Home

Monday 23 September 2019

கன்றுக்குட்டி - சில பாடல்கள்


கன்றுக்குட்டி

வெள்ளைக் கன்றுக் குட்டி
வேகம் கொண்ட சுட்டி
தோட்டம் எங்கும் சுற்றி
உடைத்துவிட்டது தொட்டி

கழுத்தில் கருப்புப் பட்டி
நெற்றியில் சிவப்புச் சுட்டி
பசுவின் மடியைப் பற்றி
பாலைக் குடிக்கும் முட்டி

கன்றுக்குட்டி - புதிய சிறுவர் பாடல் தொகுதி





பழனியும் நானும் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். அவனுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தவையெல்லாம் அவனுக்கும் பிடிக்கும். அவன் ஓவியம் பயிலத் தொடங்கியபோது நானும் ஓவியம் தீட்டினேன். பாடப்புத்தகங்களைக் கடந்து நான் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியபோது அவனும் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவரிடையேயும் இப்படி பல ஒற்றுமைகள் இருந்தன. எங்கே சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே செல்வோம். அவனைக் காணவில்லை என்றால் என்னைக் கேட்பார்கள். என்னைக் காணவில்லை என்றால் அவனைத்தான் கேட்பார்கள். அப்படி ஒரு நெருக்கம்.

Wednesday 18 September 2019

நினைவில் உறைந்த வரலாறு - முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”


1924ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர் இந்த நூலின் ஆசிரியரான செ.முகம்மது யூனூஸ். ஏழு பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த பிள்ளை. அவருடைய தந்தைவழிப் பாட்டனார் காலத்திலிருந்து அக்குடும்பம் பர்மாவில் வாழ்ந்திருக்கிறார்கள். பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம் இளையாங்குடிக்கு அருகில் உள்ள பூதூர் என்றாலும் பிழைப்பதற்காகச் சென்ற இடம் பழகி, அங்கேயே வாழ்க்கையைத் தொடரும்படி நேர்ந்துவிட்டது. 

போரின் தடங்கள் - கட்டுரை



எளிமை, தன்னிறைவு, ஆன்மிக எழுச்சி ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக்கொண்டு புதிய தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காந்திய வழியைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு இருந்த ஆர்வம் மகத்தானது. ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும் அத்தகு ஆர்வ எழுச்சியுடன் அறவழிப்போரில் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து தோன்றி தம்மை இணைத்துக்கொண்டவர்கள். சில சந்திப்புகளைத் தொடர்ந்து தம்பதியினராகவும் மலர்ந்தவர்கள். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவர்கள் நம் நாட்டின் அடித்தட்டு மக்கள் உயர்வுக்காக ஆற்றிவரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. தொண்டர்களாக பொதுவாழ்வில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இவர்களுடைய வாழ்க்கைமுறை மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.

Saturday 7 September 2019

ஞானத்தின் கண்கள் - கட்டுரை



கடந்த மாதத்தில் நான்கு மரணங்களை அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இருபதாண்டுகளாகத் தினமும் பார்த்து உரையாடியவர். படுக்கச் சென்றவரை நள்ளிரவு நேரத்தில் தாக்கிய நெஞ்சுவலி உயிரைப் பறித்துவிட்டது. இரண்டாவதாக நிகழ்ந்தது எங்கள் உறவுக்காரர் ஒருவரின் மனைவியுடைய மரணம். இடைவிடாத காய்ச்சல் என்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவரைப் பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள். மூன்றாவதாகப் பார்த்த நிகழ்ச்சி என் அலுவலக நண்பரின் தந்தையாருடைய மரணம். நான்காவதாக எங்கள் தெருவில் வாழ்ந்த ஒரு பிரமுகரின் மரணம். அதன் விளைவாக அதிர்ச்சியும் வெறுமையும் என்னை இடையிடாமல் அலைக்கழித்தன. மரணத்தைப் பற்றிச் சிறிய வயதிலிருந்து படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட செய்திகள் ஒவ்வொன்றாக ஆழ்மனத்திலிருந்து மிதந்துவந்து நெஞ்சை நிரப்பின. ஆனாலும் அவற்றில் ஒன்றுகூட அமைதியை அளிக்கவில்லை. மரணம் தவிர்க்க முடியாதது. மாற்ற முடியாத உண்மை அது. இயற்கையின் விதி. அது ஒரு துயில் நிலை. எல்லாமே தெரிந்த சங்கதிகள்தாம். ஆனாலும் மரணத்தை ஏற்றுக்கொள்ள மனத்துக்கு விருப்ப மில்லை. இந்த மரணம் நிகழாமல் இருந்திருக்கக் கூடாதா என்று பொங்கும் தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

ரொனால்டு டங்கன் - வெற்றியன்னும் ஏணி - கட்டுரை




உலகெங்கும் பல நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெயர்பெற்ற பிரிட்டனில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவியது என்னும் செய்தி இன்று பலரை வியப்பில் ஆழ்த்தக்கூடும். ஆனால் அதுதான் உண்மை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்னும் வேறுபாடின்றி ஏறத்தாழ முப்பது லட்சம் பேர் வேலையின்றி தவித்தார்கள். அவர்களில் ஒருவர் ரொனால்ட் டங்கன். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தன் இலட்சியக்கனவுகளாகக் கொண்டவர்.