Home

Sunday, 15 March 2026

வெளிச்சமும் இருளும்

 

பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என முப்பத்தொன்பது பிரிவுகளைக் கொண்ட பெருந்தொகுதியாகும். ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் அன்று வாழ்ந்த மனிதர்களின் வரலாறாக, ஏராளமான கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் விரிந்துசெல்லும் போக்கில் மானுட வாழ்வில் தற்செயலாக தேவன் வெளிப்படும் தருணத்தை உணர்த்துகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் அமைந்திருக்கும் உறவின் நுட்பத்தையும் ஆழத்தையும் வாசிப்பவர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.  

பைபிள் காலத்தில் மட்டுமன்றி, அதற்கு முன்னரும் பின்னரும் வாழ்ந்த பிற சமூகங்களிலும் வரலாற்றை எழுதும் பழக்கம் நிலவியிருப்பதை நாம் பார்க்கலாம். வெளிப்படுத்தும் விதம் வேறுவேறாக இருந்தாலும், வெளிப்படுத்தும் ஆர்வமும் நோக்கமும் ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது.

தமிழகத்தின் சங்ககாலக் கவிதைகள், ஒரு தருணத்தை முன்னிறுத்தி மானுட வாழ்வைத் தீட்டிக் காட்டும் சட்டகத்துக்கு உட்பட்டு கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அதே சட்டகம் காப்பியக் காலகட்டத்தில் ஏராளமான தருணங்களின் தொகையாக மாறுகிறது. அதே சட்டகம் இன்றைய நவீன இலக்கியப்படைப்புகளில் சிறுகதைகளாகவும் புதினங்களாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது.

கலைகளின் ஊடாக வாழ்வின் சாரத்தைக் காண விழையும் சிறுகதையாசிரியர்கள் உண்மையின் சாயலில் பல்வேறு தருணங்களை  உருவாக்கி, அதற்கே உரிய உணர்வெழுச்சியையும் மோதலையும் விரிவாகக் காட்சிப்படுத்தி வாசகர்களை சாரத்தை நோக்கிச் செலுத்துகிறார்கள். அது ஒருவகை. உண்மையான தருணங்களையே புனைவுக்களத்தில் கட்டியெழுப்பி, என்றோ எப்போதோ நிகழ்ந்த ஒன்றை மீண்டும் நிகழ்த்திக் காட்டி வாசகர்களை சாரத்தை நோக்கித் திசைதிருப்புவது என்பது இன்னொருவகை. ஒரு தருணம் நம் கண் முன்னால் மெய்யாக  நிகழ்ந்தபோது, உணரமுடியாத ஒரு பேருண்மையை, ஓர் எழுத்தாளன் அதே மெய்நிகழ்ச்சிகளை ஓர் ஒத்திசைவுடன் சீரமைத்து ஒரு படைப்பாக மீண்டும் முன்வைக்கும்போது, ஆழ்ந்த வாசிப்பனுபவம்  உள்ள ஒரு வாசகன், அந்த எழுத்தாளனுக்கு அருகில் வந்து நின்றுவிடுகிறான். எழுத்தாளனுடைய கண்ணுக்கும் புலனுக்கும் புலப்படும் வெளிச்சமும் இருளும் வாசகனுக்கும் புலப்படத் தொடங்குகின்றன.

எழுத்தாளர் குலசேகரன் இத்தொகுதியில் உள்ள ஒன்பது சிறுகதைகளையும் மெய்நிகழ்ச்சிகளை மையமாக்கி எழுதியிருக்கிறார். அனைத்தும் அவருடைய வாழிடத்திலும் வாழிடத்தின் அருகில் அமைந்த பகுதிகளிலும் நிகழ்ந்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிற கதைகளைப்போல இக்கதைகளையும் படித்துவிட்டுக் கடந்துசெல்ல நினைக்கும் ஒரு வாசகனை இந்த வாக்குமூலம்  சில கணங்களுக்கு நிறுத்திவைக்கிறது. கதையின் மையத்தையும் கதையுலக மனிதர்களையும் அசைபோடவைக்கிறது. ஒரு பெருமூச்சு, கனிவான ஒரு தலையசைப்பு, ஆழ்ந்த துக்கம், கருணை, மனசாட்சி இல்லாத இச்சமூகத்தின் மீது உருவாகும் கசப்பு அல்லது சலிப்பு என பல விதமான உணர்வுகளில் திளைக்கவைக்கின்றது. வாழ்வு சார்ந்து தான் கொண்டிருக்கும் மதிப்பீட்டை மறுமதிப்பீடு செய்யும் முடிவை நோக்கித் தள்ளிவிடுகிறது.

இத்தொகுதியில் உள்ளே மாட்டிய சாவி, பேசும் வகுப்பறை ஆகிய இரு கதைகளும் தொழிற்சங்கம் கட்டுவது தொடர்பானவை. ஆனால் அந்தக் களத்தை அது நேரிடையாகக் காட்டவில்லை. மாறாக, இரு கதைகளும் தன் நேர்த்தியான வடிவமைப்பாலும் சித்தரிப்பு மொழியாலும் வேறொன்றாக தோற்றம் காட்டி, மறைமுகமாகத் தொழிற்சங்கத்தின் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் முன்வக்கின்றன.

ஒரு காலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடமாக விரிந்திருந்தது எஸ்வீயெஸ் தொழிற்சாலை. அங்கு ஆண் தொழிலாளிக்கு ஆறு ரூபாய் என்றும் பெண் தொழிலாளிக்கு ஐந்து ரூபாய் என்றும் தினக்கூலி கொடுக்கப்பட்டது. ஏறிவிட்ட விலைவாசியில் அந்தக் கூலிப்பணம் போதாத காரணத்தில் பத்து ரூபாய், எட்டு ரூபாய் என்று கொடுக்கும்படி கோரிக்கையை முன்வைத்தது தொழிற்சங்கம். பேச்சுவார்த்தை பயனற்றுப் போன காரணத்தால் வேலை நிறுத்தத்தில் இறங்குகிறார்கள் தொழிலாளர்கள். ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் நிர்வாகம் இறங்கிவரவில்லை.

கூலி உயர்வுக்காக ஒரு சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில்  நிர்வாகத்துக்குச் சார்பாக தலையாட்டக் கூடிய இன்னொரு சங்கமும் அதே தொழிற்சாலையில் செயல்பட்டுவருகிறது. நிர்வாகம் அச்சங்கத்தைச் சேர்ந்தவர்களை வேலைநிறுத்தம் நிகழும் களத்துக்கு அனுப்பி இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குகிறது. வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறி எல்லை மீறும்போது ஒரு தொழிலாளி அடிபட்டு சட்டென நிலத்தில் சரிந்துவிடுகிறார்.

அந்தத் தொழிலாளியின் மரணம் வேலை நிறுத்தத்தில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. நிர்வாகம் இறங்கிவந்து கூலி உயர்வை ஏற்றுக்கொள்கிறது. மறைந்த தொழிலாளியின் மனைவி மயானத்தில் நின்று தன் கணவன் சாவுக்குக் காரணமான அந்த ஆலை அழிந்துபோகட்டும் என  சாபமிடுகிறாள். இழப்பின் வேதனை அவளைப் பேசவைக்கிறது என அனைவரும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்து போகிறார்கள். இயங்கத் தொடங்கிய ஆலையில் அவளுக்கு ஒரு வேலையை அளிக்கிறது நிர்வாகம்.

நல்லவிதமாக போய்க்கொண்டிருந்த சூழல் சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிடுகிறது. ஆலை தீப்பிடித்து சாம்பலாகிவிடுகிறது. முதலாளி மறைந்துவிடுகிறார். அவருடைய சகோதரர் ஒருவர் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துவிடுகிறார். மீண்டும் ஆலை மூடப்பட்டுவிடுகிறது. வேலையிழந்த தொழிலாளர்கள் வாய்ப்புகளைத் தேடி வெவ்வேறு திசைகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். உரிமையாளர் இல்லாத சொத்தாக அந்தக் கட்டிடம் சிதைந்துகிடக்கிறது.

இப்படி ஓர் உண்மைச்சித்திரம் நேரிடையாக அளிக்கப்பட்டிருந்தால் அது தகவல்களின் தொகுப்பாக ஓர் ஆவணமதிப்புடன் மட்டுமே அமைந்திருக்கும். ஆனால் குலசேகரன் அந்தச் சித்திரத்தை வேறுவிதமான வண்ணக்கலவையுடன் முன்வைக்கிறார். போலித் தொழிற்சங்கத்தவருக்கும் உண்மையான தொழிற்சங்கத்தவருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் அடிபட்டு மறைந்துபோன தொழிலாளிக்கு ஒரு மகன் இருக்கிறான். மரணம் நிகழும் சமயத்தில் அவன் பாலகன். இப்போது அவன் வளர்ந்த இளைஞன். தன் அப்பாவைப்பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பி அந்த ஊரில் பழைய ஆட்களையெல்லாம் தேடிச் சந்தித்துப் பேசுகிறான் அவன். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தக் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஏராளமானவர்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் அவன் எதிர்பார்க்கும் தகவலைச் சொல்ல அங்கு ஒருவரும் இல்லை. பலரும் அவன் அப்பாவை யாரென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். கடைசியாக சங்கத்தை உருவாக்கி போராட்டத்தை முன்னின்று நடத்திய தோழரைப் பற்றிய தகவல் கிடைக்கிறது. அதைக் கொண்டு அவருடைய இருப்பிடத்துக்குத் தேடிச் செல்கிறான் அவன்.

அவரோ நினைவுமறதி நோயால் பாதிக்கப்பட்டு எதையும் கோர்வையாக பேசத் தெரியாதவராகவும் யோசிக்கத் தெரியாதவராகவும் இருக்கிறார். அவரிடம் தன் அப்பாவைப்பற்றிய பேச்சை எப்படித் தொடங்குவது என்று புரியாமல் தொடக்கத்தில் தடுமாறுகிறான் இளைஞன். ஆயினும் நம்பிக்கை இழந்துவிடாமல் உரையாடலை போராட்டத்தின் திசையை நோக்கிச் செலுத்துகிறான் அவன். சட்டென எதிர்பாராத ஒரு கணத்தில் அவருடைய நினைவு சரியான திசையில் திரும்பி, தொழிற்சாலையின் முன்னால் போராட்டப்பந்தலில் அமர்ந்திருந்த தருணத்தைச் சொல்லத் தொடங்கிவிடுகிறார் அவர்.

தன் தந்தையின் மரணத்தை அவர் சித்தரித்த விதத்தில் தன் தந்தையையே பார்க்கிறான் அவன். அவன் மனம் நிறைவடைகிறது. சிறுகதை என்னும் கலை மீது குலசேகரன் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றுக்கும் தேர்ச்சிக்கும் இச்சிறுகதை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இத்தொகுதியில் நான்கில் ஒரு பாகம், தேரோடும் வீதி ஆகிய இரு கதைகளும் காதலை மையமாகக் கொண்டவை. ஆனால் இரு கதைகளுமே அந்தக் களத்தை அது நேரிடையாகக் காட்டவில்லை. தொடர்பே இல்லாத வேறொன்றைச் சித்தரிப்பதுபோல தொடங்கி அதற்குள் அடியோட்டமாக நீண்டுசெல்லும் காதல் சரட்டை அடையாளம் காணவைக்கிறது. இரு கதைகளிலும் காதலுக்குத் தடையாக சாதிவேறுபாடு குறுக்கிடுகிறது. இரு கதைகளின் காதலர்களும் அந்தத் தடையைக் கடந்துசெல்கிறார்கள். எங்கோ கண்காணாத இடத்தில்  நிறைவான இல்வாழ்க்கையை வாழ்கிறார்கள். காதல் கதைகள் என்னும் எல்லைக்கு அப்பால் அக்கதை மேலும் விரிந்துசென்று தம்மை நிறுவிக்கொள்கின்றன. வழக்கம்போல அக்கதைகளின் செறிவான வடிவமைப்பும் சித்தரிப்பு மொழியும் அக்கதைகளுக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன.

தேரோடும் வீதி சிறுகதை, கோயில் வாசலிலிருந்து தேர் நகர்ந்துசெல்லத் தொடங்கி ஊரிலிருக்கும் நான்கு தெருக்களையும் சுற்றிமுடித்து நிலைக்குத் திரும்பிவரும் கால அளவில் நிகழும் சிறியதொரு கதை. ஆனால் தேர் தொடங்கும் கணத்தில் ஆரம்பித்து நிலையை வந்தடையும் கணத்திற்குள் நாற்பது ஆண்டுகால வாழ்க்கையை துண்டுதுண்டான நினைவுத் துணுக்குகளாக முன்வைத்திருக்கிறது.

அந்த ஊரில் இருக்கும் நான்கு தெருக்களிலும் இருப்பவர்கள் பிரபலமான இருவேறு கட்சிகளின் கொள்கைச்சார்புடையவர்கள். ஒரு குழு எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிழுவதுபோலத் தோற்றமளிக்கும் தேரின் பழைய கோலத்தைக் காரணமாகச் சுட்டிக்காட்டி தேரோட்டத்தை நிறுத்துமாறும் புதிய தேரை உருவாக்கிய பிறகு தேரோட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என்னும் கருத்தை முன்வைக்கிறது. இன்னொரு தரப்பு, காலம்காலமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் தேரோட்ட நிகழ்ச்சி தடையின்றி நிகழவேண்டுமென்றும் பழுது நீக்கி சீர்செய்யும் வேலையை பிறகு மேற்கொள்ளலாம் என்றும் கருத்துரைக்கிறது.

தன் காலத்தில் தேரோட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்னும் அவப்பெயர் தனக்கு வந்துவிடக்கூடாது என்னும் எண்ணம் கோவில் அறங்காவலரை வாட்டுகிறது.  இரு குழுவினருக்கும் இடையில் நிலவும் சொந்தப் பகையுணர்ச்சி ஒரு காரணம். மேலும் இரு தரப்பினரும் இருவேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னொரு காரணம். அதை மீறி எப்படியோ தேரோட்டம் தொடங்கிவிடுகிறது.

ன்று தெருக்களைக் கடந்து வந்த தேர் நான்காவது தெருவில் நுழையும் சமயத்தில் தேரின் உச்சிநுனிப்பகுதி மரம்  உடைந்து நொறுங்கி விழுந்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது. அத்தோடு தேரோட்டம் நின்றுவிடுகிறது. அந்தச் சங்கடத்திலேயே மனம் வெதும்பி மறைந்துபோகிறார் அறங்காவலர். அடுத்த ஆண்டில் கோவில் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அவருடைய மகன் புதிய தேரின் உருவாக்கத்துக்குத் தேவையான செலவை ஈடுகட்டுவதற்காக பண வசூலைத் தொடங்குகிறார்.

போதுமான நிதி ஆதாரத்தைத் திரட்டி தேரோட்டத்தைத் தொடங்கிவைப்பதற்குள் நாற்பது ஆண்டுகள் ஓடோடிவிடுகின்றன. வெளியூரில் பணியாற்றிய அவர் பணிநிறைவு செய்து சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிடுகிறார். இந்த இடைவெளியில் தேரோட்டம் வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறித் தடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தம் நிலத்தில் விவசாயக்கூலியாக வேலை செய்துவந்த டிராக்டர் டிரைவரான வேறொரு சாதியைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.

ஒரே நாளில் அவள் அக்குடும்பத்துக்குப் பிடிக்காதவளாகவும் எதிரியாகவும் மாறிவிடுகிறாள். மணமக்கள் ஊரைவிட்டே வெளியேறிவிடுகிறார்கள். உடைந்துபோன கோவில் தேர் நிலையில் நின்றுவிடுகிறது. குடும்பத்தேர் ஊரைவிட்டே சென்றுவிடுகிறது. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இறந்துபோன பழைய அறங்காவலரின் மகன் புதிதாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு தேரோட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

அதே நாற்பதாண்டுகளுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறிப் போன இளம்பெண் மூதாட்டியாக அத்தேரோட்டத்தைப் பார்க்கவந்திருக்கிறாள். அவளுடைய குடும்பத்தினர் ஒருவரும் அவளை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் புதிய அறங்காவலர் மட்டும் அவள் குறித்த விவரத்தைத் தெரிந்துவைத்திருக்கிறார். தேர் நிலைக்குத் திரும்பியதும் உடல்நலப் பிரச்சினையால் கோவில் அறையில் ஓய்வெடுக்கும் அவளைச் சந்தித்து நலம் விசாரிக்கிறார். உற்றார் உறவினரே அடையாளம் தெரியாமல் கடந்துபோன சூழலில் யாரோ ஒருவர் அவளுடைய சிறுவயது வீட்டுப்பெயரைக் குறிப்பிட்டு உரையாடலைத் தொடங்கிய விதம் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

குடும்பத்தேரை, அத்துடன் தொடர்புடைய குடும்பமே கைவிட்டாலும் மானுடகுலத்தையே ஒரு குடும்பமாக நினைத்து வாழ்பவர்களின் கையும் மனமும் நீண்டு தம்மோடு இணைத்துக்கொள்கிறது. குடும்பம், கட்சி, மானுடம்  எல்லாமே உறவைப் பேணி வளர்க்க உருவானவைதானே தவிர, அதைச் சிதைப்பதற்காக உருவானவை அல்ல. புரிந்துகொள்வதற்கு மிகமிக எளிய உண்மையைத்தான் புரிந்துகொள்ளாததுபோல மக்கள் சிக்கலாக்கிக்கொள்கிறார்கள்.

கலையமைதியும் குறிப்பால் உணர்த்தும் கூறுகளும் பொருந்திய சிறப்பான சிறுகதை தலைக்கசம். நீரோட்டம் குறைந்து தேங்கி குட்டையாகச் சுருங்கி சேறும் சகதியுமாகச் சிறுத்துப்போன இடம் தலைக்கசம். ஏறத்தாழ ஒரு சாக்கடை என்றும் சொல்லலாம். ஊருக்கு வெளியே இருக்கும் அதன் கரையோரமாக பலர் குடிசை கட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள்.

குடிசையையே உலகெனக் கொண்ட பலநூறு பேர்களுக்கிடையில் ஒரே ஒரு இளைஞன் படித்துப் பட்டதாரியாகிறான். ஆனாலும் அவன் தேடும் வேலை கிடைக்கவில்லை. அவனும் மனச்சோர்வுக்கு இடம் தராமல் எல்லா வேலைகளுக்கும் விண்ணப்பித்தபடி இருக்கிறான். மாலை நேரங்களில் பள்ளிச்சிறுவர்களுக்கு தனிவகுப்பு எடுக்கிறான். அவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுக்கும் முறையும் பழகும் விதமும் பிடித்திருக்கிறது. அவனுக்கும் அந்தப் பிள்ளைகளைப் பிடித்திருக்கிறது. ஊருக்குள் வசிக்கும் ஒருவர் தன் சிறுவயது மகனை அந்த இளைஞனிடம் தனிவகுப்பில் சேர்த்துவிடுகிறார். அந்தச் சிறுவனுக்கு ஓர் அக்கா இருக்கிறாள். அவளுக்கு அந்த இளைஞனைப்பற்றிய விவரம் தெரிந்திருக்கிறது. தன் தம்பி வழியாக புத்தகம் என்றும் கடிதம் என்றும் கொடுத்தனுப்பி அவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக விருப்பத்தை வளர்த்துக்கொள்கிறாள். அந்த இளைஞன் அனுப்பும் பதில் கடிதங்களும் புத்தகங்களும் அவனுடைய விருப்பத்தின் அடையாளங்களாக அவளுக்குத் தோற்றமளிக்கிறது.

ஆண்டுத்தேர்வு முடிவடைந்ததும் எல்லாத் தனிவகுப்புகளும் முடிவடைந்துவிடுகின்றன. இளைஞன் எதிர்பார்த்த வேலைக்கான கடிதம் எதுவும் வராமல், அவனை ஏமாற்றத்தில் தள்ளிவிடுகிறது. வேறு வழி இல்லாமல் அவன் யாரோ ஒருவர் பரிந்துரைத்த மில் வேலைக்குச் செல்கிறான். சிறுவர்களுக்காக நடத்தி வந்த தனிவகுப்புப் பயிறிசியை அவனத் தொடரவில்லை. அக்காவும் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்கிறாள். பெற்றோர் ஏற்பாடு செய்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டு வெளியூருக்குச் சென்றுவிடுகிறாள். சிறுவன் ஒவ்வொரு வகுப்பாகப் பள்ளிப்படிப்பை முடித்து, பிறகு பட்டம் பெற்று ஏதோ ஒரு வேலைக்குச் செல்லத் தொடங்குகிறான்.

ஒருநாள் வேலைக்குச் செல்ல பேருந்திலிருந்து இறங்கி நடந்துசெல்லும்போது, பழைய தனிவகுப்பு ஆசிரியர் சாப்பாட்டுப்பைகளோடு வேலைக்குச் செல்வதை அவன் தற்செயலாகப் பார்க்கிறான். பல ஆண்டு கால இடைவெளி அவனைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவர்தானா என ஆழ்நெஞ்சில் உறுதிப்படுத்திக்கொள்வதற்குள் அவர் வெகுதொலைவு சென்றுவிடுகிறார். குழப்பம் மட்டுமே எஞ்சுகிறது.

இப்படி சீரான கதைத்தொகுப்பாக இந்தக் கதை எழுதப்படவில்லை. எதிர்பாராத தருணத்தில் பார்த்த முகம் அவருடையதுதானா என நினைத்துத் தடுமாறுகிற குழப்பமான கணத்திலிருந்து தொடங்கி, பழைய நினைவுகளிலிருந்து ஒவ்வொன்றாக மீட்டெடுத்து அசைபோடும் விதமாக வளர்ந்து,  பல ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய குடிசை இருந்த இடமும் குட்டைகள் இருந்த இடமும் தடமின்றி அழிந்துபோயிருப்பதையும் புதிய குடியிருப்புகள் தோன்றியிருப்பதையும்  கண்டு திகைக்கும் புள்ளியில் இறுதியாக நிறைவடைகிறது.

ஆசிரியர் நெஞ்சிலும் அக்கா நெஞ்சிலும் தொடக்கத்தில் ஊற்றெடுத்த அன்பின் ஊற்று நிலைக்கவில்லை. அந்த நீரோட்டம் பெருகவில்லை. ஊறிப் பெருகத் தொடங்கிய கணத்திலேயே தேங்கிச் சுருங்கி கசமாகிவிடுகிறது. அந்தக் கசத்தோடேயே அவர்கள் வாழப் பழகிக்கொண்டனர். நிலப்பரப்பில் இருந்த கசப்பகுதிகள் மறைந்துவிட்டன. ஆயினும் மனப்பரப்பில் உருவான கசப்பகுதிகள் அப்படியே மறைவாகத் தேங்கி நிற்கின்றன. அது ஒருபோதும் பிறர் கண்ணுக்குப் புலப்படுவதில்லை என்பதாலேயே அவற்றை இல்லை என ஒருவரும் சொல்லிவிடமுடியாது. தம் விருப்பத்தை வெளிப்படுத்தி கொலை வழியாகவோ அல்லது தற்கொலை வழியாகவோ தம் உயிரைப் பறிகொடுப்பதைவிட, அவ்விருப்பத்தை ஆழ்நெஞ்சில் ஒரு கசமாகச் சுருக்கித் தேக்கி வைத்துக்கொள்வது மேலான குணம் என்று சொல்லத் தோன்றுகிறது.

இப்படி ஒவ்வொரு கதையைப்பற்றியும் விரிவாக எழுதிக்கொண்டு செல்லலாம். ஒரு முன்னுரையில் இதற்கு மேல் விரிவாக எடுத்துரைப்பது அழகல்ல. அந்த அனுபவத்தை வாசகர்கள் தம் சொந்த வாசிப்பின் வழியாக அடையவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழ் வாசகர்களுக்கு இந்த நல்ல தொகுப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நண்பர் குலசேகரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

 

(மு.குலசேகரன் எழுதி எதிர் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளே மாட்டிய சாவி’ சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)