எழுத்தையே தன் தவமாகக் கொண்ட சரஸ்வதி ராம்நாத் அவர்கள், அமராவதி நதிக்கரையோரத்தில் உள்ள தாராபுரம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் விஸ்வநாத ஐயர், நாமகிரி அம்மாள். மருத்துவராகப் பணி புரிந்து வந்த விஸ்வநாத ஐயர் காந்தியடிகளின் பாதையில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அவர் காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்தார்.
தென்னாபிரிக்காவிலிருந்து
1915இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த காந்தியடிகள் முதல் இரண்டு ஆண்டுகள் இந்தியாவில்
எல்லா நிலப்பகுதிகளுக்கும் பயணம் செய்து மக்களின் நிலையை நேரில் கண்டுணர்ந்தார். விடுதலைக்காக
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடும் வேளையிலேயே மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்
வகையிலும் ஒத்த சிந்தனை கொண்டவர்களாக மாற்றும் வகையிலும் ஒரு நிர்மாணப் பணித்திட்டத்தை
வகுத்து மக்களிடையே பரப்பினார்.
கதர்,
மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கிராமத்தொழில்கள், சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம்,
இந்தி மொழி கற்றல் என பல அம்சங்களை அத்திட்டம் கொண்டிருந்தது. பொதுமக்கள் தத்தம் ஆர்வத்துக்கும்
வாழ்க்கை நிலைக்கும் ஏற்ற வகையில் ஒருசில அம்சங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தையும்
காந்தியடிகள் வழங்கினார்.
விஸ்வநாத
ஐயரின் குடும்பம் கதரணிவதையும் இந்தி மொழி கற்றலையும் பாகுபாடு பாராது சமூகத்தில் அனைவரோடும்
சமமாகப் பழகுவதையும் தேர்ந்தெடுத்துக்கொண்டது. தந்தையின் வழியில் சிறுமியாக இருந்த
சரஸ்வதி கதராடை அணிந்து எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். ஐந்தாம் வகுப்பு
வரை மட்டுமே அவருக்குப் பள்ளிக்கல்வி கிடைத்தது. அப்போதே அவருக்கு வாசிப்புப்பழக்கம்
ஏற்பட்டிருந்தது. பள்ளி செல்ல முடியாத குறையை அந்தப் பழக்கத்தின் வழியாக அவர் கடந்துவந்தார்.
தக்க பெரியோர்களின் வழிகாட்டலில் இந்தி மொழியை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். எதிர்பாராத
விதமாக அவருடைய தந்தையார் மரணமடைந்ததும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் விதவைத் தாயாரையும்
இளம் சகோதரனையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
காவல்துறையில்
பணியாற்றிய ராமநாதன் என்பவருக்கும் சரஸ்வதி அவர்களுக்கும் 1941இல் திருமணம் நடைபெற்றது.
சரஸ்வதி ராமநாத் அவர்களுடைய குடும்பம் தாராபுரத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது.
சென்னை
வாசம் சரஸ்வதி ராமநாத் அவர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை வழங்கியது. சென்னை பல்கலைக்கழகத்தில்
இந்தி வித்வான் பட்டம் பெற்றார். தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபையின் பிரவீண் தேர்விலும்
தேர்ச்சி பெற்று தம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டார். தமிழ் நூல்களையும் இந்தி நூல்களையும்
தேடியெடுத்துப் படிப்பதற்கு சென்னை நகரம் துணை செய்தது. அவரே ஆசிரியையாக இருந்து ஏராளமான
மாணவ மாணவிகளுக்கு இந்தி மொழியைக் கற்பித்தார். இந்தி இலக்கிய வாசிப்பு சரஸ்வதி ராம்நாத்
அவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தைக் கொடுத்தது. தமிழில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.
காவேரி, தினமணி கதிர், தீபம், தாமரை, கலைமகள் போன்ற இதழ்கள் அவருடைய சிறுகதைகளை வெளியிட்டு
ஊக்கமளித்தன.
ஒருமுறை
தினமணி கதிர் ஆசிரியராக இருந்த துமிலன் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது இந்தி மொழி
இலக்கியத்தை தமிழில் மொழிபெயர்க்கும்படி தூண்டினார். அவருடைய சொல் ஒரு தொடக்கமாக அமைய
சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவர் மொழிபெயர்த்த சிறுகதை உடனடியாகப்
பிரசுரமானது. அது கொடுத்த உற்சாகத்தின் விளைவாக அவர் பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.
இந்தி மொழி இலக்கியத்தை மட்டுமன்றி, இந்தியில் வெளிவந்திருக்கும் வங்காளம், பஞ்சாபி,
மராத்தி, அசாமி, காஷ்மீரி போன்ற பிற மொழி இலக்கியங்களையும் தமிழுக்குக் கொண்டுவந்தார்.
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’
என்னும் பாரதியாரின் சொல்லுக்கு இணங்க இந்தியை ஓர் ஊடக மொழியாகக் கொண்டு ஏராளமான இந்திய
மொழி இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார்.
சரஸ்வதி
ராம்நாத் அவர்கள் தம் வாழ்நாளில் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்தி வழியாக
வடமாநில இலக்கியப்படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்தார். அதே வகையில் சரஸ்வதி ராமநாத்
அவர்கள் தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்த்தார். ஜெயகாந்தன் சிறுகதைகள், ராஜம் கிருஷ்ணன்
நாவல், அகிலன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார். அச்சில் வெளிவந்தாலும்
நூல்வடிவம் காணாத சிறுகதைகள் ஏராளமாக உள்ளன.
இந்தியிலிருந்து
தமிழுக்கும் தமிழிலிருந்து இந்திக்கும் என மொழிபெயர்ப்பில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும்
சரஸ்வதி ராம்நாத் தன் சொந்த எழுத்துமுயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சிறார்கள்
தெரிந்துகொள்ளும் வகையில் சுதந்திரப்போராட்ட வீரர்களைப்பற்றியும் இராமாயண, மகாபாரதப்
பாத்திரங்களைப்பற்றியும் இந்தியாவின் முக்கியான நதிகளான கங்கை, காவிரி, யமுனை ஆகியவற்றைப்பற்றியும்
தனித்தனி நூல்களை எழுதி வெளியிட்டார். உலக நாடோடிக்கதைகள், இந்திய நாடோடிக்கதைகள்,
பிரெஞ்சு நாடோடிக் கதைகள் என பல சுவாரசியமான நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
இந்தி
மொழியில் வெளிவந்திருக்கும் சிறுகதைகள், நாவல்கள் மட்டுமன்றி நாடகங்களைப் படிப்பதிலும்
அவருக்கு ஆர்வம் இருந்தது. தாம் படித்த சிறந்த நாடகங்களை அவ்வப்போது தமிழில் மொழிபெயர்த்து
வெளியிடவும் செய்தார். வாசகர் வட்டம் அமைப்புக்காக மோகன் ராகேஷ் எழுதிய நான்கு நாடகங்களை
அரையும் குறையும் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். மகாபாரதத்தைக் களமாகக்
கொண்ட இரு நாடகங்களை மொழிபெயர்த்து மகாபாரத்தில் பெண்ணியம் என்னும் தலைப்பில் புத்தகமாகக்
கொண்டு வந்தார். அவ்வப்போது அவர் மொழிபெயர்த்த பல ஓரங்க நாடகங்களை இணைத்து ‘இந்திய
மொழி நாடகங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு பெருந்தொகுதியாகக் கொண்டுவந்தார். வானதி பதிப்பகம்
அத்தொகுதியை வெளியிட்டது. அத்தொகுதிக்காக, சாகித்திய அகாதமி வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான
விருது சரஸ்வதி ராம்நாத் அவர்களுக்கு 1993ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து கேந்திரிய
இந்திய சன்ஸ்தான் விருதும் பாரதிய அனுவாத் பரிஷத் துவிவாகிஷ் புரஸ்கார் விருதும் அவருக்கு
வழங்கப்பட்டன.
ஐம்பதுக்கும்
மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்ப்புகளாகவும் நேரடிப் புத்தகங்களாகவும் தமிழுக்கு அளித்த சரஸ்வதி ராம்நாத் அவர்களுக்கு ஒரு
கனவு இருந்தது. அது பிரேம்சந்த் அவர்கள் எழுதிய கோதான் நாவலை மொழிபெயர்ப்பது. அப்பெரிய
நாவலை வெளியிட பல பதிப்பாளர்கள் தயக்கம் காட்டியதன் காரணமாக அவர் அந்த நாவலின் மொழிபெயர்ப்பு
வேலையைத் தொடங்கமுடியாமல் தவித்தார். அப்போது தற்செயலாக பெங்களூருக்கு வந்திருந்த அன்னம்
பதிப்பகம் மீரா அவர்களைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது தான் அந்த நாவலை வெளியிடுவதாகவும்
மொழிபெயர்க்கும் வேலையைத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார். மீராவின் சொற்களால் உற்சாகம்
கொண்ட சரஸ்வதி ராம்நாத் உடனடியாக மொழிபெயர்க்கத் தொடங்கி ஓராண்டு கால அளவில் முடித்து
பதிப்பகத்துக்கு அனுப்பிவிட்டார். எதிர்பாராத
விதமாக அச்சமயத்தில் மீரா நோய்வாய்ப்பட்ட காரணத்தால் நினைத்தபடி புத்தக வேலை தொடங்கவில்லை.
தன் கனவு நூலை அச்சில் காணமுடியாத வருத்தத்துடன் சரஸ்வதி ராம்நாத் 02.08.1999 அன்று
இயற்கையெய்தினார். மீராவும் 2002இல் மரணமடைந்தார். ஆயினும் மீராவுடைய மகன் கதிர் முயற்சியெடுத்து கோதான்
நாவலை 2003இல் வெளியிட்டு இருபெரும் ஆளுமைகளின் கனவையும் நிறைவேற்றினார்.
’சிறகிலிருந்து
பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’
என்பது பிரமிள் எழுதிய பிரபலமான கவிதை வரி. அன்பையும் நல்லிணக்கத்தையும் தியாகத்தையும்
மானுட வாழ்வின் மதிப்பீடுகளாக உயர்த்திக் காட்டுகிற பேரிலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்து
தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதையே தன் பிறவிக் கடமையென ஒவ்வொரு நாளும் அதில் அக்கறையோடு
ஈடுபட்டு தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார் சரஸ்வதி ராம்நாத்.
மூத்த
மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக
காலச்சுவட்டின் முயற்சியால் 12.03.2026 அன்று சென்னை, செல்லம்மாள் கல்லூரியில் நூற்றாண்டு
விழா நடைபெற உள்ளது. வாசகர்கள் திரண்டு வந்து கருத்தரங்கத்தைச் சிறப்பிக்க வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோம்.
(அமுதசுரபி – மார்ச் 2026)