Home

Friday, 27 November 2015

மகிஜா என்றொரு மனிதர் - கட்டுரை



    "பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம்" என அரையும் குறையுமாகத் தெரியும் எழுத்துகளைக் கொண்ட நிறம் மங்கிய ஒரு பலகையைத் தாங்கிய இரண்டு கம்பங்கள்தான் அந்த இடத்தில் முதலில் இருந்தன. இருநூறடி நீளமும் நூறடி அகலமும் கொண்ட அந்த இடம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காததற்கு மூன்று காரணங்கள் உண்டு. அந்த வட்டாரத்துக் கழிவுகளையெல்லாம் தினந்தினமும் வாகனங்கள் கொண்டுவந்து அந்த இடத்தின் மூலையிலேயே கொட்டிக்கொண்டிருந்தன என்பது முதல் காரணம். அதனால் எழும் துர்நாற்றம் யாரையும் அந்தப் பகுதியையே நெருங்கிச் செல்ல முடியாத ஒன்றாக மாற்றிக்கொண்டிருந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் முட்புதர்களாக அடர்ந்துகிடந்ததும் அதனாலேயே வழிப்போக்கர்களும் மற்றவர்களும் அந்த இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்ததும் இரண்டாவது காரணம். சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடிக் களிக்க ஏற்றதாக ஊஞ்சல்களும் சறுக்குமரங்களும்  நடையாளர்களுக்கு வசதியாக நிழலடர் ந்த சூழலில் கல் பரப்பப்பட்ட வட்டப்பாதையும் கொண்ட இரண்டு பூங்காக்கள் அருகிலேயே மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுவந்தது மூன்றாவது காரணம்.

    பல சமயங்களில் அந்த இடத்தைப் பக்கவாட்டில் பார்த்தபடி கடந்து செல்வதே வழக்கம். ஒரு கோடையில் சில சிறுவர்கள் அந்த இடத்தின் ஒரு பகுதியில் அடர்ந்திருந்த முட்செடிகளையெல்லாம் வெட்டியெறிந்துவிட்டு சுத்தப்படுத்துவதைப் பார்த்தேன். மறுநாள் முதல் அங்கே கிரிக்கெட் ஆட்டம் ஆடத் தொடங்கினார்கள் அவர்கள். அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னரே கையில் மட்டைகளோடும் கவசங்களோடும் ஒரு குழு வந்து ஆட்டத்தைத் தொடங்கிவைக்கும். பிறகு மாலை சூரியன் மேற்கில் மறைந்து தேய்கிறவரைக்கும் வேறுவேறு குழுக்கள் வேறுவேறு சமயங்களில் வந்து அந்த இடத்தைக் கைப்பற்றி ஆடிமுடித்துவிட்டுப் போகும். ஒருநாள் போகிற வருகிறவர்களுக்கெல்லாம் துண்டறிக்கைகள் கொடுத்து, பார்வையாளர்களை வரவழைத்து அக்கம்பக்கத்திலேயே உள்ள இரண்டு நண்பர்கள் குழுக்கள் பத்து ஓவர்கள் கொண்ட ஒரு பந்தயத்தை நடத்தின.  பந்தயத்தையொட்டி அந்த இடம் இன்னும் கொஞ்சம் து¡ய்மையான தோற்றத்தை அடைந்தது.  கோடை முழுதும் பல பந்தயங்கள் நடந்தன.
    கோடைமுடிந்து பள்ளிகள் தொடங்கியதும் அந்தத் தற்காலிக மைதானம் வெறிச்சிடத் தொடங்கியது. பாதங்கள் பட்டுப்பட்டு கட்டாந்தரையாகப் போன மண்ணில் மீண்டும் அங்குமிங்கும் புற்கள் முளைவிடத் தொடங்கின. ஒருநாள் காலையில் தலைநரைத்த ஒரு வயதானவரும் இன்னொரு நடுத்தர வயதுக்காரரும் இரண்டு கம்பங்களுக்கிடையே ஒரு வலையைக் கட்டி இறகுப்பந்தைத் தட்டித்தட்டி ஆடிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்துக்கு மீண்டும் ஒரு விளையாட்டுக்களை படியத் தொடங்கியது. ஒரு வாரத்துக்குப் பிறகு சில தம்பதிகளும் பெண்களும் இளைஞர்களும்கூட மட்டைகளோடு வந்து காத்திருந்து ஆடிவிட்டுச் சென்றார்கள். எல்லாருமே வெவ்வேறு திசைகளில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறவர்கள். வழியில் கால்மணிநேரம் அங்கே வந்து ஆடுவது ஒரு பழக்கமாக ஒட்டிக்கொண்டது.
    அவர்கள்தாம் குப்பைக்கழிவுகளின் துர்நாற்றத்தை ஒரு தடையாக முதலில் உணர்ந்தார்கள். கழிவுகளைக் கொட்டவந்த வாகனக்காரரிடம் அந்த இடத்தில் இனி கொட்டவேண்டாம் என்று எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். அலட்சியம் நிரம்பிய அந்த வாகனக்காரர்கள் அவர்களுடைய வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  வயதில் பெரியவரான மகிஜாவுக்கு அவர்களுடைய அலட்சியம் வருத்தத்தைக் கொடுத்தது. அன்றைய ஆட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எல்லாரும் சேர்ந்து அடுத்த நடவடிக்கையைப்பற்றி யோசித்தார்கள். ஆளாளுக்கு ஒரு திட்டத்தைச் சொன்னார்கள். அந்தப் பகுதிக்கு உரிய மாநகராட்சி உறுப்பினரை நேரில் சந்தித்து விவரத்தைச் சொல்வதென்றும் தேவைப்பட்டால் அவர் மூலமாகவே தொடர்புடைய அதிகாரிக்கு ஒரு விண்ணப்பத்தைத் தருவதென்றும் முடிவானது. மகிஜா தானாகவே முன்வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அன்று இரவே ஒரு விண்ணப்பத்தை எழுதி கையெழுத்திட்டு ஒரு உறையில் போட்டு வைத்துக்கொண்டார்.
    மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து மாநகராட்சி உறுப்பினரைப் பார்க்கச் சென்றார். அவர் அதற்கு முன்னதாகவே எழுந்து வேறொரு அலுவல் நிமித்தமாக வெளியே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. ஒருவாரம் வரைக்கும் அவருக்கு அதே விதமாகவே பதில்கள் கிடைத்தன. மனம் சோர்வுறாத மகிஜா தினமும் அதிகாலை நடையைத் தொடங்கும் முன்னர் அந்த வீட்டுப்பக்கம் ஐந்து நிமிடங்கள் நடந்து வருவதை ஒரு பழக்கமாகவே மேற்கொண்டார். இரண்டாவது வாரம்தான் அவரால் உறுப்பினரைச் சந்திக்கமுடிந்தது. பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடம் பல ஆண்டுகளாக எந்த முயற்சியுமின்றி குப்பைமேடாகவே கிடக்கும் அவலத்தை எடுத்துச் சொன்னார் மகிஜா. தன்னுடைய கவனத்துக்கே அந்த விஷயம் வராததைப்போல குற்ற உணர்ச்சி ததும்பப் பேசினார் உறுப்பினர். அந்தக் குப்பைகளை உடனடியாக அகற்றவும் எதிர்காலத்தில் குப்பைகளை அங்கே போடாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அனுப்பிவைத்தார். ஏறத்தாழ ஒரு வாரம் முடிந்த நிலையிலும் எந்தவிதமான மாற்றமும் நேரவில்லை. இன்னொரு முறையும் உறுப்பினரைச் சந்தித்து விவரங்களைச் சொன்னார் மகிஜா. ஏற்கனவே எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்துவிட்டதாகவும் அவை ஏன் செயலாக்கப்படவில்லை என்பது தெரியவில்லை என்பதுபோலப் பேசி அனுப்பினார் உறுப்பினர். இன்னொரு வாரம் காத்திருந்தார் மகிஜா. அப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லை.
    அடுத்த வாரம் அதிகாரியின் அலுவலகத்துக்கே நேராகச் சென்றார் மகிஜா. சந்திக்க சரியான வாய்ப்பு அமையவில்லை. ஏதோ அவசரமான கலந்துரையாடலில் இருப்பதாகத் தகவல் அளிக்கப்பட்டது. எழுதிச் சென்ற விண்ணப்பத்தை அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அடுத்தடுத்து நாலைந்து வாரங்கள் சென்றபிறகுதான் அதிகாரியைச் சந்திக்க முடிந்தது. எந்தத் தகவலும் தன்னை வந்து சேரவில்லை என்று கையை விரித்தார் அதிகாரி. சம்பந்தப்பட்ட அலுவலரைக்  கண்டிப்பதாக சொன்னார். புதிதாக இன்னொரு விண்ணப்பத்தை எழுதி வாங்கிக்கொண்டார். ஒரு வாரத்துக்குள் புதிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு கழிவுகளனைத்தும் அகற்றப்படும் என்று சொல்லியனுப்பினார்.
வாரக்கடைசியில் கழிவுகள் அகற்றப்பட்டன. துர்நாற்றம் விலகியதுமே அந்த இடத்துக்குப் புதிய களை வந்துவிட்டது. கூலிக்கு நாலைந்து ஆட்களை  அழைத்துவந்து அங்கங்கே முளைத்திருந்த முட்செடிகளை தானே முன்னின்று அகற்றினார் மகிஜா. விளையாடுவதற்கு இன்னொரு களம் தயாரிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக ஆடுவதற்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
    அந்த இடம் பூங்காவாக உருவெடுக்கவேண்டும் என்பதில் உறுதியான முடிவோடு இருந்தார் மகிஜா. உறுப்பினர், அதிகாரி என மாறிமாறி ஆட்களைப் பார்ப்பதும் விண்ணப்பங்கள் கொடுப்பதுமாக இருந்தார். ஏதோ ஒரு தருணத்தில் அந்த வேலையை நிர்வகிக்கும் பொறுப்பு வனத்துறையின்கீழ் வருவதாக வேறொரு அதிகாரி சொன்ன வார்த்தையை வைத்துக்கொண்டு வனத்துறையின் அதிகாரிகளைப் பார்ப்பதில் அக்கறை செலுத்தினார்.  ஏழெட்டுமுறைகள் பார்த்துச் சலித்தபிறகுதான் சம்பந்தப்பட்டவரைக் கண்டு பேசமுடிந்தது. பூங்காவின் தேவையை உணர்ந்தவராகவே அவரும் பேசியதில் ஆறுதலடைந்தார் மகிஜா. முதலில் தம் அலுவலகக்குழு அந்த இடத்துக்கு வந்து ஆய்வு நிகழ்த்துமென்றும் எவ்வகையான மரக்கன்றுகள் அந்த மண்ணுக்குப் பொருத்தமெனப் பார்த்து முடிவெடுக்கும் என்றும் சொல்லியனுப்பினார். ஆய்வுக்கும் முடிவுக்கும் ஆறேழு மாதங்கள் பிடித்தன. இன்னொரு கோடை பிறந்து கடந்துபோனது.
    ஒருநாள் காலையில் வனத்துறை ஆட்கள் வந்து தரையையெல்லாம் ஒழுங்குபடுத்தினார்கள். தானாகவே வளர்ந்து நின்றிருக்கும் மரங்களை ஒன்றும் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டார் மகிஜா. முட்செடிகளைமட்டும் வெட்டியெடுத்து சுத்தமாக அப்புறப்படுத்தவைத்தார். புதிய கன்றுக்கான இடங்களையும் அவரே தேர்ந்தெடுத்துச் சொன்னார். எந்தெந்த இடங்களில் மரங்களும் பூச்செடிகளும் வரவேண்டும், எங்கெங்கே சிமெண்ட் பெஞ்சுகள் வரவேண்டும், நடைவட்டப்பாதை எப்படி அமையவேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் அவர் மனத்துக்குள் துல்லியமான ஒரு சித்திரம் இருந்தது. நடப்பட்ட கன்றுகளுக்கு காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஊற்ற சொந்தச் செலவில் ஒரு முதியவரை ஏற்பாடு செய்யவும் அவர் தயங்கவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளில் அந்த இடம் ஒரு பூங்காவுக்குரிய தோற்றத்தைத் தோராயமாக அடையத் தொடங்கியது.
பெஞ்சுகள், ஒழுங்கான சுற்றுப்பாதை, கம்பிவேலி, ஆடுமாடுகளின் நுழைவைத் தடுப்பது என பல வேலைகள் பாக்கியிருந்தன. மனிதர்களின் எதிர்பார்ப்பும் அரசு எந்திரத்தின் வேகமும் எப்போதும் எதிர்எதிர் விகிதத்திலேயே இயங்கின. ஏராளமான அவமானங்களை எதிர்கொண்டார் மகிஜா. எக்கணத்திலும் அவர் அதை வெளிக்காட்டியதில்லை. எதுவுமே நிகழாததைப்போல மீண்டும்மீண்டும் புத்துணர்ச்சியோடு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தார்.
    இக்கணத்தில்தான் மகிஜாவின் உடல்நிலை குன்றியது. ஏதோ கோளாறால் இடது கால் துவண்டுவிட்டது. எழுந்து நடப்பதில் நிறைய சிரமங்கள். அதற்கான மருத்துவமும் பயிற்சிகளும் வீட்டில் முறையாக நடந்தன. ஆனாலும் அந்த அரைகுறைப் பூங்காவைப் பார்க்காமல் அவரால் இருக்கமுடிந்ததில்லை. சக்கரநாற்காலியில் அமர்ந்துவந்து காலையிலும் மாலையிலும் சிறிது நேரம்  உட்கார்ந்து காற்று வாங்கிவிட்டுச் செல்வார், நடைபாதைக்காக எதிர்பார்க்காமல் நடையாளர்கள் மண்பாதையிலேயே நடந்துநடந்து தானாகவே ஒரு சுற்றுப்பாதை உருவாகிவிட்டதை மிகவும் முகமலர்ச்சியோடு பல நிமிடங்கள் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார். அந்த நிலையிலும் அலுவலகங்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து இடைவிடாமல் தொடர்புகொண்டு எஞ்சியிருக்கும் வேலைகளைப்பற்றி நினைவூட்டியபடியே இருந்தார்.
    எதிர்பாராதவிதமாக ஒருநாள் காலையில் ஒரு ஒப்பந்தக்காரர் அனுப்பிய   வேலையாட்களின் குழு அங்கே வந்து முகாமிட்டது. இளம்பொறியாளர் ஒருவர் வந்து அளந்து என்னென்ன இடங்களில் எதெது வரவேண்டும், எப்படியெப்படி அமையவேண்டும் என்றெல்லாம் சொல்லி அடையாளம் செய்துகொடுத்துவிட்டுச் சென்றார். வந்த வேலையாட்கள் மகாசோம்பேறிகள். காலையில் இரண்டுமணிநேரம் நான்குபேர்கள் மண்வெட்டியால் ஏதோ முள்ளால் கீறியதைப்போல தரையை வெட்டுவார்கள். பிறகு ஓய்வு, உணவு, உறக்கம். மாலையில் இரண்டு மணிநேரம் மீண்டும் வெட்டுவார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் வேலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் எதுவுமில்லை. திடீரென ஒருநாள் இரவோடு இரவாக அந்தக் குழு காணாமலேயே போய்விட்டது. வேலை அப்படியே கிடந்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு இன்னொரு குழு வந்தது.   மண்ணைக் கொத்தி சீராக்கியதிலும் தேவையான சிமெண்ட் பலகைகளை அங்கேயே அச்சுவைத்து தயாரிப்பதிலும் வேகமாகவே செயல்பட்டார்கள். ஆனால் ஒரு வாரத்துக்கும் மேல் அவர்களும் ஓடிப் போனர்கள். இப்படியே நாலைந்து குழுக்கள் வருவதும் போவதுமாகவே பொழுது கழிந்தது. வேலை நின்று போகும் ஒவ்வொரு முறையும் தொலைபேசி முயற்சிகளில் இறங்கினார் மகிஜா.
    ஓராண்டுக்குப் பிறகு சுற்றுப்பாதையும் கிளைப்பாதையும் ஓரளவு தயாராகின.  புதிய பாதை பல புதிய நடையாளர்களை அந்தப் பூங்காவைநோக்கி ஈர்த்தது. ஈர்க்கப்பட்ட பலருள் நானும் ஒருவன். மகிஜாவை அப்போதுதான் முதன்முதலாகச் சந்தித்தேன். சின்னக் கைத்தடியை ஊன்றியபடி மெள்ளமெள்ள நடக்கும் நிலையை அடைந்திருந்தார் அவர். நானே வரையறுத்துக்கொண்ட பதினாறு சுற்றுகளை முடித்துக்கொண்டு வேர்வை அடங்க பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருநாள் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். அப்போதுதான் எல்லாவற்றையும் கதைகதையாகச் சொன்னார். விடாமுயற்சியின் அடையாளமாக அவரைத்தான் சொல்லவேண்டும். சோர்வு என்பதையும் தோல்வி என்பதையும் ஏற்கமறுக்கும் மனத்திட்பம் அவரிடம் குடிகொண்டிருந்தது. வெண்யைடர்ந்த புருவங்களும் மாறாத புன்சிரிப்பும் களையான உரையாடலும் அவருடைய விசேஷ அடையாளங்கள்.     பூங்காவையொட்டி நிறைவேறாத விருப்பங்கள் அவருடைய பட்டியலில் இன்னும் இருந்தன. பூங்காவை தினமும் கூட்டிப் பெருக்கிச் சுத்தப்படுத்த உடனடியாக ஒரு கண்காணிப்பாளர் தேவை. அடுத்தடுத்த தேவைகள் சுற்றுவேலி, திறந்து மூடும் கம்பிக்கதவு, மின்விளக்கு வசதி, தண்ணீர்க்குழாய். இதற்காக மீண்டும் தன் பயணத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தார் மகிஜா. வயதைப் பொருட்படுத்தாத அவருடைய செயல்வேகம் ஆச்சரியமளித்தது.
    மறுநாள் அவரிடம் நான் ஒரு திட்டத்தை முன்வைத்தேன். பூங்காவின் பயன்பாட்டையும் தேவைகளையும் முன்வைத்து ஒரு சின்னத் தகவலறிக்கையைத் தயார்செய்யவேண்டும். அத்தேவைகளை நிறைவேற்றக் கடமைப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடைய முகவரிகள், தொலைபேசி எண்களையும் குறிப்பிடவேண்டும். பிறகு இறுதியாக ஒரு வேண்டுகோள் வாக்கியத்தையும் எழுதவேண்டும். இந்த அறிக்கையை நகலெடுத்து பூங்காவுக்கு நடப்பதற்காகவும் விளையாடுவதற்காகவும் வருகிற எல்லாருக்கும் தருவதென்றும் பூங்காவின் தேவைகளை முன்னிட்டு எல்லாருமே அதிகாரிகளிடம் பேசவேண்டும் என்றும் சொல்லவேண்டும். நு¡று பேர்களிடம் சொன்னால் பத்து பேராவது செயல்படமாட்டார்களா என்பது என் எண்ணம். மகிஜா அத்திட்டத்துக்கு உடனடியாக ஒத்துக்கொண்டார். தன் வயதை முன்னிட்டு அவரும் இன்னொருவரை அப்படிப்பட்ட வேலைகளுக்குத் தயார் செய்யவேண்டியிருந்தது.
    மறுநாள் நானே அந்த அறிக்கையைத் தயார்செய்து அதன் நூறு படிகளையும் எடுத்துக்கொண்டு சென்றேன். மகிஜா ஒரு மூலையிலும் நான் இன்னொரு மூலையிலுமாக நின்று அறிக்கையை எல்லாருக்கும் வழங்கினோம். எல்லாருமே ஏதோ விளம்பர அறிக்கை என்பதுபோல முதலில் வாங்கத் தயங்கினார்கள். விஷயத்தைச் சொல்லி விளக்கியபிறகே அனைவரும் புன்சிரிப்போடு வாங்கிக்கொண்டார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மெதுவாக ஒவ்வொருவரிடமும் "தொலைபேசி செய்தீர்களா?" என்று விசாரித்தேன். சிலர் புன்சிரிப்போடு நழுவினார்கள். சிலர் மறந்துவிட்டதாகச் சொன்னார்கள். "அந்தத் தாள எங்கயோ விட்டுட்டேன் சார், இன்னொன்னு இருந்தா குடுங்களேன்" என்றார்கள். சிலர் "எங்க சார்  இதுக்கெல்லாம் நேரம், வீட்டுக்குப் போனா ஆயிரத்தெட்டு வேலைங்க" என்றார்கள். "என்ன சார் அநியாயமா இருக்குது? எப்ப போன் பண்ணாலும் பாத்ரூமில இருக்காருங்கறாங்க. இல்லன்னா ஆபீஸ் மீட்டிங்ல இருக்காருங்கறாங்க. புடிக்கவே முடியலை சார்" என்று சிலர் சொன்னார்கள். உண்மைதான். எனக்கும் அப்படிப்பட்ட பதிலே சொல்லப்பட்டது. ஒரு தொலைபேசியைத் தவிர்ப்பதற்காக எவ்வளவு பெரிய பொய்களையெல்லாம் தாராளமாக நாக்கூசாமல் சொல்கிறார்கள் என்பதை உணரமுடிந்தது.
ஒரு பரிசோதனைக்காக நாங்கள் ஆறு நண்பர்கள் சேர்ந்து ஒரு திட்டமிட்டோம். அதன்படி முதல் நண்பர் காலை ஏழேகால் மணிக்கு வீட்டு எண்ணில் தொடர்புகொண்டார். வழக்கம்போல "பாத்ரூமில இருக்காரு" என்கிற பதிலே வந்தது. பத்து நிமிடம் கழித்து இரண்டாவது நண்பர் தொடர்புகொண்டார். அவருக்கும் அதே பதில். இப்படியே பத்துப்பத்து நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவராகப் பேசினார்கள். எல்லாருக்கும் ஒரே பதில்தான். கடைசியில் எட்டு ஐந்துக்கு நான் பேசியபோது "ஏதோ அவசர மீட்டிங்னு ஆபீஸ் போயிட்டாருங்க" என்ற பதில் வந்தது. குளியலறையிலிருந்து நேராக அலுவலகம் செல்லக்கூடியவர்கள் அரசு அதிகாரிகள்மட்டுமே என்று தோன்றியது. அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டாலும் இதே கதைதான் நடக்கும். எல்லா அழைப்புகளுக்கும் "மீட்டிங்ல இருக்காரு" என்கிற ஒரே பதிலே கிடைக்கும். திடீரென "அமைச்சர் வரச்சொன்னாருன்னு கெளம்பிப் போயிட்டாரே" என்றோ அல்லது "கேம்ப் கெளம்பிப் போயிட்டாரு" என்றோ "ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்குப் போயிட்டாரு" என்றோதான் பதில் வரும்.
    ஒரு மாதத்துக்குப் பிறகு கம்பிவேலிகள் வந்து பூங்காவில் வந்து இறங்கின. ஒப்பந்தக்காரர் பொறுப்பாக பக்கத்திலேயே இருந்து வேலையைப் பார்த்துக்கொண்டார். பூங்காவைச் சுற்றிலும் சிமெண்டாலான மேடையை எழுப்பி பத்தடி இடைவெளிக்கு ஒன்றாக ஒரு கம்பத்தை நாட்டினார்கள். எல்லாக் கம்பங்களையும் இணைத்து கிட்டத்தட்ட ஆறடி உயர வேலி எழுப்பப்பட்டது. கம்பிகளுக்கு செவ்வண்ணம் பூசி, அது உலர்ந்த பின்னர் பச்சைவண்ணம் பூசி முடிக்கப்பட்டது. கதவுகள் பொருத்தப்படவேண்டும் என்கிற நிலையில் மீண்டும் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.  
    மகிஜாவும் நாங்களும் மறுபடியும் பழையபடி நினைவூட்டல்களில் இறங்கினோம். அரசு எந்திரத்தின் ஞாபகமறதியை நினைத்தால் ஒருசில சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும், ஒருசில சமயங்களில் அச்சமாகவும் இருக்கும். இவர்களெல்லாரும் ஏன் இப்படி விட்டேற்றியாக இருக்கிறார்கள் என்கிற  வருத்தம்மட்டுமே எல்லாச் சமயங்களிலும் எஞ்சிநிற்கும்.
    ஒருநாள் உரையாடலில் மகிஜா சமீபத்தில் பார்த்த "வேரு" என்னும் கன்னடப்படத்தைப்பற்றி விசேஷமாகச் சொல்லிச்சொல்லிச் சிரித்தார். அந்தப்படத்தில் ஒரு தாசில்தார் அலுவலகம் இடம்பெறுகிறது. அந்த அலுவலகத்துக்கு புதிய தாசில்தார் ஒருவர் பொறுப்பேற்றுக்கொள்வதிலிருந்து தொடங்குகிறது அந்தத் திரைப்படம். மறுநாளே அந்தத் தாசில்தாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மத்திய அமைச்சர் ஒருவருடைய வருகையையொட்டி அந்தத் தாசில்தாரரின் அதிகாரவரம்புக்கு உட்பட்ட விருந்தினர் மாளிகையைத் தயார்ப்படுத்துமாறு மேலிடத்திலிருந்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. விருந்தினர் மாளிகையைப்பற்றி விசாரிக்கப்போன தாசில்தாருக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த விருந்தினர் மாளிகை உண்மையில் கட்டப்படவே இல்லை. ஆனால் பதிவேடுகளின்படி மாளிகை கிட்டத்தட்ட பதின்மூன்று இலட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுவிட்டது. அதற்கு பாதுகாப்பு, பராமரிப்பு, மின்சாரச் செலவு, தண்ணீர்ச்செலவு, பாதைப் பராமரிப்புச் செலவு என மாதாந்திரச் செலவாக சில ஆயிரங்கள் தொடர்ந்து செலவழிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்கூட விடாது பொழிந்த மழையால் ஏற்பட்ட பழுதுகளைச் சரிப்படுத்த ஒன்றேகால் லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது. எல்லாமே பதிவேட்டில்தான் உள்ளன. இல்லாத மாளிகைக்கு இலட்சக்கணக்கில் செலவுக்கணக்கு எழுதப்பட்டுள்ளது. கதையைச் சொல்லிமுடித்த மகிஜா இறுதியாகச் சொன்னார். "யார் கண்டது, இந்தப் பூங்கா பேரில எல்லாச் செலவயும் ஏற்கனவே எழுதியாச்சோ என்னமோ?"        
    அதிர்ச்சியிலிருந்து மீள சில கணங்கள் தேவைப்பட்டன. அதிகாரிகள் ஏன் இப்படி சொந்த லாபத்தையே குறிவைத்து எல்லாச் சமயங்களிலும் பணம் பணம் என்று அலைகிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. ஊழியம் என்பது ஒருகணம்கூட அவர்கள் ஞாபகத்தில் எழாதோ என்று ஐயமாக இருந்தது. பிடுங்குகிற வரை லாபம் என்பதுதான் அதிகாரிகளின் போக்காக இருக்கிறது. அரசியல்வாதிகளின் போக்காகவும் இருக்கிறது. இப்படி ஆளாளுக்குச் சுரண்டுவதிலேயே எண்ணம் போனால் சேவை எண்ணம் எப்படி வரும்? ஒரு சின்னப் பூங்காவைக்கூட சரிப்படுத்தத் தெரியாத இவர்கள் எப்படி இந்தத் தேசத்தைச் சரிப்படுத்துவார்களோ என்று வருத்தமாக இருக்கிறது. பூங்கா வேறு, தேசம் வேறு என்று என்னால் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை எனக்கு.
    திடீரென பத்து நாட்களாக பூங்காவின் பக்கமாக மகிஜா தென்படவே இல்லை. நடக்கமுடியாத தருணங்களில்கூட தட்டுத்தடுமாறி வந்துவிடக்கூடிய மகிஜாவுக்கு என்ன நேர் ந்தது என்று குழப்பமாக இருந்தது. முகவரி விசாரித்துக்கொண்டு நானும் நண்பர்களும் காலை நடையை முடித்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றோம். வாசலில் இருந்த பெண்மணியிடம் விவரத்தைச் சொன்னதும் உள்ளே அழைத்துச் சென்றார். திடீரென சுவாசத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்யவேண்டியதாகிவிட்டது என்றும் அறைக்குள் தற்சமயம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார். எல்லாருக்கும் முதலில் தேநீர் வழங்கினார். பிறகு மகிஜாவிடம் அழைத்துச் சென்றார். சாய்வாக மடிக்கப்பட்ட படுக்கையில் உட்கார்ந்தபடி செய்தித்தாளைப் புரட்டிக் கொண் டிருந்த மகிஜா எங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் கண் கலங்கினார். "வாங்க வாங்க" என்று கைகளைக் குலுக்குவதற்காக நீட்டினார். "எப்படி இருக்குது பூங்கா?" என்றார்.  "அந்த அதிகாரியை லைன்ல புடிக்கமுடிஞ்சதா இல்லயா?" என்று கேட்டார். பேசிக்கொண்டிருந்த அரைமணி நேரத்திலும் பூங்காவை மேம்படுத்துவதைப்பற்றியே பேசினார்.
    திரும்பும்போது எங்களுக்குள் மீண்டும் பழைய வேகம் உருவெடுத்தது. ஒவ்வொருவரும் ஐந்தைந்து நிமிட இடைவெளியில் தத்தம் செல் பேசியிலிருந்து அதிகாரியின் வீட்டு எண்ணை மாறிமாறித் தொடர்பு கொண்டோம். அதே பழைய பதில்தான். "ஐயா குளிச்சிட்டிருக்காரு" எரிச்சல் தாங்காத ஒரு நண்பர் சலிப்புடன் முணுமுணுத்தார்.
    "கங்கையில குளிச்சாகூட போவாத அளவுக்கு இருக்குதுடா உங்க அழுக்கு. பாத்ரூம் குளியல்லியா போயிடப்போவுது அது?"
    வருத்தத்தையும் மீறி  எல்லாருக்கும் ஒருகணம் கசப்பான சிரிப்பு பீறிட்டு வந்தது.