிற அளவுக்கு ஒருவரும் இன்ப நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொள்வதில்லை என்பதுதான் எதார்த்தம். அதற்கு, தன் இன்ப நினைவுகள் பிறருடைய நெஞ்சில் காரணமில்லாத ஏக்கங்களையும் ஏமாற்ற உணர்வுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை  கூட ஒருவேளை காரணமாக இருக்கக்கூடும்.

இப்படி பட்டும் படாமல் புன்னகைத்தபடி தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி பகிர்ந்துவிட்டு கடந்துபோகிறவர்கள் நடுவில் ஜான் சுந்தர் தம் ‘குறுமக்கள் கொட்டாரம்’ புத்தகத்தின் வழியாக தாமும் புன்னகைத்து, நம்மையும் புன்னகைக்க வைக்கும் அளவுக்கு திகட்டத்திகட்ட இன்ப நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். எல்லாமே குழந்தைகள் உலகம் சார்ந்தவை. சமீப காலத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியும் பரவசமும் கொடுக்கும் ஒரு புத்தகத்தைப் படித்ததில்லை.

முன்னுரையிலேயே அந்த இனிமையின் மணம் வீசத் தொடங்கிவிடுகிறது. மூங்கில் முறத்திலிருக்கும் சின்ன வெங்காயங்களில் தோலைச் சீவிச்சீவி வீசியபடி யாருக்கோ உருக்கமாக அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கும் அவருடைய தாயாரின் சித்திரத்தோடு தொடங்குகிறது அம்முன்னுரை.  அவ்வரிகளின் வசீகரத்தால் தொடர்ந்து வாசிக்கும்போதுதான் அவர் அந்தத் தோலைக் கொத்தித் தின்றுகொண்டிருக்கும் கோழிகளுக்கும் குஞ்சுகளுக்கும்தான்  அறிவுரை வழங்குகிறார் என்பது புரிகிறது.  புன்னகைக்காமல் அடுத்த வரிக்கு எப்படிச் செல்லமுடியும்?

அடுத்து இடம்பெற்றிருப்பது அவருடைய மகளின் சித்திரம். குருவி எழுப்பும் ஒவ்வொரு விதமான சத்தத்துக்கும் ஒவ்வொரு பொருளைச் சொல்கிறவள் அவள். தினந்தோறும் கண்ணில் படுகிற குருவி தொடர்ச்சியாக சில நாட்கள் காணாமல் போய்விடுகிறது. அது அச்சிறுமியின் மனத்தில் ஏக்கத்தை விதைக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றி குரல் கொடுக்கிறது அக்குருவி. அதைக் கேட்டதும் உற்சாகம் கொன்ண்டு அக்குருவியின் அருகில் செல்லும் சிறுமி மன்றாடும் தொனியில் “நீ என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டு. பரவாயில்லை. ஆனால் தயவுசெய்து மட்டம்போடாமல் ஒவ்வொரு நாளும் வா” என்று சொல்கிறாள். ஒரு குறும்படம்போல காட்சிகளாக விரியும் அந்தச் சொற்சித்திரத்தைப் படித்துமுடித்ததும் எழுந்த புன்னகையை நிறுத்தமுடியவில்லை. அச்சிறுமியைத் தொடர்ந்து மழலையர் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் மனைவியின் சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. அதுவும் புன்னகைக்க வைக்கும் தருணமே.

ஒரு கூடத்தில் ஓரமாக உட்கார்ந்து பிஸ்கட் சாப்பிடுகிற ஒரு சிறுமியைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு ஒரு மாஸ்டர் “ஜாக்கிரதையா இரு. எலி ஏதாச்சும் வந்தா பிஸ்கட்டோட சேர்த்து உன்னையும் தூக்கிட்டு போயிடப் போவுது” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார். சீனாப்பொம்மை போல இருந்த அந்தச் சிறுமி ஒரு பிஸ்கட்டைக் கடித்து தரையில் வீசிவிட்டு பக்கத்தில் இருந்த ஒரு அட்டைப்பெட்டியை ஓங்கி ஒரு தட்டு தட்டுகிறாள். சில நொடிகளில் ஒரு எலி அங்கிருந்து ஓடி வந்து அந்த பிஸ்கட் துண்டைக் கவ்விக்கொண்டு ஓடிவிடுகிறது. அப்படி ஒரு எலியின் வருகையை எதிர்பார்க்காத மாஸ்டர் அச்சத்தில் உறைந்துவிடுகிறார். எலியின் பெயரைச் சொல்லி அச்சுறுத்த நினைத்த மாஸ்டரே நிஜமான எலியின் வருகையைக் கண்டு திகைத்துவிடுகிறார்.

இப்படி வளரும் குழந்தைகளிடம் வெளிப்படும் அபூர்வ செயல்களையும் வளர்ந்த பெரியவர்களின் குழந்தைத்தன்மையையும் சிறுசிறு சொற்சித்திரங்களாகத் தீட்டித் தொகுத்திருக்கிறார் ஜான் சுந்தர். இத்தொகுதியின் கட்டுரைகளை வரிசைப்படிதான் படிக்கவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். வெல்லத்தின் எந்தப் பக்கத்தைக் கடித்தாலும் இனிப்பதுபோல இந்நூலின் எந்தக் கட்டுரையைப் படித்தாலும் இனிய அனுபவமாக இருக்கிறது. இனிய நினைவலைகளைப் பொதிந்திருக்கிற இந்நூலைத் தன் கால்நூற்றாண்டு கால இல்லறவாழ்வின் பரிசாக தன் அன்பு மனைவியான அவிலா டீச்சருக்கு எழுதி அளித்திருக்கிறார் ஜான் சுந்தர். ஏதோ ஒரு வகையில் இந்தப் புத்தகம் நமக்குக் கிடைத்த பரிசாகவும் இருக்கிறது.

குழந்தைகளின் மழலைச்சொல் எப்போதும் வசீகரம் நிறைந்தது. அப்படி ஒரு அகராதியை யாராவது தயாரித்தால் இந்த உலகத்தின் தலைசிறந்த புத்தகம் அதுவாகத்தான் இருக்கும்.  ஒரு குழந்தை ’பார்த்திபன்’ என்னும் பெயரை ’பால்டீபன்’ என்றும் வெங்காயம் என்பதை வெங்யம் என்றும் ரைனோசுரஸ் என்பதை ‘அது ஏனோ சுட்டுருச்சு’ என்றும் சொல்கிறது. இன்னொரு குழந்தை ‘செண்பகக்குழல் வாய்மொழி’ என்னும் பெயரை ‘டென்பக் டுடல் வாம்லு’ என்றும் ’ஜோயல்’ என்னும் பெயரை ’தோயல்’ என்றும் ஏதோ ஒரு புரியாத மொழியின் பெயரைச் சொல்வதுபோலச் சொல்லி எல்லோரையும் சிரிக்கவைக்கிறது. இப்படி சோறு, குழம்பு,, பாரதி, ஊதா, கலரு, ரிப்பன் போன்றவை எல்லாம் தோடு, தொலம்பு, பாலவி, லூடா, டலடு, லிப்பன் என உருமாற்றம் அடைவதையும் பார்க்கவேண்டும்.

ஒரு வகுப்பில் அழுத குழந்தையை டீச்சர் தேற்றும் சித்திரம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அழுதுகொண்டே இருக்கும் சிறுவனை எதைச் சொல்லியும் டீச்சரால் தேற்ற முடியவில்லை. “வீட்டுல அம்மா அடிச்சாங்களா?”, “அப்பா அடிச்சாரா?”, “அண்ணன் அடிச்சானா?” என்று ஏராளமான கேள்விகளைக் கேட்டும் அவரால் சரியான பதிலை சிறுவனிடமிருந்து பெற முடியவில்லை. அழுகையும் நிற்கவில்லை. பிறகு கடைசியாக அவனே “வந்து… அப்பா…. அம்மாவை அடிச்சிட்டாரு” என்று திணறித் திணறி சொல்லி முடிக்கிறான். அதைக் கேட்டு ஆதரவோடு அச்சிறுவனை வாரி அணைத்துக்கொள்ளும் டீச்சர் அவன் கண்களைத் துடைத்து பிஸ்கட் கொடுத்து, தண்ணீர் கொடுத்து, அவன் கவனத்தைத் திசைதிருப்பி எப்படியோ எல்லாவற்றையும் மறக்கவைத்துவிடுகிறார்.

அன்று மாலை சிறுவனை அழைத்துப் போக வந்த அவனுடைய தந்தையைத் தனியே அழைத்துச் செல்கிறார்.  குழந்தையின் முன்னால் சண்டையிட வேண்டாம் என்று அறிவுரை சொல்லி அனுப்பிவைக்கிறார். ஒரு வாரம் எல்லாம் நல்லபடியாகவே போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் மறுபடியும் அச்சிறுவன் அழத் தொடங்கிவிடுகிறான். டீச்சர் அவனிடம் ஆதரவோடு பேசி மெல்ல மெல்ல காரணத்தை விசாரிக்கிறாள். அப்போது சிறுவன் “அப்பாவும் அம்மாவும் சண்டையே போடலை மிஸ்” என்று விம்முகிறான். டீச்சர் சிறுவனை வாரி அணைத்துக்கொள்கிறார். அந்தக் கண்ணீரின் பொருள், பெற்றோர் சண்டை போடவில்லை என்பதற்கான நன்றியா, அல்லது டீச்சரின் கூடுதல் பரிவை இழந்துவிட்டோம் என்கிற கவலையா என்று புரியாமல் விழிக்கிறார் டீச்சர்.

மழலையர் பள்ளியில் தன் மகனைச் சேர்ப்பதற்காக வந்திருக்கும் ஒரு தாயோடு தொடங்குகிறது ஒரு சித்திரம். “மிஸ் ஏதாவது கேள்வி கேட்டா, நீ பதில் சொல்லணும் புரியுதா?” என்று சிறுவனுக்குப் பயிற்சி கொடுக்கிறாள். அந்த இளம்தாய். அவன் புன்னகை மாறாத முகத்துடன் மிகவும் பிடிவாதமாக “மாட்டேன்… சொல்ல மாட்டேன்” என்று மறுக்கிறான். அந்தத் தாயால் அச்சிறுவன் மனத்தை மாற்றவே முடியவில்லை. அதற்குள் அவர்கள் பெயர் அழைக்கப்பட்டுவிட இருவரும் எழுந்து டீச்சர் அறைக்குள் செல்கிறார்கள். சிறுவனின் பிடிவாதத்தை ஏற்கனவே அறிந்துகொண்ட டீச்சர் அவன் பக்கமே திரும்பாமல் அவன் அம்மாவிடம் மட்டுமே உரையாடத் தொடங்குகிறார். எல்லாமே அவனைப் பற்றிய கேள்விகள். ஆனால் அனைத்தையும் அந்தத் தாயாரிடமே கேட்கிறார். பிறகு சிறுவர்களிடம் கேட்பதுபோல சுவரில் தொங்கும் படங்களைச் சுட்டிக்காட்டி ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று கேட்கிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் அவருக்குப் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறார். தன்னைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன் தாயாரிடம் மட்டுமே பேசிச் சிரிப்பதைப் பார்க்கப் பார்க்க சிறுவனுக்கு ஏக்கமாக இருக்கிறது. தனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்ல வேண்டும் என்று அவன் துடிக்கிறான். அப்போதும் டீச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் கழியக் கழிய சிறுவனுக்கு ஆர்வம் பெருகுகிறது. ‘மிஸ்… நான் சொல்றேன் மிஸ்’ என்று அவனாகவே டீச்சர் கையைப் பிடித்துக் கெஞ்சத் தொடங்குகிறான். அவன் மனத்திலிருந்த தடை சட்டென ஒரே கணத்தில் உடைந்துவிடுகிறது. அருமையான சொற்சித்திரம்.

ஒருநாள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாட்டுக்குடிலில் வைத்திருந்த குழந்தை ஏசு காணாமல் போய்விடுகிறது. அனைவரும் சேர்ந்து பள்ளி முழுதும் தேடுகிறார்கள். எங்கும் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு துப்பு கிடைக்கிறது. யாரோ ஒரு சிறுவன் தன் சைக்கிள் கேரியரில் ஏசுவை வைத்துக்கொண்டு சென்றதாக ஒருவர் சொல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் பள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் குழப்பத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

அச்சமயத்தில் ஒரு சிறுவனின் சைக்கிள் பள்ளிக்குள் நுழைகிறது. அவன் மாட்டுக்குடிலுக்கு அருகில் சென்று மிகவும் பாதுகாப்பாக ஏசுவை அந்தத் தொட்டிலில் கிடத்துகிறான். அவிலா டீச்சர் அச்சிறுவனை பிறரிடமிருந்து காப்பாற்றி பாதிரியார் அறைக்கு அழைத்துச் செல்கிறார். பாதிரியார் அவனிடம் “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று புன்னகை மாறாத முகத்துடன் கேட்கிறார். “எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். எப்படியாவது அப்பா எனக்கு அதை வாங்கித் தரும்படி செய்துவிட்டால் ஏசுவை கேரியரில் உட்காரவைத்து ஒரு ரவுண்டு அடிக்கிறேன் என்று ஏசுவுக்கு வாக்களித்திருந்தேன். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றத்தான் ஏசுவை சைக்கிளில் அழைத்துச் சென்றேன்” என்று மிகவும் இயல்பாக பதில்  சொல்கிறான்.

இனியா என்றொரு சிறுமி. சமையல் வேலையில் மூழ்கியிருந்த அவள் அம்மா அவளை எழுப்பி கழிப்பறைக்குச் செல்லும்படி சொல்கிறாள். சரி சரி என்று தலையாட்டியபடி எதையோ தேடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள். “என்னடி தேடுற?” என்று சீறுகிறாள் அம்மா. அதைக் கவனிக்காதவளாக சிறுமி ஒரு மூலையில் கிடந்த முயல் பொம்மையை எடுத்துக்கொண்டு ”அப்பாட் கிடைச்சிருச்சி” என்றபடி திரும்புகிறாள். கழிப்பறைக்குப் போகிற வேளையில் பொம்மை எதற்கு என்று சத்தம் போடுகிறாள் அம்மா. “என்னம்மா நீ, பொம்மைக்கு ஆயி வராதா? பாவம்ல்ல. பொம்மைக்கு வயிறு வலிக்கும்ல?” என்று அப்பாவியாகக் கேட்கிறாள் சிறுமி. அம்மாவின் சீற்றம் சோப்புநுரையாகக் கரைந்து போகிறது.

இன்னொரு சிறுவன் தனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறக்க இருக்கும் செய்தியை டீச்சரிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறான். “அம்மா வயித்த கிழிச்சிட்டு பாப்பா வருவான் மிஸ்” என்று ஆனந்தமான குரலில் சொல்கிறான். “அச்சச்சோ. அம்மா பாவம்ல்ல?” என்று பரிதாபத்துடன் கேட்கிறார் டீச்சர். உடனே அச்சிறுவன் “எங்கப்பா தச்சுருவாரு மிஸ்” என்று சொல்கிறான். “ஓ… உங்க அப்பா மருத்துவரா?” என்று டீச்சர் கேட்கிறார். “இல்ல மிஸ். தையற்காரர். ரொம்ப வேகமா தச்சிருவாரு மிஸ்” என்று பெருமையோடு சொல்கிறான். இப்படி ஒரு குரலைக் கேட்டு மனம் மலராமல் இருக்கமுடியுமா என்ன?

பேச்சு வராத ஒரு சிறுவனை எந்தப் பள்ளியிலும் சேர்க்கமுடியாத ஒரு பெற்றோர் அவிலா டீச்சர் பணிபுரியும் பள்ளியில் சேர்த்தனர். முயற்சி செய்து பார்க்கலாம் என்றுதான் அவரும் சேர்த்துக்கொள்கிறார். அவன் புத்தகத்தைப் புரட்டுகிறான். பாடங்களைக் கேட்கிறான். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. வருகைப் பதிவு எடுக்கிற சமயங்களில் தன் பெயர் அழைக்கப்படும் நேரத்தில் கூட எதுவும் சொல்வதில்லை. ஆயினும் மனம் தளராத டீச்சர் கையை உயர்த்தி ப்ரசெண்ட் மிஸ் என்று சொல்ல வேண்டும் என ஒவ்வொரு நாளும் அவனுக்கு அருகில் சென்று சொல்கிறார். அவனுடைய தாயாரிடம் தினமும் அதிகாலையில் நாக்கை வழித்துவிடும்படியும் தேன் துளிகளைப் புகட்டும்படியும் ஆலோசனை வழங்குகிறார். இப்படியே சில நாட்கள் போகின்றன. ஒருநாள் வருகைப் பதிவெடுக்கும் நேரத்தில் அனிச்சையாகக் கையை உயர்த்தி ஸ் என்று சத்தமெழுப்புகிறான். அவன் பேசுவதற்கு முயற்சி செய்கிறான் என்பதன் முதல் அடையாளம் அது. டீச்சர் அதைக் கேட்டு மகிழ்கிறார். வீட்டிலும் அவன் இப்படி உளறலாக ஏதேதோ பேசுவதைக் கேட்டு ஆனந்தம் கொள்கின்றனர்.

இப்படி சிறார்கள் தொடர்பான அனுபவப்பதிவுகள் இந்த நூலெங்கும் நிறைந்துள்ளன. ஒவ்வொன்றும் படிக்கப்படிக்க சுவையளிக்கும் அனுபவம். இப்புத்தகத்தை வாசிக்கும் ஒருவரிடம், தம்மைச் சுற்றி தாம் காண நேர்கிற குழந்தைகளை அணுகும் விதத்தில் சிறிதளவேனும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

  

(குறுமக்கள் கொட்டாரம். ஜான் சுந்தர். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோவில் -629001. விலை. ரூ.150)

 

(புக் டுடே – இணைய இதழ் – 23.02.2026)