Home

Sunday, 15 March 2026

டி.எஸ்.சொக்கலிங்கம்: சொற்கோட்டம் இல்லாத மாமனிதர்

 

இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கி, வாழ்நாள் முழுதும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்த காந்தியடிகள் தம் மனைவி கஸ்தூர் பாவுடன் 09.01.1915 அன்று பம்பாயில் வந்திறங்கினார். பிறகு, நாட்டு நிலைமையை நேரில் கண்டறியும் பொருட்டு, கோகலேயின் ஆலோசனையை ஏற்று, குஜராத்திய வழியில் சட்டையும் தலைப்பாகையும் பஞ்சகச்சமாக வைத்துக் கட்டிய வேட்டியும் அணிந்துகொண்டு இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார்.  


பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்ததும் தொண்டர்களோடு சேர்ந்து வசிக்கும் வகையில்  குஜராத்தைச் சேர்ந்த அகமதாபாத் நகரில் சபர்மதி நதிக்கரையோரமாக ஓர் ஆசிரமத்தை உருவாக்கினார் காந்தியடிகள். அவர் உரையாற்றிய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆசிரமத்தில் உறுப்பினராகச் சேர விரும்பும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளை எடுத்துரைத்து இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், நாவடக்கம், பொருள் சேமியாமை, சுதேசி, அஞ்சாமை, சமய நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, தாய்மொழிக்கல்வி, வேறுபாடு கருதாத உடலுழைப்பு ஆகிய பதினோரு விரதங்களையும் பின்பற்றும் ஆர்வமும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் மட்டுமே அரசியல் தளத்தில் செயல்படத் தகுதியானவர்கள் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. பதினோரு விரதங்கள் தொடர்பான செய்திகள் தேசமெங்கும் எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகி, அது மக்களிடையில் தீவிரமான பேசுபொருளானது.

தமிழில் வெளிவந்த அக்குறிப்புகளைப் படித்த தென்காசியைச் சேர்ந்த பதினெட்டு வயதுடைய இளைஞரொருவர்  சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து காந்தியடிகளோடு இணைந்து தேசசேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பினார். உடனடியாக அவர் காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். சில தினங்களிலேயே காந்தியடிகள் எழுதிய பதில் கடிதம் அந்த இளைஞரை வந்தடைந்தது. போதுமான எண்ணிக்கையில் ஆசிரமத்தில் இளைஞர்கள் சேர்ந்துவிட்டதால் இப்போதைக்கு இடமில்லை என்றும் அனுமதி இல்லாமல் ஆசிரமத்துக்கு வரவேண்டாம் என்றும் காந்தியடிகள் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதம் அந்த இளைஞருக்கு சற்றே ஏமாற்றமளித்தாலும் அங்கு சென்று சேர்ந்தபிறகு ஆசிரமத்தில் இடம் கிடைத்துவிடும் என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார் அந்த இளைஞர். அவர் டி.எஸ்.சொக்கலிங்கம்.

தந்தையாரின் எதிர்பாராத மறைவுக்குப் பிறகு அவர் நடத்திவந்த மளிகைக்கடையின் பொறுப்பை சொக்கலிங்கம்தான் ஏற்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். திருநெல்வேலி சதிவழக்கில் கைதாகி இரண்டாண்டு காலம் சிறையில் கழித்து, அப்போதுதான் அவருடைய மூத்த சகோதரர் விடுதலை பெற்று வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தார். அவருடைய வீடு காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் இருந்தது. இனியொரு முறை போராட்டத்தின் நிழலோ, காவல்துறையின் நிழலோ வீட்டில் படிந்துவிடக்கூடாது என்கிற பதற்றம் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருடைய நெஞ்சிலும் நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட சூழலிலும் சொக்கலிங்கம் சபர்மதி ஆசிரமத்துக்குச் செல்லும் முடிவில் உறுதியாக இருந்தார்.

1917ஆம் ஆண்டில் மே மாத இறுதியில் ஒருநாள் நெல்லை, சென்னை, பம்பாய் வழியாக அகமதாபாத்துக்குச் சென்று சபர்மதியை அடைந்தார் சொக்கலிங்கம். அப்போது காந்தியடிகள் அங்கு இல்லை. அவுரி விவசாயிகளின் பிரச்சினையை முன்னிட்டு சம்பாரண் கிராமத்துக்குச் சென்றிருந்தார். மகன்லால் காந்தி அவரை வரவேற்று ஆசிரமத்தில் தங்கவைத்துக்கொண்டார். ஆசிரமத்தில் வழங்கப்பட்ட சுவையற்ற உணவு ஒருசில வேளைகளிலேயே சொக்கலிங்கத்தைச் சலிப்புற வைத்துவிட்டது. நல்ல உணவுக்காக அவருடைய நாக்கு தவிக்கத் தொடங்கியது.

ஒரு வாரத்துக்குப் பிறகே காந்தியடிகள் திரும்பிவந்தார். அவரை வரவேற்க ரயில் நிலையத்துக்குச் சென்ற இளைஞர்களுடன் சொக்கலிங்கமும் சேர்ந்துகொண்டார். நிலையத்தில் ரயிலை விட்டு இறங்கிய காந்தியடிகளைச் சந்தித்து வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அங்கிருந்து ஆசிரமத்துக்கு அனைவரும் நடந்தே வந்தனர். வரும் வழியிலேயே சொக்கலிங்கத்துடன் உரையாடி அவரைப்பற்றிய விவரங்களைக் காந்தியடிகள் தெரிந்துகொண்டார். ஆசிரமத்தில் காந்தியடிகளுடைய உரையாடல்களைக் கேட்பதிலும் சின்னச்சின்ன பணிகளைச் செய்வதிலும் சொக்கலிங்கத்துடைய பொழுதுகள் கழிந்தன. சில நாட்களிலேயே காந்தியடிகள் ஏதோ ஒரு வேலைக்காக பம்பாய்க்குப் புறப்பட்டார். அதை அறிந்த சொக்கலிங்கம்  தன்னையும் அப்பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகளிடம் வேண்டினார். விரைவில் இந்தி கற்றுக்கொள்வதாக இருந்தால் தன்னோடு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார் காந்தியடிகள். உறுதியாகக் கற்றுக்கொள்வதாக சொக்கலிங்கமும் வாக்களித்தார்.

பம்பாய் வரைக்கும் காந்தியடிகளோடு பயணம் செய்தார் சொக்கலிங்கம். அதற்கிடையில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வந்துவிட்ட சொக்கலிங்கத்தின்  தாய் அவரைத்  தேடிக்கொண்டு பம்பாய்க்கு வந்துவிட்டார். அம்மாவின் சந்திப்பு காந்தியடிகளுடனான பயணத்தை அந்த நிலையத்தோடு நிறுத்திவிட்டது. அடுத்தநாள் காந்தியடிகளிடம் விடைபெற்றுக்கொண்டு தாயாரோடு தென்காசிக்கே திரும்பிவந்துவிட்டார் சொக்கலிங்கம்.

தென்காசியில் பழையபடி மளிகைக்கடை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினாலும், அவர் மனம் தேசமெங்கும் நடைபெற்றுவரும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்தது. அக்காலத்தில் சுதேசமித்திரன், வர்த்தகமித்திரன், பிரபஞ்சமித்திரன் ஆகிய மூன்று பத்திரிகைகள் மட்டுமே தேசியச் செய்திகளைத் தாங்கி வெளிவந்தன. அவை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கிடைத்தன. சொக்கலிங்கம் இப்பத்திரிகைகளில் பாரதியார், வ.ரா., வரதராஜுலு நாயுடு ஆகியோர் எழுதும் கட்டுரைகளை மிகவும் விரும்பிப் படித்து தன் பொது அறிவை வளர்த்துக்கொண்டார் சொக்கலிங்கம்.

பாரதியாரை அவருக்கு நன்றாகவே அறிமுகம் இருந்தது. அவரும் சொக்கலிங்கத்துடைய சகோதரரும் நண்பர்கள். நெல்லைக்கு வரும்போதெல்லாம் அவரைச் சந்திப்பதற்காக பாரதியார் அவ்வப்போது சொக்கலிங்கத்துடைய வீட்டுக்கு வந்துபோகும் பழக்கம் இருந்தது. அப்போது பாரதியார் உரத்த குரலில் எழுச்சியோடு பாடும் பாடல்களைக் கேட்டு மகிழும் பேறு சொக்கலிங்கத்துக்குக் கிடைத்தது. பாரதியாரின் கட்டுரைகளும் கார்ட்டூன்களும் அவ்வப்போது சுதேசமித்திரனில் வெளிவந்தன. வரதராஜுலு நாயுடுவின் கட்டுரைகள் பிரபஞ்சமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தன. அக்கட்டுரைகளைப் படிக்கப்படிக்க சொக்கலிங்கத்துக்கும் எழுதும் ஆசை ஏற்பட்டது. ஒருசில கட்டுரைகளை எழுதி பிரபஞ்சமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். அவை பிரசுரம் கண்டன.

மளிகைக்கடையின் பொறுப்பை தன் சகோதரரிடமே விட்டுவிட்டு சுதேசிப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் வகையில் ஸ்டார் நிலையம் என்னும் பெயரில்  ஒரு கடையைத் தனியாகத் தொடங்கி நடத்தத் தொடங்கினார் சொக்கலிங்கம். பொதுமக்களிடையில் அக்கடைக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் ஒருமுறை தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குச் சென்றுவந்த நண்பர்கள் வழியாக ‘குற்றால அருவியில் வெள்ளையர்கள் அனைவரும் காலை நேரத்தில் குளித்துவிட்டுச் சென்றபின்புதான் இந்தியர்கள் குளிக்கவேண்டும்’ என்னும் நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் செய்தியையும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் அதை எதிர்க்கவில்லை என்பதையும் கேட்டு மனம் கொதித்தார். உடனே ‘நீராடுவதற்கும் நிர்ப்பந்தமா?’ என்னும் தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதி அச்சிட்டு பொதுமக்களிடையில் விநியோகித்தார்.  அந்த வட்டாரத்தைச் சேர்ந்த எல்லா அதிகாரிகளுக்கு அப்பிரசுரங்களை அனுப்பிவைத்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்புணர்வும் உருவாகி வரவில்லை. அதிகாரிகள் தரப்பு அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அடுத்த கட்ட முயற்சியாக சொக்கலிங்கம் தன் நண்பர்களைத் திரட்டிக்கொண்டு குற்றாலத்துக்குச் சென்று குளிக்கும் போராட்டத்தைத் தொடங்கினார். அது தக்க பலனைக் கொடுத்தது. உடனே, அந்த வட்டார அதிகாரிகள் அருவிக்கரைக்கு வந்து சேர்ந்தனர். சொக்கலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விளைவாக அரசு தன் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டது. நேரக்கட்டுப்பாடு இன்றி இந்தியர்களும் அந்த அருவியில் குளிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அருவியைத் தாராளமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

அதே சமயத்தில், ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களால் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இந்தியர்கள், எந்த நேரத்திலும் குளிக்கலாம் என அனுமதி கிடைத்ததும் தாழ்த்தப்பட்டவர்கள் அருவியில் குளிப்பதற்குத் தடைவிதித்தனர். அந்த வாய்மொழித்தடையே தாழ்த்தப்பட்டவர்களை அருவிக்கரையின் பக்கம் நெருங்கவிடவில்லை. சொக்கலிங்கம் மட்டுமன்றி, இன்னும் பலரும் முயற்சி செய்தும் அவர்களிடையில் மனமாற்றத்தை உருவாக்க முடியவில்லை. ஒருமுறை காந்தியடிகள் அந்த அருவிக்கரை பக்கமாக வந்தபோது பலரும் அவரை குற்றாலத்தில் குளித்துவிட்டுச் செல்ல ஆவலோடு அழைத்தனர். ஆனால் காந்தியடிகள், தாழ்த்தப்பட்டோர் குளிப்பதற்கு அனுமதி இல்லாத அருவியில் தனக்குக் குளிப்பதற்கு விருப்பமில்லை என்று புறக்கணித்துவிட்டார்.

ரெளலட் சட்டத்துக்கு எதிராக காந்தியடிகள் 1920இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அதுவரை ஆங்கிலேய அரசுக்கு அளித்துவந்த எல்லாவிதமான ஒத்துழைப்பையும் திரும்பப் பெறுவதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். இந்தியர்கள் தாம் பெற்றிருக்கும் அரசு வேலைகளையும் அரசு அளித்த பட்டம் பதவிகளையும் துறந்து, அரசு நிறுவனங்களிலிருந்து வெளியேறவேண்டும் என்று காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணிப்பதிலும் மதுக்கடைகளை முற்றுகையிட்டு மது எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதிலும் மக்கள் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் அம்சங்களை மக்களுக்கு நேரிடையாக விளக்கும் விதமாக  அப்போது மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜாஜியும் தி.சே.செள.ராஜனும் தமிழகமெங்கும் பயணம் செய்து கூட்டங்களில் பேசத் தொடங்கினர். பத்திரிகை வாயிலாக அச்செய்தியை அறிந்த சொக்கலிங்கம் அவர்களுக்குக்  கடிதம் எழுதி தென்காசிக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் சொக்கலிங்கத்துடைய வேண்டுகோளை  ஏற்றுக்கொண்டு பதில் எழுதினர். அவர்களை தென்காசி ரயில்நிலையத்துக்கே நேரில் சென்று வரவேற்று நிகழ்ச்சிமேடைக்கு அழைத்துவந்தார் சொக்கலிங்கம். அவர்களுடைய உரைகள் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடையவேண்டிய அவசியம் குறித்த தெளிவை தென்காசி மக்களிடையில் உருவாக்கியது.

அப்போதுன் கல்லிடைக்குறிச்சியில் மருத்துவராக இருந்த சங்கரய்யருடன் இணைந்து துணிக்கடைகளின் முன்பு அயல்நாட்டுத்துணிகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று முழக்கமிட்டபடி மறியலில் ஈடுபட்டார் சொக்கலிங்கம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கு இருவரும் இணைந்து தொண்டர்களைத் திரட்டிச் சென்று  மறியலில் ஈடுபட்டனர். அதைப்போலவே மதுக்கடைகள் முன்பும் திரண்டு நின்று மறியல் செய்தனர். கடைக்குச் செல்ல முயற்சி செய்யும் பொதுமக்களிடம் மது அருந்தவேண்டாம் என வேண்டினர். பல முனைகளிலும் அவருடைய ஒத்துழையாமைப்பணி தொடர்ந்தது.

ஒருமுறை, தென்காசியிலேயே இருந்த சாராயக்கடையின் முன்னால் வழக்கம்போல சொக்கலிங்கமும் அவருடைய நண்பர்களும் நின்று மறியலில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே இத்தகு மறியல்களால் விற்பனை பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக தொண்டர்களை அங்கிருந்து விரட்டியடிக்க ஊரிலிருந்து போக்கிரிகளை அழைத்துவர முனைந்தார் அந்தக் கடையின் முதலாளி. எதிர்பாராத விதமாக போக்கிரிகளில் ஒருவரும் அவருடைய சொற்படி நடக்க முன்வரவில்லை. அதனால் மனம் வெறுத்த கடைமுதலாளி சொக்கலிங்கமும் அவருடைய நண்பர்களும் கடைக்குள் புகுந்து பணப்பெட்டியைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றுவிட்டதாக மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தார். ஆனால் மாஜிஸ்திரேட் அப்புகாரை வாங்க மறுத்துவிட்டார். பிறகு திருநெல்வேலிக்குச் சென்று ஜில்லா கமிட்டி அதிகாரிகளைச் சந்தித்தார் அந்த முதலாளி. அவர்களும் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். வேறு வழியில்லாமல் கடையின் முதலாளி இறங்கிவந்து சொக்கலிங்கத்திடமும் அவருடைய நண்பர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வந்தார். சாராயக்கடையின் அடுத்த ஏலத்துக்கு இன்னும் இரு மாதங்களே இருந்தன.  இனிமேல் எந்த ஏலத்திலும் ஈடுபடுவதில்லை என எழுதிக்கொடுத்ததோடு மட்டுமன்றி, வெளிப்படையாகவே அதை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கவும் செய்தார் அந்த முதலாளி. அதற்குப் பிறகே சாராயக்கடை மறியலை நிறுத்தினார் சொக்கலிங்கம். ஏலத்துக்குரிய காலம் முடிவடைந்ததும் அந்தக் கடை மூடப்பட்டது.

சாராயக்கடை மறியலைப்போலவே துணிக்கடை மறியலின் காரணமாக துணிக்கடைகளில் வணிகம் குறைந்தது. அதனால் கடைமுதலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் கொடுத்தனர்.  உடனே ஆட்சியர் காவல்துறையினரின் உதவியோடு மறியலில் ஈடுபட்டிருந்த சொக்கலிங்கத்தையும் மற்றர்களையும் தாக்கி கலைந்துபோகச் செய்தார். மறியலுக்குத் தடை உத்தரவைப் பிறப்பித்து, ஒவ்வொரு கடையின் முன்னாலும் ஒரு காவலரை நிறுத்தி துணிவணிகம் தொடரவும் வழிவகுத்தளித்தார்.

சென்னையிலிருந்து திரு.வி.க. நடத்திவந்த தேசபக்தன் இதழுக்கு தமிழகமெங்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அப்பத்திரிகையில் தேவிதாசன் என்னும் புனைபெயரில் சொக்கலிங்கம் சமூக, அரசியல் தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தார். அதனால் திரு.வி.க.வுடன் அவருக்கு நல்ல கடிதத்தொடர்பு இருந்தது. அச்சமயத்தில் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் மாநாட்டை தென்காசியில் நடத்த கட்சி தீர்மானித்தது. மாநாட்டை நடத்தும் குழுவில் சொக்கலிங்கமும் இருந்தார். அந்த மாநாட்டுக்கு திரு.வி.க. தலைமையேற்று உரை நிகழ்த்தினால் பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்தார். உடனே திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம் எழுதி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் சொக்கலிங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தென்காசிக்கு வந்து மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

1923இல் காங்கிரஸ் நிதிக்கு பணம் திரட்டுவதற்காக வரதராஜுலு நாயுடு தமிழகமெங்கும் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். செல்லும் இடங்களிலெல்லாம் அவர் சொற்பொழிவாற்றினார். பொதுமக்கள் திரளாகக் கூடி அவருடைய உரைகளைக் கேட்டனர். மாவட்டத்தலைநகரில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டத்துக்கு ஆயிரம் ரூபாய், தாலுகா நகரில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டத்துக்கு ஐநூறு ரூபாய், பிற இடங்களில் அமையும் கூட்டங்களுக்கு நூறு ரூபாய் என காங்கிரஸ் நிதி திரட்டப்பட்டது. அந்த அறிவிப்பைப் படித்த சொக்கலிங்கம் தென்காசி நகரில் ஐநூறு ரூபாய் நன்கொடையாகத் திரட்டி வரதராஜுலு நாயுடுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியன்று நாயுடுவின் உரையைக் கேட்டு அவர் மனம் பறிகொடுத்தார். அந்த உரை அவரை பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது.

1923ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துக்கு நாடெங்கும் மக்கள் ஆதரவு கிடைத்தது. பலர் ஆர்வமுடன் பங்கேற்றதன் விளைவாக அந்த இயக்கம் மிகவிரைவாக நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பரவியது. எதிர்பாரத விதமாக செளரிசெளரா என்னும் இடத்தில் அகிம்சை வழியிலிருந்து விலகி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். செளரிசெளராவில் ஒரு காவல் நிலையம் தீக்கிரையானது. பலர் உயிரிழந்தனர்.  அச்செய்தியை அறிந்ததும் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக நிறுத்தினார். ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

காந்தியடிகளின் கைதுச் செய்தியால் நாடெங்கும் ஊக்கமுடன் உழைத்துவந்த காங்கிரஸ் ஊழியர்களிடையே ஒருவித திகைப்பும் சோர்வும் ஏற்பட்டன. உற்சாகமான காங்கிரஸ் வேலைகள் எதுவும் இல்லாததால் ஏதேனும் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றும் எண்ணம் சொக்கலிங்கத்துக்கு ஏற்பட்டது. உடனே அவருக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த வரதராஜுலு நாயுடுவை அணுகி அவர் நடத்திவந்த ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே தம் ஆணித்தரமான கட்டுரைகளால் பத்திரிகையின் தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்தார் சொக்கலிங்கம்.

தனிக் கட்டுரைகளை மட்டுமன்றி, பத்திரிகையின் தலையங்கங்களை எழுதும் பொறுப்பையும் சொக்கலிங்கத்திடம் அளித்தார் வரதராஜுலு நாயுடு. மெல்ல மெல்ல சுதேசமித்திரனுக்கு இணையாக ஓங்கி வளர்ந்து நின்றது தமிழ்நாடு பத்திரிகை. அப்போது சுதேசமித்திரனின் விலை ஒன்றேகால் அணா. தமிழ்நாடு ஓரணா மட்டுமே. வேறு வழியில்லாமல் சுதேசமித்திரனின் விலையும் ஓரணாவுக்குக் குறைந்தது. எனினும் தமிழ்நாடு இதழ் அடைந்த மக்கள் செல்வாக்கை சுதேசமித்திரனால் அடையமுடியவில்லை.

ஒருமுறை அரசு கோவில் நிர்வாக வேலைகளைக் கவனித்துக்கொள்வதற்காக இந்துமத பரிபாலன போர்ட் என்னும் துறையை உருவாக்கியது. அப்போது அதை எல்லாப் பத்திரிகைகளும் எதிர்த்து எழுதின. ஆனால் களநிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ்நாடு பத்திரிகை அந்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தது. கோவிலில் தேவதாசிகள் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க சட்டமியற்றும் வகையில் விவாதங்கள் எழுந்தபோதும் பல பத்திரிகைகள் அதை எதிர்த்து எழுதின. அப்போதும் தமிழ்நாடு பத்திரிகை ஆதரவு அளித்தது.

அந்தப் பத்திரிகையில் பணிபுரிந்த காலத்தில் சொக்கலிங்கம் தன்னை தனித்தன்மை மிக்க பத்திரிகையாளராக நிறுவிக்கொண்டார்.  1930ஆம் ஆண்டில் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது தமிழ்நாடு பத்திரிகையின் அதிபரான வரதராஜுலு அதை எதிர்க்கும் வகையில் கண்டன அறிவிப்பை வெளியிட்டார். அதனால் அவருடன் கருத்துவேறுபாடு கொண்டு அப்பத்திரிகையிலிருந்து வெளியேறினார் சொக்கலிங்கம்.

தன் அனுபவத்தையே மூலதனமாகக் கொண்டு 14.04.1931 அன்று காந்தி என்னும் பெயரில் காலணா விலையில் வாரம் இருமுறை வெளிவரும் இதழாகத் தொடங்கினார் சொக்கலிங்கம். பெருகத் தொடங்கிய ஆதரவின் விளைவாக மும்முறை வெளிவரும்படி செய்தார். அச்சமயத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸின் அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்மானமும் தேசிய பொருளாதாரத்திட்டம் குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்தச் செய்தியைப்பற்றிய முழு தகவலையும் காந்தி இதழில் சொக்கலிங்கம் வெளியிட்டார். சட்டத்துக்கு மாறாக அச்செய்தியை வெளியிட்டதற்காக ஐநூறு ரூபாய் காப்புத்தொகையும் ஐம்பது ரூபாய் அபராதமும் செலுத்தவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கு சொக்கலிங்கம் மறுத்ததால் அவருக்கு ஏழுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சொக்கலிங்கம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவருக்கு அவிநாசிலிங்கம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஒருநாள் இருவரும் உரையாடும்போது, தமிழ்வாசகர்கள் எளிதாக வாசிக்கும் வகையில் பல துறைகள் சார்ந்து பல புத்தகங்கள் எழுதப்படவேண்டும் என்றும் அவற்றை அழகாகவும் மலிவாகவும் அச்சிட்டு மக்களிடையில் விநியோகம் செய்யவேண்டும் என்றும் பேசிக்கொண்டனர். சிறையிலிருந்த தொண்டர்களைத் திரட்டி அதற்காகவே ஒரு கூட்டம் போட்டு தன் திட்டத்தை அறிவித்தார் சொக்கலைங்கம். அதற்கு அனைவரும் ஆதரவு நல்கினர். விடுதலை பெற்றதும் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நூல்களை வெளியிடவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்த பிறகு ஐநூறு ரூபாய் காப்புத்தொகையைச் செலுத்தி காந்தி இதழுக்கான அனுமதியைப் பெற்று அவ்விதழை வெற்றிகரமாக நடத்தத் தொடங்கினார் சொக்கலிங்கம். வாரம் மும்முறை வெளிவந்த இதழை ஒரு கட்டத்தில் தினசரி வெளிவரும் இதழாக மாற்றினார். சிறைவாசத்தில் நண்பர்களுடன் கூடி முடிவெடுத்ததற்கிணங்க, வெகுவிரைவிலேயே நவயுகப்பிரசுராலயம் என்னும் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கினார் சொக்கலிங்கம். அவினாசிலிங்கமும் தாம் வாக்களித்தபடி பொருளாதாரம், தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம் என இரு தலைப்புகளில் புத்தகங்களை எழுதிக் கொடுத்தார். அவையிரண்டும் அப்பதிப்பகத்தின் வழியாக வெளிவந்து வாசகர்களின் ஆதரவைப் பெற்றன.

ஜஸ்டிஸ் கட்சியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் பி.சுப்பராயன் ஒருமுறை 1932இல் சட்டசபையில் தீண்டாமை ஒழிப்புக்கான ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டுவந்து உரையாற்றினார். விவாதத்தின் போது சட்டசபையில் இருந்த பலரும் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினர்.  சொக்கலிங்கம் தன் காந்தி இதழில் அந்த மசோதாவை ஆதரித்து நீண்டதொரு கட்டுரை எழுதினார். தீண்டாமை பற்றி பழமைவாதிகளின் அறிக்கை, பழமைவாதிகளுக்கு காந்தியடிகளின் அறிவுரை அதற்கு கடுமையான எதிர்ப்பு, டாக்டர் சுப்பராயன் தயாரித்த மசோதாவின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு பிரசுரமாகத் தயார் செய்து 13.01.1933 அன்று அரையணா விலையில் வெளியிட்டார் சொக்கலிங்கம்.

1933ஆம் ஆண்டில் காந்தியடிகள் பம்பாயில் ராஸ் என்னும் இடத்தை நோக்கி ஓர் ஊர்வலத்தைத் தொடங்கினார். அந்த ஊர்வலத்துக்குத் தடை விதித்ததோடு எரவாடா எல்லையைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் காவல் துறையினர் காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் வைத்திருந்து அடுத்தநாள் விடுதலை செய்தனர். அந்த மாதத்தில் மட்டும் அவர் இவ்விதமாக மூன்றுமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அதையொட்டி சொக்கலிங்கம் தம் இதழை ஒரு மாத காலம் நிறுத்துவைத்து, அடுத்த மாதம் வழக்கம்போல வெளியிட்டார்.  அச்சகத்தின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு காந்தி இதழை 1933 ஏப்ரல் முதல் மாதம் ஒருமுறை வெளிவரும் மலராக மாற்றி வெளியிட்டார்.

அரிஜன நல நிதி திரட்டும் பொருட்டு காந்தியடிகள் 1933ஆம் ஆண்டில் இறுதிப்பகுதியில் தமிழகம் வழியாக கேரளத்துக்குச் சென்றிருந்தார். அவர் திருவாங்கூரில் இருந்த சமயத்தில் 15.01.1934 அன்று பீகாரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடபீகார் முற்றிலும் நிலைகுலைந்து அழிந்தது. இலட்சக்கணக்கான கிராம மக்கள் ஒரே இரவில் வீடற்றவர்களாகவும் நிலமற்றவர்களாகவும் பிழைப்பற்றவர்களாகவும் மாறித் தவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் தொள்ளாயிரம் மைல் நீளத்துக்கு இரயில் பாதைகள் பயனற்றுப் போயின. நிலநடுக்கச்செய்தியை அறிந்து காந்தியடிகள் மிகவும் துயருற்றார். அரிஜன நல நிதியோடு பீகார் மக்களுக்கு மீட்சியளிக்கும் வகையில் நிவாரண நிதியையும் அளிக்கும்படி அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நிலநடுக்கப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மிகமிகக் குறைவாகவே இருந்தன. காங்கிரஸ் தொண்டர்களும் சில நல்லெண்ணக்குழுக்களும் மட்டுமே மக்களுக்கு உதவியாக இருந்தன. இதை அறிந்த சொக்கலிங்கம் அரசின் செயலின்மையைக் கண்டிக்கும் விதமாக தம் இதழில் ‘சர்க்கார் எங்கே?’ என்னும் தலைப்பில் விரிவான தலையங்கத்தை எழுதினார். உடனே அரசு, அவர் மீதும் காந்தி பத்திரிகை மீதும் ராஜதுரோகம் குற்றம் சுமத்தி  வழக்குத் தொடர்ந்தது. காந்தி பத்திரிகைக்குச் செலுத்திய  ஜாமீன் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் பறிமுதலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் மேல்முறையீடு செய்து அதில் வெற்றி பெற்றார்.

இர்வினுக்குப் பிறகு இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த வில்லிங்க்டன் சிவில் இராணுவச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.  அதைப்பற்றிய தகவல்கள் கூட மக்களிடையில் பரவுவதற்கு வழியில்லாமல் இருந்தது. அச்சமயத்தில் 1934ஆம் ஆண்டில் டெல்லி மத்திய சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. சென்னையிலிருந்து சத்தியமூர்த்தியும் ராமசாமி முதலியாரும் அத்தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகைக்குரல் எங்கும் ஓங்கி ஒலிக்கவில்லை. அத்தகு சூழலில் காங்கிரஸின் குரலாக ஒலிக்கும் வகையில் ஒரு பத்திரிகையைத் தொடங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பம்பாயிலிருந்து சதானந்த் என்பவர் சென்னைக்கு வந்தார். தமிழில் தினமணி என்னும் பெயரில் ஒரு தினசரிப்பத்திரிகையைத் தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார்.  தினமணியின் ஆசிரியராகப் பணியாற்றும் பொறுப்பு சொக்கலிங்கத்தைத் தேடி வந்தது. அவரும் அதை  காலம் தனக்கிட்ட கட்டளை எனக் கருதி ஏற்றுக்கொண்டார். பாரதியாரின் நினைவுநாளான 11.09.1934 அன்று ‘ஏழையின் துயர்துடைக்க எல்லோரும் களித்திருக்க எவருக்கும் அஞ்சாத தினமணி’ என்னும் முழக்கத்துடன் தினமணியின் முதல் இதழ் வெளிவந்தது.

முதல் நாளன்று வெளிவந்த இதழில் சொக்கலிங்கம் தன் தலையங்கக்கட்டுரையில் ‘எல்லா வியாதிகளிலும் மனோவியாதியே மிகக் கொடியது. நம் மக்களின் நெஞ்சில் அடிமைத்தனம் குடிகொண்டிருக்கிறது. காந்தியடிகளின் பெருமுயற்சியால் சிறிது காலமாக பாரதமக்கள் மற்ற நாட்டினரைத் தலையெடுத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆயினும் நமது பெரியோரிடத்தும் சிறியோரிடத்தும் அடிமைத்தனம் அகன்றபாடில்லை. அதை அடியோடு அழித்து தமிழ்மக்களை மானமுள்ளவர்களாகச் செய்வதற்கு தினமணி ஓயாது பாடுபடும்’ என்று குறிப்பிட்டார். பாரதியாரின் ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா’ என்னும் எழுச்சிப்பாடலை முதல் பக்கத்திலேயே அவர் வெளியிட்டார். உள்பக்கத்தில் ‘கொட்டு முரசே’ பாடலை வெளியிட்டார். வாழ்க பாரதி என்னும் துணைத்தலையங்கத்தையும் அவர் எழுதினார். தினமணி வெளிவரத் தொடங்கிய சிறிது காலத்திலேயே தமிழ்மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்த இதழாக சொக்கலிங்கம் மலரவைத்தார். விடுதலைப்போராட்டச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து காங்கிரஸ் இயக்கத்தின் பிரச்சாரப் பீரங்கியாகத் தினமணியைக் கட்டமைத்தார் அவர்.  1937இல் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸின் 51வது மாநாடு 19.02.1938 முதல் 22.02.1938 வரை நான்கு நாட்கள் சூரத் நகருக்கு அருகில் ஹரிபுராவில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற போது, தமிழகத்திலிருந்து சென்றிருந்த நண்பர்களோடு சொக்கலிங்கமும் சென்றிருந்தார். பூரண சுயராஜ்ஜியமே காங்கிரஸின் லட்சியம் என்பதை இம்மாநாட்டில் நேரு மீண்டுமொரு முறை அறிவித்தார். சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் பற்றி இம்மாநாட்டில் அனைத்துத் தலைவர்களும் விரிவாகப் பேசினார்கள்.

நிர்மாணத்திட்டங்களைப்பற்றி உரையாற்றிய காந்தியடிகள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார். அதே சமயத்தில் ஒரு கிராமத்தில் கூட்டப்பட்டிருக்கும் மாநாட்டுக்கு ஐயாயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்யக்கூடாது என்பதை ஒரு விதியாக இனி பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். ஹரிபுரா மாநாட்டுக்குச் செய்யப்பட்ட ஏழரை லட்சம் ரூபாய் செலவை அவர் ஆடம்பரச் செலவாகவே கருதினார். அத்தகு செலவைக் குறைத்து கதர் போன்ற ஆக்கபூர்வமான தேவைகளுக்குச் செலவு செய்யலாம் என ஆலோசனை வழங்கினார்.

நான்கு நாள் நிகழ்ச்சிகளிலும் பார்வையாளனாகக் கலந்துகொண்டு ஊருக்குத் திரும்பிய சொக்கலிங்கம் ’ஹரிபுரா காங்கிரஸ் வைபவம்’ என்னும் தலைப்பில் தனி நூலாகவே எழுதி வெளியிட்டார். மாநாட்டுக்குச் செல்லாதவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தம் கண்முன்னால் பார்ப்பதுபோன்ற அனுபவத்தைப் பெறும் வகையில் ஒவ்வொரு சிறுசிறு நிகழ்ச்சியையும் தம் எழுத்தாற்றலால் சித்தரித்திருந்தார் சொக்கலிங்கம்.

1940ஆம் ஆண்டில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தை அறிவித்ததும், அப்போராட்டத்தில் ஈடுபட்டு போர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய சொக்கலிங்கத்தை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. சிறைப்பட்டிருந்த காலத்தில் பத்திரிகைப்பணி பாதிப்படையக்கூடாது என்கிற எண்ணத்தோடு (25.11.1940 – 18.081941) அப்போது உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த பொறுப்பை ஏ.என்.சிவராமனிடம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் மீண்டும் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1942இல் காந்தியடிகள் ஆகஸ்டு போராட்டத்தைத் தொடங்கியதும் தமிழகமெங்கும் பலர் அதில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றனர். ராஜாஜி அப்போராட்டத்தை விரும்பவில்லை. அதனால் காங்கிரஸ் செயல்பாடுகளிலிருந்து விலகி ஒதுங்கிவிட்டார். சத்தியமூர்த்தி, காமராஜர் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைக்குச் சென்றனர். ராஜாஜியின் முடிவு சொக்கலிங்கத்துக்கு திகைப்பை அளித்தது. அத்தருணத்தில் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் காந்தியடிகளோடு சேர்ந்திருக்கவேண்டும் என அவர் விரும்பினார். அதனால் அதில் மாற்றுக்கருத்தைக் கொண்ட ராஜாஜியிடம் முன்புபோல பழகமுடியாமல் விலகத் தொடங்கினார்.

சொக்கலிங்கம் தினமணிக்கு ஆசிரியராக இருந்த காலத்தில் ஏ.என்.சிவராமன், ஆர்.வெங்கராஜுலு நாயுடு, புதுமைப்பித்தன், இளங்கோவன், எஸ்.எஸ்.மாரிசாமி, கு.அழகிரிசாமி, மயிலைநாதன், சினிமா உலகம் பி.எஸ்.செட்டியார், வீரகேசரி ஹரிஹரன், தமிழ் நேசன் சுப்பிரமணிய ஐயர் என பலர் உதவி ஆசிரியர்களாக பணியாற்றினார்கள். அக்காலத்தில் உதவி ஆசிரியர்களுக்கு ஐம்பது ரூபாய் முதல் 75 ரூபாய் வரை மட்டுமே சம்பளம் கிடைத்துவந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த சமயம் அது. எல்லா விலைவாசிகளும் ஏறிக்கொண்டே இருந்தன. அதுவரை கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தை வைத்து சமாளிப்பது அனைவருக்கும் சிரமமாக இருந்தது. பிற நிறுவனங்களில் கொடுப்பதுபோல யுத்தகால கிராக்கிப்படி வேண்டும் என தினமணியில் பணிபுரிந்த உதவி ஆசிரியர்கள்  கேட்டனர்.

நியாயமான அக்கோரிக்கையை ஆசிரியராக இருந்த சொக்கலிங்கமும் ஆதரித்துக் குரல் கொடுத்தார். துரதிருஷ்டவசமாக, தினமணி நிர்வாகம் அக்கோரிக்கையை ஏற்க மறுத்தது. வேறு வழி தெரியாத உதவி ஆசிரியர்கள்  அனைவரும் தம் வேலையைத் துறந்து வெளியேறினர். அவர்களோடு நிற்பதைத் தன் கடமையெனக் கருதிய சொக்கலிங்கம் தானாகவே தன் ஆசிரியர் பொறுப்பைத் துறந்து அவர்களோடு சேர்ந்து வெளியேறினார். எப்படிப்பட்ட சூழலில் ராஜினாமா செய்ய நேர்ந்தது என்பதை விளக்கி ‘எனது ராஜினாமா’ என்றொரு புத்தகத்தையே எழுதி வெளியிட்டார். பத்திரிகை முதலாளிக்கும் தனக்கும் இடையில் படிப்படியாக ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகளில் தொடங்கி இறுதியில் ராஜினாமா செய்து வெளியேறியது வரை விரிவாகவே அந்நூலில் எழுதினார்.  ஒன்பது ஆண்டு காலமாக பாடுபட்டு வளர்த்த ஒரு நிறுவனத்திலிருந்து அவர் மனமின்றி வெளியேறினார்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு 1944இல்  சொக்கலிங்கம் தினசரி என்னும் பெயரில் ஒரு நாளிதழைத் தொடங்கினார்.  அமிர்தபஜார் இதழின் ஆசிரியர் துஷார் காந்தி கோஷ் இவ்விதழைத் தொடங்கிவைத்து வாழ்த்தினார். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். நாமிருக்கும் நாடு நமதே’ என்னும் முழக்கத்துடன் 1944இல் தினசரி உதித்தது.

ஆகஸ்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்கள் அனைவரும் 1945இல் விடுதலை பெற்று தமிழகத்துக்குத் திரும்பினர். உடல்நலம் குன்றிய நிலையில் திரும்பிய சத்தியமூர்த்தி இயற்கையெய்தினார். அதனால் தமிழ்நாடு காங்கிரஸின் தலைமைப்பொறுப்பை காமராஜர் ஏற்றுக்கொண்டார். சென்னையில் காமராஜருக்கு ஒரு வரவேற்புக்கூட்டம் நடத்தினார் சொக்கலிங்கம். அன்றுமுதல் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். தினசரி பத்திரிகையில் காங்கிரஸ் தொடர்பான செய்திகள் விரிவான அளவில் வெளிவரத் தொடங்கின.

1946இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் காமராஜர் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து இறுதி முடிவுக்காக சர்தார் வல்லபாய் படேலுக்கு அனுப்பிவைத்தார். ராஜாஜியும் அத்தகைய ஒரு பட்டியலைத் தயாரித்து படேலுக்கு  அனுப்பிவைத்தார். இருவருமே தென்காசி தொகுதி வேட்பாளராக சொக்கலிங்கத்தின் பெயரையே தம் பட்டியலில் சேர்த்திருந்தனர். அதை விரும்பாத சிலர், ராஜாஜிக்கும் காமராஜருக்கும் முரண்பாடுகள் நிலவியிருந்த காலத்தில் தினசரி பத்திரிகையில் சொக்கலிங்கம் எழுதிய தலையங்கக் கட்டுரைகளையெல்லாம் மொழிபெயர்த்து படேலின் பார்வைக்கு அனுப்பிவைத்துவிட்டனர்.

பட்டியல் பரிசீலனையில் இருந்த காலத்தில் காமராஜரும் சொக்கலிங்கமும் பம்பாய்க்குச் சென்று விடுதியில் தங்கியிருந்தனர். எதிர்பாராத விதமாக படேல் சொக்கலிங்கத்தின் பெயரை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்.  அதை அறிந்ததும் காமராஜர் மிகுந்த துயருற்றார். தாமும் தேர்தலிலிருந்து விலகிவிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் சொக்கலிங்கம் அம்முடிவை ஆதரிக்கவில்லை.  தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காததால் தனக்கு எவ்விதமான வருத்தமும் இல்லையென்று சொல்லி காமராஜரை அமைதிப்படுத்தி சென்னைக்கு அழைத்துவந்தார். வழக்கம்போல அவருடைய வெற்றிக்காக அரும்பாடு பட்டார்.

சுதந்திரத்துக்குப் பிறகு தினசரி 1952இல் நின்றுவிட்டது. அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்வில் சிரமங்கள் ஏற்பட்டன. பத்திரிகை நடத்துவது என்பது ஒரு சமூகப்பணியாக இருந்த காலம் மறைந்து லாபமீட்டும் ஒரு தொழிலாக விரிவடைந்தது. பத்திரிகையைத் தொடங்கி எழுதியவர்கள் பலரும் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தமுடியாமல் பெரிய பத்திரிகைகளில் மூளை உழைப்பைச் செலுத்தி சம்பளம் பெறுகிறவர்களாக மாறினர். அந்த மாற்றத்தை ஏற்க மனமில்லாமல் சொக்கலிங்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவந்த தம் பத்திரிகையை நிறுத்தினார். ஆயினும் அவரால் அத்துறையை விட்டு முழுக்கமுழுக்க விலகிச் செல்லவும் இயலவில்லை. அவ்வப்போது தன் பொருளாதார சக்திக்கேற்ற வகையில் பாரதம், ஜனயுகம், நவசக்தி என பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். பொருளாதார முடை ஏற்பட்டபோது நிறுத்தினார்.

சொக்கலிங்கத்துக்கு காமராஜர் மீது பெருமதிப்பு இருந்தது. அவர் அரசியலுக்கு வந்த காலத்திலிருந்து முதல்வரான காலம் வரைக்குமான வாழ்க்கைவரலாற்றை ஒரு நூலாக எழுதி 1955இல் வெளியிட்டார்.  தமிழகத்தில் அந்நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தற்செயலாக அவர் நேருவைப்பற்றி மைக்கேல் பிரச்சர் எழுதி வெளிவந்திருந்த NEHRU : A POLITICAL BIOGRAPHY என்னும் புத்தகத்தைப் படித்தார். அதே அமைப்பில் காமராஜரை முன்வைத்து ஏற்கனவே எழுதிய புத்தகத்தை இன்னும் கூடுதலான தகவல்களோடு விரிவாக்கம் செய்து புதிதாக இன்னொரு புத்தகம் எழுதவேண்டும் என விரும்பினார் சொக்கலிங்கம்.  அதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதற்காக தில்லிக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்தார்.

02.01.1966 அன்று சொக்கலிங்கத்தின் சகோதரருடைய மனைவி இறந்துவிட்ட செய்தி தந்தி வழியாக சொக்கலிங்கத்தை வந்தடைந்தது. அதை அறிந்ததும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். மயங்கிய நிலையிலேயே நண்பர்கள் அவரை விமானம் வழியாக சென்னைக்கு அழைத்துவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு வார காலம் தங்கியிருந்தும் நினைவு திரும்பாமலேயே 09.01.1966 அன்று சொக்கலிங்கம் மண்ணுலகைவிட்டு மறைந்தார். 

 

 

டி.எஸ்.சொக்கலிங்கம் தென்காசியில் 03.05.1899 அன்று பிறந்தவர். தந்தையார் பெயர் மடத்துக்கடை சங்கரலிங்கம் பிள்ளை. தாயார் பெயர் லட்சுமியம்மாள். ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடரமுடியாத நிலையில் தந்தையார் நடத்திய கடையைக் கவனிக்கத் தொடங்கினார். அரசியலில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக காந்தியடிகளின் வழியில் செயல்பட்டார். தமிழ்நாடு பத்திரிகையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு தினமணி நாளிதழின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்று ஒன்பதாண்டு காலம் பணியாற்றினார்.  அவருடைய மொழியாளுமை அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது. 1944ஆம் ஆண்டில் தினசரி என்னும் பெயரில் சொந்தமாக ஒரு நாளேட்டைத் தொடங்கி நடத்தினார். தொழிலாளர் பிரச்சினை காரணமாக அதைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழல் உருவானது.  ஜனயுகம், பாரதம், நவசக்தி என பல இதழ்களிலும் பணியாற்றினார். காந்தியக்கொள்கைகளைப் பரப்பும் வகையில் காந்தி என்கிற இதழை சில ஆண்டுகள் நடத்தினார். அவருடைய எழுத்தாளுமையின் காரணமாக பேனா மன்னர் என்றும் இயல்பிலேயே துணிச்சலும் போர்க்குணமும் கொண்டிருந்ததால் ‘தென்காசிச் சிங்கம்’ என்றும் அவருடைய நட்புவட்டத்தினரால் அழைக்கப்பட்டார். .குறைந்த விலையில் நல்ல தரத்துடன் புத்தகங்களை வெளியிடும் நோக்கத்துடன் நவயுகப்பிரசுராலயத்தைத் தொடங்கி நடத்தினார்.  நேரு, நேதாஜி, காமராஜர் ஆகிய தலைவர்களின் வாழ்க்கைவரலாற்றை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய பாய் பரமானந்தன் என்னும் நாவல் விமர்சகர்களால் முதல் காந்திய நாவல் என அழைக்கப்படுகிறது. எனது முதல் சந்திப்பு, அல்லி விஜயம் ஆகியவை அவர் எழுதிய முக்கிய நூல்களாகும். ஆர்வத்தின் காரணமாக லியோ டால்ஸ்டாய் எழுதிய மூன்று தொகுதிகளைக் கொண்ட போரும் வாழ்வும் நாவலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்த்தார். 09.01.1966 அன்று மறைந்தார்.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஜனவரி 2026)