Home

Sunday, 29 March 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

இத்தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகளின் முதன்மைப்பாத்திரங்களாக  பெண்களே இடம்பெற்றிருக்கிறார்கள். பள்ளிச்சிறுமிகள், பருவப்பெண்கள், விவசாயக்கூலிகளாக வேலை செய்யும் நடுவயதுப் பெண்கள், சொற்ப வருமானத்துக்காக, காட்டில் விறகு சேகரித்துவரும் சாக்கில் சந்தனக்கட்டைகளையும் சேர்த்து எடுத்துவந்து கொடுக்கும் பெண்கள், வீட்டில் சமையல் பொறுப்பை எடுத்துக்கொள்ளும் பாட்டிகள் வரை எல்லா வயதினரும் இக்கதைகளில் பாத்திரங்களாக படைக்கப்பட்டிருக்கின்றனர். அப்பெண்களில் பலரை நாமும் பார்த்திருப்போம். ஆனால் இந்தச் சிறுகதைத்தொகுதியை வாசித்து முடிக்கும்போது நம் பார்வை வேறு, சுஜாதா செல்வராஜுடைய பார்வை வேறு என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

நம் பார்வையில் கூட்டத்தில் ஒருவராகவோ, சிலராகவோ மட்டுமே அந்தப் பெண்கள் தென்பட்டிருப்பார்கள்.  ஆனால் சுஜாதா செல்வராஜின் பார்வைக்கு, அவர்கள் கூட்டமாகத் தென்படுவதற்கும் அப்பால், அவர்களுடைய செயல்பாடுகளும் உணர்வு மாற்றங்களும் தென்படுகின்றன. அத்தகு நுட்பமான பார்வையை அவர் தன் கல்வியின் வழியாகவோ அல்லது அவர் கேட்டறிந்து சேகரித்துக்கொண்ட செய்திகளின் வழியாகவோ அடைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவருக்கு மிகவும் இயற்கையாகவே அந்தப் பார்வை கைவந்திருக்கிறது. இந்த வாழ்க்கை வழியாக அவர் ஈட்டியிருக்கும் மாபெரும் செல்வம் என அந்தப் பார்வையைக் குறிப்பிடலாம்.   

’தேவதை’ என்னும் சிறுகதையில் ஒரு சிறுமி இடம்பெற்றிருக்கிறாள். உண்மையில் அக்கதையை விவரிப்பதே ஒரு சிறுமிதான். தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்து தொடங்கி ஒரு பெண்ணாக வளர்ந்து நிற்கிற காலம் வரைக்குமான நினைவுகளை அசைபோடுவதாக அக்கதை திகழ்கிறது. தொடக்கத்தில் தன்னோடு சேர்ந்து படித்த பல சிறுவர்களையும் சிறுமிகளையும் ஒவ்வொருவராக அவள் நினைவுகூர்கிறாள்.  அதன் தொடர்ச்சியாக மறக்கமுடியாதபடி அவள் மனத்தில் இடம் பிடித்திருப்பவன் ஒரு சிறுவனைப்பற்றி நினைவுகூர்கிறாள்.

எல்லோருக்கும் வேப்பங்காயாக அமைந்து, ஒவ்வொருநாளும் ஆசிரியரிடம் அடிவாங்க வைக்கும் ஆங்கிலப் பாடத்தில், ஆசிரியரே ஆச்சரியப்படும் வகையில் தேர்ச்சியும் அறிவும் கொண்டவனாக இருக்கிறான் அச்சிறுவன். அவன் பெயர் மணி. ஆனால் அடித்தட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவன் குடிசை ஊருக்கு வெளியே இருக்கிறது. ஒருநாள், வகுப்பில் பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சமயத்தில் யாரோ ஒருவர் வந்து மணியின் அப்பாவுக்கு நெஞ்சுவலி என்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் அழைத்துச் செல்கிறார். மரணம் அவரை அள்ளிக்கொண்டு சென்றுவிடுகிறது. அவன் அதற்குப் பிறகு பள்ளிக்கு வருவதில்லை. ஊரிலேயே எண்ணெய்ச்செக்கு ஆலையில் வேலை செய்கிறான். தற்செயலாக அந்த ஆலைக்குச் செல்லும் அச்சிறுமி அவனைக் கண்டு பேசி மகிழ்ச்சியடைகிறாள். அடுத்த சில ஆண்டுகளில் அவன் இசகுபிசகாக அந்த எந்திரத்தில் சிக்கி தன் வலது காலை இழந்துவிட்ட செய்தியைத் தன் தந்தை வழியாக அறிந்துகொள்கிறாள். அதற்குப் பின் அவனை அவளால் பார்க்க இயலவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக ஒரு பேருந்து நிலையத்தில் ஊன்றுகோலின் உதவியோடு பிச்சைக்காகக் கையேந்தி நிற்கும் கோலத்தில் அவனைப் பார்த்து மனமுடைந்து போகிறாள்.

’நந்தினியின் அப்பா’ என்னும் சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் நந்தினியும் ஒரு சிறுமிதான். கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மகிழவைக்கும் அவளுடைய அப்பா ஒரு பெருங்குடிகாரராக மாறிவிட்டதை அவளால் தாங்கவே முடியவில்லை. அப்பாவைச் சொல்லித் திருத்தும் அளவுக்கு அவளுக்கு வயதில்லை. ஒருநாள் குடிபோதையில் அவளைப் பார்ப்பதற்கு பள்ளிக்கு வந்த நின்ற அவருடைய கோலத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியை அவளை வகுப்பிலிருந்து அழைத்து வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார். குனிந்த தலையோடு பள்ளியிலிருந்து வீடு வரைக்கும் போதையில் தள்ளாடும் அப்பாவைக் கையைப் பிடித்து அழைத்துவந்த அச்சிறுமி, வாசலை மிதித்ததும் இரண்டு படியேறி நின்றுகொண்டு அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். ஒரே ஒரு சதவீதம் கூட எதுவும் மிகையாகத் தோன்றாதபடி இயல்பாகவே அக்காட்சியை எழுதியிருக்கிறார் சுஜாதா செல்வராஜ்.

’வசந்தி’ என இன்னொரு சிறுமி. பள்ளியில் நடைபெறும் விளையாட்டு விழாவைப் பார்ப்பதற்காக தோழிகளோடு உற்சாகத்தோடு செல்கிறாள். மைதானத்தில் போட்டிகளுக்கான ஆயத்தங்களைச் செய்யும்  பெரியவர்களுக்கு ஒத்தாசை செய்கிறாள். தாகத்தைத் தணித்துக்கொள்ள பள்ளி வளாகத்தில் வசதி இல்லாததால் பள்ளிக்கு வெளியே இருக்கும் பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர்க்குடத்தை நாடிச் செல்கிறாள். அங்கு முகப்பழக்கம் உள்ள அண்ணன் ஒருவன் அவளுக்கு மாங்காய் ஆசை காட்டி தன் தோப்புக்கு அழைத்துச் செல்கிறான். அவனுடைய தவறான எண்ணம் ஈடேறாதபடி தற்செயலாக அங்கு வரும் வண்டிக்காரரின் வருகை அமைந்துவிடுகிறது. ஒப்புக்கு சில மாங்காய்களை அச்சிறுமியிடம் கொடுத்து மீண்டும் தன் மிதிவண்டியிலேயே பள்ளிக்கு அழைத்துவருகிறான் அவன். அவன் மீது கொண்ட நம்பிக்கை நொறுங்கிவிட்டதைத் தாங்கமுடியாத அச்சிறுமி அம்மாங்காய்களை வழியிலேயே வாய்க்காலில் வீசி எறிந்துவிடுகிறாள்.

மூன்று சிறுமிகளும் வெவ்வேறு வழிகளின் ஊடே வெவ்வேறு அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள்.ஒவ்வொரு அனுபவமும் அவர்களைப் பெருமூச்சு கொள்ளவைத்தாலும், ஒவ்வொன்றின் வழியாகவும் அவர்கள் ஒருதுளி ஞானத்தை அடைகிறார்கள்.

கந்தாயி என்னும் பாட்டியைப்பற்றிய ஒரு சிறுகதை இத்தொகுதியில் உள்ளது. வாழ்க்கை வழியாக அவள் பெற்ற அனுபவங்கள்  ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகும் விதம் சார்ந்த மனப்பக்குவத்தை அளித்திருக்கின்றன. அவளுடைய நிதானமும் பக்குவமும் அக்குடும்பத்திலும் தெருவிலும் அவளுக்கு ஒரு முக்கியமான தகுதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றன. பாட்டியின் கணவரே அவள் பேச்சை மீறுவதில்லை. இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என அந்தக் குடும்பம் பெரியது. அக்குடும்பத்தில் அவளுடைய ஆலோசனையைப் பெறாமல் ஒரு வேலையும் நடைபெறாது.

ஒருநாள் அதே தெருவில் வசிக்கும் திலகம் என்னும் பெண் ஓட்டமாக ஓடிவந்து அந்தப் பாட்டியின் காலில் விழுந்து காப்பாற்றும்படி கேட்கிறாள். தன் கணவன் அவளை வெட்டுவதற்காக கத்தியோடு ஓடி வருவதாக அச்சத்தோடு தெரிவிக்கிறாள். அக்கணமே அவளைக் காப்பாற்ற முடிவெடுத்த பாட்டி அவளை வீட்டுக்குள் சென்று அறைக்குள் மறைந்துகொள்ளும்படி சொல்லி அனுப்பிவைக்கிறாள். அடுத்து சில நிமிடங்களிலேயே அங்கு குடிபோதையுடன் ஓடி வரும் அவளுடைய கணவனிடம் திலகம் அந்த வீட்டின் பக்கம் வரவேயில்லை என்று உறுதியான குரலில் தெரிவிக்கிறாள்.

தன் மனைவி இன்னொரு கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாள் என அவன் குமுறலோடு சொல்லும்போது அதை அவள் மறுக்கிறாள். அவன் சிந்தனையைத் தூண்டி அவன் கொண்டிருந்த சந்தேகத்திலிருந்து அவனை விடுவித்து அனுப்பிவைக்கிறாள். அவனும் அந்தப் பாட்டியுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு கத்தியை அங்கேயே வீசி எறிந்துவிட்டு தன் குடிசைக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறான்.

சிறிது நேரம் கழித்து மாமியாரை சந்திக்கும் மருமகள்கள் திலகத்தின் கள்ளத்தொடர்பு உண்மைதான் என்று அடங்கிய குரலில் தெரிவிக்கிறார்கள். ஆயினும் அந்தத் தகவலால் கந்தாயி தன் முடிவை சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லை.  திலகம் காப்பாற்றப்பட வேண்டிய ஓர் அபலைப்பெண் என்றும் அவளுக்கு உணவுகொடுத்து தங்கவைத்து, விடிந்ததும் வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி சொல்கிறாள்.  குறையெதுவும் இல்லாமல் ஒரு குடும்பத்தை நடத்தத் தெரியாத குடிகாரன், தனக்கு வாழ்க்கைப்பட்டவளின் செயல்பாடுகளில் குற்றம்குறைகளைத் தேடிக்கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லி அனுப்பிவைக்கிறாள். ’பெண்கள் கண்ணால கண்டதை மண்ணால மறைக்கணும்’ என்பது அவள் நீதியாக இருக்கிறது.

இதேபோன்ற ஒரு தாயை ’சங்கு’ என்னும் சிறுகதையிலும் காணலாம். முதிர்கன்னிகளாக நான்கு பெண்களைக் கொண்ட வீடு அது. அந்தக் குடும்பத்தலைவனால் அக்குடும்பத்துக்கு ஒரு பயனும் இல்லை. நான்கு பெண்களும் தம்மைத்தாமே உயர்த்திக்கொண்டு சொந்தக்காலில் நிற்கிறார்கள். மூத்தவள் மட்டுமே வீட்டோடு தங்கியிருக்க, பிறர் அனைவரும் ஏதேதோ ஒரு வேலையைத் தேடிக்கொண்டு ஊரையடுத்த நகரங்களில் விடுதியில் தங்கி பொருளீட்டுகின்றனர். 

அந்த ஊருக்கு போஸ்ட்மாஸ்டராக வருபவருக்கும்  தன் சேமிப்புக்கணக்கில் பணம் செலுத்த அஞ்சல் நிலையத்துக்குச் செல்லும் மூத்தவளுக்கும் இடையில் எப்படியோ ஒரு நட்பு உருவாகிவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருநாள் யாருமற்ற வேளையில் மூத்தவளின் வீட்டுக்கு வந்து அவளைக் கட்டித் தழுவுகிறான் அவன். தற்செயலாக அப்போது வயல்காட்டிலிருந்து வீட்டுக்கு வந்து கதவைத் தட்டும் அம்மாவின் பார்வையில் இருவரும் சிக்கிக்கொள்கிறார்கள். அக்கணத்தில் திகைத்துத் தடுமாறும் அம்மா நீண்ட நேர யோசனைக்குப் பிறகு ஒரு தெளிவுக்கு வந்துவிடுகிறாள். அனைத்தையும் கடந்து, எதுவுமே நடவாததுபோல மகளிடம் சமையலைப்பற்றிப் பேசத் தொடங்குகிறாள். கண்ணால் கண்டதை மண்ணால் மறைக்கணும் என்பதுதான் அந்த அம்மாவின் நீதியாகவும் இருக்கிறது.

அந்த வீட்டு வாசலில் தோரணமாகத் தொங்குகிற ஒரு சங்குமாலையைப்பற்றிய ஒரு சித்திரத்தை கதையின் தொடக்கத்தில் தீட்டியிருக்கிறார் சுஜாதா செல்வராஜ். எப்போதோ ஒருமுறை ஒரு சுற்றுலாவுக்குச் சென்றிருந்தபோது வாங்கிவந்து மாட்டிய சங்குமாலை அது. ஆரம்பத்தில் அந்த மாலை கொண்டிருந்த கவர்ச்சி கால ஓட்டத்தில் தேய்ந்து மங்கி, ஒரு தோரணமாக மட்டுமே தொங்குவதை அச்சித்திரத்தில் பார்க்கமுடிகிறது. நான்கு பருவப்பெண்கள் காலம் நகரநகர, பொலிவிழந்து முதிர்கன்னிகளாக வலம் வருவதை சொல்லாமல் சொல்வதாக அந்தச் சங்குமாலை அமைந்துவிட்டது.

’தழும்பு’ இத்தொகுதியின் மிகச்சிறப்பான கதை. அம்மா பிள்ளையாக வளர்ந்திருக்கும் சத்தியமூர்த்தியும் இல்லறவாழ்க்கையைப்பற்றி ஏராளமான கனவுகளோடு வாழ்க்கைப்பட்டு வந்த மீனாட்சியும்தான் இக்கதையின் பிரதான பாத்திரங்கள். எந்த நேரமும் அம்மாவின் அழைப்புக்குரல் கேட்கக்கூடும் என்கிற பதற்றத்தில் ஒரு கொஞ்சலோ, முத்தமோ, அணைப்போ எதுவுமின்றி கலவியில் ஈடுபடத் தொடங்கி, பிறகு அவருக்கு அதுவே பழக்கமாகிவிடுகிறது. ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் எல்லாவற்றையும் ஆழ்நெஞ்சில் புதைத்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறாள் மீனாட்சி.

ஒரு மகளைப் பெற்று அவளை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி மணம்முடித்து தொலைதூர நகரத்துக்கு அனுப்பிவைப்பதற்குள் காலமும் இளமையும் கரைந்துவிடுகின்றன. மூப்படைந்த சத்தியமூர்த்தி கிஞ்சித்தும் மாற்றமின்றி அப்படியே இருக்கிறார். தனிமை வாழ்க்கை இருவருக்குமே சலிப்பை ஏற்படுத்துகிறது.

எதிர்பாராத விதமாக மீனாட்சி மறதி நோயால் அவதிப்படத் தொடங்குகிறாள். தன் வீடு எங்கே இருக்கிறது என்பதே அவள் நினைவில் இருப்பதில்லை.  சாப்பிட்டோமா, உறங்கினோமா, கழிப்பறைக்குச் சென்றோமா, குளித்தோமா என எதுவுமே அவள் நினைவில் தங்குவதில்லை. எல்லாவற்றையும் அவளுக்கு இன்னொருவர் செய்யவேண்டி இருக்கிறது.

முதன்முறையாக அவளைக் குளிக்கவைக்க  குளியலறைக்கு அழைத்துச் செல்கிறார் சத்தியமூர்த்தி.  ஆடையற்ற மனைவியின் உடலை அப்போதுதான் அவர் முதன்முறையாகப் பார்க்கிறார். அவள் முதுகில் தென்படும் தழும்பு அவரைத் திகைக்கவைக்கிறது. அதைப்பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிற எண்ணம் அவரை நிலைகுலைய வைத்துவிடுகிறது. தழும்பு மட்டுமல்ல, அவளுடைய ஆழ்மனத்தைப்பற்றியும் தனக்கு எதுவுமே தெரியாது என்ற எண்ணம் அவரை ஒரு குற்றவாளியாக நிற்கவைக்கிறது. அக்கணத்தில், தன் இல்வாழ்க்கையே ஒரு தழும்பாக எஞ்சிநிற்பதையும் ஒருவித சங்கடத்துடன் அவர் உணர்கிறார். இம்மண்ணில் நம் கண் முன்னாலேயே திருமண வாழ்க்கை எவ்வளவு பெரிய கற்பிதமாகத் திகழ்கிறது என்னும் கசப்பான உண்மையை ஒரு வாசகனை உணரச் செய்கிறது இச்சிறுகதை.  

நம் சூழலில் ஒரு சிறுகதை எழுத்தாளராகத் தம் முதல் தொகுதி வழியாகவே சுஜாதா செல்வராஜ் தன்னை நிறுவிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். அடுத்தடுத்த தொகுதிகள் அவரை இன்னும் கூடுதலான உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பலாம்.

 

(கன்னிமார் சாமி. சிறுகதைகள். சுஜாதா செல்வராஜ், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை., நாகர்கோவில் – 629001. விலை.ரூ. 190)

 

(புக் டே – இணைய தளம் – 27.03.2026)