Home

Friday 27 November 2015

வாழ்க்கை என்னும் சுமை - கட்டுரை



   ஏரிக்கரைக்குப் போயிருந்தேன்.  வெயில் தகதகக்கும் வெட்டவெளியாக அதன் கோலம் மாறிப்போயிருந்தது. அனல்காற்று மெளனமாக ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையைநோக்கிக் கடந்து சென்றது. பூமியின் பரப்பில் எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் பசுமையைத் தேடித்தேடி ஏரியின் நடுப்பகுதியில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.  ஒவ்வொரு கணமும் என் மனம் அமைதியழப்பதை உணர்ந்தேன். அதே தருணத்தில் என் இளமை நினைவுகள் என்னைநோக்கி நீந்திவருவதையும் உணர்ந்தேன். விசித்திரமான அந்தக் கலவைஉணர்வுதான் ஊருக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவசரம்அவசரமாக இந்த ஏரியைநோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறதுபோலும்.

மகிஜா என்றொரு மனிதர் - கட்டுரை



    "பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம்" என அரையும் குறையுமாகத் தெரியும் எழுத்துகளைக் கொண்ட நிறம் மங்கிய ஒரு பலகையைத் தாங்கிய இரண்டு கம்பங்கள்தான் அந்த இடத்தில் முதலில் இருந்தன. இருநூறடி நீளமும் நூறடி அகலமும் கொண்ட அந்த இடம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காததற்கு மூன்று காரணங்கள் உண்டு. அந்த வட்டாரத்துக் கழிவுகளையெல்லாம் தினந்தினமும் வாகனங்கள் கொண்டுவந்து அந்த இடத்தின் மூலையிலேயே கொட்டிக்கொண்டிருந்தன என்பது முதல் காரணம். அதனால் எழும் துர்நாற்றம் யாரையும் அந்தப் பகுதியையே நெருங்கிச் செல்ல முடியாத ஒன்றாக மாற்றிக்கொண்டிருந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் முட்புதர்களாக அடர்ந்துகிடந்ததும் அதனாலேயே வழிப்போக்கர்களும் மற்றவர்களும் அந்த இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்ததும் இரண்டாவது காரணம். சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடிக் களிக்க ஏற்றதாக ஊஞ்சல்களும் சறுக்குமரங்களும்  நடையாளர்களுக்கு வசதியாக நிழலடர் ந்த சூழலில் கல் பரப்பப்பட்ட வட்டப்பாதையும் கொண்ட இரண்டு பூங்காக்கள் அருகிலேயே மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுவந்தது மூன்றாவது காரணம்.

Thursday 19 November 2015

பச்சை நிறத்தில் ஒரு பறவை - கட்டுரை



எங்கள் அலுவலக வளாகத்தையொட்டி இருக்கும் பள்ளி விளையாட்டு மைதானம் அளவில் மிகப்பெரியது.  ஒருபக்கம் சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவார்கள். இன்னொரு பக்கத்தில் பெண்களின் பந்துவிளையாட்டு நடக்கும். வேறொரு மூலையில் வலையைக் கட்டி சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிப் பழகுவார்கள். இன்னொரு மூலையில் உடற்பயிற்சி ஆசிரியரின் வழிகாட்டலின்படி சிறுவர்கள் கூடைப்பந்து பழகுவார்கள். எந்த நேரத்தில் போய் நின்றாலும் ஏதாவது ஒரு கூட்டம் ஆடியபடியே இருக்கும்.  மனச்சுமைகளையெல்லாம் மறந்துவிட்டு சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். சிறிய பிள்ளைகள்  ஆடுவதையும் ஓடுவதையும் துள்ளுவதையும் கைகொட்டிச் சிரிப்பதையும் பார்த்தபடி நின்றிருந்தாலேயே போதும். ஒரு மலரைப்போல மனம் தானாக மலரத் தொடங்கிவிடும். ஒரு கணமாவது நம் குழந்தைப்பருவம் நினைவைக் கடந்துபோகும்.

வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்



இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது. நானும் என் மனைவி அமுதாவும் காலையிலேயே சென்றிருந்தோம். முகம்மது அலி, சம்பந்தம், அழகர்சாமி என பல நண்பர்கள்  வந்திருந்தார்கள். வெங்கட் சாமிநாதன் வருவதாகச் சொல்லியிருந்தார். இன்னும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டுச் செல்லலாம் என்பதற்காக நான் காத்திருந்தேன்.
ஒரு சின்ன அலுவலகம் இயங்குவதற்குப் போதுமான அளவுக்கு மகாலிங்கம் அந்த வீட்டை வடிவமைத்திருந்தார். எஞ்சிய நிலப்பகுதியில் பலவகையான கீரைப்பாத்திகள். பூச்செடிகள். தக்காளி, மிளகாய், வெண்டைச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மதிலோரம் சின்ன முருங்கை மரம் வைத்திருந்தார். தோட்டத்தில் நண்பர்களை நிற்கவைத்து விதவிதமாக படங்களை எடுத்தபடி பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். காலை நேரத்து இளவெயில் படம்பிடிக்க வசதியாக இருந்தது. நேரம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. அவர் வரவில்லை. அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் எங்கள் அலுவலகம் இருந்தது.  பன்னிரண்டு மணிக்குள் வந்துவிடுவேன் என்று அலுவலகத்தில் சொல்லிவைத்திருந்ததால், அதற்கும் மேல் காத்திருக்க முடியாமல் என் மனைவியை மட்டும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு நான் கிளம்பிவிட்டேன். மாலைவரைக்கும் விழாவில் அவள் பங்கெடுத்துவிட்டு, அதற்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினாள்.