மொழி பெயர்ப்புகளுக்குரிய
மரியாதையோ கவனிப்போ
தமிழில் இல்லை
சந்திப்பு : பாவண்ணன்.
சரஸ்வதி ராம்நாத் அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்ச் சூழலில் இயங்கி வருபவர் சரஸ்வதி ராம்நாத். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
இந்தி மொழிக்கு இவர் ஆற்றிய சேவையைக் கௌரவித்து மத்திய அரசு விருது வழங்கியது. விருது வழங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா. சமீபத்தில் இவருடைய ஒட்டுமொத்தமான சேவையைப் பாராட்டும் வகையில் மேற்கு வங்கத்தில் இயங்கும் சாந்தி நிகேதன் பல்கலைக் கழகம் செப்டம்பர் 14-ம் தேதி விருதளித்து கௌரவித்தது. தமிழின் முக்கியப் படைப்பாளிகள் பலரையும் இந்தி இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கும் இவர், இந்திப் படைப்பாளிகளையும் இந்தி வழியாகப் பிற மொழிப் படைப்பாளிகளையும் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். தற்சமயம் பெங்களுரில் தன் மகனோடு வசித்து வருகிறார்.கேள்வி: நீங்கள் இந்தி கற்றுக் கொண்ட சூழலையும் தமிழில் மொழிபெயர்க்கத்
தொடங்கிய ஆரம்ப காலச் சூழலையும் பற்றிச் சொல்கிறீர்களா? தொடக்கத்தில் இதற்கு வரவேற்பு
எப்படி இருந்தது?
பதில்: அது காந்தியச்
சூழல். நாட்டில் தேசிய உணர்வு மக்களின் உள்ளங்களில் கிளர்ந்திருந்த காலம். தேசியத்தின்
ஓர் அம்சமாக இந்தி மொழி கற்றுக்கொள்வதும் ராட்டையில் நூல் நூற்பதும் கதராடைகள் அணிவதுமாக
இருந்த காலம். முதன் முறையாக மக்கள் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டுத் தமிழ் நாட்டில்
காங்கிரஸ் மந்திரி சபை அமைத்தது. திருமணத்துக்கு முன்பு, என்னுடைய பதின்மூன்றாவது,
பதினாலாவது வயதில் நானும் அக்கம்பக்கத்தில் வசித்துவந்த நாலைந்து சிறுமிகளும் திருமதி சம்பூரண அம்மாளிடம்
(எழுத்தாளர் க்ருஷாங்கினியின் தாயார்) உற்சாகத்தோடு இந்தி கற்கச் சென்றோம்.
அப்போது ஆனந்த
விகடனில் இந்திப் பாடங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அச்சமயம் வங்க, மராத்தி,
இந்தி மொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பத்திரிகைகளில்
வெளிவந்தன. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் ஆகியோரின்
படைப்புகளைப் படித்துக்கொண்டிருந்தவர்களை இவ்வித்தியாசமான படைப்புகள் பெரிதும் கவர்ந்தது
மட்டுமல்ல, தேசிய உணர்வையும் ஊட்டின. குறிப்பாக 'ஆனந்த மடம்.' வ.வெ.சு. ஐயர் நடத்திய
பாலபாரதியும் எழுச்சியூட்டும் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டது. திருமணத்திற்குப்
பின்னர் எனது இந்திப் படிப்பு வீட்டிலேயே தொடர்ந்தது.
திரு. சதாசிவம்
அவர்கள் (இன்றும் கோவையில் அதே கதராடையில் அதே புன்சிரிப்புடன் இந்தி கற்பித்துக் கொண்டிருக்கிறார்.)
எங்களுடைய வீட்டுக்கு வந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தார். இந்தியின் மூலமாகத்தான்
நான் இந்தியாவைத் தெரிந்துகொண்டேன். 1942ல் சென்னைக்கு வந்த பின்னர்தான் நான் எழுதத்
தொடங்கினேன். எனது சிறுகதைகள், கட்டுரைகள் பலவும் பிரசுரமாயின. எனினும் எனக்கு மொழி
பெயர்ப்பில்தான் ஆர்வம் அதிகமிருந்தது. நான் படித்த சிறந்த படைப்புகளைத் தமிழ் வாசகர்களுக்குத்
தர
வேண்டும்
என்ற உந்துதல்தான் இதற்குக் காரணம், இந்தி மொழியிலிருந்தும் இந்தி வழியாகப் பிறமொழிகளிலிருந்தும்
மொழிபெயர்க்கத்
தொடங்கினேன். அச்சமயத்தில் தினமணி கதிர் இதழுக்கு ஆசிரியராக இருந்த துமிலன், எனக்குப் பெரும் ஆதரவளித்தார்.
முதலில் காவேரி'யில்தான்
என் மொழி பெயர்ப்பில் 'வீர சுதந்திரம்' என்கிற குஜராத்தி நாவல் வெளிவந்தது. தொடர்ந்து
சுதேசமித்திரன். தினமணிகதிர், தீபம், தாமரை, கலைமகள் போன்ற இதழ்களுக்காக மொழிபெயர்த்துக்
கொடுத்தேன். நர்த்தகி என்னும் குஜராத்தி நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை ஸ்டார் பிரசுரம்
மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது. தொடர்ந்து தமிழ் புத்தகாலயம் வழியாவும் என் மொழியாக்க
நூல்கள் வரத் தொடங்கின. தற்சமயம் என்னுடைய மொழிபெயர்ப்புகளை வானதிப் பதிப்பகம்
பிரசுரித்து வருகிறது. தொடக்கத்தில் பத்திரிகைகளில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு
இருந்த வரவேற்பு வரவரக் குறைந்துவிட்டது.
கேள்வி: இந்தியிலிருந்து
தமிழில் மொழிபெயர்ப்பதோடு, தமிழிலிருந்து இந்தியிலும் மொழிபெயர்ப்பவராகவும்
நீங்கள் இருக்கிறீர்கள். இதுவரை தமிழிலிருந்து எந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை
அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்? தமிழ்ப்படைப்புகள் குறித்து இந்தி வாசகர்கள்/ வெளியீட்டாளர்கள்
கருத்துத் தெரிவித்த முக்கிய தருணங்கள் ஏதேனும் உண்டா?
பதில்: பிரேம்சந்தின்
மகன் அமிருத ராய் நடத்திய 'கஹானி', மாத்ரு பூமி பிரசுரித்த 'யுக பிரபாத்த 'தர்மயுக்',
'சரிகா', 'ஆஜ்கல்' போன்ற பல பத்திரிக்ளுக்காக எண்ணற்ற தமிழ்ப் படைப்புகளை இந்தியில்
மொழிபெயர்த்துத் தந்துள்ளேன். ஜெயகாந்தன், அகிலன், தி.ஜானகிராமன், ரகுநாதன், கு.சின்னப்ப பாரதி, ஆதவன்,
சுந்தர ராமசாமி போன்ற முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளேன். இன்று
முன்னணியில் இருக்கும் எழுத்தாளர்கள் அனைவரையும் இந்திக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன்.
அவர்கள் கதைகளில் ஒன்றையாவது நான் மொழி பெயர்த்துள்ளேன். இதனை ஒரு கடமையாகத்தான் செய்கிறேன்.
பெரிதாகப் பணம் ஏதும் பெறவில்லை. ஒரு சில வாசகர்களின் கடிதங்கள் தொடர்ந்து வருகின்றன. அவை
எனக்கு ஊக்கமளிக்கின்றன. இந்திமொழி வெளியீட்டாளர்களைப் பொறுத்த வரையில் மொழிபெயர்ப்புப்
படைப்புகளுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதற்குப் பல காரணங்கள்
சொல்கிறார்கள். தமிழ்ப் படைப்புகளின் இந்தி மொழியாக்கத்திற்குத் தமிழ்நாட்டில் விற்பனை
இல்லை. அரசின் ஆதரவோ, நூலக விற்பனையோ இல்லை. பாரதீய ஞானபீடம், என்.பி.டி. சாகித்ய அகாதமி
போன்றவை இத்துறையில் பாராட்டத்தக்க பணியைச் செய்திருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய
இந்தியாவுக்கு இம்மூன்று நிறுவனங்களின் பணி எப்படிப் போதும்?
கேள்வி: தமிழில்
தம் படைப்புகள் வெளியிடுவது பற்றி இந்திப் படைப்பாளிகள் எந்த அளவு ஆர்வம்
காட்டுகிறார்கள்?
பதில்: இந்திப்
படைப்பாளிகளைப் பொறுத்தவரை, மொழிபெயர்ப்புக்காக அணுகும் போது மகிழ்ச்சியடைகின்றனர்.
அனுமதி தருகின்றனர். ஆனால் தம் வட்டத்தை விட்டு வெளியே வந்து பிறமொழி படைப்பாளிகளை
குறிப்பாகத் தமிழ்ப்படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ளும்
ஆர்வமோ அக்கறையோ அவர்களுக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பிற மொழியினரைவிடவும்,
இந்திப் படைப்பாளிகளுக்கு இதில் ஆர்வம் குறைவுதான்.
கேள்வி: இந்தனை
ஆண்டுகளில் இத்துறையில் எந்தப் படைப்பைச் செய்யும்போது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவும்
உழைப்பைக் கோரிய ஒன்றாகவும் கருதுகிறீர்கள்?
பதில்: நான் மொழிபெயர்த்த
ஒவ்வொரு நூலுமே எனக்கு நிறைவைத் தந்தது. ராங்கேய ராகவ் பற்றிய விமர்சன நூல் நிராலாவின்
இலக்கியச் சாதனை என்ற விமர்சன நூல் இரண்டுமே சவால் நிறைந்தன என்று சொல்லலாம். மூல நூல்
இலக்கிய நயம் மிகுந்த ஒன்று. கவிதைகள் பல மேற்கோள்களாகக் காட்டப்பட்டிருந்தன. நயம் குன்றாமல் தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது கடுமையான
உழைப்பை வாங்கியது.
கேள்வி: மூலப்
படைப்பில் அந்தந்த மொழிக்கே அல்லது மண்ணுக்கே உரிய பழமொழிகளும் மரபுத்தொடர்களும் பயின்று
வரும்போது தமிழில் எப்படி மொழி பெயர்க்கிறீர்கள்?
பதில்: ஒவ்வொரு
மொழியிலும் அந்தந்த மொழிக்கே உரிய சிறப்புகளுடன் பழமொழிகளும் மரபுத்தொடர்களும் இருப்பது
இயல்பானதுதான். ஆனால் இந்திய மண்ணுக்கே உரியவை அல்லவா? அதன் மொழிகள், கலாச்சாரம் ஆகியவற்றுக்கிடையே
நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பழமொழிகள் எல்லா மொழிகளிலும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன.
லேசான வேறுபாடு இருக்கக்கூடும். ஆனால் ஒத்த கருத்துடைய இன்னொரு பழமொழியைக் கண்டுபிடிப்பது
எளிதாகவே இருக்கும். எனக்கு அதிகம் சிரமம் தருவது இந்த வகைச் சொற்கள். குத்தல், கிண்டல்கள்தான்.
கேள்வி: நிராலாவின்
விமர்சன நூலை நீங்கள் மொழி பெயர்க்கும்போது, அதில் வந்த சில கவிதை வரிகளுக்குப் பதிலாக
அந்த
முழுக் கவிதையையும் புரிந்துகொள்வதற்காக அந்தக் கவிதைப்புத்தகத்துக்காக நீங்கள் தேடி
அலைந்ததைப் பார்த்திருக்கிறேன். புத்தகத்தில் இடம்பெறாத வரிகளுக்காக அல்லது கவிதைக்காக
ஏன் வருத்திக் கொள்ள வேண்டும்?
பதில்: நீங்கள்
என் சிரமத்தை மட்டுமின்றி நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி
தருகிறது. ஒரு கவிதையிலிருந்து அது சமஸ்கிருதமோ, உருதுவோ எதுவாக இருந்தாலும் இடையிடையே இரண்டொரு
கவிதை வரிகளை மேற்கோள் காட்டினால், மொழி பெயர்ப்பாளர் அம்மூலக் கவிதையைத் தேடிக் கண்டுபிடித்துப்
படித்துப் புரிந்து கொண்டால்தான் பிரதியில் இடம்பெற்றிருக்கும் அந்தத் துண்டான வரிகளைப்
புரிந்துகொள்ளமுடியும். அப்போதுதான் அவ்வரிகளை உணர்வு பூர்வமான அர்த்தம் வெளிப்படும்படியாகவும்
மொழி பெயர்க்க இயலும்.
கேள்வி: ஒரு படைப்பை
மொழிபெயர்ப்புக்குரியதாகத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் மனத்தில் ஏதேனும் அளவு கோல்கள்
செயல்படுவதுண்டா?
பதில்: ஒரு படைப்பைப்
படித்தவுடன் ஏற்படுகிற மனநிறைவுதான் முக்கியமான அளவுகோல். ஆனால் அந்த நிறைவு சாதாரணமாக
வருவதில்லை. அப்படைப்பு இலக்கியத்தரத்தோடு, மனித நேயத்தையும் மனித உணர்வுகளின் மேம்பாட்டுக்கான
செய்தியையும் தன்னுள்ளே கொண்டிருக்க வேண்டும். அவ்விதமாக அமைந்த படைப்பைப் படிக்கும்போதுதான்
என் மனம் நிறைவடையும். அதுவே, பெரும்பாலும் என் அளவுகோல்களாக இருக்கும். நான் தேர்ந்
தெடுத்து மொழி பெயர்க்கும் படைப்புகள் பிற்காலத்தில் பல்வேறு அமைப்புக்களால் சிறந்த
படைப்பு என விருதும் பாராட்டும் பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
கேள்வி: தமிழுலகம்
இந்தியை முற்றாக விலக்கிய காலகட்டத்தில், இந்தியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து
இந்திக்கும் மொழிபெயர்ப்பவராக நீங்கள் உருவாகி வந்திருக்கிறீர்கள். இந்திக் கதைகளைத்
தமிழிலும் தமிழ்க் கதைகளை இந்தியிலும் பிரசுரித்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையாவது
வந்ததுண்டா?
பதில்: தமிழுலகம்
என்று தாங்கள் குறிப்பிடுவது அரசியல் சார்ந்த அமைப்புதான். தமிழ் வாசகர்கள் அல்ல என்பதால்
இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் படைப்புகளைத் தமிழாக்கம் செய்து வாசகர்களுக்குத்
தருவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இதுவரை ஏற்பட்டதில்லை. நான் இந்தியில் மொழிபெயர்க்கும்
படைப்புகளும் இந்தி மூலம் பிற மொழியினரையும் சென்றடைகிறது என்பது நிறைவு தருகிறது.
பிரச்சினை என்று சொன்னால் இன்று மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்க நல்ல இலக்கியப் பத்திரிகைகள்
இல்லை என்பதுதான். இலக்கியப் பரிமாற்றம் இன்னும் விரிவான பரந்த தளத்தில் ஏற்படவேண்டும்
என்பது என் எண்ணம். இது இன்றைய தேவையும் கூட
கேள்வி: தற்போதைய
இந்திப் பத்திரிகை உலகம் எப்படி இருக்கிறது?
பதில்: இலக்கியத்தரமான
நல்ல பத்திரிகைகள் மூடப்பட்டு விட்டன. தமிழ்நாட்டுச் சிறுபத்திரிகைகள் போல ஒருசில இதழ்கள் மட்டுமே வெளிவருகின்றன. அரசு சார்ந்த
பத்திரிகைகளைத்தான் எதிர்பார்க்கவேண்டியுள்ளது. மிக வருந்தத்தக்க நிலைதான். நான் எழுதிக்கொண்டிருந்த
பழைய பத்திரிகைகள் எதுவும் இப்போது இல்லை. என்ன செய்ய?
கேள்வி: இத்தனை
ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்த அனுபவத்தில் இந்திப் படைப்புகளையும் தமிழ்ப் படைப்புகளையும்
ஒப்பிட்டுச் சொல்ல முடியுமா? உங்களுக்கு நிறைவையளித்த தமிழ்ப் படப்புகளின் அனுபவம்
பற்றிச் சொல்கிறீர்களா?
பதில்: தற்சமயம்
நான் பெங்களுரில் வசித்துவருகிறேன். இங்கு வசித்துக்கொண்டு தமிழில் புதிதாக வெளிவந்து
கொண்டிருக்கும் நூல்களைப் பற்றி அதிக அளவில் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இங்கு வாசக
சாலைகளின் உதவியும் இல்லை. சென்னையில் கன்னிமராவில் புதிதாக வெளிவரும் படைப்புகள் நிறையவே
கிடைக்கும். பொதுவாக எனக்குக் கிடைக்கும் நூல்களைப் படித்ததிலிருந்து தற்சமயம் இந்தி
இலக்கிய வளர்ச்சி குன்றி தேக்க நிலையை அடைந்துள்ளதாகவே தோன்றுகிறது.
வேகமாக ஓடிவரும்
குதிரை மூச்சிறைக்க நின்று விடுவதைப் போல. தற்சமயம் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த
கவிஞர்கள், படைப்பாளிகள், நாடக ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். சிறுகதைகளிலும் நாவல்களிலும்
தமிழ்ப் படைப்புகள் சிறந்து விளங்குவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ப் படைப்புகள்
பல்வேறு வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டு வருகின்றன.
அசோகமித்திரனின்
'பதினெட்டாவது அட்சக்கோடு', ராஜம் கிருஷ்ணனின் "மண்ணகத்துப் பூந்துளிகள்' நாஞ்சில்
நாடனின் "சதுரங்கக் குதிரை’ தங்களுடைய 'பாய் மரக்கப்பல்', இமையத்தின் கோவேறு கழுதைகள்',
ஜெயமோகனின் 'ரப்பர்' ஆகியவை சட்டென்று ஞபகத்துக்கு வருகிற அளவில் நான் படித்த நல்ல
நாவல்கள். மேலும் சூடாமணி, அம்பை, சிவகாமி, வாசந்தி, சிவசங்கரி, எஸ்.சங்கர நாராயணன்,
இராமுருகன், சுப்ரபாரதிமணியன், சி.ஆர்.ரவீந்திரன் ஆகியோரின் படைப்புகளும் நல்ல வாசிப்பு
அனுபவத்தைக் கொடுக்கின்றன.
கேள்வி: பிரசுர
சாத்தியமின்மையால் ஓரு மிகச் சிறந்த கதையை மொழிபெயர்க்க இயலாமல் போகிற சூழல் நேர்ந்ததுண்டா?
அப்படிப்பட்ட படைப்புகளைப்பற்றிச் சொல். கிறீர்களா?
பதில்: இது மொழிபெயர்ப்பாளர்க்குரிய
நடைமுறைப் பிரச்சினை. நான் பலமுறை குறிப்பிட்டிருப்பது
போல மொழி பெயர்ப்புகளுக்குரிய மரியாதையோ கவனிப்போ தமிழில் இல்லை. நாட்டின் அரசியல்
நடப்புகளில் உள்ள ஆர்வம், நாட்டின் பிற மொழி' இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்வதிலும்
அதன் வளர்ச்சி, அதன் படைப்பாளிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் இல்லை.
ஒருவித அலட்சிய மனோபாவம்தான் மேலோங்கியுள்ளது.
மிகுந்த ஆவலுடன்
நான் தேடி, படித்து, மொழி பெயர்த்துத் தொகுத்த 'இந்திய நாடகங்கள்". ஒரு தொகுதி
வெளிவந்தவுடன் நின்றுவிட்டது. மேலும் இரு தொகுதிகளுக்குரிய பிரதிகள் தயாராக இருந்தும்
அவற்றை வெளியிட பிரசுரகர்த்தர் தயங்குகிறார்.
காரணம் நாடகங்கள் விற்பதில்லை என்பதுதான். என் முயற்சி தடைப்பட்டுப் போனதில் எனக்கு
வருத்தம்தான். இந்தியிலும் இதே நிலைமைதான். தமிழின் சிறந்த படைப்புகளை இந்தியில் தர
எனக்கு நிறைய ஆவலுண்டு.
இந்தியைத் தேசிய
மொழி என்று கூறிக்கொண்டடாலும் பிறமொழி சார்ந்த இந்தி மொழிபெயர்ப்பாளர்களுக்குரிய ஆதரவோ,
மரியாதையோ தர அவர்கள் முன்வருவதில்லை. தமிழர்கள் எழுதும் இந்தியை மாறுபட்ட கண்ணோட்டத்துடன்
பார்ப்பது ஒரு தேசிய மொழிக்கு ஏற்றதல்ல. இந்தி தேசிய மொழி என அழைக்கப்படும் போது, அது இந்தி மொழியினரின் தனிப்பட்ட பரம்பரைச் சொத்து
அல்ல என்று நான் உரக்கவே கூற விரும்புகிறேன். இந்திப் பிரசுரகர்த்தர்களின் இப்போக்கினால்
இந்தி மொழிபெயர்ப்பாளர்கள் ஆர்வம் குன்றி விட்டனர். அடுத்த தலைமுறை மொழிபெயர்ப்பாளர்கள்
இத்துறையில் ஈடுபடுவார்களா என்பது கேள்விக்குறிதான். படைப்புகள் பற்றிச் சொல்லப் புகுந்தால் அது
விரிவாகி விடும்.
கேள்வி: எண்டமூரி விரேந்திர
நாத். கோட்டயம் புஷ்பநாத் கதைகள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டு விறுவிறுப்பாக விற்கப்படுகின்றன.
தெலுங்கு மலையாள மொழிகளின் படைப்புகள் - தமிழாக்கம் பெறுவது குறித்து மகிழ்ச்சிதான்.
ஆனால் இம்மொழிகளிலிருந்து தாம் இத்தகு படைப்புகளைத்தான் எதிர்பார்க்கிறோமா? இக்கேள்விக்கான
பதில் திருபதியாக இல்லை, சலிப்பாக இருக்கிறது. பிரசுர உலகம் திட்டமிட்டே சிலவற்றை முன்னிறுத்துகிறது;
ஒருசிலவற்றை ஒதுக்குகிறது. மொழிபெயர்ப்பாளர் என்கிற முறையில் இப்பிரச்சினையை எப்படி
எதிர்கொள்வது?
பதில்: ஆற்றாமையாய்த்தான்
இருக்கிறது. பொது ஜன ரசனை மலிந்து விட்டதுதான் இதற்குக் காரணம். சலிப்பு மட்டுமில்லை,
சில சமயங்களில் ஆத்திரமும் கூட வரத்தான் செய்கிறது. இப்பிரச்சனையை எதிர்கொள்ள நல்ல தரமான படைப்புகளை 'மொழிபெயர்த்து நாம் அளிக்க
முன் வரலாம். ஆயினும் கடை விரித்தால் கொள்வார் வேண்டுமே? பத்திரிகைகளோ, பிரகரகர்த்தாக்களோ
விற்பனையை மட்டுமே கருத்தில் கொள்ளாது, தரமான இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதும் தம்
நோக்கம் எனக் கொண்டு பரந்த மனத்துடன் செயில்பட வேண்டும். அந்த நாள் எந்த நாளோ?
கேள்வி: சாகித்ய
அகாதமி விருதுகள் அறிவிக்கப்படும் போது நேரடிப்படைப்புகளுக்கான
விருதுகளைப் பெறுவது பற்றிய செய்திதான் பிரதானப்படுத்தப்படுகிறதே தவிர, மொழிபெயர்ப்புப்படைப்புகளைப்பற்றிய
செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. மொழி பெயர்ப்பு கூட ஒருவித படைப்பாக்கமே.
ஆனால் இதில் பாரபட்சம் காட்டும் சூழல் குறித்து நீங்கள் யோசித்த்துண்டா? ஏன் நம் சூழல்
இப்படி இருக்கிறது?
பதில்: இது உண்மைதான்.
மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய நமது சமூகப் பார்வையே குறுகியதாக உள்ளது, படைப்பிலக்கியத்திற்கு
அளிக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் மொழிபெயர்ப்புகளுக்கு அளிக்கப்படுவதில்லை. பல
நேரங்களில் மொழிபெயர்ப்பாளர்களின் பெயர் கூட முன் அட்டையில் தரப்படுவதில்லை. அவரைப்பற்றிய
குறிப்புகளுக்கும் இடமிருப்பதில்லை. 'மொழி பயர்ப்பும் ஒரு படைப்பாக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்படாதவரையில்
இந்நிலை நீடிக்கத்தான் செய்யும். ஏன் என்பதற்கு என்னிடம் நீண்ட பெருமூச்சுதான் பதில்.
(புதிய பார்வை – 1995)
