சிறார்களுக்கான நான்கு பாடல் தொகுதிகளை ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் குருங்குளம் முத்து ராஜா, இப்போது அக்கா குருவி என்னும் தலைப்பில் ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் ஐம்பது பாடல்கள் அடங்கியுள்ளன. விளையாடிப் பொழுதுபோக்கும் குழந்தைகளின் மனநிலையையும் குறும்புகளையும் வெளிப்படுத்தும் பல பாடல்கள் இத்தொகுதியில் உள்ளன.
கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் எல்லாப் பாடல்களுமே சிறார்களை ஈர்க்கும் வண்ணம் வசீகரமான சொற்செட்டோடும் தாளக்கட்டோடும் அமைந்துள்ளன. அவற்றோடு சிறார்கள் சுவாரசியமாக காதுகொடுத்துக் கேட்கும் வகையில் கற்பனை நயத்தோடு எழுதப்பட்ட கதைப்பாடல்களும் சித்தரிப்புப்பாடல்களும் கணிசமான எண்ணிக்கையில் இத்தொகுதியில் காணப்படுகின்றன. இவ்வாறாக மூன்று வகைகளாகப் பிரித்துப் பார்த்துக்கொள்ளும் வகையில் அமைந்த பாடல்களோடு புத்தாண்டின் தொடக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்தொகுதிக்கு சிறார் இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடமுண்டு.
தன்னை மறந்து ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போதுதான் ஒரு
சிறுவனுக்கு அல்லது சிறுமிக்கு இயற்கையிலேயே கொண்டாட்டமான மனநிலை அமைகிறது. அவர்களுடைய
மனத்துக்குள் ஊடுருவிச் சென்று அவர்களோடு கரைந்து நிற்கும் கணத்தில் நமக்கும் அந்த
மனநிலை தொற்றிக்கொள்கிறது. அந்த ஊற்றுக்கண் வழியாகவே பாடல் வரிகள் பீறிட்டெழுகின்றன.
சிறார்களின் நெஞ்சில் ஊடுருவிச் செல்லும் பேறு பெற்றவராக குருங்குளம் முத்து ராஜா வாழ்கிறார்
என்பதற்கு அவர் எழுதியிருக்கும் பாடல்களே சான்று.
குளக்கரையில் நின்று தண்ணீர்ப்பரப்பின் மீது தட்டைச்சில்லை வீசி
விளையாடாத சிறுவர்களே இருக்கமுடியாது. அத்தகு விளையாட்டில் முழுமனத்தோடு ஈடுபட்டு விளையாடும்
சிறுவனின் அல்லது சிறுமியின் குரலிலேயே ஒலிக்கும் பாடல் இத்தொகுதியின் சிறந்த பாடல்களில்
ஒன்று.
தட்டைச் சில்லைச் சுழற்றி நானும்
மட்டமாக வீசினேன் – அது
தாமரைக் குளத்துத் தண்ணீரிலே
தத்தித் தாவிப் போவுது
பட்டைக் கல்லு தொட்ட இட
வட்ட வட்ட தோசை எழும்
மொத்த தோசை எண்ணிப் பார்த்து
முடிக்கும் முன்னே மறைந்துவிடும்
தண்ணீர்ப்பரப்பில் சில்லு தொட்டுத்தொட்டுத் தாவும் இடத்தில்
பரவி விரியும் வட்டம் தோசையாக உருமாறித் தோன்றும் கணத்தில் மகிழ்ச்சியடையாதவர்களே இருக்கமுடியாது.
எல்லையில்லாத இன்பம் அது.
கோபாலு என்னும் சிறுவனின் குறும்புத்தனத்தை விவரிக்கும் போக்கில்
அமைந்திருக்கும் ஒரு பாடலும் தாளம் போட்டு பாடத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
கொல்லையிலே கொய்யா மரத்தில்
கிடுகிடுன்னு ஏறுவான் – அணில்
கொறிக்காத பழங்களையே
தேடிப் பறித்துத் தின்னுவான்
கோடையிலே குளத்தில் இறங்கி
நீச்சல் அடிக்கப் பழகுவான் – பின்னே
கத்துக்கிட்டு கரையிலிருந்து
குட்டிக்கரணம் போடுவான்
வயல்காட்டில் வரப்புகளில்
வளைந்து நெளிச்சு ஓடுவான்
கைகளிரண்டைப் பொத்திக்கொண்டு
குயில்போலக் கூவுவான்
பாடலை ஒவ்வொரு வரியாகப் படிக்கப்படிக்க, நம் கண் முன்னால் அச்சிறுவனின்
ஒவ்வொரு குறும்பும் காட்சியாக விரிந்து நம்மைப் புன்னகைக்கவைக்கிறது. நாம் அப்பருவத்தைத்தான்
கடந்து வந்திருக்கிறோமே தவிர, அந்த மனநிலையைக் கடந்துவரவில்லை என்பதுதான் அப்புன்னகைக்குக்
காரணம். புன்னகைக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே சிறார் பாடல்களை ரசனையோடு படித்து மகிழ
முடியும்.
தன்னையே ஒரு ரயில்வண்டி ஓட்டுநராகவும் மகிழுந்து ஓட்டுநராகவும்
இருசக்கர வாகன ஓட்டுநராகவும் மாறிமாறிக் கற்பனை செய்துகொண்டு ஆளற்ற மைதானத்திலும் தெருக்களிலும்
ஓடிக் களிக்காத சிறார்களே இருக்கமுடியாது. அத்தகு சிறார் கூட்டத்தின் பிரதிநிதியாக
கார் ஓட்டி மகிழும் குமாரின் உடலசைவுகளை ஒரு சொற்சித்திரமாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்
முத்து ராஜா.
கையை அசைச்சு கச்சிதமா
கியரை மாத்துவான்
கழுத்தைப் பின்னால் திருப்பிப் பார்த்து
ரிவர்ஸும் எடுப்பான்
உட்கார்ந்தா ஓடாது
குமாரோட காரு – அட
ஓட்டிக்கிட்டே ஓடுறானே அந்த
குமாருதான் காரு
பாடலைப் படித்து முடிக்கும்போது நாமும் ஒரு வாகனத்தை ஓட்டிச்
செல்வதுபோல நம்மை அறியாமல் நம் கைகளில் ஒரு விசை பரவுவதை உணரலாம்.
இதே வகைமையில் வைத்துப் பார்க்கத்தக்க இன்னொரு பாடல் பொய்க்கால்
குதிரை. தன்னையே குதிரையாக நினைத்துக்கொண்டு பலர் முன்னிலையில் நின்று ஆடும் இன்னொரு
மனிதரைப் பற்றிய சித்தரிப்பு என இப்பாடலக் கருதலாம்.
புல்லு எதுவும் தின்னாது இந்தக் குதிரை
புதுசட்டை போட்டுகிட்டு ஆடுது பாரு
பல் இல்லாத குதிரைக்கு இருக்குது வாலு
துள்ளி ஆட்டம் போடும் இதுக்கு ரெண்டே காலு
ஏறி ஓட்டும் ராசாதான் ஆடுவாரு
திருவிழாவில் பொய்க்காலு குதிரையைப் பாரு
தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்படி தெரிந்த
ஒருவரிடம் கேட்பது இயற்கை. அத்தகு கோரிக்கைகளைக் கொண்ட ஒரு சிறுவனை ஒரு பாடலில் காட்சிப்படுத்தியிருக்கிறார்
முத்து ராஜா. ஆனால் அந்தக் கோரிக்கைகள் மனிதர்கள் முன்னால் வைக்கப்படவில்லை. தவளை,
தட்டாம்பூச்சி, குயில், அணில், குரங்கு போன்ற உயிரினங்களின் முன்னிலையில் வைக்கப்படுகின்றன
என்பதுதான் சிறப்பம்சம்.
தவளையாரே தவளையாரே கொஞ்சம் நில்லுங்க
தாவிக் குதிக்கும் வித்தை எனக்கும் கத்துக் கொடுங்க
தட்டாம்பூச்சி அண்ணாச்சி கிட்டத்துல வாங்க –நானும்
வட்டமடிச்சுப் பறக்கவேணும் கற்றுக் கொடுங்க
குயிலக்கா குயிலக்கா கொல்லைக்கு வாங்க
உங்களைப்போல பாட ஆசை சொல்லிக் கொடுங்க
அணிலாரெ அணிலாரே நின்னு கேளுங்க – நானும்
சரசரன்னு மரம் ஏற பழக்கி விடுங்க
குரங்காரே குரங்காரே ஓடாதீங்க – எனக்கும்
குட்டிக்கரணம் போட்டுத் தாவ கத்துக் கொடுங்க
தன்னை மட்டுமே மேலான உயிரினம் எனக் கருதும் பெரியவர்கள் ஒருவகையில்
அசடர்கள். தான் முயற்சி செய்தாலும் கற்றுக்கொள்ள முடியாத பல நல்ல விஷயங்களும் திறமைகளும்
பிற உயிரினங்களிடம் இருக்கின்றன என்பதைக் குழந்தைகள் மட்டுமே உணர்ந்துகொள்கிறார்கள்.
அதனால் அவர்களுடைய கோரிக்கைகளும் அந்த உயிரினங்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன.
இத்தொகுதியின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
இத்தொகுதியில் தனிப்பாடல்களோடு சில கதைப்பாடல்களும் இருக்கின்றன.
‘பூனை கல்யாண கதை’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் நகைச்சுவையோடும் நல்ல கருத்தாழத்தோடும்
உள்ளது. திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஒரு பூனை தனக்குப் பொருத்தமான பெண்பூனையைத்
தேடி ஊரெங்கும் அலைகிறது. ஒரு வீட்டில் பார்ப்பதற்குக்
கருப்பாக இருக்கிறது என அங்கிருந்த பூனையை வேண்டாம் என மறுத்துவிடுகிறது. இன்னொரு வீட்டில்
பார்த்த பூனை அதற்குப் பிடித்த வகையில் இருக்கிறது. ஆனால் சீதனமாக அந்த வீட்டையே கொடுக்கவேண்டும்
என்று கேட்டதால் அந்த முயற்சியும் தோல்வியடைகிறது. மற்றொரு வீட்டில் பார்த்த பூனையின்
மூத்தோர் குடிவழி விவரங்கள் நிறைவளிக்காததால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைகிறது.
இப்படி ஏராளமான தோல்விகள்.
ஒருநாள் பூனை உட்கார்ந்து தம் தோல்விக்குக் காரணத்தை யோசித்துப்
பார்க்கிறது. எல்லாம் இந்த கேடுகெட்ட மனிதர்களோடு பழகிப்பழகி, அவர்களுடைய எண்ணங்கள்
எல்லாம் தமக்கும் படிந்துவிட்டதால் ஏற்பட்ட வினை என்று புரிந்துகொள்கிறது. ஒரு பூனையாக
இன்னொரு பூனையோடு சேர்ந்து வாழ்ந்தால் போதும் என முடிவெடுக்கிறது, அடுத்தநாளே ஒரு பூனையைப்
பார்த்து திருமணம் செய்துகொள்கிறது. பாடல் முழுக்க புன்னகை இழையோடும் வகையில் அமைந்துள்ளது.
இதைப்போலவே ‘நீ எங்கிருந்து வந்தாய்?’ என்னும் பாடலும் சுவாரசியமானது.
ஒருநாள் இரவு முழுதும் மழை பொழிகிறது. மழைநீரால் குளம் நிறைந்து வழிகிறது. விடிந்ததும்
குளத்தில் நிரம்பி வழியும் நீரைப் பார்த்து வியப்படைகிறாள் ஒரு சிறுமி. அந்த நீரைப்
பார்த்து நீ எங்கிருந்து வந்தாய் என்று கேட்கிறாள். அது அயலூர் வழியாக வரும் வாய்க்கால்
வழியாக வந்ததாகச் சொல்கிறது. உடனே வாய்க்காலிடம் சென்று அதே கேள்வியைக் கேட்கிறாள்.
அது ஆற்றிலிருந்து வந்ததாகச் சொல்கிறது. இப்படியே அணைக்கட்டு, மலை, மேகம் என நீண்டு
கடலில் சென்று முடிவடைகிறது. ஐந்தாறு சிறுவர்கள் சேர்ந்து தாளக்கட்டோடு பாடி மகிழும்
வகையில் பாடல் அமைந்திருக்கிறது.
கடந்த நூற்றாண்டில் ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எழுபதுகளில்
பொருளீட்டுவதற்காக வனங்களில் உள்ள கெஜ்ரி மரங்களை
வெட்டி வீழ்த்தினர். இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை
மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கொள்கையையுடைய ஜாம்போஜி அம்முயற்சியைத் தடுத்து
மரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மக்களைத் திரட்டினார். அவருடைய சொல்லின் மதிப்பை
உணர்ந்த பெண்கள் மரங்களைத் தழுவிக்கொண்டு வட்டமாக நின்று அம்மரங்களை வெட்ட வருபவர்களைத்
தடுத்து நிறுத்தினர். கருணையே இன்றி விறகு வெட்டுவதற்காக வந்த ஒரு கூட்டம் தம்மைத்
தடுத்த அம்ரிதா தேவி என்னும் பெண்மணியை வெட்டிச் சாய்த்தது.
ஜாம்போஜியின் கருணையாலும் அம்ரிதா தேவியின் தியாகத்தாலும் உருவான
அந்த இயக்கம் மெல்ல மெல்ல நாடெங்கும் பரவியது. இமயமலையை ஒட்டிய பகுதிகளில் மரங்கள்
வெட்டப்பட்டபோது பகுகுணா தலைமையில் ஒரு பேரியக்கமாக வளர்ந்து நின்றது. மரங்களை நேசிக்கும்
ஒவ்வொருவரும் அம்ரிதா தேவி போன்றோரின் தியாகத்தை
அறிந்திருக்கவேண்டியது மிகவும் அவசியம். சிறார்களின் நெஞ்சில் அத்தியாக உணர்வு
எழும் வகையில் முத்து ராஜா எழுதியிருக்கும் கதைப்பாடல் இத்தொகுதிக்கு அழகு சேர்க்கிறது.
இவ்வரிசையில் நில்லாமல் ஓடிவா, பிறைநிலா, கோயில் யானை, வேட்டைக்கார நரி, காட்டிலே ஒரு
தேர்தல், டெல்லி போற ரயில் போன்ற பாடல்களும் குறிப்பிடத்தக்கவை.
இன்றைய தலைமுறையில் சிறார் பாடல்களை எழுதிவரும் கவிஞர்களில்
முக்கியமானவர் முத்து ராஜா. அவருக்கு எல்லா விதங்களிலும் பெருமை சேர்க்கும் விதமாக
அக்கா குருவி தொகுதி அமைந்துள்ளது.
(அக்கா குருவி. சிறார் பாடல்கள். குருங்குளம்
முத்துராஜா. மேஜிக் லேம்ப், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642002. விலை. ரூ.
160)
(புக் டுடே இணைய தளம் –
11.02.2026)
