Home

Saturday 7 September 2019

ரொனால்டு டங்கன் - வெற்றியன்னும் ஏணி - கட்டுரை




உலகெங்கும் பல நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெயர்பெற்ற பிரிட்டனில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவியது என்னும் செய்தி இன்று பலரை வியப்பில் ஆழ்த்தக்கூடும். ஆனால் அதுதான் உண்மை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்னும் வேறுபாடின்றி ஏறத்தாழ முப்பது லட்சம் பேர் வேலையின்றி தவித்தார்கள். அவர்களில் ஒருவர் ரொனால்ட் டங்கன். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமூக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தன் இலட்சியக்கனவுகளாகக் கொண்டவர்.

தொடக்கத்தில் யார்க்ஷையர் நிலக்கரிச்சுரங்கத்தில் வேலை செய்தார் டங்கன். சுரங்கத்தொழிலாளிகளின் துயரங்களைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் அவருக்கு உதவியது. பிறகு அவர் லண்டனுக்குத் திரும்பினார். அப்போது ரோண்டா பள்ளத்தாக்கிலிருந்த நிலக்கரிச்சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழிற்சங்கத்தின் ஆலோசனையும் ஆதரவுமின்றி அவர்கள் தன்னிச்சையாக அந்த வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். மொத்தம் முப்பது தொழிலாளிகள். சுரங்கத்துக்குள் இறங்கியவர்கள் வெளியேற மறுத்து ஓய்வின்றி இடைவிடாமல் வேலை செய்தபடியே இருந்தார்கள். நான்கு இரவுகளும் பகல்களும் கழிந்தன. தொழிலாளிகளின் குடும்பங்கள் சுரங்கத்துக்கு வெளியே தவித்தபடி கூடியிருந்தார்கள்.
உடனடியாக டங்கன் அங்கு சென்றார். தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். சுரங்கத்துக்குள் தங்கி தொழிலாளிகள் வெளிப்படுத்தும் நேர்மறையான எதிர்ப்பின் வழியாக, சுரங்க முதலாளிகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்பமுடியும் என அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அரசியல் இயக்கங்களின் எதிர்ப்புகளுக்கு உள்ள வலிமையைவிட, அகிம்சைப்போராட்டத்தின் வலிமை பெரியது என்று பலவாறாக எடுத்துச் சொல்லிப் புரியவைத்தார். அவ்வப்போது தொழிலாளிகளின் குடும்பத்தார் தயாரித்து அளிக்கும் உணவுப்பொருட்கள் சுரங்கத்துக்குள் சென்றன. உணவுக்கூடைகளிடையே அவர்களுக்குத் தேவையான புகையிலையையும் போராட்டமுறையைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் சிறுசிறு கடிதங்களையும் டங்கன் ரகசியமாக அனுப்பிவைத்தார்.
     தொழிலாளிகளின் போராட்டம் மெல்ல மெல்ல வலிமைபெற்று வரும் வேளையில் மேலே இருந்த தொழிலாளிகள் தம் எதிர்ப்பைப் புலப்படுத்தும் வகையில் வேறொரு போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதற்காகவே காத்திருந்த நிர்வாகமும் காவல்துறையும் சுரங்கத்துக்கு உள்ளே இருந்தவர்கள், வெளியே இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது. தொழிலாளர்களைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு டங்கனும் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் நாடோடி என்பதை அறிந்து காவல்துறை அவரை விடுதலை செய்தது.
அகிம்சைப்போராட்ட வழிமுறையையும் தனிமனித நேர்மையையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அன்று டங்கன் நேரிடையாகக் கண்டுணர்ந்தார். அந்தப் புரிதலை முன்வைத்து, அன்று நிலவிய அரசியல் போக்குகளை அவர் மதிப்பிடத் தொடங்கினார். சமூகப்பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளவும் தீர்த்துவைக்கவும் முயற்சி செய்யும் அரசியல் இயக்கங்கள் மீதான விமர்சனப்பார்வையை வளர்த்துக்கொண்டார். தன்னுடைய நேரடி அனுபவத்தையும் புரிதலையும் உள்ளடக்கி மிகச்சிறிய பிரசுரமொன்றை எழுதி வெளியிட்டு நகரெங்கும் வழங்கினார். ரோண்டா நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களின் அகிம்சைப்போராட்டத்தை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டுமென விரும்பி அன்று உலக அளவில் முக்கியமானவர்களாகக் கருதப்பட்ட  எல்லாத் தலைவர்களுக்கும் அந்தப் பிரசுரத்தை அனுப்பிவைத்தார். அந்தப் பட்டியலில் ஒருவர் காந்தியடிகள்.
உலக அளவில் யாருமே அந்தப் பிரசுரத்துக்கு எதிர்வினை புரியாத தருணத்தில் ஒரே ஒரு கடிதம் மட்டுமே டங்கனுக்கு வந்து சேர்ந்தது. அது காந்தியடிகள் எழுதிய கடிதம். போராட்டத்தைப்பற்றி  மட்டுமின்றி அகிம்சையைப்பற்றியும் நேர்மையைப்பற்றியும் பல கருத்துகளை அவர் டங்கனுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். டங்கன் மகிழ்ச்சியில் மூழ்கினார். அகிம்சைக் கொள்கையைப்பற்றி அவருக்கு மேலும் சில ஐயங்கள் எழுந்தன. உடனே அவற்றைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்டு மீண்டுமொரு கடிதத்தை காந்தியடிகளுக்கு எழுதினார். அதற்கும் உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்து சேர்ந்தது. டங்கனுடைய புரிதலை அந்தப் பதில் மேலும் விரிவாக்கியது. இருபுறங்களிலிருந்தும் கடிதப்பரிமாற்றம் தொடர்ந்தது. ஒரு கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கு ஆறேழு வாரங்கள் காத்திருக்கவேண்டிய காலம் அது. அந்த நீண்ட இடைவெளியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காந்தியை நேரில் சந்தித்து உரையாட விரும்பினார் டங்கன். உடனே அதை காந்தியடிகளுக்குத் தெரியப்படுத்தினார். ’23 ஆம் தேதி வார்தாவில் சந்திக்கலாம்என்று தந்தி வழியாக காந்தியடிகளிடமிருந்து பதில் கிடைத்தது.
தந்தி கிடைத்த ஒன்றிரண்டு நாட்களிலேயே டங்கன் லண்டனிலிருந்து புறப்பட்டுவிட்டார். உலக அமைதி உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கி செயல்படுத்திவந்த நண்பரொருவர் அமைதி பற்றிய கேள்விகளை ஒரு பட்டியலாக எழுதிக் கொடுத்து காந்தியிடமிருந்து பதில்களைப் பெற்றுவரும்படி சொல்லியனுப்பினார். நீண்ட கப்பல் பயணத்தை முடித்து மும்பையில் இறங்கி 23 அன்று சரியாக வார்தாவுக்கு ரயிலில் வந்து இறங்கினார். ஒற்றைப்பயணியாக ரயில்நிலையத்திலிருந்து வெளியேறி ஒரு குதிரைவண்டியில் ஏறி உட்கார்ந்து ஆசிரமத்துக்குப் போகும்படி சொன்னார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வண்டி நின்றுவிட்டது.  வண்டிக்காரர் எதிரில் நடந்துவரும் மனிதரைச் சுட்டிக்காட்டிஅவர்தான் காந்திஎன்று டங்கனிடம் சொல்ல, உடனே வண்டியிலிருந்து இறங்கி காந்தியடிகளை நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பிறகு இருவரும் நடந்தே ஆசிரமத்துக்குச் சென்றார்கள். மரபாக பயணத்திலிருந்து வருகிறவர்களிடம் உரையாடும் உபசாரச்சொற்கள் எதுவுமின்றி தன்னுடைய முந்தைய கடித்ததில் குறிப்பிட்டிருந்த பதிலை மேலும் விரிவாகச் சொல்லத் தொடங்கினார் காந்தியடிகள். ஆசிரமத்தில் அன்று நண்பகல் உணவை காந்தியடிகளுக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டார் டங்கன். ஓய்வெடுக்க அவருக்கு ஒரு குடில் ஒதுக்கி அளிக்கப்பட்டது. மண்சுவர்களாலான ஆசிரமத்துக்குடில்களைக் கண்டு அவர் வியப்பில் ஆழ்ந்தார்.
மறுநாள் அதிகாலை நடைப்பயிற்சியின்போது டங்கனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றார் காந்தியடிகள். அழகான கரும்புவயல்களைக் கடந்து குடிசைப்பகுதிகளின் ஊடே அவர் சென்றார். குடிசைகள் ஒன்றையொன்று நெருங்கியிருந்தன. அவர்கள் அனைவரும் வட்டிக்குக் கடன்வாங்கிவிட்டு, வட்டியையும் தரமுடியாமல் அசலையும் திருப்பமுடியாமல் கடனளித்தவனுக்கு கொத்தடிமைகளாக வந்து சேர்ந்தவர்கள் எனக் கூறினார். “அவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள்?” என்று கேட்டார் டங்கன். காந்தியடிகள் அக்குடிசைப்பகுதிகளைப் பார்த்தபடியே பெருமூச்சுடன்அரசாங்கம் கையாள்கிற வரிவிதிப்பு முறைதான் முதல் காரணம். அதிக வரிக்கு ஆசைப்படும் அரசாங்கம் நிலத்தில் விளைந்த விளைச்சலைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் ஒருவருக்குச் சொந்தமான நிலப்பரப்பை மட்டும் கணக்கிலெடுத்துக்கொள்கிறது. விளைந்த நிலம், விளையாத நிலம் அனைத்துக்கும் சேர்ந்து அவர்கள் வரி கட்டுகிறார்கள். பல நேரங்களில் விளைச்சலையும் மீறிப் போய்விடுகிறது வரி. வரியைச் செலுத்த கடன் வாங்குகிறார்கள். கடன்சுமை நிலத்தையே விழுங்கிவிடுகிறது. பிறகு வாழ்வதற்காக காலம் முழுக்க அடிமையாக இருக்கிறார்கள்என்று சொன்னார்.
அத்தருணத்தில் அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் நான்கைந்து பேர் அமர்ந்து மலம் கழித்துக்கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு டங்கன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ஆனால் அவர்களை நெருங்கி காந்தியடிகள் எதுவும் பேசவில்லை. துயரமும் இரக்கமும் படிந்த முகத்தோடு மெளனமாக அவர்கள் அமர்ந்திருந்த திசையிலேயே பார்த்தபடி இருந்தார். அவர்களைப் பழிக்கவோ அல்லது அவர்களை நெருங்கி தூய்மையைப்பற்றி அறிவுரை கொடுக்கவோ முற்படவில்லை. ஆனால், அவர்கள் எழுந்து விலகியதும் அந்த மலக்குவியலுக்கு அருகில் பள்ளம் தோண்டி, அனைத்தையும் திரட்டி அதற்குள் தள்ளத் தொடங்கினார். முதலில் எதுவும் புரியாமல் காந்தியடிகள் தன்னந்தனியாக அந்தச் செயலைச் செய்வதைப் பார்த்த டங்கன், பிறகு மனம் தெளிந்து காந்தியடிகளுக்கு உதவியாக சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடத் தொடங்கினார்.  அக்கம்பக்கத்தில் காணப்பட்ட மலக்குவியல்களை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துவந்து இருவரும் பள்ளத்துக்குள் தள்ளத் தொடங்கினார்கள். அதுவரையில் அவர்கள் செய்வதை விலகி நின்று வேடிக்கை பார்த்த குடிசைவாசிகள் ஒவ்வொருவராக அவர்களை நெருங்கி வந்து அவர்கள் செய்யும்  வேலையுடன் இணைந்துகொண்டார்கள். ஒற்றைச்சொல் கூட இல்லாமல் தன் செயல்முறை வழியாக மக்களை தன்னை நோக்கி ஈர்க்கிற காந்தியடிகளின் ஆளுமையைக் கண்டு டங்கன் வியப்பில் மூழ்கினார். அவரிடம் கேட்பதற்காக அவர் எண்ணியிருந்த பல கேள்விகளுக்கு அந்தக் கணத்திலேயே அவருக்கு விடைகள் புலப்படத் தொடங்கின.
அங்கிருந்த ஒரு குடிசைக்குள் டங்கனை அழைத்துச் சென்று காட்டினார் காந்தியடிகள். அங்கு காணப்பட்ட ஒரு இராட்டையைக் கண்டு அவர் கண்கள் மலர்ந்தன. ஆசிரமத்துக்குத் திரும்பி நடக்கும்போது அவர் கிராமியப் பொருளாதாரத்தைப்பற்றி உள்ளார்ந்த ஓர் எழுச்சியோடு டங்கனுக்கு எடுத்துரைத்தார். தன்னுடைய கதர் இயக்கத்தைப்பற்றியும் இராட்டையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு நூல்நூற்கும் செயல்முறை பற்றியும் விளக்கினார். “பஞ்சு இங்கு விளைந்தாலும் அது நூலாவதில்லை. நூலானாலும் அது துணியாவதில்லை. ஒருவேளை துணியானாலும் அரசாங்கம் விதித்திருக்கும் கூடுதலான விற்பனை வரிச்சுமைக்கு அஞ்சி யாரும் அதை வாங்குவதில்லை. அந்த வணிகமே படுத்துவிட்டது.  இங்குள்ள மனிதர்கள் நிர்வாணமாக இருக்கவேண்டும் அல்லது அயல்நாட்டுத் துணிகளை வாங்கவேண்டும் என்னும் புள்ளியைநோக்கித் தள்ளிவிட நினைக்கிறது அரசாங்கம். கதர் இயக்கத்தால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும்என்று நிதானமான குரலில் டங்கனுக்கு எடுத்துரைத்தார் காந்தியடிகள். தொடர்ந்துஇராட்டை என்பது ஒரு கைத்தொழிலின் அடையாளம் மட்டுமல்ல. அது அகிம்சையின் அடையாளம், மனிதர்களுடைய சுயமரியாதையின் அடையாளம். சுதந்திரத்தின் அடையாளம்என்றும் சொன்னார். எளிதாகத் தோற்றமளித்தாலும் மனிதர்கள் ஆற்றுகிற ஒவ்வொரு  செயல்பாட்டுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை டங்கன் புரிந்துகொள்ளத் தொடங்கினார். ஆசிரமத்துக்குத் திரும்பியதும் டங்கனுக்கு ஒரு தக்களியை பரிசாக அளித்தார் காந்தியடிகள்.
ஒருநாள் ஓய்வு நேரத்தில் ரோண்டா பள்ளத்தாக்கு நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை காந்தியடிகளுடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் டங்கன். அதைத் தொடர்ந்து அகிம்சைமுறையில் அமைந்த எதிர்ப்புணர்வை வளர்த்தெடுக்கத் தேவையான பயிற்சிமுறைகளைப்பற்றிக் கேட்டார். உடனே அதற்கு காந்தியடிகள்எப்போதும் எதிலும் குறுக்குவழி என்னும் பேச்சுக்கே இடமில்லை. ஒரு செயல்வீரன் எப்போதும் எல்லாப் பற்றுகளிலிருந்தும் விலகியிருப்பதும் தன்னலமின்றி வாழ்வதும் மிகமிக முக்கியம். அதுவே உண்மையின் வழி. அதுவே ஒருவர் மேற்கொள்ளவேண்டிய பயிற்சி. அப்படிப்பட்ட உண்மை ஒருவரிடம் இருந்தால், தானாகவே அவரை இந்த உலகம் பின்தொடர்ந்துவரும்என்று சொன்னார்.  பலனை எதிர்பாராது கடமையாற்றுதல் என்பது கீதையின் சாரம். காந்தியடிகளின்  எல்லா உரைகளும் அந்தப் புள்ளியை நோக்கியே செல்வதை டங்கன் உணர்ந்துகொண்டார். அன்று அவருக்கு கீதையின் மொழியாக்கத்தை காந்தியடிகள் பரிசாக அளித்தார்.
ஒருநாள் தூய்மைவாதத்துக்கும் பிரும்மச்சரியத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி டங்கன் எழுப்பிய ஒரு கேள்விக்கும் காந்தியடிகள் விரிவாகப் பதில் சொன்னார். தூய்மைவாதம் என்பது மெல்ல மெல்ல இந்த வாழ்க்கையை மறுப்பதில் சென்று முடியும் கருத்தாக்கம் எனவும் பிரும்மச்சரியம் என்பது நிரந்தர வாழ்க்கைக்கான ஒரு வழிமுறை எனவும் அவர் விளக்கினார். ஒரு பொருளைத் துறப்பதற்கும் அப்பொருளின் மீதுள்ள உரிமையைத் துறப்பதற்கும் நுட்பமான வேறுபாடு இருப்பதை பல எடுத்துக்காட்டுகளோடு தொடர்ந்து விவரித்தார். இறுதியில் வழக்கம்போலவிழைவின் அடிப்படையில் எழும் எவ்விதமான செயலையும் செய்யாதிருத்தலே துறவு என்பது ஆன்றோர் கூற்று. மாறாக, செயல்களின் பலனை நுகர்வதிலிருந்து விடுபடுவது என்பதே உண்மையான விடுதலைஎன கீதையிலிருந்து ஒரு வரியைச் சொல்லி பேச்சை முடித்தார். அதை டங்கன் ஓரளவு புரிந்துகொண்டாலும் அவர் வயதுக்கே உரிய சந்தேகக்கண்களோடு காந்தியடிகளின் கூற்றுகளை நிராகரிப்பதற்கான காரணங்களைத் தேடித் தேடி அவற்றையே தன் ஐயங்களாக முன்வைத்து உரையாடியபடியே இருந்தார். அதைக் கேட்டு சிறிதும் பொறுமையிழக்காத காந்தியடிகள் டங்கனின் ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான பதில்களைச் சொன்னார்.
ஒருமுறை காந்தியடிகள் மாலைநடைக்குப் பிறகு டங்கனை ஊருக்கு வெளியே இருந்த ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றார். அவர் ஒரு யோகி. காந்தியடிகளின் ஆதரவில் அவர் அங்கே ஓராண்டுக்கும் மேல் தங்கியிருந்தார். மண்சுவர்களால் ஆன குடிசை அது. தரையும் மண்ணால் மெழுகப்பட்டிருந்தது. ஒரு நாற்காலியையும் ஒரு மேசையையும் தவிர  வேறெந்தப் பொருளும் அக்குடிசையில் காணப்படவில்லை. ஒரு செய்தித்தாளோ ஒரு புத்தகமோ கூட அங்கு இல்லை. அக்காட்சி டங்கனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படிக்கூட ஒருவரால் இருக்கமுடியுமா என அவருக்குத் தோன்றியது. உடனே அதைப்பற்றி காந்தியடிகளிடம் குறிப்பிடவும் செய்தார். காந்தியடிகள் அமைதியான முகத்துடன்ஒருவன் ஞானத்தைத் துறப்பது என்பது பொருளைத் துறப்பதைவிட மேலானது. ஓ அர்ஜுனனே, எதுவானாலும் ஒரு செயலில் இறுதியாக எஞ்சுவது தெளிவுமட்டுமேஎன கீதையிலிருந்து ஒரு வரியை   முணுமுணுத்தார்.
பார்ப்பதற்கு அந்த யோகி ஒரு மல்யுத்த வீரனைப்போல வாட்டசாட்டமான உடல்வாகுடன் இருந்தார். அதே நேரத்தில் நாட்டியக்காரனுக்குரிய நிகர்நிலையோடும் காணப்பட்டார். ஆனால் அவர் முகத்தில் ஆழ்ந்த அமைதி காணப்பட்டது.  அவருடைய பேரமைதி, அவரைப் பார்க்கிறவர்களையும் தொற்றிக்கொள்ளும் அளவுக்கு ஆழந்திருந்தது. குடிசைக்கு வெளியே கடுமையான குளிர்க்காற்று வீசியது. அந்தக் குளிரில் கட்டாந்தரையில் அவரால் எப்படி இருக்கமுடிகிறது என்று கேட்டார் டங்கன். அதற்கு அந்த யோகிஎன்மீது படிவதற்கு நான் அந்தக் குளிரை அனுமதிப்பதில்லைஎன்று பதில் சொன்னார். அந்தப் பதில் அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. அக்கணமே காந்தியடிகளும் தன் குடிலில் கட்டாந்தரையில் படுத்துக்கொள்வதை நினைத்துக்கொண்டார் டங்கன்.
அன்று இரவு உறங்கச் செல்லும்போது வழக்கமான தன் படுக்கையைத் துறந்து டங்கனும் காந்தியடிகளைப் பின்தொடர்ந்து வந்து தரையில் படுத்துக்கொண்டார். காந்தியடிகள் படுத்ததும் உறங்கிவிட்டார். ஆனால் டங்கன் உறக்கம் வராமல் தவித்தார். அவரால் குளிரைத் தாங்கமுடியவில்லை. மனம் நினைப்பதை தன்னால் செய்து காட்டமுடியும் என்று தனக்குத்தானே நிரூபித்துக்கொள்வதற்காக குளிரைப் பொருட்படுத்தாமல் நீண்டநேரம் விழித்திருந்தார். பிறகு ஏதோ ஒரு நேரத்தில் அவரை அறியாமலேயே கடுமையான குறட்டைச்சத்தத்தோடு உறங்கிவிட்டார். விடிந்தபோது, அவருக்குக் காய்ச்சல் வந்துவிட்டிருந்தது. கழுத்தைத் திருப்பமுடியாதபடி ஒருவித இறுக்கமும் வலியும் இருந்தன.  இறுக்கத்தின் காரணமாக அவரால் சரியாக மூச்சு விடமுடியவில்லை.
அன்று காலை காந்தியடிகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைப்பகுதிக்குச் செல்லும் வேலை இருந்தது.  அப்போது டங்கனையும் தன்னோடு அழைத்துச் சென்றார். அங்கு தசைப்பிடிப்பைச் சரிப்படுத்தும் ஒரு நாட்டுமருத்துவர் இருந்தார். அவர் வீட்டில் ஒரு பொறி இருந்தது. அதன் கீழே டங்கனை குப்புறப் படுக்கவைத்துவிட்டு, அவர் முதுகில் முன்னும் பின்னுமாக ஓர் உருளையை ஒத்தடம்போல உருண்டுசெல்ல வைத்தார் அந்த மருத்துவர். சிறிது நேரத்தில் கழுத்துப்பிடிப்பும் தசைப்பிடிப்பும் அகன்றுவிட, டங்கன் சீராக மூச்சுவிடத் தொடங்கினார்.
ஒருநாள் நடைப்பயிற்சியின்போது புலன்விருப்பத்தால் தூண்டப்பட்டு  மனிதர்கள் செய்பவை அனைத்தையும் பாவமான செயல்கள் என்று குறிப்பிட்டார் காந்தியடிகள். மொசார்ட் இசை கேட்பதில் மிகவும் ஆர்வமுள்ள டங்கனுக்கு காந்தியடிகளின் கூற்று அதிர்ச்சியளித்தது. அதை விளக்கமாக அறிந்துகொள்ளும்பொருட்டு நேரிடையாகவேமொசார்ட் இசை கேட்பதைக்கூட நீங்கள் பாவமென்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார் டங்கன். ஒருகணம் கூட தயங்காத காந்தியடிகள்புலன்கள் மீது கொண்ட எல்லாப் பற்றுகளுமே மரணத்துக்குச் சமமானவைஎன்று பதில் சொன்னார். அதைக் கேட்டு டங்கன் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார். அந்தத் திகைப்பிலிருந்து அவரால் விடுபடவே முடியவில்லை. அதனாலேயே பிற்காலத்தில் தன் ஆசிரமத்தில் வந்து தங்கியிருக்குமாறு காந்தியடிகள் விடுத்த அழைப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காந்தியச் சிந்தனைகளில் மேற்குலகச் சிந்தனையாளர்களின் செல்வாக்கு இருக்கலாம் என தொடக்கத்தில் டங்கன் நம்பினார். ஆனால் காந்தியடிகளோடு நேருக்குநேர் பேசிப் பழகிய பிறகு அவருடைய ஆழ்மனத்தில் பதிந்து அவரை இயக்கும் விசையாக கீதை மட்டுமே இருந்ததை அவர் புரிந்துகொண்டார். தன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு காந்தியடிகளை சரியான கோணத்தில் அறிமுகப்படுத்தும் விருப்பத்தோடு சகிப்புத்தன்மை, அச்சமின்மை, பொறுமை, வறுமை, உடமையைத் துறத்தல், அகிம்சை, பணிவு, ஒழுக்கம், மதம், அரசியல் என பல்வேறு தலைப்புகளை ஒட்டி கீதையைச் சார்ந்து அவர் கொண்டிருந்த எண்ணங்களையெல்லாம் பல்வேறு கட்டுரைகளிலிருந்து தொகுத்தெடுத்து ஒரு நூலை எழுதி வெளியிட்டார். இன்றளவும் அது மிகமுக்கியமானதொரு நூலாக விளங்குகிறது.
டங்கன் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். புகைப்பதற்காகவே அடிக்கடி ஆசிரமத்தைவிட்டு அடிக்கடி வெளியேறிச் சென்றுகொண்டிருந்தார். அப்பழக்கத்தை விட்டுவிடுமாறு நேரிடையாகச் சொல்வதற்கு மாறாக, சிறுவனாக இருந்த காலத்தில் தனக்கும் புகைபிடிக்கும் ஆர்வமிருந்தது என்று இளமைப்பருவச் சம்பவங்களை நினைவுகூர்ந்து புன்னகையோடு உரையாடலைத் தொடங்கினார் காந்தியடிகள். வீட்டில் வசிக்கும் பெரியவர்கள் புகைத்துவிட்டு வீசும் சிகரெட் துண்டுகளை சிறுவனான காந்தியும் மற்ற சிறுவர்களும் சேர்ந்து சேகரித்துவைத்துக்கொண்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்குச் சென்று அடிக்கடி புகைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் புகைக்கும் இன்பத்தால் மேலும் ஊக்கமுற்று வீட்டு வேலைக்காரர்களின் சட்டைப்பைகளிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சிகரெட்டுகளை கடையிலேயே வாங்கிப் புகைத்தார்கள்.
ஒவ்வொரு நாளும் ரகசிய இடங்களைத் தேடிச் செல்வது அவர்களுக்கு வருத்தமளித்தது. இதனால் வீட்டிலிருப்பவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காட்டுக்குச் சென்று நச்சுவிதைகளைத் தின்று தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தார்கள். ஆயினும் மரணபயத்தின் விளைவாக ஒன்றிரண்டு விதைகளை மட்டுமே அவர்களால் உட்கொள்ளமுடிந்தது.  அதனாலேயே அவர்கள் உயிர்பிழைத்தார்கள். ஒருநாள் தன் குற்றங்களையெல்லாம் மறைக்காமல் ஒரு நீண்ட கடிதமாக எழுதி தன் தந்தையாரிடம் அளித்தார் காந்தி. அவர் அதைப் படித்துவிட்டு எதுவும் பேசாமல் மெளனமாகக் கண்ணீர்விட்டார். அவருடைய அன்பென்னும் மருந்து சிறுவன் காந்தியை எல்லா தீய பழக்கங்களிலிருந்தும் விடுவித்தது.
தன் அனுபவத்தை விவரித்த பிறகு பனைவெல்லத்தால் செய்யப்பட்ட ஓர் இனிப்புமிட்டாயை டங்கனிடம் கொடுத்து புகைக்கவேண்டும் என்று தோன்றும் தருணங்களில் சிகரெட்டுக்கு மாற்றாக அதை எடுத்துச் சுவைக்கும்படி கேட்டுக்கொண்டார். இறுதியில்உங்கள் மனத்தையும் உடலையும் முழு அளவில் உங்களுக்குக் கட்டுப்படும்படி செய்யமுடியவில்லை என்றால், உங்களால் வேறு எதைத்தான் செய்யமுடியும்?” என்று கேட்டார். அக்கேள்வி டங்கனை உலுக்கியது. “புலனின்ப நாட்டத்திலிருந்து விலகியிருப்பதுதான் வெற்றியென்னும் ஏணியின் முதல் படிஎன்னும் கீதையின் வரியொன்றையும் எடுத்துரைத்தார்.
ஆசிரமத்துக்குள் இருக்கும்வரை மட்டுமல்ல, ஆசிரமத்தைவிட்டு வெளியேறிய பிறகும் டங்கன் புகைக்காமல் இருக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்டிருந்தார் காந்தியடிகள். அவர் வார்தாவைவிட்டுப் புறப்பட்டு கப்பலைப் பிடிக்க மும்பை துறைமுகத்தை அடைந்த சமயத்தில் பயண நேரத்தில் சுவைப்பதற்காக பனைவெல்ல இனிப்புமிட்டாய்கள் கொண்ட ஒரு பை அவருக்காக அந்தத் துறைமுகத்தில் காத்திருந்தது. ஆச்சரியத்துடன் அதைப் பெற்றுக்கொண்டு காந்தியடிகளை மனத்துக்குள் நினைத்தபடி அவர் லண்டனுக்குக் கப்பலேறினார். வழிமுழுக்க அவரைப்பற்றிய நினைவுகளே புரண்டன. இறுதியில் அவர் லண்டன் நகரை அடைந்த நேரத்தில் அவருக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. அவர் லண்டன் துறைமுகத்தை அடைந்த நேரத்தில் புகை பிடிப்பதை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்ளும் ஒரு கடிதமொன்று அவருக்கு முன்னால் வந்து காத்திருந்தது. காந்தியடிகள் ஒரே நேரத்தில் தனக்குத் துணையாக இருப்பதைப்போலவும் வழிநடத்துவதுபோலவும் டங்கன் நினைத்துக்கொண்டார்.

(செப்டம்பர் 2019, கணையாழி இதழில் வெளிவந்த கட்டுரை)